பொன்னேரி அருகே உள்ள திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் தினமும் வலம் வந்தனர்.
விழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், உற்சவ மூர்த்தியான திருப்பாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து, பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில், நிலையை அடைந்தது. இதில், திருப்பாலைவனம், அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Category: ஆன்மீக செய்திகள்
ஆன்மீக செய்திகள்
-
திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேர்….
-
ராஜகோபால சுவாமி கோவிலில் கருடசேவை
பங்குனி திருவிழாவையொட்டி பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கருட சேவை நடந்தது. பாளையங்கோட்டையில் அழகிய வேதநாராயணர், அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. இரவில் சிம்மம், ஆதிகேசவன், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது.
5-ம் திருவிழா நாளன்று சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவில் சுவாமி ராஜகோபாலன், அழகிய மன்னார் சுவாமிகள் இரட்டை கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது.
சுவாமிகள் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 10-ந் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு தவழ்ந்த கோலத்தில் கிருஷ்ணர் வீதி உலா நடக்கிறது. 11-ந் தேதி காலை தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது. -
திருமலையில் ராமர் பட்டாபிஷேகம்
திருமலையில் ராமநவமியை தொடர்ந்து ராமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமிக்கு மறுநாள் தேவஸ்தானம் ராமர் பட்டாபிஷேக வைபவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை இரவு ஏழுமலையான் கோயிலுக்குள் ராமருக்கு ஆஸ்தானம் நடைபெற்றது. இதேபோல் வியாழக்கிழமை இரவு ஏழுமலையான் கோயில் தங்க வாசல் அருகில் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமரை எழுந்தருளச் செய்து, அர்ச்சகர்கள் ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடத்தினர். -
கோதண்டராமர் கோயிலில் சீதா திருக்கல்யாணம்
திருப்பதி கோதண்டராமர் கோயிலில் சீதா திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீராமநவமியை ஒட்டி வியாழக்கிழமை மாலை ராமருக்கும், சீதைக்கும் திருமலை ஜீயர்கள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
சீதா திருக்கல்யாணத்தின் போது அரிசிக்கு பதிலாக முத்துகளால் ஆன சேஷம் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இதற்காக தேவஸ்தான அலுவலகத்திலிருந்து வெண்மையான முத்துகளை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ், தன் தலையில் சுமந்தபடி கொண்டு வந்து, அர்ச்சகரிடம் அளித்தார். அந்த முத்துகளை யானை மேல் வைத்து கோதண்டராமர் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அப்போது, வழிநெடுகளிலும் பக்தர்கள் அதற்கு கற்பூர ஆரத்தி காண்பித்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். -
குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விசு திருவிழா….
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து கொடி மரத்துக்கும், சுவாமிக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 8-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 9-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் 4 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. 11-ந் தேதி காலை 9.30 மணிக்கும், மாலை 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
12-ந் தேதி (புதன்கிழமை) சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது. -
அர்சுனன் தபசு மரம் ஏறுதல் விழா
ராணிப்பேட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி, அர்சுனன் தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது .
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், மருதம்பாக்கம் மதுரா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் நிகழாண்டு அக்னி வசந்த விழா மார்ச் 13-ஆம் தேதி சிகாரக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 18 நாள்கள் மகாபாரதச் சொற்பொழிவும்,
11 நாள்கள் கட்டைக் கூத்து நாடகமும் நடைபெற்று வருகின்றன.
விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை திருவலம் சர்வமங்களா பீடம் சாந்தா சுவாமிகள் பங்கேற்று அக்னி வசந்த விழா நடத்துவதன் நோக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து, அர்சுனன் தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். -
ராமானுஜருக்கு திருமஞ்சன விழா….
பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ராமானுஜருக்கு திங்கள்கிழமை விசேஷ திருமஞ்சனம் விழா நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் மாதம்தோறும் திருவாதிரை திருநட்சத்திர தினத்தன்று ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை உற்சவர் ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர். -
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
பிரம்மோற்சவ விழா 9-வது நாளான நேற்று திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடந்து வந்தது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை 8 மணியளவில் பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான சீதா, ராம, லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோர் எழுந்தருளி கோவிலில் இருந்து ஊர்வலமாக கபிலத்தீர்த்தம் புஷ்கரணிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு, உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை கபிலத்தீர்த்தம் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. அதில் பங்கேற்ற கோவில் அர்ச்சகர்கள், சக்கரத்தாழ்வாரை தண்ணீரில் மூன்று முறை மூழ்கி எடுத்தனர். அப்போது கபிலத்தீர்த்தத்தில் கூடியிருந்த திரளான பக்தர்களும் தண்ணீரில் மூழ்கி புனித நீராடினர்.
இதையடுத்து கபிலத்தீர்த்தத்தில் இருந்து உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக கோதண்டராமசாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர். கோவிலில் உள்ள கொடிமரத்தின் அருகில் உற்சவ மூர்த்திகளை வைத்தனர். உற்சவ மூர்த்திகள் முன்னிலையில் இரவு 7 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. -
கபாலீஸ்வரர் கோயில் துவங்கிய பங்குனி திருவிழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அதிகாரநந்தி சேவை வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி, வெள்ளி ரிஷப வாகன காட்சி ஏப்ரல் 6, 63 நாயன்மார்களுக்கு காட்சி தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 8, 63 நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா ஏப்ரல் 9ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது.
இதைத் தொடர்ந்து அன்றைய இரவு சந்திரசேகரர் பார்வேட்டை விழாவும், ஐந்திருமேனிகள் விழாவும் நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி அடுத்தடுத்த நாட்களில் திருக்கல்யாணம் அம்சமாக பிச்சாண்டார் மற்றும் ஐந்திருமேனிகள் விழாவும், புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன் மாதேவரை வழிபடல், திருக்கல்யாண உற்சவம் மற்றும் உமா மகேஷ்வர் தரிசனம், பந்தம் பறி விழாவுடன் ஏப்ரல் 13ஆம் தேதியுடன் விழா நிறைவடைகிறது.
-
பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவை அருகே பேரூரில் அமைந்துள்ளது பட்டீசுவரர் கோவில். கோவையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் இந்த கோவிலும் ஒன்று. கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோபூஜை பின் காலை 6 மணிக்கு புற்றுமண் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பட்டி விநாயகர் கோவிலில் முளைப்பாலிகை பூஜை செய்யப்பட்டு பட்டீசுவரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
கொடிமரத்தின் முன்பு 5 கலசங்கள் வைத்து யாக பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் விநாயகர், பட்டீசுவரர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், நந்திகேசுவரர், நடராஜர், சிவகாமி அம்பாள், பச்சைநாயகி அம்மன், சோமாஸ்கந்தர், பஞ்சமூர்த்திகள் மற்றும் அதிமூர்க்கம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டன. இதையடுத்து கொடிமரத்தில் கோனியாண்டி, லவண்டையார், தேனாரி ஆகியோருக்கு காப்பு கட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொடிக்கு சிறப்பு பூஜை செய்து, கோவில் உள்பிரகாரம் வழியாக எடுத்து வரப்பட்டது. காலை 9.45 மணிக்கு கோவில் கொடிமரத்தில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றப்பட்டது. இதன் பின்னர் கொடிமரத்துக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூஜைகளை செந்தில் ராஜா, சிவசண்முகசுந்தர குருக்கள் ஆகியோர் செய்தனர். கொடியேற்று விழாவில் கோவில் உதவி ஆணையர் சரவணன், சிவபக்தர் நலச்சங்க தலைவர் பேரூர் ராஜேந்திரன், செயலாளர் முத்துக்குமாரசாமி, பி.கே.என். பிரபுகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் 2-ம் நாள் அன்று காலை 9 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, இரவு 8 மணிக்கு சூர்யபிரபை சந்திரபிரபையில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து விழா நாட்களில் சிம்ம வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் போன்றவற்றில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
5-ந் தேதி மாலையில் திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை சேவை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் 6-ந் தேதியும், 8-ந் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.