Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா….

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசிமாத தெப்ப திருவிழா 6ம் நாளில் யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி மாத தெப்ப திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. இதையொட்டி விழாவின் 6ம் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் காலை 6.30 மணிக்கு உள்திருவீதிகள் வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி வாணிய மண்டபத்துக்கு காலை 9.30 மணிக்கு சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு வாகன மண்டபத்துக்கு பல்லக்கில் வந்தார். இதைதொடர்ந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள், யானை வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். 

  • திருவானைக்காவல் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்….

    திருவானைக்காவல் கோயிலில் மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 28ம் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறுகிறது. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் மண்டல பிரம்மோற்சவ விழா மார்ச் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 22ம் தேதி வரை 48 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. மார்ச் 7 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேஷ லக்னத்தில் பெரிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி சுவாமி, அம்பாள், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரம் அருகே வருகின்றனர். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் பெரியக்கொடி ஏற்றப்படுகிறது. அதைதொடர்ந்து கணபதி, சுப்ரமணிய சாமிகளுக்கு உற்சவம் நடக்கிறது. மார்ச் 23ம் தேதி எட்டு திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா துவங்குகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடு, 2ம் நாள் சாமி அம்பாள் சூரியபிறை, சந்திரபிறை வாகனத்தில் வீதியுலா, 3ம் நாள் காலை பூதவாகனம், மாலையில் காமதேனு வாகனம், 4ம் நாள் காலை கைலாச வாகனம், மாலையில் கிளி வாகனம், 5ம் நாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர். பங்குனி தேரோட்டத்தின் முதல் நாளான 27ம் தேதி தெருவடைச்சான் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 28ம் தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது. சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளி 4ம் பிரகாரம் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பங்குனி தேர் திருவிழா ஏப்ரல் 1ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைதொடர்ந்து சொக்கர் உற்சவம், மொனோத்சவம், சண்டிகேசுவரர் உற்சவம் நடக்கிறது. ஏப்ரல் 11ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடக்கிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 13ம் தேதியுடன் மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

  • கந்தசுவாமி கோயிலில் மாசி கிருத்திகை விழா

    கிருத்திகை விழா, திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாசி கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர்.
    முருகப் பெருமான் விண்ணில் நின்று போர் புரிந்த நிகழ்வுகளைக் கூறும் தலமாக திருப்போரூர் கந்தசுவாமி கோயில் விளங்குகிறது.
    இக்கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 13-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    இந்த நிலையில், மாசி கிருத்திகை விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன.
    இதில், ஏராளமான பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், பல்வேறு காவடிகளை எடுத்து வந்தும் நேர்த்தி கடனை செலுத்தினர்.
    இதைத் தொடர்ந்து இரவு, சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம்….

    திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தேவர்களைக் காக்கும் வகையில் முருகப் பெருமான் விண்ணில் நின்று தாரகாசுரனிடம் போர் புரிந்த இடம் என சிறப்பு பெற்றதும், கந்தசாமி பனை மரத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சிறப்பு பெற்றதுமான இந்தக் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, மார்ச் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 8-ம் தேதி தேர் உற்சவமும், 11-ஆம் தேதி தெப்போற்சவமும் நடைபெறுகின்றன.

  • திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேக கட்டணங்கள் திடீர் உயர்வு…

    திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேக கட்டணங்களை கோயில் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. திருத்தணி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் 5-ம் இடத்தில் சிறப்புற விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆடி கிருத்திகை, மாசி பிரமோற்சவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேக கட்டணங்களை கோயில் நிர்வாகம் வெகுவாக உயர்த்திவிட்டது. முருகனுக்கு பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களுக்கு ரூ.1,500 என கோயில் நிர்வாகம் தற்போது கட்டணம் நிர்ணயித்துள்ளது.

  • பகவதி அம்மன் வெள்ளி பல்லக்கில் அம்மன் ஊர்வலம்….

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் 3-வது நாளான நேற்று அம்மன் வெள்ளி பல்லக்கில் ஊர்வலம் வருதல் நடந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் 3-வது நாளான நேற்று அம்மன் வெள்ளி பல்லக்கில் ஊர்வலம் வருதல் நடந்தது.
    5-ம் திருவிழாவான மார்ச் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு சமயமாநாடும் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு பேச்சிவிளாகம் இசக்கியம்மன் கோவிலில் இருந்து சந்தனகுடங்கள் நிரப்பப்பட்டு மணவாளக்குறிச்சி மணல்ஆலை வளாகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
    பின்னர், அங்கிருந்து சந்தன குடம் ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக செல்கிறார்கள். அப்போது யானை மீது களபம் எடுத்து செல்லப்படுகிறது. இந்த ஊர்வலம், பிள்ளையார் கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு கோவிலை வந்தடைகிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

  • காளஹஸ்தி கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம்….

    காளஹஸ்தி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கடந்த 20-ஆம் தேதி முதல் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் 8-ஆம் நாள் ஆனந்த ராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. அதனால் நேற்று அதிகாலை 3 மணிக்கு காளஹஸ்தீஸ்வரரை யானை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகையை சிம்ம வாகனத்திலும் எழுந்தருளச் செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    இதையடுத்து காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகையும் தனித்தனியாக ருத்ராக்ஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தனர். வாகன சேவையின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    திருக்கல்யாணம் தொடங்கியது முதல் உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து கோயிலை அடையும் வரை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள சந்நிதி நடைகள் சாத்தப்பட்டு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. அன்றைய தினம் ஆனந்த ராத்திரி என்பதால் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜ சுவாமியையும், சிவகாமசுந்திரி அம்மனையும் கோயிலுக்குள் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் மாலை 6 மணிக்கு எழுந்தருளச் செய்தனர். அவர்கள் இருவருக்கும் இரவு 8 மணிக்கு சபாபதி திருக்கல்யாணம் நடைபெற்றது. நடராஜரை சபாபதி என்று அழைப்பதால் இந்த கல்யாண உற்சவத்துக்கு சபாபதி திருக்கல்யாணம் என அழைக்கின்றனர். கல்யாண உற்சவத்துக்கு வந்த பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

  • பம்பையில் பெண்கள் குளிக்க தடை…!

    சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்கள், பம்பை நதியில் இறங்கி குளிக்க வேண்டாம், என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
    தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், பல்வேறு கோவில்களுக்கும் செல்வதால் அவர்களுடன் குடும்ப பெண்களும் வருவதாகவும்,
    பம்பை வரும் இந்த பெண்கள், பம்பை ஆற்றில் குளிப்பதாகவும், இவ்வாறு குளிப்பது தவறு எனறும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    விரதமிருந்து வரும் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் பெண்களும் குளிப்பது ஆசாரங்களுக்கு எதிரானது என்பதால், பக்தர்களுடன் வரும் பெண்கள் இதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • நெல்லையப்பர் கோயிலில் தங்கத்தேர்

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் தங்கத்தேர் செய்யப்பட்டதன் எட்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சிறப்பு தேரோட்டம் நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோயிலில் உபயதாரர்கள் மூலமாக 10.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியில் சுமார் 6 அடி உயரத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அம்பாளுக்கு தங்கத்தேர் செய்யப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தேர் வெள்ளோட்டம் விடப்பட்டு கோயிலுக்கு வழங்கப்பட்டது.

    திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய நாள்களில் தங்கத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வழிபட்டு வருகின்றனர்.
    தங்கத்தேர் செய்யப்பட்டதன் 8ஆவது ஆண்டு தொடக்க விழாவை அடுத்து, மாநகர காவல் ஆணையர் இரா.திருஞானம் தலைமையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  • திருப்பதியில் நடிகர் சிவகார்த்திகேயன்….

    ரெமோ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் திருமலை சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
    நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபட திங்கள்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கினர். கோயிலை விட்டு வெளியே வந்த அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பக்தர்கள் போட்டிபோட்டனர்.