பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்ரவரி 29 ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 1 ஆம் தேதி அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி – தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். அரோகரா முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
Category: சித்தர்கள்
சித்தர்கள்
-
சாய்பாபா விரதம்
எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிராதித்துக் கொள்ள வேண்டும் காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது
பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிறமலர்கள் மாலை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை வணங்கவும். முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யலாம் ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும் -
செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் திருக்கோயில்
நவகிரக நாயகர்களில் செவ்வாய் மிகவும் வலிமை மிக்கவர். சகோதரர் பூமி யோகம், தேக நலம், ஆகிய பலங்களைத் தருபவராக இருக்கிறார். செவ்வாய் தோசத்தால் திருமணத் தடை உண்டாகும் என்பர். இதனைப் போக்கும் தலமாக விளங்குகிறது வைத்தீஸ்வரன் கோயில். செவ்வாய் வழிபட்ட சிவலிங்கம் இங்கு அமைந்துள்ளது. செவ்வாயின் அதிதேவதையான மிருகப்பெருமான் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் இங்கு வீற்றிருக்கிறார். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் தனக்குரிய ஆட்டு வாகனத்தில் கோயிலுக்குள்ளே உலா வருகிறார். இங்கு தன்வந்திரி சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதால் நோய் தீர்க்கும் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல இறைவனை வைத்தீஸ்வரரையும், அம்பிகை தையல் நாயகியையும் விரதம் இருந்து வழிபாடு செய்வோருக்கு திருமணத் தடை நீங்கி நல்ல வாழ்க்கை அமையும்.
-
அகத்தியர் சித்தர் தவமிருக்கும் கோயில்…
கொல்லிமலையில் அமைந்துள்ள பேளுக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள கூவ மலையில் தண்டயுதபாணியாக முருகன் குடி கொண்டுள்ளார். இந்த கோவில் சிலையை போகர் சித்தர் பழனியில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கும் முன் ஒரு முன்னோட்டமாக தயாரித்து இங்கே பிரதிஷ்டை செய்தார் என்று செவி வழி செய்திகள் கூறுகிறது. கூவ மலையை கூர்ந்து கவனித்தால் ஒரு பாறையை கூட பார்க்க முடியாது. ஏதோ புற்களால் கம்பளம் நெய்து மலை மேல் விரித்தார் போல் ஒரு பசுமை சூழ்ந்து நிற்கும். இந்த மலையின் பின் புறம் கொல்லிமலை கைலாசத்தை நினைவு படுத்தி எல்லாமே இங்கு அடக்கம் என்று சொல்லாமல் சொல்லி உயர்ந்து நிற்கும். இங்கு முருகர் வேட்டுவ கோலத்தில் காட்சி தருகிறார். நிறையவே ரகசியங்களை உள்ளடக்கிய கோவில். அகத்தியர் சித்தர் முதல் அனைவரும் காலை வேலையில் உலக நன்மைக்காக தவமிருக்கும் கோவில் என கூறப்படுகிறது. அத்தனை அமைதி பொருந்திய கோவில்.
-
பாம்பன் சுவாமிகளுக்கு முருகன் சொன்ன பாடம்
அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர் பாம்பன் சுவாமிகள்.
தமிழகத்தில் இராமேஸ்வரம் அடுத்த பாம்பன் என்னும் ஊரில் செங்கமலத்தம்மையார், சாத்தப்பப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் அப்பாவு. பின்னாளில் முருகனருள் பெற்று ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளான இவரை பாம்பனில் பிறந்ததினால் பாம்பன் சுவாமிகள் என்ற திருநாமத்தால் அறியப்படுகிறார்.
சிறுவயது முதலே ஒவ்வொரு நாளும் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை மனமுருக படிப்பார். தானும் கந்த சஷ்டி கவசம் போலவே துதி பாட வேண்டும் என்று ஆசைபட்டார். இப்படிப் பாடும் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தனது ஞான குருவான அருணகிரிநாதரின் பெயரோடு முடிக்க வேண்டும் என விரும்பினார்.
‘கங்கையை சடையிற் பரித்து’ என்னும் முதலடியுடன் தொடங்கி, முருகன் துதிகளை இயற்றியவர்.ஒவ்வொரு நாளும் உணவு உண்னும் முன் ஒரு பாடலை இயற்றினார் . இப்படியே நூறு பாடல்களை இயற்றி முடித்தார் பாம்பன் சுவாமிகள்.
பக்தி வாழ்க்கை
பாம்பன் சுவாமிகள் சுவாமிகளுக்கு திருமண வாழ்வில் விருப்பமில்லை . துறவறமே அவரது மனதின் தீர்மானமாக இருந்தது .ஆனால் சுவாமிகளுக்கு ‘சடாக்ஷர மந்திர உபதேசம்’ செய்த சேது மாதவ ஐயரோ, பாம்பன் சுவாமிகளை இல்லற வாழ்வில் ஈடுபடச் சொன்னார். 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையாரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தந்தையனார் சுவாமிகள் . குடும்ப வாழ்க்கை இனிக்கவில்லை, சதா நேரமும் முருகனை நெஞ்சில் நிறுத்தியிருந்த சுவாமிகளுக்கு.
முருகன் கொடுத்த தண்டனை
அந்த கால கட்டத்தில் சுவாமிகளின் தந்தை சிவபதம் அடைந்தார் . இந்நிலையில் துறவறம் பெற பழநி செல்வதாக தனது நண்பர் அங்கமுத்துப் பிள்ளையிடம் சொன்னார். இதை கேட்ட அங்கமுத்துப்பிள்ளை பழநிக்கு வர பெருமானிடம் இருந்து உத்தரவு வந்ததா என்று சுவாமிகளிடம் வினவினார். சுவாமிகளும் கொஞ்சமும் தயங்காமல் ஆமாம் என்று பதில் தந்தார்.
அதே நாளில் மாலை பாம்பன் சுவாமிகள் முருகனை மனமுருகி துதிப் பாடிக் கொண்டிருந்தார். அந்த பொழுதில் கோப முகத்துடன் சுவாமிகளின் முன் தோன்றிய முருகப் பெருமான், சினத்துடன் “நான் உத்தரவு தருவதற்கு முன்பே தந்துவிட்டதாகப் பொய் சொன்னாயா?” என்றார்.உடனே பதறிய பாம்பன் சுவாமிகள் “நான் சுயலாபத்துக்காக அப்படிச் சொல்லவில்லை. ஆன்ம லாபம் கருதித்தான் பொய் உரைத்தேன்” என்றார்.
கோபம் குறையாத முருகப் பெருமான் , “எக்காரணம் கொண்டும் பொய் சொல்லியிருக்கக் கூடாது என்னிடம் இருந்து உத்தரவு வரும் வரை பழநிக்கு வரக் கூடாது” என்று சொல்லி மறைந்தார். இதனால் மனம் சோர்வுற்ற சுவாமிகள் , பழநிக்கு வருமாறு முருகப் பெருமானிடம் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால் அவருடைய கடைசிக்காலம் வரை அழைப்பு வரவேயில்லை. ஆன்ம லாபம் கருதிக்கூட பொய் சொல்லக் கூடாது என்பதை உணர்த்தவே முருகப் பெருமான் அப்படி நடந்துகொண்டதாக உணர்ந்தார் சுவாமிகள்.
இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆடி மாதமும் சுக்கிரவாரத்தில் ‘சத்தியத் திருநாளா’கக் சுவாமிகளின் அடியார்கள் கடைபிடித்து வருகிறார்கள். அடியாரின் வழி நின்றி தாங்களும் சத்தியத்தை மீறக் கூடாது என்பதே இந்த சத்தியத் திருநாளின் நோக்கம்.
சுவாமிகள் பிரப்பன்வலசை என்னும் ஊரில் முருகனிடம் உபதேசம் வேண்டி தவத்தில் ஈடுபட்டார். தவத்தைத் தடுக்க பல்வேறு இடையூறுகள் வந்தன. முருகன் திருநாமத்தால் தடைகளை தகர்த்து எறிந்தார் சுவாமிகள்.
தவம் இருந்த ஏழாம் நாள் இரவு, அடியார் உருவத்தில் முருகன் வந்தார். சுவாமிகளிடம் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டு மறைந்தார். சுவாமிகள் அந்தச் சொல்லை உச்சரித்தபடியே தவத்தில் ஆழ்ந்தார் . முப்பத்தைந்தாம் நாள் தவத்தில் இருந்து எழச் சொல்லி அசரீரி கேட்டது. எம்பெருமான் சொன்னால் மட்டுமே எழுவேன் என்று சுவாமிகள் சொன்னார். இது முருகன் கட்டளை என்று பதில் வந்த பிறகே தவத்தில் இருந்து எழுந்தார் பாம்பன் சுவாமிகள். உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் எண்ணிக்கையை ஒன்றிணைத்து சண்முகக்கவசம் பாடினார். இந்த 30 பாடல்களையும் பாடினால் எல்லா துயரங்களும் தூர விலகும்.
அரசு மருத்துவமனையில் முருக தரிசனம்.
ஒரு முறை எலும்பு முறிவுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சுவாமிகள். மூப்பின் காரணமாகவும், சுவாமிகள் உப்பு இல்லாத உணவை உண்பதாலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது வானத்தில் இரண்டு மயில்கள் தோகை விரித்தாடின. இன்னும் பதினைந்து தினங்களில் குணமாகும் என்ற அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து குழந்தை வடிவில் முருகப் பெருமான் காட்சியளித்தார். சுவாமிகளின் கால் குணமானது. சென்னை அரசு மருத்துவமனை பதிவுக்கல்லில் இந்தத் தகவல் இன்றளவும் சாட்சியாக உள்ளது.
முருகப் பெருமான் மீது 6666 பாடல்களைப் பாடிய பாம்பன் சுவாமிகள், தமது 79ஆவது வயதில் 30-5-1929 வியாழக்கிழமை அன்று காலை 7.15 மணிக்கு, பிராண வாயுவை உள்ளிழுத்து மகாசமாதியில் ஆழ்ந்தார். இதை அறிந்த அன்பர்கள் பலர் சுவாமிகளை வந்து தரிசித்து சென்றனர். மறுநாள் (31-5-1929), சுவாமிகளின் திருமேனியை திருவான்மியூரில் வைத்து சமாதிக்கோவில் அமைத்தனர். சுவாமிகளின் சமாதிக்கோவில் மிகவும் மகிமை வாய்ந்தது. அங்கு சென்று வாழ்வில் வளம் பெற்றோர் பலர். திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்.
-
கேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்
நம்முடைய கலாச்சாரத்தில் பலவிதமான பிரார்த்தனைகள் , நேர்த்திக்கடன்கள். அவரவர் மன நிம்மதிக்காகவும் , கவலைகளை தீர்க்கும் பொருட்டும் கடவுளிடம் வேண்டிக்கொண்டு செலுத்தும் நேர்த்திக்கடன்கள் அநேகம்.அது அம்மனை நினைத்து பூக்குழியாக பாவித்து இறங்கும் தீக்குழியாக இருக்கட்டும், சிறு துரும்பு குத்தினாலும் தங்களது உடலெங்கும் அலகு குத்திக்கொள்வதில் ஆகட்டும் ,இது தான்.இப்படித்தான் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்ற அளவுகோல் இல்லை.
தென்னம்பாக்கம் அழகுமுத்தையனார் ஆலயமும் வித்தியாசமான நேர்த்திக்கடனால் தனித்து நிற்கிறது. ஸ்ரீ அழகர் சித்தரின் சக்திவாய்ந்த ஜீவசமாதி உள்ள இந்தக் கோவிலில் ,பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி கோவிலில் கட்டுகிறார்கள்.வேண்டுதல் நிறைவேறியதும்,விதவிதமான பொம்மைகளை வாங்கி கோவிலுக்கு கொடுக்கிறார்கள்.
கடலூரில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் துரத்தில் அமைந்துள்ளது தென்னம்பாக்கம் . அங்கு ஏரிக்கரையின் வடகரையில், ஊருக்கு வெளியே இலுப்பைத் தோப்பில் பூரணி, பொற்கலை சகிதமாக கம்பீரமாக ஊர்க்காவலராக நிற்கும் அழகு முத்தையனார் கோவிலின் பின்புறமுள்ள கிணற்றில் ஜீவசமாதியடைந்து இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார் அழகர் சித்தர்.
சுமார் 200 ஆண்டுகளுக்குமுன் தென்னம்பாக்கம் வந்த சித்தர், தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தது அழகு முத்தையனார் கோவில் வளாகத்தைத்தான். இவர் ஊர்மக்களின் குறைகள் பல தீர்த்து, அற்புத சித்துகள் செய்துகாட்டியவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் மனதில் நிலைத்த சித்தர்,ஒருநாள் முத்தையனார் கோவிலுக்குப் பின்புறம் இருந்த கிணற்றில் இறங்கினார். சித்தர் கிணற்றில் இறங்குவதை கண்ட அவ்வூர் மக்கள் ,அருகில் சென்று பார்க்கையில் ,கிணற்று நீரில் ஜீவசமாதியான நிலையில் சித்தர் இருப்பதைப் பார்த்தனர். தகவலறிந்து ஊரே திரண்டுவிட்ட நிலையில், சித்தரின் குரல் “நான் இங்கு ஜீவசமாதியாகிவிட்டேன். கிணறை மூடிவிடுங்கள். முத்தையனாரோடு எனக்கும் கோவில் அமைத்து வழிபடுங்கள். என்னை நாடிவரும் பக்தர்களின் குறையெல்லாம் தீர்த்து, வாழ்வை வளம்பெறச் செய்வேன்” என்று அசரீரியாக ஒலித்தது.
அவர் வாக்குப்படி, கிணற்றை மூடி சமாதி அமைத்து கோவிலாக்கினர் ஊர் மக்கள். சமாதி மீது சூரிய ஒளியும்ஆகாயமும் தெரியவேண்டுமென்பது சித்தரின் கட்டளை என்பதால் ,அதற்காக சமாதியின் மேற்கூரையின் மையப்பகுதியை திறந்தே வைத்திருக்கிறார்கள்.
ஆலயம் வரும் பக்தர்கள் முதலில் அழகு முத்தையனாரையும், பின்பு அழகர் சித்தரையும் வணங்கியபின்பே மற்ற தெய்வங்களான சிவன் சந்நிதி, சனி பகவான் சந்நிதியோடு, அம்மன் சந்நிதியை வணங்குகின்றனர்.
கோவில் வளாகமெங்கும் நேர்த்திக் கடன் செய்துகொண்டவர்கள் வழங்கிய ஒரு அடி முதல் ஐந்தடி வரையிலான மனித சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
தங்களின் பிள்ளைகள் டாக்டராக, வக்கீலாக கலெக்டராக வர வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் ,இந்தக் கோவிலில் வேண்டிக்கொண்டு சீட்டெழுதிக் கட்டுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் தங்களின் பிள்ளைகள் போல் சிற்பம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் என்கிறார் தலைமை பூசாரி.
படிப்பு, திருமணம், குழந்தைப்பேறு , தீராத நோய்கள், வழக்கில் வெற்றி என சாதாரண மக்களின் வாழ்க்கையோடு பிணைந்துள்ள பிரச்சினை ஒவ்வொன்றுக்கும் இங்குவந்து முறையிட்டு தீர்வு காண்கின்றனர் சுற்றுவட்டார மக்கள். ஒவ்வொரு சிலையும் ,இது கதையல்ல நிஜம் என்று சொல்லாமல் சொல்கிறது.
அழகர் சித்தர் சித்திரை மாதமொன்றின் முதல் திங்கட்கிழமை ஜீவசமாதியடைந்தார் என்பதால் வருடம்தோறும் சித்திரை முதல் திங்கட்கிழமையை இங்கு வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அழகருக்கு உகந்த திங்கட்கிழமையில் பக்தர்கள் திரளாக வந்து அவர் ஆசி பெற்று செல்கின்றனர்.

கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் விருப்பம் போல் உயரத்திலும் உருவத்திலும் சிலைகளை செய்து தருபவர்களும் காணப்படுகிறார்கள். கூப்பியக் கரங்களுடன் சிலநூறு மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் சிலைகளைப் பார்க்கும் போதே சித்தரின் மகிமையை நம்மால் உணர முடிகிறது.

சித்தர் வழிபாடு நம் வாழ்வை இனிதாக்கும் …..
-
சித்தர்கள் வாசம் செய்யும் உதய தேவரீஸ்வரர் திருத்தலம்
சித்தர்கள் வாசம் செய்யும் இந்த திருத்தலம், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பெருந்தலமாகவே உள்ளது. இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். சித்தர்கள் வழிபடும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் சேலம் அருகே உள்ள அரூர் அடுத்த சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள உதயதேவர் மலை மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள். சிறிய குன்று போல் அமைந்திருக்கும் இந்த மலை மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது. சிறப்புக்குரியது இந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மீது தினமும் மாலை வேளையில் சூரிய ஒளி விழுவது அரியக் காட்சியாகும். 1131-ம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்தில் பஞ்சந்தாங்கி திருச்சிற்றம்பல வேலைக்காரர் என்பவரால், கோவிலில் கதவு நிலை கொடையாக அளிக்க பெற்றதாக கல்வெட்டு தகவல் உள்ளது. மேலும், இந்தக் கோவில் 7.9.1818-ல் புதுப்பிக்கப்பட்டதற்கான கல்வெட்டு அடையாளங்களும் உள்ளன. ஆரம்ப காலத்தில் இங்கு உதயதேவரீஸ்வரர், விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்தி சிலைகள் மட்டுமே இருந்தன. அதே நேரத்தில் ஊருக்குள் மாரியம்மன் திருத்தலம் ஒன்றும் இருந்தது. சிவனுக்கு வலதுபுறமாக கிழக்கு நோக்கி உதயதேவரீஸ்வரி அம்மன் சிலையை அமைத்தார்கள். இந்தக் கோவிலில் பவுர்ணமி அன்று இரவு, சிறப்பு பூஜை நடை பெறும். அப்போது விபூதி, மாங்காய் மற்றும் தாழம்பூ வாசம் வீசுவதை அங்கு வந்த பக்தர்கள் இன்றளவும் உணர்ந்து வருகிறார்கள். 3 சித்தர்கள் வருகையின் காரண மாகத்தான், தாழம்பூ, விபூதி, மாங்காய் மணம் அங்கு கமழ்வதாக பக்தர்களிடம் நம்பிக்கை அதிகரித்தது. விநாயகர் சன்னிதியில் தான் பழங்கால கல்வெட்டு அமையபெற்றுள்ளதாக கோவில் பூசாரி கூறுகிறார். இந்த ஆலயத்தில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி பூஜைகள், கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பவுர்ணமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் தொடர்ச்சியாக 3 பவுர்ணமியில் கலந்து கொண்டால், திருமணத் தடை, நவக்கிரக தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம், நினைத்த காரியம் கைகூடும்.
-
சிவனுக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு?
சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பதன் காரணம் என்ன?யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல…. ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை.
-
சிவனுக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு?
சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பதன் காரணம் என்ன?யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல…. ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை.
-
சித்தர்கள் பற்றிய சில அறிய தகவல்கள்…
சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள் குறித்த சில அறிய தகவல்களை பார்க்கலாம்.
பதஞ்சலி சித்தர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
அகஸ்தியர் – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
கமலமுனி – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
திருமூலர் – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.
குதம்பை சித்தர் – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
கோரக்கர் – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
தன்வந்திரி சித்தர் – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
சுந்தராணந்தர் – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
கொங்ணர் – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
சட்டமுனி – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
வான்மீகர் – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
ராமதேவர் – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
நந்தீஸ்வரர் – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
இடைக்காடர் – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
மச்சமுனி – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
கருவூரார் – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
போகர் – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
பாம்பாட்டி சித்தர் – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்….