Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

     

    ஒரு கிராமத்தில் சாம்பசிவம் என்ற ஒரு அந்தணர் வசித்து வந்தார். சிறுவயது முதலே வேதம் புராணம் முதலிய சாஸ்திரங்கள் பலவும் கற்று சிறந்த மனிதராய் திகழ்ந்தார். அவர் எவ்வளவுதான் கற்றவராகவும் மற்றவருக்கு உபதேசிப்பவராகவும் இருந்தாலும் அந்த ஊரில் அவருக்கு மரியாதை இருந்ததே ஒழிய செல்வத்தைக்கொடுப்பவர் யாருமில்லை.

    அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக்கொடுத்தார்களே அன்றி அள்ளிக்கொடுக்கவில்லை. அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை. அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப்பேசி வந்தாள்.

    அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்ற செல்வவளம் மிக்கவராகத்திகழ்ந்தார். அவரது நிலையைச் சொல்லிக்காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச்சேர்க்கும் வழியை பின்பற்றும்படி கூறிவந்தாள்.

    அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச்சென்று பணம் சம்பாதித்து வருவதாக கூறி புறப்பட்டார்.

    அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாக தன்வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப்புறப்பட்டார். இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர். தனபாலனின் வில்வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்க விறுவிறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.

    இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி தாயார் பார்த்தாள். பின், அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப்பார்த்தாள்.

    கண்களை மூடிப்படுத்திருந்த அந்த மாயக்கண்ணன் புன்னகை புரிந்தார். அவரது புன்னகையைக் கண்டு பொறுக்காத லக்ஷ்மி “சுவாமி, இது என்ன அநீதி..?; சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக்கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை? அவருக்கு செல்வ வளத்தை தரக்கூடாதா?” என்றாள் சற்றே கோபத்துடன்.

    அதே புன்னகையுடன் நாராயணர் “என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு அதிபதி? செல்வத்தை அள்ளிக்கொடுக்க வேண்டியதுதானே?” என  புன்சிரிப்போடு  “நானே கொடுக்கிறேன் சுவாமி” என்றவளைத் தடுத்தார் நாராயணர். “லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜென்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை. நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்.” என்றார் .

    “கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி. அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்” என்றவளைப் பார்த்து புன்னகைத்த நாராயணர், “சரி. உன் விருப்பப்படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால் இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்” என்று அனுமதியளித்தார்.

    மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன்மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க் கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. “நமது ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம்” என்ற எண்ணத்துடன் தன் இருகண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.

    அதே சமயம் தன் கையிலிருந்த பொன்மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி. கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையை தாண்டிச்சென்று தன் கண்களைத் திறந்தான். “அப்பாடா, கண்ணில்லாமல் நடப்பது ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானுகோடி நன்றி” என்று இருகை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.

    வைகுண்ட நாராயணன் சிரித்தார். “என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே?” எனக்கேட்டார் . “சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப்பார்க்கிறேன்” என லட்சுமி கோரிக்கை வைத்தாள். “சரி உன் விருப்பம்.”என்று அனுமதி அளித்தார் இறைவன். இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவிய மூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.

    தன் முன் கிடக்கும் அந்த மூட்டையை கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன். மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள். நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள். இப்போதும் இறைவன் புன்னகைத்தார். “லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார். உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே. என்ன செய்வது அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்” என்றார் பெருமூச்சுடன்.

    அதே சமயம் கையில் எடுத்த செல்வத்தை பிரித்துப்பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாத அந்தப் பாதையில் யார் இந்த மூட்டையைப்போட்டிருப்பார்? யாரேனும் தேடிவருவார்களா என்று அங்கேயே காத்திருந்தான். அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று அடைந்த தனபாலன் தன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டு இருந்தான். அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப் பார்த்து ஏன் இங்கேயே தங்கி விட்டாய்? என்று விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச்சொன்னான். தான் தவற விட்ட திரவியத்தைப் பற்றி கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக்கொடுத்து “ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா? நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்” என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான்.

    தனபாலனும் அதை பெற்றுக்கொண்டு விரைந்து ஊர் வந்து சேர்ந்தான். மிகுந்த நல்லகாரியம் செய்து விட்டதுபோல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத்தொடர்ந்தான்.

    நாராயணன் “பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்த செல்வம் அவனைச் சேரவில்லை பார். இது அவனது பூர்வ ஜன்ம வினை” என்றார் அதே புன்னகையோடு. இப்போது மகாலட்சுமி நாராயணனைப் பார்த்து “நானே நினைத்தாலும் ஒருவனை செல்வந்தனாக ஆக்கமுடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன் சுவாமி” என்று கூறி தலைவணங்கி நின்றாள்.

     

     இன்றைய காலத்தில் நாம் அனைவரும்  பணமே பிரதானம் என்று பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறோம் . ஆனால் கடைசியில் நம்முடன் கூட வரப் போவது ,  நாம் வாழும் காலத்தில்  செய்த பாவ புண்ணியங்கள் தான் .

    காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”  என்றார் பட்டினத்தார் உடைந்து போன ஊசியைக்கூட செத்த பின்னால் மனிதனால் கொண்டு செல்ல முடியாது  . இந்த உண்மையை நாம் உணரும் தருணம் இவ்வுலகத்தில் மேலும் அழியும் உடலின் மீதும் நாம் வைக்கும் பந்தம் அறுந்துப் போகும் . அழியாத செல்வமாகிய நற் சிந்தனையை விதைக்க தொடங்குவோம் .

  • பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா….

    பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா மே 8-ந் தேதி தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது. முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில், ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர கழு திருவிழா கொண்டாடப்படுகிறது. இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மூலவரான ஞான தண்டாயுதபாணி நவபாசான திருமேனியில் காட்சியளிக்கிறார். கடும் கோடை காலங்களில் மூலவரை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி ஆற்றிலிருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். இதில் கடும் கோடை காலமான அக்னி நட்சத்திர கழு நாட்கள், சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் ஆகும். இதையே பழனி கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் பூமியின் மீது சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக விழுவதால் பூமியில் வெப்பம் பன்மடங்கு அதிகமாகிறது. இந்த கடும் கோடை வெப்பம் அனைத்து உயிரினங்களையும் பாதிக்காமல் தடுக்கவும், உயிரினங்கள் நோய் நொடியின்றி வாழவும் கோவில்களில் சிவபெருமானுக்கு சீதகும்பம் வைத்து குளிர வைக்கும் நிகழ்ச்சி தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

  • தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்…

    சித்திரை திருவிழாவையொட்டி உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரர், தியாகராஜர்- கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேரில் மண்டபத்தை வந்தடைகிறார்கள்.

  • அக்னி நட்சத்திர தாராபிஷேகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மே மாதம் 4 ஆம் தேதி முதல் வருகிற 28-ந் தேதி வரை சுவாமிக்கு தாராபிஷேகம் நடக்கிறது. அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் மே மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. கத்திரி வெயிலின்போது வெயில் அளவு 110 டிகிரியை கூட தாண்டலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். கோடை மழை பெய்து பூமியின் வெப்பத்தை தணிக்க வேண்டும் என பொதுமக்கள் இறைவனை வேண்டி வருகிறார்கள். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடக்கம் முதல் முடிவு வரை ஆண்டுதோறும் சுவாமிக்கு தாராபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான தாராபிஷேகம் மே 4 ஆம் தேதி முதல் முதல் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

  • திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் புஷ்ப யாகம்

    கோதண்டராமர் பிறந்த திருநட்சத்திரத்தையொட்டி திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் நேற்று 18 வகையான மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது.
    திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் நேற்று மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை புஷ்ப யாகம் நடந்தது. இந்தப் புஷ்ப யாகம் கோதண்டராமர் பிறந்த திருநட்சத்திரத்தையொட்டி நடந்தது. முன்னதாக, மதியம் சீதா, லட்சுமணர் சமேத ராமச்சந்திரசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    அதைத்தொடர்ந்து மல்லிகை, ரோஜா, சம்பங்கி, கனகாம்பரம், சாமந்தி உள்பட 18 வகையான மலர்களை கூடைகளில் நிரப்பி கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் 18 வகையான மலர்களால் உற்சவ மூர்த்திகளான சீதா, லட்சுமணர், ராமச்சந்திரசாமிக்கு புஷ்பார்ச்சனை செய்யப்பட்டது.

  • மூன்று தேவிகள் கொலுவீற்றிருக்கும் சோட்டானிக்கரை

     

    பொதுவாக இந்து மத ஆலயங்களில் நமக்கு தெரிந்த செய்திகளை விட தெரியாத அதிசயங்கள் அதிகம் உண்டு . ஒவ்வொரு பழங்கால கோவிலுக்கும் விசேஷமான சிறப்பம்சங்கள் நிச்சயம்இருக்கும் .அந்த வகையில் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கும் ஒரு விசேஷம் உண்டு . இங்குள்ள  சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று தேவி வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையில்  சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையில் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும்  அருள் பாலிக்கிறாள் . எவர் ஒருவருக்கு  இந்த மூன்று  தரிசனங்களையும்  காண பேறு  அமைகிறதோ , அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை .

     

    ஜெகத்குருவுக்கு அருளிய அன்னை

                                       

    இதற்கு பின்னணியில் ஒரு புராண கதையும் சொல்லப்படுகிறது .

    அத்வைத மதத்தை அன்னை கலைவாணியின் அருளால் தழைத்தோங்க செய்த ஜெகத்குரு சங்கராச்சாரியார் மைசூர் சாமுண்டீஸ்வரியை தனது  கேரளா தேசத்திற்கு எழுந்தருள  செய்ய  கடுமையான தவம்  மேற்கொண்டார் . தவத்திற்கு மெச்சி தன் முன் தோன்றிய தாயிடம் ,தனது விண்ணப்பத்தை வைத்தார் . கலைவாணியும்  அதற்கு இசைந்து அவருடன் வர  சம்மதித்து ஒரு நிபந்தனையையும்  வைத்தாள் . அதாவது முன்னே செல்லும் சங்கரர் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்றும் , அப்படி பார்த்தால்  தான் அங்கேயே தங்கிவிடும்படி நேரிடும் என்றாள் . சங்கரரும் ஒப்புக் கொண்டார் . சங்கரர் முன்னே செல்ல தனது சிலம்பின் ஒலி ஒலிக்க தாயும் அவரை பின் தொடர்ந்தாள் . ஒரு கட்டத்தில் சிலம்பின்  ஒலி கேட்காமல் போக சங்கரர் திரும்பி பார்க்கிறார் ஜகத்குரு . அந்த இடத்திலேயே தாய் நின்று விட்டாள் . அவள் நின்ற இடம் தான் தற்போதைய கொல்லூர் . அங்கு கொலுவீற்றிருக்கும் அன்னை மூகாம்பிகை .

    தனது தவத்தின் பயன் இப்படி பாதிலேயே முடிந்து விட்டது சங்கரருக்கு வருத்தம் அளித்தது .அதனால் மீண்டும் அன்னையின் மனதை  மாற்றி தன்னுடன் அழைத்து செல்ல முயன்றார் . ஆனால் அன்னையோ சங்கரரின் வேண்டுதலை ஏற்று ஆலப்புழைக்கு  அருகில் உள்ள வேந்தநாட்டிற்கு எழுந்தருளுவதாக வாக்களித்தாள் . அதன்படி சோட்டானிக்கரையில் தினமும் காலை மூன்று மணி முதல் ஏழரை மணி வரை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் . சங்கரனுடன் ஜோதி ரூபத்தில் வந்த அன்னை ஆலயத்தினுள் ஜோதியாக கலந்ததால் ஜோதியானக்கரை பின்னாளில் சோட்டானிக்கரையானது என்றும் ஒரு வழக்கு உண்டு . இத்திருத்தலத்தில்  தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரி நாராயணா என்று பக்தர்கள் அம்மையோடு சேர்த்து அப்பனையும் போற்றி பாடுகிறார்கள்.

     பெண்களின் சபரிமலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு உண்டு.

    இத்தகைய அற்புதங்கள் நிறைந்த சோட்டானிக்கரை பகவதி அம்மனை நாமும் சென்று வழிப்பட்டு எல்லா நலன்களையும் அடைவோம் .

  • ராமானுஜர் சிலைக்கு புஷ்பாஞ்சலி சேவை

    பகவத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜயந்தியை முன்னிட்டு, திருமலை – திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் உள்ள ராமானுஜர் சிலைக்கு பலவித மலர்களால் புஷ்பாஞ்சலி வழிபாடு நடத்தப்பட்டது.
    வழிபாட்டுக்கு பின்னர், திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ், தேவஸ்தான செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்தனர்.
    முன்னதாக திருமலையில் ராமானுஜர் சாத்துமுறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    வைணவ மகா குரு ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தியையொட்டி, கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. ராமானுஜரின் திருநட்சத்திர அவதார உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அவருக்கு சாத்துமுறை நடைபெற்றது. இதையொட்டி ராமானுஜரின் சிலைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களை திருமலை ஜீயர் சுவாமிகள் நடத்தினார். விழாவையொட்டி, திருமலையில் ஞாயிற்றுக்கிழமை வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது.
    பகவத் ராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழாவையொட்டி கடந்த ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேசங்களுக்கு ராமானுஜர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் உற்சவ மூர்த்திகளை கொண்ட சஞ்சார ரத ஊர்வலத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்தது. இந்த சஞ்சார ரத ஊர்வலம் கடந்த 30-ஆம் தேதியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

  • மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்….

    மழை வேண்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
    இந்து சமய அறநிலையத் துறை சார்பில், குமரி மாவட்டத்தில் உள்ள 7 கோயில்களில் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகத்தை பத்மநாபன் போற்றி நடத்தினார்.
    இதில், குமரி மாவட்ட அதிமுக செயலர் அ. விஜயகுமார் எம்.பி., கோயில் மேல்சாந்தி சட்டநாதன்குருக்கள், பத்மநாபபுரம் தேவசம் தொகுதிக் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், குமரி மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் கனகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    இதேபோல, நாகர்கோவில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், வெள்ளிமலை, குமாரகோவில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.

  • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மே1 கும்பாபிஷேகம்….

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் மே 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரை மூலவராக கொண்ட ஒரே குடவறைக்கோவில் இதுவாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிவடைந்து வருகிற 1-ந் தேதி காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 101 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    1-ந்தேதி வரை தினசரி காலை, மாலை வேளைகளில் 8 கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது.

  • மேல்மருவத்தூரில் சித்ரா பௌர்ணமி திருவிழா….

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா மே 9, 10 ஆகிய இருநாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட வளாகம் வண்ண மின் விளக்குகள், பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
    முதல் நாளாள மே 9 அன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். கருவறை அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு சித்தர்பீடம் வரும் பங்காரு அடிகளாருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    மறுநாள் புதன்கிழமை மே 10 மாலை 4.15 மணிக்கு சிறப்பு கலச, விளக்கு, வேள்வி பூஜைகள் நடைபெறுகின்றன.
    இந்த வேள்வி பூஜைக்கு 1000-க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவங்களில் யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    விழாவுக்கான ஏற்பாடுகளை லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்ட சக்தி பீடங்கள் மற்றும் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.