Category: சித்தர்கள்

சித்தர்கள்

  • பத்து இடங்களில் லயமான பதஞ்சலி முனிவர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பத்து தலங்களில் சமாதியானவர் பதஞ்சலி முனிவர் என்கின்றன
    வடநாட்டு 
    யோக நூல்கள்.

    இது சாத்தியமா என்போருக்கு 
    சத்தியம் என்கின்றன சித்தர் நூல்கள்.

    சித்தர் பெருமான்களுக்கு எல்லாமே சாத்தியம்.

    வியக்கத்தகு சக்திகள் போற்றத்தகு முத்திகள் 
    வணங்கத்தகு சித்திகள் 
    சாத்தியமே.

    இறைநிலை அடைந்தவர்கள்.,. இறையாய் இருப்பவர்கள்.,. சித்தர்கள்.
    அவர்கட்கு 
    எதுவுமே சாத்தியம்.

    அப்படி ஓர்
    அசாத்திய சித்தரே  யோக – ஞான முனிவர் பதஞ்சலி முனிவர்.

    அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் பிறந்த 
    அருந்தவப் புதல்வனே பதஞ்சலி மகரிஷி.

    ஆதிசேஷனின் அவதாரம் 
    பதஞ்சலி 
    என புராணம் 
    புகழும்… வணங்கும்.

    ஒரு சமயம் 
    தாருகாவனத்தில் சிவபெருமான் 
    ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருப்பதை ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு 
    ஏகாந்தத்தில் இருந்த விஷ்ணு பிரான்
    கண்டு களித்தார்.

    அக்களிப்பு 
    ஆனந்தக் களிப்பு பரமானந்த களிப்பு.

    பள்ளி கொண்டிருந்த ஸ்ரீமன் நாராயணன் துள்ளித் துள்ளி ரசித்தார்.

    அவர்
    அனந்தசயனம் கொள்ளும்
    ஆனந்த படுக்கையாயிருந்த ஆதிசேஷன் 
    ஆட்டம் தாங்காமல் தவித்தார். தத்தளித்தார்.

    விஷ்ணு பிரானிடம் மெதுவாக கேட்டார்.

    "ஏன்' இந்த துள்ளல்.. என்ன கண்டீர் சுவாமி ?"

    விஷ்ணு பிரான்
    சிவ தாண்டவத்தின் சிலிர்ப்பை விவரிக்க நெகிழ்ந்து போனார் ஆதிசேஷன்.

    சிவதாண்டவம் பார்ப்பது என்பது எவருக்கும் எளிதில் கிட்டாத பேறு.

    தன் பிறவிப்பயன் 
    சிவ நடனம் காண்பதாக இருக்கட்டும் என அப்போதே
    உறுதி பூண்டார் ஆதிசேஷன்.

    இறைவனைக் காண எளிய வழி தவம்.

    அவன் திருநடனம் காணவும் அதுவே வழி.
    சிவ விதி.

    கயிலாயத்திலேயே நீண்ட நெடிய தவம்.

    ஆதிசேஷன் முன்பு பரமன் தோன்றினார்.

    " அப்பனே…
    திருநடனம் காண தில்லைக்குப்  போ..

    உன்னோடு வியாக்ரமரும் உடனிருக்க 
    களிநடனம் காண்… களிப்புறு …."

    அப்பன்  சொல்லி  மறைந்தார்.

    அதன் பின்னே ஆதிசேஷனான பதஞ்சலி
    தில்லை வந்தார்.

    அங்கு 
    மூல நாதரின்
    பக்தராய் வலம் 
    வந்து கொண்டிருந்த வியாக்ரபாதருடன் சிவதாண்டவம் 
    கண்டு மகிழ்ந்தார். பிறவிப்பயன் எய்தி
    மிக மகிழ்ந்தார்.

    திருமூலரும் இவ்விருவருடன் திருநடனம் கண்டதாக குறிப்பொன்று இருக்கிறது.

    பரமனின் பரிந்துரையால்
    தில்லை வந்த பதஞ்சலியாருக்கு தில்லையம்பதி பிடித்துப்போயிற்று.

    தில்லையின் 
    மகிமை அது.

    இறையே விரும்பும் திருத்தலம் அல்லவா தில்லை ?

    வாழ்வில் தொல்லை மிகுந்தோருக்கு இல்லை இனி கவலை என அடைக்கலம் தரும் ஆடவல்லானின் அருள்நிறை உறைவிடம் அல்லவா தில்லை. !

    பதஞ்சலி முனிவர் அருளிய
    'பதஞ்சலி யோகம்' ஈடுஇணையற்ற ஞானப் பொக்கிஷம், யோக சூத்திரங்கள் நிரம்பிய 
    அட்சய பாத்திரம், அபூர்வ களஞ்சியம் என
    அகிலம் போற்றும்.

    அந்நூலை சிதம்பரத்தில் இருக்கும்போதுதான் படைத்தார்
    பதஞ்சலி முனிவர்.

    'பதஞ்சலி யோகம் ' என்னும் 
    அந்த பொக்கிஷம்
    உருவான 
    நிகழ்வு
    உணர்ச்சிமிக்கது.

     தில்லையம்பலத்தில்
     மொத்தம்
     ஐந்து சபைகள்.

    அதில் 
    ஒன்று 
    ரஜித சபை.

    ஆயிரம் தூண்கள் 
    கொண்ட மண்டபம்
    அதன் சிறப்பு.

    தில்லைக்கு வந்து 
    தில்லைக்காரராகவே
    மாறிப்போன
    பதஞ்சலி முனிவருக்கு 
    நாளுக்கு நாள்
    சீடர்கள் பெருகினர்.

    அவர்தம் 
    உபதேசங்களுக்கு 
    அவர்கள் ஏங்கினர்.

    பதஞ்சலி முனிவருக்கும்
    தான் உணர்ந்ததை 
    எளிமையாய் 
    சீடர்களுக்குத் தர 
    ஆசைதான்.

    ஆனால் 
    அதில் ஒரு
    பிரச்சனை இருந்தது.

    ஆதிசேஷனான 
    பதஞ்சலியின் 
    மூச்சுக் காற்று 
    பட்டாலே 
    எதிரில் உள்ளோர் 
    விஷம் தீண்டியவராய் 
    மரணித்துப் போவர்.

    அவர் என்ன 
    சாதாரண பாம்பா ?

    ஆதிசேஷன் 
    என்ற 
    விசேஷ பாம்பு !
    விஷம் வீசும் பாம்பு !!

     யோசித்தார்.

     "இடையில் 
    ஓர் 
    இரும்புத்திரை
    இட்டால் ! "

    பிரச்சினை 
    தீர்ந்தது.

    ஆயிரங்கால்
    மண்டபத்தில் 
    ஒருபுறம் 
    அமர்ந்து 
    இடையே
    இரும்புத்திரை
    இட்டு 
    மறுபுறம் 
    மாணாக்கர்களை 
    அமரச்செய்து
    தான் 
    ஏற்கனவே 
    எழுதி இருந்த
    'வியாக்கரண 
    குத்திரத்தை '
    உபதேசிக்க 
    ஆரம்பித்தார்.

    கற்க வந்த
    சீடர்களுக்கு 
    ஓர் உபதேசம்
    கண்டிப்பாய்
    இருந்தது.

    யாரும்
    திரை விலக்கி
    குருவைப்
    பார்க்க 
    முயற்சிக்க கூடாது .

    அதே சமயத்தில்
    யாரும் 
    ஒரு நாள் கூட
    வகுப்புக்கு வராமல்
    இருந்து விடக் கூடாது  
    – இது 
     உப உபதேசம்.

    பதஞ்சலியின் 
    வகுப்பு 
    சீரோடும்
    சிறப்போடும் 
    உபதேச மொழிகளால் 
    பேரோடும் 
    புகழோடும் 
    தவழ்ந்து கொண்டிருந்தது.

    பார்க்கத் தடை
    என்கிற போது 
    பார்க்க வேண்டும் 
    என்கிற 
    துடிப்பு 
    இயல்புதானே ?

    அத்துடிப்பு 
    பல சீடர்களுக்கு 
    இருந்தது நிஜம்.

    புஜங்கள் துடிக்க
    பொறுத்திருந்தனர். கண்கள் வியக்க காத்திருந்தனர்.

    எப்படியாவது 
    என்றாவது 
    திரை விலக்கி 
    குருவைத் 
    தரிசிக்க 
    காத்திருந்தனர்.

     பாவம் ….
    அவர்களுக்குத்
    தெரியாது..!

    திரை விலகினால் 
    குருவான 
    ஆதிசேஷனின்
    அனல்மிகு
    மூச்சுக்காற்று
    விஷ மிகுதியால் 
    சீடர்களை 
    வதைத்து விடும்..
    சிதைத்துவிடும் …
    எரித்து
    சாம்பலாக்கி 
    விடும் என்பது .

    சீடர்களில் 
    ஒருவன் 
    துடிப்புமிக்கவன்.

     ஒரு நாள் –
    அன்று வகுப்பில்
    ஆயிரம் சீடர் 
    அமர்ந்திருந்தனர்.

    உரத்தகுரலில் 
    உபதேசம்
    உள்ளிருந்து வந்து 
    கொண்டிருந்தது.

    ஆர்வமிகுதியால்
    ஒரு சீடன்
    இரும்புத்திரையை 
    இழுத்தான்.

    உள்ளே 
    பாம்பு ரூபமாய்
    விஸ்வரூபமாய் 
    ஆதிசேஷனாய்
    ஆயிரம் தலைகளோடு 
    காட்சியளித்தார் 
    குரு பதஞ்சலியார் .

    அடுத்த நொடியே 
    விஷக்காற்று 
    விரைந்து 
    விரவி…..
    அத்தனை சீடர்களும்
    கணப்பொழுதில் 
    மாண்டனர் 

    ஆயிரம் கால் 
    மண்டபத்தில்
    ஆயிரம் பிணங்கள்.

    அதிர்ச்சியில் இருந்து 
    மீளாமல் 
    ஆதிசேஷனான
    பதஞ்சலி மகரிஷி 
    பரிதவித்தார்.

    கெளட பாதர்
    என்ற சீடர்
    மட்டும்
    அன்று 
    வகுப்புக்கு 
    மட்டம் 
    போட்டுவிட்டு 
    வெளியே 
    சென்றிருந்ததால் 
    உயிர்
    தப்பினார்.

    கற்கும் காலத்தில்
    பயில
    வராமல் 
    வேறெங்கும் 
    போகக் கூடாது 
    என 
    கட்டாய விதி இருந்தும் 
    விதி வசத்தால் 
    வெளியே 
    இருந்ததால் 
    மாய்ந்து போகாமல்
    தப்பித்தார்
    கௌடபாதர்.

    பதஞ்சலியின் 
    கோபம் 
    அவர் மீது 
    பாயவில்லை.

    ஒரு சீடனாவது 
    உயிர் பிழைத்து 
    இருக்கிறாரே
    என
    மகிழ்வு கொண்டார்.

    " உன் மீது 
    கோபப்பட மாட்டேன்" 
    என கௌடபாதரை 
    அழைத்து 
    சகல யோக கலைகளையும் அனைத்து ஞானங்களையும்
    உபதேசித்தார்.

    தான் கற்றிருந்த 
    கைமண்ணளவை
    தவ ஆற்றலால் 
    உலகளவாக்கி 
    உபதேசித்தார்.

    மாணவருக்குப் 
    பதஞ்சலி சித்தர்
    விளக்கமாய் 
    உபதேசித்த 
    'வியாக்கரண சூத்திரமே '
    பதஞ்சலி யோகம் 
    என்னும் 
    ஒப்பற்ற 
    யோக நூல்.

    கௌடபாதரின் 
    சீடரே 
    கோவிந்த பகவத் 
    பாதாள்.

    பலரும் 
    கேட்டிராத 
    இப்பெயர் 
    சாதாரணமான ஒருவருடையது
    அல்ல.

    ஒப்புயர்வற்ற
    ஞானாசிரியர் 
    ஆதிசங்கரரின்
    குருவே 
    கோவிந்த பகவத் 
    பாதாள். 

    என்ன பேறு !
    எவருக்கு கிடைக்கும் 
    இந்த ஞானச் சீரு !!

    கவனியுங்கள்…

    ஆதி சித்தர் சிவபெருமானின் சீடர் தட்சணாமூர்த்தி.
    அவரின் சீடர் நந்திஸ்வரர்.

    நந்தீஸ்வரரின் சீடர் பதஞ்சலி முனிவர்.
    அவரின் சீடர் கௌடபாதர்.

    கெளட பாதரின் சீடர் கோவிந்த பகவத் பாதாள்.
    அவன் சீடர் 
    அகிலம் வணங்கும்
    ஆதிசங்கரர்.

    என்னே 
    குரு வர்க்கம்…!!!

    வடநாட்டவர்
    என கருதப்படும் பதஞ்சலியார்
    நீண்ட காலம் வாழ்ந்ததும்
    நிறைவடைந்ததும் தமிழ்நாட்டில் தான்.

    பதஞ்சலியார் ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி ஆலயத்தில்
    லயமாகி இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    திருப்பட்டூரில் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 
    சமாதி நிலையில் இருந்தபடி
    அங்கு அமர்ந்து
    தியானிப்போரை அருள் வெள்ளத்தில்
    திக்குமுக்காட வைக்கிறார்.

  • சித்தர்களின் கோபமும் சாபமும்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பொதுவாக 
    சித்தர்கள் கோபக்காரர்கள். சாபக்காரர்கள் கூட.

    சட்டென கோபம் வரும். பட்டென சாபமிடுவார்கள்.

    புலத்தியரும் அகத்தியரும் கருவூராரும் கோபப்படுவதிலும் 
    சாபம் விடுவதிலும் மற்ற சித்தர்களை விஞ்சியவர்.

    அவர்கள் சாபம் குடும்பத்தாரை மட்டுமல்ல …
    தெய்வத்தைக் கூட விட்டுவைப்பதில்லை.

    இம்மூன்று
    கோபக்கார சித்தர்களையும் அவர்கள் சாபக்காரர்களாக இருந்ததையும் 
    சாபம் பலித்த நிகழ்வுகளையும் கொஞ்சம் 
    தரிசிப்போமா ?

    முதலில் புலத்தியர். 

    சித்தர் புலத்தியர் 
    பற்றி 
    ஒரு சிறு அறிமுகம்.

    அகத்தியர் பெருமானின் 
    அகம் நிறை சீடர் புலத்தியர்.

    உலகம் சமநிலை அடைய 
    அகத்தியர் 
    தென்னாடு வருகையில் 
    அவரோடு 
    உடன் வந்தவர் புலத்தியர்.

    அகத்தியர் பெருமானுக்கு 
    மச்சான் கூட,

    ஆம்…

    புலத்தியரின் தங்கை உலோபமுத்திரையைத் தான் 
    மணந்தார் அகத்தியர்.

    திரணபந்து 
    என்றொரு 
    அறம் செறிந்த மன்னன்.

    அவனது 
    தவச் சாலையில் 
    தங்கி 
    புலத்தியர் தவம் இருந்து வந்தார்.

    அரண்மனைப் பெண்கள் 
    அங்கு அடிக்கடி வந்து ஆடியும் பாடியும் அமைதி கலைத்தனர்.

    நீர் விளையாடி கேலியும் கிண்டலுமாய் தவச் சூழலை சிதைத்தனர்.

    இதுவே நாளும் தொடர்ந்தது.

    தவத்திற்கு எழும் தடையால்  எரிச்சலுற்றார் புலத்தியர் பெருமான்.

    கோபமுடன் 
    சாபமும் தந்தார்.

    "இனி என் எதிரில் எவரேனும் பெண்கள் வந்தால் அவர்கள் கர்ப்பம் அடைவார்கள்"

    கடுமையான சாபம்தான்.

    என்ன செய்வது.,?

    இடுபவர் 
    சித்தர் பிரான் ஆயிற்றே…..!

    ஒருநாள்….
    சாபம் குறித்தோ தவமிருக்கும் புலத்தியர் பற்றியோ ஏதுமறியாத 
    திரணபந்துவின் 
    அழகு மகள் 
    ஆவிர்ப்பு.
    அங்கு வந்தாள்.

    புலத்தியர் சாபம் கணப்பொழுதில் பலித்தது.

    அரண்மனைப் பெண்டிரோ
    அரசரின் மகளோ 
    என வித்தியாசம் பார்க்குமா முனிவரின் சாபம் ?

    ஆவிர்ப்பு கர்ப்பமுற்றாள்.

    கண் கலங்கி
    அவள் துடிக்க….
    கருவுற்ற செய்தி மன்னனுக்குப் போய்ச்சேர 
    அவனும் துடிதுடித்தான்.

    புலத்தியரிடம் ஓடிவந்தான் புவியரசன்.

    கெஞ்சினான்.
    நியாயம் கேட்டான். குமுறினான். கதறினான.

    முடிவாக 
    தனது மகளை
    மணம் செய்து 
    கொள்ள வேண்டி நின்றான்.

    ஒரே வழி 
    திருமணம் தான் 
    என்று இறைஞ்சினான்.

    மண்டியிட்ட மன்னனின் 
    தங்க மகளை மாலையிட்டு மணமுடித்தார் புலத்தியர்.

    இல்லறம் எனும் நல்லறம் 
    இரு மகன்களைத் தந்தது.

    அதில் ஒருவன் விசிவரசு.

    விசிவரசு வளர்ந்தான். அரசனானான். குடும்பம் வளர்த்தான். தந்தை ஆனான்.

    அவன் 
    குழந்தைச் செல்வங்கள்
    யார் என அறிந்தால் வியந்துபோவீர்கள்..!

    அவர்கள்
    யார் தெரியுமா…?

    அவர்கள்தான்… ராவணன் கும்பகர்ணன் விபீஷணன் சூர்ப்பனகை.

    அவர்களின்
    தாத்தாவே 
    புலத்தியர்
    என்கிறது இந்நிகழ்வை சிலாகிக்கும் 
    ஒரு புராணம்.

    இன்னொரு நிகழ்வு.

    ஒருநாள் 
    தாயார் சரஸ்வதியைப் பார்க்கப் போனார்.

    முப்பெரும் தேவியரில் ஒருவரான சாட்சாத்
    சரஸ்வதி தேவி தான் 

    மகனை ஆசையோடும் வாஞ்சையோடும் இல்லாமல் 
    ஏனோ தானோ 
    என்று வரவேற்றாள் கலைமகள்.

    சித்தருக்கு
    கோபம் வந்தது. சாபமும் வந்தது.

    " நீ நதியாகி ஓடு…."

    தாய் சரஸ்வதிக்கே சாபம்…..!

    குட்டி 
    பல அடி பாய்ந்தால் தாய் சில அடியாவது சீறாதா..?

    "நீ அரக்கன்
    விபீஷணனாகப் பிறப்பெடுப்பாய்…"

    'இந்தா பிடி…'
    என தாய் விட்ட 
    சாபம் பலித்தது.

    அரக்க வம்சத்தில் விபீஷணனாய்
    உருக் கொண்டது.

    மகன் இட்ட சாபமே சரஸ்வதி நதியாய் புண்ணிய நதியாய்  ஓடிக் கொண்டிருக்கிறாள்
    கலைமகள்.

    சீடர் புலத்தியரை விட
    குரு அகத்தியர்
    கோபத்திலும் சாபத்திலும் 
    பெயர் பெற்றவர்..

    குரு அல்லவா ?

    அகத்தியர் பிறப்பே அலாதியானது. 
    சாபம் தொடர்புடையது.

    ஆம்…
    சாபத்தின் விளைவால் உதித்தவர் தான் அகத்தியர்.

    தாரகன் என்று
    ஓர் அரக்கன்.

    அவனை அழிக்க இந்திரன் 
    வாயு 
    அக்னி
    மூவரும் 
    பூமிக்கு வந்தனர்.

    தாரகனும்
    அரக்கர் கூட்டமும் கடலினுள் ஓடி ஒளிந்தனர்.

    'கடலை வற்றச் செய்.. அரக்கர்களை 
    அழித்து விடலாம்….' அக்னிக்கு ஆணையிட்டான் இந்திரன்.

    ' கடலை 
    வற்றச் செய்தால்
    வளங்கள் அனைத்தும் அழிந்துவிடும் அது வேண்டாம்'
    என சூழல் விஞ்ஞானத்தை மெய்ஞானம் கலந்து மறுத்தார் அக்னி.

    அன்று 
    அரக்கர் கூட்டம் தப்பித்தது.

    ஆனால் அதன்பிறகும் அவர்தம் அட்டகாசம் அதிகரித்தது.

    இம்முறை 
    இந்திரனின் கட்டளை கண்டிப்பாக இருந்தது. 

    " அக்னி….
     நீ வாயுவுடன் கூடி பூமிக்குச் சென்று கும்பத்தில் பிறந்து கடல் நீரைக் குடிக்கக் கடவாய்……" 

    பூமியில் இருவரும் மித்திரர் 
    வருணர்
    என பிறப்பெடுத்தனர்.

    அவர்கள் இளைஞராய் விளைந்திருந்த நேரத்தில் 
    தேவேந்திரனின் சாபத்தால் ஊர்வசி பூமிக்கு வந்தாள்.
    புவனத்தைக் கவரும் கட்டழகியாய் 
    வலம் வந்தாள்.

    இந்திரன் சாபத்தால் பூமிக்கு வந்த மூவருக்குள்ளும் 
    ஓர் ஓட்டம்.
    அது காம ஆட்டம்.

    காம மிகுதியால் ஒருவர் தன் வீரியத்தை குடத்திலிட்டார்.

    இன்னொருவர் தண்ணீரில் விட்டார்.

    குடத்திலிட்டதன் பலன் அகத்தியராக…
    தண்ணீரில் விட்டதன் பலன் விசுவாமித்திரராக  தோற்றம் கண்டது.

    ஆக 
    அகத்தியர் பிறப்பே அலாதியானது.
    சாபம் தொடர்புடையது.

    இன்னொரு நிகழ்வு.

    கைலையில் நடந்த 
    சிவ பார்வதி  திருமணத்தின் போது  உலகைச் சமன்படுத்த இறைவன் ஆணைப்படி தென்திசை பயணமானார் அகத்தியர்.

    வழியில் வந்தது
    விந்திய மலை.

    விந்திய மலை சாதாரண மலையல்ல.

    சூரிய சந்திரர்களையே மேற்கொண்டு செல்லாமல் 
    தடுத்த மலை.

    அகத்தியரின் 
    கோபமும் சாபமும் விந்திய மலைக்கு தெரிந்திருந்ததால் 
    வேறு வழியின்றி அகத்தியரைக் கண்டதும் மெல்ல பணிந்தது விந்தியமலை.

    தாழ்ந்து 
    வழியும் விட்டது.

    பணிந்து இருந்த போதும்
    மலையைப் பார்த்து 
    சாபம் விட்டார் அகத்தியர் கோபமாக.

    பல முறை சூரியனையும் சந்திரனையும் தடுத்ததால் 
    அந்த சாபம்.

    " நான் தென்திசை சென்று 
    திரும்பும் வரையில் இவ்விதம் பணிந்து இருப்பாயாக"
    என்று கூறிச் சென்றார்.

    பின் 
    அகத்தியர் முனி மீண்டும் வடதிசை திரும்பவும் இல்லை.
    விந்தியமலை உயரவும் இல்லை என்பது வரலாறு.

    அகத்தியரின் சாபம் அவருடைய உத்தம மனைவி உலோபமுத்திரையை யும் 
    சீரிய சீடன் தொல்காப்பியரையும் கூட விட்டுவைக்கவில்லை.

    அவர்கள் இருவர் மீதும் சந்தேகம் கொண்டு இருவருக்கும் சொர்க்கம் இல்லை என சாபம் தந்தார்.

    கோபம் கொண்ட தொல்காப்பியர் அகத்தியருக்கும் சொர்க்கம் இல்லை என்று சாபம் விட்டது சுவாரசியமானது.

    அடுத்து கருவூரார்.

    கருவூராரை
    கோபக்கார சித்தர் என்று 
    தைரியமாக அழைக்கலாம்.

    அவர் கோபமும் சாபமும் சித்தர் உலகில் பிரசித்தி பெற்றவை.

    கருவூரார் 
    தேச சஞ்சாரத்தின் போது  திருக்குருகூர் சென்றார்.

    திருக்குருகூர் இன்றைய திருநெல்வேலி.

    நெல்லையப்பர் ஆலயத்திற்கு சென்றார் கருவூரார்.

    வாசலில் நின்றபடி
    " நெல்லையப்பா … நெல்லையப்பா…."
    என உரத்து அழைத்தார்..

    பதில் வரவில்லை.. மீண்டும் இறைவனை அழைத்தார்…

    இது இரண்டாவது முறை….

    மீண்டும் ஒரு முறை அழைத்துப் பார்த்தார்… இது மூன்றாவது முறை.

    கருவூராரின் குரல்தான் எதிரொலித்தது.
    பதில் இல்லை.

    கோபம் வந்தது சித்தருக்கு.
    கூடவே வேகமாய் சாபமும் வந்தது.

    "ப்ச் …
    இங்கு இறைவன் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் பதில் வரவில்லை.

    நெல்லையப்பா….
    நீ இல்லையப்பா….

    கோயில் இல்லாத ஊரில் யாரும் குடியிருக்கக் கூடாது.

    இறைவன் இல்லாத இடத்தில் 
    எருக்கஞ்செடி முளைக்கட்டும்" என்றவாறு வெளியேறினார்.

    அவர் 
    திரும்பி நடப்பதற்குள் ஊரெங்கும் எருக்கஞ்செடி நிறைந்திருந்தன.

    அடுத்து மானூர் போனார்.

    அங்கேயும் ஒரு குழப்பம்.
    அந்த ஊர் வேதியர் கருவூராரை ஆச்சாரமற்றவர் என இகழ்ந்தனர்.

    வந்ததே கோபம் கருவூராருக்கு..!

    ஏற்கனவே நெல்லையப்பர் கோயிலில் 
    இறைவன் 
    பதில் அளிக்காத 
    கோபத்தில் இருந்த கருவூரார்
    கோபத்தின் 
    உச்சிக்கே போனார்.

     'ஊரில் 
    வீடு இல்லாமல் போகட்டும் ' சாபமிட்டார்.

    வீடுகளற்ற
    ஊர் களையிழந்தது.

    இதற்குள் 
    மானூருக்கு நேரடியாகவே
    வந்து விட்டார்
    நெல்லையப்பர்.

    "ஏனப்பா….
    நைவேத்திய நேரத்தில் 
    அழைத்தால்
    எப்படி என்னால் பதில் சொல்ல முடியும் ? யோசித்துப்பார்….

    திரும்ப திருநெல்வேலிக்கு வா" இறைவனே இறைஞ்சினார்.

    தெய்வமே தேடிவந்த தெய்வீக சித்தர் மறுமொழி இன்றி திருநெல்வேலி திரும்பினார்.

    சித்தரின்
    ஒவ்வொரு காலடிக்கும்
    ஒரு பொற்காசு  தோன்ற வைத்து கருவூராரை சிறப்பித்தார் நெல்லையப்பர்.

    சித்தர் மனம் குளிர்ந்தது.
    மறைந்து போயின எருக்கஞ் செடிகள்.

    திருவிடைமருதூரில் நடந்த ஒரு நிகழ்வு.

    அங்கு இறைவனை அழைத்து கருவூரார் குரல் கொடுத்தார்.

    நல்லவேளை நெல்லையப்பர் போல நைவேத்தியத்தில் இறைவன் இருக்கவில்லை.

    அதனால் 
    இறைவன் தலையைச் சிறிது சாய்த்து
    பதில் கொடுத்தார்.

    இன்றும் அங்கு நாதனான நாறும்பூநாதர் 
    தலை சாய்த்தபடி இருப்பதைக் காணலாம். வணங்கலாம்.

    சித்தர்களுக்கெல்லாம் இப்படி
    கோபமும் சாபமும் துடுக்கென வருவது ஏன் 
    என்று யோசித்துப் பார்த்தால்
    ஓர் உண்மை புலப்படும்.

    சித்தர் குலத்தின் தலைவர்
    ஆதி சித்தர்
    சிவபெருமானுக்கு வராத கோபமா…
    கொடுக்காத சாபமா..?

    சிவனை ஒத்தவர்கள் சித்தர் பிரான்கள் அல்லவா….!

    அதனால் தான் சித்தர்களுக்கும் அவ்வளவு கோபம். அத்தனை சாபம்.
     

  • தமிழகத்தில் இராமதேவர், மெக்காவில் யாகோபு

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சித்தர்கள் 
    இனம், மொழி, 
    நாடு, நிறம், 
    சமயம், சாதி கடந்தவர்கள்.

    சமரச சன்மார்க்கமே அவர்கள் சமயம்.
    சித்தர் தத்துவமே 
    அவர்கள் மதம்.

    சாதிகளைக் கடந்து சாதித்தவர்கள் அவர்கள்.
    மதங்களைக் கடந்து போதித்தவர்கள் அவர்கள்.

    ஞானமடைதல் மதங்களுக்கு அப்பாற்பட்டது 
    என உணர்த்தியவர்கள்.

    மதமாற்றம் என்னும் சொல் புழக்கத்தில் இல்லாத காலத்திலேயே 
    மதம் மாறி 
    மக்கள் நலம் பேணியவர்கள் சித்தர்கள். 

    இராமதேவர் 
    என்னும் 
    சித்தர் பிரானே 
    மதமாற்றம் கண்ட 
    முதல் சித்தர்.

    கூடு விட்டு கூடு பாயும் சித்தர்கள் மத்தியில்
    நாடு விட்டு நாடு சென்ற நன்மகான் அவர்.

    அரபு தேசத்தில் அரேபியர்களின் மனங்களை வென்றவர்.

    மருத்துவத் துறையில் அவர் பிதாமகர்.

    சித்த மருத்துவத்தின் சிகரம் தொட்டவர்.
    யுனானி மருத்துவத்திற்கு வழிகாட்டியவர்.

    யுனானியிலும்
    சித்த மருத்துவத்திலும் வல்லவரான 
    இராமதேவர் 
    தமிழிலும் அரபியிலும் வித்தகர்.

    இஸ்லாமிய சூபிகளின் இதயத்தை வென்றவர்.

    நபிகள் நாயகம் எனும் 
    இணையற்ற தீர்க்கதரிசியின் இதயத்தில் நின்றவர்.

    அவர் புகழ்கொடி 
    பாரத தேசத்தில் சதுரகிரியிலும்
    அரபு நாட்டில் 
    மெக்காவிலும் 
    பட்டொளி வீசிப்
    பறந்தபடியே இருக்கும்.

    அவர் பெயர் 
    தமிழ்நாட்டில் 
    இராமதேவர்.
    அரபு தேசத்தில் 
    யாகோபு நாதர்.

    அவர் சரிதம்
    ஒரு திவ்ய சரித்திரம்.

    நாகப்பட்டினம்.

    இராமதேவர் பிறப்பால் புனிதம் பெற்ற ஊர்.

    சின்ன வயதில் இருந்தே இராமதேவருக்கு 
    ஆன்மீகம் 
    அருகில் இருந்தது.
    அது உள்மனதில் ஆழ்ந்திருந்தது.

    அமைதியாக இருப்பார் அதிகம் பேச்சு இருக்காது. 
    கண்களில் ஏனோ
    நீர் வடிந்தபடி இருக்கும்.
    ஏனென்று கேட்டால்
    பதில் இருக்காது.

    உள்ளத்தில் மட்டும் எப்போதும் 
    ஓர் ஆனந்த அலை அடித்துக் கொண்டிருக்கும்.

    அவர் ஓர் அம்பிகை பக்தர். 
    அன்னையைத் தியானித்தபடியே எப்போதும் இருப்பார்.

    அம்பாள் சிந்தனையே பேச்சாய் மூச்சாய் இருந்ததாலோ என்னவோ 
    பல நேரம் அவரிடம் பேச்சும் இருக்காது 
    மூச்சும் இருக்காது.

    இந்த அபூர்வ நிலையில் 
    அவர் பாட்டுக்கு நடந்து கொண்டிருப்பார்.

    அம்மன் பக்தி மட்டும் ஆரவாரமாய் 
    அவரை அங்குமிங்கும் அலையச் செய்யும்.

    அப்படித்தான் காசிக்குச் சென்று 
    அன்னை அன்னபூரணியைத் தரிசிக்க 
    ஆர்வம் கொண்டார்.

    நடந்தார்… நடந்தார்…
    பேச்சின்றி 
    உணவின்றி 
    கால்கடுக்க 
    கண்ணீர் மல்க 
    நடந்தார்.

    நாடி ஓடியதோ இல்லையோ 
    அவர் நாடிய
    காசி வந்தது.
     
    அவருக்குப் பிடித்தமான அகிலாண்ட ஈஸ்வரி
    அன்னபூரணியை தரிசித்தார்.
    ஆலகால விஷம் உண்ட விஸ்வநாதரையும் விழுந்து வணங்கினார்.

    "சுவாமி….
    நீங்கள் நாகப்பட்டினத்திற்கு வந்து என் மக்களுக்கு அருள வேண்டும் "
    மனம் உருகி நின்றார்.

    காசியில் நீராடும்போது ஒரு லிங்கம் 
    அவர் கைகளில் அகப்பட்டது.
    அவர் மனம்
    மகிழ்ச்சியில் துள்ளியது.

    நாகப்பட்டினம் திரும்பி அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 
    வழிபட ஆரம்பித்தார்.

    அதன் பயனாக
    சித்தர் பாதை 
    சித்தியாகத் தொடங்கியது.

    இராமதேவருக்கு எப்போதுமே 
    ஒரு ராசி உண்டு.

    போகுமிடம் தோறும் உத்தமர்கள், சாதுக்கள், ஞானிகள் தரிசனம் கிடைக்கும். 
    உபதேசங்கள் கிடைக்கும்.
    அருளாசிகள் 
    நிரம்ப கிடைக்கும். 
    ஞானம் கூடும்.
    சித்திகள் கைகூடும்.

    ஒருமுறை 
    ஓர் ஞான சித்தரைத் தரிசித்தார்.

    *மெக்கா நகருக்கு செல்….
    எக்கச்சக்க மூலிகைகளின் சுவர்க்கம் அது.
    உனது எண்ணத்திற்கு உதவும்."
    மெலிதாய் சொன்னார் அந்த மெளனி.

    ஆனால் 
    அது வலுவாய் அமர்ந்தது 
    இராமதேவர் சிந்தையில்.

    நாகப்பட்டினம் துறைமுகம் அக்காலத்தில் 
    கப்பல் கூடும்
    வணிகத் தளம்.

    ஒருநாள் 
    கப்பலொன்று 
    அவர் விரும்பிய மெக்காவுக்கு பயணமானது.

    நம் தேவர்
    அதில் பயணமானார்.

    மெக்காவில் இஸ்லாமியர்கள் இராமதேவரை ஏற்கவில்லை.

    'நீ யார்…. ? 
    எதற்கு வந்தாய்… ? '
    என குடைந்து எடுத்தார்கள்.

    இக்கவலை ஒருபுறம் இருந்தாலும் 
    இன்னொரு புறம்
    மெக்கா நகரின் 
    ஜீவ வளம் அவருக்கு எல்லையில்லா 
    மகிழ்வைத் தந்தது.

    யாருக்கும் புலப்படாத மூலிகைகள் –
    கற்ப மூலிகைகள் 
    அவர் கண்களுக்கு தெரிந்தன.
    அவை
    'வா வா ' என 
    அழைத்து மகிழ்ந்தன.

    'போ போ ' என துரத்திய இஸ்லாமியரிடையே 
    எவ்வளவோ பேசிப் பார்த்தார்.

    மெக்கா மக்களின் மேம்பாடு தான்
    தனது நோக்கம் என கூறி கெஞ்சிப் பார்த்தார்.

    "நான் ஒரு சித்தன். மூலிகை பலனை உலகிற்கு அளிப்பதே எனது பிறப்பின் ரகசியம்."
    என நல்லவிதமாகச் சொல்லிப் பார்த்தார்.

    இறைவன் அருளால் அவர்கள் 
    மனம் கொஞ்சம் இளகியது.

    ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பாடானது.

    அதன்படி 
    அதன் முதல்படியாக
    இராமதேவர் 
    இஸ்லாம் மதத்திற்கு 
    மனம் மாறினார். 
    மதம் மாறினார்.

    யாக்கோபு 
    என்னும் பெயர் சூட்டப்பட்டது.

    சுன்னத் செய்யப்பட்டது…
    குர்ஆன் ஓதப்பட்டது…..

    இராமதேவர் 
    யாக்கோபு ஆனார். 

    காயகல்ப மூலிகை ஆய்வும் 
    ஓய்வில்லா தியானமுமே அவரின் 
    அரபு வாழ்க்கையானது.

    மூலிகை பலன்கள் முஸ்லிம் மக்களுக்கு முழுதாய் கிட்ட 
    முயன்றார் யாக்கோபு.

    விரைவில் வெற்றிக்கனி பறித்தார்.
    பறித்த வண்ணம் இருந்தார்.

    நவரத்தின மயமான நபிகள் நாயகத்தின் ஜீவசமாதியிலேயே 
    நேரம் காலம் பார்க்காது ஒருங்கிணைந்திருந்தார்.

    ஒருநாள் 
    மெக்கா நகரமே மெய்சிலிர்க்கும் வண்ணம்
    வான் மேகம் திரண்டது… நெருப்பு மின்னலடித்தது…
    காற்று குளிர் பரப்பியது…
    நீர் மழை பொழிந்தது…..
    பூமி நர்த்தனம் ஆடியது…

    ஆம்… பஞ்சபூதங்களும் வெண்சாமரம் வீசின. 
    பரவசத்தோடு வரவேற்கத் துடித்தன.

    தேவதூதன் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தார் 
    யாகோபு நாதர்.

    இன்ஷா அல்லாஹ்..!

    எல்லாம் வல்ல 
    ஓரிறைவன் அல்லாவின் தூதர் நபிகள் நாயகம் 
    சமாதி முன்
    தியானத்தில் இருந்த யாக்கோபு முன்பு பேரொளியாய்
    பெருமான் 
    நபிகள் நாயகம் தோன்றினார்.

    மாஷா அல்லாஹ் !!!

    பிறர் கண்களுக்குப் புலப்படாத 
    யாருக்கும் கிட்டாத
    அரிய காட்சி.
    அருள்நிறை காட்சி.

    யாகோபு நாதருக்கும்
    நபிகள் பிரானுக்கும் 
    நடந்த உரையாடல் தேவரகசியம்.

    பல உபதேசங்களை ஆன்மீக ரகசியங்களை இறைதூதர்
    நபிகள் உபதேசித்தார்.

    யாக்கோபும் 
    சித்த மருத்துவ மகிமையை,
    யுனானி தொடர்பை 
    தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை
    முகமது நபிக்கு
    எடுத்துச் சொன்னார்.

    நபிகள் தேவரை ஆரத் தழுவிக் கொண்டார்.
    மதங்களுக்கு அப்பாற்பட்ட
    ஞானம் பரிமாற்றமானது.

    இஸ்லாமிய முறைப்படி வணங்கி தொழுது 
    ஆசி பெற்றார்.

    'அரபுக்கு கிடைத்த 
    அற்புத மகான்'
    என்று ஆசி தந்து மகிழ்ந்தபடி மறைந்தார் நபிகள் நாயகம்.

    உத்தமர்களை
    சித்தர்களை, தெய்வங்களை 
    தீர்க்கதரிசிகளை
    அருளாளர்களை
    தரிசிப்பது யாகோபு உருவிலிருக்கும் இராமதேவர் 
    ராசி ஆயிற்றே!!!

    அதனால்தான் இணையற்ற இறைதூதர் காட்சியும் அருளும் தந்திருக்கிறார்.

    அதன்பின் பிறவிப் பயனை அடைந்த மகிழ்வில்
    அங்கேயே யோகநிலையில் ஆழ்ந்தார்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் என்னும் இறையருளால் ஞானத்தின் 
    அழகிய முன்மாதிரி 
    என விளிக்கப்பட்டார்.

    முகமது நபி பிரானின் அருளாசிக்குப்
    பின்னர் சீடர் கூட்டம் 
    யாகோபுவின் மொழிக்கும்
    காட்டும் வழிக்கும் காத்திருந்தது.

    'நபி யாகோபு'
    எனும் இணையற்ற 
    புனிதப் பெயர் 
    தேடி வந்தது.

    அவரின் புகழ் 
    அரபு தேசத்தில் 
    ஓங்கி வளர்ந்தது.

    தான் கற்றவற்றை 
    பற்பல சித்த புருஷர்களிடம் பெற்றவற்றை வைத்து 
    பதினான்கு நூல்களை அரபு மொழியில் 
    படைத்தார் யாகோபு.

    அது சமயம் தான் 
    போகர் பிரான்
    தான் படைத்த 
    அற்புத வான் ரதத்தில்
    சீன தேசத்து 
    அன்பர் படைசூழ 
    மெக்கா வந்தார்.

    போகரைக் கண்ட மாத்திரத்தில் 
    யாக்கோபு ஆன இராமதேவரின் மனதில் 
    அன்புப் பெருக்கு 
    அலை போல் எழுந்தது.

    போகர் சீரடி தொழுதார்.

    பீறிட்டு எழுந்த கண்ணீரால் 
    போகரின் 
    திருவடி கழுவினார்.

    "சுவாமி….
    என்ன புண்ணியம் செய்தேனோ….!!
    உங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு எனக்கு….!!

    கொஞ்ச நாள் முன்பு தான்
    பேராற்றல் பெருமகனார்
    நபிகளைத் தரிசித்தேன்..!!!

    சுவாமி….அற்புதம்… அற்புதம்.."
    நெகிழ்ந்துருகினார்
    யாகோபு சித்தர்.

    "இராமதேவனே….
    உன்னை நினைத்து
    உன் தொண்டை நினைத்து மகிழ்கிறேன்.

    நானும் 
    பேரொளி பரப்பும் நபிகளைத் தரிசித்தேன்.

    உன்னை மெச்சி
    நபிகள் நாயகம் 
    என்னிடம் சொன்னது
    தேவ வசனங்கள்.

    உன் குரு 
    புலத்தியன் கேட்டால் உன்னை 
    உச்சி முகர்ந்து புளகாங்கிதம் கொள்வான்.

    உன் பணி சிறக்கட்டும்…
    தொடரட்டும்…
    இன்னும் நிறைய செய்…
    அதன்பின் 
    சமாதி செல்….. 
    வாழ்த்துக்கள்… வருகிறேன்."

    போகரின் வார்த்தைகளை முழுதாய் 
    புரிந்து பூரித்திருந்த 
    யாகோபுவை 
    கைகளில் ஏந்தி உச்சிமுகர்ந்து
    முதுகு தடவி
    மெளனமாய் சொன்னார்.

    "நீ இங்கு யாகோபு..
    தமிழ்நாட்டில் இராமதேவர்..
    மறந்துவிடாதே..!"

    போகரின் 
    மெளன மொழிக்கு 
    ஆயிரம் அர்த்தங்கள்!!!

    யாகோபுவுக்குத்
    தெளிவு பிறந்தது.

    ஆயிரம் பணிகள் காத்திருக்கும்போது யாகோபு நாதரால்
    அங்கேயே ஓய்ந்திருக்க முடியுமா?
    இல்லை….
    சமாதி நிலையில் ஒளிந்து இருக்க முடியுமா?

    முப்பது ஆண்டுகள் 
    சமாதி நிலையில் இருக்கப் போவதாக சீடர்களிடம் சொன்னார்.

    துயர் கொண்ட சீடர்கள் 'மீண்டும் காண்பது எப்போது? '
    என விசனித்து வினவினர்.

    "வருவேன்…
    அப்போது 
    பல அற்புதங்கள் நிகழும்.
    தேன் மாரி பொழியும்.
    நூறு மலர்கள் பூத்துக்குலுங்கி 
    அரபு நாடே மணம் கமழும்.
    விலங்குகள் ஞானம் பேசும்.

    இவையே
    நான் பிரசன்னமாவதன் அறிகுறி"
    என புன்னகைத்தார்.

    அரபு தேசத்தில் 
    சமாதி நிலையில்…

    அதே சமயம் 
    யாகோபுவின் 
    விண்னொளி ததும்பும் விண்வெளிப் பயணம் 
    பாரத தேசத்தை
    நோக்கி இருந்தது.

    பாரதம் வந்தவர்
    பலருக்கும் உபதேசித்தார். 
    தேடி வந்தவர்களுக்கெல்லாம் நல்லன செய்தார்.
    நோய் நொடி என வந்தவருக்கெல்லாம் 
    நோய் தீர்த்து வைத்தார்.

    சதுரகிரியில் 
    தவம் கொண்டார்.
    சித்தர் பிரான்களின்
    உறைவிடமான
    சதுரகிரி மலை 
    அவருக்கு மிகவும்
    பிடித்துப் போனது.

    அங்கேயே தங்கி 
    மக்களைப் பீடிக்கும் 
    நோய் நொடிகளுக்கு மருந்து காணும் பதினான்கு 
    நூல்களைப் படைத்தார்.

    அவர் மெக்காவில் படைத்த பதினான்கு நூல்களின் 
    தமிழ்மொழி ஆக்கமே 
    அந்த வைத்திய நூல்கள்.

    சதுரகிரியில் 
    காலாங்கி நாதரின் 
    ஜீவ சமாதிக்கு அருகில் வாழ்ந்து மகிழ்ந்து 
    அவரின் அருளோடு 
    தனது
    ஞான அனுபவத்தைப் பிழிந்து
    சில படைப்புகளைத்
    தமிழில் தந்தார்.

    இராமதேவர் 
    சதுரகிரியில் 
    தவமிருந்த இடம் 
    இன்றும் 
    'இராமதேவர் வனம்'
    என சித்த மகிமையோடு தவமிருப்போருக்கு அருள்பாலித்து வருகிறது.

    அவ்வனம் 
    'யாகோபு நாதர் மலை'
    என 
    வணங்கப்பட்டும் வருகிறது.

    வற்றாத தாமிரபரணியும் வாடாத தென்றலும் 
    அகத்தியர் அருளினால் உற்பத்தியாகும்
    பொதிகை மலை உச்சியில் 
    யாகோபு தவமிருந்த மலை
    அருளாற்றல் கொண்டதாய் இன்றும் 
    அருள்பாலித்து கொண்டிருக்கிறது.

    அதற்கு 
    'துலுக்க மொட்டை'
    என்ற பெயர் இருக்கிறது.

    அந்த அடர் காட்டில் இஸ்லாமியர்கள்
    இன்றும் வசிக்கிறார்கள்.

    சதுரகிரி வாழ்வின்
    நிறைவில் 
    சில காலம்
    சமாதி நிலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார் இராமதேவர்.

    அதன்பின் அவரை 
    யாரும் சதுரகிரியில் தரிசிக்க முடியவில்லை.

    அடிக்கடி சமாதி 
    நிலைக்குச் செல்வது 
    அவர் வழக்கமாயிற்றே!

    ஆனால்
    இம்முறை
    மெக்கா சென்று
    சமாதி ஆனவர் 
    மீண்டும்
    சீடர்கள் அறிய வெளிப்படவில்லை.

    அதுவே 
    அவரது ஜீவசமாதி ஆனது.

    இறை நேசர்
    நபிகள் போற்றிய
    யாகோபுவின் 
    ஜீவசமாதி மெக்காவில்…

    அது
     'ஏக இறைவன் அல்லா' என 
    இறைவனைத் தொழும் இஸ்லாமியர் பெற்ற பெரும் பாக்கியம்.

    பின்னாளில்
    மெக்காவில் இருந்து தமிழகம் வந்தபோது சித்தர்களுக்குப் பிடித்த
    சதுரகிரி மலையில் லயமானார் இராமதேவர்.

    தமிழகத்தில் 
    இன்னொரு மலையிலும்
    இறையோடு இறையாக இரண்டறக் கலந்தார்.

    அந்த இடம் 
    அழகர்மலை.

    இராமதேவர் என்கிற 
    யாகோபு பற்றிய இன்னொரு 
    சுவாரஸ்ய தகவல்.

    அவர் பிறந்தது 
    வைணவ குலத்தில். அய்யங்கார் பிரிவில்.
    அவர் மறவர் 
    என்பாரும் உண்டு.

    சாதியும் மதமும் அற்றவர்கள் சித்தர்கள்
    என்பதற்குச் சான்றே இராமதேவர் 
    என்கிற 
    யாகோபு நாதர். 

  • கூடுவிட்டுக் கூடு பாய்ந்த சித்தர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    'கூடுவிட்டு கூடுபாய்தல்' சித்தர்களின் சித்தாடல்களில் முக்கியமானது.

    ஒரு முறை அல்ல
    பல முறை 
    கூடுகள் விட்டு கூடுகள் பாய்ந்த 
    சித்தர்களும் உண்டு.

    பிறர் துயர் கண்டு இரங்கும் சுபாவமும்,
    கூடு விட்டு கூடு பாயும் பேராற்றல் மூலம் 
    சித்தர் மகத்துவத்தை வெளிப்படுத்துவதுமே  
    இச்சித்தாடலின் 
    அடிப்படை அம்சம்.

    ஒரு நற்காரியத்திற்காக இறை விருப்பப்படி 
    கூடுவிட்டு கூடு பாய்வது சித்தர் மரபு.

    பலமுறை 
    கூடுவிட்டுக் கூடு பாய்ந்த ஒரு மாபெரும் சித்தரை இப்போது தரிசிக்க இருக்கிறோம்.

    அதற்காகவே 
    இனி வருகிறது 
    ஒரு நெடுங்கதை.

    பாண்டிய நாட்டின் மன்னன் வீரசேனன்,
    அவன்  மனைவி குணவதி.

    ஒருநாள் 
    நகர்வலம்
    சென்று திரும்பிய மன்னவன்
    தள்ளாடி வந்தான். தன்னிலை மறந்தான்.
     சில மணித்துளிகளில் மரணித்தும் போனான்.

    இளவயது மன்னன்…
    இனிய மனது உள்ளவன் 
    இறந்த செய்தி  மகாராணியை, மக்களை ஓலமிடச்  செய்தது.

    அவர்களின் அழுகுரல் விண்ணை எட்டியது.

    அப்போதுதான் 
    அந்த சித்தர் விண்வெளியில் பயணித்திருந்தார்.

    மக்களின் துயர் கண்டு
    இரங்கினார்.
    ஒரு கணம் யோசித்தார். இறை விருப்பம் மனதில் விரிந்தது.
    தரை இறங்கினார்.

    அக்கணமே 
    மன்னன் 
    சாவை முறியடிக்க 
    அவன் உடலில் உட்புகுந்தார்.

    ஆம்….
    தன் உடலை விட்டு மன்னன் உடல் புகுந்தார். கூடு விட்டுக் 
    கூடு பாய்ந்தார்.

    அதே கணத்தில்
    தான் தவமிருக்கும்
    சதுரகிரியில் 
    அந்தரங்க சீடன் 
    குருராஜன் என்பானை நியமித்து 
    தன் உடலை 
    பத்திரமாக பாதுகாக்கச் சொன்னார்.

    மன்னன் உயிர்பெற மாநிலமே மகிழ்ந்தது. மக்கள் துள்ளி குதித்தனர். மகாராணி குணவதி எல்லையில்லா குதூகலம் கொண்டாள்.

    ராஜ வாழ்க்கை….
    அழகின் விளிம்பில் இன்பத்தின் உச்சத்தில் அதிசயம் காட்டிய
    இளம் மகாராணி
    அருகில்…..மிக அருகில்.

    இப்படியே இன்பகரமாக நாட்கள் நகர்ந்தன…
    ஆடலும் பாடலுமாய்
    அரசும் ஆட்சியுமாய்.

    பட்டத்தரசிக்கு
    மதிமயக்கும் மன்மதனாய் 
    தித்திக்கும் தேவனாய் மாறிப்போனார் சித்தர்.

    இருப்பினும் 
    அரசியின் மனதில் சந்தேகம் இருந்தது.

    ஒருநாள் கேட்டே விட்டாள்!

    "உயிர் நாதா….
    அன்று,,,,,
    நீங்கள் இறந்து விட்டதாக
    ராஜ வைத்தியர் சொன்னார்.
    நானும் உடலைத் 
    தொட்டுப் பார்த்தேன். 
    சவமென உணர்ந்தேன். நீங்கள் மரணமடைந்து விட்டதாகவே நினைத்தேன். 
    கதறித் துடித்தேன்.

    நல்லவேளை 
    காலன் உங்களைக் கைக்கொள்ளவில்லை.

    அந்நிகழ்வுக்குப் பிறகு
    உங்கள் ஆற்றலும் அணுகுமுறையும் வேறாய் இருக்கிறது.
    அனுதினமும் இதை உணர்ந்து துய்க்கிறேன்.

    ஆனால் என் மனம் அண்மைக்காலமாக
    துன்புறுகிறது.

    கோபமே என் 
    மன்னவனின்
    மரபு குணம்.
    அது இப்போதெல்லாம் உங்களிடம் 
    அறவே இல்லை. 

    முன்பு உங்கள் நாட்டம் வேறு.
    இப்போது உங்கள் நாட்டம் புதிது.
    ஆம் அரசே…..

    சொல் புதிது…
    பொருள் புதிது…
    ஆற்றல் புதிது….
    அனுபவம் புதிது.

    போர், நாடு , மக்கள் என 
    என்னை விட்டுத் தள்ளிப் போன நீங்கள்
    இப்போது அள்ளி அள்ளி அணைக்கிறீர்கள்.!

    என்ன நடந்தது ?
    எனக்கு விளங்கவில்லை..

    அறிவால் அரச சபையும் அன்பால் அந்தப்புரத்தையும் மாற்றியிருப்பது அறியமுடிகிறது."

    வீரசேனன் உருவில் இருந்த சித்தர்
    இதுவே சரியான 
    தருணம் என 
    உண்மையைச் 
    சொன்னார்.

    "மகாராணி….. 
    விஷப்பாம்பு ஊறிய 
    பூ ஒன்றை முகர்ந்தாலே உன் கணவன் இறந்து போனான்.

    பின் பிழைத்ததும் இப்போது இருப்பதும் இறை உத்தரவு ."

    சித்தரின் பதில் 
    அரசிக்கு மேலும்
    குழப்பம் தந்தது,
    அவள் கண் கலங்கிப் போனாள்.
    அதன் பின் புலம்பி ஓய்ந்தாள்.

    ஆனால் அடுத்த முறை அதே கேள்வியைக் கேட்டபோதும்….
    கேட்டு கேட்டு நச்சரித்த போதும்… 
    மறைக்க முடியாமல்
    சித்தர் உண்மையைப் போட்டு உடைத்தார்.

    அரசியே,…
    கவனமாகக் கேள்.

    இவ்வுடல் உன் தலைவன் வீரசேனனுக்கு உரியது.

    ஆனால்
    உள்ளிருக்கும் உயிர்,
    வழி நடத்தும்
    ஆன்மா என்னுடையது.
    நான் ஒரு சித்தன்.

    நீ சேர்ந்தது 
    வீரசேனனின் உடலுடனேயே…!

    உறவும் பிணைப்பும் உடலுக்கு உரியன. உயிருக்கு அல்ல. ஆன்மாவுக்கு 
    களங்கம்  கிடையாது."

    "உயிரும் ஆன்மாவும் 
    வேறு வேறா ? ஒன்றா ??"
    அந்த சூழலிலும்
    சந்தேகம் கேட்டாள் ராணி.

    "இரண்டும் ஒன்றுதான். உயிர் தமிழ்மொழி ….
    ஆன்மா வடசொல்."
    எளிதாய் சொன்னார் ஞானி,

    உடலின் உண்மையையும் உயிரின் மேன்மையையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார். 

    நடந்தது அனைத்தையும் நயமாக எடுத்துச் சொல்லி,
    "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை 
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை.
    நடப்பது யாவும் கடவுள் கட்டளை"
    என நியாயப்படுத்தினார்.

    அரசிக்கு குற்ற உணர்வு ஏற்படவில்லை. 
    கற்பு கெட்டு விட்டதாகத் தோன்றவில்லை. 
    சித்தரின் கூற்று
    அவளுக்கு 
    ஏற்புடையதாக இருந்தது.

    அரசு சுகமும் 
    ஆட்சி சுகமும் 
    அந்த சித்தர் தந்த 
    முழு சுகமும் 
    அவளை அப்படிக்
    கட்டிப் போட்டிருந்தன.

    சாகச சித்தரிடம் 
    சமரசம் கொண்டால் தான் சகல பாக்கியங்களும் நிரந்தரமாகும். விதவையாக முடங்காமல் பட்டத்து மகாராணியாக பவனி வரமுடியும் என கணக்குப் போட்டாள்.

    விதவைக்கோலம் கண்ணில் விரிய 
    வேகமாய் முடிவெடுத்தாள் சாகசக்காரி.

    வீரசேனன் உடலை
    ஆரத் தழுவினாள் 
    உயிராய் 
    உள்ளிருந்த சித்தரும் 
    கிளர்ந்து எழும்படி.

    சகலமும் உணர்ந்தவர் என்றாலும் 
    அந்த அரவணைப்பில் கொஞ்சம் 
    கிறங்கிப் போனார் சித்தர்.

    "ஆமாம் சாமி… 
    உங்கள் உடல் 
    சதுரகிரியில் பத்திரமாக இருக்கும் தானே…?
    சீடன் கவனம் 
    அதிலேயே இருக்குமா…?? சிக்கென கேள்விக்கணைகள் தொடுத்தாள்.

    "பயமில்லை… பாதுகாப்புக்கும் குறைவில்லை…"

    " எனக்கு என்னவோ பயமாயிருக்கிறது…
    யாரேனும் செத்த உடம்பு என்று எடுத்துச் சென்று எரித்து விட்டால்…." சந்தேகமாய்  கேட்டாள்.

    " முடியாது….. 
    யாராலும் முடியாது…..
    காயசித்தி அடைந்த தேகம்…. 

    அதனை எரிக்க  
    சாதாரண தீயால் முடியாது."

    "அப்படியா…?!!!!"
    கண்கள் விரிய கேட்டாள்.

    "என் உடல் 
    சாமான்யமாக எரியாது.

    வெடி உப்பமும் 
    குங்கிலியமும்
    பொரி காரமும்
    போட்டுத் தூளாக்கி தேகத்தில் பூசவேண்டும். பின் 
    விரலி இலைகள் 
    பரப்பி மூடவேண்டும். அதன் பிறகு 
    கட்டைகளை அடுக்கி 
    தீ மூட்ட வேண்டும்.
    அப்போதே சிதை
    எரியும்.

    இந்த ரகசியம் 
    சித்தர்கள் தவிர
    யாருக்கும் தெரியாது. இப்போது உனக்குத் தெரியும்.

    நீ என் உயிரை காக்க வந்தவள். 
    போக்க வல்லவள் அல்லவே"
    கடைக்கண் சாய்த்து கயல்விழியாளிடம் கிசுகிசுத்தார்.

    காமக்கிழத்தியிடம் ரகசியத்தை சொல்லிவிட்டு  ரகசியமாய் சிரித்தார், சிதம்பர ரகசியம் 
    அறிந்த மகா சித்தர்.

    அந்த ரகசியம் 
    தீயாய் படர்ந்தது 
    அரசியின் உள்ளத்தில்.

    அழகிய இளைஞனாய் அரசன்…
    அமர்க்களமாய் 
    அரசு கட்டில்.
    ஆர்ப்பரிக்கும் 
    ராஜ வாழ்க்கை.,,,
    எல்லையில்லா இன்பம்.

    அரசன் உருவில் இருக்கும் இந்த புதுக்கணவன் பிரிந்தால் எல்லாம் 
    பறி போகும்.

    உடல் வேறு உயிர் வேறு என்றான பின்
    எவனாக
    இருந்தால் என்ன?

    கணவனைப் பிரிய எந்த மனைவிக்கு மனம் வரும்?

    சொத்து சுகம் குறைய யாருக்குத்தான் 
    மனம் வரும்?

    அரசியின் மனதில் முன்னம் எழுந்த தீ
    அதீதக் கொழுந்தாய் படர்ந்து எரிந்தது.

    வெளிக்காட்டிக்
    கொள்ளாமல் 
    ஒரு திட்டம் தீட்டினாள் – ரகசியமாக .

    அவளது திட்டம் 
    மிக எளிமையானது. 
    கனகச்சிதமானது.

    நம்பிக்கையான
    வீரர்களை அழைத்தாள்.

    சித்தர் 
    உடல் இருக்கும்
    இடம் சொல்லி 
    எரிக்கும் முறைகளை எடுத்துச் சொல்லி கொஞ்சம் கூட விட்டுவிடாமல் 
    எரித்து வரச்சொன்னாள்.

    அதேசமயம் 
    வருவதாக
    கூறிச் சென்ற
    குரு காணவில்லையே 
    என புலம்பியபடியே 
    சீடன் குருராஜன் 
    குருவைத் தேடி 
    மதுரை நோக்கி 
    சென்று விட 
    வீரர்களுக்குக் காரியம் சுலபமாக இருந்தது .

    சித்தரின் உடம்பு 
    அவர்கள் இட்ட தீயால்
    நிர்மூலமாகியது.

    இத்தனை நடந்தும் 
    ஏதும் அறியாதவள் போல் இனிய முகத்தோடு வாழ்க்கையைத் தொடர்ந்தாள் 
    மகாராணி குணவதி.

    பின்னொருநாள் வீரசேனன் உருவிலிருந்த சித்தர் காட்டிற்கு வேட்டையாட  சென்றார்.

    காட்டில் 
    ஒளித்து வைத்திருக்கும் உடல்  நினைவுக்கு வரவே கண்டு வரலாம் என குகைக்குச் சென்றார்.

    குகையில்
    வைத்த இடத்தில் காயசித்தி கண்ட
    உடல் இல்லை.

    ராணி செய்த சூழ்ச்சி லேசாக மனதில்
    நிழலாட…

    அமைதியாய் 
    நாடு திரும்பினார்.

    ஏதும் அறியார் போல்
    சில நாட்கள் இருந்து விட்டு ஒரு நாள் அரசவையில் ராணிக்கு அரசாளும் பொறுப்பைத் தருவதாக அறிவிப்பு செய்தார்.

    அகமகிழ்ந்த ராணி
    உடலை எரித்த கதை தெரிந்திருக்குமோ
    என அஞ்சினாள்.

    நாளாக நாளாக 
    ராணி குணவதிக்கு
    செய்த தவறு
    உறுத்த ஆரம்பித்தது.

    தனது செயல்
    சூழ்ச்சி, துரோகம் என பூரணமாய் உணர்ந்தாள்.

    சித்தரின் காலடி விழுந்தாள்.

    அவர் மீது கொண்ட காதலே காரணம் என நியாயப்படுத்தினாள்.

    வாய்த்த கணவரை
    என்றும் பிரியாதிருக்க கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விட மாட்டார்கள் மனைவிமார்கள் என தர்க்கம் செய்தாள்.

    நம்ப வைத்து 
    செய்த துரோகம் எனினும் கணவன் வேண்டும் என்ற மனைவியின் 
    அடிப்படை ஆசை யதார்த்தமானது என்பதை சித்தரும் ஏற்றார்.

    "மன்னிப்பீர்களா"
    மகாராணி
    சித்தரின் மலர் பாதம் பணிந்தாள்.

    "பரவாயில்லை….
    நடந்தது நடந்ததாக இருக்கட்டும் … 
    இனி நடப்பவை 
    நல்லதாக இருக்கட்டும்"
    சித்தர் மனம் மகிழ்ந்தார்.

    "நான் விரைவில்
    உன்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவது நிச்சயம்.

    என் மனம் உணரும்
    இறை உத்தரவு 
    வந்தால் 
    சென்றுவிடுவேன்.

    இனி 
    என்னால் 
    ஒன்று மட்டும்
    தர முடியும்.
    அது வரம்…
    என்ன வரம் வேண்டும் கேள் ? "
    சித்தர் 
    மனமிரங்கிக் கேட்டார்.

    பெண்ணின் மனம் ஆயிற்றே..
    முடிச்சுப் போட்டது.!
    " நான் என்றும் சுமங்கலியாய் 
    இருக்க வேண்டும்."

    ஒரு கல்லில் 
    எத்தனை மாங்காய் ..?!!

    வரம் கேட்பதில் வல்லவர்கள் வனிதைகள். கைகேயி கேட்ட வரங்கள் அப்பொழுது 
    நினைவுக்கு வந்தது. 
    சித்தர் சிரித்துக் கொண்டார். 

    இனி இந்த 
    சித்தாதி சித்தர் 
    நம்முடனே தானே 
    இருக்க வேண்டும் ?!!!

    உடல் மாறாது.. 
    உயிர் போகாது …
    சிந்து பாடியது 
    அவள் உள்ளம்.

    ஆனால் சித்தரின் சிந்தனை 
    வேறாக இருந்தது.

    ஒரு நாள் நள்ளிரவு
    அரண்மனையை விட்டு காடேகினார் .
    சதுரகிரி மலை ஏறினார்.

    வழியில் 
    ஓர் அந்தணன்
    கற்சிலை போல நின்று கொண்டிருந்தான்.

    அருகில் சென்றார் சித்தர்.
    பிரமித்து நின்றார்.

    அவர் கைபட்ட போது அவன் உயிர் 
    பெற்று இருந்தான்.

    ' ஏன் இப்படி என்ன நேர்ந்தது அவனுக்கு' சிந்தனையில் ஆழ்ந்தார்.

    காட்சி விரிந்தது.
    நடந்தது தெரிந்தது .

    ஜம்புகேஸ்வரம் என்னும் திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரன் என்ற பெயரில் 
    வாழ்ந்தவன் அவன்.

    குரு துணையின்றி பிரணாயாமம் செய்திருக்கிறான்.

    வெளியே மூச்சை விட கற்றவனுக்கு
    உள்ளே காற்றை இழுக்க தெரியவில்லை. 
    மறந்து விட்டான். 
    அருகே குருவும் இல்லை.

    ஆட்டம் காலி.

    வீரசேனன் உருவில் இருந்த சித்தருக்கு கூடுவிட்டு கூடுபாய்தல் கைவந்த கலை அல்லவா.? இரக்கம் வேறு அதிகமாய் இருக்கும் அல்லவா??

    மன்னன் வீரசேனன் உடலைவிட்டு 
    கணப் பொழுதில் 
    அவன் உடம்பில் ஏகினார்.

    அருகிருக்கும் மரப்பொந்தில்
    தான் புகுந்து வெளியேறியிருந்த
    வீரசேனனின் 
    உடலை வைத்தார்.

    அது எப்போதும் அழியாதிருக்க 
    ஜோதிமரப் பூக்களையும்
    சில மூலிகைகளையும் கலந்து அரைத்து 
    தன் மந்திர சக்தி ஏற்றி அரசன் உடலில் பூசினார்.

    இலை தழை மரப்பட்டைகளால் 
    அம்மரப் பொந்தினை
    மூடினார்.

    பின் சாவதானமாக 
    சடலமாய் இருந்த ஜம்புகேஸ்வரன்
    உடம்பில் ஏகினார்.

    'அழியாத அரசன் உடல்… தீர்க்க சுமங்கலியாய் அரசி'
    கொடுத்த வாக்கை நிறைவேற்றிய திருப்தியில் அடுத்தகட்டத்திற்குப் பயணமானார் சித்தர்.

    சதுரகிரியில் 
    நீண்ட கால தவம். 
    மீண்டும் காயசித்தி.
    சித்தர்களே வியக்கும் அழகிய இளைஞரானார்.

    காலப்போக்கில் 
    சீடர்கள் பெருகினர்.
    சீடன் குருராஜனும் 
    சேர்ந்து கொள்ள
    அவர் லயத்தில் 
    சதுரகிரி மலையே ஒளிர்ந்தது.
    ஓங்கி உயர்ந்தது.

    சுமங்கலியாய் 
    நாடாண்டு வந்த
    குணவதி 
    கால முதிர்ச்சியில் சதுரகிரி வாழ் சித்தர் 
    பற்றி கேள்விப்பட்டு
    அவர் யார் என அறியாமலேயே
    சதுரகிரி மலைக்கு வந்து உதவி கோரினாள்.

    தன் துயர்துடைக்க 
    தாழ் பணிந்து நின்றாள்.

    காடேகிய தன் கணவர் 
    கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை வைத்தாள்.

    "தாயே ….
    தவ சக்தியால் 
    அந்த மாமுனி 
    உன் கணவனான
    அரசன் வீரசேனன் 
    உடலை 
    ஒரு மரமாக 
    உருவாக்கியுள்ளார்.

    இந்த மரத்திற்குப் 
    பூஜை செய். 
    அதுவே உனக்கான சேவை. 
    பதிசேவை. 
    செய். 
    பலன் கிட்டும்." 
    ஆசியுடன் சொன்னார், கூடுவிட்டு கூடு பாய்ந்து இருக்கும் இளம் சித்தர்.

    அரசி அழுதவண்ணம் 
    அரச மரத்தைத் தொழுதாள்.

    அரசன் உடல் 
    அழியாது இருக்கும் 
    அந்த மரமே 
    அரச மரம் என்று அழைக்கப்படுவதாக
    ஒரு நம்பிக்கை
    இன்றும் உள்ளது.

    விடைபெற்ற அரசி
    பின் பலகாலம் 
    நாடாண்டு நற்கதி அடைந்ததாக 
    சதுரகிரி புராணம் சிலாகித்துச் சொல்கிறது.

    எல்லாம் சரி…
    கூடுவிட்டு கூடு பாய்வதில் வல்லவரான
    அந்த சித்தர் 
    யார் என்று தானே கேட்கிறீர்கள்?

    அவர் மூலர்…
    திருமூலர்.

  • மௌனம் கண்ட சதாசிவ பிரம்மேந்திரர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கும்பகோணம் 
    ஸ்ரீ மடத்தின் 
    குரு 
    பரமசிவேந்திரா 
    பரமகுரு மட்டும் அல்ல.

    அவர் 
    காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த
    58 வது பீடாதிபதி.

    சிவராமகிருஷ்ணனாக தஞ்சமடைந்த சீடனை  'வித்வான் சதாசிவம் ' 
    என உயர்த்தி
    பிற்காலத்தில்
    தரணி போற்றும்
    சதாசிவ பிரம்மேந்திரராக வார்த்தெடுத்த 
    குரு மகா சன்னிதானம்.

    குரு பரமசிவேந்திராவின் பார்வைக்கு 
    அரசர்கள் எல்லாம் காத்திருப்பது வழக்கம்.

    அக்கால 
    மைசூர் மன்னனுக்கு
    ஓர்  ஆஸ்தான வித்வான்  தேவையாய் இருந்தது.

    அவன் 
    பரமசிவேந்திராவை
    தரிசித்துக் 
    கோரிக்கை வைத்தான்.

    'தக்கதொரு ஆஸ்தான வித்வான் வேண்டும் '
    என்று வேண்டி நின்றான். 

    அது சமயம் தான்….
    குருநாதரால் 
    அடையாளம் காணப்பெற்று
    சதாசிவம் என்ற
    புதிய நாமகரணம் 
    சூட்டப் பெற்றிருந்தார் சிவராமகிருஷ்ணன்.

    பற்பல கற்று
    பிரம்மஞானம் 
    கற்றுத் தேர்ந்து மடமெங்கும் 
    புகழ் பரப்பிக் கொண்டிருந்தார்.

    பரமசிவேந்திரா
    மைசூர் மன்னனின் வேண்டுகோளை ஏற்று சீடர் சதாசிவத்தை
    மைசூருக்கு அனுப்பிவைத்தார்.

    குரு சொல்லை ஏற்று மறுப்பின்றி பயணமானார் மைசூர் நாட்டிற்கு.

    மைசூர் அரண்மனையில் வித்வான் சதாசிவத்தின்
    ஞானக் கொடி
    பட்டொளி வீசிப் பறந்தது.

    அரசனின்  எல்லாவற்றுக்கும்
    எதற்கும் 
    பிரதானமாக இருந்தார்.

    அவரன்றி ஓரணுவும் அசையாத நிலை 
    விரைவில் வந்தது.

    'பேச்சாற்றல் மிக்கவர் ' 'சொல்லின் செல்வர் ' 'தர்க்கத்தில் வல்லவர் '
    என்று 
    மன்னன் மட்டுமல்ல மைசூரே கொண்டாடியது.

    கொண்டாட்டம் 
    வரும்போது 
    திண்டாட்டமும்
    வரும் தானே?

    வந்தது.

    சதாசிவத்தின் புகழ்
    ஏற்கனவே அவையில் 
    கோலோச்சிக் கொண்டிருந்த 
    சிலருக்கு காழ்ப்பை
    உண்டு பண்ணி வந்தது..

    பொறாமை பேச்சுக்கள் கொட்டமடிக்க ஆரம்பித்தன.

    போதாக்குறைக்கு 
    எதிலும் நிறை விரும்பும் 
    சதாசிவம்
    அரசனை நாடி வந்து 
    புகழ் கவி பாடி
    பரிசில் பெற வருவோரை கேள்விகளால் 
    திணற அடித்தார்.

    பரிசுகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த சதாசிவம்
    'அரசர் கொடுக்க ஆசைப்பட்டாலும் இவர் விட மாட்டார் 'என்னும் அவப்பெயர் பெற்றார்.

    கற்றறிருந்த 
    சாஸ்திரி ஒருவர்.
    ஊர் தஞ்சாவூர்.
    பெயர் கோபாலகிருஷ்ண சாஸ்திரி..

    விவரமானவர்.
    வில்லங்கமானவரும் கூட.

    மைசூர் 
    சமஸ்தான வித்வான் 
    பதவி மீது அவருக்கு வெகுகாலமாக ஒரு கண்.

    எப்படியாகிலும் சதாசிவத்தை வென்று சமஸ்தான வித்துவானாக வேண்டும் என்று துடித்தார் 

    மைசூர் வந்தார்.

    போராடி ஜெயிப்பதை விட கூடிக் கெடுக்கலாம் 
    என முடிவெடுத்தார்.

    சமஸ்தானம் வந்தவர் சதாசிவத்தின் 
    பாதங்களில் சரணடைந்தார். 

    "பணி செய்யக் காத்திருக்கிறேன்…..
    ஆட்கொள்ள வேண்டும்" புன்னகைத்த
    சதாசிவம் சம்மதித்தார்.

    நம்பிக்கையூட்டும் வகையில் 
    பணிகள் பல 
    செய்தார் சாஸ்திரி.

    சதாசிவத்தின் 
    காலைப் பிடித்தவர் 
    காலைப் பிடித்திழுக்க சமயம் பார்த்துக் காத்திருந்தார்.

    ஒரு நாள்…
    சதாசிவத்தின் 
    குரு பற்றியும் 
    குருநாதர் இருக்கும் 
    இடம் பற்றியும் 
    செல்லும் வழி குறித்தும் பேச்சுவாக்கில் கேட்டறிந்தார்.

    பின்னொரு நாள்
    குருவின் பாதம் தொட்டு
    சொந்த ஊருக்கு
    சென்று வருவதாகக் கூறி
    குருவின் குருநாதரைத் தரிசிக்க விரைந்தார்.

    பரமகுரு
    பரமசிவேந்திராவைக் கண்டு 
    தரிசித்த மாத்திரத்தில் வித்வான் சதாசிவத்தை ஏகத்துக்கும்
    புகழ்ந்து தள்ளினார்.

    ஒவ்வொரு 
    புகழ் வார்த்தையும்
    குருவின் செவிகளில் தேனாகப் பாய்ந்தன.

     மகிழ்ந்தார்.

    தன் சீடன் அவையத்து முந்தி இருப்பதைக் கேட்டு மகிழ்வதை தவிர குருவுக்கு வேறென்ன பேறு 
    இருக்க முடியும் ?

    இது தான் 
    தருணம் என்று
    சாஸ்திரியார் 
    சதி பண்ணத் தொடங்கினார்.

    "குருநாதா….!
    உங்கள் சீடர்களில் 
    மிக உயர்ந்தவர் 
    சதாசிவ சுவாமிகள்.

    அவரின் எல்லை சமஸ்தான வித்வான் அல்லவே ?!!!

    பரிசில் பெற
    வருகின்ற புலவர்களிடம் தன் மேதாவித்தனத்தைக் காண்பித்து 
    அவர்கள் வயிற்றில் அடிக்கிறார்.

    அவர்கள் சமஸ்தானத்தையும் சேர்த்தே திட்டுகிறார்கள்…

    எப்பேர்ப்பட்ட மகான்
    நம் சதாசிவம் சுவாமிகள்..?

    அவர் நோக்கம் 
    தவமாய் அல்லவா இருக்கவேண்டும்?

    அதில் அல்லவா 
    அவர் மேலும் 
    சிறக்க வேண்டும்.

    தவத்தில் சிறந்தால்
    மைசூர் மகாராஜா என்ன ….
    எத்தனை மன்னர்கள் அவரைத் தரிசிக்க காத்திருப்பார்கள்..!"

    பரமசிவேந்திராவின் மனமறிந்து 
    சாஸ்திரியார் வீசிய கத்தி
    பதம் பார்க்க ஆரம்பித்தது.

    "இங்கே 
    அழைத்ததாகச் சொல் "
    குறைவாகவே சொன்னார். கோபம் நிறைந்திருந்தது..

    காரணம்
    சாஸ்திரியார் 
    சுட்டிக்காட்டிய குறை நியாயமாகப்பட்டது குருநாதருக்கு.

    மைசூர் திரும்பிய சாஸ்திரியார் 
    மெத்த நடிப்போடு
    "சுவாமி,…..
    உங்களை குரு பார்க்க விரும்புவதாகச் 
    சொல்லச் சொன்னார்"

    குரு அழைப்பை ஏற்று 
    குரு நினைவுகளோடு 
     பதவியை  ராஜினாமா 
    செய்து விட்டுப் புறப்பட்டார் மைசூர் சமஸ்தான வித்வான் சதாசிவம்.

    ஒளியின் வேகத்தை விட வேகமாக மடம் விரைந்து குருநாதர் தாளடி பணிந்தார் சிஷ்யகோடி.

    குரு ஏதும் பேசவில்லை.
    கண்ணீரோடு குருவின் முகமும் பாதமும் பார்த்தார்.

    "ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ …
    உன் வாயை அடக்கக் கற்றுக் கொள்ளவில்லையா ?" 

    குரு
    ஒரே வார்த்தையில்  'வாயடக்கு '
    என்று
    உபதேசம் அருளியதாக நினைத்தார் சீடர்.

    அன்று 
    பேசியது தான்
    அவர் பேசிய
    இறுதிப் பேச்சு.

    பின் எப்போதும் 
    பேசவே இல்லை.

    குருவின் 
    ஒரு சொல் 
    சீடரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது.

    தாயின் வார்த்தையால் பசியைத் துறந்தவர்
    குருவின் வார்த்தையால் பேச்சைத் துறந்தார்.

    ஆம்……
    'நாவடக்கு '
     மாதாவின் சொல்.
    ' வாயடக்கு '
    குருவின் உபதேசம். 

    'அடுத்து?' 
    என்கிற மாதிரி 
    குருவைப் பார்த்தார் 
    மெளனம் கண்ட சதாசிவம்.

    "விரும்பிய இடம் செல்…. தவம் செய்…."

    'வீணே ஆடைகள் எதற்கு..?' என்று உடைகளுக்கும் விடைகொடுத்தார்.

    திகம்பரராகவே அலைந்தார். நிர்வாணமாகவே திரிந்தார்.

    மக்கள் 
    நடமாட்டமில்லாத 
    சம தரைப்பகுதி,
     மலைஉச்சி,
    நதிக்கரை, 
    அடர் வனம் 
    அவர் 
    வாசஸ்தலங்கள் ஆகின. 

    இப்படித்தான் 
    ஒரு முறை….

    எங்கோ ஒரு திறந்தவெளியில் படுத்திருந்தார். 

    தலைக்கு ஏதுவாக
    மண் குவித்து 
    தலை சாய்த்திருந்தார்.

    அப்போது வந்த 
    கிராமத்து மக்கள் 
    "முற்றும் துறந்தவருக்கு தலையணைப் பாரு"
    கேலி செய்தபடி சென்றுவிட்டனர்.

     'என்ன இது…
     வம்பா போச்சு..'
     என நினைத்தாரோ என்னவோ மறுநாள்
    மணல் குவிக்காமல் 
    தலை சாய்ந்து இருந்தார்.

    அப்போதும் ஒரு 
    விமர்சனம் வந்தது.

    " நாம் நேற்று சொன்னதைக் கேட்டு சாமிக்கு கோபம் வந்துவிட்டது…பாரு…"

    வேத சித்தாந்த 
    யோக ஞானிக்கு 
    அதிர்ச்சி.

    குருவிடம் விளக்கம் கேட்டார் .

    "அகந்தையை வீடு…" அற்புதமாய் சொன்னார்.

    "பிறர் சொல்லுக்கு 
    செவி கொடுக்காதே… கோபம் தவிர்…"
    குருவிடம் கிடைத்தன உபதேச சொற்கள்.

    அதன்பின் 
    அவர் வாழ்வு முற்றிலும் குறை ஒன்றும் இல்லாமல்
    இறை ஒட்டியே இருந்தது.

    ஐந்து சிவயோகங்கள்
    அனுபவித்தார்.. தன்னிகரில்லா 
    திருமூலர் 
    சொல்லிச் சென்ற யோகங்களில் 
    கரை கண்டார்.

    எல்லா சித்திகளும் கைகூடின.
    தன்நிலை மறந்தது 
    அதில் ஒன்று.

    ஆகாயத்தில் பறந்தவர் பிறர் கண்களுக்குப் புலப்படாமல் பயணித்தார்.

    மண்ணுக்குள் புதையுண்டு பல காலம் கிடந்தார். 

    கரம் வெட்டப்பட்ட போதும், முள் செடிகளுக்கிடையில் நெடுதுயில் கொண்ட போதும் ரத்தம் பீறிட்டது உணராமல் கடந்தார்.

    அவர் நிகழ்த்திய அற்புதங்கள் 
    திட்டமிட்டவை அல்ல. 
    சித்துகளை உலகுக்கு காட்டும் 
    வீண் விளம்பரங்கள் அல்ல.

    உடல் உணர்ச்சிகள் இன்றி வெட்கம், துக்கம், மகிழ்வு உள்ளிட்ட மன உணர்வுகள் ஏதுமின்றி 
    ஏகாந்த நிலையிலேயே 
    இருந்து வந்தார். 

    அவர் பாட்டுக்கு அவர் இருந்தார். 
    அதுதானே 
    சித்தன் போக்கு ?

    உணர்வு அற்ற நிலை என்பது  வெகு சில சித்தர்களுக்கே சாத்தியம்.

    அவர்களில் முதன்மையானவர் 
    சத்குரு 
    சதாசிவ பிரம்மேந்திராள்.
     

  • சித்தர்கள்  போற்றிய மௌன குரு

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    மதுரையம்பதியில் மாசுமருவற்ற 
    வைதீக தெலுங்கு
    பிராமணர் குலத்தில் அவதரித்தது 
    ஓர் ஆண் மகவு.

    தந்தை 
    சோமநாத அவதானியார். தாய்
    பார்வதி அம்மை.
    காலம் 
    18ஆம் நூற்றாண்டு.

    அக்குழந்தைக்குப்
    பெற்றோர் வைத்த பெயர் சிவராமகிருஷ்ணன்.
    வீட்டில் விரும்பி அழைத்த செல்லப்பெயர் 
    பிச்சுக்குப்பன்.

    தந்தை சோமநாதரே
    பெரிய யோகி.
    தாய் பார்வதி
    சிவபக்தை.

    இருவரும் ராமேஸ்வரம் யாத்திரை சென்று நீண்டநாள் 
    பிள்ளையில்லா குறையை இறை முன்வைத்து சத்புத்திரன் வேண்டும் என்று தொழுதபடி இருந்தனர்.

    இறையனார்
    இருவர் கனவிலும்
    ஒரே சமயத்தில் தோன்றி 'சத்புத்திரனே பிறப்பான்' என்று உறுதி தந்தார்.

    அப்படித் தவமாய் தவமிருந்து வந்துதித்த அக்குழந்தை….
    ஓர் ஞானக் குழந்தையென ஒரு சில நாட்களிலேயே பெற்றோருக்குப் புரிய ஆரம்பித்தது.

    ஆம்….
    விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது. 

    முற்பிறப்பில் கற்றதெல்லாம் இப்பிறப்பிலும் அப்படியே நிறைந்திருந்தது.

    குருகுலக் கல்வி உறுதுணை செய்ய படிப்படியாய் 
    வளர்ச்சி கண்டது.

     வடமொழி வசமானது.

    தெலுங்கராய் பிறந்தும் தமிழராய் தவழ்ந்தும் இறையருள் கூடி சமஸ்கிருத ஞானம் நிறைந்து நின்றது.
    பற்பல பல கலைகள்….

    கற்றுத் தந்தவரே 
    போற்ற 
    சிறந்து விளங்கினான்
    சிறுவன் சிவராமகிருஷ்ணன்.

    'பால பருவத்திலேயே திருமணம் '
    அக்கால மரபு.

    எனவே
    பள்ளிப் பருவத்திலேயே 
    தெலுங்கு பிராமணர் முறைப்படி 
    கல்யாணம் 
    இனிது முடிந்தது.

    பால விவாகம்
    நூல்கள் படிப்பதற்கும் கல்வி கற்பதற்கும் இடையூறாய் இல்லை.

    சிறு பிராயத்திலேயே கல்வி கேள்விகளில் சிறந்திருந்தான் சிவராமகிருஷ்ணன்.

    அவனைக் 
    கண்ட மாத்திரத்திலேயே  'ஆகா…பேஷ்… .. பேஷ் '
    என்று வியந்து 
    வாழ்த்தினர் 
    ஆன்றோரும் சான்றோரும்,

    எல்லாம் சரியாகத்தான் போனது. 
    வீட்டில் ஒரு விழா அமர்க்களமாய் 
    நடக்கும் வரை.

    அது சமயம்
    சிவராமகிருஷ்ணனின் பிஞ்சு மனைவி பூப்படைந்திருந்தாள்.

    வீடு விழாவாக களைகட்டியிருந்தது. உறவினர் நண்பர்கள் உளம் மகிழ்ந்து கூடியிருந்தனர்.

    ஆளாளுக்கு ஒரு வேலை. பரபரப்பாய் இருந்தது வீடு.

    சிவராமகிருஷ்ணன் அன்றும் விடுப்பெடுக்காது கல்வி கற்க பாடசாலை சென்றுவிட்டான். 

    வீடு திரும்பிய வேளை
    வீட்டில் கூப்பாடும் கும்மாளமும் நிறைந்திருந்தது.

    விருந்து  அப்போது தான் தயாராகிக் கொண்டிருந்தது.

    சிவராமகிருஷ்ணனுக்கு அது பசி வேளை. கல்விச்சாலை செல்லும் அவசரத்தில் பாவம்….
    காலையிலும் உண்ணவில்லை.

    "பசிக்கிறது' என்றான்.
    நண்பர்கள் பரிகசித்தனர்..

    "அடேய்… என்ன பசி ?
    அந்தப் பசியா….?! "

    அன்றைய விழா முடிவில் சாந்திமுகூர்த்தம் என்பது மரபு.
    எனவே அவர்கள்
    கேலியில் 
    அர்த்தம் இருந்தது. 

    அடுப்படி சென்று அம்மாவைக் கேட்டான் "அம்மா பசிக்கிறது…
    அன்னம் வேண்டும்.."

    "டேய் பிச்சு ….
    அச்சு பிச்சுன்னு அலையாதே….
    பசி பொறுத்துக்கோடா …

    ஒரு நாள் பட்டினி கிடந்தால்
    குடிமுழுகிப் போய்விடாது..

    பேசாம இங்கேயே உட்கார்ந்து இரு…"

    போகிறபோக்கில் கடுப்பாய்
    அலட்சியமாய் சொல்லிவிட்டு 
    ஒரு மூலையைக் காட்டினாள்,
    அவசரகதியிலிருந்த அன்னை.

    அறிவுப் பசி
    நிறைந்திருப்பதைப்போல வயிற்றுப் பசியும்
    நிறைய வேண்டும் 
    என நினைத்திருந்த சிவராமகிருஷ்ணன்  யோசிக்க ஆரம்பித்தான்..

    நேரம் ஆக ஆக
    பசி பொறுமையைச் சோதித்தது. 

    உற்ற நண்பர்களின் 
    கேலி வெறுப்பேற்றியது.

    பெற்ற தாயின் உதாசீனம் சிந்திக்க வைத்தது.

    சிவராம கிருஷ்ணனின்
    திருமணத்தன்று கூட இப்படித்தான்.

    கல்யாண கலகலப்பில் மாப்பிள்ளையை யாரும் கண்டு கொள்ளவில்லை. மணமகனுக்குப் பசிக்கும் என யாருக்கும் 
    தோன்றவே இல்லை.

    அவரவர் வேலையில் அவசரமாய் இருந்தனர்.

    இன்றும் அதே நிலை.

    சிந்தனை தலைதூக்கியது. மகிழ்ச்சி மறைந்தோடியது.

    புதிய எண்ணம் பூத்தது.

    எல்லாம்  வேஷம் 
    சுற்றம் 
    உற்றம்
    நட்பு
    உறவு
    தாய் 
    மனைவி 
    எல்லாமே வேஷம்.

    ஒருவன் பசியால் 
    செத்துக் கொண்டிருந்தால் கூட 
    இவர்களுக்கு கவலையில்லை.

    காலன் வந்து கவர்ந்து சென்றாலும் 
    தடுக்க வரமாட்டார்கள்."

    பூத்த எண்ணம்
    பூங்கொத்தாய்
    விரிந்தது.

    கபிலவஸ்துவின் அரசிளங்குமரன்
    ஒரு நொடியில் முடிவெடுத்து 
    அரண்மனை துறந்தது துறவறம் பூண்டது, 
    ஞானம் பெற்றது நினைவுக்கு வந்தது.

    சித்தார்த்தன் 
    கௌதம புத்தர் 
    ஆன காட்சி 
    மனதின் சாட்சியானது.

    திருவெண்காடர்
    'காதற்ற ஊசியும் 
    வாராது காண் கடைவழிக்கே '
    என்ற இறைவாக்கை உணர்த்த ஒரு நொடியில் பட்டினத்து அடிகள் ஆனது நினைவில் வந்து நின்றது.

    ஒரே நொடிதான்.
    ஒரே ஒரு நொடிதான். 
    அந்த நொடி
    வாழ்வின் போக்கையே மாற்றி விடும்.

    சிவராமகிருஷ்ணன் 
    அந்த ஒரு நொடியில் முடிவெடுத்தான்.

    'உண்மை வேறு '
    என்ற 
    உண்மைத் தேடலில் விடைகொடுத்தான் விருந்திற்கு..
    விழாவிற்கு… விருந்தினர்க்கு….
    உறவுக்கு…..
    வீட்டுக்கு .

    வீட்டை விட்டு வெளியேறினான்.

    அப்போதும் 
    அவனுக்குப் 
    பசி இருந்தது.

    அது வேறு பசி….
    ஆசிரியர் கற்பிக்கும் அறிவுப்பசி அல்ல…
    வேறு பசி…
    குரு தீர்க்வல்ல
    ஞான பசி….

    தேடல்….
    உண்மையைத் தேடும் தேடல்..
    இறை தேடல்..
    இரை தேடல் அல்ல…
    இறை தேடல்.

    இல்வாழ்க்கை விடுத்து 
    இறை வாழ்க்கையை நிறையெனக்  கொண்ட இளம் வாலிபனின்
    இறை தேடல்…
    நிறை தேடல் …
    ஞானத் தேடல்…

    சிவராமகிருஷ்ணனின் கால்கள் சென்ற இடம் கும்பகோணம் ஸ்ரீமடம். முன்பு
    கல்வி பெற்ற குருகுலம்.

    அங்கு தான் 
    சிவராமகிருஷ்ணனின் குருகுல குரு 
    பரமசிவேந்திர சாஸ்திரி வீற்றிருந்தார்.

    சிவராமகிருஷ்ணன் கண்கள் அவரை தரிசித்தன.
    கரங்கள் குவித்தபடியே
    தாழ்பணிந்தான். சரணடைந்தான்.

    சிவராமகிருஷ்ணனின் விருப்பத்தையும் வைராக்கியத்தையும் அறிந்த குருநாதர் வியந்தார்.

    அதுவே பக்குவ நிலை என்பதை அனுபவித்தறிந்திருந்த குருநாதர்
    தன்  மாணவன்
    உலக வாழ்க்கையின் இன்ப துன்பங்களை வெறுத்துவிட்டு வந்திருப்பதைப் பாராட்டி அரவணைத்தார்.

    அன்றே அப்போதே
    உபதேசம் 
    ஆரம்பம் ஆனது.

    முன்பே 
    குருகுலக் கல்வி முடிந்தவுடன் திருவிசைநல்லூர் சென்று ராமையா சாஸ்திரிகளிடம் வேதாந்தம் கற்றிருந்ததும்
    'அய்யர்வாள் '
    என அறிஞர்களால் போற்றப்பட்ட 
    ஸ்ரீதர வெங்கடேசர் என்கின்ற 
    போதேந்திர சுவாமிகள், பிச்சாண்டார்கோவில் மகாபாஷ்யம் 
    கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் 
    ஆகியோரிடம்  
    ஆழப் பயின்றிருந்த
    வேத நுட்பங்களும்
    சிவராமகிருஷ்ணனை
    விரைவில்  ஞானம் பெற்றவனாக்கின..

    அது இறை விருப்பம்  அன்றி வேறு என்னவாயிருக்க முடியும் ?

    குரு பரமசிவேந்திரா 
    பரமே சிவனென
    திகழ்ந்த 
    சிவம் திகழ்ஞானி.

    அவர்தம் 
    மடம் வந்த வேளை
    சிவராமகிருஷ்ணனின் பசிப்பிணி முற்றிலும் பறந்து போனது.

    பசி என்ற சொல்லே 
    அதன் பின்னர்
    அவன் வயிற்றிலும் 
    வாயிலும் 
    ஏன் சிந்தையிலுமே எழவில்லை.

    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் சிவராமகிருஷ்ணன் 
    குரு மெச்சும் சீடனாய் 
    வேதாந்த வித்தகனாய் தர்க்கத்தில் வல்லவனாய் சாஸ்திர ஞானியாய் மிளிர்ந்து ஒளிர்ந்தார்.

    ஸ்ரீமடமெங்கும்
    சிவராமகிருஷ்ணன் பற்றிய பேச்சே இருந்தது பாராட்டும் மிகுந்தது.

    ஒரு நாள்….
    பரமகுரு 
    பரம சிவேந்திரா 
    சிவராம கிருஷ்ணனை அழைத்தார்.
     
    கும்பகோணம் 
    ஸ்ரீ மடமே 
    உச்சியில் வைத்துக் கொண்டாடியவனை
    உச்சி முகர்ந்து 
    "நீ உச்சத்தில் ஜொலிக்க வேண்டியவன் "
    மெல்ல சொன்னார்.

    கூடவே 
    பெயர் மாற்றம் தந்தார்.

     சதாசிவன் என்னும்
     புதுப் பெயரைச் சூட்டினார்.

    "ஈஸ்வர சொருபங்களுக்கெல்லாம் அதிபதியே சதாசிவம்.

    சதா சிவத்துடன் இணைந்திருப்பவள் உலகாளும் உமையவள் மனோன்மணி .

    அவளே சித்தர்கள் வணங்கிய தெய்வம்.

    அவள் துணையின்றி உயர்நிலை 
    உய்ய முடியாது… 

    நீ இனி
    சதா சிவமென இரு ."

    சதாசிவ – மனோன்மணி பெருமைகளை 
    எடுத்துக் கூறி 
    சீடருக்கு 
    சதாசிவன் 
    என நாமம் சூட்டினார் குருநாதர்.

    பின்னாளில் 
    யோக சித்திகளில் 
    சிறந்து 
    உலகை ஆளப்போகும் சீடருக்கு 
    சதாசிவம்
    என பெயரிட்டது வீண்போகவில்லை.

    அச் சீடர்
    அகிலம் வணங்கும் பேராற்றல் கொண்டவராக
    வல்லமை நிறைந்தவராகவே
    வலம் வந்தார்.

    'திருமூலருக்கு 
    அடுத்து 
    யோக சாதனைகள் அனைத்தும் 
    முழுதாய் செய்தவர்'
    என சித்தர் பரம்பரை பிரமித்து சுட்டிக்காட்டும் யோக சித்தராக விளங்கினார். 

    'மௌன குருவே'
    என 
    தாயுமானவரால் துதிக்கப்பட்ட
    அவர் ….

    பற்றற்றவர்..
    பேச்சற்றவர்…
    உடையற்றவர்….
    உணர்வற்றவர்….. 
    அவர்……. 

    பிரம்மேந்திரர்..
    சதாசிவ பிரம்மம்…
    சதாசிவ பிரம்மேந்திரர்.
     

  • கஞ்சனைக் கவிஞனாக்கிய பாண்டுரங்கன் 

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சீனிவாசன்.

    அந்த ஊரில் மிகப் பெரிய செல்வந்தர்.
    சாதாரண செல்வந்தர் அல்ல. இன்றைய மதிப்பில் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதி.
    செல்வச் சீமான் தான். ஆனால்  மகா கஞ்சன் கஞ்சத்தனமே' தனம்' என்று வாழ்ந்தவர்.

    ஒரு நாள் 
    ஒரு வயதான அந்தணர் அவர் கடைக்கு வந்தார்.  
    கை பிடித்த படி ஏழு வயது பாலகன்.

    சீனிவாசனுக்கு இந்த மாதிரி ஆட்களை அறவே பிடிக்காது.கேவலமாய் பார்ப்பார். படு கேவலமாய் சாடுவார்.

    வந்த பிராமணர், "ஐயா… தர்மபிரபு…." என்று வறுமையை விஞ்சிய 
    பசிக் குரலில் பவ்யமாக கை கூப்பினார்.

    சீனிவாசன் கடைக்கு உள்ளே யாரையோ அழைக்கிறார் போலிருக்கிறது என கம்மென்று இருந்தார்.
    வந்தவர் மீண்டும் அழைத்தார் "ஐயா….தர்ம பிரபுவே…சுவாமி…"

    "டேய் யாருடா நீ…" அதட்டினார் சீனிவாசன்.

    "ஐயா… நான் ஒரு ஏழை பிராமணன். இவன் என் ஒரே மகன். வயதாகிறது…. இவனுக்கு உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் கொஞ்சம் கருணை காட்டினால் பூணூல் போட்டு விடலாம்.."

    "ஏதடா …..காலங்காத்தாலே தொந்தரவு…..  என்ன எழவு …போ.…போ என்னிடம் பணம் இல்லை" பஞ்சப் பாட்டு பாடினார் சீனிவாசன்.

    எவ்வளவோ கெஞ்சினார் வந்த அந்தணர்.
    கல்நெஞ்சம் கரையவில்லை.

    " போ போ….
    பிச்சை எடு ….காசு தேறும்.." பிழைப்புக்கு வழி சொன்னார் செல்வ பிரபு.

    மெல்ல நகர்ந்து  மீண்டும் சீனிவாசனின் முகம் பார்த்தார்.

    அவர் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார். அவர் கண்களும் கைகளும் முகமும் ஏழை பிராமணரை வேகமாக அனிச்சையாக விரட்டின.

    அன்று முதல்  தினமும் வருவார்.
    உதவி கேட்பார்.பணக்காரர் பலமாக விரட்டுவார். பணிவோடு போய்விடுவார் ஏழை பிராமணர்.

    ஒருநாள் கடை வாசலுக்கு வந்தவர் "வேறு வழியில்லை. யாசகம் வாங்காமல் நகர மாட்டேன்" என பிடிவாதம் பிடித்தார் .

    "தினமும் இது ஒரு ரோதனையாப் போச்சு" என தலையில் அடித்துக்கொண்ட சீனிவாசன் 
    கல்லாப் பெட்டியை திறந்து துழாவித் துழாவி ஒரு காசு எடுத்து பிராமணர் மீது வீசி எறிந்து "ஓடிப் போ… ஒழிந்து போ" என சாபமிட்டார்.

    பிராமணர் முகத்தில் ஏக சந்தோஷம் . காளை மாட்டிடம் பால் கறந்த சந்தோஷத்துடன் காசை பிடித்து ஏழ்மை பூத்த கண்கள் அருகே கொண்டு சென்றார்.

    அது ஒரு செல்லாத காசு.

    " ஐயா… இது செல்லாது எதற்கும் உதவாது …நல்ல காசு கொடுங்கள்.. புண்ணியமாய் போகும்"

    சீனிவாசனிடமிருந்து கோபச் சொற்களே வேகமாய் வந்தன.
    "ஏதேனும் பொருள் கொண்டா…. நான் அதுக்கு வேண்டுமானால் பணம் தர்றேன் ….போய்யா ..போ"

    முதியவருக்கு கோபம் வரவில்லை .
    வீம்புடன் வீட்டிற்கு விரைந்தார்.

    அவர் வீட்டிற்கு அல்ல. சீனிவாசனின் சிங்கார வீட்டிற்கு.

    சீனிவாசனின் மனைவி சரஸ்வதி நல்லவள்.உத்தமி. அதீத தெய்வ பக்தி கொண்டவள். உதவும் மனம் கொண்டவள்.

    அந்த அழகிய நல்லாள் ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.

     பிச்சை கேட்டு ஒரு வயதான ஏழை அந்தணர் கைப்பிடியில் களங்கமற்ற ஒரு சின்னஞ்சிறுவனோடு வாசற் கதவருகே நிற்பதைக் கண்டு வாசலுக்கு ஓடி வந்தாள்.

    பிராமணர் தன்  நிலையை சொன்னார்.மகனைக் காட்டி பூணூல் கல்யாணத்திற்கு உதவி கேட்டார்.

    "ஐயா… என் நிலைமை உங்களுக்குத் தெரியாது.

    என் கணவர் எனக்கு கணக்குப் பார்த்து எண்ணியெண்ணி கணக்காய் காசு தருவார். என்னிடம் பணமும் இல்லை. அவர் பொருளை எடுத்து தர உரிமையும் இல்லை.

    அவருக்குத் தெரிந்தால் அவ்வளவு தான். உங்களோடு நானும் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிடும்" கண்களிலிருந்து கண்ணீர் உருண்டது.

    "கவலைப்படாதே தாயே…! அவர் உடமைகளைத் தந்தால் தானே பிரச்சனை.!

    உன் நகைகள் ஏதேனும் தா.
    அது அவருடைய சொத்து அல்ல.

     உன் தாய் வீட்டுச் சீதனம். உன் மகிழ்ச்சிக்காக விருப்ப செலவுகளுக்காக கொடுக்கப்பட்டவை.

    அவரிடம் அனுமதி தேவையில்லை தாயே !
     உன் குலம் விளங்கும். உன் கணவருக்கும் புண்ணியம் கிட்டும். 

    ஒரு கஞ்சனிடம் உதவி கேட்டு  அவமானப்பட்டே  இங்கே வந்திருக்கிறேன்".
    கருணை மிக்க சரஸ்வதியின் கைகள் மூக்கின் அருகே சென்றன.

    சில நொடிகளில் அவள் வைரமூக்குத்தி பிராமணரின் கைகளில் அமர்ந்தது.
    "தீர்க்காயுசா இருமா…
    உன் மணாளனுக்கும் நலம் கிடைக்கட்டும். அவர் ஓங்கு புகழ் பெறட்டும்" விடைபெற்றார் அந்தணர்.

    அவர் பிரச்சனை அத்தோடு முடிந்தது.

    ஆனால் வைர மூக்குத்தி வழங்கிய வள்ளல் பிராட்டிக்குத் தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

    காரணம் மூக்குத்தியைத் தானம் பெற்ற தள்ளாத வயது பிராமணர் 
    நேரே சீனிவாசன் கடைக்குச் சென்று மூக்குத்தியை கொடுத்து அதை வைத்துக்கொண்டு பணம் தாருங்கள் என கம்பீரமாக கௌரவமாக கேட்டார்.

    மூக்குத்தியை வாங்கி நோட்டமிட்ட சீனிவாசனுக்கு இதை எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற ஐயம் வந்தது.

    " இப்ப பணம் இல்லை ….மாலை வா…. பணம் வந்துவிடும் …தரேன்"
    என சொல்லி விட்டு, அவரின் பதில் பெறாமலேயே பெட்டியில் போட்டு பூட்டி கொண்டார்.

    " மாலை கண்டிப்பாக 
    பணம் வேண்டும். 
    பணம் கிடைத்தால் தான் பையனின் பூணூல் கல்யாணம் நடத்த முடியும். ஆயிரம் வேலை இருக்கு. மறந்துவிடாதே" என்றபடியே நடையைக் கட்டினார் பிராமணர்.

    அவரின் தலை மறைந்தவுடன் 
    அவசர அவசரமாய் வீடு விரைந்தார் சீனிவாசன்.

    அவரின் சந்தேகத்திற்கு வீட்டில் விடை இருந்தது.

    மனைவியின் மூக்கு மூளியாக இருந்தது.
    "எங்கே உன் மூக்குத்தி ? " வெடித்தார்.
    "வெள்ளிக்கிழமை அதுவுமா… போ…போ மூளியா நிற்காதே…" விரட்டினார்.

    "குளிக்கும்போது கழற்றி வைத்தேன்" பயந்தபடி சொல்லிவிட்டு துளசிமாடம் விரைந்தாள் சரஸ்வதி.

    'இனி அவ்வளவுதான்… தொலைந்தேன்….. அவர் தொலைப்பதற்கு முன்பே…. நாமே தொலைந்து விடுவோம்' என ஒரு பாத்திரத்தைக் கையில் ஏந்தியபடி துளசி மாடத்தை வலம் வந்தாள்.

    அந்த பாத்திரத்தில் நொடிப்பொழுதில் உயிரை எடுக்கும் விஷம்.
    'இறைவா என்னைக் காப்பாத்து.. .. இல்லையேல் உயிரை எடுத்துக்கொள்'
    என்று முணுமுணுத்தபடி மூன்றாவது சுற்று வரும்போது 
    பாத்திரத்தில் ஏதோ விழும் 
    மெல்லிய சப்தம்.

    கண்விழித்து கைவிட்டு விஷத்தை துழாவிய போது கையில் பட்டது
     ஒரு சிறு பொருள். 

    அது அவள்  தந்த அதே வைர மூக்குத்தி.
    பிரார்த்தனையின் பலனை பூரணமாக உணர்ந்து கொண்ட திருப்தியில் மூக்குத்தியைக் கண்களில் ஒற்றிக்கொண்டு மூக்கில் மாட்டிக் கொண்டாள் மாதரசி.

    "இவ்வளவு நேரமா மூக்குத்தி மாட்ட"
     உள்ளே இருந்து கோபக் குரல் ஒலிக்க….. "வந்துட்டேன்… சுவாமி" வீட்டுக்குள் நுழைந்தாள், அந்த ஆசாமியை சுவாமி என்று அழைத்தபடியே.

    அவள் எதார்த்தமாக தான் சுவாமி என்று அழைத்தாள்.
    ஆனால் அதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது துளசிமாடம்.

    கண்கள் சிவக்க காத்திருந்த கணவர்
    அவள் முகத்தை பார்த்தவுடன் 
    'மனைவியின் மூக்குத்தி அல்ல' திருப்தி உற்றார்.

    ஆனால் அவர் மூளை இன்னொரு சந்தேகத்தை எழுப்பியது.
    எதுவும் சொல்லாமலேயே கடைக்கு விரைந்து ஓடினார்.

    கடைக்கு வந்த 
    கஞ்ச மகாபிரபு 
    கல்லாப் பெட்டியை 
    அவசர அவசரமாகத் திறந்தார். கண்விரித்து கைவிரித்து துழாவினார். வைத்த இடத்தில் தேடினார்.

    கிடைக்கவில்லை.
    பதற்றத்தோடு பயமும் குடிகொண்டது. வீட்டிற்கு வந்து விடிய விடிய தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தார். எதுவும் புரியாத சரஸ்வதி துளசி மாடத்தை துதித்தபடியே இரவைக் கழித்தாள்.

    மறுநாள் காலை  கடைதிறக்கப் போனார் சீனிவாசன்.
    "ஐயா… பிரபுவே"
    அய்யரின் குரல் கேட்டு 
    பயந்து நடுங்கினார்.

    " இன்று பணம் தருவதாக சொன்னீர்கள். ஆயிரம் வேலைகள்.அப்படியே போட்டுவிட்டு வந்தேன். பணம் தாருங்கள் "
    "பணம்… பணம் " பிதற்றினார் 
    செல்வச் சீமான்.

    "ஐயா…  தாமதம் ஆகும் என்றால் பரவாயில்லை.. நகையைத் தாருங்கள்.. வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்"

    பதில் இன்றி தவித்தார்
    பணக்காரர். 

    " மன்னித்து விடுங்கள்.. மாலையில் பணம் வந்துவிடும். கண்டிப்பாகச் சாயந்திரம் தருகிறேன்." வெட்கி தலைகுனிந்து பொய் சொன்னார்.

    "சரி…சரி…சாயந்தரம் ஏமாற்றி விடாதே.
    ஏதும் சால்ஜாப்பு 
    சொல்லி விடாதே."

    கிழவர் நகர்ந்தார்.
    பெருமூச்சுவிட்ட பெருந்தனக்காரர் அவரிடம் ஏதோ சூட்சுமம் இருப்பதாக உணர்ந்தார்.

    கிழவர் நகர்ந்தபோது விஷமமாக புன்னகைத்தபடியே சென்றதை அவர் கவனித்து இருந்ததால் அந்த சூட்சமம் அறியத் துடித்தார்.

    உடனே கடைப் பையனை அழைத்து,  "அம்பி …அந்த கிழவன் பின்னாடியே போ. எங்கு போகிறான் ? என்ன செய்கிறான் ? கவனித்துப் பார்த்து வந்து உடனே சொல்" நிலைகொள்ளாமல் உத்தரவிட்டார்.

    கொஞ்ச நேரத்தில் பையன் பதைபதைப்புடன் 
    ஓடி வந்தான்.

    "முதலாளி… அந்த கிழவர்  மூன்று தெருக்கள் தாண்டி கோயிலுக்குச் சென்றார்.
    நான் அவர் 
    கவனிக்காதபடி பின்னாலேயே போனேன்… ..
    போனவர்….!!"
    விக்கித்தான். எச்சில் விழுங்கினான். பயந்த மாதிரி கைகூப்பியபடியே திக்கினான்.

    "சொல்லுடா.… பயந்தாங்கொள்ளி…. என்ன நடந்தது.? ஏதேனும் மிரட்டினானா அந்த கிழவன்?"
    "…. கோயிலுக்குப் போன அவர் நேராக கர்ப்பகிரகத்துக்குள் போனார். அப்படியே… மறைந்து போனார்"

    அந்த சிறுவனின் கண்களில் கண்ணீரும் ஆனந்தமும் வெளிப்பட பரவசத்தில் இருந்தான்.

    சீனிவாசன் திடுக்கிட்டார். 
    பயத்தோடு  வீட்டிற்கு விரைந்தார்.

    கடையில் நடந்ததை மனைவியிடம் சொன்னார்.
    மனைவி சரஸ்வதியும் வீட்டில் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் ஒப்பித்தார்.

    சீனிவாசனுக்குப் புரிந்துவிட்டது.
    'வந்தது கிழவன் அல்ல…. சோதிக்க வந்தவர் பரம்பொருள் பாண்டுரங்கன்..'என நெகிழ்ந்தார். செய்வதறியாது திக்குமுக்காடினார்.

    அப்போது பூஜை அறையில் இருந்து 
    ஓர் அசரீரி எழுந்தது.
    "சீனிவாசா.…. 
    இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு செல்வச் செருக்கோடு இருக்கிறாயே..!.  
    தான தர்மம் செய்யாமல் 
    வெட்டி வேதாந்தம் 
    வறட்டுத் தத்துவம் பேசுகிறாயே ..? 
    உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்..!

     இதுவே தருணம்.
     நல்ல தருணம்.
    தான தர்மம் செய். உன் செல்வம் அனைத்தையும்  தர்மம் செய்து 
    புண்ணியம் தேடு. 
    அதுவே பிறவிப்பயன்.
     
    நெடுஞ்சாண்கிடையாக சீனிவாசன் பூஜையறையில் பாண்டுரங்கனிடம் 
    சரண் அடைந்தார்.

    எழுந்த போது அசரீரி  தொடர்ந்தது ,
    "இனி நீ சீனிவாசன் இல்லை. 
    ஊரும் உலகும் அழைத்த சீனிவாச நாயக் என்ற பெயரைத் துறந்து விடு. 

    இந்த ஊரின் பெயரே 
    உன் திருநாமம்…. 
    'புரந்தர கட.'

    ஆமாம் பக்தனே…
    இனி நீ புரந்தரதாசன்.

    நீ நாரதரின் அம்சம்.
    குரு வியாசராஜரை தஞ்சமடை. அவர் உபதேசம் தருவார்.
    கிளம்பு. தான தர்மம் செய்துவிட்டு 
    வியாசராஜரை சரணடை." அசரீரி விடைபெற்றது.

    புரந்தரதாசருக்கு 
    புதிய உலகம் தெரிந்தது. அது பிரபஞ்சமாய் விரிந்தது.
    அத்தனை சொத்துக்களையும் 
    தானம் செய்தார். 
    பரம ஏழையானர்.

    ஏழை அந்தணராக வந்து ஞானக் கண் திறந்த பாண்டுரங்களைப்
    பாடித் தொழுதபடி இல்லாளுடன் 
    ஹம்பி சென்று 
    குரு வியாசராஜர்
    பாதம் தொட்டார்.

    செல்வம் தராத 
    ஏகாந்த அனுபவங்கள்
    அவரை வலம் வந்தன.

    புரந்தரதாசர் 
    பக்திப் பெருக்கோடு 
    பாரத தேசத்தை
    மூன்று முறை கால்நடையாக வலம் வந்தார்..

    அவர் பாடியதெல்லாம் இறை பாடல்கள் ஆயின.  தெய்வம் மகிழும் தேவகானங்கள் ஆயின.

    அவரின் பாடல்களே திருவையாறு சத்குரு 
    ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அவரது அன்னை கற்றுத் தந்த பாலபாடம்.

    சரிகமபதநி எனும்
    ஏழு ஸ்வரங்களை
    சங்கீத உலகிற்கு 
    தந்தவர் புரந்தரதாசர்.

    சுமார் 4 லட்சம் 
    பக்தி பாடல்கள்
    அவர் அளித்த பொக்கிஷம்.
    பக்திக் கருவூலம். 
    ஞானப் புதையல்.

    அவரது ஒவ்வொரு வார்த்தையும் பாண்டுரங்கனை 
    அவனது உள்ளத்தை வருடும் மயிலிறகுகள்.

    உங்களுக்குத் தெரியுமா ?
    புரந்தரதாசர் 
    சினிவாச நாயக்காக இருந்தபோது பாரதத்தின் செல்வ குடிமகன்.

    அவரது சொத்து அன்றைய மதிப்பு 9 கோடி. இன்றைய மதிப்பில் பல லட்சம் கோடி.
    காலம் கிபி 1480 

    80 ஆண்டுகள் கழித்து புரந்தரதாசராக  புதுப்பிறவி எடுத்த போது அதாவது கிபி 1560 இல் பாரதத்தின் மிகப் பெரிய ஏழை. செல்லாக்காசு. ஓட்டாண்டி. 

    ஆனால் மகான்.

    புரந்தரதாசர் இறைவன் புகழ் பாடியபடியே இறையோடு கலந்தது
    கிபி 1584 ஆம் ஆண்டு.

    அனைத்தும் ஆண்டவனின் விளையாட்டு. பாண்டுரங்கனின் பரமபதம்.
     

  • பஞ்சம் போக்கிய  பெருஞ் சித்தர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    ஆடு மேய்த்த படி 
    மன விசாரணையில் ஆழ்ந்திருந்தார் 
    அந்த சித்தர்..

    சில காலமாக இப்படித்தான் 
    அவர் எப்போதும் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தார்.

    அவரை பித்தர் என்றே பெரும்பாலானோர் அழைத்தனர்.
    ஒருசிலர் சித்தர் என வணங்கவும் செய்தனர்.

    ' இதென்ன அநியாயம்…?

    மனித உறவு என்பதே உதட்டளவில் அருகி வருகிறதே…?
    உள்ளங்கள் கலப்பது
    வெறும் பேச்சளவாய் குறுகி வருகிறதே…? 

    குணம் கெட்ட உறவால் குற்றங்கள் மிகுகிறதே.!
    பக்தி வேசமாகி
    போலிகள் ஆட்டம் அதிகரித்து ஆர்ப்பரிக்கிறதே ..!

    நம்பிக்கை துரோகம்
    நயவஞ்சகம் 
    நாகரிகம் போல்
    நர்த்தனம் ஆடுகிறதே…..?

    கலங்கினார் சித்தர் பிரான்.

    இதன் விளைவு,
    எதில் முடியும் ?

    மக்கள் மனம் 
    பாழானால் 
    மழை நிற்கும்.

    வானம் விசனப்பட்டு தன்னிலை மறக்கும்.
    இடி,மின்னல், மழை மறக்கும்.

     பஞ்சமே பஞ்சமின்றி
     தஞ்சம் புகும் .

    சித்தர் கலக்கம் கொண்டார்.

    முன்னொரு நாளில் 
    மகா புருஷர் ஒருவர் கற்றுத்தந்த ஜோதிடக்கலை 
    நினைவுக்கு வந்தது.

    கட்டமிட்டார்.
    கவலை மிகக் கொண்டார்.

    '12 ஆண்டுகள் 
    கடும் பஞ்சம்'
    கணிப்பு கதறியது.

     சித்தர் மனம் பதறியது.

    'பெருமானே……
    ஆடுகள் என்ன செய்யும்
    மாடுகள் என்ன செய்யும் மக்கள் என்ன செய்வார்' துடித்தார்.
    துவண்டார். 
    துடிதுடித்தார்.

    விடிவெள்ளியாய் 
    அக்னி குஞ்சொன்று அகத்தில் உதித்தது.

    அடுத்த கணமே
     செயலில் இறங்கினார்.

    ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை உணவாக கொடுத்து 
    பழக செய்தார்.

    ஆங்காங்கே 
    சுவர் எழுப்பி
    வரகு அரிசி நிரப்பி 
    சேறு கொண்டு பூசிவைத்தார்.

    காலம் நகர்ந்தது. கணித்தபடி பஞ்சம் வந்தது.

    மரம் செடி கொடிகள் மட்டுமல்ல மக்களும் மடியத் தொடங்கினர்.

    உயிர்களும் பயிர்களும்
    கருகிச் சாய்ந்தன.

    சித்தர் மட்டும் 
    பஞ்ச பாதிப்பு 
    ஏதுமின்றி 
    காலம் தள்ளினார்.

     எப்படித் தெரியுமா …?

    பஞ்ச காலத்திலும்
    காட்டில் 
    எருக்கஞ்செடிகளுக்குக் குறைவிருக்காது. 
    அவை பூத்துக் குலுங்கும்.

    அவற்றை உண்டு 
    பழக்கப் பட்டிருந்த ஆவினங்கள் பசியாறின.

    எருக்கம்பூ உடம்பை அரிக்குமே ….?

    ஆடுகளும் மாடுகளும் அரிப்பு நீங்க சுவற்றில் உரசி உரசி சுகம் கண்டன.

    அவற்றின் உரசல்கள் சுவற்றின் உள்ளே இருந்த வரகரிசியை 
    வெளிக் கொணர்ந்தன.

    வரகரியை எடுத்து 
    சித்தர் அமுது 
    ஆக்கினார்.
    ஆட்டுப் பாலில் 
    கலந்து குடித்து பசியாற்றினார்.

    சித்தரின் இந்த யுத்தி அக்கம்பக்கம் பரவியபோது பிறரால் போற்ற முடிந்ததே தவிர அவர்தம் 
    பசியாற்ற
    முடியவில்லை .

    ஒரு காலத்தில் பைத்தியம் என பரிகசித்தவர்கள்,

    வரகரிசியோடு கலந்து சுவர் எழுப்பிய போது  'எடக்கு மடக்கு' என 
    கேலி பேசியவர்களில் செத்தவர் போக 
    மீதம் இருந்தவர்கள் ஓடிவந்தனர் சித்தரிடம் .

    "சாமி…. பஞ்சத்தால் 
    சாவது ஒருபுறம். … தாகத்திற்கு தண்ணீர் கூட இல்லை எங்களுக்கு .

    எங்களின் சாவு நிச்சயம். சாகிற வரை குடிக்க நீராவது கொடுத்து உதவுங்கள்"
    காலைப் பிடித்தனர்.

    ஞானி கனிந்துருகினார்.

    முதலில் பசி ஆற்றினார்.
    பின்
    " வாருங்கள்…."
    என்று அவர்களை அழைத்துச் சென்றார்.
    ஓர் இடத்தில் 
    குழி ஒன்றைப் 
    பறிக்கச் சொன்னார் .

    வந்தது பாரு ஊற்றென… தரை பிளந்து நீர் பீறிட்டது.

    திரண்ட மக்கள் 
    தாகம் நீங்கி 
    மனம் ஒப்ப .
    வாழ்த்தி வணங்கினர்.

    *சுவாமி ….
    நீங்கள்…
    எங்கள் குலசாமி" விண்ணதிரக் கூக்குரலிட்டனர்.

    ஊர்க்காரர்கள்  வாழ்த்தொலிகள் 
    மேலுலகிலும் எதிரொலித்தது.

    அது 
    நவகிரக நாயகர்கள் கூட்டத்தில் 
    விவாதம் ஆனது.

    " பஞ்சத்தை 
    ஏற்படுத்தியது நாம்.

     மக்களின் 
    பாவச் செயல்களால் தீர்மானிக்கப்படுவது பஞ்சம்.

    அதை மாற்ற இவர் யார் ? கோபப்பட்டனர் 
    கிரக நாயகர்கள்.

    "அவர் 
    மகத்துவமிக்க
    மகா புருஷர் ஒருவரால் ஞானம் பெற்ற 
    ஞான புருஷர்,"
     என்றார் சூரியனார்.

    "அவர் திருமாலின் அவதாரம் என்றொரு பேச்சு இருக்கிறது"
    என்று ஒரு மெல்லிய 
    குரல் எழுந்தது.
    அது சந்திரனின் குரல்.

     *அவருக்கு 
    ஞானம் தந்த 
    மகாபுருஷர் யார் தெரியுமா..?
    ….. போகர்"
     ஒலித்தது ஓர் ஓங்கிய குரல். ஆணித்தரமான அக்குரலுக்குச் சொந்தக்காரர் குருபகவான்.

    "அந்த மகானை நாம் பார்க்கலாம்…
    நியாயம் கேட்கலாம்…"
    இது சனி பகவான்.

    புத்தி நாயகன் புதனும்
    சுக நாயகன் சுக்கிரனும் வெற்றி நாயகன் செவ்வாயும் 
    தங்கள் அபிப்பிராயத்தை ஆழமாய் சொன்னார்கள்.

    'கேட்போம் நியாயம்'
    கூட்டம் ஏகமனதாகத் தீர்மானித்தது.

    பூமிக்கு 
    உடனே விஜயம் செய்தது.

     "வாருங்கள்.…. நவநாயகர்களே….." வரவேற்றார் சித்தர் பிரான்.

    சூரியன் சந்திரன் செவ்வாய் குரு புதன் சுக்கிரன் சனி ராகு கேது எனும் ஒன்பது நீதிமான்களும் புன்னகைத்து அமர்ந்தனர்.
    அவரவர் அமைப்பில்.

    கிரக அமைப்பு எந்த  நிலையிலும் எப்போதும்
    மாறக் கூடாதல்லவா ?!!

    எனவே அவ்விதம் அமர்ந்தனர்.

    "மகானே..
     எங்கள் சந்தேகம் 
    நீக்கப் பெற 
    இங்கு வந்துள்ளோம்…."
    சூரியன் ஆரம்பித்தார் .

    "எங்கள் சக்தியை
     தாங்கள் மீறி விட்டீர்கள்" சுக்கிரன் குற்றம் சாட்டினார் .

    "பஞ்சம் என்பது 
    நாங்கள் நிர்ணயித்தது…. அதை நீங்கள் 
    நீக்கி விட்டீர்கள்…." செவ்வாய் சினந்தார்.

     "ஈசனே ஒருமுறை 
    எங்கள் அனுமதியின்றி செயல்பட்டதால் 
    அவனே இயங்காமல் போய்விட்டான்.. தெரியுமா ?
    ராதுவும் கேதுவும் 
    கோபமாய் வெடித்தனர்.

    "சர்வசக்தி படைத்த எங்களை மீறி
    ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்…"
    சந்திரன் 
    அமைதியாகக் கேட்டார்.

    கேட்பார்களே தவிர மகாபுருஷரிடம் 
    கொஞ்சம் பயம் இருந்தது. எனவே பேச்சில் 
    பணிவிருந்தது.

    சித்தர் பிரான்
    கருணையோடு ஒவ்வொருவரையும் 
    உச்சி முதல் உள்ளங்கால் வரைபார்த்து விட்டு 'பதிலுக்கு முன்னர் உபசரிப்பு' என்றார் 
    மறுக்க முடியாத அன்போடு.

    வரகரிசி 
    ஆட்டுப்பால் விருந்து.

    உண்டனர் நவநாயகர்கள்.

    உண்ட களைப்போ சித்தரின் சித்தாடல் 
    உருவாக்கிய களைப்போ
    சில நொடிகளில் 
    உறங்கி போனார்கள்.

    சித்தர் பிரான்
    அவர்கள் தூங்கும் 
    அழகை ரசித்தபடி 
    ஜோதிடக் கலையின் ரகசியத்தை ருசித்தபடி அவர்களை மெலிதாய் தூக்கி நகர்த்தி
    கிரக நாயகர்களின்
    இடத்தையே
    மாற்றி வைத்தார்.

    'இனி பிரச்சனை-இல்லை.. பஞ்சம் வராது….'

    அதற்கேற்ற 
    கிரக அமைப்புகளை
    சரிசெய்த திருப்தியுடன் நவநாயகர்கள் விழித்தெழக் காத்திருந்தார் .

    சித்தரின் சாதுர்யத்தால் வெளியே
    மழை.. மழை… மழை….
    மாமழையாய்
    பொழியத் தொடங்கியது.

    மழை தந்த இளம் குளிரும் ஈரம் தந்த மண் வாசனையும்
    நவகிரக நாயகர்களின் தூக்கத்தைக் கலைத்தன.

    விழித்த நாயகர்கள் முதலில் 
    உறங்கிய ரகசியம் புரிபடாமல் திகைத்தனர்.

    அமைதியின் திருவுருவாய் சித்தர் பிரான்
    அமர்ந்திருக்க
    ஆனந்தம் தாண்டவமாடியது 
    அக் குடிலில்.

    மகா புருஷரின் மகாத்மியம்
    ஒரு நொடியில்
    கிரக நாயகர்களுக்குப் புரிந்தது.

    வெளியே மழை
    வெறித்தனமாய்  பெய்துகொண்டிருந்தது. உலகம் கண்டிராத பேய்மழை.

     "மன்னிக்கவேண்டும்…. நாயகர்களே…!

    மக்கள் துயர் கண்டு 
    மனம் பொறுக்காமல் உங்கள் இடங்களை மாற்றிவிட்டேன்.
    பஞ்சம் தவிர்த்துவிட்டேன்.

    "அபசாரம்…. ஐயனே..!

    முக்காலம் உணர்ந்த ஞானியே.!

    உங்கள் குணமறியாது உங்களைப் போன்ற சித்தர்களின் செயல் அறியாது
    பிறவியின் நோக்கம் புரியாது 
    நாங்கள் தான் தவறு செய்து விட்டோம். ஆசீர்வதியுங்கள்.

    உயிரினங்களின் மீது தாங்கள் காட்டும் 
    அன்பும் பரிவும் வழிபடத்தக்கது."

    சித்தர் பெருமானின் 
    அருளாசி 
    கிடைத்த பேரானந்தத்துடன்
    நவகிரக நாயகர்கள்
    வணங்கியபடி 
    வாழ்த்திய படி விண்ணுலகம் பயணித்தார்கள்.

    மழை 
    கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது.

    அந்த மழைச் சித்தர்
    ஒரு மலைச்சித்தரும் கூட. திருவண்ணாமலையில் 
    திருவருள் பொழியும் சித்தர் அவரே.

    அவர் மாற்றி
    அமைத்துத் தந்த
    கிரக நிலைகளே  இன்றளவும் 
    ஜாதக கணிப்பிற்கு அடிப்படை.

    அந்த சித்தர்
    இடைக்காடர் .

  • சீன தேசத்தை உய்வித்த சித்தர் பிரான்கள்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பாரத தேசத்தில் அவதரித்து
    சீன தேசத்திற்குப் பயணித்து இறைத்தன்மையால்
    சீன நாட்டை 
    ஆன்மீக பூமியாகிய பெருமை  சித்தர்களுக்கு உண்டு.

    காலாங்கி நாதர்
    போகர் 
    புலிப்பாணி சித்தர் 
    போதிதர்மர்
    முதலானோர்
    சீனம் வணங்கித் தொழும் 
    சித்தர் பிரான்கள்.

    சீன தேசத்தில்
    பலகாலம் தங்கியிருந்த காலாங்கி நாதருக்கு
    'ஒருநாள் போதும் இவ்வுலகம்'
    என சலிப்பு வந்தது.

    ஆழ்ந்து 
    மூவாயிரம் வருடம் சமாதியில் இருக்க விருப்பம் கொண்டார்.

    விடைபெறலாம்
    என எண்ணியபோது
    சீடர் போகரின் நினைவு
    நெஞ்சை நிறைத்தது.

    சீடனை அழைத்து  கற்றதைக் கற்பித்து 
    பெற்றதை எல்லாம் சமர்ப்பித்து
    தனக்குப் பின்னரும் பணிகள் தொடர விரும்பினார்
    காலாங்கிநாதர்.

    அவர் மனத்தில் நினைத்தது போகரின்
    மனத்திரையில் காட்சியாய் தெரிந்தது.

    இன்றைய டெலிபதிக்கு அன்றே சித்தர்கள் அதிபதி. 
    குருவின் அழைப்பை ஏற்றார் போகர்.

    ஒளியின் வேகமும் ஒலியின் ஓங்காரமும் தோற்கும் வகையில் உடனடியாக
    சீனாவில் இருந்தார் போகர்.

    எதையும் துறப்பதும் எங்கும் பறப்பதும்  நினைக்கும் இடத்தை கணத்தில் சேர்வதும் சித்தர்களுக்கு எளிது.

    பொதிகையிலிருந்த போகர் பெருமான்
    ஆகாய மார்க்கமாக சீனாவில் இருக்கும் காலாங்கிநாதரை அடைந்து 
    அடி பணிந்து வணங்கினார்.

    குரு காலாங்கிக்கு
    ஏக மகிழ்ச்சி.
    போகருக்கும்
    ஏக சந்தோஷம்.

    பிரிந்தவர் கூடும்போது பிறக்கும் மகிழ்வை புரிந்தவர் அறிவர்.

    சூடம் என பற்றி ஜோதியாய் ஒளிர்ந்த போகரிடம்,
    தான் சமாதி நிலைக்கு செல்வதாகவும்
    தனக்குப் பின்னர்
    சீன மக்களுக்கு
    தன்னைப் போல தொண்டாற்ற
    வேண்டுமெனவும் வேண்டுகோள் வைத்தார் காலாங்கி நாதர்
    அன்புக் கட்டளையாக.

    பின்
    "நான் செல்லவா"
    என கேட்டார் குருநாதர்.
    "சரி" என்றார் சீடர் போகர்.

    அடுத்த கணத்தில் 
    அந்த அதிசயம் நடந்தது.

    அங்கு ஓங்கி எழுந்த பெரும் ஜோதியில் 
    ஜோதியாய் கலந்தார் காலாங்கி நாதர்.

    இறையோடு இறையாய் இரண்டறக் கலப்பதும் ஒளியோடு ஒளியாய் ஒளிர்ந்து மறைவதும் 
    சித்தர்களுக்கான நிறைநிலைகள் அல்லவா ?

    அதன்பின்னர்
    குரு சொன்ன வார்த்தைகளை மெய்ப்பிக்க 
    சீனாவிலேயே 
    தங்கினார்
    போகர் பிரான்.

    கற்றதை 
    குருவிடம் பெற்றதை
    வாரி வழங்கி 
    வள்ளலாய்
    வலம்வந்தார்.

    இங்கு ஒரு சிக்கல் இயற்கையாய் எழுந்தது.

    அவர் விரித்த கடையில் கொள்வாரில்லை.

    காரணம் ….?

    அந்நியன் என 
    அவர் உருவமும் 
    நிறமும் மொழியும் 
    அடித்துச் சொன்னதால் 
    பல அடி தூரம் 
    விலகிச் சென்றனர் 
    சீன மக்கள்.

    'சிவனே …… 
    குருவின் எண்ணத்தை எளிதாய் நிறைவேற்ற முடியவில்லையே….'

    போகரின் உள்ளம் 
    கவலையில் துடித்தது.

    என்ன செய்யலாம் என யோசித்த வேளையில் அங்கு யாசித்து வந்த 
    ஒரு வயோதிகர் 
    கண்ணில் பட்டார்.

    இன்றோ நாளையோ என தள்ளாடும் வயது. 
    மூப்பும் ஒரு முடிவு எடுத்திருந்தது.
    இக்கணமோ மறுகணமோ என காலக்கெடு விதித்துக் காத்திருந்தது.

    அதுவும் நடந்தது.

    அந்த தாத்தா காலமானார் 

    போகருக்கு ஒரு 
    யோசனை வந்தது.

    'அந்த முதியவரின்
    உடலில் புகுந்து கொண்டால் 
    சீனர் என 
    மக்கள் நம்பி 
    நாடி வருவார்களே'
    என நினைத்தார்.

    பிறகென்ன ?

    அஷ்ட சித்திகளில் ஒன்றான 
    பரகாயப் பிரவேசம் செய்தார்.

    ஆம்….
    கூடு விட்டுக் 
    கூடு பாய்ந்தார்.

    அந்த சீன தாத்தாவின் உடலினுள் புகுந்தார் புனிதர் போகர்.

    தள்ளாத வயது
    தாத்தா ஆனார்.

    குரு சொன்னபடி
    தன் பணி தொடர்ந்தார்.

    நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
    கூட்டம் கூட்டமாய்
    ஊரே திரண்டு
    போகர் பிரானைக் கொண்டாடி மகிழ்ந்தது.

    எத்தனை காலம் 
    இந்த முதிய உடலில் ?

    காயகற்பம் புரிந்தவர் கட்டிளம் காளையாய் துள்ளிக் குதிக்க வேண்டாமா ?

    யோசித்த போகர்
    தவத்தில் அமர்ந்து
    குண்டலினியை
    சஹஸ்ர பீடத்தில்
    ஏற்றி எழுப்பினார்.

    பெண் சக்தியான குண்டலினி 
    ஆண் காளையான சகஸ்ர தளத்தில் இணைந்தால்
    ஆனந்தம் கூத்தாடும். பேரானந்தம் அலைமோதும்.
    சிவசித்தம் பூரணமாகும்.

    ஆனந்த பேரானந்த நிலையில் 
    ஆண்களும் வியக்கும் அழகர் ஆனார்.
    இளைஞர் ஆனார்
    போகர் தாத்தா.

    சீன மண்
    அவரை வணங்கி நின்றது.
    பணிகள் தொடர்ந்தன.

    போகர் என்ற
    பாரதப் பெயரையும் 
    சீன மொழிக்கு
    மாற்றம் செய்தார்.

    'போ யாங்'
    என்பதே அவரது
    சீனப் பெயர்.
    அதற்கு அர்த்தம்
    போகர் மார்க்கம்.

    'சிபு' போ – யாங் 
    போதனைகள்
    சீன மக்களை
    ஈர்த்தன.
    சிபு என்றால் குரு
    என்று பொருள்.

    எக்கச்சக்க சீடர்கள் வாழ்வின் 
    நிறைவைக் காண
    மெய்ஞான சித்தரிடம் எப்போது மொய்த்தனர்.

    நெருங்கிய சீடர்கள் அவரைத் தொழுதனர்
    அவரே உலகம் என ஆராதித்து மகிழ்ந்தனர்.

    அன்புடன் அவரை லாவோட்சூ  (LAU – TSU)
    என அழைத்தனர் சீனர்.

    சீன வரலாற்றில் 
    போகரே 
    லாவோட்சூ.

    அவர் சொன்னதே 
    வாழும் கலையை உலகுக்குச் சொன்ன தாவோயிசம் (Taoism).

    லாவோட்சூ காலத்தில்தான் அவரால்தான் 
    சீனாவில் ரசவாதம் என்னும் அதிசயம் நடந்தது.

    இளமையும் ஆரோக்கியமும் மரணமிலா 
    பெருவாழ்வும் தரும்
    காயகல்பம் 
    உலகின்கண்
    உலா வந்தது.

    சீன மருத்துவம் மூலிகைகளால் நிறைந்தது.
    சீன கலாசாரம்
    புது உருக்கொண்டது.

    சீன மக்கள் லாவோட்சூவை கடவுளாகவே பார்த்தனர்.

    ஒருமுறை அவர்
    தத்துவ ஞானி கன்பூசியசை
    சந்தித்துக் 
    கருத்துப் பரிமாற்றம் கொண்டது
    ஒரு வரலாற்றுப் பதிவு.

    கன்பூசியஸ் 
    லாவோட்சூவை
    'பறக்கும் சர்ப்பம்' (Dragon)
    என போற்றிப் புகழ்ந்தது இன்னுமோர் பதிவு .

    சீன பாம்பு… சீறும் பாம்பு ஆம்…. டிராகன்… நெளியும்
    ஆன்மீகமாய்…
    விரியும்…விரியும்.

     இன்னும் சிந்தித்தால் ஆயிரம் அர்த்தங்கள் அணிவகுத்தல்லவா வரும் ?.

    காலாங்கி நாதரே கன்பியூசியஸ் என்பதும்  ஆய்வுக் களத்தில் உள்ள ஓர் அதிசய ஆய்வு.

    சில வருடங்களுக்குப் பின்னர்
    இளமை தந்து 
    மரணமிலா பெருவாழ்வை அளிக்கவல்ல
    காயகற்பம் தயாரித்து 
    தானே உட்கொண்டு 
    இறை அம்சமாய்
    சீன தேசத்தில் இளைஞராய்
    பவனி வந்தார்.

    முதலில் 
    காயகற்பத்தை 
    விரும்பி வளர்த்த
    நாய்க்கு கொடுத்தார். 
    அது செத்து விழுந்தது.

    விசுவாச சீடன் 
    யூ வுக்குத் தந்தார்.
    அவனும் 
    செத்து விழுந்தான்.

    பார்த்திருந்த 
    பிற சீடர்கள்
    சிதறி ஓட 
    சிரித்தபடி 
    நாயையும் 
    அந்த
    நல்ல சீடனையும் உயிர்ப்பித்தார்.

    அந்த சீடன் தான்
    அந்த யூ தான் 
    புவி வணங்கும் புலிப்பாணி
    என்பது சித்தர்
    வரலாற்றுச் செய்தி.

    சீன மக்களை 
    உய்விக்க 
    சீன அரசிலும் 
    அங்கம்  வகித்தார் 
    லாவோட்சூ உருவில் இருந்த போகர் பிரான்.

    அப்போதைய 
    மன்னர் காலத்தில் 
    ஆவணக் களஞ்சியத்தின் காப்பாளர் பணியை அலங்கரித்திருந்தார்.

    தவோ தி சிங்
    (Tao-te -Ching)
    என்ற நூல் 
    அவர் யாத்ததே.

    காலப்போக்கில் மன்னராட்சியில்
    மனம் வெறுத்த
    லாவோட்சூ
    ஒருநாள் 
    அரண்மனையை விட்டு சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டார்.

    அவரை அடையாளம்
    கண்ட காவலாளி 
    அவரைத் தடுத்து வணங்கி,
    "எனக்கு ஏதேனும்  உபதேசம் தாருங்கள்"
    என மன்றாடினான்.

    அதுபோது
    லாவோட்சூ வழங்கியது தான் 
    தவோ- தி – சிங்கின் 
    ஒரு சிறுபகுதி.

    தவோ- தி – சிங்கை 
    சீன நாட்டின் 
    திருக்குறள் என்பர் 
    உலகில் சிறந்த
    பன்மொழி வித்தகர்கள்.

    எக்கச்சக்க சீடர்களை உருவாக்கிய பின்னர் 
    குரு எதிர்பார்த்த 
    உன்னத நிலையை சீனாவும் சீனர்களும் அடைந்திருப்பதாகத் திருப்தி கண்ட 
    லாவோட்சூ
    நான்காயிரம் வருட 
    சீன ஞான வாழ்க்கைக்குப் பின்னர் 
    போகராக
    தாய்த் திருநாடு
    திரும்பச் சித்தமானார்.

    இமயமலை மார்க்கமாக பாரத தேசத்திற்கு வந்தார்.

    சீன தேசம் 
    அவர் சொர்க்கத்திற்குச் 
    சென்று விட்டதாகக்
    குறிப்பு எழுதித் தொழுதது.

    உண்மைதானே…?

    இந்தியா என்கிற 
    ஆன்மீக 
    சொர்க்கத்திற்குத் தான்
    போகர் திரும்பி வந்தார்.

  • கலப்புத் திருமணம் செய்த சித்தர்

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    சித்தர் பிரான்களில் சிறந்தவர் சிவவாக்கியர்.

    சித்தர்களில் அதிக அளவு அதிஞானப் பாடல்களைப் புனைந்தவர் 
    சிவவாக்கியரே.
    அனல்பறக்கும் சொற்கள், புரட்சிக் கனல் தெறிக்கும் பாடல்கள், சிவவாக்கியரின் சிறப்பைச் சொல்லும்.

    அந்தணர் குலத்தில் தோன்றிய அற்புத மகான் சிவவாக்கியர்.
    தந்தையும் தாயும் வள்ளல் தன்மையில் ஊர் போற்ற வாழ்ந்தவர்கள்..

    பெற்றோர் செய்த அறத்தின் பயனாய் 
    அருள் தவத்தின் பலனாய் அவதரித்தார் சிவவாக்கியர்.

     ஆன்மீகப் பற்றும் தேடல்நிலையும் 
    நிறைய இருந்தது என்பதைத் தவிர சிவவாக்கியர் குறித்த தகவல் அவரது ஐம்பது வயது வரை ஏதுமில்லை .
    வடக்கே காசியின் மகிமையை கேள்விப்பட்ட சிவவாக்கியர் 
    ஐம்பதாவது வயதின் நிறைவில் 
    அங்கு சென்றது அவரது வாழ்வில் அரும்பிய திருப்புமுனை.

    காசியில் ஒரு சித்தர். 
    அவர் காசினி காணா பெரும் சித்தர்.
    செருப்பு தைப்பது அவரது தொழில். 
    சக்கிலி சித்தர் என்பர் அவரை 

    அவர் சக்தி மிக்கவர். வாசியில் வல்லவர். சித்தியில் சிறந்தவர் என்பது யாருக்கும் தெரியாது.
     காசியின் 
    குறும் சந்துகளில் 
    இருபுறமும் வேடிக்கை பார்த்த வண்ணம் ஞானத்தேடலோடு சென்றுகொண்டிருந்த சிவவாக்கியர் கண்களில் அந்த சித்தர் பட்டார்.

    சிவவாக்கியர் கண்கள் நகர மறுத்தன. அவரை விட்டு மீள மறுத்தன.
    அப்படி ஒரு ஈர்க்கும் முகம். கவர்ந்திழுக்கும் பொலிவு.
    வைத்த கண் வாங்காது சிவவாக்கியர் 
    அச்சித்தரை நெருங்கினார்.

    அதுவரை இல்லாத ஈர்ப்பு. பூர்வ ஜென்ம உறவு போல ஒரு தொடர்பு.
    விட்டகுறையோ தொட்டகுறையோ நிறைநோக்கி நெருங்கி வந்தார் 
    எதிர்கால சித்தர்.

    "வாப்பா…
    எதைத்தேடி வந்தாய் ?
    வா….தேடியது கிடைக்கும்.

     இங்கே அமர்வாய்."
    ஒரு பலகையைக் காட்டினார் சித்தர். 
    பதில் ஏதும் சொல்லாமல் உத்தரவுக்கு உட்பட்ட பணியாளர் போல் 
    அவர் முகத்தை தரிசித்தபடி அமர்ந்தார் சிவவாக்கியர்.

    "எனது தேடல்…." ஆரம்பித்தார் சிவவாக்கியர்.
    "தெரியுமே….!" அதிர்ச்சியூட்டினார் சித்தர்.
    கொஞ்ச நேரம் அமைதி. இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

     ஆயினும் மௌனமும் பார்வையும் 
    மெலிதாய் பேசின. 
    நிறைய பேசின. நிறைவாய் பேசின.

    குருவாய் செருப்புத் தைப்பவர். 
    சீடராய் வேதம் ஓதிய அந்தணர். 
    இருவரும் ஒன்றாகிப் போயினர்.

     "உனக்குத் தீர்வு சொல்கிறேன்….
     இந்தா … இது நான்
     செருப்பு தைத்த காசு.

    இதோ….
    இது சுரைக்காய்…
    பேய்ச் சுரைக்காய்.

     இரண்டையும் தருகிறேன்.
    காசை
    காசியில் 
    ஓசையோடு ஓடும் கங்கையில் போடு.

    கங்கை வேறுயாருமல்ல… என் தங்கையே !
     பேய் சுரக்காய் கசக்கும் அல்லவா ? 
    கங்கை நீரில் கழுவி 
    கசப்பு நீக்கி வா……"
    குரு எடுத்துத் தந்தார்.

    குரு பேச்சுக்கு மறுபேச்சு கூடாது. 
    இதுவே குரு – சீடர் உறவுக்குப் பாலபாடம்.

    அருகில் ஓடிய கங்கைக்குச் சென்றார் சிவவாக்கியர்.
    காசை எடுத்து தூக்கி எறியும் போது….
    ஆற்றிலிருந்து 
    வலதுகை ஒன்று வளையோசை  ஒலிர மெதுவாய் எழுந்தது.

    சிவவாக்கியரை சைகையால் 
    வா…. வா வென அழைத்தது அத்திருக்கரம்.

    காசினை அக்கையில் வைத்து வணங்கி நின்றார்.
    பெண்ணரசியின் வலதுகை வளையோசை கலகலவென ஒலி எழுப்பிய வண்ணம் மீண்டும் நீருக்குள் மறைந்தது.

    பின்னர்
    பேய்ச் சுரைக்காயை கங்கை கரையினில் நின்று கருத்தாய் கழுவினார்.
    குருவிடம் ஓடி வந்தார்.
    தாழ் பணிந்தார்.

     "நல்லது……
    ஆனால் நான் ஒரு தவறுசெய்துவிட்டேன்.,." சித்தர் சிரித்தபடி தொடர்ந்தார்.
    "ஆம்….கங்கைநீர் இங்கேயே இருக்கிறது காசை அதில் போட்டிருக்கலாம்.

     உன் வாழ்வின் 
    முற்பிறப்பு மாசுகளையும் கழுவி இருக்கலாம்.,,
    இதோ பார்….
    செருப்புத் தோலினால் ஆன  பை….."
    அதைத் திறந்தார்.

    அதில் கங்கை நீர் இருந்தது .
    மீண்டும் அவளிடம்  காசைத் திரும்பக்கேள் ….,தருவாள்……. ஆசீர்வதிப்பாள் ….."

    சிவவாக்கியர் எதுவும் யோசிக்கவில்லை.
    ஒரு சொல்.
    சிறு சொல்.
    குரு சொல்….என்பது 
    குரு சீடர் உறவின் 
    அடுத்த பாடம்.

    குருவின் திருவுருவில் திருவாய் மலர்ந்த சொற்களில் மயங்கியிருந்த 
    சீடர் சிவவாக்கியர் மனமுருகி 
    வேண்டி நின்றார்
    குரு கட்டளைப்படி.

    அந்த தோல் பையிலிருந்து புனித கங்கை வந்தாள்….
    அதே வளையோசை….
    காசு தந்தாள்.
    சீடர் பெற்றார்.

    ஆசீர்வதித்த படி கங்கையின் கை 
    நீரில் மூழ்கியது .

    "சரியப்பா…
    உன் மனமும் குணமும் கொஞ்சம் குழம்பி இருக்கிறதே…!

    உன் தேடல் கூட 
    அதை நாடித் தானே..!"
    புதிர் போட்டார் சித்தர்.

    புரியாது விழித்தார் சிவவாக்கியர்.

    "பெண்ணின்
    கையைக் கண்டதும் பரவசம் அடைகிறாய்.!

    காசு தரும்போதும் பெறும்போதும் 
    கரம் படும்போதும் 
    கிளர்ச்சி அடைகிறாய்.

    ம் …..காமம்…
    சித்திக்குமுன்
    வாழ்ந்து விடு…..பின்வா….

    சித்திக்கு அதுவே
    சரியான வழி.

    திருமணம் செய்துகொள். வாழ்ந்துபார்…..
    பின் 
    ஒரே மனம் நாடு.

    முக்தி தேடு.
    கண்டிப்பாகக் கிடைக்கும். சித்தி கைகூடும்.

    சித்தரின் சொற்கள் சிவவாக்கியருக்குப் பிரமிப்பைத் தந்தன.
    ' எனது சஞ்சலங்கள் சுவாமிக்கு தெரிந்தது எப்படி ?
    அண்மைக் காலமாய் ஐம்பது வயதில் எழும்
    பேரின்பப் பெண்ணாசை… திருமணமா.. துறவறமா என்று இருந்த மனக்குழப்பம்
     இவருக்கும் தெரிந்திருக்கிறதே….'

    யோசித்த நொடிகளில் குருவின் 
    அடுத்த கட்டளை வந்தது.

    "இந்தா ..மண் 
    இது நீ கங்கையில் சுரையை கரைத்த போது ஒட்டி வந்தது.

    இது … ..நீ
    கசப்பைக் கழுவியதாகக் கருதும் பேய்ச்சுரைக்காய்.

    இரண்டையும் 
    கொண்டு சொல்.

    எந்த பெண்மணி இவற்றைக் கொண்டு சமைத்து தருகிறாளோ 
    அவளே உன் மனையாள்.

    அவளை மணம் செய்.
    உன் மணம் சிறக்கும். மனம்,  பின் திறக்கும் ."

    வாழ்த்தி 
    விடைகொடுத்தார் 
    செருப்பு சித்தரான 
    பெரும் நெருப்பொத்த 
    ஒளி சிந்தும் 
    ஞானசித்தர்.

    குருவின் வார்த்தைகளுக்கு
    குறுக்கே 
    நடக்குமா உண்மையா என்றெல்லாம் கேள்விகள் எழக்கூடாது.
     சந்தேகமே தப்பு .

    குடும்ப உறவுக்கு மட்டுமல்ல. .
    துறவுக்கும் 
    சந்தேகம் மகா தப்பு.

    குரு கட்டளையை ஒருநாள்கூட 
    தாமதமாக்க கூடாது.

    குரு – சீடர்- இறை
    உறவில் 
    தேர்ச்சி அடைய
    சரணாகதி தான் 
    சரியான வழி.

    இவையெல்லாம் அடுத்தடுத்த பாடங்கள்.

    அதி சீக்கிரமாய்
    அதி தீவிரமாய் விடைபெற்றார் சிவவாக்கியர்.

    ஐம்பது வயதிலும்  பதினாறு வயதினராய் தனக்கேற்ற இணை தேடி காதல் பயணம் மேற்கொண்டார்.
    தெற்கே போகும் நடைபயணம் !
    பாவம்,  சிவவாக்கியர்
    அது ஒரு நீண்ட நெடிய பயணமாக இருந்தது.

    பார்த்த பெண்டிரெல்லாம் சிவவாக்கியரின் உடற்கட்டில் –  உடற்கூறில் உருகி மனம் மயங்கி காதலிக்க வந்தது என்னவோ நிஜம்தான்.

    ஆனால்
    எச்சூட்டிலும் வேகாத மணலையும் 
    கறிக்கு ஆகாத 
    பேய்ச் சுரைக்காயையும் தந்து சமைத்து தர சொல்கிறாரே…. 
    இவர் என்ன பைத்தியமா… என பயந்து விலகி 
    கேலி பேசினர் .

    ஆயிற்று 
    இப்படியே சில காலம். தென் பகுதிக்கே வந்து சேர்ந்தார்.
    அங்கே ஒரு காடு.
    அதில் ஒரு குடியிறுப்பு. ஆதிவாசிகளான
    குறவர் குடியிருப்பு.

    அங்கு சென்றார் பெண்ணொன்று கண்டார் .
    காட்சிக்கு இனியவளாய் மனதுக்கு உகந்தவளாய் அம்மங்கை தென்பட்டாள்.
    "நிறைய பசி…. இவற்றை வைத்து சமைத்துத் தர முடியுமா ?"
     ஆவலோடு கேட்டார்.

    பதிலே கூற வில்லை.
    உடனே வாங்கினாள். உள்ளே சென்றாள்.
    சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள் –
    முகத்தில் பூத்திருந்த வியர்வை முத்துக்களை வலிக்காமல் வழித்தபடி.

    கரங்களில் சுவையான சமையல். 
    ஐந்து நட்சத்திர அறுசுவை உணவு தயார்.
    அம்மணி அப்படி அற்புதமாய் சமைத்தது இறையருள்.
    செருப்பு சித்தரின் விருப்பம்.

    ஏன் என்று யோசிக்காமல் எப்படி என்றும் பார்க்காமல் துறவி போலிருக்கும் ஒருவர் கேட்டார் என்பதற்காக 
    சமையலில் இறங்கிய சரணாகதி சிவவாக்கியருக்குப் பிடித்துப் போனது.

    குரு சுட்டிக் காட்டிய மணமகள் 
    அமுது படைத்த
    குறவன் மகளான
     தங்க மயிலே
     என புரிந்தார். 

    அவளே தனக்குரிய மனையாள் என்று  
    மனம் மகிழ்ந்தார்.

    காட்டிற்குச் சென்றிருந்த அவள் பெற்றோர் 
    வரும் வரை 
    காத்திருந்தார்.

    பெண் கேட்டார். 
    அவர்கட்கும் சம்மதமே .

    இருப்பினும் வேண்டுகோள் ஒன்றை கண்டிப்போடு நிபந்தனையாக வைத்தார்கள்.

    மாப்பிள்ளை 
    தங்களுடனேயே தங்கி
    தம் தொழிலே செய்து குலம் செழிக்க வைக்க வேண்டுமென்று.

    சுருங்கச் சொல்லின் 
    'வீட்டு மாப்பிள்ளை.'

    ஐம்பது வயதில் 
    இனி ஆவதென்ன?
    குருவின் கட்டளை. மனைவியின் பெற்றோரின் நிர்பந்தம்.

    சொந்தம் தொடங்கும்போதே 
    பந்தம் வைக்கும்
    நிர்பந்தம்.

    மறுக்கவில்லை சிவவாக்கியர் .
    நடந்தது திருமணம் 
    குறவர் குடி வாழ்த்த.

    அந்தணர் குலத்தில் பிறந்தவருக்கு 
    குறவர் குலத்தில் திருமணம் .

    குரு மனம் சுட்டிய நல்மணம். 
    திருமணம் நாடியவருக்கு இரு மனம் ஒப்பிய
    கலப்புத் திருமணம்.

    குறவர் இனம் போற்ற தமிழ்த் திருமணம்.
    சிவவாக்கியர் அவதரித்த போது உச்சரித்த முதல் சொல்லாய் சிவ…. சிவ என்று பவனி வந்தவர் சிவபிரான்.  
    அவரின் ஞானமைந்தன் முருகப் பெருமான் மணந்தது வள்ளி என்னும் குறவர் குல கொழுந்தைத்தானே..!

    முருகப்பெருமானைப் போன்றே சிவவாக்கியரும் குறவர் குலப் பெண்ணுக்கு மாலை சூடி 
    குறவரானார்.