Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • பத்மாவதி தாயாருக்கு வெண்பட்டு குடைகள்

    கார்த்திகை பிரமோற்சவத்தின் முக்கியமான விழாவான கஜவாகன சேவைக்கு இந்து தர்மார்த்த சமிதி சார்பில் வெண்பட்டு குடைகள் பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
    இந்த ஆண்டு கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன் னிட்டு சென்னையில் இருந்து திருச்சானூருக்கு திருக்குடைகள் கொண்டு செல்லப்பட்டன. பத்மாவதி தாயார் கோயில் எதிரில் உள்ள வாகன மண்டபத்தில், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியிடம் இருந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு துணை செயல் அதிகாரி முனிரத்தினம் ரெட்டி வெண்பட்டு குடைகளை பெற்றுக்கொண்டார்.
    திருமலை பிரமோற்சவத்துக்கும், தாயார் பிரமோற்சவத்துக்கும் தமிழக மக்கள் சார்பாக திருக்குடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    இந்த குடைகள் சுவாமி ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின்போது இந்து தர்மார்த்த சமிதி வெண்பட்டு குடைகளை சமர்ப் பணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு அம்மன் உற்சவம்….

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அம்மன் உற்சவம் நடத்தப்பட உள்ளது
    நவம்பர் 12 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா அம்மன் உற்சவம் தொடங்குகிறது. முதல்நாளில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதிஉலா நடக்கிறது.
    தொடர்ந்து டிசம்பர் 1-ந் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், 2-ந் தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. 3-ந் தேதி காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றபடுகிறது.
    இதனையடுத்து தினமும் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 9-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 12-ந் தேதி அதிகாலை பரணி தீபம், மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் மின் அங்காரத்தில் ஜொலிக்கிறது.

  • முத்து பல்லக்கில் பத்மாவதி தாயார் பவனி….

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாள் காலை முத்து பல்லக்கு வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 3-ம் நாளான நேற்று முத்து பல்லக்கு வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பத்மாவதி தாயாரைத் தரிசித்தனர்.
    தொடர்ந்து நவம்பர் 28 ஆம் தேதி மாலை கோயில் வளாகத்தில் சிறப்பு திருமஞ்சன சேவையும், இரவு கஜ வாகன சேவையும் நடைபெற்றது.

  • திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழா…

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கார்த்திகை திருவிழா தொடக்கமாக டிசம்பர் 3 ஆம் தேதி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன் யாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து நான்காம் தேதி காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கொடிக்கம்பம் முன் எழுந்தருள்வார். பூஜைகள் முடிந்து காலை 11:30 மணிக்கு கார்த்திகை திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படுகிறது.
    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம், 11 ஆம் தேதியும், 12 ஆம் தேதி காலையில் சிறிய வைரத் தேரோட்டம், மாலையில், மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.தொடர்ந்து 16கால் மண்டபம் முன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. டிச. 12ல் சரவணப் பொய்கையில் சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

  • சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் ஆண்டுப் பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் நான்காம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து கோவில் மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி, தங்க நகைகள் அணிவித்து ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவையின் முன்னும் பின்னும் நடன குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் விழாக்களின் போது காலை, மாலை 2 வேளைகளிலும் பத்மாவதி தாயாருக்கு வாகன சேவை உற்சவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் வருகிற ஒன்றாம் தேதி மாலையும், இரவு கருட சேவையும் நடக்கிறது.

  • திருச்சானூரில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலின் வருடாந்திர பிரமோத்சவம் ….

    திருச்சானூரில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலின் வருடாந்திர பிரமோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சானுர் ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிரம்மோத்சவம் நடத்துவது வழக்கம்.
    கார்த்திகை மாதம் பஞ்சமி திதி உத்திராட நட்சத்திரத்தில் பத்ம சரோவர் திருக்குளத்தில் தாயார் அவதரித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
    இதன்படி, உத்திராட நட்சத்திர நாளில் பிரம்மோத்சவம் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    இந்த 10 நாட்களும் தினமும் காலை மாலை நேரங்களில் தயார், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
    திருவிழாவையொட்டி, திருப்பதி முதல் திருச்சானுர் வரை வழியெங்கும் அலங்கார மின்விளக்கு தோரணங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தாயார் ஆலயம் அருகில் உள்ள தோட்டத்தில் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

  • காஷ்மீரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தெற்காசிய சமாதான மன்றம் ….

    மனித நேய மற்றும் ஆன்மீகத் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் ஜம்மு காஷ்மீரிலிருந்து பலதரப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையின் கூடிய தெற்காசிய சமாதான மன்றம் நடத்தப்பட்டது.

    ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, முன்னாள் போராளிகள், போர்குணங்களால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்கள், இளம்தலைவர்கள், மகளிர், தொழிலதிபர்கள், பெற்றோர், காஷ்மீர அரசு சார்பற்ற நிறுவனங்கள், சுஃபி தலைவர்கள், கல்வியாளர்கள், ஊடகங்கள் கலை கலாச்சார தொடர்புள்ளவர்கள், சீக்கிய சமூக பிரதிநிதிகள் மற்றும் கல்லெறிதல் போன்றவற்றில் ஈடுபடும் அதிருப்தியாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து காஷ்மீர் நிலவரம் குறித்து பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

    அண்மைய மாதங்களில் இதுவே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரிலிருந்து பலதரப்பட்ட பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்து அமைதியான வளமான காஷ்மீரை மீட்டெடுக்கும் பேச்சு வார்த்தைக்கு கூடிய நிகழ்வு.

    இந்த, நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், அண்மைய மாதங்களின் காஷ்மீரில் நிகழ்வுகள் உங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கி யிருப்பதாக தெரிவித்தார்.
    மேலும், “இதற்கு உடனடித் தீர்வுடன் தான் வரவில்லை என்றும, அனைவரும் ஒன்று கூடி கலந்து பேசித் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    தெருக்களில் கல்லெறிதல், துப்பாக்கிச் சூடு இவற்றின் மூலம் தீர்வுகள் கிடைக்காது என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.
    இதையொட்டி அடுத்த அடியாக தெற்காசிய அமைதி மன்றம் அமைக்கப் பட்டது. இந்த மன்றம் எட்டு தெற்காசிய நாடுகளை ஒருங்கிணைத்து தொழில், திறன் வளர்ச்சி, கலாச்சார பரிமாற்றம், கல்வி கூட்டுப் பங்காண்மை, மகளிர் மேம்பாடு முயற்சிகள் போன்றவற்றில் ஒத்துழைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  • மஞ்சமாதா கோயிலில் நடன பகவதி சேவை

    சபரிமலை மாளிகைப்புரம் மஞ்சமாதா கோயிலில் நடன பகவதி சேவை வழிபாடு நடைபெற்றது.நடன பகவதி சேவை வழிபாட்டை மேல்சாந்தி மனுகுமார்நம்பூதிரி நடத்தினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. தரிசனம், நெய் அபிஷேகத்துக்கு 5 மணிநேரம் ஆனது. பெரும்பாலும் பக்தர்கள் நள்ளிரவு பம்பை வந்தடைகின்றனர். இவர்கள் பம்பை நதியில் புனிதநீராடி பம்பா கணபதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி நீலிமலையேற்றம், அப்பாச்சிமேடு, சபரிபீடம் சென்று வரிசையில் சரங்குத்தி வழியாக சபரிமலையை அடைகின்றனர். வழிநெடுகிலும் பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணிநேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • திருப்பதியில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி…

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருமலையில், 16-ஆம் நூற்றாண்டில் அன்னமாச்சாரியாவின் பெரிய மகனான திருமலைசாரியார் கார்த்திகை மாத வனபோஜனத்தை நடத்தியதாக வரலாறு உண்டு.
    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட அந்த உற்சவத்தை, தேவஸ்தானம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறது.
    இந்த ஆண்டு நடத்தப்பட்ட வனபோஜன நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வனபோஜன நிகழ்ச்சியை ஒட்டி, வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை போன்றவை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • சோலைமலை முருகனுக்கு சங்காபிஷேகம்….

    முருகனின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் முதல் சோமவார நிகழ்ச்சியில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
    மதுரை மாவட்டம் அழகர்மலையில் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோயில் தமிழ் வருட பிறப்பு, கந்தசஷ்டி, தைப்பூசம், உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
    அதன்படி கார்த்திகை மாதத்தில் சோமவார நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சஷ்டி மண்டபத்தில் ஷண்முகர் சன்னதியின் முன்பாக பிரத்யேகமாக ராமேஸ்வரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 1008 சங்குகள் ஒம்வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டு தானியங்கள் பரப்பப்பட்டு அதன் மீது அடுக்கப்பட்டிருந்தது.
    சுற்றிலும் கலசங்கள் வைக்கப்பட்டு அதில் மாவிலைகளும், வண்ண மலர்களும் இணைக்கப்பட்டிருந்தது.
    அதை தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

    அவர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது.
    இதைபோலவே வருகிற 28ம் தேதியும் அடுத்த மாதம் 5ம் தேதியும் சோமவார நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் 4வது சோமவார நிகழ்ச்சி 12.12.2016 திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகையின் போது கோயில் வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும். மேலும் ராஜகோபுரம் முன்பாக சொக்கப்பனையும் கொளுத்தப்படும். அப்போது சுவாமி புறப்பாடும் நடைபெறும்.