Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • kandha-sasti-viradha-anushtanam

    ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு
    நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம்
    மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும்
    உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான
    தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத்
    தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம்,
    வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம்
    தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும்
    வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை
    எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை
    அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு,
    பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக
    எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி
    விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும்
    கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப
    நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும்,
    குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர்
    சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்
    துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது
    சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச்
    சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்
    பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை
    முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும்
    நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக்
    கிடைத்தது.

    கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர்
    மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான்
    ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும்
    கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த
    பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல்
    இதுவாகும்.

    கந்தசஷ்டி விரத பயன்கள்
    இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர்
    அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப்
    பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை
    ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

  • kandha-sasti-kavasam

    கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில்
    எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண
    படனப்படிப்பும் நடைபெறும். விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன்
    போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையை
    நிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி
    உட்கொள்ள வேண்டும்.

     

    துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்

    பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்

    நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை.

    அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

    சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
    சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
    பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
    கீதம் பாடக் கிண்கிணி யாட
    மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
    கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
    வரவர வேலா யுதனார் வருக
    வருக வருக மயிலோன் வருக
    இந்திரன் முதலா எண்டிசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக!
    வாசவன் மருகா வருக வருக
    நேசக் குறமகள் நினைவோன் வருக
    ஆறுமுகம் படைத்த ஐயா வருக
    நீறிடும் வேலவன் நித்தம் வருக
    சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
    சரவண பவனார் சடுதியில் வருக
    ரவண பவச ர ர ர ர ர ர ர
    ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
    விநபவ சரவண வீரா நமோநம
    நிபவ சரவண நிறநிற நிறென
    வசுர வணப வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னை ஆளும் இளையோன் கையில்
    பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
    பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
    விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
    ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
    உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
    கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
    நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
    ஆறு முகமும் அணிமுடி ஆறும்
    நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
    பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
    ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
    பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்பழ குடைய திருவயி றுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
    நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
    இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
    செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென
    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முருகவேள் முந்து
    என்றனை யாளும் ஏரகச் செல்வ
    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
    லாலா லாலா லாலா வேசமும்
    லீலா லீலா லீலா வினோ தனென்று
    உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
    எந்தலை வைத்துன் இணையடி காக்க
    என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
    பன்னிரு விழியால் பாலனைக் காக்க
    அடியேன் வதனம் அழகுவேல் காக்க
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
    கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
    நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
    முப்பத் திருபல் முனைவேல் காக்க
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
    கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
    என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
    மார்பை ரத்ன வடிவேல் காக்க
    சேரிள முலைமார் திருவேல் காக்க
    வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
    பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
    பழுபதி னாறும் பருவேல் காக்க
    வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
    சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
    ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
    பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
    பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
    வட்டக் குதத்தை வல்வேல் காக்க
    ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
    கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
    முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
    பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
    நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
    நாபிக் கமலம் நல்வேல் காக்க
    முப்பால் நாடியை முனைவேல் காக்க
    எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
    அடியேன் வதனம் அசைவுள நேரம்
    கடுகவே வந்து கனகவேல் காக்க
    வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
    அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
    தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியில் நோக்க
    தாக்க தாக்க தடையறக் தாக்க
    பார்க்க பார்க்க பாவம் பொடிபட
    பில்லி சூனியம் பெரும்பகை அகல
    வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
    அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
    பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
    கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
    பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
    அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
    இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
    எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
    கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டாளர் களும்
    என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
    ஆனை யடியினில் அரும்பா வைகளும்
    பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
    நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
    பாவைக ளுடனே பலகல சத்துடன்
    மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
    ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
    காசும் பணமும் காவுடன் சோறும்
    ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
    அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
    மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
    காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
    அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
    வாய்விட் டலறி மதிகெட் டோட
    படியினில் முட்ட பாசக் கயிற்றால்
    கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
    கட்டி உருட்டு கைகால் முறிய
    கட்டு கட்டு கதறிடக் கட்டு
    முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
    செக்கு செக்கு செதில் செதிலாக
    சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
    குத்து குத்து கூர்வடி வேலால்
    பற்று பற்று பகலவன் தணலெரி
    தணலெரி தணலெரி தணலது வாக
    விடு விடு வேலை வெகுண்டது வோடப்
    புலியும் நரியும் புன்னரி நாயும்
    எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
    தேளும் பாம்பும் செய்யான் பூரான்
    கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
    ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
    ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
    வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
    குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
    குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
    பக்கப் பிளவை படர்தொடை வாழை
    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
    பற்குத் தரணை பருஅரை யாப்பும்
    எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
    நில்லா தோட நீஎனக் கருள்வாய்
    ஈரேழு உலகமும் எனக் குறவாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
    மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
    உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
    சரவண பவனே சைலொளி பவனே
    திரிபுர பவனே திகழொளி பவனே
    பரிபுர பவனே பவமொளி பவனே
    அரிதிரு மருகா அமரா வதியைக்
    காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
    கந்தா குகனே கதிர்வே லவனே
    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
    இடும்பனை யழித்த இனியவேல் முருகா
    தனிகா சலனே சங்கரன் புதல்வா
    கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
    பழநிப் பதிவாழ் பாலகு மாரா
    ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
    செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
    சமரா புரிவாழ் சண்முகத் தரசே
    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
    என்நா இருக்க யானுனைப் பாட
    எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
    பாடினேன் ஆடினேன் பரவச மாக
    ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
    நேச முடன்யான் நெற்றியில் அணிய
    பாச வினைகள் பற்றது நீங்கி
    உன்பதம் பெறவே உன்னரு ளாக
    அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
    மெத்தமெத் தாக வேலா யுதனார்
    சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
    வாழ்க வாழ்க வாரணத் துவசம்
    வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை அடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
    பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
    பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
    மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
    கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
    பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
    காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
    ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
    நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
    கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
    சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
    ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
    ஓதியே செபித்து உகந்துநீ றணிய
    அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
    திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
    மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
    நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
    நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
    கந்தர்கை வேலாம் கவசத் தடியை
    வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
    விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்
    சர்வ சத்ரு சங்கா ரத்தடி
    அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
    வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
    சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
    இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
    குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
    சின்னக் குழந்தை சேவடி போற்றி!
    எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
    தேவர்கள் சேனா பதியே போற்றி!
    குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
    திறமிகு திவ்விய தேகா போற்றி!
    இடும்பா யுதனே இடும்பா போற்றி!
    கடம்பா போற்றி கந்தா போற்றி!
    வெட்சி புனையும் வேளே போற்றி!
    உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
    மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!
    சரணம் சரணம் சரவண பவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்!
    அரோகரா! அரோகரா! அரோகரா!

    – இந்த கந்த சஷ்டி கவசத்தை தினமும் சொல்லி வர பிரச்சனைகள் தீருவது உறுதி. இதை சஷ்டி தினத்தன்று 36 முறை சொல்லி வர நாம் வேண்டிய வரம் கிடைக்கும்.

  • thiruchendur-kandha-sasti

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

    9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 13ஆம்தேதி நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்கிறார். 14ஆம் தேதியன்று மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும் இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. ஆறு நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் தங்களின் விரதத்தை முடித்துக்கொண்டு அவரவர் ஊர்களுக்கு திரும்புவதுடன் கந்த சஷ்டி விழா முடிவடைகிறது.

  • krishnar-piditha-bramanda-kudai

    பிருந்தாவனத்தில் மழை வேண்டி, இந்திரனுக்கு யாகம் செய்ய கோகுலத்து மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் கிருஷ்ணர், கோவர்த்தன மலையை வலம் வந்து வழிபடும்படி தன் மக்களை அறிவுறுத்தினார். இந்திரன் தன்னுடைய பதவியையும், பலத்தையும் எண்ணி இறுமாப்பு கொண்டிருந்தான். அவனுக்கு பாடம் புகட்டவே கிருஷ்ணர் அவ்வாறு செய்தார். கோகுலத்து மக்களும் கிருஷ்ணர் சொன்னபடியே செய்தனர்.

    கிருஷ்ணரின் இந்த செய்கையால் கோபம் கொண்ட இந்திரன், தன்னுடைய கோபத்தை பிருந்தாவன மக்களின் மீது காட்டினான். பல வகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம், பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும் போதுதான் அழைக்கப்படும்.

    பிருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி, இந்திரன் ஸாங்வர்த்தக மேகத்துக்கு கட்டளையிட்டான்.

    இந்திரனின் கட்டளைப்படி அந்த அபாயகரமான மேகங்கள், பிருந்தாவனத்தின் மேல் தோன்றி தம் பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இடி இடித்தது; மின்னல் வெட்டியது; பலமான காற்று வீசியது. கூரிய அம்புகள் போல் நீர் தாரைதாரையாக தரை இறங்கின. சற்று நேரத்தில் பிருந்தாவனத்தின் நிலப் பகுதிகள், மேடு பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின. நிலைமை மிக மோசமானது. குறிப்பாக மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று வீசியதால் பிருந்தாவனத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின.

    அந்தத் தொல்லையில் இருந்து விடுபட முடியாத மக்கள், கிருஷ்ணரை சரணடைந்தனர்.

    தன் மக்களை காக்கும் பொருட்டு, கோவர்த்தன மலையையே தூக்கினார் கிருஷ்ணர். அதை தன் சுண்டுவிரலால் தாங்கிப் பிடித்தார். அது ஒரு குடைபோல் மாறிப்போனது. அந்த பிரமாண்ட மலை குடையின் கீழ், பிருந்தாவன மக்களும், கால்நடைகளும் அடைக்கலம் புகுந்தனர்.

    கிருஷ்ணர் தமது இடது கையின் சுண்டு விரலின் நுனியில் அந்த பெரிய மலையை ஒரு வார காலம் நிறுத்தி வைத்திருந்தார். இதைக் கண்டு ஆயர்கள் ஆச்சரியமடைந்தனர். கிருஷ்ணரின் அசாதாரண சக்தியைக் கண்டு இந்திரன் நிலைகுலைந்தான்.

    உடனே, அவன் மேகங்களையெல்லாம் விலகிச் செல்லும்படி கட்டளையிட்டான். மேகங்கள் எல்லாம் கலைந்து ஆகாயம் தெளிவு பெற்றது. பலத்த காற்று வீசுவதும் நின்றது.

    தேவலோகத்தில் இருந்து அங்கு வந்த இந்திரன், தன்னுடைய குற்றத்தை பொறுத்தருளும்படி கிருஷ்ணரிடம் வேண்டினான். அவனது கர்வமும் அத்துடன் அடங்கிப்போனது.

    வடமாநிலத்தில் உள்ள பிருந்தாவனத்திற்குச் செல்பவர்கள், அங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவர்த்தன மலையை இன்றும் தரிசிக்கலாம்.

  • indraya-rasi-palangal

    நவம்பர் 8
    விளம்பி வருடம் – ஐப்பசி 22
    08-நவ-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை இ 10.06
    நட்சத்திரம் : விசாகம் இ 9.13
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – இரக்கம்
    ரிஷபம் – ஆதரவு
    மிதுனம் – ஆக்கம்
    கடனம் – பக்தி
    சிம்மம் – அன்பு
    கன்னி – ஓய்வு
    துலாம் – பிரீதி
    விருச்சிகம் – பரிசு
    தனுசு – லாபம்
    மகரம் – செலவு
    கும்பம் – ஆர்வம்
    மீனம் – புகழ்

  • thirupathy-sami-dharshan

    தீபாவளி பண்டிகை நாளில், திருப்பதியில் உள்ள ஏழுமலையானை வழிபட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல இந்தாண்டு தீபாவளி அன்றும், திருப்பதியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

    தீபாவளி நாளில், திருப்பதியில் 70,713 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் ரூ. 3.13 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலவசம் தரிசனத்திற்கான வரிசையில், வைகுண்டம் காம்பிளக்ஸ் வரை, சுமார் 12 மணி நேரங்கள் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளன.

    மேலும், திருமலைப்பாதை வழியாக நடந்தே சென்று திவ்ய தரிசன்ம் பெற்ற பக்தர்கள், 11 மணி நேரமும், ரூ.300 கட்டணம் செலுத்து டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    அதன்படி, தீபாவளி நாளான நேற்று மட்டும் சுமார் 70,713 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான வழிப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம், நேற்று ஒரேநாளில் ரூ. 3.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • indraya-rasi-palan

    நவம்பர் 7
    விளம்பி வருடம் – ஐப்பசி 21
    அமாவாசை
    07-நவ-2018 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : அமாவாசை
    திதி நேரம் : அமாவாசை இ 10.15
    நட்சத்திரம் : சுவாதி இ 8.45
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஓய்வு
    ரிஷபம் – குழப்பம்
    மிதுனம் – நலம்
    கடனம் – வெற்றி
    சிம்மம் – சுகம்
    கன்னி – நட்பு
    துலாம் – அமைதி
    விருச்சிகம் – கவனம்
    தனுசு – முயற்சி
    மகரம் – ஆர்வம்
    கும்பம் – பயம்
    மீனம் – எதிர்ப்பு

  • koyilukul-engu-amara-vendum

    கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.

    நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.

    கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

    பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.

    நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ கெடுக்கக் கூடாது.

    கோயில் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.

    வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

    வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.

    கோயிலுக்குள் முக்கியமாக பூஜை நேரத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது.

    கோயில் உள்ளே செல்போன் பேசுதல் கட்டாயம் கூடாது. அணைத்து வைப்பது அனைவருக்கும் சிறப்பு.

  • laksmi-kubera-poojai-seiyum-murai

    லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி மறுநாள் மிகவும் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லட்சுமி குபேர நாமம் சொல்லி வழிப்பாடு செய்தால் பலன் கிடைக்கும்.

    இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தைப் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.

    தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.

    ‘ஓம் ய க்ஷய குபேராய
    வைஸ்ரவணாய
    தந தா நியாதி பதயே
    தந்தாந்ய ஸம்ருத்திம்மே
    தேவி தாபய ஸ்வாஹா’ – என்ற குபேரனின் மந்திரத்தை தியானித்து அவனை வழிபட வேண்டும்.

    சிவபெருமானின் உற்ற தோழரான குபேரனுக்கு என்று ஒரு மந்திர சதுக்கம் உண்டு. எந்தப்பக்கம் கூட்டினாலும் 72 வரும். குபேர எந்திரபூஜைக்கு ஒரே மாதிரியான நாணயங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் கோலம் போட வேண்டும். எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை சிவப்பு குங்குமத்தினாலும், வார்த்தைகளை மஞ்சள் பொடியினாலும் போட வேண்டும். ஒவ்வொரு கட்டத்துக்கும் நாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பவுர்ணமி என பூஜிக்க வேண்டும். அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அந்த எண்களின் பக்கத்தில் எழுத்துகள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும்.

    குபேர எந்திர கோலம் போட்டு நாணயங்களை அதில் வைத்து முடித்ததும், எந்திரத்தின் முன் சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை தொடங்க வேண்டும். ‘மகாலட்சுமி தாயே! என் கடன்கள் விரைவில் தீர வேண்டும். எனக்கு லாபம் கிடைக்க வேண்டும்’ என கூறிவிட்டு ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும், பூக்களை போட வேண்டும். அப்படி பூக்களை போடும் போது எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயம் மீதே பூக்களை போட வேண்டும்.

    அப்படி 9 முறை வேண்டிக் கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் பூவை வைத்து பின் எந்திரத்துக்கு கற்பூரம் காட்டிய பின் அந்த கோலத்தை வணங்கி விட்டு பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்த பின்னர் உடனே கோலத்தை அழித்து விடக்கூடாது. மறுநாள் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

    அவ்வாறு சேகரிக்கப்ப்டும் 81 நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் தர வேண்டும். 9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும். இந்த பூஜையை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் உள்ள வாரிசுகள் செய்யலாம். இதை செய்தால் வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும்.

  • dewali-neerada-nalla-neram

    நவம்பர் 6
    விளம்பி வருடம் – ஐப்பசி 20
    தீபாவளி

    (நீராட நல்ல நேரம் அதிகாலை 5:00 – 5:30 மணி)
    06-நவ-2018 செவ்வாய்
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி இ 10.51
    நட்சத்திரம் : சித்திரை இ 8.46
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நிம்மதி
    ரிஷபம் – நட்பு
    மிதுனம் – சுகம்
    கடனம் – ஆதாயம்
    சிம்மம் – தாமதம்
    கன்னி – விருப்பம்
    துலாம் – தடங்கல்
    விருச்சிகம் – சாந்தம்
    தனுசு – வெற்றி
    மகரம் – நன்மை
    கும்பம் – புகழ்
    மீனம் – பக்தி