பங்குனி உத்தர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவருடன் 63 நாயன்மார்கள் திருவீதியுலா நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்தர திருக்கல்யாணப் பெருவிழா மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உத்தர திருக்கல்யாணப் பெருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் பகலிலும், இரவும் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை வெள்ளி அதிகாரநந்தி வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து, இரவு கயிலாச பீட ராவண வாகனத்தில் சுவாமியும், காமதேனு வாகனத்தில் அம்பிகையும் பவனி வந்தனர். 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம் அலங்காரம், செய்யப்பட்டு, நான்கு ராஜவீதிகளில் பவனி வந்தனர். இதைத்தொடர்ந்து, இரவு வெள்ளித்தேரில் உற்சவர் எழுந்தருளினார்.