Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • thiruthani-murugan-koil-kandha-sasti-vizha

    அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 8 கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவில் தினமும் காலை 11 மணிக்கு கோயில் காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 14 -ஆம் தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

    அதேபோல் திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

    தொடர்ந்து, 9-ஆம் தேதி பட்டு, 10-ஆம் தேதி தங்கக் கவசம், 11-ஆம் தேதி பச்சைபட்டு, 12-இல் வெண்பட்டு, 13-இல் தங்கக் கவசம் என தினமும் காலை 8 மணிக்கு மூலவருக்கு அலங்காரம் செய்து, தீபாராதனை நடத்தப்படுகிறது.

  • ungal-rasikku-enna-palan

    நவம்பர் 4
    விளம்பி வருடம் – ஐப்பசி 18
    04-நவ-2018 ஞாயிறு
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி இ 1.24
    நட்சத்திரம் : உத்திரம் இ 10.04
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உயர்வு
    ரிஷபம் – பக்தி
    மிதுனம் – ஓய்வு
    கடனம் – பாசம்
    சிம்மம் – வெற்றி
    கன்னி – நன்மை
    துலாம் – இன்பம்
    விருச்சிகம் – நிம்மதி
    தனுசு – ஆர்வம்
    மகரம் – பேராசை
    கும்பம் – சிரமம்
    மீனம் – மகிழ்ச்சி

  • white-elephant-sabam-theertha-kadhai

    துருவாச முனிவர் ஒரு சமயம் காசியில் சிவபூஜை செய்து, முடிவில் சிவபெருமானின் திருமுடியிலிருந்து விழுந்த தாமரைப்பூவை எடுத்து சென்று, வழியில் வெள்ளை யானையின் மீது பவனி வந்த இந்திரனுக்குக் கொடுத்தார். இந்திரன் அலச்சியமாக அதனை ஒரு கையில்

    வாங்கி, வெள்ளை யானையின் மேல் வைத்தான். அது அந்த மலரை கீழேத் தள்ளிக் காலால் மிதித்தது. இதனால் முனிவர் கோபப்பட்டு, நீ செய்த சிவ துரோகத்தால் பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கராயுதம் உன் தலையைக் கொய்துவிடும், கர்வம் பிடித்த இந்த யானை கருமை நிற யானையாகும் என சபித்தார். தேவேந்திரனும் தேவர்களும் நடுங்கி விட்டனர்.

    யானையில் இருந்து குதித்த இந்திரன், ஐயனே.! அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். ஏற்கனவே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகள் பூலோகத்தில் வாடிக்கிடந்த நான் மீண்டும் பூலோகம் செல்வதா? அதிலும், ஒரு மானிடனிடம் தோற்றுப்போவதா? ஐயோ.! இதை விட வேறென்ன கொடிய தண்டனையை நான் பெற முடியும்? தவங்களில் சிறந்தவரே.! என்னை மன்னியும், என்றான். தேவர்கள் எல்லாருமே கிரீடங்கள் தலையில் பதியும்படி அவர் காலில் விழுந்து கிடந்தனர். துர்வாசர் இதுகண்டு மனம் மாறினார். இந்திரனுக்கு தலைக்கு வந்தது முடியளவாகப் போகட்டும் என்றும், யானைக்கு நூறு ஆண்டுகள் கழித்து சாபம் மாறும் என்றும் கூறியருளியதால் இந்திரனுக்கு வந்த சாபம் முடியளவாக நீங்கியது.

    யானை சொர்க்கத்தை விட்டுப் பூலோகத்தை வந்து, அங்கு கடம்ப வனத்தில் சோமசுந்தரப் பெருமானை வழிபட்டு வந்தது. சிவபெருமான் அதன் அன்பைப் பாராட்டி அதற்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். யானை சிவனிடம், எம்பெருமானே.! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். மேலும் தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருக்கிறேனே.! தங்கள் விமானத்தை (கருவறைக்கு மேலுள்ள கோபுரம் போன்ற அமைப்பு) தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னையும் கொள்ள வேண்டும், என்றது. சிவபெருமான் அதனிடம், ஐராவதமே.! இந்திரன் எனது பக்தன், அவனைச் சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும், நீ இந்திரலோகத்திற்கே செல், என்றார். மேலும், அதன் சுயவடிவத்தையும் தந்தார். அந்த யானைக்கோ கடம்பவனத்தை விட்டு செல்ல மனமில்லை. அது கடம்பவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த இந்திரேச்சுரர் என்ற லிங்கத்திற்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டது.

    வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்துக்கு அதன் பெயரான ஐராவதநல்லூர் என்று அமைந்தது. பின்னர், இந்திரன் அந்த யானை பற்றி அறிந்து வந்து அதை அழைக்க வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதரின் விமானத்தை தாங்கியுள்ள காட்சியை இப்போதும் காணலாம்.

  • idhu-thala-deepavali

    தீபாவளி ஆண்டுக்கு ஆண்டு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. ஆனால், ‘தலை தீபாவளி’ ஆயுளுக்கே ஒரு முறைதான். பண்டிகைகள் எத்தனையோ உண்டு. ஆனால், இதுவரை தனித்தனியாக கொண்டாடிய தீபாவளியை, வாழ்நாள் முழுக்க உடன் பயணிக்கப்போகும் துணையோடு சேர்ந்து கொண்டாடுவது ‘ஸ்பெஷல்’ தான். பொதுவாக திருமணத்திற்கு பின்பு வரும் பண்டிகைகள் பையன் வீட்டில்தான் கொண்டாடப்படுவது நம் சமூக வழக்கம். ஆனால், தலை தீபாவளி எப்பவுமே பெண் வீட்டில்தான். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளை தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, பெண்ணின் பெற்றோர், மணமகன் வீட்டிற்கு சென்று சீர்வரிசை (பூ, பாக்கு, வெற்றிலை, பழம், புதுதுணி) வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார்கள்.

    தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து தம்பதிகள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மாப்பிள்ளைக்கு வைக்கப்படும் எண்ணெய் கிண்ணத்தில், மாமனார் எப்படியோ கடனோ உடனோ வாங்கி செய்த தங்க மோதிரம் இருக்கும். ‘கிண்ணத்தில் கை விட்டுப் பாரு. மோதிரம் இல்லேன்னா குளிக்கவே குளிக்காதே’ என்று மாப்பிள்ளையின் அம்மா வீட்டிலேயே ‘அட்வைஸ்’ செய்து அனுப்பியிருப்பார். அவரவர் வசதிக்கேற்ப மோதிரம் அரை சவரனோ, ஒரு சவரனோ இருக்கும். சில வசதிக்கார மாமனார்கள் ‘போனஸாக’ மைனர் செயினும் போட்டு அசத்துவதுண்டு. மாப்பிள்ளைக்கும் செலவு உண்டு. மச்சினி, மச்சினன் இருந்தால் அவர்களுக்கு டிரெஸ். பட்டாசு என்று பர்ஸுக்கு பங்கம் ஏற்படலாம்.

    அடுத்தது என்ன? சாப்பாடுதான். மாப்பிள்ளை வந்திருக்காரேன்னு பல வெரைட்டில பலகாரத்துடன், சுடச் சுட இட்லி, குடல் கறிகுழம்பு என செஞ்சு வச்சிருப்பாங்க. புதுமாப்பிள்ளை என்பதால், கொஞ்சம் தூக்கலாக கவனிப்பார்கள். பின்னர், இருவரும் ஜோடியாக சேர்ந்து பட்டாசுகளை கொளுத்தி, பட்டையைக் கிளப்புவார்கள். இவ்வளவு கவனிப்பும் இன்றைக்கு ஒரு நாள் மட்டும்தானா? என ஏக்கத்துடன் ஊருக்கு திரும்புவார் மாப்பிள்ளை. தல தீபாவளி சம்பிரதாயம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. நகரங்களில் அதிகபட்சம் அறுபது சதவித தம்பதிகள்தான் இப்போது தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

  • sankararameswaran-koil-therottam

    தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோயிலில் தேரோட்டத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.

    அம்பாள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய விழாவான நேற்று காலை 10 மணியளவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    பத்தாம் நாளான இன்று காலை மஞ்சள் இடித்தல், பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி தீபாராதனை, இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விழாவாக நாளை இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

  • meenatchi-amman-koil-sirappu-darshan

    தீபாவளியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் …. ஐப்பசி பூரத்தையொட்டி 3-ஆம் தேதி காலை 10 மணியளவில் மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடந்து தீபாராதனை நடைபெறும்.

    தீபாவளியன்று காலை, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும்.

    ஐப்பசி திருவிழா நடைபெறும் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உபயதாரர்கள் சார்பில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகிய சேவைகள் நடைபெறாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

  • indraya-rasi-palangal

    நவம்பர் 3
    விளம்பி வருடம் – ஐப்பசி 17
    03-நவ-2018 சனி ஸபர்24
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி இ 3.09
    நட்சத்திரம் : பூரம் இ 11.12
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சினம்
    ரிஷபம் – நன்மை
    மிதுனம் – நற்செயல்
    கடனம் – உறுதி
    சிம்மம் – கோபம்
    கன்னி – தனம்
    துலாம் – பயம்
    விருச்சிகம் – இன்பம்
    தனுசு – சாந்தம்
    மகரம் – பெருமை
    கும்பம் – தாமதம்
    மீனம் – வரவு

  • thirupathy-thalai-mudi-kanikai-6-crore

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 3ஆயிரத்து 300 கிலோ தலைமுடி காணிக்கை ஏலத்தின் மூலம் ரூ 6.09 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர்.

    அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடி 3 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு ஆன்லைனில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் ஆன்லைனில் தலைமுடி விற்பனை செய்யப்பட்டது.

    இதில் பல்வேறு ரகமான 3 ஆயிரத்து 300 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதின் மூலம் ரூ 6.09 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

  • ramarin-viradhthuku-vandha-sodhanai

    சீதையை இரண்டாவது முறையாக பிரிந்து மன துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார் ராமர். அவரது மனம் முழுவதும் மனைவியைப் பிரிந்த துக்கம் அடைபட்டுக் கிடந்தாலும், சீதையைப் பற்றியேஅவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் ராமரின் முகம் வாட்டத்தை வெளிக்காட்டியதில்லை.

    அவரது நல்லாட்சியில் நாடு செழித்து, மக்கள் துன்பத்தை மறந்திருந்தனர். ராமரின் மனதில் மட்டும் துயரம் மறையாத வடுவாய் குடிகொண்டிருந்தது. சலவை தொழிலாளி ஒருவனின் தகாத பேச்சு காரணமாக சீதையை வனத்திற்கு அனுப்பி விட்டதால், ராமரின் மனம் மட்டுமே நிம்மதியின்றி தவித்து வந்தது.

    ஆனால் அவரது பண்புகளும்,பரிவுகாட்டும் உயர்ந்த குணமும்,இணையில்லா வீரமும், செறிந்த அறிவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு முறை ராமரைப் பார்ப்பதற்காக நடனக் கலையில் சிறந்த பெண் ஒருத்தி வந்திருந்தாள்.

    அவள் தன் நடனத்தை அரசவையில் அரங்கேற்ற அனுமதி தரும்படி ராமரிடம் கேட்டாள்.எவர் கேட்டும் இல்லை என்று சொல்லாத ராமபிரானும், அந்த நடனப் பெண்,அவையில் நடனம்புரிய அனுமதி வழங்கினார்.

    அந்தப் பெண்ணும் தான் கற்ற கலையின் திறமையை கிடைத்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். அவளது நடனம் அனைவரும் மெச்சும்படியாக இருந்தது. இளமை ததும்பும் அழகும், கண்களாலும், கைகளாலும் காட்டும் அபிநயமும் நடனத்திற்கு மெருகூட்டும் விதமாக அமைந்தது.

    கலைக்கு அதிபதியானகடவுளே நேரில் வந்து நடனம் புரிவது போல் இருந்தது அந்தப் பெண்ணின் நடனம். அவையில் கூடியிருந்த அனைவரும் நடனத்தை மெய்மறந்து ரசித்தனர். மன துயரத்துடன் இருக்கும் ராமருக்கும் அந்த நடனம் இனிமையூட்டியது. நடனம் முடிந்ததும் அவையில் எழுந்த கரவொலி பிரம்மாண்ட சத்தத்தை உண்டாக்கியது.

    அந்தப் பெண்ணுக்கு விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை பரிசாக வழங்கினார் ராமர். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்ள நடனப்பெண் மறுத்தாள். அவையோரும், ஏன் ராமரும் கூட இதைக் கண்டு வியக்கவே செய்தனர். பொன் பிடிக்காத பெண் உலகில் உண்டா என்ன!. ‘நடனத்தால் என்னையும் அவையோரையும் மகிழச்செய்த பெண்ணே!

    இந்தபரிசுவேண்டாமா? அல்லது போதாதா? வேறு வேண்டுமாலும் நீ கேட்டுப் பெற்றுக்கொள்!’ என்றார் ராமர். அதற்கு அந்தப் பெண், ‘அரசே! நான் என்ன கேட்டாலும் தருவீர்களா?’ என்றாள். ‘கேட்பவர்களுக்கு இல்லை என்று என் நாடு என்றும் சொன்னதில்லை.

    எனவே கூச்சம் எதுவும் தேவையில்லை. தாராளமாக, நீ எதை வேண்டுமானாலும் கேள், தருகிறேன்’ என்று கூறினார் ராமபிரான். ‘அரசே! நீங்கள் சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர் என்பதை அறிந்துதான் நான் இங்கு வந்தேன்.

    உங்களைப் போன்ற அழகும், அறிவும், அன்பும், பரிவும், வீரமும், வெற்றியும் நிறைந்த ஒரு மகனை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டும்!’ என்றாள் நடனப்பெண். அவையினர் அதிர்ச்சி அடைந்து மறுகணம் சிந்தனையில் ஆழ்ந்தனர். ‘சீதையைத் தவிர மற்றொருப் பெண்ணை தன்மனதாலும் நினைத்திடாதவர் ராமர்.

    இப்போது இந்தப்பெண்ணுக்கு அவரைப் போன்றதொரு மகனை கொடுக்க வேண்டுமானால் அவளை , மணந்து தானே ஆக வேண்டும். இல்லையெனில் எப்படி ஒரு மகனை பரிசாகத் தர முடியும். சிக்கலில் மாட்டி கொண்டாரே அரசர் என்று கூடியிருந்த அனைவரும் வாதிட்டுக் கொண்டனர்.

    ராமரின் முகத்தில் எவ்வித சலனமும் சலனமும் இல்லை. மாற்றமும் இல்லை.அவர் முகம் தெளிந்த தெளிந்த நீரோடைப் போல், புதிதாக பூத்தமலர்போல் பொலிவுடன் காணப்பட்டது. அரியணையை விட்டு கீழே இறங்கிய ராமர், நடனப்பெண்ணின் அருகில் சென்றார். ‘ஒரு மகனைப் பெற்றெடுப்பது என்றால் அதற்கு ஓராண்டாவது ஆகுமே.

    அவ்வளவு தாமதம் செய்வானேன். என்னைப் போன்ற மகன்தானே வேண்டும். இங்கேயே, இப்போதே என்னையே தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!’ என்று கூறி அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தார் ராமபிரான். நடனப்பெண் அதிர்ந்து போனாள்.

    அவள் மட்டுமா? அந்த நாடும் கூடத்தான். ‘அரசே! மனைவியைத் தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைக்காத, உங்கள் விரதத்தை சோதிப்பதற்காகவே, இதுபோன்ற ஒரு வரத்தை நான் கேட்டேன். நீங்கள் வென்று விட்டீர்கள். நான் அறியாமையால் செய்த தவறை மன்னிக்க வேண்டும்’ என்று கூறி ராமரின் கால்களில் விழுந்த நடனப்பெண், அவரிடம் விடைபெற்று திரும்பினாள்..

  • thiruthani-rajagopuram-kumbabishegam

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ராஜகோபுரம் கட்டும் பணியானது, ஒன்பது நிலைகள் முடிந்து தற்போது வண்ணம் பூசும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

    அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வந்து, மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், முருகன் கோயிலுக்கு, ராஜகோபுரம் அமைக்கும் பணி, கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் 18-இல், இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில், 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரத்துக்கு, ஒன்பது நிலை ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது, ஒன்பது நிலை கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இதுவரை மேற்பகுதியில் இருந்து மூன்று நிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கோபுரம் அருகில் கல்தரை போடும் பணி மற்றும் கோபுரம் வழியாக பக்தர்கள் செல்வதற்கு படிகள் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு 3 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.