Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • பங்குனி உத்திரமும் குலதெய்வ வழிபாடும்.!

    குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போக கூடாது. குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்க கூடாது – இதெல்லாம் கிராமத்தில் பேசப்படும் பழமொழிகள். இவை குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. குல தெய்வங்கள் என்பவை வெறும் வாய்வழிக் கதைகளின் நாயகர்கள் அல்ல; அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ, நமக்கு நினைவுறுத்த, பெரியவர்கள் குல தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். குல தெய்வங்களாக சிறு தெய்வங்களே பெருமளவில் விளங்குகின்றன.
    இந்த தெய்வங்களை வழிபட மரபுகள் உள்ளன. பெருங்கோயில்கள் போன்று நினைத்த நாளில் சென்று வழிபட வாய்ப்புகள் குறைவு. காரணம் பல குல தெய்வ கோயில்களில் நித்திய பூஜை இருப்பதில்லை, கோயில்களும் மலை, ஆறு, குளம், கண்மாய், காடு போன்ற இடங்களில்தான் இருக்கும். அதற்கு சரியான போக்குவரத்து இருக்காது. இந்த குல தெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின் போதும், இன்னொன்று பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்ளச் சொல்லிகொடுத்திருக்கிறார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். அன்று பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.

    ஆக, இப்போது பெண்ணுருவில் இருக்கும் நீர் என் பார்வதிதேவியின்றி, வேறில்லை என்று கூறினார். பின்பு ஹரிஹர சக்திகள் சங்கமமாகியது. விளைவாக மஹா சாஸ்தா அவதரித்தார். அந்த நாளே பங்குனி உத்திரம் என்று கூறப்படுகிறது. சாஸ்தா எனும் நாமத்துக்கு ஏற்ப அனைத்துலகங்களையும் காத்து ரட்சிக்கும் பொறுப்பை ஈசன் அளித்தார். ஸ்திதி – சம்ஹார மூர்த்திகளின் ஒருங்கிணைந்த சக்தியாக, உலகங்களை ஆட்சி புரியும்படி புவனேஸ்வரனாக பட்டம் சூட்டினார். இதன் பின்னர் ஐயன் சிவ சக்தியரை வலம் வந்து வணங்கி, பூலோகம் செல்ல புறப்பட்டார். காஞ்சிபுரம் வந்த சாஸ்தா, ஈசனை லிங்கமாக்கி பூஜித்தார்.

    சாஸ்தா சிவன், சக்தி, விஷ்ணு, மஹாலட்சுமி, பிரம்மன், கலைவாணி என முச்சக்திகளையும் உள்ளடக்கிய மாபெரும் சக்தி, அனைத்து பூத சேனைகளும், சிவன், விஷ்ணுவின் ஏவலர்கள், இயக்கியர்கள்(மாடன்கள், மாடத்தியர்கள்) இவர்கள் எல்லோரும் சாஸ்தாவின் அன்பு கட்டளை ஏற்றே செயல்படுபவர்கள். சாந்த சொரூபத்திலிருக்கும் சாஸ்தா, ஆங்கார ரூபத்தில் அய்யனார் ஆகிறார். சாஸ்தாவிற்கு எழுப்படும் ஆலயங்கள் அவருடன் குறைந்தது 21 சைன்யங்கள் நிலைபெற்றிருப்பர். சாஸ்தா தனித்து இருப்பதில்லை. அவ்வாறு இருந்தால் காவலுக்கு, பூதத்தார் மற்றும் கருப்பன், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் ஆகிய நாமங்களில் எவரேனும் ஒருவர் இருப்பர்.

    சாஸ்தா வழிபாடுக்கு முந்தைய நாள் வீடு, வாசலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தம்பதியர் முந்தைய நாள் இரவு தாம்பத்யம் வைத்திருக்கக் கூடாது. அவருக்கு தேவையான பூஜைப்பொருள்களை வீட்டில் வாங்கி வைத்து மறுநாள் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டும். குலசாமிகளும், அவரோடு சாஸ்தாவும் குடும்பமாக இருந்து நமக்கு அருள்வார். கோயிலுக்கு செல்லும்போது உடன் பிறந்தவர்கள், பெற்றோரோடு செல்லவேண்டும். திருமணம் செய்து கொடுத்த பெண் பிள்ளைகள் கணவர் வீட்டு சாஸ்தா கோயிலுக்குத்தான் பாத்தியப்பட்டவர்களாவர்கள்.

    ஆண் பிள்ளைகள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும், தாய், தந்தையினரோடுதான் செல்ல வேண்டும். மாமியார், மருமகள் உறவு சரியில்லை என்பதற்காக பெற்றோரை விட்டு விட்டு மனைவி, குழந்தைகளோடு தாய், தந்தை மற்றும் பங்காளிகளை விட்டு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் அதை தெய்வம் ஏற்காது. எந்த பலனும் கிடைக்காது. இதுதான் குல தெய்வ வழிபாட்டில் முக்கியமான ஒன்று. தேங்காய், பழம் கொண்ட அர்ச்சனைகளை மட்டும் குலதெய்வம் விரும்புவது இல்லை.

    காலையில் அந்தணரைக்கொண்டு கணபதி ஹோமம், அடுத்து மூலவர் முதல் பரிவார தெய்வங்களுக்கு நீர், எண்ணெய், மஞ்சள், இளநீர், பால் உள்ளிட்ட அனைத்து அபிஷேகமும் செய்து (மண் சிலைகளாக இருந்தால் வேண்டாம்) அதன் பின்பு மூலவர் சாஸ்தா மற்றும் பூதத்தார், சிவணினைந்த பெருமாள், தம்பிரான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சைவமும், மாடன், அம்மன் ஆகியோருக்கு அசைவமும் படைத்து, பல வகை மலர்மாலைகள் அலங்கரித்து, சாம்பிராணி வாசம் மிகுதியாக பூஜை நடைபெற வேண்டும். இவற்றையெல்லாம் விட கண்டிப்பாக கோயிலில் அடுப்பு கூட்டி சமையல் செய்து, அங்கே பந்தி பரிமாறி உணவு அருந்த வேண்டும். அதுவே குலதெய்வ வழிபாட்டில் பிரதானமானதாகும்.

    மற்ற தெய்வத்திற்கும், குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள். குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள். ‘குல தெய்வ சந்நதியில் குறை சொல்லி அழுதபடி, கண்ணீர் சிந்திப்பார். மறு கணமே அதற்கு தீர்வு கிடைக்கும்,’ என்பார்கள். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி அன்று வழிபடுவது மிகுந்த பலனைத்தரும்; நம் குலம் சிறப்பதோடு குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

    குல தெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்தது. அண்ணன், தம்பி, குடும்பத்தினர் எல்லாரும், ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமன்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குல தெய்வ கோயில் இருக்கும். எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். நகர்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம்.

    அத்தகையவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது. உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு பவுர்ணமி தோறும் இதை செய்து வந்தால் பவுர்ணமி போல் உங்கள் வாழ்க்கையும் பிரகாசிக்கும். நீங்கள் ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்வது நல்லது.

    குலதெய்வப் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மணிப்பர்சிலும் வைத்துக்கொள்ளலாம். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன் குல தெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். ஒருவருக்கு குலதெய்வம் இசக்கியம்மன் என்று வைத்துக் கொள்வோம் அது ஊருக்குள்ளேயே இருக்கும். அவர் அங்கு செல்ல முடியவில்லை என்பதற்கு இசக்கியம்மனும் சக்தியின் அவதாரம் தான் என எண்ணி, அருகிலிருக்கும் காளிகாம்பாள் கோயிலில் சென்று தனது நேர்த்திக் கடனை செலுத்தினால் அது குலதெய்வத்தை போய் சேராது.

    குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது. அல்லது வரும் வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்படிப்பட்ட மகானை வைத்து வழிபட்டாலும் அந்த வீட்டில் விமோசனம் கிடைப்பதில்லை என்பார்கள். பாரம்பரிய வழக்கத்தை மீறாமல், மாற்றாமல் வணங்கவேண்டியது முக்கியம். குல தெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் காலபைரவர் சந்நதியில் வியாழக்கிழமை அன்று குருஓரையின் போது அர்ச்சனை செய்து தனக்கு குல தெய்வத்தை காட்டும்படி வேண்டலாம். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு அகத்திக்கீரையை உணவாகக் கொடுக்கலாம்…

  • தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!!

    தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ??

    இருக்கு… இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க !

    களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை !

    கொட்டங்கச்சி எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது

    அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள்
    அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். !

    இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.!

    நம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்க்க்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க…!

    தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது.
    அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலுக்கும் அந்த மணலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு.

    சாதாரண ஆற்று மணலை விட , காட்டாறுகளில் காணப்படும் மணல் பாறைத்துகள்கள் அதிகம் நிறைந்தது, மேலும் சாதாரண மணலை காட்டிலும் கடினமானது.

    கோவிலை கட்டுவதற்குமுன் அந்த மணலை கொண்டு அடியில் நிரப்பியிருக்கிறார்கள்.
    இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் போர் போடும் வேலையை உடனடியக நிறுத்திவிட்டார்கள் !

    ஏனென்றால் ஆயிரம் வருடங்களாக இந்த பூமியில் ஏற்படும் அழுத்தங்களை தாங்கி , நான்குபுறமும் அகலிகளால் சூழப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அதுதான் !

    இவ்ளோ பெரிய கோவிலுக்கு மணலை கொண்டு அஸ்திவாரம் அமைக்க சோழ தேச பொறியாளர்கள் என்ன முட்டாளா?

    அந்த அதி அற்புத தத்துவமும், சோழர்களின் அறிவின் உச்சமும் அங்குதான் வெளிப்படுகிறது !

    அகலிகளால் சூழப்பட்டுள்ள தீவுபோன்ற அமைப்பில் காட்டாற்று மணல் அஸ்திவாரம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் அந்த மாபெரும் கற்றளியானது எத்தகைய பூகம்பங்கள் வந்தாலும் அந்த மணல்பரப்பின் மீது அமைக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய நிலை தடுமாறினாலும் தானே தன்னை நேராகிக்கொள்ளும் ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது !

    இப்போது அந்த தலையாட்டி பொம்மையை நினைவில் கொள்ளுங்கள்.

    அந்த பொம்மையை சாய்த்துவிட்டால் எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பால் ஆடி ஆடி நேராகி விடுகிறதோ அதே போல பெரிய கோவிலும் எவ்வளவு பெரிய பூகம்பத்தால் அசைய நேரிட்டாலும் தானாகவே சமநிலைக்கு வந்துவிடும் !

    சோழ தேச விஞ்ஞானிகளின் அறிவிற்கு உலகில் வேறு எவரும் ஈடாகார் என்பதற்கு இது ஒன்று மட்டுமே சான்று !

  • மகாவீரரின் மகத்தான போதனைகள்!

    இந்தியாவில் பக்தி மார்க்கம் செழிக்க ஆரம்பித்த ஏழாம் நூற்றாண்டு வரை ஜைன மதம் என்னும் சமண சமயம் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. சமண சமயம் தீர்த்தங்கரர் என்று அழைக்கப்பட்ட 24 சமய வழிகாட்டிளால் உருவாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வந்தது. தீர்த்தங்கரர் என்றால் வழிகாட்டிகள், பாலங்கள் என்று சொல்லலாம். அதாவது ஜீவனை அஞ்ஞானத்தில் இருந்து ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் பாலங்கள், அல்லது வழிகாட்டிகள் தீர்த்தங்கரர்கள். அந்த 24 தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர் என்ற மகாஞானி.
    அரச குடும்பத்தில் பிறந்த அவரது இயற்பெயர் வர்த்தமானர். அவர் தனது முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக பன்னிரண்டு ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டார். அந்த நாட்களில் தன்னுடைய புலன்களை எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தவ வாழ்க்கை வாழ்ந்தார். மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் என எல்லா உயிரினங்களுக்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல் அருளுடன் வாழ்ந்து வந்தார். புலன்களை முழுமையாக அடக்குவதும், எல்லா சூழ்நிலைகளிலும் தன் அருள் தன்மையை இழந்து விடாமல் இருப்பதும் ஆன்மிகத்தில் மிகப்பெரிய வீரத்தன்மையே அல்லவா? அதனாலேயே அவர் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். அவரை ‘ஜீனர்’ என்றும் அழைப்பதுண்டு. ஜீனர் என்றால் ‘ஜெயித்தவர்’ என்று பொருள். அதாவது ஆசை, துன்பம் ஆகியவற்றை வெற்றி கண்டவர் என்ற பொருளில் அப்படி அழைக்கப்பட்டார். இந்த வகையில் மேற்கொண்ட ஆழமான தேடலின் முடிவில் கைவல்யம் என்ற மிக உயர்ந்த ஞானத்தை அடைந்தார்.
    மகாவீரர் தனது எஞ்சிய நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே தான் அறிந்த ஆன்மீக விடுதலையின் மேலான உண்மைகளைப் பரப்பிகினார். வெறும் கால்களில் நடந்து மிக மோசமான சீதோஷ்ண நிலைகளிலும் சலிக்காமல் பயணம் செய்து போதனைகள் செய்தார். சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய போதனைகளைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் மேலும் பரவியது. மக்களுக்கு ஞான வழி காட்டிய மகாவீரர் தனது 72வது வயதில் நிர்வாணம் எய்தினார்.
    மகாவீரரின் போதனைகள் அவரது உடனடி சீடர்களால் அகம் சூத்திரங்கள் என வாய்மொழியாக பாதுகாக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் பல அகம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும், அழிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் கடைசியில் சிலவே மிஞ்சின. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன. இன்று நமக்குக் கிடைத்திருப்பவை எல்லாம் அப்படி மிஞ்சியவையே.
    மகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும் அது தனது நல்ல அல்லது தீய செயல்களின் விளைவாக கர்மா எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார். கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிகமான, உண்மை போல தோன்றுகின்ற இன்பங்களிலும், பொருள்களை சேர்ப்பதிலும் கவரப்படுகிறான். இவற்றின் தேடலில் அவனுக்குத் தவறான எண்ணங்கள் ஏற்படுகின்றன, பாவச் செயல்களில் ஈடுபாடு கூடுகிறது. இதனால் அவன் கர்மாவின் சுமை கூடி அவன் துன்பப்படுகின்றான்.
    இந்தத் துன்பங்களில் இருந்து விடுபட மகாவீரர் சரியான நம்பிக்கை (சம்யக்-தர்சனம்), சரியான அறிவு (சம்யக்-ஞானம்), மற்றும் சரியான நடத்தை(சம்யக்-சரித்திரம்’) ஆகிய மூன்றும் தேவை என்பதை வலியுறுத்தினார். இவை திரிரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டன.
    சரியான நம்பிக்கை இல்லாவிட்டால் சரியான அறிவு வாய்க்காது. சரியான அறிவு இல்லா விட்டாலோ நன்னடத்தை சாத்தியப்படாது. சரியான ஞானம் இருந்து நன்னடத்தை சாத்தியப்பட ஒரு மனிதன் ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும்:
    அகிம்சை அல்லது வன்முறை தவிர்த்தல்: எந்தவொரு உயிரினத்திற்கும் எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காதிருத்தல்.
    சத்தியம் அல்லது வாய்மை: தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும் செயலிலும் பின்பற்றுதல்.
    அஸ்தேயம் அல்லது திருடாமை: தனக்கு உரிமையில்லாததையும், கொடுக்கப்படாத்தையும் தனக்கு எடுத்துக் கொள்ளாதிருத்தல்.
    பிரம்மச்சரியம் அல்லது பாலுறவு துறத்தல்: பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல் என்ற இந்த உறுதிமொழி துறவிகளுக்கு முக்கியமாய் சொல்லப்பட்டது என்றாலும் மற்றவர்களுக்கும் முறையான அளவான பாலுறவு வலியுறுத்தப்படுகிறது.
    அபரிகிருகம் அல்லது பற்றற்றிருத்தல்: மனிதர்களிடத்தும், பொருள்களிடத்தும், மற்ற உடைகளிடத்தும் பற்றில்லாமல் இருத்தல்.
    மகாவீரர் ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள் என்றும் இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார். பெண்களை ஆத்மஞானத்திற்கு எதிராக நினைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் மகாவீரர் இப்படி சம அந்தஸ்து தந்தது அக்காலத்தில் புரட்சிகரமாக இருந்தது. மேலும் அவரை சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றினர். அவர் போதனைகளில் எளிமையும் தெளிவும் இருந்ததால் அடித்தள மக்கள் கூட அவரால் ஈர்க்கப்பட்டனர்.
    மகாவீரர் மனிதன் தன் கர்மபலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார். நம் இன்ப துன்பங்களுக்கு நாமே பொறுப்பு. நம் கருமங்கள் நம்முடைய முயற்சியினால் நாமே களைந்து விடுதலை பெறவேண்டும் என்று கூறினார். தனிப்பட்ட கடவுள், சடங்குகள், வேள்விகள் ஆகியவற்றை அவர் மறுத்தார்.
    மகாவீரர் கொல்லாமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கல், மண், உலோகம் போன்றவற்றிற்கும் உயிர் உண்டு என்று கருதினார். தண்ணீரைக் காய்ச்சினால் அதிலுள்ள உயிரினங்கள் இறந்து விடும். எனவே தண்ணீரைக் காய்ச்சக் கூடாது. சுவாசிக்கும் போது உயிரினங்கள் மூக்கு வழியே சென்று இறந்து விடும். எனவே மூக்கை திரையிட்டு மூட வேண்டும். நடக்கும்போது பாதம் பட்டு எறும்பு போன்றவை இறந்து விடும். எனவே தரையைச் சுத்தம் செய்து உயிரினங்களை அகற்றி விட்டே நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த அளவு பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிப்பதை அவர் மறுத்தார்.
    அதே போல ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டே சென்று திருப்தி அடைவது மனிதனால் முடியாத காரியம் என்று அவர் உறுதியாகக் கூறினார். ”மனிதனுக்கு தங்கமும், வெள்ளியும் கைலாச மலையளவு கிடைத்தாலும் அவன் போதும் என்று திருப்தியடைய மாட்டான். மேலும் மேலும் தேடி அலைந்து துன்பப்படுவான்” என்று அவர் கூறுகிறார்.
    அவருடைய போதனைகள் மனிதனின் வாழ்வை ஒட்டி இருப்பது அவரது தனித்தன்மை. பெரிய சித்தாந்தங்கள் பேசி சர்ச்சைகளை எழுப்பி குழப்பாமல் இப்படி வாழ்ந்தால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம், ஞானம் பெறலாம் என்ற வழிகாட்டுதலாக அவருடைய போதனைகள் அமைந்தன. பிறப்பினாலும் சமூக அமைப்பினாலும் வரும் வேற்றுமைகளை அவர் பொருட்படுத்தவில்லை. யாரும் முறையான சரியான வாழ்க்கை முறையில் ஞானம் பெற்று தேறலாம் என்ற நம்பிக்கையை அவருடைய போதனைகள் ஊட்டின.
    இந்தியா முழுவதும் பரவிய அவருடைய போதனைகள் தமிழகத்திலோ இலக்கியங்களில் இடம் பெறும் அளவுக்கு வேறூன்றின. அவர் கூறிய அறநெறிகளும், சிந்தனைகளும் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை போன்ற நீதி நூல்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலான காப்பியங்களிலும் இடம் பெற்று இருக்கின்றன.
    பேராசையும், சுயநலமும் அதிகமாகி, பிறர் நலத்தில் அலட்சியம் பெருகி அதன் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மகாவீரரின் போதனைகளை அனைவரும் ஓரளவாவது பின்பற்ற முடிந்தால் நாம் வாழும் உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்.

  • திருப்பதியில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் விசேஷ பூஜை

    திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறும் முக்கிய சேவை ‘விசேஷபூஜை’ . இந்த சேவை கோயிலின் உள்ளே இருக்கும் கல்யாண மண்டபத்தில் ஶ்ரீதேவி, பூதேவி உடனுறை ஶ்ரீமலையப்பஸ்வாமிக்கு நடைபெறுகின்றது. பிரதி திங்கட்கிழமை நடைபெறும் இந்தச் சேவை 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தொடங்கப்பட்டு ஆர்ஜித சேவையாக நடைபெற்று வருகின்றது. திருமலையான் ஆலயத்தில் இரண்டாவது அர்ச்சனை, இரண்டாவது நைவேத்தியம் நடைபெற்ற பிறகு மலையப்ப ஸ்வாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். வைகானச ஆகம் சாத்திர முறைப்படி ஹோமங்கள் நடைபெற்ற பின்னர், உத்ஸவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நிர்வகிக்கப்படுகிறது.. இந்தச் சேவையில் பங்கு பெறுபவர்களுக்கு பிரசாதம் அளிக்கப்படுகின்றது.

  • கபாலீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா…!

    கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 7ஆவது நாளான இன்று, நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது. 7ஆம் நாளான இன்று கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் நான்கு மாட வீதிகளில் உலா வந்த தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர். தேரைத் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிவந்த சிறுமிகள், பக்தர்களை மகிழ்வித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்களுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டு ஆர்வமுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

  • திருச்செந்தூரில் மார்ச் 30ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா

    முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. பங்குனி திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேல கோவில் பந்தல் மண்டப முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி- அம்பாள் திருவீதி உலா சென்று, கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

  • சதுரகிரி செல்லும் பக்தர்கள் கவனத்தற்கு

    சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பவுர்ணமி தின வழிபாட்டிற்காக பக்தர்கள் 4 நாட்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் 4 நாட்கள் அனுமதி வழங்கிஉள்ளனர். சதுரகிரி சுந்தரமாகலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு வழிபட செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை வழியில் செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே பக்தர்கள் செல்லவேண்டும். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலை ஏறவும், இறங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்போ, பின்போ பக்தர்கள் சென்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால், மலையில் பக்தர்கள் இரவில் தங்கும் நிலை ஏற்பட்டால் கோவில் வளாகத்தில் மட்டுமே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வேறு வன பகுதிகளில் பக்தர்கள் தங்ககூடாது. மலை பாதையில் செல்லும் முன்பு பக்தர்கள் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கண்டிப்பாக எடுத்து செல்லக்கூடாது. மேலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். வழியில் தென்படும் விலங்குகளை தொந்தரவு செய்யகூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர் .

  • திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கமல தேர் திருவிழா

    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கமல தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் பண்டையக் காலத்தில் இத்தலம் ஆலமரங்கள் நிறைந்திருந்த காடாக காட்சியளித்ததால் இப்பெயர் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இது 248-வது தலமாகும். தொண்டைமண்டல பாடல் பெற்ற தலங்களுள் இது 15-வது திருத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த திருத்தலமாகும். சிவபெருமான் நடனமாடிய பஞ்சசபைகளுள் இச்சபை இரத்தின சபையாகும். இக் கோயிலில் இன்று கமலத் தேர் திருவிழா நடைபெற்றது. தாமரை மலர் போன்ற தேரில் வண்டார் குழலி தாயார் வீற்றிருக்க கோயிலில் இருந்து புறப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இத் தேர் திருவிழாவில் திருவாலங்காடு, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

  • காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவீதியுலா

    பங்குனி உத்தர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவருடன் 63 நாயன்மார்கள் திருவீதியுலா நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்தர திருக்கல்யாணப் பெருவிழா மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உத்தர திருக்கல்யாணப் பெருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் பகலிலும், இரவும் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை வெள்ளி அதிகாரநந்தி வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து, இரவு கயிலாச பீட ராவண வாகனத்தில் சுவாமியும், காமதேனு வாகனத்தில் அம்பிகையும் பவனி வந்தனர். 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம் அலங்காரம், செய்யப்பட்டு, நான்கு ராஜவீதிகளில் பவனி வந்தனர். இதைத்தொடர்ந்து, இரவு வெள்ளித்தேரில் உற்சவர் எழுந்தருளினார்.

  • நீடாமங்கலம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர்,மகாமாரியம்மன் கோயிலில் கடந்த 24ம் தேதி கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. சித்திரை திருவிழா தொடங்கியது முதல் சிறப்பு பூஜை, சுவாமி வீதி உலா என திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் பால் குடம்,கரகம்,தீச்சட்டி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து மதியம் கஞ்சி வார்த்தல்,அன்னதானம் வழங்கல் நகழ்ச்சியும் மாலை பூச்சொரிதலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.