Category: சித்தர்கள்

சித்தர்கள்

  • திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் …..

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் மற்றும் நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி,
    ஆகஸ்டு 17 ஆம் தேதி மாலை 4.48 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுதினம் 18 ஆம் தேதி மாலை 3.53 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • ஆடியில் சதுரகிரி மலைக்கு செல்ல உகந்த நாட்கள்

    ஆடி அமாவசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், நவராத்திரி, மகாசிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறும். இதில் ஆடி அமாவாசை பிரசித்த பெற்ற திருவிழாவாகும். ஆடி அமாவாசை தினத்தன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வர்.

    சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு சயாட்சை பூஜை, இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும்.

    இதனை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை சதுரகிரி மலைக்கு சென்றுவர பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி சதுரகிரி அடிவார பகுதியான அடிப்படை வசதிகளை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பு பணியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த போலீசாரும், மதுரை மாவட்ட போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வனத்துறை, தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

  • கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?

    கங்கைக் கரையில் வைக்கிறேன் என்று சொல்லி தமிழகத்தில் இருந்து எடுத்துச் சென்று கடைசியில் பூங்காவில் பாலிதீன் கவர் சுற்றிக் கிடக்கும் நமது திருவள்ளுவருக்கும் சித்தர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த சுவாரஸ்ய தொடர்பு பற்றியதுதான் இந்த பதிவு..

    தமிழகத்தில் அவதரித்த சித்தர்களில் முக்கியமானவர் கொங்கணவர். இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் 
    என்று சொல்பவர்களும் உண்டு.

    கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர் பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன. இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டில் வாழ்ந்தவர். அதனால் தான் அவருக்கு இந்த பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள்.

    இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் “வாலைக் கும்மி” என்பது ஒன்று. வாலை என்றால் சக்தி என்றும், கன்னி என்றும் இரு பொருள் உள்ளது. கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது. இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அல்ல. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.

    சரி, இப்போது கொங்கணர் பற்றிய கதைக்கு வருவோம். கொங்கணர் ஒருமுறை, ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்த போது, மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டுவிட்டது. உடனே கொங்கணர் கண்ணை விழித்து அந்த கொக்கை பார்த்தார். உடனே அது எரிந்து சாம்பலாகிவிட்டது. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டார். வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். எனவே அவர் பிச்சை கொண்டுவர கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்டாராம். எங்கோ நடந்த விஷயம் வீட்டிற்குள் இருந்த இந்த அம்மாளுக்கு தெரிகிறதென்றால் இவர் எத்தனை பெரிய சித்த ஞானியாக இருப்பார் என்று எண்ணி கொங்கணர் வாசுகியை வணங்கினாராம். பின்னர் திருவள்ளுவர் சீடரானார் என்கிறது அந்த கதை.

  • சித்தர்கள் யார்?

    ‘சித்தர்கள்’ என்றால் மகாசக்தி படைத்த மனிதர்கள் என்பதுதான் பொதுவான எண்ணம். உண்மையில் யார் சித்தர்கள்? இன்றும் சித்தர்கள் இருக்கிறார்களா? ஆம் என்றால் எங்கு இருக்கிறார்கள்? அவர்களை நாம் பார்க்க முடியுமா? முடியும் என்றால் எப்படி பார்ப்பது? இப்படி அடுக்கடுக்காய் பல கேள்விகள் எழுகின்றன. 

    முதலில் சித்தர்கள் என்ற சொல்லுக்கான பொருளைத் தெரிந்துகொள்வோம். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே தேடுகிற அனைவரையும் இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். இருந்தாலும், வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் எனப்படுகிறார்கள். சித்தர்கள் என்பவர்கள் தெய்வமரபைச் சார்ந்தவர்கள். அவர்கள் தூய்மையின் சிகரமாகவும் தெய்வீகத்தன்மையும் கொண்டவர்கள்.

    சித்தன் என்பவன் மூன்று விதமான கட்டுப்பாடுகளை தன்னுள் கடைப்பிடித்துக் கொண்டு அதன்படி வாழ்தலில் வெற்றிகண்டு சமத்துவத்தையும் சமநிலையையும் ஏற்படுத்திக் கொள்பவன் ஆவான். மூச்சை அடக்குதல் (பிராணாயாமம்), விந்துவை வெளியிடாது அடக்கிக் காமத்தை வென்று எந்தவித ஆசைகளும் இல்லாத நிலையை அடைதல், இறுதியாக மனதை அடக்குதல் என்பவையே அந்த மூவகைக் கட்டுப்பாடுகள். சித்தர்கள் எங்கிருந்து எதை உண்டாலும் எப்படித் தோற்றமளித்து எதைச் செய்தாலும் உலகியல் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தாலும் அவர்களுடைய சிந்தனை ‘சிவம்’ ஆகிய பரம்பொருளோடு ஒன்றாயிருக்கும். இல்லற வாழ்வெனும் உலகியலில் இருந்தாலும் ஆசைகள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் புளியம்பழமும் ஓடும் போல் ஒட்டாமல் இருப்பர். எனவே, சித்தர் நிலையைத் தொட்டவர்கள் காட்டிலோ குகையிலோ வாழ வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. “கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள். தெளிந்தவர்கள் சித்தர்கள்.”

    மனிதர்களிடத்தே நிலவும் சாதிவேற்றுமைகளையும் ஏற்றதாழ்வுகளையும் கடுமையாகச் சாடிப் புரட்சி செய்தவர்கள் சித்தர்கள். சித்தத்தில் சிவனைக்காணும் வரை உடலைக் காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக் காயகல்பம் உண்டவர்கள். மேலும், ஏழைகளின் நோய்களைத் தீர்ப்பதற்கு சித்தர்கள் எளிய மருந்துகளைக் கண்டறிந்து அவர்களின் துன்பம் தீர்த்தனர். சித்தர்களில் பலர் யோகப்பயிற்சியாலும் சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள். இவர்கள் மனோ சக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள். அகண்ட அண்ட சராசர ரகசியங்களையும் அறிந்து அவற்றை வெளி உலகிற்கு அளித்தவர்கள்.

    சித்தர்கள் யோகசாதனத்தால் பெற்ற பயன்களை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தினார்களே ஒழிய, தங்களுக்காக எதுவும் செய்து கொண்டதாக தெரியவில்லை. பதினெண் சித்தர்களுக்கு முன்னே நவநாத சித்தர்கள் என்ற ஆதி தமிழ்ச்சித்தர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும்வகையில் மிக மிக, எளிமையான இலக்கண நடையில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஓலைச்சுவடிகளில் நூல்களாக எழுதியுள்ளார்கள்.

    எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. அகத்தியர் என்ற பெயரில் மட்டும் 37 பேர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் நம் தமிழ் மரபைப் சேர்ந்த அகத்தியர் திருக்குற்றால மலையில் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருந்து அங்கு ஆலயம் அமைத்து வழிபட்டவர். இவரது காலம் கி பி. 13 ஆம் நூற்றாண்டாகும். அகத்தியர் தமிழ்மொழி, தமிழ் இலக்கணங்களைப் பரமசிவனிடத்தில் இருந்தும், முருகப் பெருமானிடத்திலிருந்தும் கற்றுத்தமிழ் மொழியைத் தமிழ் நாட்டில் நன்கு வளர்த்தார். இவர் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் 3ம் மாதத்தில் பிறந்ததாகப் போகர் தமது 7000ஆம் நூலில் கூறுகிறார். அகத்தியர், திருமூலர், போகர் என பல சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து மக்களுக்கு நல்வழிகாட்டியிருக்கிறார்கள்.

    அடுத்தடுத்த கட்டுரைகளில் இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், அவர்கள் செய்த அற்புதங்கள் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்..

    – தொடரும்