Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • ராமேஸ்வரம் கோயிலில் பலத்த பாதுகாப்பு….

    தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    குறிப்பாக ராமேஸ்வரம் தீவுப் பகுதி, இலங்கை கடல் பகுதியின் அருகாமையில் அமைந்திருப்பதால் ராமேஸ்வரம் தீவு முழுவதற்கும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பன்மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள்ளும், வெளியிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயிலுக்குள் செல்போன், கேமரா, கைப்பை என எந்த பொருளும் எடுத்து செல்ல கூடாது என பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கம்பெனி ஆயுதப்படை போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா ஆகஸ்டு 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 22-ஆம் தேதி அதிகாலை தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு, 22 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. மாலையில் அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி செய்தல், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதியுலா வருதல் நடைபெறும்.
    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 26-ஆம் தேதி 5-ஆம் திருவிழாவை முன்னிட்டு, மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வருவர்.

    6-ஆம் திருவிழாவான 27-ஆம் தேதி காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதியுலா வரும். 7-ஆம் திருவிழாவான 28-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, 8.30 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சப்பரம் சேரும். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்று, மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    8-ஆம் திருவிழாவான 29-ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்ந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்று, பகல் 12.05 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து கோயில் சேர்தல் நடைபெறும். 30-ஆம் தேதி இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வருதல் நடைபெறும்.
    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர் வீதி வலம் வந்து நிலையைச் சேரும்.

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகம்

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் உள்ள நரசிம்மர் சுவாமி சன்னதி உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கும் சன்னதிகள் மற்றும் கோபுரங்களுக்கு ஆகஸ்டு 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்….
    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், புராதன மிக்க பார்த்தசாரதி சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார் மற்றும் குளக் கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கும், அதன் விமானங்களுக்கும், பின்கோபுரவாசல் விமானம், பாண்டிகோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம், நரசிம்மர் மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளங்கள், குளக்கரை ஆஞ்சநேயர் விமானம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் திருப்பணிகள் கடந்த ஜூலை 10-ந் தேதி தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி ஆகஸ்டு 18ஆம தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இத்திருப்பணிகள் பழமை மாறாமல் தொல்லியல் துறை வல்லுனர்களின் ஆலோசனைப்படி, ரூ.95 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரூ.55 லட்சம் மதிப்பில் சுவாமி கிரீடம், கர்ணபத்திரம், ஸ்ரீசடகோபம், கவசங்களுக்கு தங்க ரேக் பதிக்கும் பணியும், கோபுர கலசங்களுக்கு தங்கநீர் தோய்க்கும் பணியும் மற்றும் முதல் முறையாக நரசிம்ம சுவாமிக்கு சொர்ணபந்தனமும், கஜேந்திரவரதராஜ சுவாமிக்கு ரஜதபந்தனமும் பொருத்தப்பட உள்ளது.

    இந்த திருப்பணிகள் ஏற்பாடுகளை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி மற்றும் துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • திருப்பதி கோயிலில் தேங்கி கிடக்கும் தங்கம்….

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தங்கத்தை வங்கி அதிகாரிகள் ஏற்க மறுப்பதால் 1000 கிலோ தங்கம் தேங்கி கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கத்தை காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் ஏழுமலையான் உண்டியலில் தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

    திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் இது வரை அளித்துள்ள நகைகளின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கிலோவை கடந்து விட்டது. அதில் 1000 கிலோ நகையை தங்க முதலீடு திட்டத்திக் கீழ் முதலீடு செய்ய திருப்பதி-திருமலை தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து பொதுத்துறை வங்கிகளை கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்பதி ஆலய அதிகாரிகள் அணுகி இது குறித்து பேசினார்கள். பக்தர்கள் பயன்படுத்திய நகைகளாக உள்ள அந்த 1000 கிலோ தங்கத்தில் ஒவ்வொரு வங்கிக்கும் எத்தனை கிலோ நகைகளை கொடுப்பது என்று பேசி வந்தனர்.

    இந்த நகைகளை வங்கி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் மும்பைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மும்பையில் அந்த நகைகள் உருக்கி 999 கே.டி.எம் ஆக மாற்றப்படும். இந்த பொறுப்பை ஏற்க வங்கி அதிகாரிகள் தயங்குகிறார்கள். இதனால் திருப்பதி கோவிலின் 1000 கிலோ நகைகள் கடந்த 2 மாதமாக எந்த வங்கிக்கும் செல்லாமல் உள்ளது.

    இதற்கிடையே அடுத்த 2 மாதத்தில் மேலும் 400 கிலோ நகைகள் சேர்ந்து விடும் என்று தெரியவந்துள்ளது. எனவே 1000 கிலோ நகையை பெற்று கொள்ளும்படி வங்கிகளுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

  • இணையதளம் மூலம் ஒரு லட்சம் பேருக்கு யோகா…

    வாழும் கலையின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதன்முறையாக இணையதளத்தின் மூலம் தனித்துவம் வாய்ந்த சுதர்சனக் கிரியா கற்றுத் தரவிருக்கின்றார். இந்தியா முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு மேல், இந்த பயிற்சியினை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகஸ்ட் 19 முதல் 21 வரை ஆனந்த அனுபவம் என்றழைக்கப்படும் இந்த பயிற்சி நடைபெறும்.

    இந்தியா முழுவதிலும் –  ஷில்லாங் முதல் மும்பை வரை, ஜம்மு முதல் சென்னை வரை 2000 க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து தோற்ற நிலையில் பங்கேற்பவர்கள் ஒன்று கூடுவர். பயிற்சி நடைபெறும் அனைத்து  இணைய தள இடங்களிலும் வாழும் கலையின் ஆசிரியர் களும் தன்னார்வத் தொண்டர்களும் உடனிருப்பர்.

    இணைய தளம் தவிர ஸ்ரீ ஸ்ரீயிடமிருந்து இந்த நுட்பத்தை நேரிடையாகப் பயில சுமார் 3000 பேர் பெங்களூருவிலுள்ள வாழும் கலையின் சர்வ தேச மையத்திற்கு பயணம் செய்ய இருக்கின்றனர்.

    “அதிகப் பணி, குறைவான நேரம், ஆற்றலில்லாத நிலை ஆகியவையே மன அழுத்தம் ஏற்படக் காரணமாகின்றன” என்று கூறும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் “ஆனால் உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். பிராணாயாமம், தியானம் மற்றும் சுதர்சனக் கிரியா ஓர் நாளுக்குத் தேவையான ஆற்றலை அதிக அளவில் அளித்து, உங்களை மேலும் ஆக்க வளம் கொண்டவராக ஆக்குகிறது” என்கிறார்.

    ஆனந்த அனுபவப் பயிற்சியின் மைல் கல்லாகிய சுதர்சனக் கிரியா என்பது  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் அறியப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த தாள லயத்துடன் அமைந்த மூச்சுப் பயிற்சியாகும். இந்த தனித்துவம் வாய்ந்த மூச்சுப் பயிற்சி நுட்பம் மன அழுத்தம், களைப்பு, கோபம், விரக்தி, சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் அனைத்தையும் அகற்றி சாந்தம், ஆற்றல் கவனம் மற்றும் இளைப்பாறல் ஆகியவற்றைத் தரும்.

    கடந்த 35 ஆண்டுகளாக, இந்த நுட்பத்தால் பல்வேறு தரப்பைச் சேர்ந்த  மக்கள் – மருத்துவர்கள், இல்லதரசிகள், தீவிரவாதிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், போர் வீரர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், சட்ட வல்லுநர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர், யூதர்கள், சமணர்கள் –  மூச்சு சக்தி மூலம் மனித இனத்தை இணைக்கின்றனர்.

    சுவாச நுட்பம், யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் தவிர,  பயிற்சியில்  வாழ்வில் எத்தகைய சிரமமான நிலையையும் கையாள நடைமுறைக் கருவிகளைக் கற்பிக்கும் ஞான அமர்வுகளும் இருக்கும். பயிற்சியின் இறுதியில் பங்கேற்பவர்கள் சாந்தம், ஸ்திரம் மற்றும் ஆனந்தமான மன நிலையையும், தன்னைச் சுற்றியிருப்பவர்களுடன் நல்ல தொடர்பினையும் அடைவர்.

    பிரசித்தி பெற்ற AIIMS மற்றும் NIMHANS உட்பட பல மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடை பெற்றுள்ள ஆய்வின்படி, சீராகத் தினமும் செய்யப்படும்  சுதர்சனக் கிரியாவின் மூலம் கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது :

    • இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகும்
    • படபடப்பு குறையும். மருத்துவம் மற்றும் உளப்பிணி சிகிச்சைகள் பயனளிக்காத நிலையிலுள்ள தனிநபர்கள்  71 % முதல் 73 % வரையில் குணமடைந்தும், 41 % பிணி குறைந்தும் உள்ளனர்.
    • மன அழுத்தம் நிறைந்த நோயாளிகள் சுதர்சனக் கிரியா பயின்ற பின்னர் ஒரு மாதத்திற்குள்ளாகவே 68 % முதல் 73 % வரையில் நோய் குறைவினை உணர்ந்திருக்கின்றனர்.
    • மூன்று மடங்கு அதிக ஆழ்ந்த ஓய்வு நிறைந்த உறக்க நிலைகளை பெற்றுள்ளனர்.
    • 12 வாரங்களில் நோய் எதிர்ப்பு செல்கள்  மேம்பாட்டினைப் பெற்றுள்ளனர்.

    சென்னை நகரில் இப்பயிற்சி 57 இடங்களில் நடைபெறும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியினை எடுத்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு

    8144265265 என்னும் எண்ணிற்கு அழைக்கவும். ஊடகத் தொடர்பான கேள்விகளுக்கு 9884017767 என்ற எண்ணில் ராஜலக்ஷ்மி சுவாமிநாதனை அழைக்கவும். 

  • திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரலட்சுமி விரத பூஜை நடக்கிறது.

    வரலட்சுமி விரத பூஜையில் பங்கு கொள்ள விரும்பும் பக்தர்களுக்கென தேவஸ்தானம் 200 டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான இ-தர்ஷன் கவுன்ட்டர்களில் ரூ. 500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இந்த டிக்கெட் மூலம் இருவர் வரலட்சுமி விரதத்தில் கலந்துகொள்ள முடியும். பங்கு கொள்பவருக்கு ஒரு அங்கவஸ்திரம், ஒரு ரவிக்கை துண்டு, ஒரு லட்டு, வடை பிரசாதமாக வழங்கப்படும். வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அன்று மாலை தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் வலம் வர உள்ளார்.

    மேலும் அன்றைய தினம் அபிஷேக சேவைக்கு பின் வழக்கமாக நடைபெறும் திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, லட்சுமி பூஜை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

  • மகா மாரியம்மன் கோயிலில் கடைவெள்ளி பெருவிழா

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளி பெருவிழா ஆகஸ்டு 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இதையொட்டி, மகா மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுப்பர்; சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பிற்பகலில் அன்னதானமும், மாலையில் சுமங்கலி திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. .
    ஆகஸ்டு 12 ஆம் தேதி காலை 9 மணியளவில் பால்குடமும் மதியம் 12 மணியளவில் அபிஷேக ஆராதனையும் அன்னதானமும் மாலை 5 மணியளவில் சுமங்கலி திருவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. சிறப்பு நாகசுர இன்னிசையுடன் அன்றிரவு அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெறவுள்ளது.
    விழா ஏற்பாடுகளை நீடாமங்கலம் மகாமாரியம்மன் ஆலய நலச் சங்கத்தினர் மற்றும் நகரவாசிகள் செய்துள்ளனர்.

  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுந்தரர் குருபூஜை

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுந்தரர் குருபூஜை நடைபெற்றது.

    திருக்கோயிலில் சண்முகர் சன்னதியில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் சன்னதிகள் உள்ளன. ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சுந்தரர் குருபூஜை நடைபெற்றது.

    இதையொட்டி, காலையில் நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுந்தரர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கம்பத்தடி மண்டபத்தை 3 முறை வலம் வந்து, உற்சவர் சன்னதியில் சேர்த்தியானார். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

  • திருப்பதியில் அறை முன்பதிவுக்கு முன்பணம் தேவையில்லை

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆன்லைன் மூலம் தங்கும் அறைகள் முன்பதிவுக்கு இனி முன் பணம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அறை வாடகை மட்டும் செலுத்தினால் போதும். இந்த திட்டம் அகஸ்டு 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும்விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 4வது யாத்ரீக சமுதாயக்கூடத்தில் பக்தர்கள் தங்கவும், தங்களது உடமைகளை அங்கேயே வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தங்கும் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கும், நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கும், அறை முன்பதிவின்போது, செலுத்தப்படும் முன்பணம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, அவர்கள் அறைவாடகை மட்டும் செலுத்தினால் போதும்.

  • காளஹஸ்தி கோயிலில் காணிக்கை தலைமுடி ரூ. 16.60 லட்சத்துக்கு ஏலம்

    காளஹஸ்தி சிவன் கோயிலில் காணிக்கை தலைமுடி 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
    காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் செலுத்தும் தலை முடியைப் பாதுகாத்து ஆண்டுக்கு ஒருமுறை கோயில் நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளியுடன் கூடிய ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிறது.

    அதன்படி கடந்த 1.4.2016 முதல் வரும் 31.3.2017 வரையிலான காலத்துக்கு உள்பட்ட தலைமுடி விற்பனைக்கான ஒப்பந்தப்புள்ளியுடன் கூடிய ஏலத்தை கோயில் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை நடத்தியது.

    அதில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ. 16.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
    ஆனால் இது கடந்த ஆண்டை விட 17 லட்சம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சுமார் 33 லட்ச ரூபாய்கு ஏலம் விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏலத்தில் கலந்து கொண்ட அனைத்து நிறுவனங்களும் 16 லட்சத்துக்கு குறைவாகவே கேட்டிருந்தன. சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ.16.60 லட்சத்துக்கு ஏலம் கேட்டிருந்ததால் அந்நிறுவனத்துக்கு டென்டர் வழங்கப்பட்டது.