Tag: Thirupathy

  • Thirupathy Urchavam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோபத்துடன் வரும் தாயாரை சமாதானப்படும் பிரணய கலக உற்சவம் கோலாகலமாக நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிக்கு 6வது நாள் பிரணய கலக உற்சவம் நடத்தப்படுகிறது. பிரணய கலக உற்சவம் என்பது கோபத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்துவதுதான். அதன்படி இன்று  இந்த உற்சவம் நடைபெற்றது. 

    இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தின் அருகே (வராக சுவாமி கோயில் எதிரில் வந்தனர். மலையப்ப சுவாமி நான்கு மாடவீதி வழியாக வராக சுவாமி கோயிலுக்கு எதிர்திசையில் வந்தடைந்தபோது தாயார்களை சமாதானப்படுத்தும் வகையில் ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் இருதரப்பிலும் எதிர், எதிர் திசையில்’ நின்றனர். பின்னர் மலையப்ப சுவாமி தரப்பில் ஜீயர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியும், புராண இதிகாசம் படித்தும் தாயார்களை சமாதானபடுத்தினர்.

    ஸ்ரீதேவி, பூதேவி தாயார் தரப்பினர் மூன்று முறை பூ பந்துகளை மலையப்ப சுவாமி மீது வீசியும், அதில் இருந்து தப்பிக்க மலையப்ப சுவாமி தரப்பினர் பின்னால் செல்லும் சம்பிரதாய உற்சவம் நடைபெற்றது. தாயாரை சமாதானப்படுத்திய பிறகு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி இணைந்து கோயிலுக்கு வந்தடைந்தார். 

    வராக சுவாமி கோயில் எதிரே உள்ள நான்கு மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமிகளை ‘கோவிந்தா’ கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். இதில் ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், துணை செயல் அலுவலர்  ஹரிந்திரநாத், மற்றும் அர்ச்சகர்கள் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

  • Thirupathy Perumal Adisayam

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

    திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.

    ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

    ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

    சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

    மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

    திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

  • Thirupathy Online Sevai

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்கர தீப அலங்கார சேவையில் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    டிசம்பர் மாதம் நடைபெறக்கூடிய இந்த கட்டண சேவைகளில் பங்கேற்பதற்கான டிக்கெட் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடபடுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்களில் கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்றவர்களுக்கு 90 நாட்களுக்குள்  ஏழுமலையானை நேரில் வந்து தரிசனம் செய்வதற்கு இரண்டு பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

    டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் ஆன்லைனில் நடைபெறும் சேவையில் மட்டும் பங்கேற்கலாம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு அந்த சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுடன் ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் கூடுதலாக பெற்று 90 நாட்களுக்குள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • Thirupathy srivari mettu

    திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக தேவஸ்தானம் அறிவிப்பு. 

    திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்திலிருந்து  ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லக்கூடிய ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை தற்காலிகமாக மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

    ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதற்கு  அலிபிரி மற்றும் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு மலைப் பாதை உள்ளது. ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை திருப்பதியில் இருந்து திருமலைக்கு நேரடியாக குறைந்த படிகளுடன் உள்ளதால் இந்த மலைப்பாதையில் தமிழகம், கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்கள் பயன்படுத்துவது வழக்கம். 

    இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்காலிகமாக சினிவாசமங்காபுரம் மலைப்பாதை மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    மீண்டும் சாதாரண நிலை ஏற்பட்ட பிறகு ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படும் என்றும் அதுவரை அது அலிலிரி மலைப் பாதையில் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • Thirupathy Devasthanam announcement

    கொரோனா ஊரடங்கு காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்கள்  அதே டிக்கெட்டை வைத்து எப்போது வேண்டுமென்றாலும் தரிசனம் செய்யலாம் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட  ஊரடங்கு நேரத்தில் மார்ச் முதல்  ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த கால கட்டத்தில்  ஆன்லைன், அஞ்சலகம், இ தரிசன கவுண்டர்கள் மூலம் 300 ரூபாய் சிறப்பு தரிசனம்  மற்றும் தங்கும் விடுதிகள், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட  ஆர்ஜித சேவைகள் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு  தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 

    இந்த டிக்கெட்களை பக்தர்கள் ரத்து செய்து கொண்டால் முன்பணம் திரும்ப வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. இதற்கான கால அவகாசம் அக்டோபர் 30 வரை இருந்த நிலையில் தற்போது டிசம்பர் வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

    எனவே  இணையதளத்தின் மூலமாக டிக்கெட் ரத்து செய்யும் கேட்கும் பக்தர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணத்தை ரிபெண்ட் செய்யப்பட்டு வருகிறது. டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பாத பக்தர்கள் அந்த டிக்கெட் வைத்து எப்போது வேண்டுமென்றாலும் அதனை காண்பித்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் டைரி மற்றும் காலண்டர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தால் தபால் மூலமாக  அவர்களது முகவரி அனுப்பி வைக்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • Thirupathy Ezhumalayanai Veetil Irundhapadiye

    வீட்டில் இருந்தே பக்தர்கள் பங்கேற்கும் ஆன்லைன் சேவைகளுக்கு பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் மேலும் பல சேவைகளை இணையதளம் மூலம் நடத்த ஏழுமலையான் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இணையதளம் மூலம் வீட்டிலிருந்தே வழிபடும் முறையில் ஆர்ஜித சேவைகளைத் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது . திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஜூன் மாதம் 8 ம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனம் பக்தர்களுக்கு கிடைத்து வருகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத்தையொட்டி நடைபெற்ற குங்கும அர்ச்சனையில் பக்தர்கள் வீட்டில் இருந்தே ( விர்ச்சுவல் ) முறையில் ஆன்லைனில் பங்கேற்கும் விதமாக செய்யப்பட்டது. 

    இதற்கு பக்தர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையும் வீட்டில் இருந்தே பக்தர்கள் சம்பர்தாய உடை அணிந்து பங்கேற்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் தொடங்கப்பட்டு அர்ச்சகர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி பங்கேற்று வருகின்றனர். இந்த கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 90 நாட்களுக்குள் ஏழுமலையான் தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. 

    இதேபோன்று ஆர்ஜித பிரம்மோற்சவம், டோல் உற்சவம், சகஸ்ர தீப அலங்காரம் உள்ளிட்ட சேவைகளையும் பக்தர்கள் ஆன்லைனில் விட்டில் இருந்தே பங்கேற்கும் விதமாக  நவம்பர் மாதம் முதல்  தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது என்பதால் இந்த சேவையில் பங்கேற்க நினைக்கும் பக்தர்கள் ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களை பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் நாடு முழுவதும், ஆந்திராவிலும் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நவம்பர் முதல் கோவிலுக்கு வெளியே நடைபெறக்கூடிய சகஸ்கர தீப அலங்கார சேவையும், இந்த சேவைக்கு பிறகு  மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதிகளில் வீதி உலாவும் கொரோனா தொற்று  தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

  • Thirupathy Thirumalai Tiruppam Tharuma

    திருப்பதி திருமலை ஏழுமலையான், பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். ஏழுமலையான் குறித்த புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன. திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தை எடுத்துக்காட்டுகின்றன. 

    திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம். புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது ,பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும்,செய்வினை தோஷம், வறுமை போக்கும். சந்ததி விருத்தி உண்டாகும்.என்கிறது.பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம் மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது, இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. 

    திருப்பதி திருமலை மகான்கள் நிறைந்த பூமி என்பதால்,அருளாசி நிறைந்து காணப்படுகிறது .திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல , திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சனை தீரும். துக்கம் சந்தோசமாய் மாறும் ,சோதனைகளை ,சாதனைகள் ஆக்கும் .குல தெய்வம் இல்லாத வர்கள் திருப்தி பெருமாள் தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள் .

  • Thirupathy paarvettai urchavam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தொறும் மாட்டு பொங்கல் அன்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த அடுத்த நாள்  மலையப்ப சுவாமி வேட்டைக்கு செல்லும் பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம். 

    அதன்படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறக்கூடிய நவராத்திரி பிரம்மோற்சவம் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சுவாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள்ளேயே கல்யாண மண்டபத்தில் கடந்த 16ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி 24ம் தேதி நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. 

    இதனையடுத்து மலையப்ப சுவாமி சங்கு, சக்கரம், கத்தி, கதம், வில் உள்ளிட்ட பஞ்ச ஆயுதங்களுடனும்  கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர். பின்னர் கல்யாண மண்டபத்தில் வனப்பகுதியை போன்று விலங்குகளுடன் அமைக்கப்பட்ட செயற்கை வனத்தில் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மலையப்ப சுவாமி  வேட்டைக்கு சென்றார். 

    அப்போது மூன்று முறை கோயில் தலைமை  அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர்  ஈட்டியை ஏந்தி சுவாமியுடன் வனப்பகுதியை நோக்கி ஓடி சென்று எறியப்பட்டது.அவ்வாறு மூன்று முறை ஈட்டி செயற்கை வனத்தில் எரியப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி, கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர். 

    வழக்கமாக பார்வேட்டை உற்சவம் பாபவிநாசம் செல்லும் சாலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்தில் வனப்பகுதியை ஒட்டி நடை பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அனைத்து உற்சவங்களும் கோவிலுக்குள்ளேயே நடத்தப்படுவதால் இந்த ஆண்டு பார்வேட்டை உற்சவம் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் செயற்கை வனப்பகுதி அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Thirupathy November online ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்  நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.  

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை முதல் ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தினந்தோறும் 16 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. 

    இந்த டிக்கெட்களை நாளை காலை 11.00 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற தேவஸ்தான இணையத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் பக்தர்கள் இந்த வாய்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy Bramorachavam end

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 16 ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் பெரிய சேஷம், சின்ன சேஷம்,  அன்ன,  சிம்ம,  முத்துப்பந்தல்,  கற்பகவிருட்சம்,  கருட , அனுமந்த, கஜ உள்ளிட்ட 14 வாகனங்கள் வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நான்கு மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு  உற்சவ மூர்த்திகள் கோயிலை விட்டு வெளியே வராமல் கோயிலுக்கு உள்ளே  கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். 

    பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று ஏழுமலையான் கோவிலில் உள்ள ஐயன மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் ஜீயர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு துளசி மாலை அணிவித்து கற்பூர ஆரத்தி வழங்கப்பட்டது. 

    பின்னர் ஐயன மண்டபம் வெளியே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில்  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. வழக்கமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நடைபெறும் இதில் லட்ச கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடுவர். 

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய அரசு தெரிவித்த நிபந்தனைகளின்படி மத வழிபாட்டு நிகழ்ச்சிகளில் 200 க்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பதால் வீதி உலா ரத்து செய்யப்பட்டதோடு தீர்த்தவாரியும் கோயிலுக்குள் பக்தர்கள் இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்றது. செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி ,  கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் , அர்ச்சகர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர்.