Tag: Thirupathy

  • Thirupathy New Website

    திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த மார்ச் மாதம் 15 தேதிக்கு பிறகு அனைத்து தரிசனங்களும் நிறுத்தப்பட்டன. 

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

    இந்தநிலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தேவஸ்தானம் https://ttdsevaonline.com என்ற இணையதளத்தை உருவாக்கியது. இந்த இணையதளத்தை பக்தர்கள் ஏழுமலையானை விரைவு தரிசனம் செய்யவும் வாடகை அறை முன் பதிவு செய்யும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த இணையதள முகவரியை தேவஸ்தானம் மாற்றியுள்ளது. அதன்படி பக்தர்கள் இனி https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று முதல் இந்த இணையதளம் செயல்பட தொடங்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பழைய முகவரியை கொடுத்தாலும் புதிய முகவரிக்கு வாடிக்கையாளரை அழைத்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     

  • Thirupathy Laddu maniya vilayil

    தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
       
    ஊரடங்கு முடியும் வரை திருப்பதியில் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் கடந்த 2 மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தரிசனம் கிடைக்காத நிலையில் ஏழுமலையானின் பிரசாதத்தையாவது அளிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

    அதனால் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    ஊரடங்கு முடியும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும். ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தேவஸ்தான மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், வேலூர், கன்னியாகுமரியில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் உள்ளிட்டவற்றில் ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    லட்டு பிரசாதம் மொத்தமாக தேவைப்படும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி ஹரிநாத்தை 9849575952 என்ற செல்போன் எண்ணிலும், லட்டு தயாரிப்பு அதிகாரியை 9701092777 எண்ணிலும் தொடர்பு கொண்டு லட்டுகளை மொத்தமாக ஆர்டர் செய்து எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Thirupathy patriya ariya thagavalgal

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

    திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.

    ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

    ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.
    சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.
    மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.
    திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.
     

  • Thirupathy dharshan

    திருப்பதி ஏழுமலையான் தரிசனம் மே 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டன.

    வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களின் தரிசனம் நிறுத்தப்பட்டது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.
    நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டதால், ஏழுமலையானை தரிசிக்க பக்தா்களுக்கு ஏப்.14-ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில், ஊரடங்கு உத்திரவை மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளதால், ஏழுமலையான் தரிசனத்தை அப்போது வரை ரத்து செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை தெரிவித்துள்ளது.
     

  • Thirupathy Thirumalai

    பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கைழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெரும் புண்ணியத்திருத்தலம் திருமலை திருப்பதி ஆகும்.

    மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தொண்டைமான் என்னும் மன்னனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் திருமலை திருப்பதி ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் சோழர்களாலும், பல்லவர்களாலும், பாண்டிய மன்னர்களாலும், விஜயநகரப் பேரரசாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

    இங்கு வியாழக்கிழமைகளில் அதிகாலைப் பூஜைக்குப்பிறகு வேங்கடவனின் அனைத்து ஆபரணங்களும், கவசங்களும் கழற்றப்பட்டு, அவருக்கு வேஷ்டியும், துண்டும் அணிவித்து அழகு செய்கிறார்கள். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர். அதேநாளில் பின்பு பெருமாளுக்கு அலங்கார மாற்றம் செய்விக்கிறார்கள். இதற்கு ‘பூலாங்கி சேவை’ எனப் பெயர். இந்த சேவையில் பெருமாளை தரிசித்தால் தரித்திரம், வறுமை அகன்று வாழ்வில் வளம் சேரும் என்கிறார்கள்.

    திருமலையில் ஆண்டுக்கு நான்கு முறை கருவறையில் மூலவரை கவசத்தால் மூடி, கருவறை சுவர்கள், தரைப்பகுதிகள் மற்றும் அனைத்து சன்னிதிகளையும் சுத்தம் செய்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ எனப்பெயர். கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சியில் அடியவர்கள் பங்கு கொள்ளலாம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் இந்நிகழ்வு நடைபெறுமாம். இந்த சேவையில் கலந்துகொண்டால் நம் பரம்பரை சாப, பாவங்களை நிவர்த்தி செய்யும் என்கிறார்கள்.
     

  • Thirupathy Ezhumalayan Neivethiyaam

    திருப்பதி பெருமாளின் கருவறைப் படியைக் கடந்து தயிர்சாதம் நிறைந்த ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்தப் பிரசாதமும் செல்வதில்லை.  இந்தக் கருவறைப் படியும் சரி, மண்சட்டி தயிர்சாதமும் சரி இரண்டின் பின்னணியில் பக்திபூர்வமான வரலாறு உண்டு. 

    கருவறைப் படி குலசேகரப்படி என்றே அழைக்கப்படுகிறது.

     யார் இந்தக் குலசேகரன்? 

    சேரநாட்டு திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தில் தோன்றிய அரசர்தான் குலசேகரர்.  கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோ, மாதவன் மாமன் என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்பெறும் குலசேகரர் பரந்தாமனிடம் கொண்ட பக்தியால் ஆழ்வாராகப் போற்றப் பெறுகிறார். 

    பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான இவர், திருமாலின் கௌஸ்துப மாலையின் அம்சமாகத் தோன்றியவர்.  சிறுவயது முதற்கொண்டே ராமபிரானின் மீதும், கிருஷ்ணரின் மீதும் அளவு கடந்த பக்தியைக் கொண்டிருந்தார். 

    நல்லாட்சி புரிந்த இவருக்குப் பாண்டிய மன்னர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். வெற்றித்திருமகளை தன்னருகே வைத்திருந்த குலசேகரர் திருமாலின் அடியார்கள் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்.

    ஒருமுறை ராமாயணம் உபந்நியாசம் கேட்டுக் கொண்டிருந்த போது, ராமபிரான் முனிவர்களின் தவத்தைக் கெடுக்கும் அரக்கர்களை அழிக்கப் புறப்படுகிறார் என்ற செய்தியை அறிந்ததும், ராமபிரானுக்கு உதவ உடனே தனது படைகளை ஆயத்தமாகும்படி கட்டளையிட்டார். அந்த அளவுக்கு ராமபிரானிடம் பக்தி செலுத்தினார். 

    எப்போதும் திருமால் அடியார்களுடனே இருந்தால், நாட்டை நிர்வகிப்பது எப்படி? எனவே, இவரைச் சுற்றி இருந்த அடியவர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்த எண்ணி, இவரது அமைச்சர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்.

     ஒருமுறை அரண்மனைக்கு வந்திருந்த அடியார்களுடன் குலசேகரர் பகவத் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் ஒரு நவரத்தின மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அந்த மாலையை அடியார்கள் திருடிக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். 

    அடியார்கள்மீது பழிசுமத்தியது பொறுக்கமாட்டாத குலசேகரர்,  ஒரு பானையைக் கொண்டு வரச் செய்து அதில் கொடிய விஷமுள்ள கருநாகத்தை இடச் செய்தார். பிறகு 'ராமன்மீது ஆணையாக இந்தத் திருட்டை அடியார்கள் செய்திருக்கமாட்டார்கள்' என்று நான் சொல்வது உண்மையானால், இந்தக் கருநாகம் என்னைத் தீண்டாதிருக்கட்டும்' என்று சொல்லியபடி பானைக்குள் கையை விட்டார். கருநாகம் குலசேகரரை எதுவும் செய்யவில்லை. 

    எனவே நடந்தது அமைச்சர்களின் சூழ்ச்சி தான் என்பதைப் புரிந்துகொண்டு, மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, அரசப் பதவியைத் துறந்து திவ்வியதேச யாத்திரையை மேற்கொண்டார். 

    முதலில் திருவரங்கம் சென்றார். அங்கு பவித்ரோற்சவ மண்டபம், மூன்றாம் மதில் உள்ளிட்ட  பல்வேறு ஆலய திருப்பணிகளைச் செய்தார். 

    திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார். இன்றும் சேரகுலவல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் 'மாதவன் மாமன்' எனும் பெருமை பெற்றார். 

    திருமாலின் மீது பக்தி கொண்டு 105 பாசுரங்களைக் கொண்ட 'பெருமாள் திருமொழி' என்னும் பிரபந்தத்தை இயற்றினார்.  தலம்தோறும் சென்று திருமாலை வணங்கி பேறு பெற்றார். 8 வைணவத் தலங்களைத் தரிசித்துப் பாடி மங்களாசாசனம் செய்தார். 

    திருமலை திருப்பதிக்குச் சென்ற குலசேகர ஆழ்வார் வெங்கடேசப்பெருமாளின் அழகில் மயங்கி பாடல்களைப் பாடினார். எனக்கு தேவ பதவி போன்ற உயர்ந்த பதவிகள் எதுவும் தேவையில்லை. 

    திருவேங்கடத்துப் பொய்கையில் ஒரு மீனாகவோ, அல்லது ஏதேனும் ஒரு தாவரமாகவோ பிறக்கமாட்டேனா என்றெல்லாம் ஏங்கிப் பாடியவர், எப்போதும் திருவேங்கடவன் கருவறைப் படியாக இருந்து தினமும் பெருமாளின் பவள வாய் அழகை தரிசிக்கும் பேறு கிடைக்காதா என்றும் ஏங்கிப் பாடினார். 

    'செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.' என்றெல்லாம் பாடினார். 

    இவரது வேண்டுதல் பெருமாளை உருக்கியது. அதன் காரணமாகவே, குலசேகரரின் பெயரால் அந்தப் படி அழைக்கப்படும் பேறுபெற்றார். ஆம், இன்றும் திருமலையின் வாயிற்படி இவர் பெயராலேயே குலசேகரப்படி என்றே  அழைக்கப்படுகிறது. 

    இந்தக் குலசேகரப் படியைக் கடந்து தயிர்சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்த வைர,வைடூரிய, தங்க, வெள்ளி பாத்திரங்கள்கூட செல்வதில்லை

    தயிர் சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டி மட்டுமே குலசேகரப் படியை தாண்டி பெருமாளிடம் செல்வதன் பின்னணியில், ஒரு ஏழை மண்பாண்டத் தொழிலாளி, பெருமாளிடம் கொண்டிருந்த பக்தியின் மகத்துவம் அடங்கியுள்ளது.

     பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி திருமலை பெருமாளின் மீது தீராத பக்தி கொண்டவன். இவன் செய்து தரும் மண்பாண்டங்கள் பெருமாளின் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டது. பாண்டங்கள் செய்தது போக மீதமிருக்கும் மண்ணில் இவன் செய்து சூட்டும் மண் மலர்களை ஏற்றுக்கொண்ட பெருமாள், 

    தொண்டைமான் அரசரின் தங்க மாலைகளைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லையாம். அத்தனை பேறு பெற்ற பீமனின் நினைவாகவே இன்றும் பெருமாளுக்கு மண்சட்டியிலேயே நைவேத்தியமாக தயிர் சாதம் அளிக்கப்படுகிறது.

    ஆலயங்கள் பலவற்றை தரிசித்து மனம் மகிழ்ந்த குலசேகர ஆழ்வார்,  இறுதியாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோயில் திருத்தலம் வந்து அங்குள்ள பெருமானை தரிசித்து வைகுந்தலோகம் சென்றார். 

    அரச போகங்களை எல்லாம் துறந்து அரங்கனின் சேவடிக்கே தன்னை ஒப்படைத்த குலசேகர ஆழ்வார்,  வைணவ அடியார்களுக்கு எல்லாம் ஓர் ஒப்பற்ற உதாரணப் புருஷர்.
     

  • Then Thirupathy

    திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் சாலையில் துறையூரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது பெருமாள்மலை. இங்கு கொல்லிமலை மற்றும் பச்சைமலை தொடரில் சுமார் 1800 அடி உயரத்தில் பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது.

    இத்திருத்தலம் திருப்பதிக்கு ஒப்பானது. அதனாலேயே தென்திருப்பதி என்ற சிறப்பு பெயர் பெற்றது. திருப்பதியில் உள்ளதுபோல் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி திருமண கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கிறார்.

    இதேபோல் அலமேலு மங்கை தாயார் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். அடிவாரத்தில் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி, பிரமாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் ஏழுமலைகள் உள்ளது.

    திருப்பதிக்கு அருகில் நாகலாபுரம் என்று ஊர் உள்ளது. அதைப்போல் இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. இவற்றையெல்லாம் ஒத்திருப்பதால் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது.

    தலவிருட்சம் இலந்தை மரம், ஏழு ஸ்வரங்களின் ஒலி எழுப்பும் கருங்கல் தூண்கள், தசாவதாரங்களை தூண்களில் கொண்ட தசாவதார மண்டபம், வசந்த மண்டபம், ஏகாதசி மண்டபம், எங்கும் இல்லாத நரசிம்மர் அவதாரம் மிக துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட பெருமாள் மலை கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல 1564 படிக்கட்டுகள் உள்ளன.

    தல வரலாறு:

    ராஜராஜ சோழ மன்னனின் சந்ததியர் ஒருவரால் 11ம் நூற்றாண்டில் கட்டபட்டதாக தெரிகிறது. இம்மன்னன் தனது குருவின் உபதேசப்படி தான் இறைவனடி சென்று சேர ஏகாந்தமான இடத்தில் தவம் செய்யக்கருதி தனது ஆளுகைக்கு உட்பட்ட இப்பெருமாள் மலையில் இலந்தை மரத்தடியில் அமர்ந்து தவம் மேற்கொண்டான். இம்மன்னனின் தவத்தை மெச்சி சங்கு சக்கராயுதபாணியாக எம்பெருமாள் காட்சி தந்தருளினார்.

    இம்மன்னனின் வேண்டுதலுக்கிணங்க எம்பெருமாள் தனக்கு வலதுபுறம் பெரியபிராட்டிக்கும் இடதுபுறம் இம்மன்னனையும் தவநாயகராக இருந்து வர அருள்பாலித்ததாக வரலாறு கூறுகிறது. இம்மன்னரே கருப்பண்ணார் என்றும் வீரப்பசுவாமி என்றும் போற்றப்பட்டு இன்றளவும் சிறப்புற வழிபடப்பட்டு வருகின்றனர். வேறெந்த வைணவத் திருத்தலத்திலும் இல்லாத சிறப்பாக கருப்பண்ணசுவாமி சன்னதியில் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    மலைக்கோயிலில் தினமும் நித்தியபடி பூஜை நடத்தப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். பவுர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறும். பெருமாள்மலையில் புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளும் மிகவும் விஷேசமானது. இக்கோயிலில் 8க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வழிபாடு நடத்துகின்றனர். புரட்டாசி ஆரம்பித்தால் இந்த கிராமங்களின் தளுகை வந்த பின்னர்தான் சுவாமிகளுக்கு வழிபாடுதொடங்கும். கிராமமக்கள் தங்கள் விவசாயம் செழிக்க வேண்டி மலைபாதையில் விரித்துபோடப்பட்டிருக்கும் துணிகளில் கம்பு, சோளம் நெல் போன்ற நவதானியங்களை தூவிவருவர்.

    இவ்வாறு செய்தால் விவசாயம் செழிப்படையும் என்பது ஐதீகம்.திருப்பதி ஏழமலையான் தனக்கு செலுத்த வெண்டிய நேர்த்திக்கடன்களை தானே பிரசன்னமாக எழுந்தருளி இத்திருத்தலமான பெருமாள்மலையில் செலுத்த வேண்டும் என திருவுளம் கொண்டார். அதனாலேயே ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவார்த்திகள் இங்குவந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர். கோயில் காலை 5 மணி முதல் 12 வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரை யும் நடை திறந்திருக்கும். வாகனங்கள் மூலம் மலைக் கோயிலை சென்றடைய சுமார் 5 கி.மீ. தூரம் தார்சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy alert

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைனில் ரூ 300  டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசன நாட்களை மாற்றிக் கொள்ளும் விதமாகவும் அல்லது ரத்து செய்யும் விதமாக சாஃப்ட்வேரில் மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்து இருக்கிறார். 

    திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி என்று மூத்த அதிகாரிகளுடன் கோடைகால ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தர்மா ரெட்டி கோடை காலம் தொடங்கிய நிலையில் பக்தர்களுக்கு வெயில் தாக்கம் தெரியாத வகையில் பக்தர்கள் அதிக அளவில் காலணிகள் அணியாமல் நடந்து செல்லக்கூடிய பகுதிகளில் சாலையில் கூலிங் பெயிண்ட் வாரத்திற்கு ஒரு முறை அடிக்கப்பட உள்ளது. 

    மேலும் பக்தர்கள் அதிக அளவில் இருக்கக்கூடிய கோவிலின் எதிரே உள்பட முக்கிய பகுதிகளில் தற்காலிக நிழற்ப்பந்தல் அமைக்கப்படும். கோடைக்கால விடுமுறையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரக்கூடிய மே மற்றும் ஜூன் மாதங்களில் 1 வயது குழந்தையுடன் பெற்றோர்கள்,  மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு  தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட உள்ளது. பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப லட்டு பிரசாதம் தயார் செய்து தட்டுப்பாடு இல்லாமல் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. 

    ரூபாய் 300 காண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இந்தியா மட்டுமன்றி  வெளிநாடுகளில் இருந்தும் 3 மாதத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கு வருவதற்கு தயக்கம் உள்ள பக்தர்கள் அந்த டிக்கெட்டுகளை வேறு நாட்களுக்கு மாற்றிக் கொள்ளவோ அல்லது ரத்து செய்து கொள்வதற்கு தற்போது வரை ஆன்லைனில்  வசதிகள் இல்லை. அந்த வசதியை இன்னும் ஓரிரு நாட்களில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 300 ரூபாய் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் 

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருவதற்கு தயக்கம் இருந்தால் தங்கள் பயணத்தை மாற்றிக்கொள்ளலாம். திருமலையில் முற்றிலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் செம்பு மற்றும் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து  திருமலையில் 150 இடங்களில் வைக்கப்பட்டுள்ள  தண்ணீர் சுத்திகரிப்பு மையத்தில் தண்ணீரை பிடித்து கொண்டு  பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

  • Thirupathy theppa urchavam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நாள் தெப்ப உற்சவம் நாளை தொடங்குகிறது. வரும் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சீதா, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகள் ராமருடன் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 

    2-வது நாளான நாளைமறுதினம் ருக்மணி சமேத கிருஷ்ணர் சுவாமி 3 சுற்றுகளும், கடைசி 3 நாட்களான 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 7 சுற்றுக்கள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை இந்த உற்சவம் நடக்கும்.

    இந்த உற்சவத்தையொட்டி நாளையும் நாளைமறுதினமும் வசந்த உற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையும் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
     

  • Thirupathy big size laddu

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதம் இன்றி 200 ரூபாய்க்கு ஒரு பெரிய லட்டு விற்பனை  செய்வது, சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இரண்டு பெரிய லட்டுகள், இரண்டு வடை, ஐந்து சிறிய லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. 

    தற்போது, இந்த சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஒரு சிறிய லட்டு மட்டும் இலவசமாக வழங்கி மற்ற பிரசாதங்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.  மேலும், கல்யாண உற்சவத்தில் மட்டும் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்க கூடிய பெரிய லட்டுகள் சிபாரிசு கடிதத்தின் மூலம் 200 கட்டணத்தில் கோயிலுக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

    இனி பக்தர்கள் எந்தவித சிபாரிசு கடிதங்களும் இல்லாமல், நேரடியாக  கோயிலுக்கு வெளியே உள்ள  லட்டு கவுன்டரில் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பெரிய லட்டுகளை பெறுவதற்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஏற்கனவே, சலுகை விலையில்  4 லட்டுகள் 70க்கு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் எத்தனை சிறிய லட்டுகள் வேண்டுமென்றாலும் ஒரு லட்டு 50 கட்டணத்தில் கோயிலுக்கு வெளியே உள்ள லட்டு கவுன்டரில் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோன்று 100க்கு விற்பனை செய்யப்படக்கூடிய வடையும் 200 ஆக உயர்த்தி பக்தர்கள் தேவைக்கு ஏற்ப லட்டு கவுன்டரில் விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.