Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • தீராத துன்பத்தை போக்கும் முருகன் …

    தீராத துன்பத்தை போக்கும் முருகன் …

    முருகனை வழிபாடு செய்பவர்களுக்கு எப்பேற்பட்ட கஷ்ட சூழ்நிலையும் படிப்படியாக விலகி ஓடும்.

    முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மிக அதிகம். வழிபாடுகளிலும் வழிபாட்டு முறைகளிலும் முருகப்பெருமானுக்குத்தான் பலவிதமான வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் இருக்கின்றன என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    முருகப்பெருமானுக்கு எல்லா சிவாலயங்களிலும் சந்நிதி அமைந்திருக்கும். பெரும்பாலான சிவன் கோயில்களில் முருகக் கடவுளும் சாந்நித்தியம் கொண்டவராகத் திகழ்வார். ஆறுபடை வீடுடையோன் என்று முருகக் கடவுளைச் சொன்னாலும் ஆறு படைவீடுகள் என்று சொல்லப்படும் கோயில்களையும் தாண்டி ,ஏராளமான முருகன் கோயில்கள் இருக்கின்றன. அதுவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன.

    அதேபோல், பல அம்மன் கோயில்களிலும் முருகக் கடவுளுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. அம்மையப்பன் என்று சிவபார்வதியைச் சொல்வோம். அம்மை குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் அப்பன் சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் மைந்தன் கந்தனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.

    ஆறுபடை வீடுகள் எனும் பட்டியலுக்குள் வராத, வடபழநி, வயலூர், குமரன் குன்றம், குன்றத்தூர் விராலிமலை முதலான ஏராளமான கோயில்களில் இருந்துகொண்டே தன் பக்தர்களின் குறைகளைப் போக்கி அருளிக்கொண்டிருக்கிறான் அழகன் முருகன்.

    வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் வேலவனுக்கு ஏராளம். காவடி எடுத்து வழிபடுவார்கள். வேல் எடுத்து வந்து பூஜிப்பார்கள். பால் குடம் ஏந்தி வருவார்கள். பாத யாத்திரை மேற்கொள்வார்கள். பாலபிஷேகம் செய்வார்கள்.. முடிகாணிக்கை செலுத்துவார்கள். சேவல் வழங்குவார்கள்.

    முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு அருளுவான் என்கிறார்கள் பக்தர்கள். அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். அடைந்த துன்பங்களில் இருந்தெல்லாம் ஆனந்த வாழ்க்கையை மாற்றித் தந்திடுவான் கந்தன்.

    ஓம் செளம் சரவணபவ
    ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ

    எனும் முருகப்பெருமானின் மந்திரத்தை, செவ்வாய்க்கிழமைகளில் அவசியம் சொல்லி வாருங்கள். செவ்வாய்க்கிழமையில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். முடிந்தால் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த மந்திரத்தை 21 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை சொல்லி வாருங்கள். அதேபோல், செவ்வாய்க்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் சொல்லி வழிபடுங்கள். தினமும் சொல்லி வழிபடுங்கள். நம் வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வேலவன். சிக்கல்களையெல்லாம் போக்கி அருளுவான் சிங்காரவேலன்.

     

  • தைப்பூச சிறப்பும்… விரதமும்…..!

    முருகப்பெருமானுக்கு உகந்த நாள் தைப்பூச திருநாள்.  தைப்பூச நாளில் வள்ளலார் முக்தியடைந்தார். இறைவன் ஒளிமயமானவர் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். தைப்பூச தினத்தன்று அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது. தேவர்களின் குருவாகக் கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார்.

    இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராஜப்பெருமான் சிவதாண்டவமாடிக் காணுப்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.

    அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்னி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமையை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள்தான் இந்த தைப்பூச நன்னாளாகும்.*

    ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

    'தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற்கொள்கின்றனர்.

    தைப்பூச விரத முறை :

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்.

    சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

  • மருந்தீசுவரர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் 

    திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோவிலின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

    சென்னையில் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

    அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து ஆலயத்தின் மேற்கு கோபுரம் அருகே உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டு, பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெற்றது. 

    திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் சந்திரசேகரர் வீதிஉலா நிகழ்ச்சியும், ஆலய மண்டபத்தில் சொற்பொழிவு, இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அத்துடன், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.

  • கெங்கையம்மன் திருகோவில் கும்பாபிஷேக வீடியோ 

    பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் திருகோவில் மக்களால் புதுபிக்கப்பட்டு 12 வருடங்களுக்கு பின்னர் கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    சென்னையை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ தேவி கெங்கையம்மன் ஆலயம்.இந்த ஆலயம் ஆலயம் மிகவும்பழமை வாழ்ந்த அலயம் ஆகும்.இந்த ஆலயம் கிராம மக்களால் புதுபிக்கப்பட்டு 12 வருடங்களுக்கு பின்னர் கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

    கடந்த மூன்று தினங்களாக கணபதி வழிபாடு, கணபதி ஹோமம், கோ பூஜை, யாக பூஜை,தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடைபெற்று வந்தன. 

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க  கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். மேலும் பரிவார மூர்த்தி களுக்கு திருக்குட நன்னிராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், விஷேச பூஜைகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
     

  • கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோயிலில் ஜன.27 கும்பாபிஷேகம் 

    கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வரும் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான  யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளது. யாகசாலை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 22 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா கடற்கரையில் 5.5 ஏக்கர் நிலத்தல் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதி திருமலையை போன்று கன்னியாகுமரியில் எழுந்தருளி உள்ள இந்த கோவிலிலும் பிரம்மோற்சவம் ,ரத உற்சவம் தீர்த்தவாரி ,சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை ,சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    குமரி வெங்கடாசலபதி கோவிலின் மேல் பகுதியில் வெங்கடாசலபதி சன்னதி உள்ளது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி பத்மாவதி தாயார் சன்னதியும், இடதுபுறம் அம்பாள் சன்னதியும், வெங்கடாசலபதி எதிரே கருடாழ்வார் சன்னதியும் உள்ளன.

    கோவிலின் கீழ்ப்பகுதியில் இரண்டு ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல அன்னதான கூடம் தியான மண்டபம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.  இங்கு வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 

    இதனையொட்டி நேற்று முன்தினம் 40 அடி உயரமுள்ள கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது கொடிமரத்தில் நேற்று காலையில் செம்புத் தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது.
    கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு 16 யாக குண்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் யாகசாலை பூஜை நடத்தினர் யாகசாலை பூஜை நடைபெறும் இடம் வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கப்பட்டது.

     27ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது அன்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை சீனிவாச கல்யாணம் நடைபெறுகிறது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

  • பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா…..

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    முருகனின் 3-ம் படை வீடாக விளங்கும் பழனியில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த வைகாசி விசாக திருவிழா ‘வசந்த உற்சவம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. முருகன், பரமசிவனின் நெற்றி கண்ணில் இருந்து ஒளி பிளம்பாய் தோன்றிய நாள் வைகாசி விசாக திருநாளாகும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 31-ந் தேதி இரவு பெரிய நாயகி அம்மன் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜை, புனித மண்ணெடுத்தல், அஸ்தர தேவர் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    1-ந் தேதியன்று காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜைகளும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்து சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரம் சுற்றி வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
    10 நாட்கள் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழாவில் தினசரி காலை தந்த பல்லக்கிலும், இரவு தங்கமயில், வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம், வெள்ளியானை, வெள்ளி காமதேனு, தங்க குதிரை, பெரிய தங்க மயில் வாகனம் போன்றவற்றில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் திருஉலா காட்சி நடைபெறுகிற்து. 6-ந் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    7-ந் தேதி தோளுக்கினியான் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி காலை 10.45 மணிக்கு மேல் 11,45 மணிக்குள் திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள்

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     பிருத்வி தலம் நிலம்

     

    பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்று புகழப்படும் சிறப்பினை உடையது இத்திருத்தலம் .  மிகவும் பிரம்மாண்டமாக  33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள  இக்கோயில்,  9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் , 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் கொண்டு புகழ்பெற்று விளங்குகிறது  . ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

     

    நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம் மற்றும்  நட்பின் முக்கியத்தை உணர்த்த , சுந்தரருக்காக , சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம் என ஏகப்பட்ட சிறப்புகளுக்கு சொந்தமான இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. வான்மீகிநாதர் ,மற்றும் தியாகராஜர் என சிவபெருமானுக்கு இரண்டு திருநாமங்கள். மிகவும் பழமையான வான்மீகி நாதர் சந்நிதியில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதால் புற்றிடங் கொண்ட நாதர் என்று வழங்கப்படுகிறார்.

    இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலும் பஞ்ச பூத தலங்களில் நிலத்துக்கான ஒன்றாக கருதப்படுகிறது .

  • கல்யாண கட்டாவில் 4-ஆவது தளம்

    திருமலையில் உள்ள கல்யாண கட்டாவில் புதிதாக கட்டப்பட்ட 4-ஆவது தளத்தை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் திறந்து வைத்தார்.

    ஏழுமலையானுக்கு முடிகாணிக்கைச் செலுத்த வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் திருமலையில் முடிகாணிக்கைச் செலுத்தும் மையத்தை (கல்யாண கட்டா) ஏற்படுத்தியது. இங்கு பக்தர்கள் இலவசமாக தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். தினமும் சுமார் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் முடிகாணிக்கைச் செலுத்தி வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் சமயத்தில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த பலமணி நேரம் காத்திருக்கின்றனர். இதுவரை 3 தளங்களை மட்டுமே கொண்ட இந்த மையத்தில் தேவஸ்தானம் புதிதாக ரூ. 34 லட்சம் செலவில் 4-ஆவது தளத்தை கட்டி உள்ளது.

  • அழகர்மலைக்கு திரும்பிய கள்ளழகர்….

    பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்காக மதுரை சென்ற கள்ளழகர், நேற்று அழகர்மலைக்கு திரும்பி இருப்பிடம் சென்றடைந்தார். திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும், 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதுமான மதுரையை அடுத்து உள்ள அழகர்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த மே 6-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து மே8-ந்தேதி கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்று, 10-ந்தேதி சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். மறுநாள் வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலிலிருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு, கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி சாபம் தீர்த்து அருள்பாலித்தார். தொடர்ந்து 13-ந்தேதி நள்ளிரவுக்கு பின்பு பூப்பல்லக்கு விழா நடந்து, தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியாகி, கள்ளழகர் வந்த வழியாக மலைக்கு திரும்பினார். மே14 ஆம் தேதி அதிகாலை அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு காலை 10.30 மணிக்கு அழகர்கோவில் கோட்டை வாசலை சாமி வந்தடைந்தார். தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கு வையாழியாகி கோவில் உள்பிரகாரத்திற்குள் கள்ளழகர் சென்றார். தொடர்ந்து உற்சவ சாந்தியுடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.

  • திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்….

    விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அங்குள்ள வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள அறைகளில் தங்கி நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
    தற்போது கோடைவிடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது.
    இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஏழுமலையான் கோயிலில் 96 ஆயிரத்து 27 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
    இதில் இலவச தரிசனத்திற்கான வைகுண்டத்தில் உள்ள 39 அறைகளும் நிரம்பி பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். மலைப்பாதை வழியாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 16 அறைகளில் நிரம்பி சுமார் 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.