Category: சித்தர்கள்

சித்தர்கள்

  • ஞானக்குழந்தை

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    வள்ளலார் சரித்திரம் பாகம் – 1

    உடுத்துவதற்கு கோவணம்
    உண்பதற்கு காய்கனிகள்
    தவத்திற்கு அடர் காடு
    சத்திரத்தில் சற்று தூக்கம்

    தலையில் சடை முடி
    முகத்தில் நீண்ட தாடி
    கழுவாத அழுக்கு உடல்
    தைக்காத கந்தல் உடை

    தங்குதல் வெட்டவெளி
    தவமிருத்தல் இருண்ட குகை
    சிந்தை எல்லாம் சிவமயம்
    சித்தி ஒன்றே ஒரே நோக்கம்

    இடையிடையே 
    உலகம் உய்ய 
    மறைபொருளாய்
    ஞானப் பாக்கள்
    பரிபாஷையில் 
    சித்தர் மருத்துவம். 

    இடைவெளியின்றி
    அள்ளித்தரும் 
    அருளாற்றல்.

    இவையாவும் 
    சித்தர்களின் இலக்கணமாய் 
    மக்கள் மனத்தில் இருக்கும் நெடுங்காலப் பதிவு.

    அப்பதிவில்
    அதிரடி 
    மாற்றம் தந்தவர் 
    வள்ளல் பிரான்.

    ஒளிரும் முகம்.
    கனிந்துருகும் கண்கள். 
    பணிந்த கால்கள்.
    உடல் ஏதும் 
    தெரியா வண்ணம்
    தூய வெள்ளாடை.

    உடுத்துவதில் மட்டுமின்றி உண்ணுவதிலும் உறங்குவதிலும் 
    உறவைப் பேணுவதிலும் இறையருள் பெறுவதிலும் 
    இலக்கணம் வகுத்து இலக்கணமாய் வாழ்ந்து 
    நிறை ஞானியாய் திகழ்ந்தவர் 
    வடலூர் வள்ளல் பெருமான்.

    சிதம்பரம் இராமலிங்கம்.

    அழியாச் சித்தரான
    அவர்தம் வரலாறு 
    உலகே வியக்கும் 
    திவ்விய சரித்திரம்.

    அன்று 
    வானத்திற்கும் 
    வனத்திற்கும் 
    வயல்களுக்கும் வாழ்விடங்களுக்கும் 
    திருத்தலங்களுக்கும் திருவிழா.

    பஞ்சபூதங்கள் 
    பரவசமாய் 
    ஆனந்த நடனம் ஆடின.

    இறைவன் கூட
    நிறைவாய் இருந்தான்.

    மேகம் தேன் மழை பொழிய 
    மலர்கள் நறுமணம் வீச 
    தென்றல் மெதுவாய் தவழ 
    மாலை மங்கும் தருணத்தில் 
    ஓர் ஞானப் பூ 
    பூமியில் புதிதாய் பூத்தது.

    உலகுக்கு ஒளி தரும் 
    சூரியன் 
    இயற்கையாய் 
    விடைபெறும் தருணம் 
    பிரபஞ்சத்திற்கு ஒளியூட்ட 
    ஞானச் சூரியன் உதித்தது.

    அந்நாள்
    1823 ஆம் ஆண்டு 
    அக்டோபர் மாதம் 
    5ஆம் நாள்.
    மாலை 5.54 மணி.

    சிவபெருமான் 
    நடராஜப் பெருமானாக
    ஆடல்வல்லானாக நடனமாடும் 
    சிதம்பரம் 
    பொற்சபைக்கு 
    வடமேற்கே 
    சற்று தூரத்தில் இருக்கும் மருதூரில் தான் 
    ஞானசபை நாயகர் அவதரித்தார்.

    அவரது திருநாமம் இராமலிங்கம்.

    பெற்றோர் வைத்த பெயர் இராமலிங்கம்.

    உற்றார் உறவினர் 
    அழைத்த பெயர் 
    ராமலிங்கன்.

    ஆன்றோர் சான்றோர் 
    அழைத்த பெயர் 
    இராமலிங்க அடிகள்.

    ஆன்மீகம்
    போற்றிய பெயர் 
    இராமலிங்க வள்ளலார்.

    அவர் 
    தனக்கிட்டுக் கொண்ட பெயர்
    சிதம்பரம் இராமலிங்கம்.

    சன்மார்க்கம் முதலாய் 
    இன்று உலகே 
    வணங்கும் பெயர் 
    திரு அருட்பிரகாச வள்ளலார்.

    வள்ளல் பெருமானின் வரலாறு 
    ஆன்மீகச் செறிவும் அற்புதங்களின் தொடர்பும் 
    இறைதேடும் வழியும் 
    ஞானத் தெளிவும் கொண்டவை.

    வள்ளல்பெருமான் 
    தாயின் வயிற்றில் கருவானது முதல் 
    உலகின் கண்
    உருவானது நிகழ்ந்து, நிறைவில் 
    இறையில் திருவானது வரை அனைத்தும் 
    இறைவனின் கருணையே.

    சிதம்பரம் நடராஜப் பெருமானும் 
    கந்தகோட்டம் கந்தர் பெருமானும் 
    திருத்தணிகை முருகப் பெருமானும் 
    திருவொற்றியூர் தியாகராஜப் பெருமானும் 
    வள்ளல் பெருமானை 
    வார்த்தெடுத்த தெய்வங்கள்.

    வடிவுடை அம்மனும் துலுக்கானத்தம்மனும் 
    அவரை வளர்த்தெடுத்த 
    தாய் தெய்வங்கள்.

    பின்னாளில் 
    கருங்குழியில் உறைந்து 
    சன்மார்கம் நிறுவியபோது 
    அவரது உபதேசங்கள் 
    ஆழமாய் 
    நுட்பமாய் 
    தேடலாய் 
    ஞானத்தைக்
    கண்டடைந்ததாய் 
    ஒரு புது மார்க்கம் கண்டது.

    அதுவே 
    சுத்த சன்மார்க்கம்.

    இறையை ஒற்றி 
    பல்லாயிரம் பாடல்கள் 
    பாடி நின்றார்.
    இறைவனைக் கண்டார்.

    இறை அருளால்
    ஞானம் பெற்றார்.

    ஞானத்தை ஒற்றி 
    பாக்கள் புனைந்தார். 
    அவையே இன்றளவும் மெய்ஞானம் பகர்கின்றன.

    அருட்பெருஞ்ஜோதி 
    அற்புத ஆண்டவராய் 
    தனிப்பெருங்கருணையாய் பேரொளியாய் 
    தான் கண்டுணர்ந்ததைத்
    தன் அனுபவத்தை 
    பிறருக்கு உபதேசித்தார்.

    எவரும் பெற முடியும் 
    என கூவி அழைத்தார்.

    அன்பர்கள் பலரை ஆட்கொண்டார்.

    அவரது அமுதப் பாக்கள் 
    ஆறு திருமுறைகள் ஆயின.

    அவற்றில் குறிப்பாக 
    ஆறாம் திருமுறை
    ஞான அமுதாய் 
    இன்றும் ஞானம் 
    சொரிந்து வருகிறது.

    இறையோடு இறையாய் 
    ஒரு நன்னாளில் 
    ஒளித்தேகம் பெற்று 
    அவரே இறை ஆனார்.

    அருட்பெருஞ்ஜோதி 
    ஆனார்.

    மருதூரில் 
    ஒரு கணக்குப்பிள்ளை. 
    பெயர் 
    இராமையா பிள்ளை.

    மனைவி சின்னம்மை. 
    சின்னகாவனம் 
    சொந்த ஊர்.

    இராமையா பிள்ளைக்கு சின்னம்மை 
    ஆறாவது மனைவி.

    ஐந்து பேரும் 
    மக்கட் பேறு இன்றி 
    ஏதேதோ நோய்களால் மரணித்துப் போயினர்.

    சிவபக்தையான 
    சின்னம்மை 
    ஆறாவதாய் 
    மனை நிறைத்தார்.

    ஒருநாள் 
    சிவ அம்சத்தோடு 
    சிவனடியார் ஒருவர் 
    வாசலில் நிற்க 
    ஓடிப்போய் 
    தாள் பணிந்தார் 
    சின்னம்மை.

    உள் அழைத்து 
    உள்ளன்போடு 
    உபசரித்தார்.

    உபசரித்தல் உணவிடுதல் 
    புண்ணியங்களில் உயர்ந்தவை.

    புறப்படும் தருணம் 
    திருநீறு தந்த 
    சிவனடியார்….

    "உனக்கு 
    ஓர் ஞான மகன் 
    பிறப்பான்.

    உன்னைப் போலவே 
    அவன் 
    பலரின் பசி தீர்ப்பான்…

    ஊருக்கு மட்டுமல்ல உலகுக்கே பசி தீர்ப்பான்…

    உலகம் போற்றும் 
    இறையாய்
    ஒளிர்வான்…."

    என்று ஆசி தந்தார்.

    விடைபெற்று 
    வீதி வந்தவர் 
    சில அடிகள் நடந்து 
    தெரு முனைக்கு செல்வதற்குள் 
    சின்னம்மை 
    பார்த்திருக்க 
    மாயமாய் 
    மறைந்து போனார்.

    அவர் வேறு யாருமல்ல…

    எல்லாம்வல்ல 
    ஆதிநாதன் 
    சிவபெருமானே.

    கடவுளின் அருளால் 
    கருத்தரித்த வள்ளல்பெருமான் 
    உரிய நாளில் 
    உலகில் அவதரித்தார்.

    ஐந்தாம் மாதம்.

    குழந்தையை 
    நடராஜர் தரிசனத்திற்கு சிதம்பரம் 
    எடுத்துச்சென்றனர் பெற்றோர். 

    அன்றைய அர்ச்சகர் 
    அப்பைய தீட்சிதர், 
    ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்.

    அவர் சன்னதியில்
    திரையைத் தூக்கினார்.

    எல்லோரும் கைகளைச்
    சிரம் மேல் தூக்கிப் 
    பக்தி பரவசத்தில் கன்னங்களில் 
    ஒற்றிக் கொண்டிருந்த போது 
    தாயின் 
    தோள்பட்டையையும் முந்தானையையும் 
    பற்றிக் கொண்டிருந்த குழந்தை
    பொக்கை வாய் விரித்து அம்பலவாணரின் 
    திக்கைப் பார்த்துச்
    சிரித்துக் கொண்டிருந்தது.

    சிதம்பர ரகசியம் 
    தரிசனம் ஆயிற்று
    ஞானக் குழந்தைக்கு.

    தீப ஆராதனையின் போது
    அப்பைய தீட்சிதர் குழந்தையைக் கவனித்தார். 
    ஓடோடி வந்தார்.

    அவரது 
    சிவஅனுபவம் 
    பேசியது…

    "பிள்ளைவாள்….!

    இது ஏதோ 
    சாதாரணக் குழந்தை அல்ல… 
    இது தெய்வக் குழந்தை… ஞானக்குழந்தை…

    இறைவனுக்குத் 
    தீபம் காட்டியபோது
    அங்கிருந்தபடி 
    குழந்தையைப் பார்த்தேன்….

    அப்படி ஒரு பேரொளி குழந்தையின் முகத்தில்….

    சாட்சாத் 
    அம்பலவாணரின் 
    அருட்குழந்தையே இவன்.

    பத்திரமாய் 
    பாங்காய் வளர்ப்பது 
    உங்கள் பொறுப்பு!

    அம்மா….
    நீயும் பாக்கியசாலி..
    கவனம்….. மிக கவனம்."

    சின்னகாவனம் 
    சின்னம்மை 
    மெய்சிலிர்த்தார்.

    மகிழ்வோடு 
    புறப்பட்டார்கள்
    மருதூருக்கு.

    அவர்கள் 
    கோயில் சுற்றி வந்தபோது 
    கோயிலின் வாசலில் அப்பைய தீட்சிதர் காத்திருந்தார்.

    "இன்று குழந்தையோடு 
    எனது இல்லத்திற்கு தயைகூர்ந்து வாருங்கள்..

    எனது வீட்டில் 
    உங்களுக்கு 
    மதிய உணவு.

    உணவு கூட
    புண்ணியம்
    பெறுவதற்காகக்
    காத்திருக்கிறது.

    உணவுப் பருக்கைகளில்
    குழந்தையின் திருநாமம் 
    உயிராய் பதிந்திருக்கும்
    போலிருக்கிறது.

    உலகுக்கே 
    உணவு அளிக்கப் போகிறவனுக்கு 
    அவன் 
    சின்னஞ்சிறு வாயில் 
    உணவு ஊட்டிய 
    புண்ணியம் 
    உங்கள் தயவால்
    எங்கள் குலத்திற்குக் கிடைக்கட்டும்…!"

    இன்னும் 
    ஏதேதோ சொன்னார்.

    அவை 
    இறையும் மறையும் 
    உணர்த்திய வார்த்தைகள்.

    இறையருளால் 
    அவதரித்தக் குழந்தை… 
    இறை தரிசனத்தைக் கண்ட ஞானக்குழந்தை 
    தவழ்ந்தது… 
    நடந்தது…. 
    வளர்ந்தது.

    (சரித்திரம் விரியும்)….
     

  • சிவனென்று இருந்தார்.. சிவமாகிப் போனார்.

    – "மாரி மைந்தன்" சிவராமன்

     

    பட்டினத்தார் கதை பாகம் – 6

    சேந்தனார்.
    ஞாபகம் இருக்கிறதா ?

    பட்டினத்தார் 
    வணிகர் குலச் செம்மலாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் 
    அரசனுக்கு நிகராக அருளோடு பொருளோடு 
    வணிக ஆட்சி 
    செய்த காலத்தில் 
    தலைமைக் கணக்கராக உடனிருந்து உதவியவர்.

    பட்டினத்தார்
    துறவறம் பூண்ட பின்னர் 
    அவரின் 
    சொத்துக் கணக்கைத் தெளிவுறச் 
    சொல்ல முடியாததால் 
    மன்னனின் கோபத்துக்குள்ளாகிச் சிறையில் 
    தனிமையில் தள்ளப்பட்டார்.

    பயந்த நிலையில் 
    வாழ வழியின்றி 
    அவரது பத்தினியும் புத்திரனும் 
    நாட்டைவிட்டே
    தம்மை 
    நாடுகடத்திக் கொண்டனர்.

    தேச சஞ்சாரத்தில் 
    மிகவும் பிடித்த திருவெண்காடு வந்தார் பட்டினத்தார்.

    சேந்தனார் மனைவியும் மகனும் 
    பட்டினத்தார் 
    வருகையை அறிந்து 
    வந்து வழிபட்டனர்.

    நடந்த கதையைக் கண்ணீருடன் சொல்லினர்.

    அவர்தம் துயர் நீக்க
    யாரிடம் செல்வார் பட்டினத்தார் ?

    வேறு யாரிடம் சொல்வார் பட்டினத்தார்.

    நெஞ்சினிலிருக்கும் நஞ்சுண்ட மூர்த்தியை சிந்தையில் துதித்தார்.

    தும்பிக்கையோனுக்கு அக்கணமே தந்தை 
    தந்தி கொடுத்தார்.

    பிள்ளையார்
    தும்பிக்கை நீட்டி சிறையிலிருந்த 
    சேந்தனாரை விடுவித்தார்.

    தும்பிக்கையோனுக்குநன்றி சொன்னார் பட்டினத்தார்.

    நம்பிக்கையோடு பட்டினத்தாரின் 
    பாதம் பணிந்தது 
    சேந்தனார் குடும்பம்.

    "சேந்தனாரே….
    சோர்வடைந்து விடாதீர் … பரமன் 
    அருள் தருவான்.

    இனித் தொல்லை 
    உமக்கு இருக்காது. எப்போதும் 
    பிள்ளையாரின் பார்வை உமக்கிருக்கும்.

    தில்லை சென்று 
    வாழ்க்கை நடத்து…

    தினந்தோறும் 
    சிவனடியார் ஒருவருக்கு பசியாற்று…

    பரமன் வருவார்…
    பாதம் தருவார்.

    நல்லதே நடக்கும்"

    சேந்தனார் குடும்பம் 
    தில்லை சென்றது.
     
    ஆலயப்பணி 
    அடியார் பணி 
    விறகு வணிகம் 
    குறையின்றித் தொடர்ந்தது.

    பட்டினத்தார் 
    கூறிய மாதிரி 
    பரமன் வருவார் 
    எனக் காத்திருந்தார்.

    ஒரு நாள் 
    முதியவர் ஒருவர் 
    வந்தார்.

    அவருக்கு களி தந்தது சேந்தனார் குடும்பம்.

    களிப்புடன் உண்டார். கொஞ்சம் 
    மேலாடை விரித்து 
    கட்டியும் கொண்டார். 

    களியமுதைத் 
    தன்முன் அப்போது வந்தவர்கெல்லாம் 
    தந்து மகிழ்ந்தார். 

    பின் 
    சேந்தனார் கண்முன்னே விண்ணில் மறைந்தார்.

    வந்தவர் 
    எல்லாம் வல்ல 
    இறையனார் அன்றி
    வேறு எவர் !

    சேந்தனார் 
    பெருமையை 
    உலகறியச் செய்து 
    பின்னொரு நாளில் ஆட்கொண்டார். அருள்புரிந்தார்.

    முக்தி பெற்றது 
    சேந்தனார் குடும்பம்.
    அதற்கு 
    நல்வழி காட்டிய 
    கருணை வள்ளல் பட்டினத்தாரைத் துதித்தபடியே.

    ஞானப் பாதை காட்டிய  பத்திரகிரியாரையும் தில்லைக்கு வழிகாட்டிய 
    சேந்தனாரையும் 
    தனக்கு முன்னரே 
    இறைவன் ஆட்கொண்டது பட்டினத்தாரின் மனத்தில் சோர்வை உண்டுபண்ணியது.

    'எனக்கு எந்நாளோ…'
    என 
    இறைவனைத் 
    தில்லைநாதனையே
    நச்சரிக்க ஆரம்பித்தார் பட்டினத்தார்.

    பரமனே ஒரு நாள்
    கனவில் தோன்றி 
    "அன்பரே…
    பேய்க்கரும்பு 
    தித்திக்கும் ஓரிடத்தில்… 
    அதுவே உன் 
    முக்கிய தலம்…"
    என சொல்லி மறைந்தார்.

    தில்லைக்குப் போனார் பட்டினத்தார்.

    அவருக்கு அடுத்த நிலை அங்கு காத்திருந்தது,

    பேச்சில்லை… உணவில்லை சிந்தை முழுக்க சிவனடி… என்றிருந்த 
    பட்டினத்தாருக்கு மனக்கவலை கூடியது.

    ஒரு நாள் 
    தில்லையம்பதியைத் தரிசித்துவிட்டு 
    கோயில் தூண் மேலே சாய்ந்திருந்தார். ஓய்ந்திருந்தார்.

    அப்போது அவருக்கு 
    லேசாய் பசித்தது.
    அப்படிப் பசித்து 
    வெகுகாலம் இருக்கும்.

    உச்சிகால பூஜை அப்போதுதான் முடிந்திருந்தது.

    ஒரு பெண் 
    பட்டினத்தார் 
    அருகில் வந்தாள். 

    கையில் 
    கோயில் பிரசாதம்.
    பசியிலிருந்த பட்டினத்தாருக்குத் தந்தாள்.

    அவளது 
    நடை உடை பாவனை பட்டினத்தாருக்கு
    வித்தியாசமாய் பட்டது.

    அத்தாயின் முகம் 
    பார்க்க நினைத்து 
    தலை உயர்த்திய போது உணவைத் தந்து விட்டுத் 
    திரும்பத் தயார் ஆனாள்.

    சிறிது நடை போட்டாள். திடுமென 
    மறைந்து போனாள்.

    மறைந்த திசையில் 
    மனத்தைப் பதித்தார் பட்டினத்தார்.

    உமையவள் 
    சிவகாம சுந்தரி தான் 
    பெண் வடிவில் வந்து 
    அமுது படைத்தவர் என்று புரிந்து போனது.

    " ஐயையோ… 
    அன்னை வந்தும் 
    கவனியாது இருந்து விட்டேனே!
    உணரத் தவறி விட்டேனே !!
    பாவி..பாவி நான்…"
    என 
    மனதிற்குள்ளேயே 
    புலம்ப ஆரம்பித்தார்.

    அடுத்து சென்றது 
    காஞ்சிபுரம்.

    அங்கு அவருக்கு 
    அன்னமிட்டது
    காமாட்சி அன்னை.

    இம்முறை ஏமாறவில்லை. இறைவியைத் துதித்து மகிழ்ந்தார்.
    சித்தி பெற 
    சத்தியம் வாங்கினார்.

    கஞ்சித் திருவந்தாதி திருவேகம்பமாலை
    கஞ்சித் திருவகவல் முதலிய பொக்கிஷங்களைக் காஞ்சியில் அருளினார்.

    தலயாத்திரை தொடர்ந்தது. தவயாத்திரை 
    நிறைந்து வந்தது. 

    தேடுவதை நெருங்கிக் கொண்டிருப்பதாய் 
    மனத்தில் பட்டது.

    திருகாளஹஸ்தி 
    செல்ல விரும்பி 
    பயணம் தொடங்கினார்.

    காட்டு வழிப் பயணம்.
    கண்ணப்ப நாயனார் வாழ்ந்திருந்த காடு.

    காடு வாழ் 
    மிருகங்கள் எல்லாம் 
    அவருக்குப் பணி செய்தன.

    பாம்புகள் 
    மணிவிளக்கு ஏந்தின. யானைகள் பாதையைச் சீர்படுத்தின.
    புலிகள் 
    பட்டினத்தாரின் 
    திருவடி பதியும் பகுதியை வாலால் சுத்தப்படுத்தின. பறவை இனங்கள் 
    மேலே பறந்து 
    நிழல் தந்தன.

    வியந்தபடி 
    காளகஸ்தி ஈஸ்வரனைத் துதித்தபடி 
    'என்ன செயல்….
    என்ன செயல்….'
    என மனத்தில் பாடியபடி 
    காடு வழி நடந்து 
    காளகஸ்தி நாதரை 
    வணங்கித் துதித்து மகிழ்ந்தார்.

    அடுத்து 
    திருவொற்றியூர்.
    மனம் 
    ஒன்றிப் போனது ஒற்றியூர் நாயகனிடம்.

    ஒற்றியூர் தெருவெல்லாம் மெல்ல நடந்து 
    பூரித்துப் போனார்.

    ஞானப் பாடல்கள் 
    பாடி மகிழ்ந்தார்.

    'பிறவிப்பிணி தீர்வதற்கு திருவொற்றியூரே 
    அருள்மருந்து'
    என்றிருந்தார்.

    பல சித்துக்கள் புரிந்தார். 
    பார்த்தவர் பாதம் ஒற்றினர். 
    கேட்டவர் வியந்து ஒன்றினர்.

    திருவொற்றியூரில் தோழர்கள்  பெருகினர்.

    ஆம்….
    வழக்கம்போல் 
    சின்னஞ் சிறுவர்கள் தான் 
    பட்டினத்தாரின் 
    பிஞ்சுத் தோழர்கள்.

    பசு மேய்க்கும் சிறுவர்களுக்குப்
    பட்டினத்தார் மீது 
    கரிசனம் நிறைய. 

    'தாத்தா 'என்று 
    அழைப்பார்கள்
    சில குட்டிப் பையன்கள்.
    'சாமி 'என்று 
    கூப்பிடுவார்கள் 
    மீதமுள்ளோர்.

    மணலைச் சர்க்கரையாக்கி அவர்களுக்குத் தருவார்.

    அவர்களை அழைத்து 
    குழி பறிக்க சொல்வார். 
    குழியில் அமர்ந்து 
    மண் போட்டு 
    குழியை
    மூடச் சொல்வார்.

    அவர்கள் 
    மறு பேச்சின்றி 
    அப்படியே செய்வார்கள்.

    முழுதாய் மூடிய பின்னர்
    திரும்பிப் பார்த்தால் 
    மணல் குன்றின்மேல் நின்றபடி 
    கைதட்டி அழைப்பார்.
    கண்மூடிச் சிரிப்பார்.

    இப்படி பலமுறை 
    மாயம் காட்டினார். சிறுவர்களின் 
    அன்பில் திளைத்தார். 

    அன்று 
    அப்படித்தான்…

    சிறுவர் படையோடு 
    சித்தாடல் காட்ட 
    ஓரிடம் சென்றார்.

    கரும்பு விளைந்த 
    கழனி சில 
    இடையில் வந்தன.

    போகிற போக்கில் 
    கரும்பு ஒன்றை 
    ஒடித்தார் பட்டினத்தார்.

    "இது பேய்க் கரும்பு… கசக்கும் …
    வேண்டாம் தாத்தா … வேண்டவே வேண்டாம்"
    சிறுவர்கள் தடுத்தனர்.

    கரும்பை உடைத்து சுவைத்தார் …. இனித்தது.

    உள்ளத்தில் உற்சாகம் உடம்பெல்லாம் பரவியது.

    சிறுவர்களுக்கும் தந்தார். 
    அவர்கள் பயந்தபடி அடிக்கரும்பைச் சுவைத்தனர்.  

    "தாத்தா தித்திக்குது…"
    ஆச்சரியத்தோடு
    கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

    அடுத்து கடற்கரை 
    வந்தார்கள்.

    மண்குழி 
    விளையாட்டு ஆரம்பமானது .

    சிறுவர்கள் சூழ்ந்திருக்க சிறுவர்கள் பறித்த குழியில் பட்டினத்தார் அமர்ந்தார்.

    என்றும் போல 
    'ஏய்..ஹேய்… ஓய் '
    என்று கத்தியவாறு சிறுவர்கள் 
    மண் அள்ளிக் 
    குழியை நிரப்பி மூடினர்.

    வழக்கம் போல்
    திரும்பினர்.
    பார்த்தனர்.
    மணற்குன்றில்
    பட்டினத்தாரைக் காணவில்லை.

    தேடினர்.
    சுற்றுமுற்றும் 
    ஓடித் தேடினர். பட்டினத்தார் எங்கும் புலப்படவில்லை. வெளிப்படவில்லை.

    " தாத்தா "
    என அவர்கள் கதறியது ஊருக்குள் கேட்டது.

    பெரியவர்கள்  
    ஓடி வந்தார்கள்.

    கலங்கியபடி சிறுவர்கள் காத்திருக்க 
    மூடிய குழியை 
    மீண்டும் பறித்தனர்.

    அங்கேயும் 
    பட்டினத்தடிகள் இல்லை. 
    அவரது உடல் இல்லை. பதிலாக….
    சிவலிங்கம் ஒன்று ஒளிபெருக்கிக் கொண்டிருந்தது.

    பெரியவர்களுக்குப் புரிந்தது. சிறுவர்களுக்குச் சொன்னார்கள். 

    "சுவாமி சிவன் 
    என்று இருந்தார் 
    இன்று சிவம் ஆகிவிட்டார்"

    ஊர்மக்கள் 
    சிவனடியார்கள் 
    'ஹர…ஹர…'
    என ஓங்கி ஒலித்தனர்.

    "இனி 
    தாத்தா வரமாட்டாரா ?"
    மணல் தள்ளி விளையாடிய 
    சிறு குழந்தை 
    கவலையாய் கேட்டது.

    " இல்லை…
     அவர் சாமி ஆகிவிட்டார்.
     நம் கண்களுக்குத் தெரியமாட்டார் …"

    அப்பாக்காரர் 
    தப்பாகச் சொன்னார்.

    பட்டினத்தடிகளை
    இன்றும் எவரும் 
    பார்க்கலாம்.

    அருவுருவாய் இருக்கும் அவர் 
    அதற்கு மனம் 
    வைக்க வேண்டும்.

    கால நேரம் கருதாமல் 
    சிவ சிந்தையில் இருந்தபடி 
    நிதம் 
    அன்னதானம் செய்தபடி 
    வாழ்வாங்கு வாழ்வோருக்கு 
    காட்சி தருவார்.

    மாயமான –
    லயமான இடத்தில் தரிசிப்போருக்கு 
    மகிழ்ச்சி மயமான 
    வாழ்க்கை கிட்டும்.

    (பட்டினத்தார் கதை முடிவுற்றது)

  • சீமானாய் இருந்த சித்தரும்…  கோமானாய் இருந்த சித்தரும்.

    – "மாரி மைந்தன்" சிவராமன்

     

    பட்டினத்தார் கதை – பாகம் 5

    பாண்டிய நாட்டில் 
    மதுரை 
    கொங்குநாட்டில் 
    பேரையூர்,
    அவிநாசி,
    திருமுருகன்பூண்டி 
    என பட்டினத்தாரின் 
    தேச சஞ்சாரம் தொடர்ந்தது.

    ஏதோ ஓர் ஊர்.
    பட்டினத்தார் பயணத்தில் இடையில் அவ்வூர்.

    ஒரு வீட்டின் முன் நின்றார்.

    மௌனமே 
    மொழியாய் போனதால் 
    வீட்டில் இருந்தவரைக் கைதட்டி அழைத்தார்.

    'பிச்சை '
    என சைகை காட்டினார்.

    வீட்டில் இருந்தவன் 
    கோணல் புத்திக்காரன்.

    'என்ன திமிர்….
    கைதட்டி அழைக்கிறான் '
    என 
    ஒரு கோலோடு வந்தான்.

    பட்டினத்தாரைச்
    சாத்து சாத்து 
    என்று கம்பால் 
    பின்னி எடுத்தான்.

    ஒரு துளி சத்தம் இல்லை. அப்படியே நின்றிருந்தார் அருளாளர்.

    பக்கத்து வீட்டுக்காரன் 
    ஓடி வந்தான். 
    அடித்தவனைத் தடுத்து,
    "இவர் 
    சிவனடியார் போல் இருக்கிறார்…. அடிக்காதே… பாவம் சேர்க்காதே…"

    கோபித்தான்.
    கோல்பறித்துத் 
    தூக்கி எறிந்தான்.

    உடம்பில் 
    பட்டை பட்டையாய் 
    தடியடிப் பதிவுகள்.

    அடுத்த அடி நகர்ந்தார் பட்டினத்தார் 
    ஏதும் நிகழாதது போல்.

    அவர் சிந்தையில் 
    ஒரு ஜோதி எழுந்தது.
    அது சொன்னது…

    'ஒரு சாண் வயிற்றுக்காக இந்த பாடு….
    இத்தனை அடிகள்….

    கேள்வி கேட்ட 
    அகச்சுடரே பதிலும் 
    தந்தது…

    'இனி உணவுக்காக
    கையேந்த வேண்டாம்… தேடிவரும் 
    உணவை மட்டும் 
    எடுத்துக் கொள்ளலாம்'

    மௌன சாமிக்கு 
    உணவு குறித்தும் 
    தெளிவைத் தந்தது 
    இறை உணர்வே.

    திருகோகர்ணம் சென்றார் அங்கு சில நாட்கள்.

    பின் 
    உஞ்சேனை மாகாளம் 
    எனும் ஊரை அடைந்தார்.

    அவ்வூர் தான் 
    இன்றைய உஜ்ஜயினி.

    அவ்வூர் 
    ஒரு புதிய பாடத்தை 
    ஒரு புதிய சீடரை 
    ஒரு புதிய சித்தரை 
    உலகுக்கு அளித்தது.

    உஜ்ஜயினியில் மகாகாலேஸ்வரர் 
    என்ற பெயரில் 
    இறைவன் அருளாட்சி 
    புரிந்து கொண்டிருந்தார்.

    பட்டினத்தார் 
    பட்டினத்தில் தங்காமல் ஊரின் ஒதுக்குப்புறத்தில் 
    ஒரு விநாயகர் கோயிலில் தங்கியிருந்தார்.

    ஒரு கள்வர் கூட்டம் விநாயகருடன் 
    ஒரு கள்ளக் கூட்டணி அமைத்து இருந்தது.

    திருடுவது,
    அதில் ஒரு பகுதியை விநாயகருக்குத் தந்து விடுவது என்பது 
    கள்வர்கள் போட்டிருந்த ஒப்பந்தம்.

    இந்த 
    ஒரு தலை திருட்டில் விநாயகர் 
    ஒரு நற்செயலுக்காக காத்திருந்தார். 

    அன்று அரண்மனையில் பழுத்த வேட்டை.

    திருடிய கள்வர்கள் 
    விநாயகர் கோயிலில் 
    பங்குப் பிரித்தனர்.

    ஏதோ சலசலவென்று 
    சத்தம் கேட்க 
    காவலர்கள் துரத்தி வருவதாக நினைத்த 
    கள்வர் கூட்டம் 
    விலை உயர்ந்த பதக்கம் ஒன்றை 
    பிள்ளையார் பங்காக 
    அவர் இருந்த திசையில் 
    வீசி எறிந்து விட்டுத்
    தப்பித்து ஓடினர்.

    அந்த பதக்கம் இருட்டில் அமர்ந்த நிலையில் 
    தவத்தில் இருந்த 
    தவமணியாம் பட்டினத்தார் கழுத்தில் விழுந்து 
    ஜெகஜோதியாய் ஜொலித்தது.

    விரட்டி வந்த காவலாளிகள் அரண்மனை நகையோடு கண்மூடி அமர்ந்து இருந்த பட்டினத்தாரைப் பிடித்தனர்.

    மெளனம் 
    சலனமற்ற முகம் 
    எதையும் தடுக்காத 
    ஏகாந்த நிலை.

    அடித்தார்கள்.
    உதைத்தார்கள்.
    அரசன் முன் 
    நிறுத்தினார்கள்.

    'திருடன் '
     என்றான் ஒருவன்.

    'திருடர்கள் தலைவன் ' என்றான் இன்னொருவன்.

    'ஏதோ உளறுகிறார்…
    உற்றுக் கேட்டால் 
    சிவசிவ 
    என்கிறது உதடு.'

    'சிவனடியாராய் இருப்பார் போலிருக்கிறது….'
    ஒரு காவலன் பயந்தான்.

    'நம் கடமை கயவனைப் பிடிப்பது….
    தீர்ப்பளிப்பது நம் அரசர்'

    மூத்த காவலன் 
    கையும் களவுமாக பட்டினத்தாரைப் பிடித்ததாகப் பதக்கத்தை காட்டினான்
    அரசவையில். 

    அரசன் சினந்தான். ..!' ஆணையிட்டான்.

    புன்முறுவல் ஒன்றே பட்டினத்தாரிடம் வெளிப்பட்டது.
    அது அரசனை 
    மேலும் வெறியூட்டியது.

    அடுத்த கணங்களில் 
    கழுமரம் முன்
    பட்டினத்தார் 
    நிறுத்தப்பட்டார்.

    கனிவோடு மரத்தைக் கண்ணுற்றார் காவிரிப்பூம்பட்டினத்துச்
    சாமியார்.

    மெலிதாக அவர் 
    மனது பாடியது 
    தத்துவ பாடல் ஒன்றை…

    'முன்செய்த 
    தீவினையோ 
    இங்ஙனே வந்து 
    மூண்டதுவே…'

    பாடும் போதே 
    கழுமரம் 
    தீப்பற்றி எரிந்தது.

    பயந்து போயினர் 
    காவலர்கள். 
    செய்தி போனது 
    மன்னனுக்கு. 

    ஓடோடி வந்தான். தவறிழைத்தமைக்காக 
    தாள் பணிந்தான்.

    "தப்பான தீர்ப்பளித்து 
    தவறிழைத்தேன்…. மன்னியுங்கள்…"

    மனமொடிந்து 
    கால் பிடித்தான்.

    அது போது 
    ஒரு பாடல்.
    அது அரசனுக்கு 
    கேட்டது,.. புரிந்தது.. தெளிந்தது சித்தம்.

    அக்கணமே 
    அரச உடைகளை 
    கம்பீர அணிகலன்களை உதறினான் அரசன்.

    "சுவாமி…
    என்னை 
    உங்கள் சீடனாக்கி 
    அருள் புரியுங்கள்…"

    "வா… என்னோடு.."

    பட்டினத்தாரின் 
    மௌன பாஷை
    புதிய சீடனுக்குப்
    புரிந்தது.

    திரும்பிப் பார்க்காமல் பட்டினத்தார் பின்தொடர்ந்தான் அரசன்.

    பட்டினத்தார் 
    உபதேசம் செய்தார். சிவயோக அனுபவம் போதித்தார்.

    பெற்ற மன்னன் 
    பெரும் பேறு பெற்றான்.
    அவனும் பின்னாளில் 
    சித்தரானான்.

    அவன்…..
    இல்லை…. இல்லை…
    அவர்… பத்ரகிரியார்.

    பட்டினத்தாரின் 
    பாதம் பற்றி
    சிவனடி ஒற்றிய 
    சீரிய சித்தர்.

    குருநாதர் 
    பட்டினத்தாருக்கு 
    முன்னரே
    பரமனடியில் 
    ஐக்கியமான 
    புண்ணிய சித்தர்.

  • செத்தவனைப் பிழைக்க வைத்த சித்தர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பட்டினத்தார் கதை – பாகம் 4

    'காதற்ற ஊசியும் 
    வாராது 
    காண் கடைவழிக்கே'
    என்று
    மருதவாணர் ஓலையில் 
    உணர்த்தியிருந்த வாக்கை 
    தன்வாழ்வின்
    இலக்கணமாக்க
    பட்டினத்தார் 
    முடிவெடுத்தார்.

    மகனாய்
    மருதவாணராய் 
    வந்து வாய்த்து
    16 ஆண்டுகள் 
    சொர்க்கம் தந்த 
    இறைவன் திருவிடைமருதூரில் இறையானார்
    என்ற தகவலை 
    அக்கணம்
    பட்டினத்தார் 
    உணர்ந்தார்.
    மெய்சிலிர்த்தார்.

    என்னே….
    இறை பாக்கியம் பட்டினத்தாருக்கு ?!

    பட்டினத்தார் 
    ஞானப் பாடல்களில் காணப்படும் 
    'காதற்ற ஊசி'
    என்னும்
    ஞான வார்த்தைகளை
    எடுத்து தந்தவர் 
    மருதவாணராய் வந்த இறையனார் 
    சிவபெருமான் அல்லவா !

    சேக்கிழார் பெருமானுக்கு 'உலகமெலாம் '
    என்ற வார்த்தையை 
    முன்னெடுத்து தந்தவர்…

    சுந்தரருக்கு 'பித்தா '
    என்ற சொல்லை
    எடுத்தாளச் சொன்னவர்…

    பட்டினத்தாருக்கு 
    'காதற்ற ஊசியை' காலமெல்லாம் 
    வாழ்வியல் தத்துவமாக
    நிலைக்கத் தந்திருக்கிறார்.

    ஏற்கனவே
    பார்வை
    ஸ்பரிசம்
    பாவனா 
    உபதேசம் 
    போன்ற தீட்சைகளைப் பெற்றிருந்த 
    பட்டினத்தாருக்கு 
    இப்போது ஒரு
    புதிய தீட்சை.

    ஞான தீட்சை.

    'காதற்ற ஊசி….'

    கற்பூர மலையில்
    சிறு தீப்பொறி
    சட்டெனப் பற்றியது 

    எல்லாமே 
    புரிய ஆரம்பித்தது.

    மருதவாணர் 
    சொல்லாமல் சொன்ன சிவரகசியம் புரிந்தது.

    சட்டென எழுந்தார்.

    ஆடைகளையும் ஆபரணங்களையும் அப்போதே களைந்தார்.

    கோவணத்துடன் 
    வாசல் நோக்கினார்.

    மனைவி அதிர்ந்தாள்.
    தாயோ தவித்தாள்.

    "தம்பி…
    வாழ்வின் 
    கடைசி கட்டத்தில் 
    நிற்கிறேன்.
    எனக்கு 
    ஈமச்சடங்கு 
    செய்த பின் 
    துறவு மேற்கொள்ளேன்"

    கண்ணீர் மல்க 
    தாய் கேட்டாள். 

    ஏற்கவும் இல்லை.
    மறுக்கவும் இல்லை. அமைதியா இருந்தார்.

    அன்னையின் 
    மரணம் வரை 
    காத்திருந்து 
    ஈமச்சடங்கு 
    முடித்த கையோடு 
    தேச சஞ்சாரம் 
    என முடிவெடுத்தார்.

    வீட்டைவிட்டு 
    வெளியேறும் தருணம் மனைவி சிவகலை
    காலைப் பிடித்தாள்
    கண்ணீர் மல்க.

    'என் கதி….?'

    "கவலைப்படாதே…
    சிவபக்தி 
    அடியார் தொண்டு
    இரண்டுமே 
    உனக்குப் போதும்.
    சிவகதி அடைவாய்.

    என் பின்னால் வராதே.
    சிவன் முன்னால் தொழு.
    தொழுதபடி வாழ்…."
    தத்துவம் சொன்னார்.

    கணவனே கதியென 
    வாழ்ந்த கற்புடை நல்லாள் கணவன் பேச்சை மீறாது கண்ணீர் துடைத்தாள்.

    அடுத்து வீசினார் அணுகுண்டு ஒன்றை.

    "இந்த சொத்துக்களை ஊர்மக்கள் 
    விரும்பிய வரை 
    எடுத்துச் செல்லலாம்…"

    உத்தரவிட்டார் 
    கணக்காயர் சேந்தனாரிடம்.

    அடுத்து அவர் 
    பாதம்பட்ட இடம் 
    ஊர் எல்லையில் ஒதுங்கியிருந்த 
    ஒரு பொதுச்சத்திரம்.

    எது கேட்டாலும் 
    தத்துவமாய் 
    பாடலாய் 
    பதிலாய் வந்தது.

    'ஏராளமான சொத்து.. கணக்கிட முடியாத பொக்கிஷம்…
    பட்டினத்தார் 
    மக்களைச்
    சூறையாடச்
    சொல்லிவிட்டார்.' 

    புகாராய்
    மன்னரிடம் 
    சேதி போனது.

    விரைந்து வந்து சொத்துக்களைக் 
    கைப்பற்றி 
    உரிமையான உறவினர்களுக்குத் 
    தந்தது போக 
    மீதியைக் கஜானாவில் சேர்த்தார் மன்னர்.

    "இதை முழுதும் 
    அறப்பணிகளுக்குச் செலவிடுங்கள்" ஆணையிட்டார்.

    சொத்து மதிப்பீடு 
    அறிய சேந்தனாரை 
    மிரட்டிப் பார்த்தார் 
    மன்னர்.

    சேந்தனாருக்கே 
    கணக்குத் 
    தெரியவில்லை.
    அத்தனை சொத்து…!

    சேந்தனாரை
    சிறை செய்தார்.
    பலனேதும் இல்லை.

    'பட்டினத்தாரையே பார்த்துவிடலாம் '
    மன்னர் சத்திரம் வந்தார்.

    "பட்டினத்தாரே…
    வணிக குலத் தலைவரே ! செல்வமெல்லாம் 
    துச்சமெனக் கருதி
    தூக்கி எறிந்துவிட்டு 
    இப்படி பரதேசி போல் உட்கார்ந்திருக்கிறீர்களே …"

    நெஞ்சுருகிக் கேட்டார்.

    ஒருகணம் மன்னரை 
    உற்றுப் பார்த்த 
    பட்டினத்தார் 
    "மன்னா…..
    நாடாளும் நீ
    நிற்கிறாய்….
    நான் உட்கார்ந்திருக்கிறேன் இதுவே என் நிலையின் விசேஷம்…."

    விஷமமாய் சொல்லவில்லை. விஷயமாய் இருந்தது
    உண்மையாய் இருந்தது பட்டினத்தார் பதில்.

    அவர் தத்துவம் 
    மன்னருக்குப் புரிந்தது.

    வணங்கியபடி 
    விடைபெற்றார்.

    ஊர் முழுக்க
    பட்டினத்தார் பற்றியே பரபரப்பான பேச்சு.

    ஏளனம் 
    எகத்தாளம் 
    கேலி கிண்டல் என
    எள்ளலும் 
    வரைமுறையற்று வார்த்தைகளாய்
    வலம் வந்தன.

    பட்டினத்தாரின் 
    சகோதரிக்கு தாங்க முடியவில்லை.

    'குடும்பத்திற்கு அவப்பெயர்… வெளியே தலைகாட்ட முடியவில்லை…"

    குடும்ப கௌரவம் 
    கும்மி அடித்தது.

    "ஒருமுறை 
    வீட்டுப் பக்கம் வா… 
    வீடு பேறு காணவிருக்கும் 
    நீ எங்களை வாழ்த்து …" பாசவலை விரித்தாள்.

    பட்டினத்தார் 
    ஒருநாள் அக்காள்
    வீட்டிற்கு வந்தார்.

    வீட்டினுள் செல்லாது வாசலில் நின்றார். வீட்டாருக்கு ஆசி தந்தார்.

    தத்துவ மழை 
    பொழிந்தார்.

    பின் வழக்கம்போல் 
    பிச்சை கேட்டார்.

    "தமக்கையிடம் 
    பிச்சை எடுத்து சாப்பிடுகிறாயா.."
    கண்களை விரித்தபடி அப்பங்களைத் தந்தாள்
    அலட்சியமாக.

    அப்பத்தை வாங்கியவர் அப்பத்தில் இருக்கும் அநியாயம் உணந்தார். 

    பின் உணவு 
    எடுப்பதாகச் சொல்லி அக்காவிடம் விடைபெற்றார்.

    "இன்றோடு ஒழியட்டும்… இவன் கதை….
    குடும்ப மானமே பெரிது….
    இவன் உயிரை விட "
    என இனிப்பு அப்பத்தில் விஷம் கலந்திருந்தாள் வினயமான சகோதரி.

    கையிலிருந்த அப்பத்தைச் சகோதரி வீட்டின் 
    ஓட்டில் செருகி 
    'தன்வினை தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும்…'
    என தத்துவம் சொன்னார்.

    என்னே அதிசயம்..!!
    வீடு தீப்பிடித்தது.

    பின் ஊரார் 
    கால் பிடிக்க 
    தீயணைக்க 
    பட்டினத்தாரே 
    கருணை காட்டினார்.

    உறவே 
    விஷம் வைக்க 
    முயற்சித்தது 
    ஊர் பேச்சானது.

    பட்டினத்தாரின்
    அடுத்த கட்டம் 
    தொடங்கியது.

    சிவனடியார்களே 
    சுற்றத்தார்..
    எல்லா உயிர்களும் குழந்தைகள்…
    அறியாமையே பகை.
    அன்பே சிவம்.
    அருளே சிவம். 

    குழந்தைகள் அவரின் தோழர்கள் ஆயினர். அவர்களோடு விளையாடுவது 
    குப்பைக் கூளங்கள்
    பாராமல் கட்டிப்  புரள்வது 
    கும்மாளம் அடிப்பது வழக்கமாயிற்று. 

    ஒரு நாள்
    திருவெண்காடு சென்று ஆலயத்தில் தியானத்தில் இருந்தபோது தான் 
    தாயாரின் மரணம் நடந்தது.

    தாயாருக்குக் கொடுத்திருந்த வாக்கை மெய்ப்பிப்பதற்காக மெய் தந்த தாயை 
    தேடி வந்தார்.

    வாழை மட்டையில் 
    தாயின் சடலத்தை வைத்து தாயை நினைத்து கொந்தளித்துப் பாடியது 
    தீயாகி 
    வாழைமட்டையோடு தாயையும் சேர்த்து
    எரித்து சாம்பலாக்கியது.

    தாயின் மரணம் பட்டினத்தாருக்கு 
    விடுதலை தந்தது.

    தமிழுக்கு 
    வாழ்வியல் உண்மையை 
    வாழ்வின் நிலையாமையை வடித்து இயம்பும் பாடல்களைத் தந்தது.

    ஒரு நாள் 
    திருவிடைமருதூர் 
    கோயில் வாசலில் இருக்கும் 
    ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருந்தார் பட்டினத்தார்.

    சமீப காலத்து வசிப்பிடம் அதுதான்.

    நிஷ்டையிலிருந்த
    பட்டினத்தாரை 
    'பட்… பட் 'என்று ஒரு சப்தம் எழுப்பியது.

    கண் விழித்தவர் 
    கண்ணில்பட்டது ஒரு கோல்,

    அது தட்டிய சத்தமே பட்.. பட்.

    கோலுக்குரியவரை 
    தலை உயர்த்திப் 
    பார்த்தார் பட்டினத்தார்.

    அவர் அரசன் 
    போல் இருந்தார்.

    அத்தனை கம்பீரம்.
    குரலே தனி மிடுக்கு

    அரசன் தான்..
    அரசனே தான்…

    "யார் நீ…?"
    அரசன் கேட்டான்.

    "நானா…..? 
    நான் என்பது 
    என் உடம்பா
    தோலா, நரம்பா 
    சதையா, ரோமமா 
    எலும்பா, ரத்தமா 
    மூளையா. மூச்சா
    மனமா….."

    பட்டினத்தார் 
    பதில் 
    நீண்டு கொண்டிருக்க 
    மன்னர் 
    திடுமென 
    மறைந்து போனார்.

    அட …
    வந்தது மன்னனல்ல…
    மருதூர் ஈசன்.

    'தெய்வமே 
    நேரில் வந்து பேசியும் அறிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்து விட்டேனே…'
    கண்களில் நீர் வர 
    மருதூர் ஈசன் 
    நின்ற இடம் சாய்ந்தார். ஒற்றினார்.
    மண்ணை எடுத்து 
    நெற்றியில் ஒற்றினார்.

    அப்படியே திண்ணையில் சாய்ந்தார்.

    தவத்தின்போது 
    மன்னன் கோலத்திலேயே மகேசன் வந்தார்.

    "இனி 
    நான் இருக்கும் கோயில்களை 
    நாடி… பாடு" 
    ஆணையிட்டார்
    இறைவன்.

    இது அடுத்த கட்டம்.

    பட்டினத்தாரின் 
    தேச சஞ்சாரம் 
    இப்படி 
    தெய்வ வழிகாட்டலில் துவங்கியது.

    முதலில் சென்றது 
    திருவாரூர்.

    அங்கு அவர் 
    நிகழ்த்திய அற்புதம்
    அதிசயம்..

    திருவாரூரே 
    திருவடி தொழுத 
    பேரதிசயம்.

    பட்டினத்தார் 
    சிலகாலம் 
    திருவாரூரில்
    தங்கியிருந்தார். 

    ஒரு சிறுவன்…
    அவனுக்கு 
    பட்டினத்தாரைப் 
    பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போனது.

    அவனது பணிவிடை பட்டினத்தாருக்குப் பிடித்திருந்தது.

    இரவும் பகலும் 
    அவரது 
    நிழலாய் இருந்தான். அருந்தவப் பயன் 
    என மகிழ்ந்தான்.

    ஒருநாள் 
    அவனது தாயும்
    அத்தையும் 
    பட்டினத்தார் 
    பாதம் வணங்கினர்.

    "சுவாமி…
    உங்களிடம் இருப்பவன் 
    என் மகன்தான்…
    இவள் அவன் அத்தை.

    இவளுக்கு ஓர்
    அழகிய மகள்.

    இருவருக்கும் 
    திருமணம் 
    செய்துவிட்டால் 
    எங்கள் இருவருக்கும் 
    கடமை முடியும்.
    நிம்மதி கிட்டும்.

    ஆனால் என் மகனோ உங்களிடம் 
    ஒட்டிக் கொண்டான். உங்களுடனேயே 
    போகப் போவதாக  சொல்கிறான்.

    எங்கள் குடும்பம் 
    தழைக்க 
    வழி செய்யுங்கள் 
    சுவாமி…."

    அம்மா புலம்பினாள்.
    அத்தை 
    கண்ணீர் சிந்தினாள்.

    பட்டினத்தார் 
    பையனை அழைத்தார்.

    "திருமணம் செய்து கொள்… திருவருள் கிட்டும்.
    அம்மா அத்தை 
    அத்தை மகள் 
    மனம் குளிரும் 
    உன் மணம் சிறக்கும்…"

    "இல்லை…. சாமி உங்களுடனேயே 
    இருந்து விடுகிறேன்.. உங்களுடனேயே வந்துவிடுகிறேன்… உங்களுக்குப் 
    பணி செய்வது 
    என் குலம் செய்த 
    பாக்கியம்"

    ஏதேதோ
    தர்க்கம் செய்தான்.

    பட்டினத்தார் 
    உறுதியாய் சொன்னார் 
    "என் பேச்சைக் கேள்…
     மீறாதே…!"

    அரை மனதோடு சம்மதித்தான்.

    " நீங்கள் வந்து 
     ஆசீர்வதிக்க வேண்டும்" நிபந்தனை விதித்தான்.

    ' கண்டிப்பாய் ' கண்ணசைத்தார் பட்டினத்தார்.

    திருமணம் நடந்தது. திருமனம் கொண்ட 
    அருள் மயமானவர் அருகிருந்து வாழ்த்தினார்.

    இறை பசி நிறைந்து 
    இரை பசி குறைந்து சர்வகாலமும் 
    இறைவனைச் 
    சிந்தித்தவராய் இருந்த பட்டினத்தார் 
    அடுத்து மதுரை 
    செல்லத் திட்டமிட்டார்.

    புறப்படும் நேரம் 
    ஒரு பூகம்பத்
    தகவல் வந்தது.

    புதிய மணமகன் 
    அவரது மனமகன்
    மரணத்திருந்தான்.

    சடலத்தைப் பார்க்க 
    வீட்டில் நுழைந்து போது 
    பெரிசொன்று சொன்னது..

    "மோகம் முப்பது நாள்
    என்று சொல்வாங்க…
    இவன் வாழ்வே 
    இப்படி முப்பது நாள் 
    ஆகிப் போனதே …"

    உடனிருந்த பெருசு 
    உருகிற்று…

    "ஆமாமா…
    பாவம்….!
    அறியா பையன்…..

    நேற்று 
    எண்ணை தேய்த்து குளித்திருக்கிறான்.
    இரவு மனைவியோடு 
    களித்திருக்கிறான்…

    ஜன்னி வந்து 
    துடிதுடித்தான். 
    எமன் வந்து 
    பிடித்துச் சென்றான்"

    பட்டினத்தாரைக் கண்டு கூட்டம் விலகியது.

    தாயின் சடலத்தைக் கண்டு சஞ்சலம் காணாதவர் அப்பையனின் 
    மரணம் கண்டு 
    மனம் உடைந்தார்.

    கண்கள் அவனைக்
    கனிந்து நோக்கின. 
    அவரது திருவாய்
    பாடல் படித்தது.

    என்ன அதிசயம்….!

    ஏதும் நடக்காததுபோல் எழுந்தான் 
    செத்திருந்தவன்.

    "சுவாமிக்குப் பசிக்கும்.. பசியாற்ற வேண்டும்.."

    விரைந்து ஓடினான் கூடியிருக்கும் கூட்டத்தை லட்சியம் செய்யாமலேயே.

    ஊரே 
    உணர்ச்சி பூர்வமாய் பட்டினத்தாரைக் கொண்டாடியது.

    'செத்தவனைப் 
    பிழைக்க வைத்த சுவாமி'
    என ஒட்டுமொத்தமாக   
    தாள் பணிந்தது.

    சிறுநகை கூட காட்டாமல் பட்டினத்தார் புறப்பட்டார்.

    "சுவாமி….
    இங்கேயே 
    இருந்து விடுங்கள். ஊரே உங்களுக்குத் 
    தொண்டு செய்யும்…"

    மறுக்காமல் ஏற்காமல் முகக்குறிப்பு காட்டாமல் பட்டினத்தார் புறப்பட்டார்.

    அன்று முதல் 
    அவரது பேச்சு நின்றது. மௌனமே மொழியானது.

    அது ஏன் ?

    அது 
    சித்தர் ரகசியமாய் 
    இருக்கும்.

    பாகம் 5 இல் தொடரும்… 
     

  • காதற்ற ஊசி

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பட்டினத்தார் கதை – பாகம் 3

    பட்டினத்தார் அரண்மனையில் 
    செல்வச் செழிப்போடு அன்போடு அருளோடு இறையாய் வந்த குழந்தை வளர்ந்து வந்தது.

    'மருதவாணர் '
    அக்குழந்தைக்கு 
    பட்டினத்தார் பெயர் 
    சூட்டினார் –

    காவிரிப்பூம்பட்டினம் கண்டிராத கொண்டாட்டத்தோடு அரசனையே 
    வியக்கச் செய்த விருந்து உபசாரங்களோடு.

    இறையே குழந்தை 
    என்றானதால் திருவிளையாடல்களுக்கு கேட்கவா வேண்டும் ?

    ஒருமுறை 
    மற்ற சிறுவர்கள் சகிதம் மரக்கலப் பயணம்.

    பட்டினத்தாரின் 
    ஒரே செல்ல மகன் மருதவாணர் தான் 
    தலைமை.

    நடுக்கடலில் 
    திடுமென எழுந்த
    திமிங்கலம் ஒன்று 
    ஒரு சிறுவனை 
    லபக் எனப் பிடித்து 
    கபெக் என விழுங்கியது.

    சிறுவர்கள் துடித்தார்கள். பயந்து நடுங்கினார்கள்.

    "மருதவாணா… 
    திமிங்கலம்….."
    எனக் கூக்குரலிட்டார்கள்.

    மருதவாணர் எழுந்தார்.

    அடுத்த முறை 
    அந்த திமிங்கலம் 
    படகு அருகே 
    வந்தபோது 
    விரைந்து தாவி
    எட்டி உதைத்தார்.

    செத்து மிதந்தது 
    திமிங்கலம்.

    சிறுவர்கள் வியந்தார்கள். மருதவாணரைக் கட்டிப்பிடித்து 
    நன்றி சொன்னார்கள்.

    தலை மேல் தூக்கி வைத்து கூக்குரல் இட்டார்கள்.

    அப்போது
    செத்து மிதந்த திமிங்கலத்தில் இருந்து 
    ஒரு மனிதன் வெளிப்பட்டான்.

    அவன் விண்ணில் எழுந்தபடி சொல்லத் தொடங்கினான்…

    "கண்கண்டதெய்வமே… 
    நான் மணிக்கிரீவன் 
    என்னும் கந்தர்வன்.

    ஒருமுறை 
    ஒரு சித்தரை 
    அவமதித்து விட்டேன்.
    அவர் விட்ட சாபத்தால் திமிங்கலம் ஆனேன்.

    என் அழகு காரணமாக அகந்தை மிகுந்து 
    ஆட்டம் போட்டதால் 
    இந்த கோலம்.
    திமிங்கல வேடம்.

    ஒரு தெய்வமகன் 
    வருவார்…. 
    அவர் உன்னைத் 
    தன் காலால் உதைப்பார்.

    அப்போது சாபம் நீங்கும்…"

    என அந்த சித்தர் சொல்லியிருந்தார்.

    "தெய்வமே…. வணங்குகிறேன்.
    ஆசி தாருங்கள்.
    விடை கொடுங்கள்…"

    வணங்கியபடி 
    மறைந்து போனான் 
    அந்த கந்தர்வன்.

    சிறுவர்களுக்கு 
    ஏக அதிர்ச்சி.

    ஒரு தோழன் 
    தட்டுத்தடுமாறி 
    மருதவாணரிடம் 
    படபடத்துச் சொன்னான்.

    "ஐய்யோ…
    நம்ம நண்பன் எங்கே ? 
    அவன் இல்லாது திரும்பினால்
    அவன் வீட்டில் 
    நம்மைப் 
    பின்னி 
    எடுத்து விடுவார்கள்…"

    நடுங்கியபடி 
    இன்னொரு சிறுவன் சொன்னான்….

    "அவனைத் திமிங்கலம் 
    சாப்பிட்டு விட்டதே…!"

    புன்னகைத்த 
    மருதவாணர் 
    செத்து மிதந்த 
    திமிங்கலத்தை 
    உற்று நோக்கினார்.

    விழுங்கப்பட்ட சிறுவன் உடலெங்கும் சூடப்பட்ட 
    முத்து மாணிக்க 
    தங்க ஆபரணங்களுடன் நடுக்கடலில் 
    திமிங்கலத்தில் இருந்து வெளிப்பட்டு 
    நடந்து வந்து 
    மரக்கலம் ஏறினான்.

    "வேண்டுமானால் 
    நீங்களும் சென்று இன்னொரு திமிங்கலத்திடம் அகப்படுங்கள்….

    மருதவாணன் 
    காப்பாற்றி விடுவான்… உங்களுக்கும்
    ஆபரணங்கள் கிடைக்கும்."

    குழுவிலிருந்த 
    குட்டிச் சிறுவன் 
    கலகலப்பூட்டினான்.

    தாவிக்குதித்து 
    படகையே 
    ஆட்டம் காண வைத்த
    அத்தனை சிறுவர்களும் ஒருவழியாக 
    கரை திரும்பினர்.

    கடலில் நடந்தது
    ஊருக்குள் வியப்பான 
    செய்தியானது.

    ஊர் மருதவாணரைக்
    கொண்டாடத் துவங்கியது.

    பட்டினத்தார் பூரித்தார். பரமனுக்கு நன்றி சொன்னார்.

    மருதவாணர் 
    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தார்.
    வாலிபர் ஆனார்.

    பதினாறு வயதிலேயே கல்வியிலும் 
    வணிகத்திலும் 
    அருளாற்றலிலும் 
    சிறந்து விளங்கினார்.

    ஒரு தடவை
    ஒரு முத்துக்கு 
    விலை நிர்ணயிப்பதில் வணிகர்களுக்கு இடையே குழப்பம் வந்த போது மருதவாணர் 
    தந்தை பட்டினத்தாரின் கணிப்பையும் 
    தவறு எனக்கூறி 
    ஒரு விலை நிர்ணயித்தார்.

    வாணிப உலகம் 
    வணங்கிப் போற்றியது.
     
    'இது…. இதுதான்… 
    சரியான நேரம்…

    திரைகடலோடி 
    திரவியம் தேட…'
     
    பட்டினத்தார் கணித்தார். மருதவாணர் புன்னகைத்தார்.

    'ஆம்… 
    இது…. இதுதான்..
    சரியான தருணம்'

    மருதவாணரது 
    கணக்கு வேறாக 
    இருந்தது.

    அது இறை கணக்கு. தெய்வமாய் வந்த மருதவாணரின்
    தெய்வீகக் கணக்கு.

    கடல்கடந்த வணிகம்….
    கட்டிளம் காளை 
    மருதவாணர்….

    ஊரே திரண்டு வந்து 
    வாழ்த்த புறப்பட்டது காவிரிப்பூம்பட்டினத்து 
    கடல் வணிகக்குழு.

    நாட்பட்ட பயணம்.
    ஆட்பட்ட வணிகம்.
    மேம்பட்ட பொருளீட்டல்…
    நாடு திரும்பிக் கொண்டிருந்தது கப்பல்.

    வழியில் நடுக்கடலில் 
    ஒரு நாள் 
    கப்பல் குலுங்கியது.

    பேய்மழை…
    பெரும் காற்று…
    கடும் குளிர்….
    கப்பலில் இருந்த 
    வணிகப் பெருமக்கள் நடுங்கினர்.
    ஒடுங்கிப் படுத்தனர்.
    நடுக்கம் பெரிதாகி 
    நாடினர் மருதவாணரை.

    'பயப்பட வேண்டாம்'
    என தைரியம் சொல்லி அவர்களுக்கு 
    காய்ந்துபோன சில வறட்டிகளைத் தந்தார்.

    ஏதென
    அவர்கள் வினவ 
    'அவைதான் 
    தன் வணிகத்தில் 
    தான் சம்பாதித்தது '
    என சிறிதும் 
    கவலையின்றிச் சொன்னார்.

    கூடவே 
    தான் கொடுக்கும் வறட்டிகளை ஊர் திரும்பியதும் 
    அவர்கள் தந்துவிட வேண்டும் என பத்திரத்தில் கையொப்பம் கேட்டார்.

    மருதவாணருக்கு 
    ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் நினைத்தாலும்…

    " நீங்கள் 
    என்ன சொன்னாலும் கேட்கிறோம்….
    எங்களை உயிரோடு காப்பாற்றினால் போதும்…

    இப்போது குளிர் போக்க வறட்டி தாருங்கள்…"

    உறைந்து போன 
    குரல்கள் ஒலித்தன.

    எரிக்கப்பட்ட வறட்டி 
    தந்த சூடு 
    அவர்களுக்கு இதம் தந்தது. கொஞ்ச நாழிகையில்
    புயல் ஓய்ந்து 
    கப்பல் ஆட்டமும் நின்றது.

    அதோ 
    கரை தெரிகிறதே ! காக்கைகளும் கழுகுகளும்  வட்டம் இடுகின்றனவே !! 
    ஓ.…காவிரிப்பூம்பட்டினம் வந்துவிட்டதோ !!!

    கப்பல் வரும் நாளைக் 
    கணித்திருந்த காவிரிப்பூம்பட்டினம் களைகட்டியிருந்தது.

    மகன் மருதவாணர் பொருளோடும் புகழோடும் வருவதால் 
    தனது கஜானாவை 
    முழுவதும் திறந்து 
    வாரி வழங்கினார் பட்டினத்தார்.

    கப்பல் நிற்கும் இடம் 
    கடலில் சற்று தொலைவில்.

    மகனை அழைத்து வர 
    படகில் போனார் 
    பட்டினத்தார். 

    எதிரில் வந்த 
    பயணி ஒருவர் 
    "ஐயா… 
    உங்கள் மகனுக்கு 
    பைத்தியம் பிடித்துவிட்டது.

    அறை முழுக்க 
    வறட்டி தான் வைத்திருக்கிறான். 

    உடன் 
    வைத்தியம் பாருங்கள்"
    படகு போகிற போக்கில் சொல்லிச் சென்றார்.

    இன்னொரு படகில் மருதவாணர் கரைக்கு சென்று கொண்டிருக்கும் செய்தியை இன்னொருவர் சொன்னார்.

    பைத்தியம் என்று 
    கேள்விப் பட்டதால் பயந்துபோன 
    பட்டினத்தார்
    உடனே 
    சிலரை அனுப்பி 
    கரையில் 
    ஒரு மண்டபத்தில் வைத்து மகனைக் காவல் காக்க உத்தரவிட்டார்.

    கப்பலேறி 
    வணிகம் செய்து
     திரும்பிய மகனின் 
    வணிக வல்லமையைப் பார்க்க நினைத்து
    படகைக் கப்பல் பக்கம் 
    விடச் செய்தார்.

    கப்பலில் 
    மருதவாணர் அறையில் 
    சில மூட்டைகளும் 
    பல வறட்டிகளும் 
    தென்பட்டன.

    மகனுக்குப் 
    பைத்தியம்தான் 
    பிடித்து விட்டதோ என 
    மிரண்டார் பட்டினத்தார்.

    "அடச்சே… 
    இதையா சம்பாதித்து வந்திருக்கிறான். 
    இருக்கட்டும்…

    பைத்தியம் பிடித்து விட்டதாக  சகபயணி சொன்னானே உண்மையாய் இருக்குமோ ?

    புத்தி பேதலித்துப் போயிருந்தாலென்ன….. பத்திரமாய் வந்து சேர்ந்தானே …

    அது போதும்…!"

    ஒரு பெட்டியில் வறட்டி  ஒன்றைப் பாதுகாப்பாய்
    வைத்திருந்தார் மருதவாணர்.

    கோபமாய் வறட்டியை 
    எடுத்து 
    கப்பல் சுவற்றில் 
    வீசி எறிந்தார் பட்டினத்தார்.

    வறட்டி உடைந்து 
    அதிலிருந்து 
    மாணிக்கப் பரல்கள் சிதறின.

    மூட்டை முழுவதும் 
    அழுக்குத் துகள்கள் அல்ல. அத்தனையும் 
    தங்கத் துகள்கள்.

    'இதற்குத் தானே 
    ஆசைப்பட்டீர் பட்டினத்தடிகளே ! '
    எப்போதும் கேட்கும் தெய்வக் குரல்
    எள்ளி நகையாடியது.

    அருகில் சில தாள்கள்..
    அது சக வணிகர்களின் கையொப்பம்  
    கொண்ட பத்திரங்கள்.

    ஊர் திரும்பியதும் இதேபோன்ற வறட்டியைத் திருப்பித் தரவேண்டும்
    என்ற கண்டிப்பான வாசகங்களோடு. 

    பட்டினத்தார் 
    வியப்பில் ஆழ்ந்தார்.

    'என்னே திறமை 
    என் மகனுக்கு !
    எவ்வளவு செல்வம்…!'

    திரும்ப கரைக்கு
    விரைந்து போகச்சொல்லி படகோட்டியை விரட்டினார்.

    தரை தட்டியதும் 
    மகனைத் தழுவ மண்டபத்திற்கு ஓடினார்.

    " ஐயா… எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எப்படியோ தப்பித்து விட்டார் சின்னையா…."

    வீட்டிற்கு ஓடினார் பட்டினத்தார்.

    வழியில் ஓரிடம் விடாமல் கண்களால்
    துழாவித் தேடினார்.

    வீட்டில் தாயும் 
    மனைவியும்,
    "இப்பத்தான் 
    வெளியே போனான். வந்துவிடுவான்…"
    என்று சாதாரணமாகச் சொல்லியபடி
    மருதவாணர் 
    வாங்கி வந்திருந்த பொருட்களைக் காட்டினர்.

    பொறுமை இழந்த பட்டினத்தார் 
    மகனைத் தேடி 
    வெளியே கிளம்பினார்.

    ஊர் முழுக்கத் தேடியும் மகனைக் காணவில்லை.

    சக வணிகர்களை வரவழைத்து விசாரித்தார்.

    அவர்களுக்கு வறட்டிகளைத்
    திரும்பத் தருவதில் பிரச்சினை.
    வைரம் வைடூரியம் கொண்ட வறட்டிகளை அல்லவா திருப்பித் தரவேண்டும் ?

    வீணாய் சிலவற்றை நெருப்புக்கு அல்லவா இரையாக்கி 
    குளிர் காய்ந்தனர் அவர்கள்.

    ஒரு வணிகர் சொன்னார் 
    'ஊர் திரும்பியதும் திருவிடைமருதூர் போகவேண்டும் '
    என்று சொல்லிக்கொண்டிருந்தார். அங்கு சென்றிருப்பார்…"

    அதேநேரத்தில் 
    மருதவாணர் திருவிடைமருதூரில் சிவசருமர் சுசீலை தம்பதியினர் முன் இருந்தார்.

    பதினாறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் 
    தெய்வ மகனை 
    அடையாளம் கண்ட 
    அவர்கள் 
    தாய் தந்தை  
    என்பதையும் மறந்து மருதவாணர் திருவடி வணங்கினர்.

    அதே கணம் 
    அவர்கள் இருவரும் இறையோடு இறையாய் 
    சிவனடி கலந்தனர்.

    சிவன் தந்த வாக்கு 
    சரியாக 16 ஆண்டில் சித்தியானது
    இறைவன் திருவுளம்
    அன்றி வேறென்ன ?

    'மருதவாணர் திருவிடைமருதூர் 
    சென்று இருக்கலாம். வந்தவுடன் 
    பேசிக் கொள்ளலாம் '
    என்ற எண்ணத்தில் 
    வீடு திரும்பினார் பட்டினத்தார்
    கொஞ்சம் ஏமாற்றத்தோடு நிறையக் குழப்பத்தோடு.

    "மருதவாணன் 
    வீட்டை விட்டு 
    அவசரமாக போகும் வேகத்தில் 
    ஒரு பெட்டியை 
    உங்களிடம் 
    கொடுக்கச் சொன்னான்"

    ஒரு சிறு பெட்டியை 
    தந்தாள் 
    மனைவி சிவகலை.

    அவசர அவசரமாய் பெட்டியைத் திறந்தார் பட்டினத்தார்.

    உள்ளே 
    காதற்ற ஊசி ஒன்று.
    ஓலைத் துணுக்கு ஒன்று.

    திருப்பித் 
    திருப்பிப் பார்த்தார்.

    ஓலைத் துணுக்கில் 
    சிறிய எழுத்தில் 
    எழுதி 
    இருந்ததைப் படித்தார்.

    'காதற்ற ஊசியும் 
    வாராது காணும் கடைவழிக்கே'

    எங்கிருந்தோ 
    ஓங்கி அடித்தது 
    ஒரு பலத்த அடி.

    அது பிட்டுக்கு 
    மண் சுமந்த 
    பரமன் கொடுத்த அடி.

    (பாகம்-4 இல் தொடரும்)

  • குழந்தையாய் வந்த இறைவன்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பட்டினத்தார் கதை  பாகம் – 2

    பிரம்மச்சாரி 
    உருவில் வந்து 
    சிவலிங்கம் தந்து 
    அருளாசி தந்து
    தீட்சை தந்து திடீரென்று
    மறைந்துபோன 
    இறைவன் சொன்னது அடிக்கடி 
    பட்டினத்தாருக்கு நினைவிற்கு 
    வந்தவண்ணம் இருந்தது.

    "பூஜை தானம் 
    இரண்டிற்கும் 
    இரவு-பகல் 
    பார்க்காதே…

    இருபத்து நான்கு 
    மணி நேரமும் 
    இச்சிந்தனையே இருக்கட்டும்."

    பட்டினத்தாரின் 
    மனம் இதை
    ஓயாது நச்சரித்தது. 

    தாயாரின் மனமோ இன்னொரு விதமாய் நச்சரிக்க ஆரம்பித்தது.

    'திருவெண்காடனுக்குத் திருமணம் '

    தாயின் விருப்பம் 
    மறுக்காது ஏற்றார்
    சுய விருப்பம் 
    இல்லாமலேயே.

    அடியார் உறவு 
    இறை பூஜை
    பெரும் வணிகம் 
    இவற்றோடு 
    புதிய உறவு 
    திருமணமாய் மலர்ந்தது.

    சிவகலை எனும்
    மங்கை நல்லாள் 
    சிவ மைந்தனின் மனைவியானாள்.

    காலச்சக்கரம் 
    விரைந்து சுழன்றது.

    பட்டினத்தார் 
    தான தர்மத்தில் 
    வாணிபத்தில் 
    செல்வாக்கில் 
    ஓர் அரசனைப் போல்
    திகழ்ந்து வந்தார்.

    இப்போது 
    பட்டினத்தாரின் 
    வயது 35.

    ஊரே போற்ற வாழ்ந்த 
    அவர் வீட்டில் 
    ஓடி விளையாட 
    ஒரு குழந்தைச் செல்வம் பூக்கவில்லை.

    வழக்கம்போல் 
    இறையைச் 
    சரணடைந்தது 
    பட்டினத்தார் குடும்பம்.

    பரமன் 
    இக்குறைதீர்க்க 
    நாள் ஒன்று
    குறித்தார்.

    திருவிடைமருதூரில் 
    ஒரு சிவ தம்பதி. சிவதொண்டே
    அவர்தம் வாழ்வு.

    அடியார்க்கு உணவிட்டு உபசரித்தலே
    அத்தம்பதிக்கு 
    மனநிறைவு.

    அவர் பெயர் சிவசருமர். 
    மனையாள் சுசீலை.

    ஒருநாள் தம்பதியினர் அயர்ந்து போயினர்… காரணம்…..
    அடியவர்களுக்கு 
    உணவிட 
    வீட்டிலும் கையிலும் ஏதுமில்லை.

    செல்வம் இல்லாது அன்னதானம் எப்படி ?

    அப்போது 
    சிவபெருமான் 
    ஒரு முதியவர் வேடத்தில் வந்து அன்னம் கேட்டார்.

    "அம்மா… தாயே…
     பசிக்கிறது… உயிர் போகிறது"

    நன்றாகவே நடித்தார் 
    நடிகர் திலகம்.

    வந்த அடியவருக்கு 
    கொடுக்க ஏதும் இல்லை 
    என தம்பதியினர் 
    துடிப்பதை ரசித்த சிவபெருமான் 
    கோயிலில் படைத்த நைவேத்யத்தைப் போல பலமடங்கு 
    அத் தம்பதியினர் கண்ணெதிரே
    மாயமாய் வரவழைத்து 
    பசிதீர உண்டார்.

    அவர்கள் திகைத்திருக்க அவர்கள் கண் பட
    வீட்டோரமாய்
    ஓய்வெடுக்கச் சாய்ந்ததார். 
    காதுபட பெரிதாக 
    ஏப்பம் விட்டார். 

    சற்று நேரத்தில் 
    குறட்டை ஒலி 
    தேவகானமாய் 
    ஒலிக்கத் தொடங்கியது.

    கவலையாய் 
    கண்ணீர் சொரிந்த 
    மனைவி சுசீலை 
    மெதுவாய் 
    கணவரின்
    காது கடித்தாள்.

    "சுவாமி எழுந்தவுடன் அடியவர்களுக்கு 
    தொடர்ந்து 
    தொண்டு செய்ய 
    கொஞ்சம் ஐஸ்வர்யம்
    கேளுங்கள்…

    மாயமாய் 
    உணவு வரவழைத்து 
    உண்ட மகானுபாவர் கண்டிப்பாய் 
    ஏற்பாடு செய்வார்."

    காத்திருந்தார் சிவசருமர்.

    விழிப்பாய் 
    சுவாமிகள்
    எழும் நேரம் 
    எதிர்பார்த்திருந்தும் கண்விழித்த
    முக்கண்ணர் 
    கண்சிமிட்டும் 
    கணநேரத்தில் 
    மறைந்து போனார். 

    தம்பதியினர் தவித்தனர்.
    துடிதுடித்துப் போயினர்.

    அன்றிரவு
    கவலையோடு கண்ணயர்ந்தனர்
    விதியை நொந்தபடி.

    இரவில் 
    இருவர் கனவிலும் 
    வந்தார் ஈஸ்வரன்.

    "திருவிடைமருதூர் காருண்யாமிர்தத் தீர்த்தக்கரையில் 
    வில்வ மரத்தடியில் 
    நானே
    ஒரு குழந்தையாய் இருப்போம்.

    காலையில் சென்று அக்குழந்தையை எடுத்து காவிரிப்
    பூம்பட்டினத்தில் 
    என் நினைவாய் வாழும் பட்டினத்தார் வசம் ஒப்படையுங்கள்.

    குழந்தைக்கு 
    எடைக்கு எடை 
    தங்கம் கேளுங்கள்…

    அதைப் பெற்று 
    இறைப்பணி
    தயைப் பணி 
    தொடருங்கள்…" 

    கனவு கலைந்தது.
    அடுத்த நாள்
    அது காட்சியானது.

    வில்வ மரத்தடியில்
    வீறிட்டு அழுத 
    தெய்வக் குழந்தையை சிவநேசர் தம்பதி 
    கண்டு எடுத்து 
    உச்சி முகர்ந்தனர். பரவசத்தில் 
    திளைத்தனர்.

    கனவில்
    சிவபெருமான் 
    சொன்னபடி 
    பட்டினத்தாரைப் பார்க்க ஆயத்தமானார் சிவநேசர்.

    மனைவி சுசீலைக்கோ
    அதில் ஆர்வமில்லை.
    எல்லையில்லா வருத்தம்.

    "தெய்வக் குழந்தையைத் தருவதா ?

    தெய்வமே 
    குழந்தையாகி 
    மகனாகக் 
    கிடைத்திருக்கும் 
    வாய்ப்பை இழப்பதா ?

    தங்கத்திற்காக
    குழந்தையை விற்பதா ?

    குழந்தையைப் 
    பெற்றுக் கொள்ளத்தான் கொடுப்பினை இல்லை.
    வளர்க்க பாக்கியம் வாய்க்காதா !"

    மன சஞ்சலம்
    மாறி மாறிக்
    குடைந்தது.

    மனைவியின் 
    குரலுக்கு 
    செவிசாய்க்க 
    மறுத்துவிட்டார்
    சிவசருமர்.

    மகேஸ்வரனின் 
    குரல்தானே 
    அவருக்கு உயிர் !!! 

    இதற்குள் –
    ஆண்மகவோடு 
    அரும் தொண்டர் 
    சிவநேசர் சிவசருமர் 
    வரும் தகவலைப் 
    பட்டினத்தார் கனவில் சுட்டியிருந்தார் சிவபெருமானார்.

    அந்த காட்சி காவிரிப்பூம்பட்டினம் கண்டிராத 
    திருவிழாக் காட்சி.

    அருள் செல்வமும் 
    பொருள் செல்வமும் 
    நிரம்பப் பெற்றிருந்த பட்டினத்தார் வந்தவர்க்கெல்லாம் 
    வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.

    வாரிசு வந்த சந்தோசம்.

    எப்போதும் தானதர்மம் நடக்கும் அவர் வீட்டில் குழந்தை தானம்.

    நேரம் வந்தது. 

    பெரிய தராசு ஒன்றில் 
    ஒரு தட்டில் குழந்தை இன்னொரு தட்டில்
    தங்கம் 
    மாணிக்கம் 
    வைரம் 
    வைடூரியம்….

    வள்ளல் பட்டினத்தார் 
    கையே வலித்துவிட்டது.. எவ்வளவு நிரப்பியும்
    இரு தட்டுகளும் 
    சமமாக வில்லை.

    எவ்வளவு தரவும் 
    பட்டினத்தார் 
    தயாராக இருந்தும் 
    வைத்து நிரப்பியும் 
    சரிசமமாக வில்லை 
    தராசுத் தட்டுகள்.

    ஒரு தட்டில் இருப்பது 
    இறை அல்லவா !
    எப்படி நிறையாகும்?

    சிவசருமரே
    போதும் போதும் 
    என நெஞ்சுருக நஞ்சுண்டேஸ்வரரை
    வணங்கி அழுதார்.

    இறைவன் சிவசருமர் 
    காதினுள் ஒலித்தார்..

    "கவலை கொள்ளாதே…
    சிவசருமரே !
    சும்மா கொஞ்சம் விளையாடிப் பார்த்தேன்.

    இவற்றை எடுத்துச் செல்.

    இது தப்பில்லா வருமானம். தீதிலாச் சொத்து.

    தானதர்மம் 
    பூஜை யாவும் 
    விரும்பியபடி 
    செய்து வா…

    சரியாக 16 ஆண்டுகள்.

    நானே வந்து உன்னை ஆட்கொள்வேன்."

    "சரி "என்று 
    தலையசைத்தார் 
    சிவசருமர்.

    உடனே
    தராசுத் தட்டுகள்
    சமமாயின. 
    ஊரே கைதட்டி 
    மகிழ்ந்தது.

    அப்போது
    தங்கத்தேர் ஒன்று தயங்கியபடி வந்தது.

    அத்தேர்
    பட்டினத்தாரின் 
    செல்வச் செழுமையைக் காட்டும் திருத்தேர்.

    சிவசருமரும் 
    சுசீலையும் 
    கண்ணீர் மல்க அமர திருவிடைமருதூர் நோக்கி பயணமானது 
    அந்த தங்கத்தேர்.

    நன்றியோடு 
    நகர எல்லை வரை
    பட்டினத்தார் 
    தொடர்ந்து நடந்து வர 
    சிவசருமர் கைகள் தூக்கி-
    சுசீலை கண்கள் கலங்கி வணங்கி விடை பெற்றனர்.

    (மீதம் பாகம் -3 இல்)…

  • குபேரன் பட்டினத்தாராய்  பிறப்பெடுத்த கதை

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பட்டினத்தார் கதை – பாகம் 1

    ஊரின் 
    ஒதுக்குப் புறம்.
    அது ஒரு சுடுகாடு.

    உற்றார் ஒருசிலர் சூழ்ந்திருக்க 
    எரியூட்டுவதற்குத்
    தயாராக ஒரு பிணம்.

    விறட்டிகள் அடுக்கப்பட்டு விடை பெறுவதற்குக் காத்திருக்கிறது 
    அப்பூதவுடல்.

    அதோ …
    வெறும் கோவணமும் 
    உடல் முழுக்க திருநீறும் அணிந்து 
    சாமியார் ஒருவர் 
    வருகிறார்.

    வந்தவர் 
    ஓரிரு நிமிடங்கள் 
    பாடையைத் தரிசிக்கிறார்.

    "அம்மா…"
    என்கின்ற குரல் 
    அவர் அடிவயிற்றிலிருந்து மெல்ல எழுகிறது.

    விறட்டிகளைச்
    சூழ வைத்திருந்த 
    விறகுக் கட்டைகளை விரைந்து விலக்குகிறார்.

    "ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் 
    நொந்து பெற்று..,"
    பாடலாய் வடிவெடுக்கிறது அவரது துயரம்.

    விறகுகளையும் 
    விறட்டிகளையும் 
    தள்ளி விட்டு விட்டு 
    தன் தாயை 
    அரவணைத்துத் தூக்கி அருகிருக்கும் 
    வாழைமட்டை மீது வைக்கிறார்.

    அவரது திருவாய்
    தாயை – தன்னிகரில்லா
    தாய் உறவை 
    ஒப்பாரியாய் உணர்ச்சிபூர்வமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    "முன்னை இட்ட தீ முப்புறத்திலே…
    பின்னை இட்ட தீ 
    தென் இலங்கையிலே …!

    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே…
    யானும் இட்ட தீ 
    மூழ்க மூழ்கவே…"
    என்று கதறும் போது 
    வாழை மட்டைத்தானே 
    தீப் பிடிக்கிறது.

    புத்தம் புதிய 
    ஈர வாழைமட்டை 
    தீப்பிடித்து எரிவதை வியப்பாய் 
    உறவினர் பார்த்து 
    வியந்திருக்க….

    பாடை எரிகிற 
    பாங்கைப் பார்த்தபடி அவ்விடம் விட்டு 
    விலகுகிறார்.

    அதுவே 
    அவ்வூரில் அவர் 
    பிறர் கண்களில்பட்ட 
    இறுதி நிகழ்வு.

    அவர்….
    பட்டினத்தார். 

    அவரை 
    பட்டினத்தடிகள் 
    திருவெண்காடர் 
    சுவேதாரண்யர் 
    பட்டினத்துப் பிள்ளையார் என்றெல்லாம் 
    அழைப்பார்கள்.

    தாய்க்குச் 
    செய்ய வேண்டிய கடமைக்காக 
    பிறந்து வளர்ந்து 
    செல்வ சீமானாக இருந்த காவிரிப் பூம்பட்டினத்தில் ஒதுக்குப்புறத்தில் 
    பொது சத்திரத்தில் 
    துறவறம் பூண்டு காத்திருந்தவர் 
    சிதைக்குத் தீ மூட்டி 
    கடனை அடைத்தார். கிளம்பிவிட்டார்.

    பற்றற்றவருக்கு 
    தாய் மீது பற்று.
    ஓர் ஒட்டு.
    தாமரை
    இலை நீர் போன்றது 
    அவ்வொட்டு . 

    பின்
    பித்தனைப் போல் 
    சித்தனைப் போல் 
    ஊர் ஊராய் 
    தேச சஞ்சாரம் செய்யத் துவங்கிவிட்டார்.

    பட்டினத்தாரின் 
    திவ்விய சரித்திரம் வித்தியாசமானது.

    சிவம் ஆன 
    அவரது சரிதை 
    சிவம் நோக்கிய 
    ஒரு வழிப்பாதை. 
    சிவநெறிப் பாதை.

    சிவபிரான்
    அம்பிகையுடன் 
    ரிஷப வாகனத்தில் 
    வெளியே 
    திரு உலாவிற்கு 
    புறப்பட்டுக் 
    கொண்டிருந்தார்.

    தெய்வங்களும் முனிவர்களும் 
    ரிஷி மார்களும் 
    இறைவன் 
    இறைவியுடன் 
    பயணம் காணத் 
    தயாராக இருந்தனர்.

    'ஜய ஜய சங்கர…
    ஹர ஹர சங்கர … '
    என 
    அவர்கள் ஒலித்த 
    இறையம்ச மந்திரங்கள் சூழலைத் 
    தெய்வீகமாக்கிக் கொண்டிருந்தன.

    அதுபோது 
    குபேரன் 
    அங்கு வந்தார்.

    இறைவன் 
    புறப்படும் சூழலை 
    அறிந்த அவர் 
    இரு கைகளையும் தூக்கி வணங்கியபடியே 
    உலாவிலும் பங்கேற்றார்.

    பற்பல 
    தலங்களை தரிசித்த இறைவனின் குழு திருவெண்காடு வந்தது.

    அங்கிருக்கும் காவிரிப்பூம்பட்டினம் அனைவரையும் கவர்ந்தது.

    ஆனால் குபேரனை 
    ஈர்த்தது அதிகம்.

    அவ்விடத்தை 
    விட்டுச் செல்ல 
    மனம் வரவில்லை குபேரனுக்கு.

    சிவபெருமானிடம் 
    மெதுவாகக் கேட்டார்..

    "இறைவா….
    இந்த இடம் 
    எனக்கு மிகவும் 
    பிடித்துப் போய்விட்டது. கொஞ்ச காலம் 
    தங்கிவிட்டு வரவா ?"

    இறைவன் 
    புன்னகைத்தார்.

    இதற்குத்தானே 
    இறைவன் ஆசைப்பட்டார் !? திரு உலாவின் 
    நோக்கமே அதுதானே ?!

    "குபேரா….
    யோகமயமான 
    உடம்பு பெற்ற 
    உனக்கு இப்படி 
    ஒரு ஆசை 
    எப்படி வந்தது ?

    சரி….சரி 
    ஆசைப்பட்டு விட்டாய் !

    ஆசையே 
    பிறவிக்கான விதை.

    நீ பூமியில் பிறப்பாய்."

    'கொஞ்ச காலம்'
    என்பதை 
    சிவபெருமான் 
    இப்படிப் புரிந்து 
    கொண்டாரே 
    என்று பயந்து போன 
    குபேரன், 

    "சுவாமி….
    இப்படி குபேரனாகவே கொஞ்ச காலம் 
    இங்கே
    இருக்கத்தான் நினைத்தேன்.

    நீங்கள் 
    'மனிதப் பிறப்புக்கு '
    வரம் தந்து விட்டீர்களே !?

    ஏற்கிறேன்…. பிரபு.

    ஆனால்…
    உரிய காலத்தில் 
    என்னை நீங்கள் எடுத்தாட்கொள்ள 
    வேண்டும்.

    உறுதி தாருங்கள்…"

    "உறுதி"
    என்றார் 
    உலகாளும் உமையவளின் உள்ளம் கவர்ந்தவர்.

    திரு உலா முடிவுற
    திருவிளையாடல் நாயகன் ஆசிர்வதித்துப் புறப்பட்டார்.

    இறைவன் திருவுளப்படி குபேந்திரன் 
    பூமியில் ஜனிக்க 
    ஒரு கரு காத்திருந்தது.

    அது 
    சிவ சிந்தனையோடு 
    தவ வாழ்வோடு 
    பரோபகாரியாக காவிரிப்
    பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த 
    சிவநேசர் என்பாரின் 
    நேச மனைவி 
    ஞான கலாம்பிகையின் சிவஞானக் கரு.

    அக்கரு
    திருவாகி 
    உருவாகி 
    ஒருநாள் 
    பூமியில் பூத்தது.

    இப்படித்தான் 
    குபேரன் காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் சீமான் 
    சிவநேச தம்பதிக்கு திருவெண்காடராக பின்னாளைய 
    பட்டினத்தாராக 
    அவதாரம் கண்டார்.

    ஐந்து வயதிலேயே 
    ஞானம் பேசியது 
    குழந்தை.

    சிவ சிந்தனையே 
    வளர்ப்பாய் இருந்தது.

    ஒருநாள் 
    சிவபெருமான் 
    கனவில் வந்தார். 
    பின்னொரு நாள் 
    நேரில் வந்தார்.

    வந்த இறைவன் 
    பட்டினத்துப் பாலகன்
    நெற்றியில் விபூதி இட்டு 
    ஆசி தந்து 
    அப்பாலகனின்
    விசாரணைக் எல்லாம் 
    விடை சொன்னார்.

    "சிறுவனே….
    திருவெண்காட்டுக்குபோ…

    சுவேதாரண்யப் பெருமானையும் அம்பிகையையும் 
    பூஜை செய்.

    அடியார்களுக்கு 
    அன்னமிடு.

    காத்திரு. 

    தக்க நேரத்தில் 
    ஒரு சன்னியாசி வருவார்.

    அந்த ஒழுக்க சீலர் 
    உனக்கு ஒரு 
    சிவலிங்கம் தருவார்.
    தீட்சை அளிப்பார்.
    மந்திர உபதேசம் தருவார்.
    முழுமை அடைவாய்."

    சிவனே சொல்லிவிட்டார்… எதற்கு 
    காத்திருக்க வேண்டும் ?

    புறப்பட்டார் 
    திருவெண்காடு ஆலயத்திற்கு.

    தாய் தான் யோசித்தாள்.

    'சிறு வயது'
    என கலங்கினாள்.

    "அம்மா…
    இன்னும் கொஞ்சம் 
    வயது கூடி
    இளைஞனாகி 
    பூஜையில் இறங்கு என்கிறாய்.

    தாயே…
    மார்க்கண்டேயருக்கு 
    என்ன வயது ?

    சிவபூஜை செய்து 
    அக்னிப் பதவியை அடைந்தபோது 
    துருவனுக்கு ஏழு வயது.

    திருப்பாற்கடலை சிவபிரானிடம் 
    வேண்டிப் பெற்ற 
    உபமன்யு 
    கிழவரா என்ன ?

    ஞானத் திருவடியில் சங்கமமான 
    சம்பந்தருக்கு 
    12 வயதுதான்.

    வயது தடையில்லையே … தாயே….

    விடை தாருங்கள்.. அம்மா"

    அம்மா 
    அரைமனதோடு
    சம்மதித்தாள்.

    திருவெண்காடு கோயில் பட்டினத்தார் 
    உறைவிடம் ஆனது.

    முக்கண்ணன் சொல்லி இருந்த மாதிரியே 
    சிவந்த திருமேனி 
    சடைமுடி 
    விபூதி 
    ருத்ராட்சம் சகிதம் வேதமந்திரங்கள் சொல்லியபடி 
    ஒருநாள் 
    பிரம்மச்சாரி ஒருவர் கோயிலுக்கு வந்தார்.

    வந்தவர் வினவியது, "பட்டினத்தார் எங்கே ?
    பார்க்க வேண்டும் 
    அவனை. "

    முதல் நாள் இரவு 
    'நாளை ஒரு 
    பிரம்மச்சாரி வருவார்'
    என்று கனவு சொல்லியிருந்தது பட்டினத்தாரிடம்.

    இறையருள் நிரம்பிய இருவரும் சந்தித்தனர்.

    கோயிலில் ஒரு சம்பவம்.

    பிரம்மச்சாரி கையோடு 
    ஒரு சம்புடம் 
    கொண்டு வந்திருந்தார்.

    அது சமயம்
    கோயிலில் 
    இருந்தவர்களிடம்
    அதைத் 
    திறக்கச் சொன்னார்.

    கோயிலில் இருந்தவர்கள் எவ்வளவு முயன்றும் யாராலும் திறக்க முடியவில்லை.

    "திருவெண்காடா …
    நீ  திற…."
    கட்டளையிட்டார் 
    பிரம்மச்சாரி.

    எங்கேயோ கேட்ட குரல் 
    போல் இருக்கிறதே…!

    பட்டினத்தார் 
    கை தொட்டார்.

    காத்திருந்தது போல் 
    பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த 
    சம்புடம் திறந்து 
    உள்ளே 
    கோடி சூரியப் பிரகாசமாய் ஒரு சிவலிங்கம்.

    உடன் 
    அருளுக்கு அருள் கூட்ட அழகிய 
    விநாயகப் பெருமான் 
    சிலை ஒன்று.

    பிரம்மச்சாரி 
    சொன்னமாதிரி காவிரிக்கரையில்
    பூஜை புனஸ்காரங்கள் செய்து 
    பஞ்சாட்சரத்தை 
    தியானித்து 
    பட்டினத்தார் 
    ஞானப் படிகளில் 
    ஏறத் தொடங்கினார்.

    மனதில் 
    ஏதேதோ சொற்கள் 
    தவித்து நின்றன.

    அவற்றை
    வெளிப்படுத்த வேண்டும் என்று துடித்தார் 
    பட்டினத்தார்.

    பிரம்மச்சாரியைத் தேடினார். அவரைக் காணவில்லை.

    அவர் சற்று முன் தான் 
    தான் வந்த காரியம் 
    இனிது முடிந்தது என்று 
    இடம் பெயர்ந்து விட்டார்.

    உள்அக வார்த்தைகளின் சங்கமத்தில் 
    பட்டினத்தார் துடிக்கையில் 
    ஓர் அசரீரி எழுந்தது.

    "திருவெண்காடா…
     இனி உனக்கு 
    எல்லா கலைகளும் சித்தியாகும்.."

     அட ….அதே குரல் பிரம்மச்சாரியின் 
    குரலை ஒத்த குரல்.

    எங்கேயோ கேட்ட குரல் ! யாருடைய குரல் ?!

    மனத்தில் 
    விசாரணை தொடங்கியது.

    கனவிலும் நேரிலும் காட்சியளித்த பிரம்மச்சாரியின் 
    மந்திரக் குரல் அது.

    சர்வ வல்லமை கொண்ட சர்வேஸ்வரனின் குரல்.

    ஆம்…
    சிவபெருமானின் 
    தெய்வீகக் குரல்.

  • சித்தர் ஆன முதலமைச்சர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    யூகிமுனியை
    அறியும் முன்
    ஓர் எளிய அறிமுகம்.

    சித்த மருத்துவத்தில் வல்லவர் தேரையர்.

    தேரையரின் 
    குரு அகத்தியர்.

    மருத்துவத் துறையில் அகத்தியரையே
    விஞ்சியவர் தேரையர்.

    தேரையரின் 
    மனதுக்கினிய 
    சீடரே யூகிமுனி.

    மருத்துவத்தில் 
    மகத்துவம் நிறைந்தவர் என்பதாலேயே 
    தேரையருக்கு 
    யூகியை 
    நிரம்பப் பிடிக்கும்.

    யூகிமுனியின் 
    ஆய்வுகள் 
    ஆவணங்கள் சித்தமருத்துவத்தின் பொக்கிஷங்கள்.

    யூகிமுனி அருளிய 
    'வீர சுண்ணம்'
    என்ற 
    மருத்துவ நூல்
    ஒப்புயர்வற்றது.

    யூகியை
    மெச்சும் தேரையர் 
    ஒரு முறை விரும்பி 
    தனது குரு அகத்தியரிடம் 
    சீடர் யூகியை 
    அறிமுகம் செய்தார்.

    அகத்தியர் பெருமானும் 
    யூகி முனிவரும் 
    மருத்துவ உலகை 
    அலசி மகிழ்ந்தனர்.

     'வீர சுண்ணம்'
     நூலை 
    அகத்தியரிடம் 
    வழங்கினார் 
    யூகிமுனி 
    தேரையர் 
    முன்னிலையில்.

    சுண்ணம் பற்றி
    ஆவலாய் கேட்டார் 
    அகத்தியர் பெருமான்.

    சுற்றுமுற்றும் பார்த்தபடி தவவலிமையால் 
    ஆங்கொரு காகத்தை வரவழைத்தார் யூகி.

    அக்காகத்தை 
    அருகில் அழைத்தார்.
    தாவித் தாவி 
    காகம் வந்தது.

    அதனிடம் 
    சுண்ணத்தை தந்தார் 
    யூகிமுனி .

    'என்னாகும்'
    என அகத்தியர் யோசித்துக்கொண்டிருந்த கணத்தில் 
    சுண்ணத்தை 
    உண்ட கரு வண்ண
    காகம் 
    வெள்ளை 
    நிறக் காக்கையாகி பிரமிப்பூட்டியது.

    அகத்தியரே 
    ஆச்சரியப்பட்ட 
    அற்புதம் அது.

    தனது சீடனின் 
    சீடனை 
    ஆரத் தழுவி 
    ஆசீர்வதித்தார் 
    அகத்தியர் பெருமான்.

    இடையிலிருந்த 
    தேரையர் 
    மிக மகிழ்ந்து 
    அகம் நிறைந்தார்.

    " அப்பா…
     உன் திறமை 
    வியக்க வைப்பது. மெச்சத்தக்கது.

    உனக்கு 
    'யூகி'
    என்ற பட்டத்தை 
    அளிக்கிறேன்.

    இனி நீ யோகி 
    மட்டுமல்ல… யூகி

    யூகி முனி "

    அகத்தியர்
    திருவாயால் 
    யூகி முனி பட்டம்.

    அதுவே அவர் 
    பெயராய் 
    நிலைத்துப் போனது.

    யூகிமுனிக்கு
    செந்தூரம் 
    தயாரிப்பது குறித்து போதித்தார் அகத்தியர்.

    அது அவருக்கு 
    கிடைத்த 
    ஞான வாய்ப்பு.

    மருத்துவ சிகாமணியாய் மருத்துவ மாமணியாய் யூகி முனியாய் 
    எண்ணற்ற நூல்களை அருளினார்.

    பன்னிரு காண்டம்
    வைத்திய சிந்தாமணி
    தத்துவ ஞானம் 
    வகாரம்
    கற்பம் 
    போன்ற 
    அவரது படைப்புகள் எளிமையானவை.

    சித்தர் பாடல்களின் மறைபொருட்களை 
    திரை விலக்கி 
    வெளிப்படுத்தி 
    அக்காலம் வரை 
    இருந்து வந்த 
    மூட விதிகளை 
    முடமாக்கித் 
    தெளிவாக்கினார்.

    தவறான புரிதல்களை சாட்டை எடுத்து 
    அடித்து நொறுக்கினார்.

    தப்பானவர்களை 
    விரட்டித் துரத்தினார்.

    வைத்திய முறைகளை எளிமையாய் சொன்னதால் சித்த வைத்தியர்களுக்கு யூகிமுனி 
    மானசீக குருவானார்.

    அமுரி 
    பிண்டம் 
    சாகாக்கலை 
    வேகாக்கால் 
    போகாப்புனல் 
    போன்ற சொற்களுக்கு அதுவரை கொண்டிருந்த அர்த்தங்களை 
    அனர்த்தங்கள் 
    என்று சொல்லி 
    சவுக்கடி வார்த்தைகளால் கண்டித்துவிட்டு 
    உண்மைப் பொருளை தெள்ளத் தெளிவாகியது யோகியின் மகத்துவம்.

    'அமுரி என்பது 
    மூத்திரமல்ல.. 
    சமுத்திர நீரே !

    'ச 'வை  எடுத்துவிட்டு 
    மூத்திரம் ஆகிவிட்டனர்.

    அவர்களைக்
    கட்டி வைத்து 
    உதைக்க வேண்டும் '
    என சவுக்கைத்
    தூக்கினார் யூகிமுனி.

    'வழலை ' என்பதை 
    பிணம் என்றே 
    சிலர் சொல்லி விட்டனர்.

    பிண்டம் என்பதை 
    'இறந்த சிசு' என்று 
    புரிதல் செய்து
    பணம் பண்ணும் பாவிகள் மனம் இழந்து 
    மதி இழந்து 
    இறந்த சிசு தேடி 
    பாவம் செய்தார்கள்.

    உண்மையில் 
    பிண்டம் என்பது 
    'இரும்பு' எனப் 
    போட்டு உடைத்தார். 

    மறை பொருள் யாவும் 
    இவர் திருவாயில் 
    திரை நீக்கிய
    உரைபொருள் ஆயின.

    பூடகங்கள் இவரிடம் 
    அறவே இல்லை.

    ரசவாதம் பற்றி 
    யூகிமுனி அளவிற்கு 
    எளிமையாய்ச் 
    சொன்ன சித்தர்
    எவரும் இல்லை 
    என்பது பேருண்மை.

    தேன் சுரக்கும் 
    யூகிமுனியின் 
    கவிதைகளில் 
    சித்தர் பரம்பரை பற்றிய 
    அவர் பாடல்கள் 
    தெள்ளிய நீரோடை போல் ஓயாமல் பாயும்.

    கைலாயப் 
    பரம்பரை பற்றிய 
    அவர் பாடலின் 
    விளக்கம் வித்தியாசமானது.

    'சிவன் உமைக்குச் சொன்னதை 
    உமை நந்திக்குச் 
    சொன்னார்.

    அது 
    அசுவினி 
    விசுவின் 
    தன்வந்திரி 
    அகத்தியர் 
    புலத்தியர்
    தேரையர் 
    என அடுத்தடுத்து தொடர்ந்தது.'

    இது யூகிமுனி 
    சொன்னது.

    'அஸ்வினியின் சீடர் காலாங்கிநாதர்.

    அவரிலிருந்து
    போகர் 
    புலிப்பாணி
    கொங்கணர்
    சட்டைமுனி 
    கருவூரார் 
    பாம்பாட்டி என்று 
    இன்னொரு 
    இணை வழி 
    சித்தர் பாரம்பரியம் 
    உண்டு.'

    680 ஆண்டுகள் 
    வயது கொண்டு
    2 தலைமுறைகளைக் கொண்டவர்.
    கண்டவர். 

    குறும்பர் ஜாதி 
    என்பதும் 
    சிங்கள குலத்தில் 
    பிறந்த கன்னித்தாய் பெற்றெடுத்த பிள்ளை என்பதும் 
    உலவும் தகவல்கள்.

    தமிழின் 
    ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று பெருங்கதை.

    அக்கதை நாயகன் 
    வத்சல மன்னனாகிய உதயணனின் முதலமைச்சராக 
    இருந்தவர் யூகி.

    அவரே 
    பின்னாளில் 
    துறவறம் பூண்டு உபதேசங்கள் பெற்று யூகிமுனி ஆனதாக 
    ஒரு வரலாற்று யூகம். 

    போகர் பெருமான் 
    யூகியின் பிறப்பைச்
    சொல்வது 
    ஆடுமேய்க்கும் 
    குறும்பர் என்றே.

    யூகிமுனி நீண்டகாலம் இல்லறம் கண்டவர்.

    இருப்பினும் 
    துறவறம் பூண்டு சிறந்தவர்.

    துறவறம் பூண்டு 
    சமாதிக்கு இடம் தேடிய யூகிமுனி மலைகளுக்கிடையே புகுந்தார்.

    அங்கே ஒரு 
    வித்தியாசமான 
    குத்துக்கல்.

    அக்கல் மேலமர்ந்து தியானிக்கையில் 
    மலையே அதிரும் 
    மாபெரும் ஒலி.

    ஒலியைத் 
    தொடர்ந்து 
    ஆயிரம் கோடி 
    சூரிய ஒளியாய்
    ஒரு முனிவர் 
    அங்கு தோன்றினார்.

    அவர் 
    சம்பார முனிவர்.

    அவரே யூகியை 
    யோகம் நிறைந்த 
    சித்தராய் மாற்றினார். உபதேசங்கள் அருளினார்.

    சமதாக்கினி முனிவரும் திரணாக்கிய முனிவரும் யூகிமுனியின் சீடர்கள்.

    எட்டு.
    இரண்டு.

    எட்டையும் இரண்டையும் எளிதாய் விரிவாய் விளக்குவார் யூகிமுனி.

    அவரளவுக்கு 
    எவருக்கும் 
    புரிகிற மாதிரி 
    உரைத்தவர் 
    உலகினில் சிலரே.

    இதற்குள் இருக்கும் ரகசியத்தை
    யூகிமுனி
    வெளிப்படுத்திய 
    பாங்கைப் பாருங்கள்.

    முதல் ரகசியம்.

    எட்டு என்பது ரவி.
    இரண்டு என்பது மதி.

    செம்புக்கு ரவி என்றும் வெள்ளிக்கு மதி 
    என்றும் பெயருண்டு.

    இரண்டும் சேர்வதே 
    வாதம்… 
    ரசவாதம்.

    எப்படி என்பதும் 
    எவ்வளவு என்பதும் ரகசியத்திற்குள்
    ஒளிந்திருக்கும் ரகசியம்.

    செம்புடன் கந்தகம் 
    உருக்கின் செம்பு சாகும்.

    அத்துடன் அயத்தைக் கலப்பின் 
    செம்பொன் கிடைக்கும்.

    அதோடு 
    எட்டுக்கு இரண்டு 
    வெள்ளி சேர்த்தால் 
    ஏழு மாற்று தங்கம் கிடைக்குமாம்.

    'ரசவாதம் செய்பவர்கள் சிவனுக்கு ஒப்பாவர்.'

    இது யூகி சொன்ன 
    முதல் விளக்கம்.

    எட்டான ரவி என்பது 
    இடகலை 
    இரண்டான மதி என்பது பிங்கலை.

    இடகலையும் பிங்கலையும் சுழிமுனையில் சேர்ந்தால் யோகம்.

    அடுத்த ரகசியம் வாசி.

    வாசி 
    நீ வாசிக்க வாசிக்க வாசியோகம் கைவரும். 
    இந்த
    மூன்றாவது ரகசியம்.
    முக்கியமானது. 

    எட்டே நாதம்.
    இரண்டு என்பது விந்து.

    பெண்ணின் நாதமும் ஆணின் விந்தும் 
    சேர்ந்தால் உயிர்.

    உலகம் முழுதுக்கும் 
    இதுவே விதி.

    உலகுக்கே 
    இதுதான் விதி.

    புல்
    பூண்டு
    பூச்சி 
    புழுக்கள் 
    மனிதர் 
    உள்ளிட்ட 
    அனைத்து உயிர்களுக்கும் இதுவே நியதி.

    நாத விந்துக்கள் 
    சேர்க்கையே 
    உயிராய் காணப்பெறும் உயிர்கள் அனைத்தும்.

    இது யூகி 
    வெளிப்படுத்திய 
    உயிர்த் தத்துவம்.

    அடுத்த ரகசியம் 
    ஆன்மீக ரகசியம்.

    தமிழில் அகர எழுத்து
    'அ '
    எட்டைக் குறிக்கும். 

    உகர எழுத்து 
    'உ'
    இரண்டைக் குறிக்கும்.

    அகரமும் உகரமும் சேர்ந்து மகரத்தில்
    முற்றுப்பெறும் போது ஒலிப்பதே 
    'ஓம்' என்ற பிரணவம்.

    அதுவே 
    ஜோதியாய் 
    ஒளி வெள்ளமாய் 
    அண்ட சராசரங்களில் 
    உள்ள 
    அனைத்தையும் தழுவி 
    அகில உலகிலும் 
    வியாபித்து 
    ஓங்கார நாதமாய் 
    சக்தி சொரூபமாய் 
    சிவ சொரூபமாக 
    விளங்கும்.

    எட்டுக்கும் இரண்டுக்கும் உள்ள இன்னும் 
    எத்தனை ரகசியங்களோ, யூகிமுனியே அறிவார்.

    திருவண்ணாமலையே 
    திவ்ய சரித்திரம் படைத்த யூகிமுனியின் சமாதித் தலம். லயமான திருத்தலம்.

    யூகிமுனி சித்தரை
    திருவண்ணாமலை 
    சென்று வணங்குவோருக்கு ஞானமார்க்கம் சித்திக்கும்.
     

  • கண்ண பரமாத்மாவின் கருணை பெற்ற சித்தர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

     சித்தர் இலக்கியம் 
    தமிழின் பொக்கிஷம்.

    இதைத் 
    தொட்டவர்கள் சிலரே.

    நேர் பொருள் 
    உட்பொருள் 
    மறைபொருள் 
    என 
    ஆயிரமாயிரமாய் 
    விரியும் 
    களஞ்சியங்கள் அவை.

    தமிழ் பேசும் 
    சித்தர் இலக்கியம் 
    வேறெந்த மொழியும் 
    பகராதது.

    மருத்துவமும் 
    ஜோதிடமும் 
    வானியலும் 
    வாழ்வியலும் 
    மரணமில்லாப் 
    பெருவாழ்வும் 
    ஞானமும் 
    யோகமும் 
    தோண்டத் தோண்ட ஊரும் 
    ஞானக் கேணி அது.

    சித்தர் பாடல்கள் பெரும்பாலும் கடினமே.
    நேரடி அர்த்தம் 
    அனர்த்தமாயிருக்கும்.

    எளிமை நிறைந்த 
    பாடல்கள் உண்டு.

    குதம்பைச் சித்தர் 
    பாடல்கள் 
    அதற்கு எடுத்துக்காட்டு.

    அவர் பாடிக்
    கிடைத்திருப்பது 
    32  பாடல்களே..
    246 கன்னிகளே.

    அவை அத்தனையும் 
    மிளிரும் ரத்தினங்கள்.

    அவை 
    பாடப்புத்தகத்தில் 
    பதிவானால்
    இளைய சமுதாயம் இருள்நீங்கி ஒளிரும்.
    புது உலகே பூக்கும்.

    குதம்பைச் சித்தரின் 
    திவ்விய சரித்திரம் 
    மிகச் சில குறிப்புகளையே கொண்டது.

    ஆயினும் ஆன்மிகச் சிறப்புகள் நிறைந்தது.
    அந்த ஆண்மகவு பிறந்தபோது 
    தாய்க்கும் தந்தைக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.

    கருகரு கேசம்.
    குழி விழும் கன்னம். 
    சுறுசுறு கண்கள்
    என பார்த்தவர் எவரையும் ஈர்த்தது குழந்தை.

    வீட்டுக்கு வந்த தெய்வம் அத்தெருவுக்கும் 
    அவ்வூருக்கும்
    குழந்தையாய் இருந்தது.

    அம்மாவுக்கு 
    கொஞ்சம் சஞ்சலம்.

    ஊர்க் கண்கள் 
    பட்டால்….!?

    சீவிச் சிங்காரித்து 
    பொட்டு வைத்து
    கன்னத்தில் கருப்பாய் திருஷ்டி பொட்டிட்டு தொட்டிலிடுவாள்.

    அப்போதும் 
    அக்குழந்தை 
    காதிலாடும் 
    குதம்பை
    ஊர்க் கண்ணை 
    ஈர்த்திழுக்கும்.

    ஆண் குழந்தைக்கு 
    என்ன 
    பெண்போல காதில் 
    குதம்பை ?!

    ஆனாலும் 
    அழகோ அழகு.
    ஊர் மெச்சும்.
    திருஷ்டி கூடும்.

    ஆண்குழந்தை 
    எனினும் 
    பெண் போல் 
    உடை அணிவித்தும் அலங்கரித்தும் 
    பார்ப்பது 
    அக்கால வழக்கம்.

    'குதம்பைக் கண்ணு '
    என்றழைப்பாள் தாய்.

    'குதம்பைப் பாப்பா '
    என்றது சுற்றம்.

    பெண்கள் 
    காதில் அணியும் 
    அணிகலனே குதம்பை.

     ஆக 
    'குதம்பை '
    என்ற பெயரே 
    அந்த ஆண் குழந்தைக்கு நிலைத்துப் போனது.
    நீடித்து நின்றது.

    கண்ணபிரான் 
    அவதரித்த 
    யது குலத்தில் 
    தோன்றியது அக்குழந்தை.

    அப்பா கோபால்…
    பக்தி அதிகம் கொண்டவர்.

    அம்மா முத்தம்மாள்… சொல்லவே வேண்டாம்.. 
    கோயில் என்பதே
    இன்னொரு வீடு குதம்பையின் தாய்க்கு.

    குழந்தை வளர்ந்தது.

    நாள் முழுதும் கோயில்.
    அங்கே ஆராதனை அபிஷேகம் அர்ச்சனை.

    அவற்றைப் பார்க்கும் 
    ரசிக்கும் 
    குழந்தையின் உள்ளத்திலும் அத்தனையும் நடந்தன.

    பக்திப் பிழம்பாய் 
    ஞானக் குழந்தையாய் வளர்ந்தது 
    தெய்வ அருளால்.

    16 வயதில்
    பருவக் குதம்பையின்
    உடல் ஆணென்று இருந்தாலும் ,
    பெண் போல 
    வலம் வந்தது 
    இறை சித்தம்.

    பசுக்கள் வளர்ப்பது…
    பால் கறந்து அதை 
    ஏழை எளியோருக்கும்
    பசி ஏந்தி வரும் அடியார்களுக்கும் வழங்குவது 
    குதம்பையின் வழக்கம்.

    வேதம் ஓதும் 
    வேதியருக்கு
    எழும் 
    உடல் சூடு தணிக்க வெண்ணெயும் நெய்யும் 
    வழங்கி மகிழ்வதும் 
    குதம்பையின் பழக்கம்.

    இறை அடியாரிடம் 
    புராணம் கேட்பது 
    விளக்கம் பெறுவது 
    ஆசிகள் யாசிப்பது 
    குதம்பையின் 
    அன்றாட நிகழ்ச்சி நிரல்.

    அப்படித்தான் 
    ஒருநாள் 
    ஒரு சித்தர் வந்தார்.

    அவர் மாயவர் என்கிறது 
    ஒரு புராணக் குறிப்பு.

    அவருடனான 
    அரிய சந்திப்பு குதம்பையின் வாழ்வில் 
    ஒரு திருப்பம் கண்டது.

    ஆம்…
    ஒரு மாபெரும் 
    மாயம் செய்தார் 
    மாயவர்.

    "குதம்பாய்…
     இது 
    போன ஜென்மத்து தொடர்ச்சி.

    சென்ற பிறப்பில் 
    நீ தவத்தில் இருந்தாய். 
    உயர் சிவத்தை 
    நெருங்கி வந்தாய்.

    வெண்ணை திரண்டு வரும்போது 
    தாழி உடைந்த கதையாய் எல்லாம் கைகூடி 
    வந்த வேளை 
    காலன் வந்தான் குறுக்கே..

    அவன்  முடித்தான் ஒருநாள் 
    உன் கணக்கை. 

    சிவம் தேடிய நீ 
    சவம் ஆனாய்…

    இருப்பினும் 
    உன் தவ ஆற்றல் 
    பிறவிகள் கடந்தது. ஜென்மங்களில் தொடர்வது.

    அதனாலே நீ 
    மீண்டும் பிறப்பெடுத்து உள்ளாய்…

    உனக்கு அற்புதங்கள் உரைக்கின்றேன். மந்திரங்கள் தருகிறேன்.

    இனி எல்லாம் 
    உனக்கு சித்தியாகும்."

    தவயோகி 
    காலில் விழுந்தார் 
    குதம்பை.

    காதில் மெலிதாய் சொன்னார் மாயவர்.

    ஒவ்வொரு சொல்லும் குதம்பையை 
    மெருகேற்றியது.
    உருமாற்றியது.

    அருள் உபதேசத்தால் குதம்பையின் 
    உடல் முழுதும் 
    ஒவ்வொரு அணுவும் தெய்வீக ஆற்றல் பெற்றன.

    பிறவியின் 
    தொடர்ச்சியால் 
    பிறவிப்பயன் 
    அடைந்தார் குதம்பை.

    குருவாய் வந்தவர் விடைபெறும் 
    தருணம்…

    "குருவே.….குருநாதா.…. 

    இப்படி ஒரு சேர 
    அத்தனை அருளும் 
    தந்தருளி உள்ளீரே…!

    கைமாறு 
    என் செய்வேன்
    குருவே?

    காணிக்கை 
    எது தருவேன் ?"

    கண்ணீரால் குருவின் 
    பாத மலர்களைக்
    குளிர்வித்தார் குதம்பை.

    தலையில் 
    கை வைத்து 
    உச்சி முகர்ந்து 
    உள்ளங்கையால் 
    குதம்பையின் 
    முதுகை மெல்லத்
    தடவியபடி 
    மாயவர் சொன்னார்.

    "குதம்பாய்…
     நான் 
    உனக்குரைத்த 
    தத்துவங்கள் 
    சித்தாந்தங்கள் 
    உலகில்
    உலவுபவையே.

    ஆனால் அவை மறைபொருளாய் 
    பாறையிலும் கடுமையாய் யாருக்கும் புரியாமல் 
    ஒளிந்து கிடக்கின்றன.

    அவற்றை 
    ஒளிர்விக்க வேண்டியது 
    உன் பொறுப்பு. 

    பயமுறுத்தும் 
    பாடல்களை ஓரங்கட்டி 
    எளிய மொழியில் 
    நீ சொல்…

    மக்கள் பயனடைவர்.
    நீயும் பிறவிப்பயன் அடைவாய்…

    வரட்டுமா…. குதம்பாய்"

    விடைபெற்றார் 
    விடைகளின் நாயகர் 
    மூலவர் மாயவர்.

    அதன் பின்னர் 
    குதம்பையின் வாழ்வு மாறிப்போனது.

    பருவ வயதில் 
    ஒரு யோகியாய் 
    ஞான ஒளியாய் 
    உலா வரலானார்.

    ஊரும் உறவும் 
    அவர் நினைத்த 
    மாதிரி இல்லை.

    கோபம் 
    சாபம் 
    மோகம் 
    போட்டி 
    பொறாமை 
    என 
    மக்கள் உழல்வதும் 
    சாதி 
    சமயம் 
    இனம் 
    என 
    சகதியில் உழல்வதும் குதம்பையை விரட்டியது.

    எங்கேனும் அமைதியாய் ஒளிந்து கொள்ளவே விரும்பினார் 
    ஒளிபொருந்திய குதம்பையார்.

    ஒரு நள்ளிரவு 
    காட்டிற்குள் படையெடுத்தார் 
    ஞானக் கோட்டை அமைக்க.

    அங்கே ஓர் ஆலமரம். பல்லாண்டு 
    வாழ்ந்து வரும் பரந்துபட்ட மரம்.

    அதில் ஓரிடத்தில் 
    ஒரு பெரும் பொந்து. நுழைந்தவர் தடையேதும் வந்து தொல்லை 
    தராதிருக்க 
    ஒரு சந்து கூட 
    இல்லாததாக்கி 
    அடைத்து 
    அவ்விடம் அமர்ந்தார்.

    அகம் நிறைந்தார்.
    தவம் தொடர்ந்தார்.

    எத்தனை நாட்களோ
    எத்தனை ஆண்டுகளோ கழிந்தன அமைதியாய்.

    ஒருநாள் 
    குதம்பை  
    குதம்பைச் சித்தராய் வெளிவந்தார்.

    நேரிலும் 
    பின் குதம்பையாரின் மாதவத்திலும் 
    வந்த மகா சித்தர் 
    மாயவர் அருளிய 
    உண்மையைல்லாம் 
    பாட்டில் படைத்தார்.

    அத்தனை பாக்களும் அவ்வளவு எளிமை. பாமரருக்கும் புரியும் பைந்தமிழ் கவிதை.

    மரப்பொந்தை விட்டு 
    வெளி வந்து 
    உலக சஞ்சாரம் 
    செய்த போதிலும்
    அவருக்குப் பிடித்ததென்னவோ 
    'அரு 'உரு தான்.

    தன் உடலை 
    அணுக்களாகக் கரைத்து அருள் நுண்ணுடல்
    கொண்டு 
    உலவிய நாட்களே 
    மிக மிக அதிகம்.

    பக்குவம் கொண்ட 
    மாந்தரை 
    அடையாளம் கண்டு அருளினார்.
    பற்பல ஆற்றல்களை 
    அவர்கட்கு வழங்கினார்.

    பன்னெடுங்காலம் 
    புவியில் உலா வந்தார் என்ற பெருமை 
    குதம்பைச் சித்தருக்கு 
    உண்டு.

    170 ஆண்டுகள் 
    என்கிறது 
    ஒரு சித்தர் குறிப்பு.

    பாடல்களில் 
    குதம்பாய் என 
    எழுதியதால் 
    அவர் பெயர் 
    குதம்பைச்சித்தர் 
    என்றானது 
    என்பார் உண்டு.

    குதம்பைச் சித்தர் 
    ஒரு பெண் உடலில் 
    கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பெண் சித்தராக வாழ்ந்தார் என்றும் 
    ஓர் ஆச்சரியக் குறிப்பு 
    உள்ளது.

    குதம்பையாரை 
    'பெண் ரூபம் 
    கொண்ட சித்து '
    என்று வர்ணிக்கிறார் 
    போகர் பெருமான்.

    மயிலாடுதுறையில் தான் குதம்பைச் சித்தரின் 
    அருவும் உருவும் 
    பாடி மகிழ்ந்தன.

    அவர்
    சித்தி பெற்றதும் மயிலாடுதுறை 
    மயூரநாதர் 
    ஆலயத்திலேயே ! 

    குதம்பைச் சித்தர் மரப்பொந்தில்
    தவத்தில் இருந்தபோதே மாயவரிடம் 
    வேண்டுகோள் ஒன்று வைத்தாராம்.

    பரந்தாமனின் 
    பாதம் சேர 
    வைகுண்டம் விரையவே
    அவர் வேண்டினாராம்.

     "குதம்பை …
    இப்போது நீ வரவேண்டாம்.

     உலகம் செழிக்க
    உன் பங்கு உண்டு.

    வருண மந்திரம் 
    சொல்லித் தருகிறேன்.

    அதை உச்சரித்தால் 
    மழை வரும்.
    உலகம் உய்யும்.

    நீ இருப்பது 
    விந்திய மலையில்..
    அங்கே 
    மலை போல் 
    யானைகள் நிறைய உண்டு. 

    நீ வருண மந்திரம் 
    உச்சாடனம் செய்.

    யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் 
    சக்தி உண்டு.

    உனது உச்சரிப்பு யானைகளை எட்டும்.

    பின் அவை பிளிறும்.

    பிளிறலில்
    மந்திரம் 
    மீண்டும் மீண்டும் 
    ஓங்கி ஒலிக்கும்.

    அதனால் அது போது 
    மழை கொட்டோ கொட்டென்று
    கொட்டும்.
    காடு செழிக்கும்.
    நாடு நலம் பெறும்.

    சொல்வாயா….?"

    குருநாதர் கேட்டார்.

    குரு சொல்லுக்கு 
    மறுபேச்சு நினையாத 
    சீடர் குதம்பைச்சித்தர் அவ்விதம் செய்தார்.

    காடெங்கும் 
    நாடெங்கும் 
    கடும் 
    மழை பொழிந்து கூடவே அருள் மழையும் சுரந்தது.

    இன்றுகூட 
    வாசியோகம் 
    பயின்றவர் 
    ஆழ்நிலையில் 
    குதம்பைச் சித்தரைக் குருவெனக் கொண்டு வணங்கித் தொழுதால் வறண்ட காலத்திலும்
    வான் மழை பொழியும்.

     நவகிரகங்களில் 
    கேது பகவான் 
    குதம்பைச் சித்தரின் 
    அம்சமே !

    சித்தபிரமை 
    மனோவியாதி 
    மன வளர்ச்சி குன்றியோருக்கு
    நல் நிலை ஏற்பட 
    நல் வாழ்க்கை அமைந்திட வழிபடத்தக்க 
    சித்தர் பெருமான் குதம்பைச்சித்தரே !

    ' எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க '
    என இயல்பாய் சொல்வதும் ஜீவகாருண்யமும்
    அவரது 
    வாழ்வியல் சூத்திரம்.

    இவ்விஷயத்தில்
    வள்ளல் பெருமானின் முன்னோடி 
    சித்தர் குதம்பையாரே !

    சான்றுக்கு 
    ஒரு பாடல்.

    கொல்லா விரதம் 
    குளிர் பசி நீக்குதல் 
    நல்ல விரதமடி 
    குதம்பாய் 
    நல்ல விரதமடி !

    இப்படி 
    எளிய பாடல்கள்.
    இன்னும் பல 
    ஞானப் பாடல்கள்.

    அவை 
    படிப்பதும் எளிது. 
    புரிவதும் எளிது. 
    தெளிதலும் எளிது.

    கேட்பதும் சுகமே.
    அதன்படி 
    நடப்பது நலமே.

    அதுவே 
    சித்தர் பாதை 
    என 
    குதம்பைச்சித்தர் 
    குறித்துக் காட்டும் 
    அருள்நெறி பாதை.

  • அழுகண் சித்தர்

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    அவர்
    ஒரு 
    சித்தர்.

    தாடியும் 
    முடியும் 
    சித்தர் கோலமும் 
    சித்தராயிருக்கும் 
    எனச் சொல்லாமல் சொல்லும்.

    ஓரிடத்தில் 
    தங்க மாட்டார்.
    ஒரு சொல்லும்
    பேச மாட்டார்.

    நடந்து 
    கொண்டே இருப்பார். ஊர் ஊராய் போய் உலவிக்கொண்டே இருப்பார்.

    யார் எதைக் கேட்டாலும் பதில் இருக்காது.

    உற்றுப் பார்ப்பார். உடன் சற்று 
    ஒதுங்கிப் போவார்.

    கண்களில் மட்டும் கண்ணீர் எப்போதும் உதிர்ந்து 
    கொண்டே இருக்கும்.

    ஆம்…. அழுதுகொண்டே இருப்பார்.

    அவர் 
    அழுகைக்கு காரணம் ?

    என்னவாயிருக்கும் ?

    அவர் அழுவது யாருக்காக ?

    அவர் 
    ஊருக்காக அழுதார்.
    உலகுக்காக அழுதார்.

    தனக்காகவும் அழுதார்.

    ஆனால் அதில் சுயநலம் இல்லை.

    ஞான மயமான உலகத்துக்காக அழுதார்.

    எல்லோருக்கும் ஞானநிலை வேண்டி மக்களுக்காக அழுதார்.

    எப்போதும் 
    அழுத கண்ணோடு 
    அலைந்து கொண்டிருந்ததால் 'அழு கண் '
    எனப் பெயர் பெற்றார்.

    இருப்பினும் 
    அவர் 
    பெயர்க்குரிய காரணம் பலவாறாகப் பரவியுள்ளது உண்மை.

    அவருக்கு குரல்வளையில் 
    ஒரு நிரந்தரப் புண்.

    அதனால் 
    அழுகுரல் போல் இருக்கும் 
    அவர் குரல்.

    எனவே 
    'அழு கணி '
    எனப் பெயர் வந்ததாக ஒரு தகவல்.

    அவர் பாடல்கள் எல்லாம் 
    ஒரே அழும் 
    பாவனை தான் !
    ஒப்பாரி போலிருக்கும்.

    அது 'அழும் கணி '
    ஆகி 
    ' அழுகணி '
     என மருவி இருக்கலாம்.

    அதனால் 
    அழுகணி சித்தர் 
    என்று ஆகியிருக்கலாம்.

    அழு கண்ணி 
    என்பது 
    ஓர் அற்புத 
    கற்ப மூலிகை.

    இம்மூலிகை மூலம் காயசித்தி பெற்றதால் மூலிகையின் பெயரே அவருக்கு வந்ததாக சொல்கிறார்கள்.

    அவரது பாடல்களுக்கு ஒரு சிறப்பு உண்டு.

    அழகிய 
    கண்ணிச் சிந்துக்களால் 
    ஆனவை அவை.

    சுவை கொண்ட அப்பாடல் தன்மையால் 'அழகிய கண்ணீர் சித்தர் '
    ஆனார் என்பர் 
    ஒரு சிலர்.

    அழகிய கண்ணிச் சித்தரே
    பின்னாளில் 
    அழுகணி ஆகியிருக்கும் என்பது அவர்கள் வாதம்.

    எக்காலத்திலும் மாறாத அழகை அணிந்து கொண்டிருந்ததால் அழகுகணிச் சித்தர் என்ற பெயர் பெற்று அது 
    அழுகணி சித்தர் 
    என்று மருவியதாக ஒரு குறிப்பும் உண்டு.

    பெயரைப் பற்றி இத்தனை தகவல்கள் இருப்பினும் 
    அவரைப் பற்றிய தகவல்கள் பெரிதாக ஏதுமில்லை.

    ஞான சூத்திரம் அழுகண் யோகம் அழுகண் சத்தியம் அழுகண் சித்தர் பாடல் ஆகிய நூல்கள் 
    அவர் அருளியன.

    எளிமையான பாடல்கள் எனினும் சிலருக்கே 
    உள்ளர்த்தம் புரியும்.

    பாடலின் 
    கண்ணிச் சிந்து எவரையும் ஈர்க்கும்.
    கைத் தாளம் 
    போட வைக்கும்.

    சிறிதேனும் 
    பொருள் உணர்த்தும். கருத்தினில் பதியும்.

    பற்பல சித்தர்கள் 
    பற்றி 
    உலகுக்குத் தெரிவது போகர் அகத்தியர் கருணையால் தான்.

    அவர்கள்தாம் 
    பிற சித்தர்கள் வாழ்க்கை 
    தத்துவம் 
    நூல்கள் 
    பற்றி நிரம்ப பாடியுள்ளார்கள்.

    அவ்விருவரும் கூட அழுகண்ணாரைப் பற்றி பெரிதாக எக்குறிப்பும் தரவில்லை.

    கருவூரார் மட்டும் கருவூரார் வாதகாவியம் அழுகின்ற 
    கண்ணினராய் இருந்ததாகச் சொல்கிறார்.

    அழுகண் சித்தருக்கு இரண்டு மனைவிமார்கள் 
    96 பிள்ளைகள் என்கிறார் 
    கோரக்கர் பெருமான்.

    தமிழ் சித்தரான அழுகண்ணரின் திருப்பாடல்களும் திருப்பாதங்களும் தமிழ்நாட்டின்
     பல ஊர்களில் பதிந்துள்ளன என்கிறது ஒரு செய்தி.

    கால் போன போக்கில் கண் போன திசையில் பயணித்த
    அழுகண் சித்தர் மருத்துவராய் திகழ்ந்தார்.

    காயசித்தி முறைகளுக்கு 
    அவரது படைப்புகள் ஆதாரமாய் இருக்கின்றன.
    தவ ஆற்றலை ,
    நெடிது வாழ்தலை விரிந்து உரைக்கின்றன.
    எதார்த்த சொற்களில் தமிழ் சிந்து.

     கூடவே அழுகின்ற ஓசை இரங்கற்பா போல ஒப்பாரித்தொனி.

    ஆயினும் 
    உள்ளர்த்தம் ஏராளம் .
    கேட்பது சுகம் சுகம்.

    கேளுங்கள்…. அழுகண்ணரின் 
    ஒரு பாடல்..

    "புல்லரிடத்தில் போய் பொருள் தனக்கு கையேந்தி 
    பல்லை மிகக் காட்டி 
    பரக்க விழிக்கின்றேன்.

    பல்லை மிகக் காட்டாமல் 
    பரக்க விழிக்காமல் புல்லரிடம் போகாமல்

    என் கண்ணம்மா பொருளெனக்குத் தாராயோ ! "

    பாடலும் சந்தமும் ஒருபுறமிருக்க…

    அவர் 
    இப்பாடலில் 
    வேண்டும் பொருள் என்ன தெரிகிறதா ?

    பசியற்ற நிலையும் காற்றை உணவாகக் கொண்ட நிலையும்.

     இதுவே உட்பொருள்.
    இதுவே சித்தர் இலக்கியம்.

    இன்னொரு பாடல்.. உள்ளம் திறக்கும் உன்னத பாடல்.

    "ஊற்றைச் சடலமடி உப்பிருக்கும் பாண்டமடி 
    மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை.

    மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டே 
    என் கண்ணம்மா
    உன் பாதம் சேரேனோ !"

    இப்பாடலில் 
    அழுகண் சித்தர் வைத்துள்ள மறைபொருள்
    எளிதில் புரியாத ஒன்று.

    மாற்று மருந்து என்பது அருள் உணர்வை குறிக்கும்.

    இது குரு வழிகாட்டும் 
    மெய் உணர்வால் கிட்டுவது.

    அம் மாற்று மருந்தை பெற்று
     நரை திரை மூப்பு இல்லாத 
    வெட்டவெளி உணர்வோடு மரணமிலா பெருவாழ்வு பெற இறையடி 
    சேர வேண்டும்
    என்று 
    நம் சித்தர் 
    பாடுகிறார்.

    படிக்கும்போதே
    ஓர் அவலச் சுவை  அகத்தை நிரப்பும்.

    அதுதான் அழுகண்ணரின் தனிச்சிறப்பு.

    நாகப்பட்டினத்தில் காயா ரோகண 
    சுவாமி கோயிலில் அழுகண் சித்தருக்கு சன்னதி உள்ளது.

    இதுவே 
    அழுகண் சித்தர் லயமான இடம்.

    இக்கோயிலில் உரையும் இறையனார் இராமதேவரால் பிரதிஷ்டை கொண்டார்.

    அழுகண்ணர் 
    லயமான சன்னதி செல்வோர் 
    அழுகை இல்லாத வாழ்க்கையைப் பெறுவது உண்மை.

    'கண்ணம்மா '
    என்று 
    பாரதிக்கும் 
    தமிழுக்கும் வழிகாட்டியவர் அழுகண்ணரே !