Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கும்பகோணத்தில் மாசி மகத் தீர்த்தவாரி

    கும்பகோணம் மகாமககுளத்தில் மாசிமகம் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. மாசி மகத்தை முன்னிட்டு மகாமககுளத்தில் 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் தீர்த்தவாரி நடைபெறும். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக திருவிழா நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று மாசி மக தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மாசிமக திருவிழா மகாமக திருவிழாவில் தலைமை கோவிலான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரசித்தி பெற்ற மாசிமக தீர்த்தவாரி மார்ச் 1 ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நாளை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் 7 சிவன் கோவில்கள், மற்றும் 5 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ சுவாமிகள் வீதியுலாவாக வந்து மகாமக குளக்கரையில் எழுந்தருளுகின்றனர். பின்னர் அஸ்திரதேவர் மூர்த்திகளுக்கு மகாமககுளத்தில் 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அனைத்து கோவில்களின் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதில் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமாக பக்தர்கள் வந்திருந்து மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள்.

  • காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார்

    காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மகாசமாதி அடைந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூச்சு திணறல் காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுமதிக்கப்பட்டார். பல நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாசமாதி அடைந்தார்.

  • ஏழுமலையான் கோயிலில் 2ஆம் நாள் தெப்போற்சவம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்பல் உற்சவத்தின் இரண்டாவது நாளில் ருக்மணி சமேத கிருஷ்ணர் சுவாமி தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவ மூர்த்திகளில் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி ஆகியோர் மட்டும் தெப்பத்தில் எழுந்தருளி மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தெப்ப உற்சவத்தின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

  • குடந்தை மகாமககுளம் தோன்றிய வரலாறு ….

    ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்ம தேவன், கைலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை காணச்சென்றார். அவரிடம் உலகத்தை அழிக்கக்கூடிய பிரளய காலம் எனும் ஊழி வெள்ளம் வர உள்ளது. (ஊழி வெள்ளம் என்பது உலகத்தையே அழிக்கக்கூடிய சுனாமி போன்றது). பிரளய காலத்தில் வேதம் முதலிய பொருட்கள் யாவும் அழிந்துவிடும் என்றும், சிருஷ்டி பீஜம்(படைப்பதற்கு உரிய மூலப்பொருள்) அழிந்து விட்டால் எப்படி நான் எனது படைப்பு தொழிலை மேற்கொள்ள முடியும் என சிவபெருமானிடம் கவலையுடன் பிரம்மதேவன் முறையிட்டு அதற்கு தாங்கள்தான் ஒரு உபாயம் தெரிவிக்கவேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார்.
    அதற்கு சிவபெருமான் அமுதத்தையும், மண்ணையும் சேர்த்து பிசைந்து மாயமாகிய குடத்தை செய்து அதனுள் அமுதத்தை நிரப்பி, அதனுள் தான் அளிக்கும் விதையாகிய சிருஷ்டி பீஜத்தை வைத்து, வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்களை அதன் நான்கு புறமும் வைத்து,அதில் அதிகமான அமுதத்தை சேர்த்து, குடத்தின் மேல் மாவிலை, தேங்காய், வில்வம், பூணூல், தர்ப்பை முதலியவற்றை சேர்த்து அத்துடன் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களையும் கும்பத்தில் அடக்கி அதற்கு சிறப்பு பூஜை செய்து அக்குடத்தை ஒரு உறியில் வைத்து மகாமேருமலையில் ஓர் இடத்தில் வைக்க கூறினார். ஊழி வெள்ளம் ஏற்படும்போது அதற்கு வேண்டியதை யாம் செய்திடுவோம் என சிவபெருமான் பிரம்மனிடம் கூறினார். பிரளய வெள்ளமும் ஏற்பட்டது. மகாமேரு மலையில் வைக்கப்பட்ட சிருஷ்டி பீஜம் அடங்கிய குடம் மிதந்து தென்திசை நோக்கி செல்லும். அப்போது அந்த இடத்தில் நான் தோன்றி வேண்டுவதை நிறைவேற்றுவோம் எனக்கூறி பிரம்மதேவனை அனுப்பி வைத்தார்.
    சிவபெருமான் கூறியபடியே பிரம்மதேவனும் மகாமேருமலையில் சிருஷ்டிபீஜம், அமுதம் அடங்கிய மாயமாகிய குடத்தை வைத்து சிவபெருமானின் திருவருளை எதிர்நோக்கி காத்திருந்தார். இதையடுத்து சில நாட்களில் உலகத்தை அழிக்க பிரளயம் உருவாகி ஏழு கடல்கள் யாவும் ஒன்றாய் கலந்து உலகை மூழ்கடித்தது. பெருவெள்ளம், மழை, காற்று ஆகியவற்றால் அனைத்து ஜீவராசிகள், மலைகள் முதலான அனைத்தும் மூழ்கி உலகமே அழிந்தது. அப்போது சிவபெருமான் அருளியபடி தென்திசை நோக்கி அமுதம் நிரம்பிய குடம்(கலசம்) சுழன்று, சுழன்று மிதந்து வந்து திருக்கலயநல்லூர் எனும் இடத்தில் வந்தது. அப்போது அதன் மேல் இருந்த மாவிலை,தர்ப்பை திருக்கலசநல்லூர் தலத்தில் விழுந்து சிவலிங்கமாகின. மீண்டும் வடமேற்கு திசையில் சென்று ஓர் இடத்தில் அந்த குடம் தங்கியவுடன் ஊழி வெள்ளம் வடிந்தது. பிரம்மனும்,தேவர்களும் அதனைப்பின்தொடர்ந்து வந்தனர். அப்போது சிவபெருமான் கிராதமூர்த்தியாக எழுந்தருளி சற்று தொலைவிலிருந்து அம்பு எய்து அந்த அமிர்த குடத்தை உடைத்தார்.
    அப்போது மாயகுடம் இரண்டாக உடைந்தது. இந்த நிகழ்வு நடந்த இடம் கும்பகோணம். அந்த இடத்தில் தான் தற்போது கும்பேஸ்வரர் கோயில் அமைய பெற்றுள்ளது. சிவன் உடைத்த குடத்தில் வைக்கப்பட்டிருந்த அமிர்தம் ஆறாய்ப் பெருகி எட்டு திக்குகளிலும் பெருகிச்சென்றது. அதே போல் தேங்காய், வில்வம், உறி உள்ளிட்ட அனைத்தும் சிதறி விழுந்தன. இந்த கோயில்களில் உள்ள சுவாமிகள் புண்ணிய குளமான மகாமககுளத்திற்கு மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பவுர்ணமி நாளும், மக நட்சத்திர நாளும் இணைந்து வரும் நாளில் மாசி மக விழா கொண்டாப்படுகிறது. இதுவே சிம்ம ராசியில் குருபகவான் வந்தால் மகா மக விழாவாக கொண்டாடப்படும். வழக்கமாக இது 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். அன்று தான் குளத்தில் உள்ள 20 தீர்த்த கிணறுகளிலும் அந்த தெய்வங்கள் வந்து புனித நீராடுவார்கள் என்பது ஐதீகம்.

  • ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு உடலில் ஏற்படும் நன்மைகள்

    கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
    இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
    இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
    பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
    கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் தூய்மை அடைகிறது.

  • திருச்செந்தூர் சுவாமி – அம்பாள் வீதி உலா

    திருச்செந்தூர் மாசி திருவிழாவில் நேற்று சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், வெள்ளி சரப வாகனத்தில் தெய்வானை அம்பாளும் வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று 4ம் திருவிழாவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இருந்து இரவு 6.30 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி குமரவிடங்கபெருமானும், வெள்ளி சரப வாகனத்தில் தெய்வானை அம்பாளும் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் மாசிமக விழாவை முன்னிட்டு நேற்று 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசிமகத்துக்கு பெயர் பெற்ற இக்கோயிலில் கடந்த 20ம் தேதி விழா கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் உற்சவம் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று காலை வெள்ளிப்பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. அலங்கரிக்கப்பட்ட தனித்தனி படிச்சட்டங்களில் நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலாவாக ஆதிகும்பேஸ்வரர், சாரங்கபாணி கோயில் வீதிகளில் உலாவந்தது. அப்போது கோயில் யானை மங்களம் முன்னே செல்ல, திருக்குடந்தை சிவனடியார் பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடி சென்றனர். தொடர்ந்து 63 நாயன்மார்களும், அதன்பின்னர் சுவாமி- அம்பாளும் மங்கள இசைவாத்தியத்தோடு வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் நேற்று இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் யானை அம்பாரியில் வீதியுலா நடைபெற்றது. முக்கியவிழாவாக 28ம்தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டமும், மார்ச் 1ம் தேதி மகாமகம் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

  • மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழா…

    மேல்மலையனூரில் அருள்மிகு அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
    பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் 13 நாள்கள் நடைபெறும் மாசிப் பெருவிழா பிப்ரவரி 14-ஆம் தேதி மகாசிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி மயானக் கொள்ளை திருவிழா, 18-ஆம் தேதி தீ மிதித் திருவிழா நடைபெற்றன.
    விழாவின் ஏழாம் நாளான தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு அங்காளம்மன் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து, உற்சவ அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று பல்வேறு வித பூக்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
    பின்னர் மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோயில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரகோஷத்திடையே தேரில் எழுந்தருளினார். பின்னர், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

  • திருச்செந்தூரில் மாசி திருவிழா கொடியேற்றம்

    அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4.40 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4ம்படி, படிசெப்பு ஸ்தலத்தார் கோபாலகிருஷ்ணன் அய்யர் யானை மீது கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். கொடியேற்றத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டம் கொண்டுவரப்பட்டு 5.30 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. திருவிழா மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய விழாவான 5ம் திருவிழா 24ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனையும், 7ம் திருவிழாவான 26ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருக்கோயிலில் சண்முகப் பெருமான் உருகு சட்டசேவையை தொடர்ந்து சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு தங்கச்சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளுகின்றார். 8ம் திருவிழா 27ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்திலும், பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். 10ம் திருவிழாவான மார்ச் 1ம் தேதி காலையில் தேரோட்டம் நடைக்கிறது.

  • திருப்பதி ஏழுமலையானின் சிறப்புகள்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பெருமைகள் பலவற்றை நாம் அறிந்திருந்தாலும், இக்கோயில் குறித்தும் பெருமாள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள் ஏராளமாக உள்ளன. அதில் சில துளிகள் …
    உலகிலேயே அதிகமான பக்தர்கள் வழிபட செல்லும் இந்து கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். இங்கு ஒருநாளைக்கு சராசரியாக 50 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். விசேஷ நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
    திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் தினந்தோறும் சராசரியாக ரூ. 3 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதுவரை ஒரே நாளில் ரூ. 5.73 கோடி உண்டியல் வசூலே சாதனையாக உள்ளது.
    உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் இந்து கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் முதலிடத்தை வகிக்கிறது.
    திருமலையில் ஒரு நாளைக்கு ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. இதில், தொப்பி, ஏழுமலையானின் உருவப்படம் போன்றவை மட்டுமே ரூ. 70 லட்சம் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
    கோயிலில் மூலவருக்கு தினந்தோறும் 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு 383 வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. ஏழுமலையானின் தங்க பீதாம்பரம் மட்டும் 40 கிலோ எடை கொண்டதாகும்.
    ஏழுமலையானின் ஆபரணங்களில் குறிப்பிடத்தக்க ஆபரணம் 500 கிராம் எடைகொண்ட பச்சை மரகத கல்லாகும். இதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. இந்த பச்சைக்கல் மரகதத்தை விசேஷ நாட்களில் அலங்காரம் செய்ய பயன்படுத்துகின்றனர்.
    உற்சவரான மலையப்பர் உலா வரும் தங்க ரதம் 74 கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்டதாகும். சுவாமிக்கு உண்டியல் மூலம் தினமும் சராசரியாக 7 கிலோ வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகின்றனர்.
    ஆசியாவிலேயே திருமலை இலவச உணவு மையத்தில் தினமும் 5,000 கிலோ காய்கறிகளில் உணவு தயாரிக்கப்படுகிறது.