Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா

    திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா இரவு விடிய விடிய நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஆண்டு தோறும் ரஜப்பிறை மாதத்தில் சந்தனக்கூடு விழா நடைபெறும். நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த மார்ச் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி சுமார் 25 அடி உயரத்தில் மின் விளக்குகளால் சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டது. அதில் சந்தனம் நிரப்பப்பட்ட செம்புடன் நகரின் முக்கிய வீதிகளில் சந்தனக்கூடு சுற்றி வந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் மலைமீதுள்ள தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தப்பட்டு, சந்தனம் பூசிக்கொள்ளப்பட்டது. இவ்விழாவில் கோவை, திருச்சி, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

  • சுவாமிமலை முருகன் கோவிலில் படி பூஜை

    சுவாமிமலை முருகன் கோவிலில் நேற்று கோவிலில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    முருகனின் ஆறுபடை வீடுகளுள் 4-வது படை வீடாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இந்த கோவில் குரு உபதேச தலம் எனச்சிறப்பு பெற்றது.

    இந்த கோவிலில் தமிழ் வருட தேவதைகள் தங்கள் பெயர்களுடன் 60 படிகளாக அமர்ந்து சுவாமிநாதருக்கு சேவை செய்து வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று படிபூஜை நடைபெற்றது.
    இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை தீர்த்தவாரி

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் நேற்று சித்திரை விசு தீர்த்தவாரி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விசு திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தன. இரவில் சுவாமி – அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றன. கடந்த 9-ந் தேதி தேரோட்டம் நடந்தது. கடந்த 12-ந் தேதி சித்திரை சபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடந்தது.
    திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை சித்திரை விசு தீர்த்தவாரி நடந்தது. காலை 10.30 மணிக்கு மெயின் அருவியில் சுவாமி- அம்பாள் தீர்த்தவாரியும், அதன்பிறகு சுவாமி வீதி உலாவும் நடந்தது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • பழனி முருகன் கோவிலில் ஊடல் நிகழ்ச்சி

    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் நிறைவு நாளான ஏப்ரல் 12 ஆம் தேதி திருஆவினன்குடி கோவிலில் முத்துக்குமார சுவாமியுடன் தெய்வானை அம்மனின் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    பழனி முருகன் சிலை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் என்னும் சித்தரால் நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் கோடை காலமாகும். இம்மாதங்களில் நவபாஷான உருவமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் தண்டாயுதபாணி சுவாமி ஆகிய பழனி முருகனை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற பங்குனி உத்திர திருவிழா கடந்த ஏப்ரல் 3-ம் தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 10-ம் திருநாளான நேற்று காலை 7.20 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானையுடன் சன்னதி வீதி, கிரிவீதிகளில் உலா நிகழ்ச்சிக்காக புறப்பாடு நடைபெற்ற போது, முத்துக்குமார சுவாமியிடம், தெய்வானை அம்மன், வள்ளியை திருமணம் செய்ததால் கோபித்துக்கொண்டு தனியாக பல்லக்கில் எழுந்தருளி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    அதன் பின்னர் கிரிவலம் வந்து பல்லக்கில் இருந்த தெய்வானை அம்மன் கோபித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்து, கதவுகளை அடைத்து, முத்துக்குமார சுவாமியை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்பின்னர் முருகனின் பொருட்டு தெய்வானை அம்மனுக்கு தூது விடும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து அம்மனுக்கு ஊடல் தீர பாடல் பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருஊடல் பாடல்களை சிவ நாகராஜன் பாடினார். பாடலில் வள்ளியும் தெய்வானையும் ஒன்றே என்னும் பொருள் தரும் வகையில் பாடல் அமைந்திருந்தது.

  • சபரிமலை கோவிலில் சிறப்பு பூஜை

    விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை சிறப்பு பூஜை நடக்கிறது. கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு அடுத்தபடியாக விஷூ பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்ப ஐஸ்வர்யத்தின் அறுவடை விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி வீடுகளிலும், கோவில்களிலும் விளைந்த காய்கறிகள், பழங்கள் மங்களகரமான ஐஸ்வர்யம் தரும் கனிக்கொன்றை பூக்கள் படைத்து வழிபடுவார்கள் கேரள மக்கள்.

    அவ்வாறு வழிபடும்போது சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். விஷூ பண்டிகை அன்று கோவிலில் பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை பூசாரிகள் வழங்குவார்கள்.

    பங்குனி உத்திரம் மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டு தொடர் பூஜைகள் நடைபெற்று வருகிறது. வழக்கமான பூஜை, வழிபாடுகளுடன் படிபூஜை, உதயஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் தினசரி நடக்கிறது. விஷூ பண்டிகையையொட்டி முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
    தொடர்ந்து வழக்கமான பூஜைகளும், சிறப்பு விஷூ பூஜைகளும் நடைபெறும். பின்னர் ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் வாழ்நாள் முழுவதும் செல்வச்செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஐதீகத்தின் படி, பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயங்கள் வழங்குகிறார்கள். விஷூ தினத்தில் கைநீட்டம் பெறுவதை ஐஸ்வர்யமாக பக்தர்கள் கருதுகின்றனர்.

    இதனால் அன்றைய தினம் சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்காக பல்வேறு ஊர்களில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலையை போன்று கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் விஷூ பண்டிகை சிறப்பு பூஜை-கைநீட்டம் வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது.

  • ஆதிகேசவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றம்

    ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம், புதன்கிழமை காலை வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
    இதைத் தொடர்ந்து காலை, மாலை உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அதைத் தொடர்ந்து மாட வீதியில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் திருவீதியுலாவும் நடக்கிறது. ஆதிகேசவப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் வரும் 21ஆம் தேதி வரை 10 நாள் நடைபெறுகிறது.
    பிரம்மோற்சவம் தொடங்கியதை தொடர்ந்து புதன்கிழமை காலை உற்சவர் பவனி வந்தார். மாலை சிம்ம வாகனத்திலும் ஆதிகேசவப் பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    இதனைத்தொடர்ந்து இக்கோயிலில் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை வைணவ குரு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு திருஅவதார உற்சவம் 10 நாள்கள் நடைபெறுகிறது.

  • பண்ணாரி அம்மன் கோவிலில் தீ மிதித்த 2 லட்சம் பக்தர்கள்

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது புகழ் மிக்க பண்ணாரி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.
    அதே போல் இந்தாண்டும் குண்டம் விழா கடந்த 27-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் பண்ணா மற்றும் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஒரு வாரத்துக்கு பிறகு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. பிறகு கோவிலில் கம்பம் சாட்டப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் விஷேச பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த குண்டம் விழா அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கியது. முன்னதாக நேற்று குண்டத்தில் எரி கரும்புகள் அடுக்கி வைக்கட்டு இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி வார்க் கப்பட்டது.
    தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3 மணிக்கு குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தது. பிறகு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட கற்பூரம் ஜெகஜோதியாக பிரகாசமாக எரிந்தது. சரியாக 3.45 மணிக்கு பூசாரி ராஜசேகர் முதலில் குண்டம் இறங்கினார். அதை தொடர்ந்து அம்மன் சப்பரத்துடன் பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

    அதன் பிறகு பல கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.

    ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். சிறுவர்- சிறுமிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தீ மிதித்தனர். பல பெண்கள் தங்கள் கை குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர்.
    பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்ததும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் கால் நடைகளான ஆடு- மாடுகள் மதியம் 1 மணி வரை குண்டம் இறங்கியது. கால் நடைகளுடன் விவசாயிகள் தீ மிதித்த காட்சியும் பரவசத்தை ஏற்படுத்தியது.

  • கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகாசுதர்சன ஹோமம்….

    திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகாசுதர்சன ஹோமம் நடைபெற்றது. வேதவிற்பன்னர்களைக் கொண்டு உலக நன்மைக்காகவும் மக்கள் மகிழ்ச்சியுற வேண்டி காலை முதல் வேள்வி தொடங்கப்பட்டு நடைபெற்றது.
    இந்த ஹோமத்தில் கலந்துக்கொள்வதால் ஏவல், பகைமை, வாழ்வில் செழிமை, நன்மக்கள் பேறு, நோயின்மை ஆகியவை பெற்று வளமுடன் வாழலாம் என்பதால் திரளான பொதுமக்கள் ஹோமத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து உலகநன்மைக்காக 1008பாராயணம் நடைபெற்றது. பின்னர் சுதர்சன பெருமாளுக்கு பூஜிக்கப்பட்ட கலங்களை விற்பன்னர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளானோர் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.

  • திருவண்ணாமலையில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர மூலவர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
    சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    முன்னதாக, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை 10 மணி முதல் 12 மணிக்குள் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் மூலவர் சந்நிதியில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
    திருக்கல்யாணத்துக்கு புறப்பட்ட அம்மன்: இரவு 7 மணிக்கு தனது தாய் வீடான குமரக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் எழுந்தருளினார்.
    பின்னர், திருக்கல்யாண உற்சவத்துக்காக ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலை நோக்கி மேளதாளங்களுடன் அம்மன் சென்றடைந்தார்.
    மாலை மாற்றும் நிகழ்வு: இரவு 10.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் எழுந்தருளினார். இரவு 11 மணிக்கு கோயில் கொடிமரம் அருகே ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
    நள்ளிரவு 12.30 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

  • நாயன்மார்களுடன் வீதி உலா வந்த கபாலீஸ்வரர்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் வீதிஉலா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 63 நாயன்மார்களுடன் வீதிஉலா வந்த கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
    சைவத் தலங்களில் முக்கிய தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 7ஆவது நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
    இதில் மற்றொரு முக்கிய விழாவான அறுபத்து மூவர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிற்பகல் 3.45 மணிக்கு தொடங்கி கோலவிழி அம்மன், விநாயகர் உற்சவர்களைத் தொடர்ந்து, அறுபத்து மூவர் வீதியில் வலம் வந்தனர்.
    அவர்களைத் தொடர்ந்து வெள்ளித் தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் காட்சியளித்தார். தொடர்ந்து 63 நாயன்மார்களுடன் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் நான்கு மாடவீதிகளையும் வலம் வந்தனர்.
    பதினாறுகால் மண்டபத்தை இரவு 9.40 மணிக்கு அடைந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
    பக்தர்களுக்கு அன்னதானம்: அறுபத்து மூவர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் தனியார் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்டது.