Category: சித்தர்கள்

சித்தர்கள்

  • போகரின் நவபாஷாண மர்மம் – பூம்பாறை குழந்தை வேலப்பர்

    நவபாஷாணத்தின் மறைக்கப்பட்ட மர்மம்

    உலகில் நவபாஷாண சிலைகளை முதலில் உருவாக்கியவர் போகர் சித்தர். பலர் பழனி தண்டாயுதபாணியை மட்டுமே போகரின் படைப்பு என நினைக்கின்றனர். ஆனால் அதே போகரே கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பரையும் நவபாஷாணத்தால் உருவாக்கினார் என்பது பெரும்பாலும் அறியப்படாத உண்மை.

    பூம்பாறை – முருகன் அழைத்தால்தான் செல்ல முடியும்

    கொடைக்கானலிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூம்பாறை கிராமம். “முருகன் நினைத்தால்தான் இங்கு வர முடியும்” என்பது அப்பகுதி மக்களின் உறுதியான நம்பிக்கை. பாண்டவர்கள் வனவாச காலத்தில் இறுதியாகத் தங்கிய பகுதி இதே பழனி-கொடைக்கானல் மலைத்தொடர்தான். அங்குள்ள யானைமுட்டி குகையில் போகர் ஞான சக்தியும் மூலிகை ரசாயனமும் கொண்டு நவபாஷாண சிலைகளை உருவாக்கினார்.

    முதலில் தண்டாயுதபாணி வடிவில் பழனியில் பிரதிஷ்டை செய்தார். பின்னர் பஞ்சபூத சக்திகளை ஒருங்கிணைத்து, பூம்பாறை திருமண மண்டபத்தில் குழந்தை வடிவ முருகனைப் பிரதிஷ்டை செய்தார். இன்றும் அந்தக் குழந்தை வேலப்பர் அபரிமிதமான அருள் புரிகிறார்.

    அருணகிரிநாதரின் தெய்வீக அனுபவம்

    ஒரு முறை அருணகிரிநாதர் பூம்பாறை வந்து தரிசிக்க வேண்டி இரவில் கோவில் மண்டபத்தில் தங்கினார். அப்போது ஒரு ராட்சசி அவரைக் கொல்ல வந்தது. உடனே முருகன் குழந்தை வடிவம் எடுத்து அருணகிரிநாதரின் மார்பில் ஏறி விளையாடினார். இதைக் கண்ட ராட்சசி, “தாயுடன் குழந்தை தூங்குகிறது” என எண்ணி விலகிச் சென்றது. அந்த அற்புத அனுபவத்தால் பேரருள் பெற்ற அருணகிரிநாதர் இத்தல முருகனை “குழந்தை வேலர்” எனப் பாடினார். அந்தப் பெயரே இன்று வரை நிலைத்து நிற்கிறது. இங்கு அருணகிரிநாதருக்கும் தனிச் சிலை உள்ளது.

    பழனி தண்டாயுதபாணியும் பூம்பாறை குழந்தை வேலப்பரும் உலகில் அரிய நவபாஷாண தெய்வங்கள். இவர்களைத் தரிசித்தால் பாவ வினைகள் தீர்ந்து, வாழ்வில் செல்வமும் ஆனந்தமும் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    வேலும் மயிலும் துணை!

  • திருமூலர் பாடிய நடராசரின் ஆனந்த தாண்டவம்!

    ‘தமிழ்ச் சாத்திரம்’ என்று போற்றப்படுவது திருமூலர் அருளிய திருமந்திரம். பன்னிரு திருமுறைகளில் 10-ம் திருமுறையாகத் திகழ்கிறது. ஒன்பது ஆகமங்களைத் தமிழில் சொல்லும் ஞானப் பொக்கிஷம். 3000 ஆண்டுகள் தவத்திலிருந்து, திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடலாக உபதேசித்தது. மாடு மேய்க்கும் பாமரனும் முயன்றால் தெய்வ நிலையைப் பெறலாம் என்பதை உலகுக்கு உணர்த்தவே, மூலன் எனும் பாமரனின் மேனியில்  சுந்தரநாத யோகி புகுந்து, திருமந்திரம் பாடவைத்தார்.

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்திரம் 2104). ஆன்மிகத்தின் உச்சநிலையில் இருப்பது உருவமற்ற ஒரே கடவுள். மலையின் அடிப் பகுதியில் ஆயிரம் வழிகள். அதன் உச்சத்தைத் தொடும்போது சிகரம் ஒன்றுதான். நம் எல்லோராலும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்துவிட முடியாது. ஆகவே, கிடைக்கும் வழிகளைப் பிடித்துக்கொண்டு ஏறலாம்.  சிகரத்தை எட்டிவிட்டால், ஞானியாக ஆகலாம். இயலாதவர்கள், வழிபட்டு மேன்மை அடையவே நடராசரை நம்முன் நிறுத்துகிறார் திருமூலர்.

    9-ம் தந்திரம் 8-ம் தலைப்பு ‘திருக் கூத்து தரிசனம்’. இதில் சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொன்தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து ஆகிய தலைப்புகளில் – 82  பாடல்களில் நடராசரின் ஆனந்த தாண்டவத்தை பாடியுள்ளார் திருமூலர். இதை முழுதும் படிப்பவருக்கு நடராசர் பேரருள் நிச்சயம் வந்து சேரும்.
    அவற்றில் சில பாடல்கள் இங்கே… 

    விழித்திரை மூடினால்..!

    `ஆதி நடம் செய்தான் என்பார்கள் ஆதர்கள்
    ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர்’
    – திருமந்திரம் (2787)

    ஆதிபகவன் சிவன். அவரே ஆதாரமான தெய்வம். பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி ஐந்தொழில்களையும் ஆடல் மூலமாகவே செய்து கொண்டிருக்கிறார்.

    64 மகேசுவர வடிவங்களில் பிரதானமானவர் நடராசர். மனம் ஒன்றி, நடராசரை தரிசிக்க வேண்டும். பிறகு மனதுக்குள் அவர் நடனத்தைக் கொண்டு வந்து, கண்களை மூடி தியானிக்க வேண்டும். மூடிய திரைகள் முன் நடராசர் நடனம் தவத்தில் தெரியும். தியானத்தில் – விழித்திரைக்குள் நடன தரிசனம் காணும் முறையை அற்புதமாகப் பாடுகிறார் திருமூலர்.

    நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
    உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
    பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்த இடம்
    சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேன் (தி.மந்.-2770)

    பொதுவாக மேடைகளில் திரை விலகினால் நடனம் தெரியும். சிவ தியானத்திலோ, விழித்திரை கள் மூடினால் புருவ நடுவே சிவப் பேரொளி தோன்றும்; சிவானந்த தாண்டவம் தெரியும்.

    பாதச் சிலம்பொலி கேட்கும்!

    பரமனின் பரமானந்தத் திருநடனம் புலப்படுவது மட்டுமா? பரமனின் பாதச் சிலம்போசையும் நம் காதுகளில் கேட்குமாம்!

    ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும்
    பாடிய பாட்டும் பலவான நட்டமும்
    கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
    தேடி உளே கண்டு தீர்ந்தது அற்றவாறே

    நடராசரின் நடனச் சிலம்போசையைத் தினமும் கேட்டவர் சேரமான் பெருமாள் நாயனார். அப்படியான பாக்கியம் நமக்கும் வாய்க்கும் என்று இந்தப் பாடல் மூலம் சொல்கிறார் திருமூலர்.

    மரணத்தை வென்ற ரகசியம்!

    ஒருமுறை அந்த ஆனந்த தரிசனத்தைப் பெற்றவர், எப்போதும் அதை மறக்கமாட்டார். நடன தரிசனம் கண்டவர்கள், அதையே நினைத்து நினைத்து ஆனந்தப் பரவசத்தில் களித்திருப்பார்களாம்.

    புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறுமாப்போல்
    களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
    அளிக்கும் அருள்கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
    ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே
    – திருமந்திரம் 2778

    அதாவது, புளியங்காயைத் தின்றால் புளிக்கும். மறுமுறை அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சுவை மனதில் எழும். தானாகவே, வாயில் உமிழ் நீர் சுரக்கும். அதேபோல், நடராசப் பெருமானின் தாண்டவத்தைக் கண்டவருக்கு, அதை நினைக்கும்போ தெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பொங்கிப் பெருகுமாம். சரி, இதனால் என்ன பயன்?

    மரணத்தையே வெல்லலாம் என்கிறார் திருமூலர்.

    தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
    ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே – திருமந்திரம் 74

    ஆம்! திருமூலர் தனது 3000 வயது மர்மத்தை இங்கே விடுவிக்கிறார்!

    மறைப்பொருள் தத்துவம்

    யோக நிலைக்குச் சென்ற ஞானிகள் பேசமாட்டார்கள். ஞானம் என்பதை, ஒளவையார் கொன்றைவேந்தனில் ‘மோனம் என்பது ஞான வரம்பு’ என்று பாடியிருக்கிறார்.

    தான் பெருமுயற்சியால் பெற்ற ஞானத்தை மோனத்தால் மறைத்து, தனக்குள் வைத்துக்கொள்பவர் சுயநலவாதி. ஆனால் நமக்காகத் திருமூலர் தன் மோனத்தை கலைத்து, ஞானத்தை ‘திரு மந்திரத்தில்’ உபதேசித்த பொதுநலவாதி.

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
    வான் பற்றி நின்ற ‘மறைப்பொருள்’ சொல்லிடின்
    ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
    தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
    – திருமந்திரம் 85

     அணுவுக்கு அணுவாக நின்று ஆடும் நடராசரை மனதுக்குள் தியானித்து அருள் பெறுவோம்!

  • மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா!

    மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா!

     

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 94வது ஆராதனை பெருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மெய் மறந்து சாமி தரிசனம் செய்தனர்.

     

     

  • குழந்தை வரம் அருளும் குரு சித்தானந்த சுவாமி…..

    புதுச்சேரி சித்தர்கள் என்றதும் முதலில் நினைவிற்கு வருபவர் சித்தானந்த சுவாமிகள்தான். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில், கடலூர் அருகே உள்ள வண்டிப்பாளையம் என்ற ஊரில் அவதரித்த சித்தானந்த சுவாமிகள், சிறு வயதில் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரரை வழிபடத் தொடங்கினார்.

    பெரியநாயகி அம்மனுக்கு நாள்தோறும் பூக்கள் பறித்து மாலை சூட்டி, ஆலயத் திருப்பணிகளைச் செய்து வந்த போது ஒருநாள் கனமழை பெய்தது. இதன் காரணமாக பாடலீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிலும் பெரும் வெள்ளம்.  ஆலயத்திற்குச் செல்ல வழியறியாது அனைவரும் நின்றிருந்த நேரத்தில், அங்கு வந்த சிறுவன் சித்தானந்தன், சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் குதித்து, ஆலயத்தை நோக்கி நீந்திச் சென்று இறைவனுக்கு பூசை செய்து வழிபட்டான்.

    இயற்கையின் சலசலப்பைக் கண்டு அஞ்சாத சிறுவன் சித்தானந்தன், தெய்வ நாமத்தை உச்சரித்தபடியே இருந்தான். நள்ளிரவு கடந்து கொண்டிருந்த நேரத்தில் சிவபெருமான் மற்றும் பெரியநாயகியின் அருட்பார்வை சித்தானந்தன் மேல் படத் தொடங்கியது. சிறுவன் சித்தானந்தனுக்கு சிவபெருமான், பெரியநாயகி அம்மாள் காட்சி அளித்து, அருளாசி வழங்கி மறைந்தனர். அன்று முதல் சித்தானந்தன் சொன்ன வார்த்தைகள் உண்மையாகின. அவரைத் தரிசித்தவர்களின் பிரச்சனைகள் தீர்ந்தன.

    புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் குரு சித்தானந்த சுவாமிகள் அரூப நிலையில் அருள்பாலிக்கிறார். கருவடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் கோயில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நுழைந்தால் பிரகாரத்தில் மூலமுதற்கடவுளான விநாயகர் அருள்பாலிக்கிறார். சற்று திரும்பினால் குரு சித்தானந்த சுவாமிகளின் கருவறை ஒட்டி ஸ்ரீகுரு தட்சணாமூர்த்தி சன்னதி உள்ளது. குரு பார்வை கோடி நன்மை என்பதற்கேற்ப சுவாமியை தரிசிக்கும்போது நமது மனம் தெய்வீக அனுபவத்தை உணர்கிறது.  வலதுபுறத்தில் சித்தானந்த சுவாமிகளின் தியான திருமேனிக்கு மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இக்கோயிலின் சிறப்பு அம்சமாக கோயில் முழுவதும் வடிக்கப்பட்டுள்ள சித்தர்களின் சுதைவடிவம் அமைந்துள்ளது. இவர்களை தரிசித்து வெளியே வரும்போது வளாகத்தில் உள்ள அரசு, வேம்பு மரத்தின் அடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.  சித்தானந்த சுவாமிகளின் சன்னதி எதிரே நந்தி தேவர் உள்ளார். பிரதோஷ நாட்களில் நந்தி தேவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இக்கோயிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சிவராத்திரி விழாவும் பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. மேலும் சித்தானந்தசுவாமிகhளின் ஜீவன் முக்தி அடைந்த தினமான வைகாசி 15ம்தேதி குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

  • சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் – தன்வந்திரி

    – "மாரி மைந்தன்" சிவராமன்

     

    ஆயுள் வேதமே ஆயுர்வேதம்.

    ஆயுர்வேதம் 
    ஓர் 
    இயற்கை மருத்துவம்.

    சித்த மருத்துவம் 
    தமிழின் கொடை. அகத்தியர் பெருமானே ஆதார நாயகன்.

    அகத்தியரும் 
    தேரையரும் 
    யூகி முனிவரும்
    சித்த மருத்துவத்தை
    அதிகமாய் அருளினார்கள்.

    ஆயுர்வேதத்தின் பிதாமகன்
    தன்வந்திரி.

    அகத்தியர் 
    வடநாட்டவர். 
    தமிழ் கற்று சித்தமருத்துவம் அருளினார்.

    தன்வந்திரி 
    தமிழ் நாட்டவர். 
    வடமொழிப் புலமையில் வடநாட்டினரை
    விஞ்சியவர்.

    தமிழின் 
    சித்த வைத்தியத்தை வடமொழியில் வழங்கி 'தன்வந்திர்'
    என்ற 
    நிகண்டாக்கினார்.

    அந்நூலை 
    அருளியதாலேயே
    தன்வந்திரி 
    என்ற 
    காரணப் பெயரும் பெற்றார்.

    வாகட நூலில் வல்லவரான 
    தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம்.

    மகாவிஷ்ணுவின் 
    மறு அவதாரமே தன்வந்திரி என்பார் 
    சில ஆய்வர்.

    தன்வந்திரியின்
    பிறப்பு பற்றி 
    சில சுவையான குறிப்புகள் உண்டு.

    தேவர்களும் 
    அசுரர்களும் 
    பாற்கடலைக் கடைந்தபோது 
    அமுத கலசத்துடன் அவதரித்தார் 
    தன்வந்திரி 
    என்கிறார் 
    போகர் பெருமான்.

    தீர்த்ததமர் 
    என்பவரின் 
    மகனாய் பிறந்தவர். 

    காசிராஜன் 
    புதல்வராகத் தோன்றினார்.

    தீர்த்தப்பசு 
    என்பவரின் 
    திருமகனே 
    தன்வந்திரி. 
    அப்பிறப்பில் 
    அவர் பெயர் 
    சேதுமான்.

    சேதுமான் தான் சுச்சுருதருக்கு ஆயுர்வேதம் உபதேசித்தவர்.

    இவ்விதம் கூட பல 
    பிறப்புக் குறிப்புகள் உலவுகிறது..

    தன்வந்திரியின் 
    மகன் 
    சேதுமான் 
    என்று 
    அடித்துச் சொல்கிறது அபிதான சிந்தாமணி.

    அனு 
    என்ற அரசனின் வாரிசாகப் பிறந்து 
    பரத்பாசரிடம் 
    ஆயுர்வேதம் கற்று 
    அதை 
    எட்டு வகையாகப் பிரித்து உபதேசித்தார்
    என்றும் கூறுகிறார்கள்.

    இவ்விதம் 
    பலவித பிறப்பும் 
    பற்பல செய்திகளும்
    பரவிக் கிடக்கின்றன.

    அகத்தியர் பெருமான் 
    ஒருபடி மேலே போய் தன்வந்திரி
    விஷ்ணு பகவான் தான் எனச் சத்தியம் செய்கிறார்.

    முற்பிறப்பில் விஷ்ணுபிரானாக
    வலம் வந்ததால்…
    மனிதனாகப் பிறந்ததே ஆயுர்வேதத்தை அகிலத்திற்கு
    அளிக்கத் தானாம்.

    அவர் தந்தை 
    தம்புராவுடன் 
    பாடிச் சென்று 
    யாசகம் பெற்றே தன்வந்திரியை வளர்த்தார்.

    தந்தையே சகல சாஸ்திரங்களையும் கற்பித்தார்.

    18 சித்தர்களும் தன்வந்திரிக்கு உபதேசித்துள்ளார்கள்.

    மூன்று லட்சம்
    கிரந்தங்களையும் சித்தர்கள் 
    உபதேசித்தனர்.

    அதனால் 
    ஞானம் பெற்று ஞானியானார் 
    தன்வந்திரி.

    தன்வந்திரி 
    சூரியன் போல் பிரகாசித்தார் 
    என்கிறார் 
    அகத்தியர் பெருமான்.

    இது 
    சித்தரர்களுக்கான
    சித்த அடையாளம்.

    ஒரு கையில் 
    கமண்டலம்.
    மறு கையில் 
    கதை. 
    இதுவே 
    தன்வந்திரியின்
    தவக் கோலம்.

    விக்கிரமாதித்தன் சபையில் 
    'நவரத்தினம்'
    என்ற பட்டம் பெற்றவர்.
    பண்டிதர் குழுவில் பணியாற்றியதாகவும் 
    செய்தி உள்ளது.

    தன்வந்திரி 
    அருளிய நூல்கள் வைத்திய சிந்தாமணி வைத்திய காவியம் 
    நூறு கண்ட ஞாலம் 
    கலை ஞானம் 
    ஜெயம் தைலம் 
    சிமிட்டு ரத்தினச் சருக்கம் கருக்கிடை 
    நிகண்டு 
    வைத்தியம் 
    தண்டதம் 
    கருடாரூடம் 
    செயநீர் 
    மூப்பு சூத்திரம் 
    உள்ளிட்ட பல.

    ஐப்பசி மாதம் 
    புனர்பூசம் 
    4 ஆம் பாதத்தில் அவதரித்தவர் 
    தன்வந்திரி.

    அவர்
    800 வருடம்
    32 நாட்கள் 
    வாழ்வாங்கு வாழ்ந்தார்.

    தன்வந்திரி 
    பற்றிய 
    தகவல்கள் குறைவே.

    வைத்தீஸ்வரன் கோயிலில் 
    தன்வந்திரி 
    லயமானார் 
    என்கிறது ஓர் ஆய்வு.

    கோரக்கரின் குறிப்பு 
    தன்வந்திரிக்கு 
    60 மனைவிகள் 
    160 மக்கட் செல்வங்கள் என வியக்க வைக்கிறது.

    எண்ணற்ற 
    கோயில்களில் தன்வந்திரிக்கு 
    பிரதான இடமுண்டு.

    அவற்றில் 
    தீராத நோய் தீர்க்கும் தெய்வமாக 
    காட்சி அளிக்கிறார்
    தன்வந்திரி சித்தர்.

    எந்தவித நோயையும் தீர்க்கும் 
    சிறப்பு மருத்துவரே-
    ஸ்பெஷலிஸ்ட்டே
    தன்வந்திரி…
    என்று துதிக்கிறார்கள் 
    பாதிப்புகள் நீங்கி பயன்பெற்ற
    பக்தகோடிகள்.

    மரணமிலா பெருவாழ்வுக்கு
    வழிகாட்டும் 
    மகா சித்தர் 
    என்று தொழுகிறது
    ஆன்மீக உலகம்.
     

  • அகத்தியரின் மாணவர் கோரக்கர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கோரக்கர் சித்தர் திவ்ய சரித்திரம் (பாகம் -5)

    சதுரகிரி 

    எண்ணிலடங்கா சித்தர்களின் 
    வாசஸ்தலம்.

    கோரக்கரின் 
    தவக்குகை 
    சதுரகிரியின்
    ஆன்மீக அருமை
    சொல்லும்.

    சதுரகிரியில்
    ஏறக்குறைய 
    எல்லா சித்தர்களின் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர் கோரக்கர்.

    அந்த கதை சுவாரசியமானது.

     
    இணைபிரியாது 
    இருந்து தோழர்
    பிரம்ம முனியுடன் 
    யாகம் நடத்தி 
    இறை மூலிகைகளை உலகுக்கும் 
    சித்த மருத்துவத்திற்கும் உருவாக்கி வழங்கிய பின்னர் 
    ஒரு காலகட்டத்தில் இருவரும் 
    தனி வழி கண்டனர்.

    கோரக்கர் 
    சதுரகிரி வனத்தில் 
    வலம் வந்து கொண்டிருந்தார்.

    ஓரிடத்தில் 
    இடையன் ஒருவனைப்
     பாம்பு தீண்ட 
    அவன் மாண்டிருந்தான்.

    கொஞ்ச தூரத்தில் 
    அவன் 
    காதல் மனைவி
     உணவுடன் 
    அவனுக்காக 
    காத்து இருந்தாள்.

    இரண்டையும் கண்ட கோரக்கர் 
    பெண்ணிடம் 
    இரக்கம் கொண்டார்.

    ஏற்கனவே
     யாககுண்டத்தில் வந்த பெண்களைச் சபித்து 
    பாவம் செய்ததற்கு பரிகாரம் செய்ய 
    உறுதி பூண்டார்.

    மாண்டிருந்த 
    இடையனின் 
    உடலில் புகுந்தார்.

    மாண்ட 
    இடையன் மீண்டான். 

    அது முன்
    தன் உடலை 
    குகை ஒன்றில் 
    ஒளித்து வைத்தார்.

    வேட்டைக்கு வந்த
     மன்னன் ஒருவன்
     உடலைப் பார்த்து 
    அனாதைப் பிணம்
    என நினைத்து 
    எரித்துச் சென்றான்.

    இடைச்சியுடன்
    அவள் முதுமைக் 
    காலம் வரை 
    வாழ்ந்த கோரக்கர் 
    அவள் மரணமடைய 
    ஈமச் சடங்குகள்
     அனைத்தும் 
    செய்துவிட்டு 
    குகை திரும்பினார்.

    உடல் தேடினார். அகப்படவில்லை.

    அதன் கதைதான்
     அரசனால் 
    முடிக்கப்பட்டு பல்லாண்டுகள் ஆகியிருந்ததே !

    அதனால் 
    ஜீவித்திருக்கும் 
    இடையன் உடலையே 
    தன் ஆற்றலால் 
    கற்ப மூலிகைகள் 
    உண்டு
    கற்ப உடல் ஆக்கிக்கொண்டார்.

    அதற்காக 
    அவ்வுடலிலேயே 
    சதுரகிரி மலையில் நாகார்ச்சுனர் 
    சாணாக்கிய முனிவர் போன்றோரோடு
    ஆசிரம் ஆசிரமமாய் தங்கலானார்.

    இது 'கருவூரார் வாதகாவியத்தில்"
    இடம்பெற்றுள்ள 
    நிகழ்வு.

    பொருள் விளங்காத பாடல்களை 
    எளிமையாக 
    எழுதினார் கோரக்கர்.

    வழக்கம்போல் சித்தர்களிடையே கோபம்
     விளைந்தது.

    இடைக்காடர் 
    அகப்பையார்
    நந்திதேவர் 
    மச்சமுனி 
    சட்டநாதர் 
    பிரம்மமுனி 
    அழுகண்ணர் 
    ஆகிய ஏழு சித்தர்களும் எழுவர் அணியாக கோரக்கரைச் சூழ்ந்து ஆர்ப்பாட்டமே செய்தனர்.

    அவ்விதம் 
    எளிமையாக 
    கோரக்கர் எழுதிய 
    16 நூல்களையும் 
    தம்மிடம் ஒப்படைக்க வற்புறுத்தினர்.

    சரியென வாக்களித்த கோரக்கர் 
    அவர்களுக்கு 
    உணவு படைத்தார்.

    'அடை'
     அவர் தந்த
     உணவு.

     அந்த அடையில் அடைந்திருந்தது ரகசியமாய் 
    அவர் கண்டறிந்த 
    மூலிகை இலை.

    உண்டவர் 
    மயங்கினர்.

    அவர்கள் 
    எழுவதற்குள் 
    16 நூல்களின் சாரத்தை இருநூறு பாக்களில் அடைத்து 
    ஒரு தொகுப்பை உருவாக்கினார்.

    குகைகளில் வைத்து பாதுகாக்கப் போவதாக அவர்கள் 
    எடுத்துச் சென்று விட்டதால் 
    இன்று கோரக்கரின் நூல்கள் பல  கிடைக்கவில்லை.

    கோரக்கரின் 
    பிறப்பு குறித்து 
    குழப்பம் உண்டு.

    பிராமண குலத்தில் பிறந்து பின்னர்
    சீனராகி 
    இறுதியில் 
    கோனார் ஆனார்
     என்கிறார் கருவூரார்.

    வடக்கே இருந்து 
    வந்தவர் கோரக்கர். 
    இவரே கோரக்கநாத் என்கிறார்கள் சிலர்.

    வசிட்ட மகரிஷிக்கும் 
    ஒரு குறப்பெண்ணுக்கும் பிறந்தவர் கோரக்கர்
    என்பது 
    போகரின் கருத்து.

    கோரக்கரை 
    'அனுலோமன்'
    என்பார்கள்.

    உயர்குலத் தந்தைக்கும் தாழ்ந்த குலத்
    தாய்க்கும் பிறந்தவன் என்பது 
    அனுலோமனுக்கு அர்த்தம்.

    கோரக்கர் 
    மராட்டியர் என்றும் வீரசிவாஜி அவரை வணங்கிப் போற்றியவர் என்றும் செய்தி உண்டு.

    மிக கோரமான நோய்களைத் தீர்க்க மருத்துவம் கண்டதால் கோரக்கர் 
    என பெயர் வந்ததாக 
    ஒரு குறிப்பு உள்ளது.

    அகத்தியரின்
    18 மாணவர்களில் 
    ஒருவர் என்றும் 
    'எமநாட்டு சித்தர்'
    என்பவரிடம் 
    உபதேசம் பெற்றவர் என்றும் 
    'அகத்தியர் சௌமிய சாகரம்'கூறுகிறது.

    கார்த்திகை 
    ஆயில்யத்தில் 
    பிறந்த கோரக்கருக்கு மனைவியர் ஐவர்
    மக்கள் அறுபதின்மர் என்கிறது 
    'கோரக்கர் முத்தாரம்'

    கொல்லிமலையிலும் சதுரகிரிமலையிலும் 
    சீன தேசத்திலும் 
    பல ஆண்டுகள் 
    வாசம் செய்த 
    கோரக்கர் 
    தேச சஞ்சாரம் செய்த காலமும் 
    போகருடனும்
    பிரம்ம முனியுடனும்
    தோழமையுடன்
    சுற்றிய காலமும் 
    அதிகம்.

    மைசூர் 
    சாமுண்டி மலையில் வாழ்ந்ததாக 
    போகர் கூறுகிறார்.

    இமயமலையும் 
    பொதிகை மலையும் கோரக்கர் வாழ்வின் முக்கிய மலைகள் 

    கோரக்கர் அருளிய
     நூல்கள் மொத்தம்
     40 என்கிறது 
     ஒரு குறிப்பு.

    'சந்திரரேகை'
    கோரக்கர் 
    படைப்புகளில் சிறந்தது.
    200 பாடல்களும் 
    ஞான ரகசியங்களின் ஒட்டுமொத்த சாரம்.

    'நமனாசத் திறவுகோல்' என்ற 
    கோரக்கரின் நூல் பிற சித்தர் நூல்களின் மறைப்புகளைத் திறக்கவில்ல நூல்.

    மருத்துவம்
    ஜோதிடம்
    ஆழ்ந்து பேசும் 
    நூல்களையும் 
    கோரக்கர் 
    அருளியுள்ளார்.

    கோரக்கர் சித்தர் 
    சமாதி அடைந்த 
    தலங்கள்
     எண்ணிக்கை 
     மிக அதிகம்.

     12 இடங்களில் 
    அவை உள்ளன.

    பொதிய மலை 
    ஆனை மலை 
    கோரக்நாத்திடல் (பாண்டியநாடு)
    வடக்கு பொய்கைநல்லூர் பரூர்ப்பட்டி (தென்னார்க்காடு)

    சதுரகிரி
    பத்மாசுரன் மலை (கர்நாடகம்)
    கோரக்பூர்
    (வடநாடு) 

    பேரூர் 
    பட்டீஸ்வரர் கோயில் ஹரித்துவார் 
    கோரக்கர்மலை (பாகிஸ்தான்)
    கோர்க்காடு 
    (புதுச்சேரி).

    சித்தர்கள் 
    பல இடங்களில் 
    சித்தி அடைந்ததில் ஆச்சரியமில்லை.
     அவர்கள் 
    சித்த வல்லமை
    அப்படி.

    வடக்குப் பொய்கைநல்லூரில் ஐப்பசித் திங்கள் (பரணி) பௌர்ணமி நாளில் 
    சமாதி அடைந்ததாக குறிப்பு ஒன்று உள்ளது.

     

    கோரக்கர் வழிபாடு
     நேபாள நாட்டில் 
    பிரசித்தம்.
    காட்மண்டுவில் 
    கோரக்கர் ஆலயம்
     பிரசித்தி பெற்றது.

    கூர்காங் 
    இன மக்கள் கோரக்கர் 
     வழி வந்தவர் என பெருமிதம் கொள்கின்றனர்.

    நேபாளி
    பணத்தில்
    நாணயத்தில் 
    கோரக்கர் திருஉருவம் இடம்பெற்றுள்ளது.

    கோரக்கரை மானசீக குருவாக வழிபட்டவர் மராட்டிய சிவாஜி. கோரக்பூரில் 
    கோரக்நாத் மந்திர் 
     உள்ளது.
    இது 
    ஜீவ சமாதி கோயில்.

    கர்நாடக அருளாளர் கோராகும்பர் 
    கோரக்கரை வழிபட்டு உயர்ந்தவர்.

    இஸ்லாமிய மக்களின் இதயத்திலும் 
     இடம் பெற்றிருப்பவர்     
     கோரக்கர்.

    சித்தர்கள் போற்றிய 
     பெரும் சித்தர் கோரக்கர்.

    அவரைத் தொழுவது 
     சித்தர் உலகையே
     பூஜிப்பதற்குச் சமம்.

    (நிறைவு)

  • கோரக்கரும் போகரும்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கோரக்கர் சித்தர் திவ்விய சரித்திரம் 
    (பாகம் 4)

    கோரக்கர்
    வசிட்டர் 
    துர்வாசர் 
    காலாங்கிநாதர் இடைக்காடர் 
    தன்வந்திரி 
    கருவூரார் 
    கமலமுனி 
    சட்டைமுனி 
    பிரம்மமுனி 
    போன்ற 
    சித்தர் பெருமான்கள்
    பொதிகை மலையில் ஞானநெறியில் சிறந்திருந்த காலம்.

    இதே 
    காலகட்டத்தில் தான் இமயமலையும்
    சித்தர்கள் இருப்பால் சிறந்திருந்தது.

    அகத்தியர்
    திருமூலர் 
    விசுவாமித்திரர் 
    போகர் 
    புலிப்பாணி சித்தர் 
    குதம்பைச் சித்தர் 
    என்று 
    சித்தர் கூட்டம் இமயமலையைப் பெருமைப்படுத்திக் கொண்டிருந்தது.

    அது சமயம் அகத்தியருக்கு 
    ஓர் ஆசை.

    பொதிகை மலையில் இருந்த
    காலாங்கி நாதரைக் கொண்டு 
    வேள்வி ஒன்றைக்
    கங்கை நதிக்கரையில் சந்திர புஷ்கரணி 
    என்ற தீர்த்தக்கரையில் அன்னை 
    ராஜராஜேஸ்வரிக்கு நடத்த 
    விருப்பம் கொண்டார்.

    பொதிகைமலை வாழ் காலங்கிநாதரை 
    இமயமலை வாழ்
    அகத்தியர் பெருமான் அன்போடு அழைத்தார்.

    அகமகிழ்ந்த
    காலாங்கி நாதர் 
    அகம் நிறைந்த
    96 சீடர்களோடு 
    கங்கை கரைக்குப் பயணப்பட்டார்.

    போகும் முன் 
    பொதிகைமலையில் இருக்கப் போகும் 
    மற்ற
    சீடர்களை அழைத்து 
    45 நாட்களில் 
    திரும்பி வருவதாகவும் அதுவரை 
    தன் உடலைப்
    பாதுகாக்கச் சொல்லி ஆணையிட்டும் 
    உடலை உகுத்து 
    விட்டுப் புறப்பட்டார்.

    சீடர்கள் 
    மிகுந்த கவனத்துடன் குருநாதர் உடலைப் பாதுகாத்து வந்தனர்.

    ஆனால் 
    45 நாட்களில் 
    குருநாதர் 
    திரும்பவில்லை.

    கங்கைக்கு போனவர் அகத்தியர்
    போகர் முதலான சித்தர்ககளுடன் வேள்வியில் திளைத்திருந்தார்.

    பின் 
    அதே ஆனந்தத்தோடு அவர்களோடு இமயமலைக்குச்
    சென்று விட்டார்.

    காலம் நீடித்ததால் காலாங்கிநாதர் காலமாகிவிட்டார் என குருநாதர் உடலை 
    எரியூட்ட முயன்றனர் சீடர்கள்.

    கோரக்கர் 
    தடுத்துப் பார்த்தார். அவர்களோ 
    எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தனர்.

    'காலாங்கி நாதர் 
    காலம் கடந்தவர்.
    சாகாக் கலை 
    பயின்றவர்.
     இமயமலையில் 
    உயிரோடு இருக்கிறார்' 
    என கோரக்கர் 
    தன் தவ ஆற்றலால்
     அறிந்து கூறியும் 
    சீடர்கள் 
    எரியூட்டுவதிலேயே அக்கறை காட்டினர்.

    வந்ததே கோபம் கோரக்கருக்கு !

    அத்தனை சீடர்களையும் அடிக்கத் தொடங்கினார். நையப் புடைத்தார்.

    'காலாங்கி நாதரை கையோடு அழைத்து வருவேன்'
    எனச் சொல்லி 
    விண்ணில் பறந்தார் 
    'ராஜாளி' பறவையாக.

    இமயமலை.

    அங்கே 
    அகத்தியர் 
    காலாங்கி நாதர்
    போகர் 
    சகிதம் 
    சித்த சத்சங்கம்.

    கோரக்கர் 
    பொதிகையில் நடந்த அமளியைச் சொன்னார்.

    "யார் இவர்…?"
    என்ற கேள்வி 
    எழுந்தது.

    'கோரக்கர்'
    என்று
    காலாங்கி நாதர் 
    கோரக்கர் பற்றி 
    பெருங் குறிப்பு 
    தந்தார்.

    காலாங்கியின் 
    அத்யந்த சீடரான 
    போகர்
    உடனே 
    கோரக்கரின் கைப்பிடித்தார்.

    "என் குருநாதரின் உயிர்காத்த நீவீர் 
    இனி என் 
    உயிர் நண்பர்"
    கை குலுக்களில் 
    உறுதி இருந்தது. 
    இறுக்கம் இருந்தது.

    கோரக்கருக்கு 
    அது ஒரு ராசி.

    குரு மச்சேந்திரர் 
    ஆகட்டும் 
    தோழரான
     பிரம்மமுனி ஆகட்டும் 
    இப்போது போகர்
    ஆகட்டும் 
    கோரக்கரின்
     நெருக்கத்தில்
    வந்தனர்.
    அன்பு உருக்கத்தில் திளைத்தனர்.

    உயிர் நண்பர்கள்
    சூழ இருப்பது 
    ஒரு கொடுப்பினை!

    இமய மலையை 
    விட்டு 
    காலாங்கி நாதர் கிளம்பினார்.

    புது நண்பர்கள்
     கோரக்கரும் போகரும் புதிய பயணத் திட்டம்
     ஒன்று போட்டனர்.

    காலாங்கிநாதரிடம் போகரும் 
    மச்சேந்திரரிடம்
     கோரக்கரும் 
    ஆசிபெற்று விடைபெற்றனர்.

    அது 
    விண்வெளிப் பயணம். வான்வழிப் பயணம்.

    கோரக்கரும் 
    போகரும் 
    வானில்
    பேசிப்பேசி 
    மகிழ்ந்தனர்.

    மண்ணுலகம் திரும்பும்போது 
    போகர் வசமிருந்த
     குளிகை தவறி 
    பூமியில் விழுந்தது.

    விண்ணில் 
    பறக்க உதவும் 
    குளிகை அது.

    போகர் 
    இறைவி 
    ராஜ ராஜேஸ்வரியைத் தியானித்தார்.

    திருநாகைக் காரோணம்
    அருகே 
    கடம்பர் வனத்தில் 
    அம்மன் சன்னதியில் குளிகை கிடப்பதாக 
    காட்சி தெரிந்தது.

    கோரக்கரும் 
    போகரும் 
    அங்கே போனார்கள்.

    குளிகை இருந்தது. எடுக்கத்தான் முடியவில்லை.

    அன்னையின் குரல் அசரீரியாக ஒலித்தது.

    "மகா சித்தர்களே…!
     அருகே 
    தென்காரோணம் 
    என்ற ஊர் உள்ளது.

    அங்கே 
    பால்மொழி அம்மை கோயில் உள்ளது. அவளோடு உறைந்திருக்கும் 
    நல்லூர் நாதர் அற்புதமானவர்.

    அவரை வேண்டின்
     குளிகை எடுத்துச் செல்லும் 
    வரம் கிடைக்கும்".

    அசரீரி கேட்டு
     மெய்சிலிர்த்த 
    சித்தர்கள் இருவரும் 
    கோயிலுக்குச் 
    சென்று வழிபட்டனர்.

    இறைவன் 
    இசைவு தர 
    குளிகையை எடுத்துக்கொண்டு
     பயணம் தொடர்ந்தனர். பொதிகைமலை அடைந்தனர்.

    இரு சித்தர்களையும் அழைத்து 
    அருள்பாலித்த 
    நல்லூர் நாதர் திருத்தலமே 
    வடக்கு பொய்கைநல்லூர்.

    பொதிகை மலையில் போகர் 
    கோரக்கருடன் 
    இருந்த காலம் 
     பொற்காலம்.

    ஒரு நாள் 
    போகர் 
    கோரக்கரிடம் விடைபெற்றார்.

    சீன தேசம் சென்றார்.

    அங்கு 
    600 ஆண்டுகள் 
    போகர் இருந்தார்.

    நீண்ட காலம்
    நண்பரைக் காணாத  
    நட்பின் ஏக்கத்தால் போகரைக் காண கோரக்கர் 
    சீனா பயணமானார்.

    வழித் துணைக்கு புலிப்பாணி சித்தரை
    அழைத்துக் கொண்டார்.

    கோரக்கர் 
    சீன தேசத்தில் 
    சித்துகள் பல புரிந்தார். போகரைக்
    கண்டு மகிழ்ந்தார்.

    இப்படிப் போயின பல்லாண்டுகள்.

    ஒரு நல்ல நாளில் 
    மூவரும் திரும்பினர் தாய்நாட்டிற்கு.

    இமயமலையில் புலிப்பாணியை
    இருக்கச் சொல்லி விட்டு மீண்டும் 
    ஒரு சித்தர் பயணத்திற்கு ஆயத்தமாயினர்
     நண்பர்கள் இருவரும்.

    காசி 
    காஞ்சிபுரம்
    சிதம்பரம் திருவாவினன்குடி 
    என இருந்தது 
    அவர்கள் சுற்றுலா.

    அப்பயணத்தின் போதுதான் 
    சிதம்பரத்தில் 
    43 கோணத்தில் 
    51 எழுத்துக்களைக் 
    இட்டு நிரப்பி 
    ஒரு யந்திரத்தை
     உருவாக்கி 
    அதைத்
    தில்லைப் பெருமான் இடப்பாகம் ஆக்கினர் வல்லப சித்தர்கள் இருவரும்.

    அதுவே இன்றைய
     சிதம்பர ரகசியம்.

    திருவாவினன்குடி பயணத்தின்போது
    இரு சித்தர்களும் உருவாக்கித் தந்ததே 
    பழனி தண்டாயுதபாணி நவபாஷாணத் திருமேனி.

    போகர்
    பழனியில் 
    தங்க விரும்பவே
     கோரக்கர் 
    விடைபெற்றார்.

    கோரக்கரின் 
    மனதில் 
    இருவரும் சென்று வந்த வடக்கு பொய்கைநல்லூர் நிறைந்து இருந்தது.

    அங்கு மூன்று 
    பவுர்ணமி காலம் 
    பெரும் வேள்வி நிகழ்த்த சித்தம் கொண்டார்.

    வழியில் திருவாரூர்.

    திருவாரூர் 
    தியாகராஜப் பெருமானைத் 
    தரிசிக்கப் போனார். தரிசித்தார்.

    அங்கே முசுகுந்த சக்கரவர்த்தி காத்திருந்தார்.

    பொய்கைநல்லூர் 
    வேள்வி பற்றிச் சொல்லி சக்கரவர்த்தியை உடனிருந்து 
    உதவச் சொன்னார்.

    'உத்தரவு'
    என்ற வார்த்தை 
    முசுகுந்த சக்கரவர்த்தியிடமிருந்து பணிவுடன் வந்தது.

    நந்தி நல்லூரில் 
    வேள்வி தொடங்கியது.

    நந்தி நல்லூர்….? 
    அதுவும் 
    வடக்கு பொய்கைநல்லூரின் இன்னொரு பெயரே.

    வேள்வி சிறக்க இறைவனை 
    வேண்டி நின்றபோது புஜண்டரைத் தரிசித்து 
     ஆசி பெற ஆணையிட்டது 
     ஓர் அசரீரி.

    கோரக்கர் 
    தவத்தில் அமர்ந்தார்.

    கண் விழித்தபோது
    எதிரே காகபுஜண்டர்.

    அவரது 
    ஆசி உடனே 
    கிடைத்தது.

    கோயில் இருக்கும் ஆசிரமத்தின் 
    அதிபதி புஜண்டர்.

    அசரீரியின் அர்த்தம் கோரக்கருக்குப் புரிந்தது.

    காலம் கடந்த 
    மூத்த சித்தர் காகபுஜண்டரின் 
    அருளாசி 
    கோரக்கருக்கு கிடைத்ததால் 
    வேள்வி வெற்றிகண்டது.

    பொதிகைமலைக்குப் புறப்பட்டார் கோரக்கர்.

    அப்போது 
    அவர் மனதிற்குள் 
    ஓர் அசரீரி 
    மானசீகமாய் ஒலித்தது.

    'இந்த இடத்திற்கு 
    மீண்டும் வருவாய். இங்கேயே 
    நிரந்தரமாக 
    தங்கி விடுவாய் !'

    அப்படித்தான்…
    வடக்கு 
    பொய்கைநல்லூரில்
    இன்றும்
    கோரக்கர் பிரான்
    நிரந்தரமாய் தங்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    (தொடரும்)
     

  • சித்த மூலிகைகள்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கோரக்கர் சித்தர் திவ்விய சரித்திரம்

    ( பாகம் 3)

    *பிரம்மமுனி*

    பிரம்மமுனி 
    கோரக்கரின் 
    இதய நண்பர்.

    இருவருக்கும் இருந்த 
    கருத்தொற்றுமை 
    சித்தர் உலகம் 
    சந்தித்திராதது.

    'வரதமேடு'
    என்ற 
    காட்டுப்பகுதியே
    அப்போதைய 
    வாசஸ்தலம்
    இரண்டு 
    நண்பர்களுக்கும்.

    ஒருநாள் 
    இருவரும் 
    ஆன்மீகத்தின் 
    உச்சத்தில் 
    உரையாடிக் கொண்டிருந்தனர்.

    'சித்திகள் யாவும் ஒன்றன்பின் 
    ஒன்றாய் கூடி 
    வருகிறது.

    அடுத்து 
    பாக்கியிருப்பது தெய்வநிலை ஒன்றே.

    படைத்தல் 
    காத்தல் 
    மறைத்தல் 
    ஒடுக்கல்
    அருளல் என்னும்
    ஐந்தொழிலே 
    இனி 
    சித்தியாக வேண்டும்.

    அதற்கு 
    ஒரே வழி 
    யாகம்.

    யாகம் செய்வோம்'

    இதுவே அவர்கள் சத்விசாரத்தின் சாரம்.

    தெய்வம் ஆதல் 
    என்பது 
    எளிய விஷயமா
    என்ன !

    குறைகள் 
    எதுவுமின்றி 
    முறைப்படி 
    யாகம் நடந்தது.

    யாக குண்டத்தில் 
    எழுந்த புகை 
    யோகம் தர 
    யத்தனித்தது.

    அதற்கு 
    இறைவனின் கருணை அவசியம் அன்றோ ?

    கோரக்கர் 
    பிரம்ம முனியின் 
    யாகக் கூட்டணியில் மனத்தூய்மை இருந்தது.

    யாகப் பொருட்களில் கூட தூய்மை இருந்தது.

    ஆனால் 
    யாகத்தின் நோக்கத்தில் தூய்மை இல்லை.

    இறைவன் போல ஆகவேண்டும் என்பது இறுதி நிலை.

    பேராசைப் பெருநிலை.

    அதற்கு 
    இவை போதாது.

    இறைவனே விரும்பமாட்டார்.

    பொதுவாக 
    யாகம் தடைபட 
    தடைகள் பல தேடிவரும்.

    வந்தது.

    யாகத் தீயிலிருந்து 
    இரண்டு பெண்கள் 
    வெளி வந்தனர்.

    ரம்பையும்
    ஊர்வசியும் பொறாமைப்படும் 
    பேரழகுப் பெட்டகங்கள்.

    யாகத்தில்
    குறியாயிருந்த கோரக்கரும் 
    பிரம்ம முனியும்
    "யார் நீ…."
    என கோபம் காட்டினர்.

    கோபக்கனல் 
    யாகத்தீயை விட 
    தெறித்து விழுந்து எரிந்தது…

    அப்பெண்கள் அசரவில்லை.

    "நாங்கள் இருவரும் தேவலோகப் பெண்கள்.

    உங்கள் 
    யாக சக்தியால்
    மதிமயங்கி 
    வந்துள்ளோம்."

    இரு முனிவரும் 
    பதில் சொல்லத்
    திணறும் தருணத்தில் அக்னியும் வருணனும் 
    அங்கு வந்தார்கள்.

    கண்ணால் பேசும் 
    இரு கந்தர்வ கன்னிகளையும் பார்த்த மாத்திரத்தில்
      கிறங்கிப் போனார்கள்.

    'தேவலோகத்தில் கூட இப்படி அழகு இல்லை. 
    அழகியர் இல்லை..'

    காமத்தீ பற்றி
    அவர்கள் மனது கூச்சலிட்டது.

    வந்த வனிதைகள்
    யாகம் செய்யும் முனிவர்களை 
    விரும்புவது அறிந்து
    அந்த யோகம் 
    தங்களுக்கு கிடைக்காதா 
    என 
    தேவமார்கள்
     இருவரும் பொறாமை பொங்க ஏங்கினர்.

    'மானிடர்…தேவர் 
    எவரது சித்தமும் 
    கலங்க வைப்பவர் 
    அழகுப் பதுமைகள்

    பெண்களைத் 
    தேடுவதில் நாடுவதில் உயர்ந்தோரும் 
    உளுத்தவர் தாம் போலிருக்கிறது'

    இப்படி 
    ஒரு சிந்தனை 
    கோரக்கர் மனதில்
    தாண்டவமாடிய 
    அதே கணத்தில் பிரம்மமுனியின் சிந்தனையில் கோரத்தாண்டவமே 
    ஆடி ஓய்ந்தது.

    ஆடிய தாண்டவம்
     சில கணம்
    கனத்த அமைதியைத்
    தோற்றுத்தது.

    அந்த அமைதியான நொடிகளில் 
    யாக மந்திரங்கள்
    இரு முனிகளிடமும்
    எழவில்லை.

    மந்திரங்கள் நிற்கவே 
     யாகம் தடைபட்டது.

    கோரக்கருக்கும் 
    பிரம்மமுனிக்கும் 
    யாகம் தடைபட்டது எல்லையில்லா
      கோபத்தை மூட்டியது.
     சாபமாய் 
    வார்த்தைகள் 
    சிதறி விழுந்தன.

    சட்டென 
    கமண்டலத்தை எடுத்தவர்கள் 
    யாகத்
    தீயிலிருந்து வெளிவந்து
    காமத்தீ மூட்டிய
     கன்னியர் மீது கமண்டல நீரைக்
    கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கடுஞ் சொற்களோடு
    தெளித்தனர்.

    வந்தவர்களுக்கு என்ன..?
    யாகம் தடைபட 
    திட்டமிட்டு 
    வந்தவர்கள் தானே..அவர்கள்.?

    சாபம் பட்ட
    நீர் பட்டதும் 
    அவர்கள் செடிகளாகச் செழித்தனர்.

    விரக தாப
    ஏக்கமுடன் நின்றிருந்த அக்னியும் வருணனும் துக்கமுடன் திரும்பிச் செல்ல மனமில்லாது காமத்துடன்
    செடிகளோடு கலந்தனர்…
    தீயாக……!
    நீராக…….!!

    பிரம்ம முனிவரது சாபத்தால் உண்டான செடியே 
    'பிரம்ம பத்திரம்'
    என்னும் ' 
    சித்த மூலிகை.

    கோரக்கரின் 
    கோபத்தால் 
    உருவிழந்து 
    செடியானதே 
    கோரக்கர் மூலிகை 
    எனும் 
    சித்தம் மயக்கும் மூலிகை.

    இம் மூலிகைகள் இரண்டுக்கும் 
    நீரும் நெருப்பும்
     அடிப்படைத் தேவை. 
    அவையே 
    அக்னியும் வருணனும்.

    இவையாவும் சில நொடிகளில் 
    படபடவென 
    நிறைவேறி நின்றன.

    யதார்த்த நிலை
     வந்தபோது 
    கோரக்கரும் 
    பிரம்ம முனியும் 
    தன்நிலை அறிந்து
      துடித்துப் போயினர்.

    பெண்களுக்குச்
    சாபம் இட்டது பாவம் 
    என சஞ்சலப் பட்டார்கள்.

    பெண்களுக்குச் 
    சாபம் தந்ததால்
    இருந்த சித்திகளும்
      விட்டுப் போயிருக்க 
     'உள்ளதும் போச்சே'
    என உருகிப் புலம்பினர்.

    சர்வேஸ்வரன் 
    அது போது 
    சக்தி தேவியுடன் 
    ரிஷப வாகனத்தில் தோன்றினார்.

    "பதவி 
    ஆசை வேண்டாம் சித்தர்களே…..!
    அதுவும் 
    ஆண்டவன் பதவி…..!?

    அது அதீத ஆசை.

    உங்கள் தவத்திற்கு
     எப்போதும் 
     பலன் இருக்கும்.
     கவலை வேண்டாம்.

    நீங்கள் உருவாக்கிய மூலிகைகள் சித்த மருத்துவத்திற்கு
    உதவும் மூலிகைகளாக அமையும்."

    இறைவன் இவ்விதம் அருளி விட்டு 
    மறைந்து போனார்.

    இன்றும் 
    சித்த மருத்துவத்திற்கு
    இம் மூலிகைகள்
    பின்னணியில் இருக்கும் ரகசியம் இதுவே.

    கோரக்கரோடும் பிரம்மமுனியோடும் 
    வசிட்டர் 
    துர்வாசர் 
    காலாங்கி நாதர் இடைக்காடர் 
    தன்வந்திரி 
    கருவூரார் 
    கமலமுனி 
    சட்டைமுனி 
    போன்றோரும் 
    பொதிகை மலையில் ஞானநெறியில் சிறந்து வலம் வந்த 
    காலகட்டம் இதுவே.

    (தொடரும்)

  • மச்சேந்திர நாதர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கோரக்கர் சித்தர் திவ்விய சரித்திரம் 
    (பாகம் 2)

     

    கோரக்கர் சரித்திரம்
    ஒரு பெரிய சமுத்திரம்.

    அதில் மூழ்கினால் மச்சேந்திர முனிவரின் சரித்திரம் எடுக்கலாம். 
    பிரம்ம முனியின் திறனையும் உணரலாம். 

    மச்சேந்திரர் 
    கோரக்கரின் குருநாதர்.
    பிரம்மமுனி 
    கோரக்கரின் 
    ஆத்ம நண்பர்.

    முதலில் 
    மச்சேந்திர முனிவரைத் தரிசிக்கலாம்.

    கோரக்கருக்கு 
    உயிர் கொடுத்து 
    அருள் தந்து ஆட்கொண்ட 
    மச்சேந்திர நாதர் 
    ஒரு நாள் 
    கோரக்கரை அழைத்தார்.

    "கோரக்கா…
    நாளுக்கு நாள் 
    நீ உயர்ந்து வருகிறாய்.
    என்னையும் விஞ்சிய சித்தராய் ஒளிர்வாய் …"

    ஆசி தந்தார்.

    "கொஞ்ச நாள் 
    மலையாள தேசம் செல்கிறேன்.

    நீ தான் 
    அங்கு வந்து 
    என்னை
    அழைத்து வர வேண்டியிருக்கும்.

    செல்லட்டுமா…? சந்திப்போம்…" விடைபெற்றார். 

    குரு மச்சேந்திர முனிவரின்
    கோரிக்கை போலிருந்த உத்தரவை 
    "அப்படியே ஆகட்டும் குருநாதா…"
    என பணிவோடு சொல்லி குருவை அனுப்பி வைத்தார் 
    சீடர் கோரக்கர்.

    மச்சேந்திர முனிவர் மதிமயக்கம் தரும்
    இயற்கை பேரருள் மிக்க
    இறைவனின் தேசமான 
    மலையாள நாட்டிற்குச் சென்றார். 

    மலையாள தேசத்தில் அரசகுலப் பெண்ணான பிரேமலதாவை 
    மச்சேந்திர முனிவர்
    விதிப் பயனால்
    மணக்க நேர்ந்தது.

    அடுத்து 
    ஓர் ஆண்மகவு 
    பிறந்தது.

    மீனநாதன் 
    குழந்தையின்
    பெயர்.

    ஒருநாள் 
    மச்சேந்திரர் 
    அடுத்து 
    நடக்கவிருப்பதை மனைவியிடம் 
    சொன்னார்.

    "என் சீடன் 
    கோரக்கன் 
    என்னை 
    அழைத்துப்போக வருவான்.

    நாம் பிரிவோம்.
    நாம்
    இணைந்ததும் 
    பிரிவதும் 
    இறைவன் சித்தம்"

    உண்மை கசந்தது.

    இளவரசி அல்லவா….!
    மச்சேந்திரர் 
    கூற்றைச் 
    சுக்குநூறாக்க 
    ரகசியமாய் 
    உத்தரவே போட்டாள்.

    "நாட்டுக்குள் 
    துறவி என்று 
    யார் வந்தாலும் கொன்றுவிடுங்கள்….!"

    இதுசமயம் 
    குருவைத் தேடி 
    கோரக்கர் புகுந்தார் 
    குருவாழும் தேசத்திற்குள்.

    காட்டில்
    பிச்சை கேட்க 
    ஒரு குடிசை முன்
    நின்றார்.

    பழைய அழுது தந்த வீட்டுப் பெண்மணி
    அரசு உத்தரவை எச்சரிக்கையாய் 
    சொல்லி 
    "ஜாக்கிரதை சுவாமி"
    என்றாள் பயந்தபடி.

    குருநாதர் 
    மச்சேந்திரரைச்
    சந்திக்க 
    நாள் பார்த்துக் காத்திருந்தார் 
    கோரக்கர்.

    அதுவரை 
    காடுகளில் 
    ஒளிந்து திரிந்தார்.

    ஒரு நாள் 
    ஒரு கூத்தாடிக் கூட்டம் அவரிருந்த 
    காட்டில் தங்கியது. 

    கூத்துக் குழுவின் தலைவன் மட்டும் சோகமாய் இருந்தான்.

    கோரக்கர் 
    விசாரித்தார்.

    "அரண்மனையில் 
    அரசன் முன் 
    கூத்து நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

    என் கெட்ட நேரம்.
    மத்தளம் வாசிப்பவன் நோயில் 
    சாய்ந்து உள்ளான்.

    அரசி கோபக்காரி.
    என்ன நடக்குமோ…!"

    அவன் பேச்சில்
    உயிர் பயம் 
    ஊசலாடியது.

    "கவலைப்படாதே…
    எனக்கு மத்தளம் 
    வாசிக்கத் தெரியும்…
    நான் வருகிறேன்… 
    நல்லபடியாய் தூங்கு… நாளை பார்க்கலாம்."
    குதூகலத்துடன் சொன்னார் 
    கோரக்கர் பெருமான்.

    குருநாதரை 
    ஒரு முறை 
    பார்த்தால் போதும் 
    அரசு துறந்து 
    குடும்பம் விடுத்து தன்னோடு 
    திரும்பி விடுவார் 
    என உறுதியாய் 
    நம்பினார் கோரக்கர்.

    மறுநாள்…
    அரண்மனையில் 
    ஆரவாரக் கூத்து.

    மத்தள வாசிப்பில் வல்லவரான கோரக்கர் அடித்த அடி 
    புதிய ஒலியைப்
    பரப்பிய போது மச்சேந்திரருக்கு கோரக்கரின் 
    வருகை புரிந்தது.

    அது அவருக்கு 
    இசைவாய் இருந்தது.

    "அதோ….
    அவன் தான் 
    என் சீடன்….."
    மகிழ்ச்சியில் 
    துள்ளிக் குதித்தார் மச்சேந்திரர்.

    அரசி அதிர்ந்தாள்.

    அதற்கும்
    அவளிடம் 
    ஓர் அற்புதத் திட்டம் இருந்தது.

    "அவரை அரண்மனையிலேயே தங்க வைப்போம்"
    பிரியம் காட்டினாள்
    மச்சேந்திரரை 
    பிரிய விரும்பா பிரேமலதா.

    'அரண்மனைச்
    சுகமும் சூழலும் 
    கோரக்கரையே மாற்றிவிடும்.
    இச்சுகம் போதுமென இங்கேயே அவரும்
    தங்கி விடுவார்.'

    மனக்கோட்டை 
    கட்டினாள்
    கோட்டை வாழ் அரசி.

    'மச்சேந்திரர் அழைத்தாலும் 
    மறுக்கும் வகையில் கோரக்கரை 
    அசத்தி விடலாம். மடக்கிவிடலாம்'

    என 
    அரசு சுகத்தின் 
    அம்சம் அறிந்த 
    அரசி திட்டம் தீட்டினாள்.

    கோரக்கர் 
    அரசு விருந்தினராய் அரண்மனையில் தங்கினார்.

    அதுவரை 
    கண்டிராத கேட்டிராத 
    ராஜ உபசாரம்.

    அதில் பரவசம் இருந்தும் 
    ஊர் திரும்ப காத்திருந்தார். 
    குருநாதரின் கண்ணசைவுக்கு காத்திருந்தார் 
    கோரக்கர்.

    மச்சேந்திரர் நிலைதான் 
    மர்மமாக இருந்தது. 
    ஒருபுறம் மனைவி மகனைப் பிரிய மனமில்லை. 

    இன்னொரு புறம் 
    துறவு வாழ்க்கையும் சித்தர் நிலையும் 
    ஓயாது அழைத்தன.
    மனதும் ஏங்கியது.

    அரசியின்  
    மனக்கணக்கும் மச்சேந்திரரின் 
    பாசக் கணக்கும் 
    இவ்வாறு இருக்க 
    இறை கணக்கு 
    வேறாய் இருந்தது.

    ஒரு நாள் 
    படுக்கையில் 
    மலம் கழித்துவிட்டான் குழந்தை மீனநாதன்.

    மச்சேந்திரர் 
    கோரக்கரை அழைத்து மகனைக் கொடுத்து தூய்மைப் படுத்தச் சொன்னார்.

    கோரக்கர் 
    வினயமாய் 
    இரு கால் 
    விரித்துப் பிடித்து 
    துணி துவைக்கும் 
    கல்லில் 
    அடித்துப் பிழிந்து 
    உலர்த்திப் போட்டார் அக்குழந்தையை.

    "மீனநாதன் எங்கே..?" அரசி கத்தினாள்.

    கோரக்கர் 
    அமைதியாய் இருந்தார்.
    மச்சேந்திரர் துடிக்கவே மீனநாதனிருக்கும்
    திசையைக் காட்டினார்.

    நடந்ததை அறிந்து நடுங்கிப் போயினர் 
    அரசி பிரேமலதாவும் அப்பா மச்சேந்திரரும்.

    "அடப்பாவி….
     நீ என் சீடனா….!"
     குரு கொந்தளித்தார்.

    அருகில் சென்று பார்க்கையில் 
    சின்னஞ்சிறு
    துகள்களாய்
    சுக்கு நூறாய்
    பாலகனின் உடல்
    சிதறிக் கிடந்தது.

    அரசி 
    கோரக்கரின் 
    கோபம் புரிந்தாள். மச்சேந்திரர் 
    சீடரின் 
    எச்சரிக்கையை உணர்ந்தார்.

    அரசி 
    மண்டியிட்டு வேண்டிய 
    அடுத்த நொடிகளில்
    துகள்களை இணைத்து அழகிய மீனநாதனை
    மீட்டெடுத்து 
    வழங்கினார்.

    அரசிக்குப் பயம். மச்சேந்திரருக்கு 
    அவளைவிட பயம்.

    "சொன்னபடி கேட்காவிட்டால் 
    இன்னும் என்ன செய்வானோ…?!"

    "போகலாமா…?"
    எதுவுமே 
    நடக்காதது போல்
    குருவிடம் 
    பணிந்து கேட்டார்.

    மறுப்பேதும் 
    சொல்லாமல் 
    மச்சேந்திரர் 
    புறப்பட்டார்.

    தடுப்பேதும் 
    கூறாமல்
    அரசி
    அனுப்பி வைத்தாள்.

    புறப்படும் போது 
    கணவர் 
    மச்சேந்திரரிடம் 
    கைப்பை 
    ஒன்று தந்தாள்.

    அதில் பொற்பாளம். 
    தங்கத் தாம்பாளம்.
    வழிச் செலவுக்கு.

    'அரசனாய் வாழ்ந்தவன் ஆண்டியாய் போகிறானே' என்ற ஆதங்கத்தில்
    தங்கம் கொடுத்து அனுப்பினாள் கண்ணீருடன்… 
    கோரக்கருக்குத் தெரியாமல்.

    வழியில் தென்பட்ட 
    வழிப்போக்கர்களிடம் மச்சேந்திரர் கேட்டார் 
    கைப்பையை இறுக்கிப் பிடித்தபடி, 
    "இங்கு திருடர் பயம் உண்டா ….?"

    கோரக்கருக்கு 
    கோபமே வந்தது.

    'ஏனிப்படி 
    பயப்படுகிறார்…?'

    ஓரிடத்தில் 
    குளம் ஒன்றில் குளிக்கும்போது கைப்பையைக்
    கரையில் வைத்துவிட்டு திரும்பத் திரும்ப பார்த்தபடி போனார் குருநாதர்.

    சந்தேகத்தில் 
    பையைத் திறந்து பார்த்தார் கோரக்கர்.

    உள்ளே 
    தங்கத் தாம்பாளம்.

    விட்டெறிந்தார் 
    தங்கத்தை 
    திசையேதும் பார்க்காமல்.

    அதன் எடைக்கு 
    ஈடாக 
    கல் ஒன்றை வைத்துவிட்டார்.

    பயணம் 
    தொடர்ந்தபோது மச்சேந்திரர் கேட்டார்
    "இந்த பகுதியில் திருடர்கள் இருப்பார்களா?"

    "ஏன் இப்படி
    பயப்படுகிறீர்கள்.? 
    மடியில் கனம் 
    இருந்தால் தானே 
    வழியில் பயம் வரும் ?
    பயப்படாதீர்கள்…."

    குருவுக்கே
    உபதேசித்தார்
    சீடர் கோரக்கர்.

    கைப்பையை 
    நெஞ்சணைத்தார் மச்சேந்திரர்.

    உள்ளே இருப்பது 
    வேறு மாதிரி உறுத்தியது.

    கைவிட்டு 
    எடுத்துப் பார்த்தார்.

    கல்.
    வெறும் கல்.
    பயனற்ற கல்.

    "கோரக்கா…."
    காடு அதிரக் 
    கத்தினார் குருநாதர்.

    "உன்னை 
    நல்லவன் என நினைத்தேன்…
    என் மகனைக் 
    கொல்லப் பார்த்தாய்… இப்போது 
    தங்கத்தைத் 
    திருடி உள்ளாய்….

    கெட்ட சீடன் நீ….!
    என் அருகில் நிற்காதே…! 
    சினந்து சீறினார்.

    பதிலேதும் பகராத கோரக்கர் 
    குருநாதரை இழுத்துக் கொண்டு ஆங்கிருந்த 
    குன்று அருகே சென்றார்.
    சிறுநீர் பெய்தார்.
    குன்றே தங்கமாகி கண்களைப் பறித்தது.

    பிரமித்த குருநாதர்
    சீடரைக் கனிவோடு பார்த்துப் பரவசப்பட்டு..

    "எதையும் சமாளிக்கும் ஆற்றல் 
    பெற்று விட்டாய். 
    உயரிய ரசவாத
    வல்லமை வந்துவிட்டது. கோபப்படாத 
    உனது குணமே 
    ரசவாத சித்திக்கு வித்திட்டிருக்கிறது…

    நீ வாழ்க…!
    நீ குருவை 
    விஞ்சிய சீடன்.

    அது குருவான 
    எனக்குப் பெருமையே…!

    இனி தனித்தியங்கு…! தயவு காட்டி 
    மக்களை மேம்படுத்து..!

    மச்சேந்திரர் 
    மகிழ்வோடு வாழ்த்த தாழ்வோடு பணிந்த 
    சீடர் கோரக்கர் 
    மகிழ்வோடு பயணம் தொடர்ந்தார் குருவோடு.

    (கோரக்கர் சித்தர் 
    திவ்விய சரித்திரம் தொடரும்)

  • கலியுகம் பற்றி காகபுஜண்டர் கணிப்பு

    – "மாரி மைந்தன்" சிவராமன்

     

    காகபுஜண்டரின் திவ்விய சரித்திரம்

    சிவபெருமானின் 
    சாபமும் 
    இராமபிரானின்
    அருளும் 
    ஒருங்கே பெற்றவர் காகபுஜண்டர்.

    அதனாலேயே 
    பல யுகங்கள் 
    கண்டவர். 

    பல யுகங்கள் கண்டவருக்கு 
    பல பிறவிகளும் 
    இருப்பது 
    இயற்கைதானே !

    அப்படி 
    ஒரு பிறவியில் காகபுஜண்டர் 
    ஓர் அந்தணரின் 
    மகனாய் பிறந்தார்.

    ராம நாமம் 
    உள்ளத்திலும் 
    உதட்டிலும் 
    பவனி வந்தது.

    கண்கள் 
    ராமனின் 
    திருவடிக்காக 
    ஏங்கின.

    செவிகளோ 
    ராமனின் 
    சொற்களுக்காகத் தவமிருந்தன.

    ராமரைத் 
    தரிசிக்க 
    பல இடங்களில் 
    அலைந்தார்.
    திரிந்தார்.

    மேரு மலைக்கு 
    வந்தார்.

    அங்கே 
    மலை முகட்டில்
    ஒரு தவமுனிவர்.
    லோசம முனிவர்.

    அவரடி தொழுது 
    புஜண்டர் கேட்டது
    ராமரைப் பற்றியே !

    "பிரம்ம ஞானம் 
    கைவரப் பெற்ற 
    மகா ஞானியே !

    ராம தரிசனம் 
    காண வேண்டும்.
    வழி சொல்லுங்கள் !"

    விழிகள் பிரகாசிக்க புஜண்டர் கேட்டார்.

    "தம்பி…
    உருவ வழிபாடு 
    சாரமற்றது.
    பிரம்மமே 
    சத்தியமானது. 

    பிரம்மத்தைப் 
    பார்.
    உணர்.

    அதுவே 
    சாஸ்வதமானது.

    பிரம்மம் என்பது 
    எது தெரியுமா ?

    நீயே பிரம்மம்.
    உனக்கும் அதற்கும் வேறுபாடில்லை."

    முனிவர் 
    எளிமையாகச் 
    சொன்னார்.

    "ஜீவராசிகளும் 
    பிரம்மமும் 
    ஒன்றெனில் 
    தெய்வ பக்தி 
    என்பது எது ?

    மாந்தர் வேறு 
    கடவுள் வேறு 
    என்றில்லாவிட்டால் தெய்வபக்தி 
    எப்படி சாத்தியம் ?"

    வாதாட 
    ஆரம்பித்தார் 
    புஜண்டர்.

    வாதங்கள் 
    தர்க்கமாய்த் தொடர கோபப்பட்டார் 
    பிரம்ம ஞானி.

    "ஐயா….
    பிரம்மம் 
    உருவமில்லாதது.
    அதுவே சிறந்தது என்கிறீர்கள் !

    பிரம்மம் 
    சலனமற்றது.
    புலன்களால் 
    சிதைந்து விடாது.
    கவலையற்றது. ஆனந்தமானது என்கிறீர்கள் !

    பிரம்மமான 
    உங்களுக்கேன்  இப்படி
    கோபம் வருகிறது ?

    பிரம்மமும் 
    ஜீவராசிகளும் ஒன்றென்றால் ஜீவராசிகளுக்கு மட்டும் எதற்கு 
    இத்தனை 
    கவலைகள்…. 
    பிரச்சனைகள்….

    பிரம்மம் மட்டும் கவலையின்றி பிரச்சினைகளின்றி  இருக்கிறதே !

    கவலையற்றது
    பிரம்மம் என்கிறீர்களே ….
    எப்படி சுவாமி …?

    எல்லாவற்றிலிருந்தும் விடுதலை வேண்டுமெனில் 
    ராம பக்தியே
    வழிகாட்டும்.

    பக்தி மார்க்கமே 
    சிறந்தது.

    உருவ வழிபாடே
    உயர்ந்த வழிபாடு. உண்மை வழிபாடு."

    உரத்துச் சொன்னார் புஜண்டர்.

    லோசம முனிவர் 
    பதில் சொல்லவில்லை. பதிலாக 
    கோப மிகுதியில் 
    சாபம் தந்தார்.

    "அறிவுத் தெளிவு 
    அறவே இல்லாதவனே ! 

    என் 
    உபதேசங்களையா 
    அலட்சியம் செய்கிறாய் ?

    உயர்ந்த உண்மைகளை நம்ப மறுக்கிறாயே !

    காக்கை தான் 
    யாரையும் நம்பாது. எல்லாவற்றுக்கும் பயப்படும்.

    உணவிடுபவரைக் 
    கண்டு 
    பயந்து 
    விலகிப் போகும். 

    உனக்கும் 
    காக்கைக்கும் 
    வேறுபாடு இல்லை.

    காக்கையாய் போ…!"

    அக்கணமே 
    காகமானார் 
    புஜண்டர்.

    தான்
    காகமானது 
    குறித்து கவலைப்படவில்லை
    காகபுஜண்டர்.

    லோசம முனிவரை வணங்கி விட்டு விண்ணில் 
    பறந்து போனார்.

    ராம நாமமே 
    உணர்வாய் 
    உயிராய் 
    விரவிப் போனார்.

    காகபுஜண்டரின் தியானத்தில்
    ராமபிரானே நிறைந்திருந்தார்.

    காலம் சுழன்றது.

    புஜண்டரின் 
    ராம தியானம் 
    சாபம் தந்த 
    லோசம முனிவரை உலுக்கியது.

    ' இப்படி
    ஒரு ராமபக்தனா…!'
    வியந்தார்
    லோசம முனிவர். 

    புஜண்டரை
    அழைத்தார்.

    "புஜண்டா…
     இனி நீயென் சீடன். 

    நீ அறிந்த 
    ராம சரிதம் ஒருபுறமிருக்கட்டும்.

    சிவபெருமானே 
    எனக்கு 
    ஒரு ராம கதை சொல்லியுள்ளார்.

    உண்மையான 
    ராம பக்தனான
    உனக்கு அதைச் சொல்கிறேன்… கேள்…!"

    தெய்வம் சொன்ன 
    ராம கதையைச்
    சீடனுக்குச் சொன்னார் லோசம முனிவர்.

    ராம மந்திரம் 
    உபதேசம் 
    தியான வழிமுறை கற்பித்தார்.

    அரவணைத்தார்.
    ஆட்கொண்டார்.

    "சீடனே…
    இனி நீ விரும்புவது எல்லாம் கைகூடும்.

    நீ விரும்பினால் 
    மட்டுமே 
    மரணம் கூட நிகழும்.

    விரும்பும் உருவை
    நீ எடுக்கலாம்.

    காலம் 
    குணம் 
    செயல் 
    இயல்பு 
    குறை 
    போன்றவற்றால்
    எழும் துயரம் ஏதும் 
    உனக்கு இருக்காது.

    முன்பு 
    சாபம் தந்த குரு 
    இப்போது 
    ஆசி தந்தார்.

    பின் 
    காலம்தோறும் 
    ராமன் புகழ்பாடும் வாழ்வைக் 
    களிப்புடன் கழித்து வரலானார்…
    வரலாறானார்…
    காக ரூப 
    சித்தர் பிரான்.

    'காகபுஜண்டர் 
    காக உரு கொண்ட 
    கதை இதுதான்'
    என சிலர் 
    சொல்கிறார்கள்.

    ஞானமும் பக்தியும் ஒன்றென 
    உரைப்போரும் 
    அரியும் சிவனும் 
    ஒன்றென வாழ்வோரும் காகபுஜண்டரின் 
    கதையை
    சாட்சிக்கு வைப்பர்.

    ஆம்…
    காக புஜண்டர் 
    ஒரு பிறவியில் ராமனை 
    நிந்தனை செய்தவர்.
    சிவ பிரானால்
    அதற்காக 
    சாபம் பெற்றவர்.

    சில பிறவிகளில் ராமனை மட்டுமே சிந்தனை செய்தவர்.

    காகபுஜண்டரின் உபதேசங்கள் 
    உலகையே அதிரவைப்பன.

    முன்னும் பின்னும் 
    யாரும் சொல்லாத பெருமை கொண்டன.

    காகபுஜண்டர் 
    சொல்வதை 
    அவர் அருளிருந்தால்
    உணரலாமே தவிர முழுமையாக வார்த்தைகளுக்குள் முடக்கி விட முடியாது. 

    காகபுஜண்டரின் உபதேசங்களின்
    அடிப்படை இதுவே.

    பல யுகம் கண்ட
    காகபுஜண்டர்
    கலி காலம் 
    பற்றி சொல்வது
    ஓர் அதிரடி படப்பிடிப்பு.

    அவர் சொல்கிறார்.

    "கலியுகத்தில் 
    திருமகள் கருணையால் சிற்சில நன்மைகளும் உலாவரும்.

    கலியுகத்தில் 
    மூச்சடக்கி 
    பேச்சடக்கி 
    தவம் 
    செய்ய வேண்டாம்.

    தியானம் தவம் 
    செய்த பலனை 
    இறை பெயரைச் சொன்னாலே 
    சித்தியாகும்.

    மற்ற யுகங்களில் 
    நல்லது செய்தால் கிடைக்கும் பலன் கலியுகத்தில் 
    நல்லதை நினைத்தாலே நடந்தேறும் !"

    காகபுஜண்டர் 
    அருளிய நூல்கள் ஏழு.

    அவற்றை படிப்பது 
    புரிந்து கொள்வது
    பூர்வ ஜென்ம 
    புண்ணியம்.

    உதாரணத்திற்கு –
    அவர் 
    நோய்களைப் பற்றி அருளியது எக்காலத்திற்கும் பொருத்தமாய் இருப்பது அவருடைய 
    சித்த மெய்யறிவு.

    மனநோய்கள் பற்றி கூறும்போது..

    "நான் எனும் 
    அகம்பாவம் 
    சொறி சிரங்கு.
    பொறாமை 
    அரிப்பு.

    துன்பமும் மகிழ்ச்சியும் கழுத்து நோய்.

    பிறர் மகிழ்ச்சியைக் கண்டு வெம்புவது காசநோய்.

    கொடுமை வஞ்சனை 
    குஷ்ட ரோகம்.

    அகங்காரம் 
    மூட்டுவலி.

    வஞ்சனை திமிர் தற்பெருமை 
    நாக்கில் புழு வரும் 
    நோய்.

    பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை அழுத்தமான நோய்கள்.

    பொறாமை 
    விவேகம் இன்மை
    ஜுரம்.

    இவ் வியாதிகள் 
    இருப்பதே 
    பலருக்குத் தெரியாது.

    அப்படி இருக்கும்போது அவர்களுக்கு 
    மருந்து பற்றி மட்டும் எப்படித் தெரியும் ?"

    இம்
    மன நோய்களுக்கு மருந்தும் சொல்கிறார் காகபுஜண்டர்.

    'கட்டுப்பாடான 
    வாழ்க்கை 
    நற்செயல்கள் நன்னடத்தை சகிப்புத்தன்மை 
    நல்லறிவு 
    யாகம் 
    ஜபம் 
    தானம் 
    ஞானம்."

    ஈடில்லா சித்தரான காகபுஜண்டர்
    முக்தி பெற்ற வரலாறும் சித்திபெற்ற திருத்தலங்களும் 
    அறிய ஆவலா ?

    கைலாய நாதரைத் 
    தரிசித்து 
    முக்தி வேண்டும் 
    என வேண்டுதல் வைத்த புஜண்டரைப் பார்த்து உலகநாயகன் சொன்னார்.

    "பொய்கையில் மூழ்கு கரையேறும் இடத்தில் முக்தி கிடைக்கும்."

    காகபுஜண்டர் பொய்கையில் மூழ்கி ஆச்சாள்புரத்தில் 
    எழுந்தார்.

    ஆச்சாள்புரம் 
    இன்றைய 
    சீர்காழி அருகே உள்ள திருத்தலம் திருமணஞ்சேரி.

    இங்குதான் ஞானசம்பந்தருக்குத் திருமணம் நடந்தது.

    திருமண வேள்வியில் எழுந்த ஜோதியில் திருமணத்தில் 
    கலந்து கொண்டோர் 
    அனைவரும் 
    முக்தி பெற்றதாக 
    புராணம் மகிழும்.

    இக்கோயிலில் யோகீஸ்வரர் யோகாம்பாளாக 
    சிவனும் உமையும் அருள்பாலிக்கிறார்கள்

    காகபுஜண்டர் 
    காக முகத்தோடு ஜடாமுடி சகிதம் பத்மாசனத்தில் இங்கு எழுந்தருளியுள்ளார்.

    காரைக்கால் அருகே திருமலைராயன் பட்டினம் என்று 
    ஓர் அழகிய திருத்தலம்.

    இங்கு 
    காகபுஜண்டர் 
    மனைவி பகுளாதேவி சகிதம் உறைந்து அருள்பாலிக்கிறார்

    இக்கோயிலே காகபுஜண்டருக்கு தோன்றிய 
    முதல் ஆலயம்.

    அக்கோயில் தென்னாட்டில் அமைந்ததற்கு காரணம் காகபுஜண்டர் 
    தென்னாடு பெற்ற 
    தமிழர் என்கிறது 
    ஓர் ஆன்மிக தகவல்.

    காகபுஜண்டருக்கு 
    திருகாளகஸ்தியில் 
    சிலை உண்டு.
    அங்கு அவரை வழிபடுவது 
    நம் பிறப்பின் சிறப்பு.

    கள்ளக்குறிச்சி அருகே  பொன்பரப்பியில் சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் 
    காகபுஜண்டர் 
    பகுளாதேவி 
    தம்பதி சமேதராய் 
    ஸ்தூல சமாதி அடைந்ததாக 
    ஒரு தகவல் இருக்கிறது.

    திருச்சியில் 
    உறையூரில் 
    காகபுஜண்டர் 
    வாழ்வாங்கு வாழ்ந்து சித்தி அடைந்ததாகக்
    குறிப்பு உள்ளது.

    காகபுஜண்டரின் 
    அவதார தினமான பங்குனித் திங்கள் ஆயில்ய நட்சத்திரம் 
    அவர் திருத்தலம் 
    வணங்கி நின்றால் வாழ்க்கை சிறக்கும் என்பது 
    சத்தியபூர்வமான 
    அனுபவ உண்மை.

    (நிறைவு)