பக்தர்களின் வசதிக்காக திருமலை ஏழுமலையான் கோவிலில், இரண்டாவது உண்டியலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை உண்டியலில் காணிக்கையாக கிடைக்கிறது.
உண்டியல் மூலம் ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய்; 300 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கிடைக்கின்றன. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் போது, உண்டியலில் காணிக்கை செலுத்த வெகுநேரம் காத்திருக்க நேரிடுகிறது.எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்களின் வசதிக்ககாக கோவிலுக்குள் மற்றொரு உண்டியலை ஏற்படுத்த, ஆகம பண்டிதர்களிடம் தேவஸ்தானம் ஆலோசனை கேட்டது. அதற்கு, அவர்கள் அனுமதி வழங்கியதால், தற்போது உள்ள உண்டியல் அருகே, இரண்டாவது புதிய உண்டியலை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.
Category: ஆன்மீக செய்திகள்
ஆன்மீக செய்திகள்
-
ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்த இரண்டாவது உண்டியல்
-
புரட்டாசி ….பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்
தமிழ் மாதமான புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை அனைத்துப் பெருமாள் திருக்கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவது இந்துக்களின் மரபு. புரட்டாசி மாதமானது சனிக்கிழமை பிறந்திருப்பதால் பெருமாளை தரிசிப்பது மிகுந்த விஷேசமாக பக்தர்கள் கருதுகின்றனர். அதன்படி சனிக்கிழமை அதிகாலை பெருமாள் திருக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.
பக்தர்கள் துளசி, அருகம்புலம் மாலைகளையும், பூக்களையும் வாங்கி பூஜை செய்தனர். பூஜைக்குப் பின்னர் அகத்திக்கீரை வாங்கி பசுக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
பக்தர்கள் நெரிசலை தீர்த்து அவர்களை முறைப்படுத்திச் செல்ல கம்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதில் வரிசையாக சென்றனர். -
சிதம்பரம் கோயிலில் ருத்ர ஆவர்த்தி ஹோமம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ருத்ர ஆவர்த்தி ஹோமம் விமர்சையாக நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை, அமைதி வேண்டி, லட்ச ருத்ர பாராயணம் மற்றும் கோடி அர்ச்சனை ஜூலை மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது.இதனை அடுத்து தினமும் 100 தீட்சிதர்கள் பங்கேற்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ருத்ர மந்திரத்தை 22 முறை பாராயணம் செய்தனர். வில்வ அர்ச்சனையும் நடைபெற்றது.
நடராஜர் சன்னிதியில் பணம், தங்க நகைகள் வைக்கப்பட்டு தனபூஜை நடைபெற்றது. செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ரநாம ஹோமம், ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ஹோமத்தையொட்டி கோயிலின் பொற்கூரை போன்ற வடிவிலான பிரமாண்ட யாகசாலையில் 9 யாக குண்டங்கள் அமைத்து, நடராஜமூர்த்திக்கு 1,008 கலசங்கள், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கு 1,008 கலசங்கள் வீதம் மொத்தம் 2,016 கலசங்கள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு குண்டத்துக்கும் 12 ஆச்சாரியர்கள் ருத்ர மந்திரத்தைக் கூறி ஹோமம் செய்தனர். மாலையில் ஆவர்த்தி ஹோமம் நிறைவடைந்தது.இதையடுத்து யாக சாலையிலிருந்து கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஆவணி மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
-
திருச்சானூரில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது….
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில், பக்தர்கள், கோயில் ஊழியர்களால் ஏற்பட்ட தோஷங்களை களையவும், குறைகளை நிவர்த்தி செய்யவும் ஆண்டுதோறும் வருடாந்திர பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
அதன்படி, செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் பவித்ரோற்சவம் தொடங்கியது. காலை பத்மாவதி தாயாருக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் தாயார் முன்னிலையில் பல வண்ண பட்டு நூலிழைகளால் ஆன பவித்ர மாலைகளை அர்ச்சகர்கள் பிரதிஷ்டை செய்தனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். -
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் சிறப்பு வழிபாடு….
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணப்பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளில், உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி அம்மன் சிவப்பு நிறப்பட்டு அணிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். தொடர்ந்து 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், தேன், இளநீர், பால், தயிர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பகவதிஅம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.இதனை காண கேரள பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் நிர்மால்ய பூஜை, விசுவரூப தரிசனம், அபிஷேகம், தீபாராதனை போன்றவைகள் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, நிவேத்ய பூஜை, உஷபூஜை, உஷ தீபாராதனை போன்றவைகளும் மதியம் உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை, அன்னதானம் போன்றவைகளும் நடந்தது.
14 ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டும் 15 ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தை யட்டி பச்சை நிறப்பட்டும் பகவதி அம்மனுக்கு ஓணக்கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ஏராளமான கேரள மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். -
முதலமைச்சர் ஜெயலலிதா ஓணம் பண்டிகை வாழ்த்து….
பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சகோதரத்துடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தியில்… திருவோணத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு வண்ணப் பூக்களால் அழகுற அத்தப்பூ கோலங்கள் இட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை கொண்ட ஓணம் விருந்துண்டு, புலிக்களி, கைகொட்டுக்களி போன்ற நடனங்களை ஆடி, கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள் என கூறியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, திருவோணத் திருநாளான இந்நன்னாளில், ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
இதேபோல ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளம் பேசும் மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்துக் கூறியுள்ளனர். -
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருபவித்ர உற்சவம்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் சன்னிதியில் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் திருபவித்ர உற்சவம் நடக்கிறது. இன்று துவங்கும் இந்த உற்சவம் ஏழு நாட்கள் நடக்கும். இந்த விழாவை தொடர்ந்து, 19ந்தேதி கருடசேவை நடக்கிறது.
இதையொட்டி செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வேதபிரான் பட்டர் அனந்தராமகிருஷ்ணன் திருமாளிகையிலிருந்து மஞ்சள்நுால் மாலைகள் வடபத்ரசயனர் சன்னிதிக்கு கொண்டு வரபட்டு, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுக்கு அணிவிக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
தொடர்ந்து தினமும் மாலை 4 மணிக்குமேல் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் எழுந்தருளி, நவகலச பூஜை செய்யப்படுகிறது. 19ந்தேதி கருடசேவையும் நடக்கிறது. -
காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்ய…
காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், விஐபி-க்களுக்கான சிறப்பு ராகு – கேது பரிகார பூஜையை கோயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
ராகு-கேது பரிகார பூஜையை செய்ய பிரசித்திப் பெற்றது காளஹஸ்தீஸ்வரர் கோயில். தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் ரூ.300, ரூ.750, ரூ.1500, ரூ.2000 என 4 விதமான பூஜை டிக்கெட்டுகளை நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 11 முதல் கோயில் நிர்வாகம் புதிதாக ரூ. 5 ஆயிரம் டிக்கெட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், விஐபி-க்கள் பங்குகொள்ளலாம்.
இந்த டிக்கெட்டுகளைப் பெற்றவர்கள் சஹஸ்ர லிங்கேஸ்வர சுவாமி மண்டபத்தில் பரிகார பூஜைகளை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. -
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு….
ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை செப்டம்பர் 13 ஆம் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.இந்த ஆண்டு கேரளாவில் திருவோணப் பண்டிகை செப்டம்பர் 14–ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால், சபரிமலை அய்யப்பன் கோவிலில் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில், மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்கிறார்.
13–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை ஓணம் சிறப்பு பூஜையும், 16–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை புரட்டாசி மாத பூஜையும் நடைபெறுகிறது.
-
திருமலை உண்டியல் காணிக்கை ரூ.2.60 கோடி….
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 2.60 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 24 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதேபோல மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூ.300, ரூ.50க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெள்ளி கிழமை முதல் சனிக்கிழமை முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.2.60 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.