அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் முக்கியத் திருவிழாவான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கி, மே 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வாஸ்து சாந்தி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் காப்புக் கட்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
விழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. கோயிலின் சுந்தரேசுவரர் சன்னதி முன்பு உள்ள கம்பத்தடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சியம்மன் எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு புனித நீர் தெளித்து மங்கல இசையுடன் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி-பிரியாவிடை மற்றும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தீப-தூப ஆராதனைகள் நடைபெற்றன.
கொடிமரத்தை சுவாமி-பிரியாவிடை, அம்மன் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்பட்டியில் எழுந்தருளினர்.
முதலாம் நாள் விழாவையொட்டி மாலையில் கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், சிம்ம வாகனகத்தில் மீனாட்சியம்மனும் மாசி வீதிகளில் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் மே 5-ஆம் தேதியும், மே 6-இல் திக்குவிஜயம், மே 7-இல் திருக்கல்யாணம், மே 8-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
Category: ஆன்மீக செய்திகள்
ஆன்மீக செய்திகள்
-
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா…
-
நெல்லையப்பர் கோவிலில் குபேர மகாலட்சுமி சிறப்பு யாகம்
பிரசித்தி பெற்ற குபேரலிங்கம் சன்னதி உள்ள 3 கோவில்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் அட்சயதிருதியையொட்டி குபேர மகாலட்சுமி சிறப்பு யாகம் ஏப்ரல் 29-ந் தேதி நடக்கிறது. குபேரலிங்கம் சன்னதி உள்ள 3 கோவில்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற தலம் இதுவாகும். நெல்லையப்பர் கோவிலில் சுவாமி சன்னதி உள்பிரகாரத்தில் குபேரலிங்கம் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் அட்சயதிருதியையொட்டி 29-ந் தேதி காலை 6 மணிக்கு பக்தர்களுக்காக சிறப்பு குபேர லட்சுமி ஹோமமும், காலை 9 மணிக்கு சிறப்பு குபேர மகாலட்சுமி சிறப்பு யாகமும் நடக்கிறது. தொடர்ந்து குபேரலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.
-
திருப்பதியில் நன்கொடை திட்டத்தின் கீழ் வாடகை அறைகள்….
திருப்பதியில் உள்ள வாடகை அறைகளை காட்டேஜ் நன்கொடை திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை அறங்காவலர் குழுவின் இறுதிக் கூட்டம் அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதில், வரும் மே மாதம் 20 முதல் 26-ஆம் தேதி வரை ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மாவட்டத்துக்கு ஆயிரம் மாணாக்கர்களை தேர்ந்தெடுத்து தேவஸ்தானம் சார்பில் சுபப்ரதம் வகுப்புகள் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கு கொள்ளும் மாணாக்கர்களுக்கு ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் வகுப்புகள், தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் புதிய காத்திருப்பு வளாகம் கட்ட ரூ. 2.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2017 மார்ச் மாதம் நடத்திய தலைமுடி விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு ரூ. 5.27 கோடி வருமானம் கிடைத்தது.
தேவஸ்தான காட்டேஜ் நன்கொடை திட்டத்தின் கீழ், திருப்பதியில் உள்ள மாதவம் ஓய்வறையில் உள்ள ஓர் அறைக்கு ரூ. 15 லட்சமும், விஷ்ணு நிவாசத்தில் உள்ள ஓர் அறைக்கு ரூ. 10 லட்சமும், சூட் அறைகளுக்கு ரூ. 18 லட்சமும் என நன்கொடை பெற்றுக் கொள்ள தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு பக்தர்கள் தேவஸ்தானத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மத்திய அரசு உதவியுடன் திருப்பதியில் அறிவியல் அருங்காட்சியகம் ஏற்படுத்த 19 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது.
திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலுக்கு வெள்ளியினால் ஆன புதிய சிம்ம வாகனம் தயாரிக்க ரூ. 72 லட்சமும், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பொன்விழா வளைவு அருகில் ஏழுமலையான் கோயில் கட்ட ரூ. 29 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. -
தாயுமானவனுக்கே தாயான காரைக்கால் அம்மையார்
நடராஜர் உலகம் உய்யும் பொருட்டு நாட்டியமாடிய பஞ்ச சபைகளில், முதன்மையான தலம் என்று போற்றப்படுவது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில். எப்படி நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, “சிதம்பர ரகசியம்’ என்பது போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. அதற்கு ஒரு சுவையான கதையும் உண்டு . சிவனைத் தரிசிக்க, கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார் காரைக்கால் அம்மையார். சிவன் அவரை, “அம்மா!’ என்றழைத்து, “என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்க, அவர், “எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்…’ என்று கேட்க , அப்படியே வரத்தை அருளினார் சிவன்.
அம்மையின் மேல் ஆதுரம் கொண்ட எம்பெருமான், அவ்வூர் மன்னன் கனவில் தோன்றி, காரைக்கால் அம்மையார், தன் கோவிலில் தங்கப் போவதால் தனக்கு பின்புறம் அவருக்காக ஒரு சன்னிதி எழுப்பும்படியும் கூறினார். அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பினான். அதனுள், ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார். தற்போதும், இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதை தான் “ஆலங்காட்டு ரகசியம்’ என்கின்றனர்.

இங்குள்ள அம்பாளின் விக்ரகம், நடராஜரின் நடனத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ளதால், சமிசீனாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறாள் . “சமிசீனம்’ என்றால், “ஆச்சரிய பாவனை!’ என்று அர்த்தமாம் .
பங்குனி உத்திரத்தன்றும், மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்றும் மட்டுமே நகருக்குள் உலா வரும் நடராஜர், பஞ்ச சபைகளில் இங்கு மட்டுமே எட்டு கைகளுடன் காட்சி தருகிறார்.
ஒரு முறை காளியுடன் சிவன் போட்டி போட்டு நடனம் ஆடியபோது, அதன் உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து, அவர்களை எழுப்பினார் சிவன். இதனடிப்படையில் தான் சிவன் கோவிலாக இருந்தாலும், பெருமாள் கோவில்களைப் போல இங்கும் தீர்த்தம் தருகின்றனர் என்கிறார்கள் .
நடராஜரின் நடனத்தைப் பார்த்து அம்பாளே ஆச்சரியப்பட்ட திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் சென்று அற்புத தரிசனம் பெறுவோம் .
திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.
-
கடலுக்கடியில் சிவாலயம்

இயற்கை பல அதிசய விநோதங்களைக் கொண்டது . பஞ்ச பூதங்களால் ஆன இந்த உலகில் , இயற்கையை மிஞ்சியவர் , விஞ்சியவர் எவருமில்லை . கடல் தன்னுள் எண்ணற்ற அதிசயங்களை உள்ளடக்கியுள்ளது . அத்தகைய அதிசயங்களில் ஒன்று தான் குஜராத் மாநிலம் ,பாவ் நகரில் இருந்து 30 கி மீ தொலைவில் உள்ள கோலியாக் கடற்கரையில் உள்ள நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம் . இங்கு கடலுக்குள் உலகப் புகழ்ப் பெற்ற நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம் உள்ளது . இங்குள்ள சிவனை தரிசிக்க கடல் நீர் விலகி வழிவிடும் அதிசயத்தை காணலாம் . இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. இங்குள்ள நிஷ்களங்கேஷ்வரரை பாண்டவர்கள் வழிபட்டதன் அடையாளமாக , இந்த சிவாலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளதை காண முடியும் .

இருபது முதல் முப்பதடி உயரம் உள்ள இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் இதுவரை வீசிய எந்த புயல்களினாலும் சேதமடையாமல் இன்றளவும் கம்பீரமாக நிற்பது சிறப்பு . தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டமானது இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.அந்த அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்து காணப்படும் நிலையில் , பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரை திரும்பும் அதிசயத்தை காணலாம் .
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் இருந்து 30 கி மீ தொலைவில் உள்ள கோலியாக் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது .
-
ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா….
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவில் நேற்று நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார். ஏப்ரல் 25 ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 7-ம் திருநாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றார்.8-ம் திருநாளான இன்று(திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 8.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 25 ஆம் தேதி நடக்கிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தோளுக்கினியானில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 4.15 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.
பின்னர் 5 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறு கிறது.
-
நெல்லை பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம்
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
5-ம் நாளான கடந்த 15-ந் தேதி இரவு கருட சேவை நடந்தது. வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும், வேதவல்லி தாயார் சேஷ வாகனத்திலும், ஆண்டாள் அன்ன வாகனத்திலும் வீதிஉலா நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்தது. இதையொட்டி அதிகாலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 7 மணி அளவில் சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவில் வெள்ளி பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் பெருமாள் வீதிஉலா நடந்தது.
-
கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா வரும் 25ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அன்று மாலை கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு கூவாகம் கிராம வாசிகள் சார்பில் கூழ் குடங்களை கோயில் முன்பு படையல் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு பின்னர் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்படும். 26ம் தேதி பந்தலடியில் உள்ள தெய்வநாயகம் தோப்பில் கிராம மக்கள் சார்பில் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், மகாபாரத சொற்பொழிவும் துவங்குகிறது. மே 7ம் தேதி காலையில் கூத்தாண்டவருக்கு பாலாலயம் நிகழ்ச்சியும், 8ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி மே 9ம்தேதி நடைபெறுகிறது. அன்று தான் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பகுதியில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தங்க, வைர நகைகள், பட்டுப்புடவை அணிந்து அழகு பதுமைகளாக வந்து கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள்.
தாலி கட்டியபிறகு புதுமணப் பெண்கள் போல் காட்சி அளிக்கும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயில் அருகில் விடிய, விடிய கும்மி அடித்து கூத்தாண்டவரை தங்கள் கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். மே 10ம் தேதி காலை சித்திரை தேரோட்டமும், 11ம் தேதி விடையாத்தியும் நடைபெறுகிறது. 12ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரைப் பெருவிழா நிறைவு பெறுகிறது.
-
ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் பிரம்மோற்சவம், வைணவ மகா குரு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார உற்சவம் கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் ஆதிகேசவ பெருமாள் மேளதாளம் முழங்க வலம் வந்தார்.
நிலையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்ட தேர், காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு வழியாக வந்து மீண்டும் மதியம் 1.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். -
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்
சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கலில் கல்லில் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த் தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பகல் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.