Tag: Thirupathy

  • Thirupathy Bramorchavam Ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் மூலம் சாமி தரிசனம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்கி இருக்கிறது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 16ம் தேதி தொடங்கி 24ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி 15ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

    மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிக்கப்பட்டு சுவாமி வீதிஉலாவை காணும் விதமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாத பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட உள்ளனர். 

    இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று வீதி உலாவை காணவும், மூலவரை தரிசனம் செய்வதற்காக ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் 15ஆம் தேதி முதல் 24ம் தேதி வரைக்காண டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரியான https://tirupatibalaji.ap.gov.in/#/login  என்ற முகவரியில் சென்று பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

    ஏற்கனவே கடந்த செப்டம்பர் 19ம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடை பெற்ற வருடாந்தர பிரம்மோற்சவத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிரம்மோற்சவ விழாவில் சுவாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள்ளேயே கல்யாண மண்டபத்தில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு சுவாமி வீதிஉலா வருவாரா, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது   ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் நவராத்திரி பிரம்மோற்சவம் சுவாமி வீதி உலா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்களும் வீதி உலாவில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் குறைந்த அளவில் அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Thirupathy Hundiyal Kanikkai

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஒரே நாளில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் இம்மாதம்  19 தேதி முதல் 27 ஆம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தில் வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள்  தரிசிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா பரவலை தடுக்கும் விதமாக  குறைந்தபட்ச பக்தர்கள் மட்டுமே  அனுமதிக்கப்பட்டனர்.

    பிரம்மோற்சவம் நடைபெற்ற நாள்களில்  ஏழுமலையானை டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் பிரம்மோற்சவம் நடந்த 9 நாட்களில் தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 898 பேர் தரிசனம் செய்தனர்.

    38 ஆயிரத்து 190 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக 10 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் செலுத்தினர். இதில் நேற்று ஒரே நாளில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்  ஒரே நாளில்  அதிகபட்ச உண்டியல் காணிக்கையாக  நேற்று ஒரே நாளில் ரூ 2.34 கோடி வந்தது குறிப்பிடத்தக்கது.

  • Thirupathy kudaigal

    இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடைகள் பத்மாவதி தாயார்  கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.

    திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு படைக்கப்படும் அஷ்ட மங்கல பொருட்களில் திருக்குடையும் ஒன்று. ஆதிசேஷனின் அம்சமே திருக்குடைகள். உணவு உற்பத்திக்குத் தேவையான மழையை, போதிய அளவுக்கு தரும்படி இறைவனிடம் வேண்டி, வேங்கடமுடையானுக்கு வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக வழங்கும் சம்பிரதாயம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து வருகிறது. 

    இந்து தர்மார்த்த சமிதி சார்பில், புதிய வெண் பட்டுக்குடைகள் ஆண்டுதோறும் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக எடுத்து சென்று பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பிக்கப்படுகிறது. 

    சென்னையில் இருந்து திருப்பதி வரை வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள் திருக்குடைகளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டு திருப்பதிக்கு நேரில் சென்று பெருமாளை தரிசனம் செய்து போன்று திருகுடைகளை வழிபட்டு செல்வர். ஆனால் இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சென்னையில் இருந்து ஊர்வலமாக வருவது ரத்து செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மட்டும் மேற்கொண்டு திருப்பதிக்கு  11 வெண்பட்டு குடைகள் கொண்டு வரப்பட்டது. 

    இதில் திருச்சானுர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு இன்று 2 திருக்குடைகளை   கோவில் துணை செயல் அலுவலர் ஜான்சி ராணியிடம் இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வழங்கினார்.நாளை  திருமலையில் உள்ள ஜீயர் மடத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு 9 வெண்பட்டு குடைகள், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

  • Thirupathy VIP ticket

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத்து செய்யப்பட்ட உதயஅஸ்மனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு விஐபி  தரிசனம்  தேவஸ்தானம் அறிவிப்பு.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் உதய அஸ்தமன சேவையில் பங்கேற்க டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 19 ம் தேதி முதல் அனைத்து சேவைகளும்   ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சேவைக்காக டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் செய்து வைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

    அதன்படி, உதய அஸ்தமன சேவை டிக்கெட் பெற்றவர்களுடன் 5 பக்தர்கள்  வி.ஐ.பி. தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே இந்த பக்தர்கள் நீங்கள் விரும்பும் தேதிக்கு முந்தைய நாள் மாலை 5 மணிக்குள் திருமலையில் உள்ள ஆர்ஜிதம் அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். 

    இந்த சேவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் 10 வயதுக்கு உட்பட்டவர்களும் அனுமதி கிடையாது.மேலும் விவரங்களுக்கு ஆர்ஜிதம்  அலுவலக தொலைபேசி எண் – 0877-2263589 அல்லது மின்னஞ்சல் arjithamoffice@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy dharshan issue

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 19ஆம் தேதி முதல் 27ம் தேதி வரையும், நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை கோவில் முழுவதும் சுத்தம் செய்யக்கூடிய கோயில்  ஆழ்வார் திருமஞ்சனம் காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. 

    இதனால் பக்தர்கள் 5 மணி நேரத்துக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு ( உகாதி ) , ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடத்தப்படுவது வழக்கம். 

    அதன்படி, இந்த ஆண்டு 19 ம் தேதி முதல்  பிரம்மோற்சவம் நடைபெறுவதையொட்டி   நாளை செவ்வாய் கிழமை காலை  கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெறுகிறது. 

    பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படவுள்ளது. கோயில் ஆழ்வார்  இதனால் 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக  கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் குறைந்த அளவு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று நடத்தப்பட உள்ளது. 

    ஏழுமலையானுக்கு  பிரம்ம தேவனால்  நடத்தப்பட்ட  உற்சவத்தை  பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுவது வழக்கம். பிரம்மோற்சவம் என்பது   ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சுவாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கொலு வைக்கப்பட உள்ளது. 

    பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவம் நடத்தப்படுவது ஏழுமலையான் கோவில் வரலாற்றிலேயே முதல்முறையாக நடத்தப்பட உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்திலாவது பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் கோவில் திருவிழாக்களில் நடத்துவதில் எந்த அளவிற்கு தளர்வு வழங்கப்படுகிறதோ அதனைப் பொறுத்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Thirupathy bramorchavam announce

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் போது ஆன்லைனில் ரூபாய் 300 சிறப்பு  தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே வர வேண்டும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அளிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ  ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத் திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோபிநாத் எழுமலையான் கோவிலில் 19 முதல் 27 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். 

    இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக  சுவாமி நான்கு மாட வீதிஉலா இல்லாமல் நடத்தப்பட உள்ளதாகவும், திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே இந்த மாதம் 30 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். 

    எனவே ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் மட்டும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது திருப்பதி நகர காவல்துறையினருடன் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.  

    செப்டம்பர் 17 ம் தேதி முதல் புரட்டாசி மாதம் தொடங்குவதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் ரூ 300 டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு  அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

  • Thirupathy dharshan ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் மேலும்  3 ஆயிரம் டிக்கெட்டுகள் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள டிக்கெட் வெளியீடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பக்தர்களுக்கான தரிசனம் ஊரடங்கு  தளர்வுக்கு பிறகு கடந்த ஜுன் 11ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

    தற்போது ரூ 300 டிக்கெட் மூலம் தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்கள் என 30 தேதி வரைக்கான டிக்கெட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் மூன்று ஆயிரம் டிக்கெட்டுகள் என வழங்கப்பட்டு வந்ததை 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    இந்த ரத்து செய்யப்பட்ட டிக்கெட்ட்டிற்கு பதிலாக ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் ஒரு நாளைக்கு கூடுதலாக 3000 டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டு இன்று கோட்டா வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக தினந்தோறும் ரூபாய் 300 சிறப்பு தரிசனத்தில் 13,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் விதமாகவும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • Thirupathy Dharshan ticket cancel

    கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் இந்த மாதம் முப்பதாம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக  தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் தினந்தோறும் மூன்றாயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 வார்டுகளிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததால்  இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. 

    பின்னர் 45 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் சனிக்கிழமை மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது தொடங்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த மாதம் 30ம் தேதி வரை மீண்டும் தற்காலிகமாக இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக தேவஸ்தான அறிவித்துள்ளது. 

    தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்தபிறகு இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக அதிக அளவு தமிழக பக்தர்கள் ஒருநாள் முன்னதாகவே திருப்பதிக்கு வந்து இரவு முழுவதும்  காத்திருப்பதாகவும் இதுவே கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக  அமையும் என்பதாலும் புரட்டாசி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்க படுவதால் தமிழக பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால்  முப்பதாம் தேதி வரை தற்காலிகமாக இலவச தரிசன டிக்கெட் நிறுத்தப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
     

  • Thirupathy Theertahvari

    திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி, சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி தெப்பக்குளத்தில் இல்லாமல் ரங்கநாதர் மண்டபத்தில் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. 

    திருமலையில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசி அன்று அனந்த பத்மநாப சுவாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று சதுர்த்தசி திதியையொட்டி, திருமலையில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக காலையில் ஏழுமலையான் சந்நிதியில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. 

    அதன்பின் ஏழுமலையான் காலடியில் வைத்த கங்கணத்தை அர்ச்சகர்கள் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கையில் கட்டினர். அதன்பின், ஏழுமலையான் கருவறையிலிருந்து சக்கரத்தாழ்வார் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு தேன், பால், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு  வெள்ளி அண்டாவில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் தீர்த்தவாரி செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். 

    வழக்கமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெறுவது வழக்கம். தீர்த்தவாரிக்கு பிறகு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக் குளத்தில் புனித நீராடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தெப்பக் குளத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சுவாமிக்கு நடைபெறக் கூடிய அனைத்து உற்சவங்களும் பக்தர்கள் இல்லாமல் தனிமையில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு அனந்தபத்மநாப சுவாமி விரதத்தை ஒட்டி நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி தெப்பக்குளத்தில் இல்லாமல் ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது. 

    அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
     

  • Garuda vganathi thirupathy ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில்  எழுந்தருளினார். பின்னர் பெரிய ஜீயர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.  

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று கருட வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.கொரோனா  வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பௌர்ணமி கருட சேவை வீதி உலா ரத்து செய்யப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். 

    முன்னதாக கோவிலில் மூலவர் கருவறையிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.