சோலைமலை முருகன் திருக்கோயிலில் தை பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இக்கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு காலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முருகப் பெருமான், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சஷ்டி மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், காலை 9.45 மணியளவில் கொடி மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செவ்வாய்க்கிழமை அன்ன வாகனத்திலும், புதன்கிழமை காமதேனு வாகனத்திலும், வியாழக்கிழமை ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் சுவாமி எழுந்தருள்கிறார். 31-ஆம் தேதி தைப் பூசத்தையொட்டி சுவாமி வெள்ளிமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தை பூசம் வரை தினசரி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபங்கள் முன்பதிவு செய்ய….
திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் என தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் பல்வேறு ஊர்களில் உள்ளன. அதில், நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்கள் நேரடியாக வந்து முன்பணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அதில், சில குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுகிறது. எனவே திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபத்தை பயன்படுத்தப்பட உள்ள பொதுமக்கள் இனிமேல் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை வருகிற 24-ந்தேதி ரத சப்தமி விழாவில் இருந்து அமலுக்கு வருகிறது. முதல் முறையாக, சித்தூர் மாவட்டத்தில் உள்ள 39 கல்யாண மண்டபங்களில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கல்யாண மண்டபங்களில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும். பொதுமக்கள் கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்ய, அந்தந்த மண்டப மேலாளர்களிடம் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
-
தைப்பூச விரதம் இருப்பது எப்படி?
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து ருத்திராட்சம் தரித்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும். அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை வணங்கி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். முருகன்கோவிலுக்கும் சென்று வழிபட்டு வரலாம். தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இன்னல் இழைத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்று அழித்து துன்பத்தை நீக்கினார். இதனால் முக்கோடி தேவர்களும் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும். எந்நாளும் இளமையுடன் இருப்பர். குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும். தொழில் மேன்மை உண்டாகும். தைப்பூசம் அன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.
-
செல்வம் செழிக்க தைப்பூசம் விரதம்….
முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். முருகப்பெருமானை வழிபடும் முக்கியமான விழாக்களில் ஒன்றாக உள்ளது தைப்பூசம். சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு தரிசனம் அளித்த தினமும் இந்த பூச தினமே என்பதால், அன்றைய தினம் சிவபெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர பூச நட்சத்திரம், தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் என்பதால், தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வதும் மிகுந்த பலனைத் தரும். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில், பவுர்ணமி திதியோடு கூடிவரும் நாளில் ‘தைப்பூச’ திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசம் முக்கியமானது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த முருகப்பெருமான் இருக்கும் இடங்களில் எல்லாம் தைப்பூசத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திருக்கோவிலில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
-
சபரிமலை கோயில் ஜனவரி 20 நடையடைப்பு!
சபரிமலையில் இன்றிரவு மாளிகைபுறத்தமன் கோயிலில் குருதி பூஜை, நிறைவடைந்த பிறகு நாளை கோயில் நடை சாத்தப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற வந்த நெய்யபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு மாளிகைபுறத்து கோயிலில் குருதி பூஜை நடக்கிறது. அதன்பின்னர் நாளை முதல் கோயில் நடை சாத்தப்படுகிறது.
நாளை காலை 6.30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோவில் நடை அடைத்ததும், திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும். இந்தாண்டுக்கான மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை கோயிலின் வருமானம் ரூ. 225 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. -
அய்யா வைகுண்டசுவாமி கோயில் தை திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில், புகழ்பெற்ற அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில், தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சமுதாய வேறுபாடுகளைக் களைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அவதரித்த மகான் என்று அய்யா வைகுண்ட சுவாமி நம்பப்படுகிறார். இவருக்கு சுவாமித்தோப்பு, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோயில்கள் உள்ளன. அய்யாவழி என்ற நெறியில் வைகுண்டசுவாமியை வழிபடும் மக்கள், தலைமை பதியான சுவாமித்தோப்பில் தை மாதம் திருவிழா நடத்துகின்றனர். திருவிழாவின் தொடக்கமாக, இன்று அதிகாலையே கோயில் நடை திறக்கப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, வரும் 26-ம் தேதி கலிவேட்டையும், 29-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
-
நான்காம்படை வீட்டில் ஜன. 22-இல் தைப்பூச விழா கொடியேற்றம்
சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா வரும் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
அறுபடை வீடுகளில் நான்காம்படை வீடாக அழைக்கப்படுவது சுவாமிமலை முருகன் கோயில். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த விழா வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து 29 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு சிறிய தேரோட்டமும், 31 ஆம் தேதி தைப்பூச நாளன்று மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், தொடர்ந்து காலை 10 மணிக்கு வெள்ளி மயில் வாகனகத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. -
இழந்ததை திரும்ப தரும் முருகன் விரதம்….
இழந்த பதவி மீண்டும் கிடைக்க ஆறுமுக கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களும், கிருத்திகை, சஷ்டி திதி ஆகிய நாட்களில் விரதம் இருப்பத உகந்ததது. அதுமட்டுமன்று கந்தசஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் முருகனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யலாம். வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம். வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்றை தினம் எந்த கெட்ட வார்த்தைகளையும் உச்சரிக்க கூடாது. கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம். விரைவில் நல்ல பலன் தருவதைக் காணலாம்.
-
தைப்பூசத் திருவிழா…
முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால்,அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்த வரே கந்தன் எனப்படும் முருகனாவார்.சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருககடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
-
திருப்பதிக்கு நிகராக சபரிமலை வரும் பக்தர்களுக்கும் வசதி
திருப்பதியைப் போல சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கும் வசதிகள் செய்து தர கேரள அரசு திட்டமிட்டுவருகிறது. இது தொடர்பாக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் திருப்பதிக்கு சென்று பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆராயும். இது தொடர்பாக எல்லா உதவிகளையும் செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உறுதியளித்துள்ளார். நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், சபரிமலையிலும் பக்தர்களுக்கான வசதிகளை எப்படி செய்வது என்பது பற்றி திட்டம் வகுக்கப்படும். சபரிமலை கோயில் வனப்பகுதியில் அமைந்திருப்பதால் அதற்கேற்ப திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.