Tag: Thirupathy

  • Thirupathy Ezhumalayan Thanga Therottam

    திருப்பதி மலையில் நடைபெறும் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவ ஆறாவது நாளான இன்று மாலை தங்க  தேரோட்டம் நடைபெற்றது. தங்க தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு தங்கத்தேரில் எழுந்தருளினார்.

     தொடர்ந்து உற்சவர்களுக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதன் பின் மாலை 4 மணி முதல் ஏழுமலையான் கோவில் மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சாமியின் தங்கத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

     அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

  • Thirupathy unlimited laddu

    திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தலா ஐம்பது ரூபாய் கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கை லட்டு பிரசாத விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் தெரிவித்துள்ளார்.

    திருப்பதி ஏழுமலையானை  கும்பிட்ட பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் அன்லிமிடெட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்பதே தேவஸ்தானத்தில் பாலிசி என்று கூறிய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் சாமி கும்பிட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவையான எண்ணிக்கையில் தலா ஐம்பது ரூபாய் விலையில் லட்டுக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

     ஆனால் சாமி கும்பிடாமல் லட்டு மட்டுமே கேட்கும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் இரண்டு லட்டு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ்  திருப்பதி மலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    ஆனால் இதுவரை தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு அன்லிமிடெட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்ற பாலிசியை கவனிக்காமல் இருந்து விட்டதாகவும்,  கடந்த இரண்டரை மாதங்களாக தேவஸ்தான நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து நாளை முதல் ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் ஆகிய ஏதாவது ஒன்றுடன் லட்டு கவுண்டர்களுக்கு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் டிக்கெட்டுக்கு ஒரு லட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    அதனுடன் கூடுதலாக  தேவஸ்தானத்தின் பாலிசியை அடிப்படையாகக் கொண்டு பக்தர்கள் தலா 50 ரூபாய் விலையில் தங்களுக்கு எத்தனை லட்டுக்கள் தேவையோ அத்தனை லட்டுக்களை  அன்லிமிடெட் ஆக வாங்கி கொள்ளலாம் என்று கூறினார்.

    மேலும் திருப்பதி மலையில் உள்ள இடைத்தரகர்களை ஒழித்து கட்டுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பான பலனை கொடுப்பதாக கூறிய அவர், சாமி கும்பிடாமல் திருப்பதி மலையில் இருந்து ஒரு சிலர் ஏராளமான லட்டுக்களை வாங்கி சென்று அவற்றை தங்கள் வீட்டு திருமணங்களில் உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்ததை காண முடிந்தது.

    திருப்பதி தேவஸ்தான லட்டுக்களை வீட்டு விசேஷங்களில் உறவினர்களுக்கு வழங்குவதை அவர்கள் ஒரு கௌரவமாக கருதுகின்றனர். ஆனால் திருப்பதி லட்டு என்பது பிரசாதம். அதை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று அப்போது தெரிவித்தார்.

  • Thirupathy Garuda Vaganam Purappadu

    பௌர்ணமி தினம் அன்று ஒவ்வொரு மாதமும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருடபாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

     கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி சர்வ ஆபரண அலங்காரம் பூண்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.  அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே நான்கு மாட வீதிகளில் கருட வாகன புறப்பாடு கண்ட உற்சவர் மலையப்ப சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

  • Thirupathy sri ramanavami

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராம நவமியையொட்டி சீதா ராமர் லட்சுமணர், அஞ்சேனயருக்கு நடைபெற்ற திருமஞ்சனம்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில்   ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சீதா, ராமர்  லட்சுமணர், ஆஞ்சனேய சுவாமி உற்சவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில்  அர்ச்சகர்கள் பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனம்  செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் சுவாமி, செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி தம்பதி, கோயில் துணை இ.ஓ. லோகநாதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இரவு 7 மணிக்கு  கோதண்டராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் ஏழுந்தருளி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். நாளை இரவு ராமர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.

  • Thirupathy bramorchavam day 1

    ஐந்து நாள் உற்சவத்தில் முதல் நாளில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பரிவாரங்களுடன் தெப்பத்தில் பவனி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர தெப்போற்சவம் வைபவமாக துவங்கியது. மார்ச் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தெப்போற்சவத்தை  முன்னிட்டு ஆலய கருவறையில் உள்ள ஸ்ரீ  ராமச்சந்திர  சமேத லக்ஷ்மண சீதா உற்சவ மூர்த்திகள் ஸ்ரீ ருக்மணி ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நாள்தோறும் வலம் வருவர்.

     

    அந்த வகையில்  முதல் நாளில் மாட வீதிகளில் வலமாக வரச் செய்து ஆலய திருக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள செய்தனர் தொடர்ந்து உற்சவமூர்த்திகள் அலங்காரம் மின் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் திருக்குளத்தை மூன்று முறை வலம் வர செய்தனர் திருக்குளத்தில் படித்துறையில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து  சுவாமியை வழிபட்டனர். ஐந்து நாட்கள் தெப்போற்சவத்தின்  முதல் நாள் உற்சவம் வைபவமாக நடைபெற்றது

  • Thirupathy temple urchavam

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் தெப்ப உற்சவத்தின் நான்காம் நாள் ஆன இன்று இரவு உற்சவர், ஆண்டாள் சமேதராக கிருஷ்ணர் அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     ஐந்து நாட்கள் நடக்கும் தெப்போற்சவத்தின் நான்காம் நாளான இன்று உற்சவர் கிருஷ்ண அலங்காரத்தில் ஆண்டாள் சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருக்குளத்தை அடைந்தார்.

    தொடர்ந்து தெப்பத்தில் எழுந்தருளிய உச்சவர்கள் தெப்போற்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிந்தராஜரின் தெப்போற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.

  • Thirupathy Garuda vaganam

    கார்த்திகை பௌர்ணமி தினமான இன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த நிலையில் அங்கு அவருக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

     தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

  • Thirupathy kalki avadharam

    திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 8-ம்  நாளான இன்று இரவு   குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா ஆரவாரத்துடன் மலயப்பன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சாலகட்ல பிரம்மோற்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி தினந்தோறும்   பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்று வருகிறது

    பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று இரவு தங்கக் குதிரை வாகனத்தில்  கல்கி அலங்காரத்தில் வாளேந்திய கோலத்தில்  மலையப்பன்  நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் ஏழுமலையான் என்பதை குறிக்கும் வகையில்  மலயப்பர் கல்கி ரூபத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  • Thirupathy Car Festival

    திருப்பதி ஏழுமலையான்  பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதில் எட்டாம் நாளான இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சாலகட்ல பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் தேரோட்டம் திருமலை மாட வீதிகளில் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    கடந்த 18ம் தேதி  திருப்பதி  ஏழுமலையான் கோயில் சாலகட்ல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரமோற்சவத்தின்  முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்ட மலையப்ப சுவாமி தேர் மீது எழுந்தருளினார்.

    தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகள் தூப, தீப,நைவேத்தியம் ஆகியவற்றுக்குப் பின் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் வடம் பிடிக்க திருமலை நான்கு மாட வீதிகளில் ஏழுமலையானின் தேரோட்டம் வைபவமாக நடைபெற்றது.

    இதில் நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

  • Thirupathy Garuda sevai

    திருப்பதி பிரம்மோற்சவ விழா வின் 5-ம் நாளான இன்று இரவு  கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. உற்சவரான மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள் மிக முக்கியமானதொரு நாளாகக் கருதப்படுகிறது. உற்சவரான மலையப்ப சுவாமி இன்று காலை மோகினி அவதாரத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உடன் சிறிய கிருஷ்ணர் அவதாரத்திலும் சுவாமி பவனி வந்தார். இரு பல்லக்குகளில் மாட வீதிகளில் பவனி வந்த உற்சவ மூர்த்திகளை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிந்தா..கோவிந்தா.. என கோஷமிட்டனர். சுவாமி வீதி உலா வந்த பாதையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    காலையில் மோகினி அவதாரத்தில் காட்சி அளித்த ஏழுமலையான், இரவில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருட சேவையை காண காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். திருமலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.