மகா சிவராத்திரி விழா வரும் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 13) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிவராத்திரி விழா, அன்று காலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து, அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோயிலில் லட்சார்ச்சனை நடைபெறும். 12.05 மணிக்கு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகம் நடைபெறும். மாலை 5 மணி முதல் கோயிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் மாலையில் பெண்கள், சிறுவர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபடுவர். இதுதவிர, கோயிலின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். கோயிலின் மூன்றாம், நான்காம் பிரகாரங்களில் பெண் பக்தர்கள் உப்பு, அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி சிவபெருமானின் பல்வேறு உருவங்களை வரைந்து மகிழ்வர். இந்த உருவங்களைச் சுற்றி தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.கோயிலில் மகா சிவராத்திரி தினத்தன்று நான்கு கால அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு அருணாசலேஸ்வரருக்கு முதல் கால அபிஷேகமும், இரவு 11 மணிக்கு 2-ஆம் கால அபிஷேகமும், புதன்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு மூன்றாம் கால அபிஷேகமும், அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால அபிஷேகமும் நடைபெறும். கோயில் மூலவர் சன்னதிக்குப் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை அணிவித்து சிறப்புப் பூஜைகள், அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்படும். அதன்படி, செவ்வாய்க்கிழமை (பிப்.13) இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். சரியாக 12.05 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும். மகா சிவராத்திரியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை கோயில் கலையரங்கில் பரதநாட்டியம், தேவாரப் பாடல்களின் இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயில் ராஜகோபுரம் எதிரே திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாகஸ்வரம், தவில் இசைச் சங்கம் சார்பில் 36-ஆவது ஆண்டு இசை விழா, கலைமாமணி டி.ஆர்.பிச்சாண்டி குழுவினரின் 108 நாகஸ்வர, தவில் கச்சேரி நடைபெறுகிறது.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
வீட்டிலேயே செவ்வாய் தோஷ பரிகாரம்
செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இப்பூஜைகளின் மூலம் செவ்வாய் திருமண தடையை நீக்குவது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருகின்றார். செவ்வாய் தசை நடப்பில் இருந்து சோதனைக்கு ஆளாகி இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்ய வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுப்பது நல்லது. சஷ்டியோடு செவ்வாய் வருவது மிக உத்தமம். செவ்வாய் அன்று நாகதோஷ வேளையில் (ராகு காலத்தில்) அல்லது செவ்வாய் ஹோரையில் பரிகார பூஜையை தொடங்குவது நல்லது. அன்று காலை குளித்து விட்டு வடக்குத் திசை பார்த்து அமரவும். உங்கள் முன்பு ஒரு மனை வைத்து மனைமேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும், தீபத்திற்கு முன்பு வாழை இலை போட்டு (வாழை இலை நுனி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்) இலையில் 27- அரச இலைகளை வைக்கவும். இலை மீது முழு துவரம்பருப்பு கொட்டைகளையும், தோல் நீக்காத முழு உளுந்து கொட்டைகளையும் வைத்து அதன்மேல் ஒரு சிறிய அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும். இலை மீது வாழை பூ வைக்கவும் மற்றும் பழம், வெற்றிலை பாக்கு பூஜை பொருட்கள் வைத்து, நிவேதனமாக துவரம்பருப்பில் செய்த வடை, அல்லது துவரம் பருப்பு பொங்கல் வைக்கவும். தீபத்திற்கு தீப ஆராதனை முடித்துவிட்டு வாழை பூவை கையில் எடுத்துக் கொண்டு தீபத்தை வலமிருந்து இடமாக 9 முறையும் இடமிருந்து வலமாக 9 முறையும் பிறகு வலமிருந்து இடமாக 9 முறையும் ஆக 27 முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். இப்படி செய்தால் தோஷம் நீங்கி செவ்வாய் பகவானின் அருளை பெறலாம்.
-
காஞ்சி மஹா பெரியவா சொன்ன, வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.
வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.
நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது.
காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை.
வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.
காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.
இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்.
வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.
காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்.
சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும். -
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப். 12-ந் தேதி திறப்பு
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைகள் முடிவடைந்து கடந்த மாதம் நடை அடைக்கப்பட்டது. சபரிமலை கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், கோவிலின் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்றாலும், பக்தர்களின் தரிசனத்திற்கு பின்னர் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் (13-ந் தேதி) காலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 17-ந் தேதி வரை தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜையும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
-
திருப்பதியில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம்
திருப்பதியில் ஆண்டு தோறும் நடக்கும் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு 2 முறை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் ஆண்டு தோறும் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு தெலுங்கு பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாதத்திலும் ஒரு பிரம்மோற்சவம் நடக்கிறது. தெலுங்கு பஞ்சாங்க வழக்கப்படி அமாவாசை முடிந்த மறுநாள் தெலுங்கு மாதப்பிறப்பு நிகழ்கிறது. அவ்வாறு அமாவாசைக்கு மறுநாள் மாதப் பிறப்பு தொடங்குவதால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டுக்கு 12 மாதங்களை காட்டிலும் கூடுதலாக 21 நாட்கள் வருகின்றன. அவ்வாறு வரும் 21 நாட்களை அதிக மாதமாக தெலுங்கு பஞ்சாங்கம் கணக்கிடுகிறது. இந்த நிலையில் 12 மாதங்களுக்கு ஒருமுறை வைகானாச ஆகம விதிப்படி திருப்பதியில் பிரம்மோற்சவம் நடத்தப் பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 12 மாதங்களை காட்டிலும் அதிக மாத நாட்கள் வருவதால் அப்போது 2 பிரம்மோற்சங்களை தேவஸ்தானம் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிறக்க உள்ள ஹேவிளம்பி தெலுங்குப் புத்தாண்டு அதிக நாட்களாக வருகிறது. அதனால் இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவம் மற்றும் அதிக மாத நாள் பிரம்மோற்சவம் என 2 பிரம்மோற்சவங்கள் திருப்பதியில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருப்பதியில் 15 மணி நேரத்தில் 39 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 241 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 26 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் 3.02 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
-
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடக்கிறது. முன்னதாக, சிவன் கோவிலில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோருக்குச் சிறப்புப்பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், பிரம்மோற்சவ விழா கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊழியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பக்த கண்ணப்பர் கோவில் கொடி மரத்தில் சிவ.. சிவ.. என்ற பக்தி கோஷம் முழங்க அர்ச்சகர்கள் கொடியேற்றினர். அதைத்தொடர்ந்து பக்த கண்ணப்பருக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம், தீபாராதனை ஆகியவை நடந்து முடிந்ததும், மங்கள வாத்தியங்கள் முழங்க, கைலாசகிரி மலையில் இருந்து உற்சவ மூர்த்திகளை ஊர்வலமாக ஸ்ரீகாளஹஸ்திக்குக் கொண்டு வந்தனர். சிவன் கோவிலின் நான்குமாட வீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
-
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?
முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக , மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை நந்து வீடு திரும்பவேண்டும். வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம். இந்த நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.
-
மாசி மகத்தின் மகத்துவம்
சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிமகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை பிறப்பதாக ஐதீகம். மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.
-
சிவனுக்குரிய மஹா சிவராத்திரி
சிவனுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே `மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். ‘ராத்திரி’ என்ற சொல்லுக்கு அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே, இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம். இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும். இதனால், இந்த ஜென்மம் மட்டுமல்லாது மறுஜென்மத்திலும் நிறைவான வாழ்வையும் பெற முடியும் அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நாள் அது.