Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • ஓணம் பண்டிகை கொண்டாட்டம்…..

    ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

    மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்கின்றனர். இந்த நாட்களில் கேரளாவில் பாரம்பரிய படகு போட்டியும் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும் நடைபெறும்.ஓணம் பண்டிகையின் நிறைவு நாளில், அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்கின்றனர். அவற்றில் அடை, அவியல், அடைபிரதமன், பால் பாயசம், காலன், ஓலன், தோரன், இஞ்சி புளி, எரிசேரி, மிளகாய் வற்றல் மிகவும் பிரபலமானவை.

  • மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம்…

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருபகுதியாக திருக்கோவிலில் மீனாட்சிநாயக்கர் மண்டபத்தில் பாகனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் நடந்தது.

    அதன்பிறகு சுவாமி, அம்மன் முன்னிலையில் பாகனுக்கு அங்கம் வெட்டிய லீலையும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. பின்னர் தங்க சப்பரத்தில் சுவாமி, அம்மன் ஆகியோர் ஆவணி மூல வீதி களில் உலா வந்தனர். மாலையில் கோவிலில் உள்ள யானை மகால் முன்பு திருஞான சம்பந்தர் எழுந்தருளினார். அவர் முன்பு சைவ சமய ஸ்தாபித்த லீலை ஓதுவார்களால் பாடப்பெற்றது.

    இன்று காலை சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து ஆவணி வீதி, மேலமாசி வீதி வழியாக இம்மையிலும் நன்மை தருவார் கோவிலை அடைந்தனர். அங்கு வளையல் விற்ற லீலை நடந்தது. தொடர்ந்து சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

  • ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ர உற்சவம்….

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் செப்டம்பர் 13 ஆம் தேதி பவித்ர உற்சவம் தொடங்குகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு பவித்ர உற்சவம் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடக்கிறது.
    இந்த உற்சவ நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் கோவில் கொடிமரத்துக்கு மேற்கில் உள்ள பவித்ர உற்சவம் மண்டபத்துக்கு வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
    உற்சவத்தின் முதல் நாளான வருகிற 13-ந்தேதி நம் பெருமாள் மூலஸ்தனத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு யாக சாலைக்கு 9.45 மணிக்கு வந்து சேர்கிறார். அங்கு சிறப்பு திருவாராதனம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அன்றிரவு 10 மணிக்கு யாக சாலையில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    2-ம் நாளான 14-ந்தேதி பிற்பகலில் மூலவர் பெரிய பெருமாளுக்கு அங்கோபாங்க எனப்படும் பூச்சாண்டி சேவை நடக்கிறது. இதற்காக மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், உப யநாச்சியார் ஆகியோர் மீது முற்றிலும் நூலினால் அங்கோபாங்க அலங்காரம் செய்யப்படுகிறது.

    அதன்பின் நம்பெருமாள் இரவு 8 மணிக்கு மூலஸ்தா னத்தில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்தக்கு வருகிறார். நம்பெருமாள் அங்கிருந்தபடியே பக்தர்களுக்கு காட்சியளித்த பின்னர் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானத்துக்கு 10.15 மணிக்கு சென்றடைகிறார்.

    விழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார். உற்சவ காலங்களில் தினமும் மாலையில் நம்பெருமாள் பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

  • ஆந்திரவில் பின்தங்கிய வகுப்பினருக்கு திவ்ய தரிசன சுற்றுலா….

    பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களை வாரம் ஒருமுறை திவ்யதரிசன சுற்றுலா அழைத்துச் செல்ல ஆந்திர அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் வாழும் எஸ்சி, எஸ்டி, மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களை ஸ்ரீசைலம், திருமலை, விஜயவாடா, மங்களகிரி உள்ளிட்ட கோயில்களுக்கு இலவச சுற்றுலா அழைத்து செல்ல அம்மாநில அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
    இந்த சுற்றுலாவுக்காக ஒரு மண்டலத்தில் 200 முதல் 250 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, தரிசனம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஆந்திர அறநிலையத்துறை ஏற்க உள்ளது. இதற்கு மக்களை எவ்வாறு தேர்வு செய்வது என அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    இம்மாத இறுதிக்குள் இந்த சுற்றுலாத் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • திருநள்ளாறு கோயிலில் புதிய இந்திர விமானம்…

    திருநள்ளாறு கோயிலில் புதிதாக தயாரிக்கப்பட்ட இந்திர விமானத்தில், சனீஸ்வரருக்கான சப்பரத்தின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் உள்ள பழைமையான இந்திர விமானம் காரைக்கால் உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருவிழாவின்போது சுவாமி வீதியுலாவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால், திருநள்ளாறு கோயிலுக்கென்று தனியாக இந்திர விமானம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டது. நன்கொடை மூலம் ரூ.11 லட்சத்தில் புதிதாக இந்திர விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    புதிய இந்திர விமானம் தரைமட்டத்திலிருந்து 15 அடி உயரம், 6.5 அடி அகலத்தில் பர்மா தேக்கு மரத்தால் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 3.5 டன் ஆகும். மேலும், கோயில் நிர்வாகத்தின் செலவில் பெல் நிறுவனத்தின் மூலம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் வீதியுலாவுக்கென இரும்பால் சப்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

  • ஓணம் பண்டிகைக்கு சென்னையில் உள்ளூர் விடுமுறை ….

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 14-ம் தேதி சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுள்ளது.
    உள்ளூர் விடுமுறைக்குப் பதில் அக்டோபர் 8-ம்தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான 14-ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

  • திருப்பதியில் பிரம்மோற்சவம்…

    திருப்பதியில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பிரம்மோற்சவமும், 7-ந் தேதி கருட சேவையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படும்.
    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. 3-ந்தேதி மாலை 4 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.
    4-ந்தேதி காலை சின்ன சேஷ வாகனமும், இரவு அன்ன பறவை வாகனமும், 5-ந்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்து பந்தல், 6-ந் தேதி கல்ப விருட்சம் வாகனமும், இரவு சர்வபூபாள வாகனம்.
    7-ந்தேதி காலை மோகினி அவதாரம் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு கருட சேவையும் நடக்கிறது.
    8-ந் தேதி அனுமந்தம் வாகனம், மாலையில் தங்க ரதம், இரவு யானை வாகனமும், 9-ந் தேதி காலை சூர்யபிரபை, மாலை சந்திர பிரபை, 10-ந் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது.
    கடைசி நாளான 11-ந் தேதி காலை தீர்த்தவாரியும், மாலையில் கொடி இறக்கமும், இரவு தங்க பல்லக்கில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.
    மாட வீதிகளில் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி, உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
    பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் தீவிரமாக செய்து வருகிறது

  • திருப்பதியில் கோடிக்கணக்கான பக்தர்கள் தலைமுடி காணிக்கை

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 1.25 கோடி பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துவதாக திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவில் 6 அரங்குகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக தற்போது ஒரு அரங்கு பக்தர்களுக்கு காற்றோட்டமாகவும் பிற வசதிகள் நிறைந்ததாகவும் புனரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய, கோயில் தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 1.25 கோடி பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துவதாகவும், இதில், 1.10 கோடி பேர் மொட்டை அடித்தும், மீதமுள்ள பெண் பக்தர்கள் தங்களது தலைமுடியின் கொனை முடியை காணிக்கையாக செலுத்துவதாகவும் கூறினார். அதன்படி, தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தை சுத்தமாகவும், காற்றோட்டமாகவும், தொற்று நோய்கள் பரவாத வகையிலும் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக தெரிவித்த அவர், அதில் தற்போது முதல் கட்டமாக 6 அரங்கில் ஒரு அரங்கு புனரமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். இதேபோல், அனைத்து அரங்குகளும் புனரமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
    மேலும், சவர தொழிலாளர்களுக்கு தொற்று நோய்கள் பரவாத வகையில் மருத்துவ சோதனை நடத்தப்படுவதாகவும், 282 சவரத்தொழிலாளர்கள் நிரந்தரமாக பணி செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதில், 1200 ஒப்பந்த சவர தொழிலாளர்களுக்கு ஒரு மொட்டைக்கு 7 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருவதாக கூறிய சாம்பசிவ ராவ். தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காக காலை 8 மணி முதல் 12 மணி வரையில் தான் அதிகளவிலான பக்தர்கள் வருவதாக கூறினார். வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக கூடுதலாக சவர தொழிலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  • பெரிய தேர் பவனி… வேளாங்கண்ணியில் குவியும் பக்தர்கள்

    வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
    இந்த ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.
    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதா பாடல்களை பாடிய படி புனிதப் பாதையில் சென்றனர்.

    தொடர்ந்து 7 ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடக்கிறது.

    விண்மீன் ஆலயத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்று இரவு பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாகண்ணியில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

  • சிறுவாபுரி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ளது பிரசித்திப்பெற்ற பாலசுப்பிரமணியன் கோயில். இங்கு சென்னை, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வள்ளி- மணவாளர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது.
    இதில் திருமண வரம் வேண்டி பங்கேற்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் உற்சவருக்கு போடப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன. வள்ளிக்கு அணிவித்த மாலையை ஆண்களும், முருகனுக்கு அணிவித்த மாலையை பெண்களும் அணிந்து கொண்டனர்.
    தொடர்ந்து அவர்கள் உற்சவர் வள்ளி மணவாளருடன் கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.