Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • நெல்லையப்பர் கோயிலில் திருப்பணி…

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2004ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்து விட்டதைத் தொடர்ந்து கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயிலில் உபயதாரர்கள், அறநிலையத் துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும் தாமிரவருணி அறக்கட்டளை சார்பில் கோயில் வெளித் தெப்பம் சீரமைப்பு, மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • திருப்பதியில் நேர்த்திக் கடன் செலுத்திய சிந்து…

    ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டனில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்து திருப்பதி கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினார். திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பி.வி.சிந்து, அவரது தாய் விஜயா, தந்தை ரமணா மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் திருப்பதி வந்தனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று முதலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர், தனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளருடன் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். முன்னதாக சிந்து வெற்றிக்கான அவரது பயிற்சியாளர், கோபிசந்த் முடி காணிக்கை செலுத்தினார். முன்னதாக ஏழுமலையான் கோயிலின் ரங்கநாதர் மண்டபம் அருகே உள்ள துலாபாரத்தில் பி.வி.சிந்து, தனது எடைக்கு எடையாக வெல்லம் காணிக்கையாக செலுத்தினர்.

  • வியட்நாம் புத்த கோயிலில் மோடி….

    அரசு முறை பயணமாக வியட்நாம் சென்ற மோடி, தலைநகர் ஹனாயில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புத்த கோயிலுக்கு சென்று வழிபட்டார். குவான் சு பகோடா புத்த கோயிலுக்கு சென்ற மோடிக்கு புத்த துறவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மோடி, அகர்பத்தி ஏற்றி புத்த முறைப்படி வழிபாடு நடத்தினார். பின்னர், அங்கு குழுமியிருந்த புத்த துறவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் புத்த துறவிகளை இந்தியாவிற்கு வரும்படி மோடி அழைப்பு விடுத்துள்ளார் .

  • திருப்பதி கோவிலில் முகேஷ் அம்பானி…

    ரிலையன்ஸ் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ 4ஜி திட்டம் வெற்றி பெற முகேஷ் அம்பானி திருமலையானை உருக்கமாக வேண்டினார்.
    ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்தார். பின்னர் கார் மூலம் திருமலைக்கு பத்மாவதி விருந்தினர் மாளிக்கைக்கு வந்து அங்கு ஓய்வெடுத்தார்.
    பின்னர் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் உருக்கமாக சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்பு பிரசாதம் அளித்தனர்.

    பின்னர் முகேஷ் அம்பானி கூறுகையில், புதிதாக ரிலையன்ஸ் சார்பில் ஜியோ சிம்கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்ததாக கூறினார்

  • சென்னையில் 2500 விநாயகர் சிலைகள் ….

    சென்னையில் 2 ஆயிரத்து 500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

    வரும் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் 2 ஆயிரத்து 500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    மேலும் விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்….

    ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும் என்பது ஐதீகம்.
    கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதி என்று சொல்கின்றோம். எனவே, அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.
    எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் ‘மூல கணபதி’ என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.
    அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் ஆவணி மாதம். அந்த திருநாள்ஆவணி மாதம் 20ம் தேதி திங்கள் கிழமை (05.09.2016) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
    வீட்டிலும் சிலை வைத்து வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.

  • மீண்டும் தொடங்கியது திருத்தணி முருகன் கோயிலில் ராஜகோபுர கட்டுமானப் பணி…

    திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜகோபுர கட்டுமானப் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாகப் போற்றப்படுவது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில். திருத்தணி கோயிலில் ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், 2011-இல் பல்வேறு காரணங்களால் ராஜகோபுர கட்டுமானப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன.
    இந்நிலையில், ராஜகோபுரத்தைக் கட்டி முடிக்க தமிழக அரசு ரூ. 1.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    இதையடுத்து, ராஜகோபுரம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கின. இதையொட்டி, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
    ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • பழநி கோயிலில் இலவசமாக பஞ்சாமிர்த பிரசாதம்… அரசு அறிவிப்பு

    பழநி கோயிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு 20 கிராம் பஞ்சாமிர்த பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார்.

    சட்டப்பேரவையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் …

    அவர் வெளியிட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளை தற்போது பார்க்கலாம்…
    • சென்னை தண்டையார் பேட்டை முருகன் கோயில், அகஸ்தீஸ்வரர் மற்றும் சேனி யம்மன் கோயில்களில் ரூ.59 லட்சத்தில் திருப்பணிகள் மேற் கொள்ளப்படும்.
    • பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் தினமும் மாலை சாயரட்சை பூஜை முடிந்தபிறகு 2 ஆயிரம் பக்தர்களுக்கு தொன்னையில் 20 கிராம் பஞ்சாமிர்த பிரசாதம் இலவசமாக வழங்கப்படும்.
    • திருவண்ணாமலை ஏரி குப்பம் சனீஸ்வர பகவான் கோயிலுக்கு பிரகார மண்டபம்,
    • பைங்கினூர் ஆதிபராசக்தி கோயில் திருமண மண்டப பணிகள்,
    • ஆரணி கைலாசநாதர் கோயி லுக்கு பிரகார மண்டப புனர மைப்பு,
    • புதுக்கோட்டை நார்த்தா மலை முத்துமாரியம்மன் கோயில், ஜம்புகேஸ்வரர் கோயில்களுக்கு மராமத்து பணிகள் ஆகியவை ரூ.1.16 கோடியில் மேற்கொள்ளப்படும்.
    • மேல்மலையனூர் அங்காள அம்மன் கோயிலில் ரூ.14 லட்சத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
    • திருப்பூர் மேட்டுப்பாளையம் நாட்டராயசாமி, காஞ்சிபுரம் திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் களில் முடிகாணிக்கை மண் டபங்கள் ரூ.32.20 லட்சத்தில் கட்டப்படும்.
    • சேலம் கஞ்சமலை சித்தேஸ் வர சுவாமி,
    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி,
    • சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோயில் களில் பூஜை பொருட்கள் விற் பனை கடைகள், வணிக கட்டிடங் கள் கட்டப்படும்.
    • சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை பராமரிப்புக்கு ரூ.14 லட்சத்தில் கொட்டகை அமைக்கப்படும்.
    • திருவாரூர் கோணேஸ்வர சுவாமி,
    • வேலூர் ரங்காபுரம் கோதண்டராமர்,
    • திருவாலி லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்களின் குளங்கள் ரூ.28.20 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்படும்.
    • பெரும்பாலான கோயில் களில் நந்தவனம் அமைத்து பரா மரிக்கும் நிலை குறைந்துவிட்டது. எனவே, இடவசதியுள்ள 51 கோயில்களில் ரூ.2.55 கோடி யில் புதிய நந்தவனங்கள் அமைக் கப்படும்.
    • ஏற்கெனவே உள்ள நந்தவனங்கள் சீரமைக்கப் படும் என்பது உள்ளிட்ட 16 அறிவிப்பு களை அமைச்சர் வெளியிட்டார்.

  • மரியாளின் பிறப்புப் பெருவிழா….

    தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாளின் பிறப்புப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பூண்டி மாதா திருஉருவம் பொறிக்கப்பட்ட கொடியைப் பக்தர்கள் பேராலயத்தைச் சுற்றி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, சிறு தேரை பக்தர்கள் தூக்கி வந்தனர். பிறகு, கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் எப். அந்தோணிசாமி கொடியைப் புனிதம் செய்து ஏற்றினார்.

    இதில், பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் சூசை, சதீஷ் ஜேசுதாஸ், ஆன்மிக தந்தைகள் மாசிலாமணி, அருளானந்தம் மற்றும் சுற்றுவட்டார பங்குத் தந்தைகள் பங்கேற்றனர். ஆயர் தலைமையில் மரியாள் – தூய ஆவியின் கோயில் என்ற தலைப்பில் திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாள்களில் சிறப்பு திருப்பலியும், சிறு தேர் பவனியும் நடைபெறவுள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி செப்டம்பர் 8ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது.

  • திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் தேரோட்டம்

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித்திருவிழா பத்தாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். பத்தாம் நாளான புதன் கிழமை காலை தேர்திருவிழா நடைபெற்றது.

    திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
    பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடிக்க காலை 6.05 மணிக்கு பிள்ளையார் ரதம் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.35 மணிக்கு நிலைக்கு வந்தது.

    தொடர்ந்து காலை 6.40 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் பெரிய தேரில் புறப்பட்டு, வீதி உலா வந்து காலை 7.35 மணிக்கு நிலைக்கு வந்தது.
    அதன்பின்னர் காலை 7.45 மணிக்கு அம்மன் தேர் திருவீதி வலம் வந்து 8.10 மணிக்கு நிலையினை சேர்ந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.