Category: சித்தர்கள்

சித்தர்கள்

  • ஞானக்குழந்தை

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    மருதூர் என்றொரு சிற்றூர்.
    அவ்வூரில் ஒரு கணக்குப்பிள்ளை.பெயர் இராமையா பிள்ளை.
    மனைவி சின்னம்மை. சின்னகாவனம் சொந்த ஊர்.
    இராமையா பிள்ளைக்கு சின்னம்மை ஆறாவது மனைவி.
    முன்னவர் ஐந்துபேரும் மக்கட் பேறின்றி ஏதேதோ நோய்களால் மரணித்துப் போயினர்.
    சிவபக்தையான சின்னம்மை ஆறாவதாய் மனைநிறைத்தார்.

    ஒருநாள் சிவ அம்சத்தோடு சிவனடியார் ஒருவர் வாசலில் நிற்க ஓடிப்போய் தாழ் பணிந்தார் சின்னம்மை.
    உள் அழைத்து உள்ளன்போடு உபசரித்தார்.
    உபசரித்தலும் உணவிடுதலும் புண்ணியங்களில் உயர்ந்தவை.
    புறப்படும் தருணம் சிவனடியார் "உனக்கோர் ஞான மகன் பிறப்பான். உன்னைப்போல் அவன் பிறருக்குப் பசி தீர்ப்பான். ஊருக்கு மட்டுமல்ல; உலகுக்கே பசி தீர்ப்பான்.
    உலகம் போற்றும் இறையாய் ஒளிர்வான்" என்றபடி ஆசி தந்தார்.

    விடைபெற்று  வீதி வந்தவர் வீடு விலகி தெருக்கோடி வரை நடந்து போய் மாயமாய் மறைந்து போனார்.
     அவர் வேறு யாருமல்ல..!
     எல்லாம்வல்ல ஆதிநாதன் சிவபெருமானே..!
    கடவுளின் அருளால் கருத்தரித்த சின்னம்மை உரிய நாளில் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார்.
    இல்லையில்லை….
    கடவுளின் அருளால் கருக்கொண்ட குழந்தை உரிய நாளில் உலகில் அவதரித்தது.

    ஐந்தாம் மாதம்.
    குழந்தையை நடராஜ தரிசனத்திற்கு சிதம்பரம் எடுத்துச்சென்றனர் பெற்றோர்.
    கோயில் அர்ச்சகர் அப்பைய தீட்சிதர் ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்.
    அவர் கோயிலில் திரையைத் தூக்கினார்.
    எல்லோரும் கைகளைச் சிரம் மேல் தூக்கி பக்தி பரவசத்தில் கன்னங்களில் ஒற்றிக் கொண்டிருந்தபோது… தாயின் தோளையும் முந்தானையையும் பற்றிக்கொண்டிருந்த பிள்ளை பொக்கை வாய் விரித்து அம்பலவாணரின் திக்கைப் பார்த்துச்சிரித்துக் கொண்டிருந்தது.

    சிதம்பர ரகசியம் தரிசனம் ஆயிற்று ஞான குழந்தைக்கு.
    அப்பைய தீட்சிதர் குழந்தையைக் கவனித்தார். ஓடோடி வந்தார்.
    அவரது சிவ அனுபவம் பேசிற்று. 
    "பிள்ளைவாள்…. இது ஏதோ சாதாரண குழந்தை அல்ல. இது தெய்வக் குழந்தை. ஞானக்குழந்தை.
     இறைவனுக்குத் தீபம் காட்டியபோது அங்கிருந்தபடி குழந்தையைப் பார்த்தேன்.
    அடாடா ….அப்படி ஒரு பேரொளி….!
    குழந்தையின் முகத்தில் சாட்சாத் அம்பலவாணரையே தரிசனம் கண்டேன்.
    குழந்தையைப் பத்திரமாய் வளர்ப்பது உங்கள் பொறுப்பு.
    அம்மா… நீ பாக்கியசாலி. கவனம்…. கவனம்"

    சின்னகாவன திருவாட்டியோடு மகிழ்வோடு புறப்பட்டார் இராமையா பிள்ளை மருதூருக்கு.
    அவர்கள் கோயில் சுற்றி வந்தபோது கோயிலின் வாசலில் அப்பைய தீட்சிதர் காத்திருந்தார்.
    "இன்று குழந்தையோடு எனது இல்லத்திற்கு தயவுகூர்ந்து வாருங்கள்.
    எனது வீட்டில் உங்களுக்கு மதிய உணவு. உணவு விருந்தாய் காத்திருக்கிறது.
    உலகுக்கே உணவளிக்கப் போகிறவனுக்கு அவன் சின்னஞ்சிறு வாயில் உணவு ஊட்டிய புண்ணியம் எங்கள் குலத்திற்கு கிடைக்கட்டும்".
    இன்னும் ஏதேதோ சொன்னார். அவை இறையும் மறையும் அவருக்கு உணர்த்திய வார்த்தைகள்.

    இறையருளால் அவதரித்த குழந்தை, இறை தரிசனம் கண்ட குழந்தை..தவழ்ந்தது…. நடந்தது…..வளர்ந்தது….
    குழந்தையைப் பார்க்க வரும் உற்றாரும் உறவினரும் ஒன்றை உணர்ந்தனர்.
    பார்த்துவிட்டுத் திரும்பிய மாத்திரத்தில் ஆகாத காரியங்கள் எல்லாம் ஆகத் தொடங்கின.
    அவர்கள் அகமகிழ்ந்து குழந்தையை 'குழந்தை வடிவில் தோன்றிய குமரன்' என்று கொண்டாடினர்.

    அந்த குழந்தை யார் என அறிய முடிகிறதா ?
    உடுத்ததற்கு கோவணம். உண்பதற்கு காய்கறிகள். உறங்குவதற்கு சுடுகாடு.குடிப்பதற்கு ஆற்றுநீர்.
    தலையில் சடைமுடி. முகத்தில் நீண்ட தாடி. கழுவாத உடல். கந்தல் உடை. 
    தங்குதல் வெட்டவெளி. தவமிருத்தல் இருண்ட குகை. சிந்தை எல்லாம் சிவமயம். சித்தி ஒன்றே மன விருப்பம்.

    இடையிடையே உலகம் உய்ய மறைபொருளாய் ஞானப்பாக்கள். பரிபாஷையில் சித்த மருத்துவம்.அள்ளித்தரும் அருளாற்றல்.
    இவையாவும் சித்தர்களின் இலக்கணமாய் மக்கள் மனதில் இருக்கும் பதிவு.
    அப்பதிவில் பெரிய மாற்றம் தந்தது பின்னாளில் அந்த ஞானக் குழந்தை.

    கருணை முகம். கனிந்த கரங்கள். பணிந்த பாதங்கள். இவை தவிர ஏதும் தெரியா வண்ணம் தூய வெண்ணிற ஆடை. உடுத்துவதில் மட்டுமின்றி உண்ணுவதிலும் உறங்குவதிலும் உடலைப் பேணுவதிலும் இறையருள் பெறுவதிலும் இலக்கணம் வகுத்து இலக்கணமாய் வாழ்ந்து நிறைஞானியாய் மிளிர்ந்தது அக்குழந்தை.

    அந்த ஞானக் குழந்தையே ஜோதி கண்ட பெருஞ்ஜோதி கண்ட, அருட்பெருஞ்ஜோதி கண்ட  வள்ளல் பிரான்.

    அவரது திருநாமம் இராமலிங்கம். பெற்றோர் வைத்த பெயர் இராமலிங்கம். உற்றார் ஊரார் அழைத்த பெயர் ராமலிங்கன். ஆன்றோர் சான்றோர் போற்றிய பெயர் இராமலிங்க அடிகள். கையொப்பத்தில் ஒளிர்ந்த பெயர் சிதம்பரம் இராமலிங்கம். ஆன்மீகம் வணங்கிய பெயர் இராமலிங்க வள்ளலார். சன்மார்க்கம் முதலாய் உலகே துதிக்கும் பெயர்திரு அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார்.

    வள்ளலார் அவதரித்த நாள் அக்டோபர் 5…வருடம் 1823.

  • தானே சிவமான திருமாளிகைத் தேவர்

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    சித்தர் பெருமான்களில்
    அழகு நிறைந்தவர் திருமாளிகைத் தேவர்.

     அழகு என்றால் அப்படி ஒரு அழகு…
    ஆண்களுக்குரிய அத்தனை புருஷ லட்சணங்களும் அமையப் பெற்றவர்.

     தவத்தில்…
    சிவத்தில்…
    காயசித்தியில்… நிறைந்தவர் என்பதால்
    பொன்னிறம் போர்த்திய உடம்பு…. ஒளிவீசும் முகம்…

    ஒளி பரப்பும் அகம்.
    ஆண் பெண் பேதமின்றி எவரையும் ஈர்க்கும் தெய்வீகம்.

     வேதியர் குலம் என்பதால் இறை பணி… மீதி நேரம் அவர் ஒரு தவமணி.
    திருவாடுதுறை பெண்களுக்கு திருமாளிகைத் தேவர் மீது ஆழ்ந்த பக்தி உண்டு.

    கூடவே கண்கவர் தேவரை மனம் கவர் மன்னனாக நாள் முழுக்க மனதில் நிறைப்பதும் உண்டு.
    அப்பெண்கள் மத்தியில் ஒரு ரகசிய விமர்சனமும் உண்டு….
    'மன்மதன் தோற்றுவிடுவான் இவரிடம்……. ரதியும் மதிமயங்கி விடுவாள் இவரிடம்…….'
    அதன் விளைவு…?

     அப்பெண்டிருக்குப் பிறக்கும் குழந்தைகள் யாவும் தேவர் சாயலில் இருந்தன.
    தேவர் மகன்கள்…! திருமாளிகைத்
    திருமகள்கள்…..!!

    வேதம் கற்ற ஆண்களுக்கு கோபமும் சந்தேகமும் கூடின. குலப் பெருமையையும் வம்சவிருத்தியையும் எண்ணியெண்ணி மனம் கலங்கினர்.
    நரசிங்கன் என்பான் அப்போதைய மன்னன்.

     ஒரு சமயம் அவன் படை சூழ திருவாடுதுறை அருகே (இப்போதைய நரசிங்க பேட்டை) முகாமிட்டு இருந்தான்.
    மன்னனிடம் அழுதபடி புகார் சொன்னார்கள் வேதியர்.

     "ஏதோ மாயம் மந்திரம் செய்து எம்குலப் பெண்களை மயக்கி கர்ப்பம் ஆக்கி விடுகிறான் அரசே….
    நீங்கள் தான் எங்கள் குலத்தைக் காப்பாற்ற வேண்டும்"
    மன்னனின் மீசை துடித்தது. கோபம் கொப்பளித்தது.
    வீரர்களை அழைத்தான்.

     "இவர்கள் சொல்லும் தீயவனை –  காமுகனைக் கட்டி இழுத்து வாருங்கள்" உத்தரவிட்டான்.
    விரைந்தோடிய வீரர்கள் திருமாளிகைத் தேவரைக் கண்டனர்.
    அரசன் உத்தரவை அமல்படுத்த இருப்பதாகச் சொன்னார்கள்.

    "அப்படியே ஆகட்டும்… என்னை கட்டிச் செல்லுங்கள்.." புன்னகை மாறாமல் சொன்னார்.
    தேவபிரான் உதிர்த்த வார்த்தைகள் சித்தன் உத்தரவாய்
    மன்னன் உத்தரவை முழுதாய் மாற வைத்தன.

    வீரர்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அரசன் நரசிங்கன் முன் நின்றனர்.
    அரசனின் கோபம் அதிகரித்தது. சீற்றமுடன் சேனாதிபதியை
    அழைத்தான்.

     வீரர்களின் சிந்தையை மயக்கிய மந்திரவாதியா அவன் …
    என்னிடமே விளையாடுகிறானா ?
    மாய மந்திரம் இந்த மன்னனிடம் பலிக்காது.
    அத்தீயவன் உயிருடன் இருப்பதே தப்பு" என சீறினான்.

     சேனாதிபதி ஒருபடி மேலே போய் "அரசே….அவன் தலையுடன் வருகிறேன்"
    வீரவசனம் பேசிவிட்டு விரைந்தான்.
    அதே இடம்…அதே புன்னகை….

    திருமாளிகைத்தேவர் 'சிவனே' என்று  ஆழ்ந்திருந்தார்.
    சேனாதிபதி உரத்த குரலில் தலை கொய்ய வந்திருப்பதாகக் கொக்கரித்தான்.
    அவன் உருவிய வாள் தேவரின் கழுத்தை
    குறிபார்த்துக் கொண்டிருந்தது.

     "ம்…. தலையை வெட்டி செல்லுங்கள்" தேவர் சம்மதம் சொன்னார்.
    அடுத்த கணம்….
    வீரர்களும் சேனாதிபதியும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
    முடிவில் …. ஒவ்வொருவர் கைகளிலும் இன்னொருவர் தலை…. தரையில் பல தலைகள் …

    தப்பித்த வீரர் சிலர் மன்னனிடம் சென்று நடந்த கதையை நடந்தபடி சொன்னார்கள்.
    உச்சந்தலைக்கு உஷ்ணம் ஏறி உயரக் குதித்தது மன்னனின் கோபம்.
    "நானே செல்கிறேன்….
    உடன் வரட்டும் நம் படை…. பார்த்துவிடலாம்"
    கர்ஜித்த மன்னன்,

    போர் எனும் அளவில் முழக்கமிட்டான், புறப்பட்டான்.
    ஒற்றை மனிதரைப் பிடிக்க உருவிய வாள்களுடன் பெரும் படை. தலைமை மன்னன் நரசிங்கன்.
    செய்தி கேட்டு புன்னகைத்தார்
    திருமாளிகைத்தேவர். அப்போதும் அதே புன்னகை.

     திருவாடுதுறை மாசிலாமணி ஈசன் கோயிலின் மதில் சுவர்கள் மனம் மயக்கும் உயர் சுவர்கள்.
    அச்சுவர்களின் நாற்புறமும் காவலுக்குக் கம்பீர காளை சிலைகள் கண்கவரும்.
    மன்னனின் படைகள்
    மாளிகைத்தேவரை
    நெருங்கும்போது மதிற்சுவர் சிலைகள்  உயிர் பெற்றன.

     கோயிலில் வீற்றிருக்கும் நந்தியின் உடலில் புகுந்தன. பூத கணங்களாக வெளிப்பட்டன.
    சில நொடிகள் தாம். அதைப் போர் என்று சொன்னால் பிறந்த குழந்தையே பரிகசிக்கும்.
    மன்னரும் மந்திரியும் வீரர்களும் கட்டப்பட்டு தேவர் முன் நிறுத்தப்பட்டனர்.
    அடுத்த நொடியே பூதகணங்கள், மதிற்சுவர் காளைகள் மாயமாய் மறைந்து போயின.

    இதையெல்லாம் கண்ணுற்ற மன்னன் கதிகலங்கிப் போனான். உடம்பும் உள்ளமும் நடுங்கியது. உண்மை உணரத் தலைப்பட்டான்.
    "சுவாமி…..தங்களை ஏதோ மந்திரவாதி என நினைத்து தவறிழைத்து விட்டேன். தங்கள் தெய்வீகம் புரியாமல் கோபம் தலைக்கேறி பாவம் செய்துவிட்டேன் "
    கதறித் துடித்தான்

     "மன்னா…..
    நீ அரசன். நீதி காக்க வேண்டியவன்.
    அவசரத்தனம் அரசருக்கு ஆகாது. ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் அல்லவா?
    வேதியர் சொன்னதைக் கேட்டாய்…
    அவர்கள் வாதி…..
    பிரதிவாதி நான்.

    என் தரப்பை விசாரித்திருந்தால் இத்தனை தொல்லைகள் இருந்திருக்காது.
    இனி இப்படித் தவறுகள் செய்யாதே !
    மன்னா…
    எந்த சிந்தனையில் சதா சர்வகாலமும் இருக்கிறோமோ, அதுவாகவே ஆவதே இயற்கை நீதி.

    நான் சிவனே என்று இருக்கிறேன் அதனால் தான் சிவமயமாய் உணர்கிறேன்.
    அப்பெண்கள் என் நினைவாக இருந்ததால் எனைப் போல் பிள்ளை பெற்றார்கள்.
    இது பிழையல்ல. இயற்கை நியதி. இதுவே இறைநீதி.

    வேதியர்கள் கவலைப்படத் தேவையில்லை.
    சந்தேகம் சத்ரு. கேடு தரும்."
    மென்மையாய் சொன்னார்
    திருமாளிகைத்தேவர்.

     புரிந்த மன்னன் வணங்கி நின்றான்.
    இன்றும் திருவாடுதுறை ஈஸ்வரன் கோயிலில்
    மதில் சுவர் மேல்
    ரிஷப காளைகளின் சிலைகள் இல்லாதிருப்பதைக் காணலாம்.

     திருமாளிகைத்தேவர் மகத்துவம் உணரலாம். மனமுருகி லயிக்கலாம்.

  • கரிகாலன் கட்டிய கோயில் … கட்டக் காரணமாயிருந்த சித்தர்…

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    கரிகாற்சோழன்.
    இன்றும் உலகே வியக்கும் கல்லணையை
    அன்றே – முதலாம் நூற்றாண்டிலேயே
    கட்டிய மன்னன்.
    அகண்ட காவிரிக்குப் பெருமை சேர்த்த சோழ அரசன்.
    'சோழ வள நாடு சோறுடைத்து'
    என பெயர் படைக்க அரசாண்ட மாமன்னன்.
    இமயம் வரை படையெடுத்துச் சென்று
    வழிநெடுக நாடுபல வென்று
    இமயத்தில் புலிக்கொடி பறக்கவிட்ட
    புகழ்மிகு சக்கரவர்த்தி.

     கரிகாற் பெருவளத்தான் அப்போதுதான்
    இமயமலையிலிருந்து நாட்டிற்குத்
    திரும்பி கொண்டிருந்தான்.
    வடபுலத்திலும்
    வெற்றி வாகை சூடி வீரத்திருமகனாக !

     தஞ்சை நோக்கிய பயணத்தில்….
    இடையே திருவையாறு.
    சித்தர் பெருமான்களுக்கு பிரியமான ஊரு திருவையாறு.
    அந்த ஊர் முழுக்க ஆன்மீகக் சேறு.
    தெய்வீக மணம் கமழும் தேன்தமிழ்ப் பேரு.

     திருவையாறில்
    மன்னனின் தேர்ச்சக்கரம்
    மண்ணில் புதையுண்டது.
    எவ்வளவு முயன்றும்
    இம்மியளவும் இடம்பெயரவில்லை.

     போர் பல புரிந்து எதிரிகளை காலடியில் விழச் செய்த கரிகாலனின் வீரமிகு வீரர்கள்
    பிரம்ம பிரயத்தனம் செய்தும் தேர்க்காலை நகர்த்த முடியவில்லை.

     கரிகாலன் வியந்தான்.
    ஏதோ என்னவோ என மனம் குழம்பினான்.
    'இறைவன் மறைவாய் ஏதோ குறிப்பால் உணர்த்துகிறாரோ'
    அவன் மனதில் பட்டது.

    தேர் அடிவரை
    மண் அகற்றியும்
    தேர் நகர மறுக்க
    இன்னும் ஆழமாய்
    வெட்டிப் பார்த்தனர் சலிப்படையா
    சோழ வீரர்கள்.

     மன்னவன்
    மனதில் பட்டது சரிதான்.
    ஆழத்தில்
    ஒரு சிவலிங்கம்.
    கூடவே
    அம்மன், விநாயகர், முருகன், சத்தமாதங்கன்,
    சண்டர், சூரியன் முதலான
    தெய்வச் சிலைகள் புதையுண்டிருந்தன.

     புத்தம் புதிதாய்
    அப்போதுதான் வடித்தது போல் ஒளி சிந்தின.
    ஓடித் தேரடி பணிந்தான் ஒப்பிலா தமிழ் மன்னன்.
    வணங்கி மெய்சிலிர்த்தான்.

     சிலைகளைச்
    சிதைவுபடாமல் எடுக்கச் செய்தான்.
    கண்களால் ஒற்றினான். கண்ணீர் மல்கினான்.
    'என்னே என் பாக்கியம் !'

    சிலைகளை எல்லாம் எடுத்த பின்னர்
    மேலும் மண் பரப்பில் உற்றுப்பார்த்தான்.
    ஒரு முடியின் நுனி தென்பட்டது.
    அந்த முடியை லாவகமாய் எடுத்தான் முடிமன்னன்.

    நுனி முடி சடைமுடியாய் தொடர்ந்தது. முடிவில் சடாமுடியாய்…
    பயத்துடன் பார்த்தான்
    …..ஒரு ஜடாமுனி.

    முனிவர் நிஷ்டையில் இருந்தார்.
    கரிகாலன் மட்டுமல்ல பரிவாரமும் அவர் பாதம் விழுந்தது.

    மெல்லக் கண் விழித்த முனிவர் மெலிதாய் சொன்னார்..
    "மன்னா..
    தமிழ் போற்றும் பெரும் மன்னா…
    இச்சிலைகளைக் கொண்டு கோயில் ஒன்று அமைப்பாயாக…!
    குடமுழுக்கும் செய்வாயாக….!

     மூத்த சித்தர் நந்தீசரும்
    முப்பத்து முக்கோடி தேவர்களும் வழிபட்ட சிலைகள் இவை.
    இந்த மகாலிங்கத்தின் பூரண சக்தி பூமியில் பரவட்டும்.

    கோயில் கட்ட பெரும் பொருள் குவியல் இந்த நந்தியின் காலடியில் கிட்டும்."
    தேரடி முனிவர் வாழ்த்தினார்.

     ஓரடி தள்ளி
    திகைத்திருந்த மன்னன் மெய்மறந்தான்.
    முனிவர் தொடர்ந்தார்…

     "தமிழ் கூறும் நல்லுலகில் உன் பெயர் என்றும் நிலைத்திருக்கும்
    சோழ மன்னர்களில் உன் பெயர் எப்போதும் உயர்ந்திருக்கும்
    காவிரி உள்ளளவும்
    காவிரித் தாய் கருணை உள்ளளவும் உன் பெயர் நீங்காது நிலைத்திருக்கும்."
    வாழ்த்தினார் மகாமுனி.

     "இதோ… உனக்கு என் அன்பு பரிசு"
    தண்டம் ஒன்றை கரிகாலனிடம் வழங்கி
    ஒளி போல் பெருகி கணத்தில் மறைந்தார் இறை போலிருந்த
    அந்த சித்தர்.

     அந்த தண்டம் எவராலும் வெல்ல முடியாத ஆயுதம்.
    சித்தர் பிரான் அருளிய சீர்மிகு போர்த்தண்டம்.
    உடனடியாக அதுபோதே
    சித்தர் வாக்கை செயலாக்க கோயில் பணி துவக்கினான் கரிகாலன்.

     போரில் கிட்டாத பூரிப்பு.. வெற்றியில் எட்டாத செருக்கு …
    கோயில் கட்டுவதில் கிட்டிற்று அவனுக்கு.

    அற்புதமான கோயில்.. அதன் பெயர் 'அய்யாரப்பன் கோயில்'
    அமைந்த இடம்
    தேர் புதையுண்ட
    அதே திருவையாறு.

    திருக்கோயிலின்
    இன்றைய பெயர் 'திருவையாறு அருள்மிகு பஞ்ச நந்தீஸ்வரர் என்னும் அய்யாரப்பன் கோயில்'.

    எல்லாம் சரியப்பா …..!
    வந்த சித்தர் யாரப்பா…?
    அருள்தந்த
    அம்முனி யாரப்பா…..?
    கரிகாலன் பெயர் விளங்கச் செய்த
    சித்தர் பிரான் பெயர் என்னப்பா… ..?

    அந்த சித்தர் தான்
    அகிலம் வணங்கும் அகப்பேய்ச் சித்தர்…
    அகப்பைச் சித்தர்
    என்றும் அவரை அழைப்பர்.
    நிய மேசர் என்ற
    தவப் பெயரும்
    அவருக்கு உண்டு.

     அவர் அருளிய பாடல்களின் இறுதியில்
    அகப்பேய் என வருவதால் அகப்பேய் சித்தர் என அழைத்து
    சித்தர் உலகம்
    தலைமேல் வைத்து
    கொண்டாடி வருகிறது.

  • உயிர் பெற்ற கல் யானை உயிர் தந்த சுந்தரானந்தர்

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    அழகில் சிறந்த 
    அற்புதச் சித்தர்
     சுந்தரானந்தர்.

    சித்தர்களில் அவர் ஓரு சக்கரவர்த்தி.

     சுந்தரானந்தரின் சித்து விளையாட்டு பாண்டிய நாடு எங்கும் மெல்ல மெல்ல பரவி வந்த காலம்.

    அது மன்னன் செவிகளுக்கும் எட்டியது, ஒருநாள்.

    அரசன் அபிஷேக பாண்டியன் ஆன்மீக நாட்டம் உடையவன்.

    அரசன் என்பதால் அகங்காரமும் அதிகாரத் திமிரும் அவனுக்கு இயல்பாய் இருந்தன.

    அரசன் வீரர்களை அழைத்தான்.

    " சுந்தரானந்தரை அழைத்து வாருங்கள்.., அவரைக் காண அரசர் ஆவலாய் இருக்கிறார் எனச் சொல்லி அழைத்து வாருங்கள்" என்று உத்தரவிட்டான்.

    வீரர்கள் விரைந்தனர் சுந்தரானந்தர் வசிப்பிடத்திற்கு.

    "ஐயா , எங்கள் அரசர் உங்களைக் காண காத்திருக்கிறார்..அழைத்து வரச்சொன்னார்.. எங்களோடு வாருங்கள்.." பணிவாகத்தான் சொன்னார்கள் பணியாட்கள்.

    தவசீலர் மெலிதாகச் சிரித்தார்.

    "என்னப்பா வேடிக்கையாய் இருக்கிறதே !

    ஆற்றைக் காண அரசன் விரும்பினால் அவரல்லவா ஆற்றுப்பக்கம் வரவேண்டும்.

     ஆற்றை வெட்டி அரண்மனைக்கு அழைத்துச் செல்வீர்களா? 

     அழைப்பது அரசனாய் இருக்கலாம் ..,. ஆனால் அழைக்கப்படுவது முற்றும் துறந்தவனை .. முக்காலமும் உணர்ந்தவனை…

     அரசனைப் பார்த்து எனக்கு ஆவதென்ன ?

     ஒன்றுமில்லையே !

    ' நான் அரசன்' என்னும் மமதையால் மகிழ்ந்து இருப்பவனைக் காண்பதில் என்ன பயன் ?!

    அரசனைச்  சொல்லிக் குற்றமில்லை.
    அவன் உத்தரவிடுபவனாகவே இருக்கிறான்.

    பலரும் இப்படித்தான்.

    'நான்' இருப்பவர்களிடம் ஞான 'நாண்' இருக்காது. அது சேரும் இடம் போய் சேராது.

     சுந்தரானந்தர் கூறியது வீரர்களுக்கு புரியவில்லை.

     ஆனால் அதை அப்படியே அரசனிடம் ஒப்பித்தார்கள்.

     அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன் முதலில் அதிர்ந்தான். வியந்தான். யோசித்தான். உண்மை இருப்பதாய் உணர்ந்தான்.

     துறவி  உரைத்த ஒவ்வொரு சொல்லிலும் லயித்தான்.

     அதன்பின் அவரது வார்த்தைகள் நாள் முழுதும் அசரீரியாய் அவன் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

     பின்னொரு நாள்..

    மதுரை ஆலவாய் அழகன் கோயிலில் மன்னனும் சுந்தரானந்தரும்  எதிரெதிராக வந்தபோது சந்திக்க நேர்ந்தது.

    உள்ளத்தில் அவர் பற்றிய ஓவியம் உயர்வாய் இருந்தாலும் அரசன் என்ற மிடுக்கு அப்போதும் மன்னனுக்கு இருந்தது.

     " நீர் தான் மாயங்களை நிகழ்த்தும் மாயாவியா? " திமிர் கொஞ்சம் வார்த்தைகளில் தெறித்தது.

    " மன்னா தப்பாக நினைத்து உள்ளீர்கள்…. மாயம் என்பது வேறு.
     சித்து என்பது வேறு…

     மாயங்கள் அற்பமானவை சித்தர் சாகசங்கள் இறையருள் கொண்டவை.

    ஐம்புலன் சுருக்கி உள்ளொளி பெருக்கி பஞ்சபூதங்களை வசமாக்கி பிரபஞ்சம் அறிந்துணர்ந்து செயல்படுவது சித்தாடல்.

     அரசே….
    சித்து எல்லோருக்கும் கைவரும். அதற்கு பயிற்சி, முயற்சி தேவை.

     உமக்கும் வரும் …இதோ இந்த வீரர்களுக்கும் வரும்."

    துறவியின் கணீர் சொற்கள் கோயில் சுவரில் முட்டி மோதி எதிரொலித்தன.

    "அப்படியா….. நல்லது… எங்கே உங்கள் 
    தவசக்தியால் – சித்த சாகசத்தால் இந்த கல் யானையை உயிருள்ள யானையாக உலவச் செய்யுங்கள் பார்க்கலாம்.."

      அபிஷேக பாண்டியன் அருகிலிருந்த ஒரு கல்லாலான யானையை சுட்டிக்காட்டி ஆர்வமுடனும் சற்று ஆணவத்துடனும் கேட்டான்.

     அரசனை ஒருமுறை பார்த்து சிரித்தபடி கல் யானையின் மீது கண் பதித்தார் சுந்தரானந்தர்.

     அடுத்த நொடி கல் யானை உயிர்பெற்றது. மண்டபம் அதிர பிளிறியது.
    காதுகளை ஆட்டியபடி காலடி எடுத்து வைத்தது .

    பிரமித்துப் போயினர் மன்னரும், அவரது பரிவாரமும் .

    பரி வாரத்தில் ஓர் ஏவலாளி.
    அவன் கையில் கரும்பு இருந்தது .

    கரும்பைக் கண்ணுற்ற கருத்த யானை  தும்பிக்கையை நீட்டி அக்கரும்பை பறித்தது சாறு ஒழுக கரும்பை ருசித்து மகிழ்ந்தது.

    ' பார்ப்பது கனவா' என திகைத்த அபிஷேக பாண்டியனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

    அரசனின் கழுத்தை அலங்கரித்து இருந்த முத்துமாலையை லாவகமாக எட்டிப் பறித்தது விளையாட்டாக.

    பதறிப் போனான் பாண்டியன்.

    சித்தரின் மகத்துவம் சிந்தையை நிறைத்தது .

    கல்யானை 
    சித்த சாகசத்தை உரைகல்லாக உணர்த்திய பின்னர் வேறுஎன்ன இருக்கு !

    அப்படியே சுந்தரானந்தர் திருவடி விழுந்தான். கண்ணீரால் அவர்தம் பாதம் துடைத்தான்.

    "சுவாமி ….உள்ளம் தெளிந்தேன் சித்தர் மகத்துவம் அறிந்தேன்..

    எனக்கு ஓர் அருள் வரம் நீங்கள் தரவேண்டும்.

     எனக்கு பிள்ளைப்பேறு இல்லை. அரச குலத்தில் பிள்ளை இல்லாதது பெரும் தொல்லை .பிள்ளை வரம் தாருங்கள்."

    காலில் விழுந்தவன் ஏழாமல் கேட்டான்.

    கைப்பிடித்து 
    எழச்சொன்ன இறைமுனி உறுதி தந்தார்.

    "மன்னா.… பிள்ளை பிறப்பான்.. உன் குலம் விளங்கும்… கவலைப்படாதே"
     கண்ணீர் துடைத்தார் .

    நடந்தவற்றையெல்லாம் ரசித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
    நிஜ யானை  மன்னர் கழுத்தில் முத்து மாலையைப் போட்டு வாழ்த்தியது .

    பின்னர் சித்தரை தாழ்பணிந்து வணங்கியது. மீண்டும்
    ' கல்' யானையானது.

     மன்னனும் பரிவாரமும் கைகூப்பித் தொழ  அவர்கள் கண் முன்னேயே ஆலவாயன் சன்னதிக்குள் புகுந்து மறைந்தார் சுந்தரானந்தர்.

    இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கல்யானை பார்க்கலாம்.

    அருகிருக்கும் சன்னதியில் சித்தர் சுந்தரானந்தரை தரிசிக்கலாம் பேரருள் பெறலாம்.

  • கொங்கணருக்கு பெயர் சூட்டிய சித்தர் பிரான்

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    சித்தர்களில் சிறந்தவர் கொங்கணர்.

    அகத்தியர்

    திருமூலர்

    போகர்

    கௌதம மகரிஷி

    திருமழிசை ஆழ்வார்

    திருமாளிகைத்தேவர்

    என மூத்த சித்தர்களின் குருவருள் பெற்றவர்.

      ஈடுஇணையற்ற திருமாளிகைத் தேவரிடம்

     தீட்சை பெற்று நிறைவடைந்தவர்.

     கொங்கணருக்கு அப்பெயர் வந்த வரலாறு சுவாரசியமானது. தெய்வீகமானது.

     அடிப்படையில் அம்மன் பக்தர். அம்மன் வழிபாடே அவருக்கு அனைத்துமாய் திகழ்ந்தது.

    பொதுவாக 'சக்தியே'  தாயே அன்னையே என சித்தர் பாடல்களில் அம்மன் வழிபாடு அதிகமாக இருக்கும்.

     கொங்கணர்

    மாரி அம்மனின் பக்தர்.

    மாரி மைந்தன்.

     இரும்பை உருக்கி கலங்கள் தயாரித்து

    சிவன் கோயிலில் விற்பது கொங்கணரின்

    பெற்றோர் மேற்கொண்டிருந்த குலத்தொழில்.

     அழகிய சிறுவனாய் கொங்கணர்

    சிரித்து மகிழ்ந்து விளையாடிய போதும்

    அவர் சிந்தையில் எப்போதும் அம்பிகை இருந்தாள்.

     இளைஞராய்

    வாலிபராய்

    வலம் வந்த போதும் அம்மனே அவர்

    கனவிலும் நினைவிலும் அன்னையாய் கலந்திருந்தாள்.

     முக்தி என்பாளுடன் திருமணம் நடந்தது.

    மனைவியுடன் மகிழ்ந்து இருந்தபோதும் கூட

    மாரி அம்மனே மனதில் நிறைந்து இருந்தாள்.

     இந்நிலையில்

    அடிக்கடி அவர் பாதை வேறு என

    ஓர் எண்ணம் எழுந்து உள்ளத்தை உசுப்பியது.

     வாய்த்த மனைவி பேராசைக்காரி.

    பணம் பணம் என்பதே அவளது நிரந்தர பல்லவி.

     செல்வமே சக்தி என்பது மனையாள் முக்தியின் வேதம்.

    சம்பாதிப்பவரே சிறந்த மனிதன் மற்றவரெல்லாம்

    பேடி என பரிகசிப்பாள் அவள்.

     கொங்கணர் அவள் நச்சரிப்பால் தொழிலில் கவனம் அதிகம் கொண்டார்.

    நல்ல வருமானம் நாளும் பெருகியது.

     ஆனால் அவர் மனதின் ஓரத்தில் ஏதோ உறுத்தியது.

    அவர் மனம் ஆன்மீகம் தேடியது.

     மனைவி பெயரில் தான் முக்தி.

    கொங்கணர் நாடிய முக்தியை சக்தியை அவள் தரவில்லை.

    விரக்தியே மிச்சமாய் விஞ்சி நின்றது.

     வேதியரை ஞானியரை சாதுக்களைக் கண்டால் போதும்

    ஓடி ஓடி அவரடி தொழுவது கொங்கணரின் வழக்கம்.

     அவர்களுக்குப் பசும்பால் தந்து உபசரிப்பார்.

    வந்தவர் பதிலுக்கு ஞானப்பாலை அவருக்கு அளிப்பர்.

    இருப்பினும்

    'இன்னும் சம்பாதிக்க வேண்டும் சொத்து சுகம் பெருக்க வேண்டும்' என்ற தலையணை மந்திரம் பெரிதாய் கொங்கணரிடம் வேலை செய்தது.

     நிறைய சக்திகள் பெற வேண்டும்.

    உயர் சித்திகள் கற்று உயர்நிலை அடைய வேண்டும் .

     இரும்பை தங்கமாக்கி

    புகழ் பொருள்

    பெற வேண்டும்.

     இம்சை அரசி

    இல்லாளிடம்

    நற்பெயர் பெற வேண்டும்.'

     அதற்கு தவசி, முனிவர், யோகி சித்தர் என யாரிடமாவது கற்றுணர வேண்டும்.'

    என்றெல்லாம் அடிக்கடி அசை போட்டார்.

    ஆசை அதற்கோர் நாள் பார்த்தது.

     எளிமைக்கு இலக்கணமாய் சித்தர்கள் திகழ்வர்.

    இதற்கு முற்றிலும் மாறுபட்டவராய் கொங்கணர் இருந்தார்.

     ஆசை, செல்வம், பயம், படோபடம், கோபம், அலட்சியம், வேகம், மனைவி சொல்லே வேதம் என பலப்பல பன்முக குணாதிசயங்கள் அவரிடம் அதிகம் இருந்தன.

    அத்தனைக்கும் பின்னால் அவரை மணந்தவள் இருந்தாள்.

     மணவாட்டி ஆட்டியபடி வாழ்க்கை மணி ஆடியது.

    சத்தமும் எழுந்தது. ஆனால் அது புறத்தில்.

     அகத்தே அவர் நிலை தேடல்களால் நிரம்பி இருந்தது.

     இரண்டு நிலைகளால் இருண்ட குழப்பமே

    நிதமும் தொடர்ந்தது.

     காடு, மலை, குகை சென்று தேடினால் குருவைக் காணலாம்.

    அவர் சொல்வழி நடந்தால் அம்பிகையை அடையலாம்,'

    என மனக்குரல் தினம்தினம் சொல்லச் சொல்ல,

    அவர் யாரிடமும் சொல்லாமல் – குறிப்பாய்

    வாய்த்த குணவதியிடம் சொல்லாமல்

    கானகம் செல்ல விருப்பப்பட்டார்.

    அதற்கென திட்டமிட்டார்.

     அதுசமயம் – 

    ஒரு சித்தர் திருவாடுதுறை வந்திருப்பதாக காற்று வாக்கில் சேதி வந்தது.

     காற்றை விட வேகமாக ஆடுதுறைக்கு புயல்போல் ஓடினார்.

    அவரைத் தேடி அலைந்தார். திரிந்தார்.

     ஒருநாள் அவருக்கு திருநாளாய் அமைந்தது.

     அடர்ந்த மரத்தடியில்

    ஓர் ஒளி சிந்தும் சித்தரைத் தரிசித்தார்.

    அவர் போகர்.

    ஆச்சரியத்தோடு, "அடைக்கலம்", என்றபடி அவர் பாதங்களைப் பற்றி  கண்களால் ஒற்றினார். நெற்றியால் வருடினார்.

    ஸ்பரிசம் பட்டதும் தவத்தில் இருந்த போகர் சட்டென விழித்தெழுந்தார்.

     பார்த்த மாத்திரத்தில் அவரைப் பிடித்துப் போயிற்று போகருக்கு.

     அவர் சிங்கமென சிலிர்த்து  தங்கமென ஒளிரப்போவது

    அப்போதே போகருக்குத் தெரிந்து போயிற்று.

    "யாரப்பா நீ…?"

    "அடியேன்

    அம்பாள் பக்தன்.

    அவளடி வாழ்பவன். அவளை அடைய வழி தேடி வந்தேன்.

    நீங்கள் வழிகாட்ட வேண்டும்.

    அடியேனுக்கு அனைத்தையும் போதிக்க வேண்டும்."

    ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் .

    "உன் பெயர் ?"

    பதில் இல்லை.

    "எங்கிருந்து வருகிறாய் ?"

    " கொங்கண தேசத்தில் இருந்து"

    தன் முன்கதைச் சுருக்கம் தந்தார்.

      "ஓ… கொங்கண நாட்டுக்காரனா….?

    …. உன்னை

     'கொங்கணர்'

    என்றே இனி அழைக்கிறேன்.

    நீ நீடு புகழ் பெறுவாய். உலகம் உனைத் தொழும்

     கொங்கணா… உன் விருப்பம் நிறைவேறும்"

     அந்த திருநாமமே நிலைத்துப் போனது.

     போகர் சூட்டிய பெயர்

    கார் உள்ளளவும்,

    கடல் உள்ளளவும் நிலைத்து நிற்கும் அன்றோ?

    நின்றது.

    நிற்கிறது.

     கொங்கண சித்தர்

    கொங்கண முனிவர்

    கொங்கண நாதர்

    கொங்கண நாயகர்

    என அப்பெயரே விரிந்தும் சிறந்தும் ஒளிர்ந்தும் வியாபித்துள்ளது.
     

  • சிறுதுளி அருள் வெள்ளம்

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    அந்த தவஞானி ஒரு கணங்க மரத்தின்கீழ் சிவமோனத்தில் ஆழ்ந்திருந்தார்.

    ஆழ்ந்தவர் பிரம்ம நிலையில் அமிழ்ந்து போனார்.

     காலம் கடந்தது.

    அவ்விடம் காடாய் அடர்ந்தது.

     ஒருசமயம் அவ்வழி வந்த சிங்க ஜோடி ஒன்று அங்கேயே தங்கி வாழத் தொடங்கின.

     அருகிலிருக்கும் ஞானி பன்னெடுங்கால தவம் காரணமாக சிலைபோல் இருக்கவே ஏதோ கற்சிலை என விட்டுவிட்டன.

    காலம் வேகமாக சுழன்றது.

     சிங்கத்தின் குடும்பம் பெரிதானது. அவ்விடம்  சிங்க கூட்டத்தின் வாழ்விடமானது.

     காட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொண்டு வந்து உண்ணும் இடமும் அதுதான். நேரம் காலமின்றி கலவி புரியும் காம புரியும் அதுதான்.

     ஒருநாள் ஆண்சிங்கம் கற்சிலை மடியில் ஆனந்தமாய் அனந்தசயனம் கொண்டது.

     வழக்கம்போல் நாவால் உடல் மேவிய சிங்கம் சிலைபோல் இருந்த தவஞானியையும் இதமாய் நக்கத் தொடங்கியது.

     ஞானியிடம் எச்சலனமுமில்லை. கற்சிலை தோற்கும் மோனநிலை.

    ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர். 

    அது கன்னத்தில் வழிந்து மார்பில் ஓடி சிங்கத்தின் வாயில் பட்டது.

    அத்துளி ஓர் அதிர்வை உண்டுபண்ணியது.

    துள்ளி எழுந்தது சிங்கம்.

     நாவை நனைத்த அச்சிறு துளி பெரும் ஞானத்தைத் தந்து நிறைத்தது.

     "ஐயகோ…. இது கற்சிலை அல்ல….. சிலை வடிவில் ஒரு மகானின் சிலை…"
    புத்தியில் உறைத்தது.

    " ஐயோ… இவரின் இந்த புனித தலத்தை இத்தனை காலம் மாசுபடித்து விட்டோமே" சட்டென சிந்தனை எழுந்தது.

    தனது கூட்டத்தை அழைத்து விஷயத்தைச் சொன்னது சிங்கராஜா.

     சிங்க பரிவாரங்கள் நாற்புறம் சிதறி ஓடி நீர் கொண்டு வந்து சுத்தம் செய்து, மலர் கொண்டு வந்து மங்கலபுரி ஆக்கின.

     அவரைக் கடவுள் எனத் தொழ தொடங்கின..

     ஞானம் விரிந்தது.

     சிங்கக் கூட்டத்தின் தலைவன் ஒரு நாள் சொன்னான் " புலால் தவிர்ப்போம்.. கொலை புலை வேண்டாம்".

    " உணவுக்கு….?" கேட்டது ஒரு இளஞ்சிங்கம்.

    "காய்கறி போதும்." கர்ஜிக்காமல் கனிவாய் சொன்னது சிங்கராஜா.

    " வேட்டைக்கு பதில் என்ன செய்வது ?",புதிய தலைமுறை தர்க்கத்திற்குத் தயாராகி முறைத்தது.

    " சிவ சிந்தனை போதும்.. இந்த இறை வேட்டையில் இறைவனே சிக்குவார்" ஞானம் சொன்னது  சிங்கத்தலைமை..புதிய வேதம் சொன்னது. 

    சிங்கக் கூட்டம் சைவக்கூட்டமாகி வேட்டை விட்டு சிவயோக வேட்டையில் சிறக்கத் தொடங்கின.

     பல காலம் கழித்து ஒரு நாள் தவராஜா  தவம் கலைந்தார்.

      எதிரில் சைவப் பழமாய் திகழ்ந்த சிங்க ராஜாவை யார் என கேட்டார்.

     நடந்ததைச் சொன்னது சிங்கராஜா. நெகிழ்ந்து போனார் தவராஜா.

     ஞானத்தந்தை அப்படியே ஆரத் தழுவினார் ஞானவிலங்கை.அவர் அருள் அப்படியே சிங்கத்தின் உள் பாய்ந்தது.

     அதன்பின் உலகே வியக்கும் அற்புதம் நிகழ்ந்தது.

     சிங்கராஜா ஓர் அரச குடும்பத்தில் அருந்தவ குழந்தையாய் அவதாரம் எடுத்தார்.

    உரிய பருவத்தில் அரசராகப் பொறுப்பேற்று மக்களும் விலங்கினங்களும் போற்ற அரசாண்டார். 

    ஒரு சிறு கண்ணீர்த் துளியை உண்ட சிங்கம் ஞானம் பெற்று நானிலம் போற்றும் அரசனானது அந்த ஞானியின் பேரருள்.

    தவ ஆற்றலும் அருளாற்றலும் மிக்க அந்தஞானி போகர்.

     போகர் பிரான்…

     சித்தர் போகர் பிரான்.
     

  • சித்தனுக்காக வாசலுக்கே வந்த அரங்கன்

    சட்டைமுனி
    ஊர் ஊராய்
    உலா வந்த போது
    ஒரு நாள்…

    தூரத்தில்
    ஒரு கோபுரம்
    கண்ணில் பட்டது.

    அது 
    ஸ்ரீரங்கம்
    அரங்கநாதர் ஆலயம்
    என்பது
    சட்டைமுனியின்
    மனத்திற்குப் புரிந்தது.

    இரவுக்குள்
    சன்னதியை அடைந்து
    இறைவனின் 
    தாள் பணிந்திட
    வேண்டுமென
    வேகமாய்
    நடை போட்டார்.

    வயது 
    மிகுந்திருந்ததால்
    அவரது
    ஓட்டத்தை விட
    கால ஓட்டம்
    அதிகமானது.

    அதனால்
    சட்டைமுனி
    போய்ச்
    சேர்ந்த போது
    கோயில் நடையைச்
    சாத்தி விட்டார்கள்.

    சோர்வு  
    உடலில் தானே தவிர 
    மனதில் இல்லையே..!

    "அரங்கா…!
    அரங்கா…..!
    அரங்கா……!"

    கதறினார்
    சட்டைமுனி.

    அவர் குரல்
    அரங்கனை
    எட்ட…
    ஓர்
    அற்புதம் நிகழ்ந்தது.

    கோயிலின் 
    இசைக் கருவிகள் 
    தானாய்
    முழங்கின….

    மேள தாளங்கள்
    வரவேற்பு
    பாடின….

    கோயில் மணிகள்
    ஓங்கி ஒலித்தன….

    கதவுகள்
    ஓசைபட
    முழுதாய்த்
    திறந்தன.

    அரங்கன்
    புன்னகை தவழ
    வைர வைடூரிய
    ஆபரணங்கள்
    தகதகவென
    ஜொலிக்க
    பிரத்யேக
    அருட் காட்சி
    தந்தார்.

    "அரங்கா…
    அரங்கா…"
    எனக்
    கூவியவாறே
    அருகே ஓடி
    அரங்கன்
    திருவடி தேடினார்
    சட்டைமுனி சித்தர்.

    அச்சமயம்
    அவ்வழி 
    வந்தவர்க்கு
    திறந்திருந்த 
    கோயில் கதவுகள்
    பீதியைக் கிளப்ப
    திருடன் திருடன்
    எனத்
    திரண்டது
    கூட்டம்.

    உள்ளே
    வந்தவர்
    உதிரம்
    கொதித்தது….

    காரணம்.?

    இருந்தது..!

    அரங்க நாதரின்
    அத்தனை நகைகளும்
    சட்டை நாதரை
    அலங்கரித்துக்
    கொண்டிருந்தன.

    தெய்வீகக் கோலம்..!

    திரண்டிருந்தோர்
    பார்வையிலோ…

    'சகிக்க முடியாத
    அலங்கோலம்.'

    "ஆசையைப் பாரு…
    அரங்கன் நகைகள்
    அற்பனுக்கா…"

    கூட்டத்தின்
    ஒரு பாதி
    நகைகளைப்
    பறித்தது.

    சட்டைமுனியைச்
    சாபங்களால்
    அர்ச்சித்தபடியே
    நகைகளைச்
    சுத்தம் செய்து
    அப்போதே
    அரங்கனுக்குச்
    சாத்தியது
    இன்னொரு பாதி.

    'சாமி குத்தம்'
    என ஓலமிட்டது
    கோயிலைச் சேர்ந்த
    வேதியர் கூட்டம்.

    பிடித்து இழுத்து
    நையப் புடைத்து
    அரசன் முன் 
    நிறுத்தியது
    இன்னொரு
    முரட்டுக் கூட்டம்.

    "என்ன நடந்தது.?"

    அரண்மனை
    அதிரக் கேட்டான் 
    அரசாளும் மன்னன்.
    அக்குரல்
    அந்தப்புரம் வரை
    கேட்டது.

    "எனக்கெதுவும்
    தெரியாது….மன்னா..
    இது
    மாயவனின்
    திருவிளையாட்டு…"
    மென்மையாய்
    சொன்னார்
    மெய்ஞானி.

    "திருட்டு விளையாட்டை
    துணிந்து
    செய்துவிட்டு
    திருவிளையாடல்
    என்று
    திருமால் மீதே
    சாட்டுகிறாயே..

    "என்ன கதையா…
    நடந்தது என்ன..?"

    மீண்டும் கேட்டான்
    மீளா சினத்துடன்

    நடந்தது அனைத்தையும்
    மெலிதாய் சொன்னார்
    மெய்ஞான சித்தர்.

    .'உண்மையாய்
    இருக்குமோ'

    மன்னன் மனத்தில்
    மின்னலொன்று
    அடித்தது.

    'பார்த்து விடலாம்..'

    மனது 
    கட்டளை இட்டது.
    மன்னன்
    வழிமொழிந்தான்
    அரச கட்டளையாக..!

    "கோயிலுக்கு
    கூட்டிச் செல்லுங்கள்….

    இவர்
    அழைத்தால்
    நம் பெருமான்
    வருவாரா
    எனப் பார்த்து
    விடலாம்.."

    ஓங்கி
    உலகளக்கும்
    உத்தமன்
    கோயில் சாத்தப்பட்டது.

    வாசலுக்கு வெளியே
    மீண்டும்
    சித்த பெருமான்.

    இம்முறையும்
    சட்டை முனிவரின்
    குரல்
    விண்ணைப்
    பிளந்தது…
    மூன்று முறை.

    "அரங்கா…!
    அரங்கா….!!
    அரங்கா…!!!."

    அரசனும்
    மக்களும்
    ஒருகால்
    அரங்கன் வந்தால்
    இந்த சாமியாரின்
    தயவால்
    அவனை
    தரிசித்து
    'வைகுண்ட
    பாக்கியம்'
    அடையலாமே
    எனக்
    கணக்குப்
    போட்டபடி
     காத்திருந்தனர்.

    என்னே அதிசயம்..?!

    அரங்கன் வந்தான்…..!

    முன்பு போலவே
    மேளங்கள்
    மணிகள்
    முரசுகள்
    முழங்க….

    'தட் ….தடார்…'
    என
    ஆனை போல்
    பிளிறி
    இரு கதவுகளும்
    மெல்லத் திறந்தன…

    விண்ணுக்கும்
    மண்ணுக்குமாய்
    வேங்கடன்
    வெளிப்பட்டான்.

    அட…

    அரங்கன்
    அணிந்திருந்த 
    ஆபரணங்கள்
    அவன்
    திருமேனியிலிருந்து
    தாமாகக் கழன்று
    சட்டை முனியின்
    மேனியில்…
    சிரசில்…..
    கரங்களில்….
    சூடிக் கொண்டு
    பேரொளி பரப்பின.

    அரங்கனைப்
    போலவே
    சட்டைமுனியும்
    ஜொலித்தார்.

    அரசனும்
    அருகிருந்தோரும்
    அதிர்ந்து நின்றனர்.
    கொஞ்சம்
    பயந்து நெளிந்து
    வணங்கினர்.

    அரங்கனும்
    அவனது
    அன்பனும்
    ஒன்றே என
    இறைவன்
    உலகுக்கு
    உணர்த்திய
    நிகழ்வே
    இதுவென
    அனைவரும்
    போற்றித் தொழுதனர்.

     தொடர்ந்து
    'அரங்கா…
    அரங்கா…
    அரங்கா….."
    என
    சட்டைமுனி
    உருகிக் குரலிட…

    அத்தனை பேரும்
    யாருக்கும் கிட்டாத
    பிறவிப் பயன்'
    என
    வைணவம் மெச்சும்
     விஸ்வரூப தரிசனம்
    கண்ட  பரவசத்தில்
    'அரங்கா.. அரங்கா..'
    என
    மெய் சிலிர்த்தனர்.

    அப்போது
    அங்கோர்
    அற்புதம்…
    இனிது
    நிகழ்ந்தது.

    அகிலம் வணங்கும்
    அரங்கனின்
    திரு உருவோடு…

    திருவோடோடு
    வாழ்க்கையைத்
    துவக்கி
    அன்று
    அரங்கனின்
    ஆபரணங்களோடு
    ஒளிர்ந்து கொண்டிருந்த
    சட்டை முனி சித்தர்
    ஒளியாய் எழும்பி
    பேரொளி வீசிய
    பெருமானோடு
    இரண்டறக் கலந்தார்.

    கண்ணுற்ற
    மக்கள்
    இறைமுழக்கம்
    செய்யச்…செய்ய
    இறைவனும்
    சித்தனும்
    மறைந்து போயினர்.

    மெய்சிலிர்க்கும்
    இப்புராண வரலாறு
    'சட்டைமுனி
    வைணவர்'
    என்போரின்
    வரலாற்றுப்
    பதிவாய் உள்ளது.

    அதற்கு
    சாட்சியாக
    ஸ்ரீரங்கத்தில்
    சட்டைமுனியின்
    ஜீவ சமாதி
    உள்ளது.

    – 'மாரி மைந்தன்' சிவராமன்
     

  • இந்த தியானம் …. நம்மால் முடியுமா? 

    யோகக் கலையின் ஒரு பகுதியான தியானம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு குழப்பம்  நிலவுகிறது. சித்தர்களும் ரிஷிகளும் செய்யும் தியானம் நம்மால் செய்ய முடியுமா? 

    ஒருவருக்கு  தியானப்பயிற்சி பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. சாதாரண மனிதரை மற்றவருக்குப் பயன்தரும் நல்ல குணங்கள் கொண்டவராக மாற்றுகிறது. நமது பொறுப்புகளை உணரச் செய்கிறது. வாழும் உயிர்களுக்கும் நமக்குமான உறவில்  உண்மையாக இருக்க நெறிப்படுத்துகிறது. 

    நம் மனதுக்கு உண்மையாக இருக்கும்படி நம்மைப் பண்படுத்துகிறது. உணர்வுகளைக்  கட்டுப்பாட்டில் வைப்பதும் கைவரும். தனக்காக மட்டுமே வாழாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ வேண்டியதன் அவசியம்  புரியும். தன்னை உணர்வதன் வழியாக எந்தச் சூழலிலும் மகிழ்வாக இருக்க முடியும். 
     
    மனதைச் சமநிலைக்குக் கொண்டு வருவதால் நம் நடத்தைகளைக் கவனித்துச் சரி செய்வது எளிதாகும். சுய மதிப்பீடு செய்து, நம்மை நாமே சரி செய்வதால் எண்ணங்கள் சுத்தமடையும். இதுவே செயலாக நம்மிலிருந்து வெளிப்படும். தியானம் உங்களுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நிகழ உதவுகிறது.
     
    மனப்பயிற்சியின் வழியாக நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலான சூழலையும் புரிந்து கொள்வது எளிதாகும். மனநிலையே உங்களது மூளையில் சுரக்கும் ரசாயனங்களின் விகிதத்தைத் தீர்மானிக்கிறது.
     
    மனம் சமநிலையில் இருக்கும்போது உங்களுக்குள் அதிகமாக பாசிட்டிவ் அதிர்வலைகளை உணர முடியும். மன அமைதிக்கும்  மகிழ்ச்சிக்கும் இப்படியான ஒரு நிலைக்கு உங்கள் மனம் நகர வேண்டும். தியானத்தின் வழியாகவே இந்த நிலையை நீங்கள்  அடைய முடியும்.
     

  • காஞ்சி மஹா பெரியவர் அருளியது…

    எத்தனை ஜன்மம் வந்தால் தான் என்ன கஷ்டம்?
    “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி
    என்மனத்தே வழுவாதிருக்க வரந்தரல்
    வேண்டும் இவ் வையகத்தே”

    என்று நாயன்மார்களுள் ஒருவரான திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூர் ஈசுவரனை நோக்கிப் பிரார்த்தனை செய்துகொள்கிறார். நாவுக்கு அரசர் அவர். அவர் மெய்மறந்து ஸ்தோத்திரம் பண்ணுகிறபோது ஆசாரிய சுவாமிகள் கருத்தை அனுசரித்தே சொன்னார்.

    நிஷித்தமான எந்த ஜன்மம் வந்தாலும் சரி, உடல் அழுக்காய் இருந்தால் என்ன? உள்ளம் சதா சுத்தமாக ஆனந்தமாக இருக்க வேண்டும். உள்ளம் சுத்தமாக ஆனந்தமாக இருந்துவிட்டால் உடம்பு எவ்வளவு விகாரமாக இருந்தாலும் பரவாயில்லை. உடல் அழகாக இருந்து, உள்ளம் எப்போது பார்த்தாலும் விகாரமாக துக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்படியான ஒரு ஜன்மம் என்றால், எத்தனை அலங்காரமாக இருந்தாலும் அது வேண்டவே வேண்டாம். அதனால் பிரயோஜனம் இல்லை.

    எந்தத் துக்கமும் இல்லாமல் எப்போதும் ஹ்ருதயம் ஆனந்தத்தோடு இருந்துவிட்டால், திரும்பியும் எத்தனை ஜன்மம் வந்தால்தான் என்ன கஷ்டம்? ஆகவே, “சதா ஈசுவரனுடைய சரணாரவிந்தங்களிலேயே லயப்பட்டு ஆனந்தத்தோடு இருக்கும்படியான ஜன்மமாக இருந்தால், எத்தனை ஹீனமான ஜன்மமாக இருந்தாலும் வரட்டும்’ என்று ஆசாரிய சுவாமிகள் ஸ்தோத்திரம் செய்கிறார்கள்.

  • சதுரகிரி மலை – ஒரு ஆன்மிக உலா

    சதுரகிரி தல வரலாறு :
    சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் 0/கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

    வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

    சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

    சிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

    இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
    இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும்.

    இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
    கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

    இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.


    இரட்டை லிங்கம்:
    ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

    “”சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,”என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, “”நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,” என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

    பிலாவடி கருப்பு:
    வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “”சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,” என்றார்.
    வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை “பிலாவடி கருப்பர்’ என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

    பெரிய மகாலிங்கம்:
    நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை “பெரிய மகாலிங்கம்’ என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    தவசிப்பாறை:
    மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் “மஞ்சள் ஊத்து’ தீர்த்தம் உள்ளது.
    தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது.

    உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை “நவக் கிரக கல்’ என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள “ஏசி’ பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் “வெள்ளைப்பிள்ளையார்’ பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

    சுந்தரமூர்த்தி
    கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை “கும்ப மலை’ என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் “சுந்தரமூர்த்தி லிங்கம்’ எனப்படுகிறது. அருளை வழங்குவது “சுந்தரமகாலிங்கம்’, பொருளை வழங்குவது “சுந்தரமூர்த்தி லிங்கம்’ என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

    பார்வதி பூஜித்த லிங்கம் :
    சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து “அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் என தல வரலாறு கூறுகிறது.

    பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.
    இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

    லிங்க வடிவ அம்பிகை
    சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் “ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

    சதுரகிரியில் தீர்த்தங்கள்
    சந்திர தீர்த்தம்
    சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்’ இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

    கெளண்டின்னிய தீர்த்தம்.
    சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

    கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ”பாவகரி நதி” என்னும் பெயரும் உண்டு.

    சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.
    இச்சதுரகிரியின் மேல் ‘காளிவனம்’ என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

    இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
    இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய ‘திருமஞ்சனப் பொய்கை’ உண்டு.

    காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட ‘பிரம்மதீர்த்தம்’ ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட ‘பொய்கைத் தீர்த்தம்”, ”பசுக்கிடைத் தீர்த்தம்”, ‘குளிராட்டித்

    தீர்த்தம்’ போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
    மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
    பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

    அபூர்வ மூலிகைகள் :
    இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
    பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன.

    இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
    தவிர கோரக்க முனிவரால் ‘உதகம்’ என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

    இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் ‘உதகம்’ என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
    விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.
    சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.
    இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
    அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்’ என்றொரு மரம் உண்டு.
    இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும்.

    இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
    சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
    இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
    மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.

    உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

    சதுரகிரி மலை – ஒரு ஆன்மிக உலா
    சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
    சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

    சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
    இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
    சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.

    நோய் தீர்க்கும் மலை:
    சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
    திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்
    தாணிப்பாறை அடிவாரம் – கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
    மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை’ என்கின்றனர்.
    சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

    ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
    பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
    இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
    மகாலிங்கம் கோயிலின் வடக்கே “ஊஞ்சல் கருப்பண சாமி’ கோயில் உள்ளது.
    சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
    ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
    சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

    இருப்பிடம்:
    மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
    அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் – செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி – கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி – அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
    அங்கிருந்து தாணிப் பாறைக்கு – மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

    திறக்கும் நேரம்:
    காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.
    மலைக்கு மேலே – சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க ” கஞ்சி மடம் ‘ உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ – நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.