திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரும் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ஏழுமலையான் கோவிலில் சன்னதிகள், மண்டபங்கள், பிரசாதம் தயாரிக்கும் பகுதிகள், உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதிகளை தவிர மற்றவை மேற்கூரையின்றி திறந்த வெளியில் உள்ளது. இதனால் கோடை வெயில், அடைமழை மற்றும் கடும் பனி காலங்களில் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் அப்பகுதிகளில் தேவஸ்தான நிர்வாகம் நகரும் மேற்கூரை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. மேலும் திருப்பதியில் குழந்தை கடத்தல், வழிப்பறி செயின் பறிப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவும், பக்தர்களுக்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கவும் திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருமலை நடைபாதை மார்க்கங்கள் மாடவீதிகள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
ராமேசுவரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி கொடியேற்றம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த ஆண்டிற்கான சிவராத்திரி திருவிழா இன்று பிப்ரவரி 6-ல் தொடங்கி பிப்ரவரி 17 வரை நடைபெறுகிறது. செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு ராமநாதசுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதி உலா வருகிறார்கள். பிப்ரவரி 13-ம் தேதி மாசி சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் நடராஜர் கேடயத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு ஒளி வழிபாடு முடிந்ததும் சுவாமி அம்பாள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதி உலா வருகிறார்கள். பிப்ரவரி 14-ம் தேதி காலை 09.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. பிப்ரவரி 15-ம் தேதி மாசி அமாவாசையன்று காலை 9 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்து அங்கு பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையோட்டி தினமும் தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
-
காளத்தியப்பர் கோவில்
ஆந்திர மாநில மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பஞ்சபூதங்களில் காற்றினை குறிக்கும் காளத்தியப்பர் திருக்கோயில். வாயுத்தலமான இங்கு இறைவன் வாயு லிங்கம் என்றழைக்கப்படுகிறார். சீ என்ற சிலந்தி, காளம் என்ற பாம்பு, அத்தி எனப்படும் யானை ஆகிய மூன்றும் இத்தல இறைவனை வழிபட்டு முக்தி பெற்றதால் இவ்விடம் சீகாளகத்தி என்றும், திருகாளகத்தி என்றும், ஸ்ரீகாளகத்தி என்றும் வழங்கப்படுகிறது. கண்ணப்பநாயனார் இத்தல இறைவன்மீது கொண்ட பேரன்பினால் தனது கண்களை தானம் செய்து முக்தி பெற்றார். கண்தானத்தில் உலகின் முன்னோடியாக கண்ணப்பர் திகழக் காரணமான தலம் என்னும் சிறப்புடையது. இக்கோயிலை சோழப் பேரரசின் முக்கிய அரசனான இராஜேந்திரச் சோழன் என்பவரால் கட்டப்பட்டு பின் பல மன்னர்களால் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அப்பர் தனது தேவாரப் பதிகத்தில் இத்தல அம்மை மற்றும் அப்பனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இங்கு இறைவன் காளத்தியப்பர் என்ற பெயரிலும், அம்மை ஞானப்பூங்கோதை என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
-
சென்னையில் அமர்நாத் பனிலிங்கம்
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 82-வது சிவராத்திரி விழாவினை முன்னிட்டு அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசனம் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதத்தின் புகழ்மிக்க 12 ஜோதிர்லிங்கங்களையும், அமர்நாத்திலுள்ள பனி லிங்கத்தையும் ஒரே இடத்தில் மக்கள் தரிசிக்க சென்னை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இம்முப்பெரும் ஆன்மீக நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 9 முதல் 14 வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். லிங்க தரிசனங்களை பார்த்த பிறகு இராஜயோக ஞான விளக்கம் படக்கண்காட்சியாகவும், வீடியோ காட்சியாகவும் காண்பிக்கப்படும். அதன் பிறகு 5 நிமிடங்கள் அமர்ந்து தியானிக்க பிரத்யேக தியான கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து ஒவ்வொரு தினமும் காலை 10.30 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் தாய்மார்களுக்கான விளக்கு தியானம், திருநங்கைகளுக்கான தனி நிகழ்ச்சி, தேர்வு பயத்தை நீக்கும் வழிகள் என்னும் மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சி, தமிழ் படைப்பாளிகள், அறிஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி, டென்ஷனுக்கு விடை கொடுப்போம் எனும் பொது நிகழ்ச்சி, அர்ச்சகர்கள், ஒதுவார்கள், உபன்யாசகர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி, ஊடகம் மற்றும் கலைத்துறையினருக்கான நிகழ்ச்சி, ஓய்வு பெற்ற முதியோர்களுக்கான முதுமையை வெல்வோம் நிகழ்ச்சி, மனபாரமற்ற வணிகம் என்னும் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான நிகழ்ச்சியென பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதேபோல தினமும் மாலை 6 மணியிலிருந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் அஷ்ட லட்சுமி, நவதேவிகள் மற்றும் கைலாச திருக்காட்டி போன்றவைகளின் தத்ரூப காட்சிளும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை அனைவரும் இலவசமாக காணலாம்.
-
திருச்செந்தூர் தை உத்திர வருஷாபிஷேகம்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் தை உத்திர வருசாபிஷேகம் ஞாயிறு அன்று (4.2.2018) நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இக்கோயிலின் மூலவரான சுப்பிரமணிய சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது தை மாதம் உத்திர நட்சத்திரத்தில்தான். எனவே, ஒவ்வொரு வருடமும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று வருசாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தை உத்திர வருசாபிஷேகம் ஞாயிறு அன்று நடைபெறுகிறது. வருசாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, கும்பகலச பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் கும்ப கலசங்கள் விமானதளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, மேளதாளம் முழங்க விமானக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மூலவர் சுவாமி சுப்பிரமணியருக்கு 21 வகை அபிஷேகங்கள் மற்றும் கும்ப கலச அபிஷேகங்கள் நடக்கின்றன. பின்னர், விஷேச அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.வருசாபிசேகத்தை முன்னிட்டு இரவு 7 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்குப் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. தொடர்ந்து, உற்சவமூர்த்தியான சுவாமி குமரவிடங்கப் பெருமாள் தெய்வயானை அம்பாளுடன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வருதல் நடைபெறுகிறது.
-
சமயபுரம் மாரியம்மனுக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் வழங்கிய சீர்வரிசை….
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. சமயபுரம் மாரியம்மனுக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சீர்வரிசை கொடுக்கப்பட்டது. இதற்காக சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்பாள் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அறங்காவலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறும் ஊர்வலமாக புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்பாள் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர். அங்கு சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் வழங்கினர். இதையடுத்து அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
-
திருச்செந்தூர் மாசித் திருவிழா….
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் பிப். 2-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி, மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பிப். 2-ம் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில், அவரது அலுவலகத்தில் உள்ள சிப்பி கூடத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேவையான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -
வயலூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா
அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த வயலூர் முருகன் கோயிலில் தைப்பூசதிருவிழா கோலாகலம் கொண்டாடப்பட்டது. திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமானதும், ஆன்மீக அடிகளார் எனப்படும் கிருபானந்தவாரியாருக்கு அருள்புரிந்து ஞானம் அளித்த வயலூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அறுபடைவீடுகளில் சென்று வழிபட இயலாத பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தாலே அறுபடை பெருமானை தரிசனம் செய்த பாக்கியம் கிட்டும் என்பதால், தைப்பூச திருநாளில் திருச்சி வயலூர் முருகப்பெருமானை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி வெள்ளி அங்கியுடன், வெள்ளி கேடயத்தில் எழுந்தருளினார் பின்மகாதீபாராதனைகள் நடைபெற்றது. பிற்பகல் அதவத்தூர் தீர்த்தக்குளத்திற்கு வீதிஉலாவும் பின்னர் தீர்த்தவாரியும் நடைபெற்றது.
-
சந்திர கிரகணம்… யாருக்கு பாதிப்பு அதிகம்?
இன்று முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு, 3 நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கும் அரிய நிகழ்வு இது. சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது ‘புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும். மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடையும்.இதையொட்டி யார் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின் பரிகார பூஜை செய்யப்பட்டு கோயில்களில் நடை திறக்கப்படும். நாளை மாலை 5:16மணிக்கு ஏற்படும் இந்த கிரகணம் இரவு 8:40 மணி வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும். புதன்கிழமையில் பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும். குழந்தைகள், கர்ப்பினிகள், நோயுற்றவர்கள் என அனைவரும் கிரகணம் விட்டபிறகு குளித்துவிட வேண்டும். தோஷமுள்ள நட்சத்திரங்கள் கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும்.
-
ஜோதியாக காட்சி தந்த வள்ளலார்
ஜீவ காருண்ய நெறிகளையும், செம்மையான நல்ல அறநெறி வாழ்க்கைக்கு உரிய வாழ்வியல் தத்துவங்களையும் போதித்தவர் வள்ளலார். ‘கடவுள் ஒருவரே – இறைவன் ஒளி வடிவானவன்’ என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் 1867-ம் ஆண்டு வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார். மனித ஸ்தூல உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் சத்தியஞான சபை எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப்புறம் சிற்சபையும், பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படி களையும் காணலாம். அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடியையும் காணலாம். கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடி யில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ‘ஜோதி தரிசனம்’ எனப்படுகிறது. இந்த ஜோதி தரிசனத்தை 1872-ம் ஆண்டு தைப்பூசத்தன்று சத்தியஞான சபையில் வள்ள லார் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனத்தை காணலாம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திர நாளன்று ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும். அதன்படி இன்று காலை 6 மணிக்கு 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அப்போது அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை’ என்ற மகா மந்திரததை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர்.