Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேரோட்டம்

    அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனித் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் பங்குனி பெருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

    இதையொட்டி கோவில் வாசலில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த பெரிய தேர் 5 அடுக்குகளாக அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளித்தது. தேரை இழுத்து செல்லுவது போன்று, மரத்திலான 4 குதிரைகள் தேரின் முன் பகுதியில் இணைக்கப்பட்டிருந்தன.

    வண்ண மலர் தோரணங்களால் தேர் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 5.30 மணிக்கு உற்சவர் சன்னதியிலிருந்து முருகன் தெய்வானையுடன் புறப்பட்டு, காவல் தெய்வமான கருப்பணசாமி சன்னதிக்கு வந்தார். அங்கு பூஜைகள் நடைபெற்ற பின்பு, பெரிய தேருக்கு சென்று எழுந்தருளினார். சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளினார்.

     

    தொடர்ந்து பெரிய தேரின் முன்பு பூஜைகள் நடந்து, முன்னாள் பேரூராட்சி தலைவர் சாமிநாதன் தேரில் நின்று வெள்ளை (துண்டு) வீசியவுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்க, சரியாக 6.39 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. தேரின் முன்பாக கோவில் யானை தெய்வானையும், விநாயகரின் சிறிய தேரும் புறப்பட்டு சென்றன.

    சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் பெரிய தேர் ஆடி அசைந்து சென்றது, பக்தி பரவசத்துடன் கூடிய கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர் காலை 11.45 மணிக்கு நிலைக்கு வந்தது. திருவிழாவின் நிறைவு நாளான மார்ச் 18 ஆம் தேதி தீர்த்த உற்சவம் நடைபெற்றது.

  • திருநின்றவூர் பக்தவஸ்தல பெருமாள் கோயில் கருடசேவை…

    108 திவ்ய தேசங்களில் 58 வது திவ்யதேசமான திருநின்றவூர் அருள்மிகு பக்தவஸ்தல பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கருடசேவை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தவஸ்தல பெருமாள் கோயிலிலி கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி நம்மாழ்வார் பரங்கி நாற்காலி, ஆளும் பல்லக்கு, புன்னை மரவாகனம் மற்றும் திருப்புளி வாகனத்தில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் வலம் வந்தார். 5ம்திருநாளான மார்ச் 18 ஆம் தேதி காலை கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கருடசேவைநிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 21ம்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.

  • 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழா… ராமானுஜர் கோயில் தேர் சீரமைக்கும் பணி தொடக்கம்

    ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழா ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, ராமானுஜர் கோயிலில் உள்ள தேரை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள ஆதிகேஷவபெருமாள், பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள் பாலித்து வருகின்றார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவாதிரைக்கு 9 நாள்களுக்கு முன்பு, சித்திரைப் பெருவிழா அவதார உற்சவமாக நடைபெறும்.
    இந்த நிலையில், ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி உற்சவம், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மே 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 4 நாள்கள் தெப்பத் திருவிழா நடைபெறும். இதில், தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், சித்திரை திருவிழாவில் பெரிய தேரை பயன்படுத்தப்படாமல் சிறிய தேரை கோயில் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்தனர்.
    இந்த நிலையில், ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு, தேர் உலா வரும் காந்தி சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு ஆகிய சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
    மேலும், பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த பெரிய தேரை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
    இதில், தேரின் சக்கரங்கள் மற்றும் வர்ணம் பூசும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் விரைவில் நிறைவு பெறும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கல்யாணம்

    சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் கோயிலில் மார்ச் 4ல் துவங்கிய பங்குனித் திருவிழாவில், மார்ச் 15 ஆம் தேதி சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கிரிவீதியில் பச்சை குதிரை ஓட்டம் நடந்தது. பச்சை குதிரைக்கு களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் நடந்தது. பட்டாபிஷேக அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை முடிந்து, சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டது. சுவாமியின் கரத்தில் நவரத்தின செங்கோல், வெள்ளி சேவல் மற்றும் மயில் கொடிகள் சாத்துப்படியானது. தீபாராதனை முடிந்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி மதியம் 12 முதல் 12:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பு

    காட்டை கோயிலாக்கிய சாவித்ரி

    இல்லறம் நல்லறமாக அமைய , கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராக வாழ்வது அவசியம் . குடும்பத்திற்கு ஆணிவேரான கணவன் நீண்ட ஆயுளுடனும் ,தேக ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டியும் , தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டும் சுமங்கலிப் பெண்கள் இருக்கும் விரதமே காரடையான் நோன்பு. மாசியும், பங்குனியும் சேரும் சுப வேளையில் ‘காரடையான் நோன்பு’கடைபிடிக்கப்படுகிறது. இது கவுரி விரதம், காமாட்சி விரதம், சாவித்ரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் கூடுவதற்காக மேற்கொள்ளும் நோன்பு இது .

    நோன்பு பிறந்த கதை

    அஷ்வபதி மன்னனின் மகள் சாவித்ரி, விதிவசத்தால் தனது நாட்டை எதிரிகளிடம் பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னனின் மகன் சத்யவானை ,விரும்பி திருமணம் செய்து கொள்கிறாள் . காட்டையே தங்களது வசந்த மாளிகையாக மாற்றி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் . ஒரு நாள் ஞாலத்தை சுற்றி வரும் திரிகால ஞானியான நாரதர் மூலம் சத்யவானுக்கு ஆயுள் குறைவு என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறாள் சாவித்ரி . கணவனின் நீண்ட ஆயுளுக்காக தான் வசிக்கும் காட்டையே கோவிலாக்கி விரதம் இருக்க ஆரம்பித்தாள். தனது கணவன் சத்யவானின் நீண்ட ஆயுளுக்காக சாவித்திரி நோன்பிருந்தது பங்குனி மாதம் பிறக்கிற நேரம். ஆனால் சோதனையாக அன்று மாலையே சத்தியவானுக்கு கடும் தலைவலி ஏற்பட்டு மனைவியின் மடியில் சாய்ந்தான். அதே நேரத்தில், பதிவிரதையான சாவித்ரியின் கண்களுக்கு எருமை வாகனத்தில் கையில் பாசக்கயிற்றுடன் ஒரு உருவம் தென்பட்டது. சற்றும் மனம் பதறாத சாவித்திரி நீங்கள் யார்? என்றாள் . சாவித்ரியின் கண்களுக்கு தனது உருவம் தென்பட்டது குறித்து சற்று அதிர்ந்த எமதர்மராஜன் , நீ பதிவிரதை என்பதால் உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் தான் எமதர்மராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன்,என்றார் . மேலும் தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு சத்யவானின் உயிருடன் கிளம்பினார். தன்னை பின் தொடர்ந்த சாவித்திரியிடம் உனக்கு வேண்டும் வரங்களைத் தருகிறேன் கேள். ஆனால் எடுத்த உயிரை கொடுக்க வாய்ப்பில்லை என்றார் .

    குலம் தழைக்க வரம் வேண்டும்

    சாவித்ரியும் விடாப்பிடியாக என் குல வம்சம் தழைக்க வேண்டும் என்ற வரம் கேட்டாள் . தன் கடமையை நிறைவேற்றும் அவசரத்தில் இருந்த எமன் அப்படியே ஆகட்டும் உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்’ என்று வரம் தந்தார் . ‘‘தர்மராஜனாகிய உங்கள் வாக்கு பலிக்க வேண்டும் என்றால் , என் கணவனை உயிருடன் என்னுடன் அனுப்ப வேண்டும்’’ என்றாள் சாவித்ரி. அவளது புத்தி சாதுர்யத்தால் கவரப்பட்ட எமதர்மன் , சத்யவானுக்கு மீண்டும் உயிர் தந்தார் . நீண்ட ஆயுளுடன் வாழுமாறு அவர்களை வாழ்த்தினார். காட்டில் கிடைத்த மண்ணை பிசைந்து , தனது பதிவிரதா தன்மையினால் , சாவித்ரி அடைகளாக தட்டி , காமாட்சி அம்மனை நினைத்து படைத்து தனது விரதத்தை முடித்தாள்.

    ‘உருகாத வெண்ணையும், ஓரடையும் நூற்றேன்.

    மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா’

    என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.

    – ப . கோமதி சுரேஷ்

  • ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா நிறைவு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 28-ந் தேதி தொடங்கிய தெப்ப திருவிழா நிறைவடைந்தது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா நடைபெற்று வந்தது. இதையொட்டி நம்பெருமாள் தினமும் ஒரு வாகனத்தில் உள் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மதியம் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார்.
    அங்கு மாலை வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து மாலையில் நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பந்தக்காட்சியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    பின்னர் படிப்பு கண்டருளி இரவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 28-ந் தேதி தொடங்கிய தெப்ப திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.

  • திருப்பதி கோவில் தெப்போற்சவ விழா….

    திருப்பதியில் வருடாந்திர தெப்போற்சவ விழா தொடங்கியது. தெப்போற்சத்தின் முதல் நாளான நேற்று சீதா, லட்சுமணர் சமேத ஸ்ரீராமர் வலம் வந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாசி மாத ஏகாதசியன்று தொடங்கி பவுர்ணமியன்று முடிவு பெறும் விதமாக தெப்போற்சவ விழா நடை பெறுவது வழக்கம். அதன்படி, ஏகாதசியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. இந்த தெப்போற்சவ விழா வரும் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக, திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்குளத்தின் நடுவே இரண்டடுக்கு தெப்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. தெப்போற்சத்தின் முதல் நாளான நேற்று மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழுமலையான் கருவறையில் உள்ள சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமர் உற்சவ மூர்த்திகள் 5 முறை தெப்பத்தில் வலம் வந்தனர். இதனை கான திரளான பக்தர்கள் திரண்டனர். விழாவையொட்டி, நேற்று முதல் வரும் 12-ந் தேதி வரை ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • திருச்செந்தூரில் மாசித் திருவிழா….

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா ஏழாம் நாளில் மாலையில் சுவாமி சிவப்பு சாத்தி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருக்கோயிலில், மாசித் திருவிழா மார்ச் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்று வருகிறது. ஆறாம் திருநாளான மார்ச் 6 ஆம் தேதி காலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி ,வீதியுலா நடைபெற்றது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன செந்தில் அருள்பணி கட்டளை மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் மற்றும் ஜெயந்திநாதர் எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. ஏழாம் திருநாளான மார்ச் 7 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு திருக்கோயிலில் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் சண்முகவிலாச மண்டபத்திலிருந்து சுவாமி ஆறுமுக நயினார் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பின், மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மார்ச் 8ஆம் தேதி எட்டாம் திருநாளை முன்னிட்டு அதிகாலை பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி, திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்று, முற்பகல் 11.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.

  • ஏழுமலையானுக்கு தங்க சடாரி

    திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்க சடாரி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
    தெலங்கானா மாநிலம், ஹைதராபாதை அடுத்த கைரதாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமானவர் ராமசந்திரா ரெட்டி என்பவர், தனது மகன் கங்கேந்திர ராமானுஜ ரெட்டியின் 15-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தங்க சடாரி ஒன்றை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்க உள்ளார்.
    ரூ. 17 லட்சம் மதிப்புள்ள இந்த தங்க சடாரியை வரும் நேற்று ஏழுமலையானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷகம்….

    திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபி ஷேகம் மார்ச் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 4-ம் தேதி சனிக்கிழமை நவக்ரஹ ஹோமம், பூர்ணாஹூதி, யாகசாலை நிர்மாணம், அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெற்றது. 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சாந்தி ஹோமம், யாத்ரா ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று 2-வது கால ஹோமம், 2-வது கால யாக பூர்ணாஹூதி, 3-வது கால யாகசாலை பூஜை மற்றும் 3-வது கால யாக பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றன. மார்ச் 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜை, 11-மணிக்கு 4-வது கால யாக மஹாபூர்ணாஹூதி, பகல் 12 மணிக்கு அம்மன் அஷ்டபந்தனம் சாத்துதலும், மாலை 5 மணிக்கு 5-வது கால யாகசாலை பூஜை, 5-வது கால மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. கும்பாபிஷேக தினமான மார்ச் 8-ம் தேதி காலை 6 மணிக்கு 6-வது கால யாகசாலை பூஜையும், 7 மணிக்கு பரிவார யாக சாலைகள் மஹா பூர்ணாஹூதியும், 9 மணிக்கு யாத்ரா தானம் கடப்புறப்பாடும், காலை 9 மணியில் இருந்து 10.15 மணிக்குள் ராஜகோபுரம் அனைத்து விமானங்கள், பரிவாரங்கள், விநாயகர், சண்முகர், அம்பாள், துர்க்கை, சண்டிகேஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10.15 மணிக்கு தீபாராதனையும், பிற்பகல் 3 மணிக்கு மஹாபிஷேகமும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் திருவீதியுலா மற்றும் தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.