Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் தயார்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிதாக நிறுவப்படும் கொடிமரம் எண்ணெய் தொட்டியில் வைக்கப்பட்டது.
    திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிதாக கொடிமரம் நிறுவப்பட உள்ளது. இதற்காக கேரளா மாநிலம் பத்தினம்திட்டை மாவட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி 75 அடி உயரம் கொண்ட தேக்குமரத்தை தேர்வு செய்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த மரத்தில் பச்சை கற்பூரம் மற்றும் மஞ்சள் அரைத்து பூசப்பட்டது. சபரிமலையில் கொடிமரம் செய்த சிற்பி பாபு, இந்த மரத்தை கொடிமரமாக வடிவமைத்தார். அதைத்தொடர்ந்து கொடி மரத்தை பல்வேறு மூலிகை கலந்த எண்ணெய் தொட்டியில் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதலில் கொடி மரத்தில் எண்ணெய் ஊற்றி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து கொடிமரம் எண்ணெய் தொட்டியில் வைக்கப்பட்டது.

  • கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா..

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவின் 5ஆம் நாளில் வெள்விடைப் பெருவிழா காட்சி நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவபெருமான், கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோவிலின் பங்குனி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5 ஆம் நாளான நேற்றிரவு வெள்விடைப் பெருவிழா காட்சி நிகழ்வு நடைபெற்றது. காமதேனு வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 28ஆம் தேதியும், வெள்ளி விமான உற்சவத்தில், கபாலீஸ்வரர் 63 நாயன்மார்களுடன் காட்சியளிக்கும், அறுபத்து மூவர் விழா மார்ச் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராமநவமி சிறப்பு திருமஞ்சனம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீராமநவமியையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில் கோயில் ஜீயர்கள் மற்றும் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்து கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஸ்ரீராம நவமியையொட்டி நேற்று காலை சுப்ரபாத சேவையுடன் சுவாமி துயில் எழுப்பப்பட்டு அர்ச்சனை, தோமாலை நடைபெற்றது. பின்னர், ரங்கநாத மண்டபத்தில் சீதா லட்சுமண சமேத கோதண்டராமர் மற்றும் அனுமந்த ஆழ்வாருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் ஜீயர்கள் முன்னிலையில் பிரதான அர்ச்சகர் ரமணதீட்சிதலு அபிஷேகம் செய்தார். பின்னர், துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், துணை செயல் அலுவலர் அரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு ராமரின் தீவிர பக்தரான அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் காத்திருந்து கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.

  • பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் மூன்று கருட சேவை

    பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஸ்ரீரங்கநாதர், சீனிவாசர், வரதராஜ பெருமாள் என மூன்று பெருமாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இந்த கோவில் வளாகத்தில் உள்ளது. இந்த நிலையில் ஆண்டுதோறும் கருட சேவை நடைபெறும் இந்த ஆண்டும் காலை வழக்கம் போல் சிறப்பு பூஜைகள், அபிசேகங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் இருந்து கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது. மேலும் 3பெருமாளும் கோவிலின் முக்கிய நான்கு வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதியில் கோவில் வளாகத்தை சென்றடைந்து. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ ரங்க நாதர், சீனிவாச பெருமாள், வரதராஜ பெருமாள் என 3பெருமாளும் இந்த கோவிலில் அமைந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்….

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் வரும் 30-ம் நடைபெற உள்ளது. பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெறும் அந்தவகையில் இந்தாண்டுக்கான பங்குனி உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதன் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வரும் 30-ம் தேதி நிகழ உள்ளது. அன்று மாலை கொடிமரம் முன்புறம் சுவாமி எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு கல்யாண மண்டபத்தில் உற்சவம் நடைபெறும். தொடர்ந்து நள்ளிரவு 12.00 மணியளவில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதியுலா நடைபெறும். ஏப்ரல் 3-ல் ஊஞ்சல் உற்சவமும், 4-ம் தேதி பாலிகைவிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கோலகலம்…..

    சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டு பங்குனி பெருவிழா மார்ச் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று கோலவிழியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார். தொடர்ந்து, நேற்று காலை 5.15 மணிக்கு பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர, கெட்டிமேள இசை ஒலிக்க பலத்த ஆரவாரத்துடன் காலை 5.15 மணியளவில் பங்குனி பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து புன்னைமரம், கற்பக மரம், வேங்கை மர வாகனங்கள் சுவாமி வீதியுலா வந்தார். பங்குனி பெருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாய்ப்பாட்டு, வயலின், நாதஸ்வரம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் சூரிய வட்டம், இரவு 9 மணியளவில் சந்திர வட்டம் நடக்கிறது. பின்னர் கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.

  • சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்கியது

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெறும். இந்த நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மார்ச் 14-ந் தேதி திறக்கப்பட்டது. 15-ந் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 5 நாள் நடைபெற்ற பங்குனி மாத பூஜை கடந்த 19-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவை முன்னிட்டு மீண்டும் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் சன்னிதான முற்றத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் திருவிழா கொடியினை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடியேற்ற நிகழ்ச்சியின் போது சன்னிதானத்தில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், “சாமியே சரணம் ஐயப்பா“ என சரண கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியாக 30-ந் தேதி பம்பை ஆற்றில் பகல் 11 மணிக்கு சுவாமி ஐயப்பன் விக்ரகத்துக்கு ஆறாட்டு வைபவம் நடக்க உள்ளது. ஆறாட்டு நிறைவு பெற்றதும் மீண்டும் மேளதாளம் முழங்க சாமி விக்ரகம் சன்னிதானத்துக்கு பவனியாக கொண்டு வரப்படும். பின்னர் கொடி இறக்கப்பட்டு 10 நாள் விழா நிறைவு பெறும்.

  • திருவானைக்காவலில் தேரோட்டம் கோலாகலம்

    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் பங்குனிப் பெருவிழா குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மண்டல பிரமோற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக பங்குனித் தேர் திருவிழா கடந்த 14ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின் சுவாமியும், அம்பாளும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தையொட்டி ஜம்புகேஸ்வரர் சுவாமி பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்பாள் மற்றொரு தேரிலும் அதிகாலையில் எழுந்தருளினர். முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேரோட்டம் நடந்தது. தேர்கள் தேரோடும் வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தது. அதன் பின்னர் காலை 5.35 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் மேல உள் வீதி, வடக்கு உள் வீதி, கீழ உள் வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றி வீதியுலா வந்தது. காலை 7.15 மணிக்கு சுவாமி தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து 7.15 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்பாள் வீற்றிருக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து காட்சி அளித்தார். அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மறுபடியும் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து வர காலை 11 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. சுவாமி தேர் நிலைக்கு வந்த பின்னர் அம்மன் தேர் காலை 11.30 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தின் போது யானை அகிலா தேருக்கு முன்னால் செல்ல, மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் சுவாமியும், அம்பாளும் தேரில் வீதி உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி பெரிய தேரில் வலம் வருவது திருவானைக்காவலில் மட்டும்தான். திருவானைக்காவல் தேரோட்டத்தின்போது 2 ஹெலிகேமராக்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதுநிலை கோயில் உற்சவங்களை வீடியோ எடுத்து அரசுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதனால் கோயில் உதவி ஆணையர் ஜெயபிரியா உத்தரவின்பேரில் தேரோட்டத்தை வீடியோ எடுக்க ஹெலிகேமராக்களை பறக்க விட்டதும் தெரியவந்தது.

  • திருமலை பக்தர்களுக்கு பேட்டரி பேருந்துகள்

    காற்று மாசை தடுக்கும் வகையில் திருப்பதி-திருமலை இடையே பேட்டரி பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் வாகனங்களால் காற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க, முதற்கட்டமாக 1,500 பேட்டரி பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கோல்ட் ஸ்டோன் எலக்ட்ரிக் பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரூ.3 கோடி செலவில் ஒரு பஸ்ஸை வாங்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 2 பஸ்கள் தயாராகி உள்ளது. இதில் ஒரு பஸ் திருப்பதியில் நேற்று காலையில் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பதி பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த பஸ் திருமலைக்கு சென்றது. புகை, சத்தம் இல்லாத, காற்றில் மாசு கலக்காத இந்த பஸ்ஸில் 32 பேர் செல்லலாம். கண்காணிப்பு கேமரா, சீட் பெல்ட், டிவி, ஆகிய வசதிகள் இதில் உள்ளன. இதில் உள்ள சென்ஸார் மூலம் விபத்து ஏற்படுவதை முன் கூட்டியே அறிந்து அதைத் தவிர்க்க முடியும். இதில் சாதாரண பஸ்களைப் போல ‘கியர்’கள் இல்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால், 275 முதல் 300 கி.மீ வரை இதை இயக்கலாம். இதேபோல மேலும் 40 பஸ்கள் வரும் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும் என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.

  • திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்?

    கூச்மாண்டன்… அரக்கர் குலத்தில் பிறந்த அரும் தவ புதல்வன். அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான்.
    அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.
    புண்ணியதேவனே….. தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள்.
    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல் லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன்.
    உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.
    அதுசரி…. அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே.
    யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான்.
    கூச்மாண்டா…. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன்பாவத்தின் சம்பளம்.
    வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை.
    எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வர மாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியிட்டான்.
    சரி கேள்… என்ன வரம் வேண்டும்?
    நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும்.
    இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையை யும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?
    பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கை யால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.
    இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்.
    சரி…. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ…… அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.
    அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.
    அதனால், இன்றும்கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.
    கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறையில் இதனா ல் வந்தது. அந்த பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும்.