Tag: Thirupathy

  • Thirupathy Seva Prasadhangal

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாராந்திர மற்றும் தினந்தோறும் நடைபெறும்  சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரசாதங்களை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    தற்போது வாராந்திர சேவையில் விசேஷ பூஜையில் 1 பெரிய லட்டு வடையும்,  அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் 2 பெரிய லட்டு, 2 வடை,  சகஸ்கர கலசாபிஷேகத்தில் 1 பெரிய லட்டு, வடை, 2 அப்பம் , திருப்பாவாடா சேவையில்  வடை, ஜிலேபி, முறுக்கு , வஸ்திரமும், அபிஷேக சேவையில் 2 லட்டு, 2 வஸ்திரம், நிஜபாத தரிசனத்தில் 2 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. 

    இதேபோல் தினந்தோறும் நடைபெறும் நித்திய சேவைகளான தோமாலை, அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையில்  2 சிறிய லட்டுகளும், கல்யாண உற்சவத்தில் 2 பெரிய லட்டுகள், 2 வடை மற்றும் 5 சிறிய லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் இந்த சேவைகளில் பங்கேற்கும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு சிறிய லட்டு இலவசமாக வழங்கி மற்ற பிரசாதங்களை முற்றிலும் ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரசாதங்கள் தேவைப்பட்டால் பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் விதமாக ஏற்பாடு செய்து வருகின்றனர். 

    ஏற்கனவே இந்த சேவைகளில் பங்கேற்பதற்காக ஏப்ரல் மாதம் வரை  முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்படுவது போன்று பிரசாதங்களை வழங்கி மே மாதத்திற்கு முன் பதிவு செய்யக்கூடிய பக்தர்களுக்கு ஒரு சிறிய லட்டுகள் மட்டும் பிரசாதமாக வழங்கி மற்ற பிரசாதங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளும் விதமாக நடைமுறைக்கு கொண்டு வர தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

    தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய லட்டு பிரசாதத்தை லாபநோக்கில் பார்த்து பக்தர்களுக்கு பிரசாதங்களை ரத்து செய்து 1 லட்டு மட்டும் இலவசமாக வழங்கி மற்ற பிரசாதங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என கூறுவது நல்ல முடிவு அல்ல என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர். தேவஸ்தானத்தின் இந்த முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்து பழையபடியே சலுகை விலையில் லட்டு வழங்குவதையும் தற்போது சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்குவது போன்ற பிரசாதங்களை தொடந்து வழங்க வேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
     

  • Thirupathy theppal urchavam

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் இரண்டாவது நாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத பார்த்தசாரதி  தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கி  8-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. தெப்பல் உற்சவத்தையொட்டி தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்தி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளனர்.  

    தெப்பல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று கோதண்டராமசுவாமிக்கு  முத்து கவச அலங்காரத்தில் , தங்க, வைர ஆபரணங்கள் அணிவித்து ஜீயர்கள் முன்னிலையில் தெப்பத்தில் 5 முறை  வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். . இரண்டாவது நாளான இன்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத பார்த்தசாரதி சுவாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்து பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் அருள் பாலித்தார், தெப்பல் உற்சவத்தின் மூன்றாவத் நாளான  4-ந் தேதி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியும், 5-ந் தேதி கிருஷ்ணருடன் ஆண்டாள் தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 6,7,8 ஆகிய தேதிகளில் உற்சவர் கோவிந்தராஜ சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன்  தெப்ப குளத்தில் 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு  அருள் பாலிக்க உள்ளனர். 

    தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அன்னமய்யா மற்றும் தாச சாகித்தியா திட்டத்தின் சார்பில் பஜனை, ஆன்மீக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் துணை செயல் அலுவலர் வரலட்சுமி மற்றும் அதிகாரிகள் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • Thirupathy Free Laddu

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    உலக அளவில் பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு அனைவரது விருப்பப்பட்டியலில் இருக்கும். இந்தநிலையில், திருப்பதி கோயிலில் இலவச தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கும் நடை முறையை தேவஸ்தானம் நாளை முதல் நிறுத்த உள்ளது.

    அதற்கு பதிலாக ஒரு இலவச லட்டு வழங்கப்படுகிறது. கூடுதலாக தலா 50 ரூபாய் வீதம் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் எனவும், இதற்காக கோயிலுக்கு வெளியே கூடுதலாக 12 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.  

    நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் லட்டுகள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதிகாலை சுப்ரபாத சேவையில் துவங்கி இரவு வரை ஏழுமலையானை வழிபடும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.

  • Thirupathy Sorgavasal dharisanam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1.74 லட்சம் பக்தர்கள்  சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 6.19 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கை பக்தர்கள் செலுத்தியிருக்கின்றனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி கடந்த ஆறாம் தேதி அதிகாலை 2 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று துவாதசியையொட்டி நள்ளிரவு 12.30 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டனர்.

    வைகுண்ட ஏகாதேசி அன்று 84 ஆயிரத்து 160 பக்தர்களும் நேற்று துவாதசியன்று 84 ஆயிரத்து 160 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரண்டு நாட்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 738 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர். 

    பின்னர் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் எண்ணப்பட்டதில்  இரண்டு நாட்களில் 6.19 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள நான்கு அறைகளில் பக்தர்கள் காத்திருப்பதால் தரிசனத்திற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    மேலும் ஆதார் அட்டை மூலம் வழங்கக்கூடிய சர்வ தரிசனம் மற்றும் மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வழங்க கூடிய திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள்   ஆன்லைனில் ரூ 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2  மணி நேரத்தில் சாமி தரிசனம்  செய்து வருகின்றனர்.

  • Thirupathy free Laddu

    ஜனவரி 20 ஆம் தேதி முதல் சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த லட்டுகள் ரத்து செய்து அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்து இருக்கிறது. 

    இதுவரை அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து வரக்கூடிய பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கூடிய அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே இலவச தரிசனத்தில், சர்வ தரிசனத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள்,  ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனத்தில்  சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது. 

    இனி சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த லட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஒரு லட்டு மட்டும் இலவசமாக வழங்கி பக்தர்கள் தேவைக்கேற்ப ஒரு லட்டு ரூபாய் 50 க்கு கோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள லட்டு கவுன்டரில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Thirupathy April month Ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல்  மாதத்திற்கான 65,280 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சேவைகளுக்கான 65 ஆயிரத்து 280 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான கோட்டா வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

    இதில் ஆன்லைன் குலுக்கல் கோட்டாவில்  சுப்ரபாதம் 7920, அர்ச்சனை 140 , தோமாலை 140, அஷ்டதள பாத பத்ம ஆராதனை 180, நிஜ பாதம் 2300 ,  டிக்கெட்டுகள் ஒரு வாரத்திற்கு பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து ஒருவாரத்திற்கு பிறகு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பக்தர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. 

    மேலும் பொதுப்பிரிவு கோட்டாவில் நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக 54 ஆயிரத்து 600 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விசேஷ பூஜை 1500 , கல்யாண உற்சவம் 12 ஆயிரத்து 300,  ஊஞ்சல் சேவை  4050, ஆர்ஜித பிரம்மோற்சவம் 7,425, வசந்த உற்சவம் 13,200 , சகஸ்கர தீப அலங்கார சேவை 15,600 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த டிக்கெட்டுகளை www.ttdsevaonline.com என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy Hundiyal Kanikkai

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2019ஆம் ஆண்டு 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் 1161.74 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு 2018 காட்டிலும் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 132 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

    சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக 1161. 74 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 95. 25 கோடி ரூபாய் கூடுதலாக உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. 

    மேலும் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு 12 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 815 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 625 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    பக்தர்களுக்கு அறைகள் வாடகை விட்டதன் மூலம் 83.71 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

  • Thirupathy Jan functions

    ஜனவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்

    ஜனவரி 6 – வைகுண்ட ஏகாதசி,

    ஜனவரி 7- ஸ்ரீ வாரி புஷ்கரணியில் தீர்த்த முக்கோட்டி உற்சவம்,

    ஜனவரி 7 முதல் 13 வரை – ஆண்டாள் நீராடும் உற்சவம்,

    ஜனவரி 14 – போகி பண்டிகை

    ஜனவரி 15 சங்கராந்தி

    ஜனவரி 16 – ஸ்ரீவாரி பார்வேடு உற்சவம், கூரத்தாழ்வார் வருடதிருநட்யீசத்திரம்,

    ஜனவரி 19 – ஆத்யாயன உற்சவம் நிறைவு

    ஜனவரி 30 – வசந்த பவுர்ணமி விழா. 

  • Thirupathy Newyear Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  புத்தாண்டு  31-ஆம் தேதி முதல் 1ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

    மேலும் ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், நன்கொடையாளர்களுக்கான முன்னுரிமை தரிசனம்,  ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்யதரிசனம், அங்கபிரதட்சனை சேவையும்  என அனைத்து சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

     இதேபோன்று வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஒட்டி 5-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை அனைத்து முன்னுரிமை தரிசனங்களும், ( ஆர்ஜித சேவை ) கட்டண சேவைகள் ,சர்வ தரிசனம்,  திவ்யதரிசனம் , அங்கபிரதட்சணம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. 

  • Thirupathyil Azhvar Thirumanjanam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி இன்று 5 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்களுக்கு சுவாமி தரிசனம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மற்றும் 7 தேதிகளில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையோட்டி சொற்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது.இதையொட்டி  இன்று கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடைபெற்றது. 

    பக்தர்கள் 5 மணி நேரத்துக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு , ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் தூய்மைப்பணி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இன்று காலை சுப்ரபாத சேவையுடன் சுவாமி துழில் எழுப்பப்பட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றது. 

    பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படவுள்ளது. கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிருத்தப்பட்டது. தொடர்ந்து, 12 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் கோயில் ஜீயர்கள், செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி,  முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செயல் அலுவலர்  அனில்குமார் சிங்கால் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி 4ம் தேதி மாலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்காக வருவார்கள் என்பதால் அதற்கேற்ப பக்தர்கள் காத்திருக்கும் விதமாக வைகுண்டம் காத்திருப்பு அறை, நாராயணகிரி தோட்டம்,  நான்கு மாட வீதி முதல் கல்யாண மேடை வரை பக்தர்களுக்கு குளிரில் பாதிப்பு ஏற்படாத வகையில் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான அன்னப் பிரசாதம் , குடிநீர் ஆகியவை காத்திருக்கும் இடத்திலேயே வழங்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் முடிந்த அளவிற்கு அதிக அளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.