ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைமுன்னிட்டு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45க்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு ரங்கா, ரங்கா கோபுரம் அருகே உள்ள தைத் தேர் மண்டபத்திற்கு 4.30க்கு வந்தடைந்தார். காலை 4.30 முதல் 5.15 வரை ரத ரோஹணம் நடைபெற்றது. பின்னர் ரங்கா, ரங்கா கோபுரம் அருகில் உள்ள அலங்கரிக்கப்பட்ட தை தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ரங்கா ரங்கா என்ற கோஷத்துடன் பக்தர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்த பின்னர் நிலையை வந்தடைந்தது.
தெப்ப உற்சவம் ….
தெப்ப உற்சவம் பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்பம் நடக்கிறது. மாலை 6 மணி அளவில் கோயிலில் உள்ள உற்சவ மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் மரக்கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சன்னதி வீதி வழியாக வந்து திருவானைக்காவல் ட்ரங்ரோடு மேல் புறம் உள்ள ராமதீர்த்த தெப்ப குளம் வந்து சேர்கின்றனர். அங்கு குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளுகின்றனர். குளத்தில் உள்ள நடுமண்டபத்தை 3 முறை வலம் வந்து நடுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
ஸ்ரீரங்கம் கோயிலில் தேரோட்டம்
-
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பந்தல் கால்நாட்டு விழா
மண்டைக்காடு பகவதி அம்ம்ன கோவிலில் மாசித்திருவிழாவுக்காக பந்தல் கால்நாட்டு விழா ஜனவரி 31-ந்தேதி நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா மார்ச்-4 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது. இதற்கான பந்தல் கால்நாட்டுவிழா வருகிற 31-ந் தேதி நடக்கிறது. விழாவில் அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை, 8.30 மணிக்கு பந்தல் கால்நாட்டு விழாவும், மதியம் 1 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. மாலை சந்திரகிரகணம் நடைபெறுவதால், அப்போது நடத்தப்படும் பூஜைகள், பிற்பகலில் நடத்தப்பட்டு நடை சாத்தப்படுகிறது. பின்னர், மறுநாள் காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
-
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 13-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஜனவரி 29-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழச்சி ஆகியவை நடைபெறும். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நகர் மாரியம்மன் கோயிலில் இருந்து 30-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சீர்வரிசை எடுத்து வந்து, மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 7 மணிக்கு கிராமியக் கலைநிகழ்ச்சி நடைபெறும். காமாட்சியம்மன் கோயிலில் இருந்து 31-ஆம் தேதி காலை 9 மணிக்கு பால்குடம், கொடுமுடி தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், நல்லகாத்து ஆற்றிலிருந்து முருக பக்தர்கள் 10 மணிக்கு காவடி எடுத்து ஊர்வலமாக வந்து பால், தீர்த்த அபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெறும். அதைத் தொடர்ந்து, காலை 10.30-க்கு அன்னதானம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அலங்காரத் தேரில் வள்ளி – தெய்வானை தேவியருடன் முருகன் திருவீதி உலா வருதலும், இரவு 12 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் வாணவேடிக்கையுடனும் விழா நிறைவடைகிறது.
-
திருப்பதியில் ஜன 31 ஆம் தேதி 10.30 மணி நேரம் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 31ம்தேதி 10.30 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. 31ம்தேதி மாலை 5.40 மணி முதல் இரவு 8.30 மணிவரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்று காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. 9.30 மணிக்குபிறகு நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்து பரிகார பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கோயில் நடை அடைக்கப்படுவதையொட்டி அன்றைய தினம் ரூ.300 டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் 1 வயது குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்படும். மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு 31ம்தேதி அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை திவ்ய தரிசன டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்படும். சந்திர கிரகணம் நடைபெறுவதால் அன்றைய நாளில் அன்னப்பிரசாதம் தயார் செய்யப்படாது. வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே இதனை கருத்தில்கொண்டு திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மாற்றியமைத்து கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
சந்திரகிரகணம்… பழனியில் தேரோட்ட நேரம் மாற்றம்
பழனியில் வரும் 31ம் தேதி காலை தைப்பூச தேரோட்டம் நடைபெறும் என பழனி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச திருநாளன்று சந்திர கிரகணம் வருவதையடுத்து தைப்பூச தேரோட்டத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. மன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜனவரி 30ஆம் தேதியும் தேரோட்டம் ஜனவரி 31ஆம் தேதி தைப்பூச தினத்தன்று நடக்கிறது. ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால் பூஜைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழனி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45 முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும். தைப்பூசத்தில் மாலை நேரத்தில் நடைபெறும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் பகலில் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல தைப்பூசத்தில் சந்திரகிரகணம் வந்ததாகவும் அதனால் பகலில் தைப்பூசத் தேரோட்டம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
-
காளஹஸ்தியில் பிப். 8 ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்….
ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. அதன்படி, பிப்ரவரி 13-ஆம் தேதி மகா சிவராத்திரி வருவதை முன்னிட்டு, பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனித்தனியாகவும் பல்வேறு வாகனங்களில் வலம் வர உள்ளனர். இதற்கான சுவரொட்டியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி கோயிலில் முன்னேற்பாடுகள் குறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா கோயில் அதிகாரிகள், அறங்காவலர் குழுவுடன் கலந்துரையாடினார். பிரம்மோற்சவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்திக்கு வருகை தர உள்ளதால், அவர்களுக்கு அன்ன தானம், குடிநீர், தங்குமிடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
-
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் தெப்போற்சவம் ….
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து 7 நாள்கள் நடைபெற உள்ள இந்த தெப்போற்சவம் தை மாத பௌர்ணமி அன்று நிறைவு பெறுகிறது. இதற்காக கோவிந்தராஜ சுவாமி திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு, புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. திருக்குளத்தில் ஏற்படுத்திய தெப்பம் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தெப்போற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெப்போற்சவம் தொடங்கியது. அதில் கோதண்டராம சாமி சீதா, லட்சுமணருடன் திருக்குளத்தில் 5 முறை வலம் வந்தார். தெப்பத்தில் வேதபண்டிதர்கள் அமர்ந்து வேதம் ஓதினர். அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்தவர்கள் பக்திப் பாடல்களைப் பாடினர். தெப்போற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தெப்பம் அருகில் வரும் போது எழுந்து நின்று கற்பூர ஆரத்தி காண்பித்தனர்
-
சந்திர கிரகணம் – தைப்பூசத்தில் பூஜைநேரம் மாற்றம்
தைப்பூச தினத்தன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜனவரி 31-ம் தேதி புதன்கிழமை, தைப்பூச விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5.16 மணி முதல் இரவு 8.50 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், அன்று ஒருநாள் மட்டும் பூஜை நேரங்களில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. தைப்பூசத்தன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபஆராதனையும் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. காலை 7 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. தீபாராதனைக்குப் பின், தைப் பூசத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் திருச்சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக உலா வந்து தைப்பூச மண்டபத்தை அடைகிறார். அங்கு, அவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கின்றன. மாலை 4 மணிக்கு, சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் ரத வீதிகள் வழியாக வந்து திருக்கோயிலை அடைகிறார். பின், சந்திர கிரகணத்தை முன்னிட்டு 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. பின், சந்திர கிரகணம் முடிந்ததும், இரவு 9.30 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, ராக்கால பூஜைகள் முடிந்த பின் கோயில் நடை அடைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏழேழு ஜென்ம பாவங்கள் நீக்கும் ரத சப்தமி!
சூரிய வழிபாடு நம் இந்துமதத்தின் ஒரு அங்கமாகவே உள்ளது. சூரியனின் ஒளிக்கதிரே இந்த வையத்தை உயிர்ப்புடன் வைக்கிறது. உயிர்கள் வளரவும், பல்கிப்பெருகவும் உதவும் சூரிய பகவானை வணங்க ஏற்படுத்தப்பட்ட புண்ணிய நாளே ரதசப்தமி. இது சூரிய பகவானுக்கு உரிய மாதமாக போற்றப்படும் தை மாத,அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. ரதசப்தமி அன்று தான், கருடாழ்வாரின் அண்ணனான அருணன் சாரதியாக இருக்க,ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உலா வரும் சூரியபகவான் உதித்தார் என்கின்றன நம் புராணங்கள். சூரிய ஜெயந்தியான இன்று விஷ்ணுவும் சூர்ய நாராயணனாக வணங்கப்படுகிறார். தை அமாவாசையில் இருந்து வரும் ஏழாம் நாள் சப்தமி எனப்படுகிறது. சூரியன் தன் தேர்க்காலை வடக்கு நோக்கி நகர்த்தி கொண்டு செல்வதை தான் ரதசப்தமி என்று குறிப்பிடப்படுகிறது. மகர சங்கராந்தி அன்று தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் சூரியன் தனது வடக்கு திசை நோக்கிய பயணத்தை துவக்குவதையே இது குறிக்கிறது. சூரியனின் தேரில் உள்ள 12 சக்கரங்கள் 12 ராசிகளையும், 12 மாதங்களையும் குறிப்பதாகும். வசந்தத்தையும் கோடையையும் வரவேற்கும் விதமாகவும் ரதசப்தமியை கொண்டாடுகிறோம்.
-
திருமலையில் ரத சப்தமி… ஏழுமலையான் வீதிஉலா
ரத சப்தமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 7 வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா வந்தார். ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று நடந்தது. ரத சப்தமியன்று ஒரே நாளில் 7 வாகனங்களில் உற்சவரான மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது மாட வீதிகளில் குவிந்திருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், பகல் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் ஏழுமலையான் பவனி வந்தார். மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் உற்சவர் மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.