Tag: Thirupathy

  • Thirupathy Golden Car Festival

    திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாலகட்ல பிரம்மோற்சவம் கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 6-ம் நாளான இன்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் தங்கத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதில் பெண்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாடவீதியில் காத்திருந்த திரளான பக்தர்கள் திரண்டிருந்து தேரோட்டத்தைக் கண்டு களித்தனர். மாட வீதிகள் எங்கும் 'கோவிந்தா… கோவிந்தா' எனும் பக்தி பரவச கோஷம் விண்ணைப் பிளந்தது. இதனை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் அமர்ந்து கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசித்தனர்.

  • Shimma vaganathil thirupathy perumal

    திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பு கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.

    பிரம்மசாத்தை ஒட்டி பல்வேறு வாகன சேவைகள் திருமலை மாட வீதிகளில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மூன்றாம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி யோக நரசிம்ம அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் வாகன மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து வாகன சேவையைத் துவக்கி வைத்தனர்.

    தொடர்ந்து தேவஸ்தான ஜீயர்  சுவாமிகள் தலைமையில் கோஷ்டி பிரபந்த பாசுரங்கள்  சொல்லியபடி முன் செல்ல உயர் அதிகாரிகள் ஆங்காங்கே ஆரத்தி அளித்து சுவாமி அருள் பெற்றனர் தொடர்ந்து மாடவீதி முழுவதும் பல்வேறு கலைஞர்கள் தங்களது கலையை சுவாமிக்கு சமர்ப்பித்துச் சென்றனர்.

    மேலும் ஒரு குழுவினர் நரசிம்மர் வேடமணிந்து மாட வீதிகளில் வலம் வந்தது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது மாட வீதி முழுவதும் கோவிந்த நாமம் சொல்லியபடி பக்தர்கள் ஆரத்தி அளித்து மலையப்ப சுவாமியை வணங்கினர்.

  • Thirupathy 2 crores golden flower

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2  கோடி மதிப்புள்ள 108 தங்க தாமரை நன்கொடையாக வழங்கிய பக்தர்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த டாக்டர் ராஜீவ் ரெட்டி ரூ. 2  கோடி மதிப்புள்ள தங்க தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார். ஏழுமலையானுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அஷ்டதள பாத பத்ம ஆரதனை சேவைக்காக 108 தங்க தாமரை மலர்களை  லலிதா ஜூவல்லர்ஸில் பிரத்யேகமாக வேலைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டன.

    இந்த தங்க தாமரை மலர்களை நன்கொடையாளர் ராஜீவ் ரெட்டி   லலிதா ஜுவல்லரி நிறுவன தலைவர் கிரண் குமாருடன் இணைந்து  ஏழுமலையான்  கோயிலிலுக்கு  வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று வழிப்பாடு செய்தனர். பின்னர்  அர்ச்சகர்களால் தங்க தாமரை மலர்கள்  சுவாமியின் பாதத்தில் வைக்கப்பட்டு ஆசி பெற்ற பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாதர்  மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினர்.

  • Thirupathy garuda vaganam

    திருப்பதி ஏழுமலையான்  கோயிலில்  பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில்  கருட வாகனத்தில் எழுந்தருளிய  மலையப்ப சுவாமி

    திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி  மலையப்ப   தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி  பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாட வீதியில்  உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
     
    108 வைஷ்ணவ திவ்யதேசங்களிலும் கருடசேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். அவ்வாறு ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளும் பெளர்ணமி அன்று கருட வாகனத்தில் வலம் வருவது வழக்கம். இந்த வாகன சேவையில் ஏழுமலையான்  கோயில் ஜீயர்கள், கோவில் துணை இஓ  லோகநாதம், விஜிஓ  பாலிரெட்டி,  உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நான்கு மாட வீதியில்  திரண்டு இருந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • Thirupathy dharshan murai

    பிருகு முனிவரால் ஒரு முறை மகாவிஷ்ணுவை பிரிந்தாள் மகாலட்சுமி. வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்து கோல்காப்பூரில் தங்கியிருந்தாள்.  மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து திருமலையில்  ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

    அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி என்றப் பெண்ணை (கலியுகத்தில் பத்மாவதி) மகாவிஷ்ணு மணந்து கொண்டார். திருமணச்செலவுக்கு மகாவிஷ்ணுவிடம் பணம் இல்லை. மகாலட்சுமி தான் பெருமாளிடம் தற்போது இல்லையே?. இதனால் திருமணச்செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை கடனாகப் பெற்றார் திருமால். அந்த தங்கக்காசுகளை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்துவிடுவதாகவும் கூறினாராம்.

    இந்த நிலையில் மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரத மகரிஷி மூலம் அறிந்து கொண்ட மகா லட்சுமி, கோல்காப்பூரில் இருந்து திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மகாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து, தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்ற இடத்தில் அலர்மேலுமங்கை என்னும் பத்மாவதி தாயாரை அமர்த்தினார்.

    திருமலையில் வெங்கடாசலபதியின் கோவிலுக்கு அருகிலேயே ‘சுவாமி புஷ்கரணி’ என்னும் தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்தின் மேற்குக்கரையின் வடமேற்கு மூலையில் வராகமூர்த்தி ஆலயம் இருக்கிறது. இந்த வராக மூர்த்தியே திருமலையின் ஆதிமூர்த்தி ஆவார். எனவே திருமலையில் வெங்கடாசலபதியை தரிசிக்கும் முன்பு ஆதிவராக மூர்த்தியை தரிசிப்பதே முறையான வழிபாடு ஆகும்.

    பின்னர் ‘மகா துவாரம்' எனும் நுழைவு வாசல் வழியாக உள் நுழைந்தால், தங்கத்தால் வேயப்பட்ட ‘ஆனந்த நிலையம்' விமானத்தை தரிசிக்கலாம். அதன் விமானத்தின் கீழ்தான், நின்ற கோலத்தில் மூலவர் வெங்கடாசலபதி அருள்பாலிக்கிறார். விமானத்தின் வடகிழக்கு மூலையில் வெள்ளியால் வேயப்பட்ட திருவாசியோடு, விமான வெங்கடேசர் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டு வலம் வந்தால் ஆனந்த வாழ்வு அமையும் என்கிறார்கள்.

    கருவறையில் ராமானுஜர் சாத்திய சங்கு, சக்கரம் மற்றும் நெற்றியில் மிகப்பெரிய திருநாமப் பட்டையுடன் வேங்கடவன் அருள்கிறார். கருவறை வெளிச்சுற்றில் வரதராஜர், ராமானுஜர், யோக நரசிம்மர் சன்னிதிகளும், பிரார்த்தனை உண்டியலும் உள்ளன.

    புரட்டாசி சனிக்கிழமை திருவோண நாளில்தான், திரு மலைக்கு வைகுண்டத்தில் இருந்து மகாவிஷ்ணு எழுந்தருளினாராம். எனவே இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளும், புரட்டாசி திருவோண விழாவும் மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. நாரத முனிவரின் வழிகாட்டலின்படி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து, வேங்கடவனை வழிபட்டு பெரும் செல்வமும், வைகுண்டபதவியும் பெற்றான் பீமன்.

    இவன் மகாபாரத பீமன் அல்ல. உடல் ஊனமுற்ற குயவன். மண் பானை செய்யும் அவன், புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வேங்கடவனின் அருள்பெற்றதால், இன்றும் திருமலை வேங்கடவனுக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை மண்பாண்டங்களிலேயே தயாரிக்கிறார்கள். தினமும் ஒரு புதிய மண் சட்டியிலேயே நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

    வெள்ளிக்கிழமைகளில் இங்கு வேங்கடவனுக்கு வில்வார்ச்சனை செய்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று இங்கு நடைபெறும் ‘ஷேத்ர பாலிகா’ உற்சவத்தின்போது, பெரு மாளுக்கு வைரத்தில் திருநீற்று நெற்றிப் பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது.

    திருச்சானூரில் அலர் எனும் தாமரை மேல் அமர்ந்த திருக்கோலத்தில் பத்மாவதி தாயார் கிழக்குப் பார்த்த வண்ணம் அருள்கிறார். திருச்சானூரில் தனிச்சன்னிதியில் ஸ்ரீகிருஷ்ணரும், சீனிவாசப்பெருமாளும் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும்.

     

  • Thirupathy bramorchavam laddu

    பிரம்மோற்சவ நாட்களில் ஒன்பது லட்சம் லட்டுக்கள் இருப்பு இருக்கும் வகையில் லட்டு உற்பத்தி செய்ய தேவஸ்தான முடிவு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, அடுத்த மாதம் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை 9 நாட்கள் திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக  கூறினார்.

    பிரமோற்சவ ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேவஸ்தானத்தில் உள்ள பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுப்பா ரெட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ சாமி உச்சவங்கள் நான்கு மாட வீதிகளில் நடைபெற உள்ளன. எனவே பிரம்மோற்சவ சுவாமி உற்சவங்களை தரிசிக்க ஏராளமான அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவை அக்டோபர் மாதம் முதல் தேதி என்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால் கருடவாகன சேவையை தரிசிக்க தமிழகத்திலிருந்து ஏராளமான அளவில் பக்தர்கள் வருவார்கள். அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி மலையில் உள்ள வெளிவட்ட பாதையில் பிரமோட்சவத்திற்காக வரும் பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு காலை 6 மணிக்கு துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை இலவச உணவு வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களும் 9 லட்சம் லட்டுக்கள் எப்போதும் இருப்பு இருக்கும் வகையில்   லட்டு உற்பத்தி செய்யவும்,திருப்பதி மலையில் உள்ள முக்கிய பகுதிகளை ஒளிரும் சரவிளக்குகளால் அலங்கரிக்கவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கருட வாகன சேவை நடைபெறும் அக்டோபர் முதல் தேதி அன்று திருப்பதி மலை பாதையில் இருசக்கர மோட்டார் வாகன பயணம் அனுமதிக்கப்படாது. எனவே பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் அன்றைய தினம் திருப்பதி திருமலை இடையே பேருந்துகள், கார்கள் மற்றும் டாக்ஸிகள் ஆகியவற்றில் மட்டுமே பயணிக்க  முடியும்.

    அடுத்த மாதம் 27 ஆம் தேதி பிரம்மோற்சவ துவக்க நாளன்று முதல் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு ஆந்திர அரசின் சார்பில் பட்டுவஸ்திர சமர்ப்பணம் செய்ய இருக்கிறார். அன்றைய தினம் மட்டும் இரவு 9 மணிக்கு துவங்கி மாடவீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெறும். மற்ற எட்டு நாட்களும் காலை 7:00 மணிக்கும், இரவு 9:00 மணிக்கும் சாமி ஊர்வலம் துவங்கி நடைபெறும். திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கரோனா நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அப்போது கூறினார்.

  • Thirupathy laddu shortage

    பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் திருப்பதி மலையில் மதியம் முதல் லட்டு பிரசாதத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கூடுதலாக லட்டு கேட்கும் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் மட்டுமே  வழங்கப்படுகின்றன.

    திருமலையில் ஏழுமலையானை வழிபடும் பக்தர்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் லட்டு பிரசாதத்தின் விலையை 100 சதவீதம் அளவிற்கு உயர்த்திய தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் இனிமேல் எத்தனை லட்டு தேவை என்றாலும் கவுண்டரில் நேராக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

     அப்போது முதல் அதற்கு முன் 25 ரூபாய்க்கு விற்பனை செய்த லட்டு ஒன்று 50 ரூபாய்க்கும்,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய லட்டு ஒன்று 200 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வடை பிரசாதம் 100 ரூபாய்க்கும் கவுண்டர்களில் பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இதனால் பக்தர்கள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் லட்டு மற்றும் வடை ஆகிய பிரசாதங்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில்  பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் அதற்கு ஏற்ற வகையில் லட்டு உற்பத்தி ஏழுமலையான் கோவிலில் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே இன்று மதியம் முதல் திருப்பதி மலையில் லட்டு பிரசாதத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சாமி கும்பிட்ட பின் பக்தர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் லட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

    எனவே பக்தர்களுக்கு டிக்கெட்டுகளுக்கு உரிய ஒரு லட்டு தவிர கூடுதலாக தலா இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் லட்டு பிரசாதத்தை வாங்கி சென்று உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு பங்கிடலாம் என்று கருதி வாங்குவதற்காக கவுண்டருக்கு சென்ற பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  • Thirupathy 5 hours dharshan stop

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.  காலை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை சேவை நடக்கும். பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
     
    இதில் மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் என அனைத்து இடங்களும் தூய்மை படுத்தப்படும்.

    பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிக்கட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும். மூலவர் மீது போர்த்தப்பட்டுள்ள பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது.

  • Thirupathy march 29 azhvar thirumajanam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 29ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனையொட்டி  6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி வரும் ஏப்ரல் 2ம்தேதி யுகாதி பண்டிகையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 29ம்தேதி காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவை நடக்கும். பிறகு காலை  6 மணி முதல் பகல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். இதில் அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தப்படும்.

    பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். மூலவர் மீது செலுத்தப்பட்ட பட்டுத்துணி அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், சுமார் 6 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரூ.4.28 கோடி காணிக்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை முதல் இரவு வரை மொத்தம் 64 ஆயிரத்து 986 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 200 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.4.28 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

  • Thirupathy free dharshan ticket

    திருப்பதி ழுமலையானை தரிசிக்க இன்று முதல் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை இணையம் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. அதிலும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்குபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒரு மாதத்துக்கான டிக்கெட்களின் விற்பனை தொடங்கிய பத்தே நிமிடங்களில் அவை முடிந்துவிடும் நிலை இருந்தது. 

    இன்று முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளன. அவற்றை பக்தர்கள் நேரிலேயே சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மூன்று இடங்களில் இன்று காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. இதைப் பெற்றுக்கொள்ள ஆதார் அட்டை அவசியம். மேலும் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்.

    இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் நாளை காலை முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தற்போது நாள் தோறும் முப்பதாயிரம் பேருக்கு மேல் தரிசனம் செய்துவரும் நிலையில் படிப்படியா தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தேவஸ்தான அலுவலர் தெரிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பு ஏழுமலையானின் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.