Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • சிவபெருமானை சூரியன் வழிபட்ட அதிசயக் காட்சி!

    திருச்சி கல்லணை ரோடு சர்க்கார்பாளையத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சூரியன் தன் ஒலியால் மூலவரை வழிபட்ட காட்சியை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

    திருவெறும்பூர் அருகே உள்ள சர்கார்பாளையத்தில் கரொகாலச் சோழனால் காவிரி தென்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கே ஆவணி ஏழு, எட்டு, மற்றும் ஒன்பதாம் தேதிகளில் சூரிய ஒளி முன் மண்டபம் வழியாக மெல்ல நகர்ந்து கொடிமரம் வழியாக மூலவரை வந்தடைகிறது.

    இதன் மூலம் சூரிய பகவானே சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம். இந்த ஆண்டு இந்த சூரிய வழிபாடு இன்று காலை 6 முதல் 6.30 மணி வரை நடந்தது. அப்போது சூரிய ஒளி காசி விஸ்வநாதரின் நெற்றிப் பொட்டில் திலகம் இட்டது போல ஜொலித்தது காண்போரை பக்திப் பரவசம் கொள்ளச் செய்தது.

  • திருப்பதியில் இலங்கை அதிபர் …..

    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, சிறிசேனா தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் இரவு மணிக்கு திருமலைக்கு வந்தார். திருமலையில் ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணாரெட்டி, திருப்பதி எம்.எல்.ஏ. சுகுணா மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் என பலர் அவரை வரவேற்றனர்.
    அதிகாலை 2.30 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் நடந்த சுப்ரபாத சேவையில் சிறிசேனா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அதிகாலை 5.30 மணியளவில் வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று மீண்டும் சிறிசேனா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
    அவருக்கு கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி, தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆகியோர் வழங்கினர்.

  • திருச்செந்தூர் கோயிலில் கொடியேற்றம்….

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
    அதைத்தொடர்ந்து கொடிபட்டம் கோயிலில் இருந்து வீதி உலா சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. சிறப்பு பூஜை செய்யப்பட்டதையடுத்து கொடியேற்றப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • யோகநரசிம்மர் சன்னதிக்கு கும்பாபிஷேகம்….

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் உள்ள யோகநரசிம்மர், வரதராஜ சுவாமி உட்பட 5 சன்னதிகளுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில். இங்குள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் உட்பட 5 சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

    காலை 9 மணிக்கு பெருமாள், தாயாருடன் சன்னதியில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக மாட வீதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • குற்றாலநாதர் கோயிலில் வருஷாபிஷேகம்

    தென்காசி குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் அகஸ்டு 21ஆம் தேதியன்று வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆகஸ்டு 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமையன்று) காலை11.20மணிக்கு மேல் 12.20க்குள் வருஷாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாலையில் சுவாமி, மற்றும் அம்மன் ரதவீதிகளில் எழுந்தருளல் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.சாத்தையா,மற்றும் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

  • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி….

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருநாள் விழா 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது. ஆகஸ்டு 26 மற்றும் 27-ந்தேதிகளில் இந்த திருவிழா நடக்கிறது.
    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்….

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையட்டி ஆகஸ்டு 26-ந்தேதி காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். 10.30 மணிக்குஸ்ரீ பண்டாரம் ஆஸ்தான மண்டபம் சேருதல், 11 மணி முதல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுதல், பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை அலங்காரம் அமுது செய்தல், 2.30 மணி முதல் 5 மணி வரை மண்டபத்தில் பொது ஜனசேவை, மாலை 5.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடு, மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை விஸ்வரூப சேவை உண்டு. பூஜை காலமான காலை 7.15 மணி முதல் 10 மணி வரை மூலவர் சேவை கிடையாது. காலை 10 மணி முதல் 5.15 மணி வரை சேவை நேரம் ஆகும். மாலை 5.15 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

    ஆகஸ்டு 27-ந்தேதி காலை 7.15 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணன் புறப்பாடு, காலை 9 மணிக்கு சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி கிருஷ்ணர் சன்னதிக்கு வந்து சேருதல், மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடும், மாலை 4 மணிக்கு யாதவ உறியடி ஆஸ்தான மண்டபம் சேருதலும், மாலை 6.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடும், இரவு 8.15 மணிக்கு சித்திரை வீதிகள் வலம் வந்து உறியடி கண்டருளுதலும், இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சேருதலும் நடக்கிறது.

    இதையடுத்து 27-ந்தேதி காலை 7.15 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டும் மூலவர்சேவை உண்டு. பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரையும் பூஜைகாலமாகும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • ஸ்ரீரங்கம் சயன சேவை

    ஸ்ரீ ஆண்டாள் வீற்றிருக்க ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலை வைத்திருக்கும் சயன சேவை. இந்த சயன சேவை ஸ்ரீ ஆண்டாள் கோவில் திருவிழாக்களில் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பாக நடைபெறும் விழாவில் சயனோத்சவம் ஒன்று. பெருமாள் மற்றும் தாயாரை இரவு சயன அறைக்கு அழைத்துச் செல்லும் உற்சவம். பெரும்பாலான தலங்களிலும் உண்டு.

    இது தடைப்பட்ட திருமணம், புத்திரப்பேறு, தம்பதியர் ஒற்றுமை என பலன்களைத் தரும் உற்சவம். ஸ்ரீரங்கம் கோயிலில் சயனம் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. ஸ்ரீரங்கநாச்சியார் சன்னதியில், நவராத்திரி மண்டபம் வடபுறத்தின் மேல் அமைந்துள்ள கஜலட்சுமி, அங்கே ஒரு வாசல் இருந்ததைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

    அந்த வாசல் 19ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டதாகச் சொல்வர். இந்த இடமே அரங்கனின் சயன மண்டபம். ஸ்ரீரங்கத்தில் அண்மையில் நடந்த குடமுழுக்கு வைபவத்தின் போது இந்த வாசல் கண்டறியப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

  • பொத்தூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

    திருமுல்லைவாயில் அடுத்த பொத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆகஸ்டு 21 ஆம் தேதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனையொட்டி 20 ஆம் தேதி மஹாகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை நடக்கின்றன. அன்று மாலை வாஸ்து ஹோமம், முதல் காலயாக சாலை பூஜை போன்றவை நடக்கின்றன. 21 ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பெருங்குளம் ராமகிருஷ்ண சோதிடர் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கிறார். பெருங்குளம் சுப்பிரமணிய சோதிடர் முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரவிசேகர் செய்து வருகிறார்.

  • பார்த்தசாரதி கோயிலில் உள்ள யோக நரசிம்ம சுவாமி குடமுழுக்கு விழா….

    திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி சன்னதிக்கு வரும் 22-ம் தேதி குடமுழுக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி, ஸ்ரீ கஜேந்திர சுவாமி, ஸ்ரீதிருமழிசையாழ்வார், குளக்கரை ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி சன்னிதிகளுக்கு குடமுழுக்கு செய்வதென்று முடிவு செய்யப்பட்டு, முதலமைச்சர் உத்தரவின் படி அதற்கான பணிகள் கடந்தாண்டு தொடங்கப்பட்டன. ரூ.95 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட குடமுழுக்குப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

    இதனையடுத்து, 4 சன்னிதிகளுக்கான கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள் கிழமை காலை 9.30 மணியிலிருந்து 10.25 மணிக்குள் நடக்க உள்ளன. மேலும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ம் தேதி முதல் யாகசாலைகள் அமைக்கப்படவுள்ளன. அன்றைய தினம் முதல்கால ஹோமம், திவ்யபிரபந்த சேவை, வேதபாராயணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ஆகஸ்டு 19-ம் தேதியன்று விஸ்வரூபம், கும்பாராதனம், காலசந்தி, பூர்ணாஹுதி, சாற்றுமுறை, விமான கலசம் ஸ்தாபனம், ஹோமம் உள்ளிட்டவையும், 20-ம் தேதியன்று ஹோமம், மூலவருக்கு சொர்ணபந்தனமும் (தங்கத்தில்), ரஜதபந்தனமும் (வெள்ளியில்) சாத்தப்படவுள்ளன. 21-ம் தேதியன்று ஹோமம், மஹாசாந்தி ஜப்யம், அதிவாச திருமஞ்சனம், மஹாசாந்தி திருமஞ்சனம், உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளன.

    இதையடுத்து, 22-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், கும்பாராதனம், காலசந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கிறது. காலை 9 மணிக்கு பெருமாள், கும்பத்துடன் சன்னிதியில் எழுந்தருள உள்ளார். சரியாக காலை 9.30 மணியிலிருந்து 10.25-க்குள் விமானம் மற்றும் கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளன.

  • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் மஹோத்சவ விழா

    திருவல்லிக்கேணி நஞ்ஜன்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ம்ருத்திகா பிருந்தவன சந்நிதானத்தில் 345-ஆவது ஆராதனை மஹோத்ஸவம் விழா ஆகஸ்ட் 17 தொடங்கி, 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    17 ஆம் தேதி மாலை 6 மணியளவில் அன்னதானத்துக்கு வேண்டிய தானிய பூஜையானது கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-இல் காலையில் பஞ்சாமிர்த அபிஷேகம், நாணயங்களைக் கொண்டு கனகாபிஷேகம், நண்பகல் அன்னதானம் ஆகியன நடைபெறுகின்றன.

    தொடர்ந்து சனிக்கிழமை காலை அபிஷேக அலங்காரம், பாலாபிஷேகம், பஞ்சாமிர்தம் அதைத் தொடர்ந்து அன்னதானம், மாலை புஷ்ப பல்லக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை காலை தங்கத்தேரில் பிரஹலாதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் அதைத்தொடர்ந்து 11 மணியளவில் வசந்த பூஜை, அன்னதானம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.