Author: லிங்கேஷ்

  • Kundadam Kaala Biravar

    'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!' என்று சொன்னவர் யார் தெரியுமா? 
    திருமுருக கிருபானந்த வாரியார்.

    அதற்கு என்ன அர்த்தம்?

    காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி காலபைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.

    யார் இந்த பைரவர்?

    சிவனின் வீர அம்சம்தான் பைரவர். காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் இவர். காலனாகிய எமனையே நடுங்க வைப்பவர் என்பதால் கால பைரவர் என்ற பெயர் எழுந்தது. அதாவது பைரவரை வணங்குபவருக்கு எம பயம் இல்லை. சிவாலயங்களுக்கும், ஆலயம் அமைந்துள்ள ஊருக்கும் இவர்தான் காவல்காரர். அதனால் க்ஷேத்திரபாலகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. நான்கு வேதங்களே நாய் வடிவில், இவரது வாகனமாக இருக்கிறது.

    அத்தனை சிறப்பு மிக்க காசி கால பைரவர் எப்படி இந்த குண்டடம் கிராமத்துக்கு வந்தார் என்பது, உங்களுக்கு தெரியுமா?

    அதேபோல், இது என்ன ஊரின் பெயர் குண்டடம் என்று வித்தியாசமாக இருக்கிறதே? என்று நினைக்கிறீர்களா?

    இரண்டு கேள்விகளுக்கு விடையைத் தரும் ஆலய வரலாறை இப்போது பர்க்கலாமா?

    அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இதற்கு இந்து வனம் என்று பெயர். இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார். 

    அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து, ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவரகளையெல்லாம் அடித்து துரத்தினான்.

    அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று, முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லையே என்று தவித்தார் முனிவர்.

    உடனே காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார். விடங்கி முனிவரின் பிரார்த்தனை விஸ்வநாதர் காதில் விழுந்தது. முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும், அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் காசி விஸ்வநாதர் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார்.

    நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர். 

    தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து, இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து, கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.

    அப்புறம் என்ன? முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். பார்த்தார் வடுக பைரவர். கோபத்தின் உச்சிக்கே போன அவர், அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரே அறைதான்! ஒன்றரை லட்சம் டன் வேகம். கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன்.

    காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர், மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார்.

    விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படுமுன், பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி சின்னதாய் ஆலயம் எழுப்பினார். 

    விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுந்தது.

    அதுமட்டுமல்ல, அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் 'கொன்ற இடம்' என்றே வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில் 'குண்டடம்' என்று மருவிவிட்டது.

    பஞ்ச பாண்டவர்கள், இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது, திரெளபதி மேல் அரக்கன் ஒருவன், ஆசை கொண்டதாகவும், அதனால் கோபப்பட்ட பீமன், அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான் என்பதால் 'குண்டடம்' என்ற பெயர் எழுந்ததாகவும் இன்னொரு புராணம் சொல்கிறது.

    எது உண்மையாக இருந்தாலும் போர் நடந்த பூமி இது என்பதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்களே போதும். அவற்றின் பெயர் என்ன தெரியுமா? ரத்தக்காடு! சாம்பல் காடு! களரிக்காடு!

    காலங்கள் கடந்தன. வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல், விடங்கி முனிவிர் எழுப்பிய சிற்றாலயமும் மண்ணுக்குள் புதைந்து விட்டது.
    பூமிக்குள் மறைந்த காலபைரவர் தனக்கு மாபெரும் ஆலயம் எழுப்ப, மிளகை பயறாக்கிய அற்புத சம்பவத்தை நான் சொல்வதற்கு முன்னால் குண்டடம் ஆலயத்தை வலம் வருவோமா?

    எட்டு பிராகாரங்களுடன், எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அவையெல்லாம் எங்கே போயின என்பது காலச்சக்கரத்தைச் சுழற்றும் கால பைரவருக்கே வெளிச்சம்!

    ஆலயத்தின் எதிரில் அழகுற அமைந்திருக்கிறது திருக்குளம். நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் பளி்ச்சிடுகிறது.

    ராஜகோபுரத்திற்குத் தலைவணங்கி உள்ளே நுழைந்து பிராகாரத்தை வலம் வரலாம். சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜ பெருமாள், சனீஸ்வரர், நவகிரக நாயகர்கள் ஆகியோரைக் காணலாம். நந்தவனத்தில் மரங்கள் அசைந்தாடுகின்றன.

    இங்கே முருகப் பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக, இடதுபக்கம் நோக்கி அமைந்திருக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு முன்பு, இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம்.

    தனித்தனி கோயில்களில் விசாலாட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். காசி விசாலாட்சியும், காசி விஸ்வநாதருமே இவர்கள். முனிவருக்காக பைரவரை அனுப்பியவர்கள் இவர்கள்தான் என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

    அடுத்ததாய், இந்த ஆலயத்தின் கதாநாயகனான கால பைரவ வடுகநாதரின் சன்னதி. காசியிலிருந்து வந்தவர் இங்கேயே தங்கி, இங்கே லீலைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகினறன. இப்போது மிளகைப் பயறாக்கிய கால பைரவரின் கதை!

    மிளகு:
    மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய், கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர, சோழ, பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும், கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள், இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு, காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு.

    அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார்.

    அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். 'ஐயா, எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள்' என்றார்.

    அந்த வியாபாரி, இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு, 'பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு' என்று பொய் சொன்னார். 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர்.

    கொங்கு வடுகநாதா!

    மறுநாள் வியாபாரி, மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு, ஏதோ ஒரு சந்தேகம் வந்து, பாண்டிய மன்னன், மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார். வீரர்கள் அப்படியே செய்ய, எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள்!

    சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார். வியாபாரி கதறினான், பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார்.

    அதையெல்லாம் நம்பும் நிலையிலா மன்னன் இருந்தான்? 'பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள்' என்றான் கோபத்துடன். கதறினான் வியாபாரி. 'கொங்கு வடுகநாதா! என்னை மன்னித்துவிடு' என்று புலம்பினான். அழுதான். அவனது அழுகை குரல் பைரவருக்குக் கேட்டது!

    எல்லா நலனும் தருவேன்!

    நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். 'நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு!' என்றார். மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான்.

    'என்னுடைய பெண், பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன், நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன்' என்றான் மன்னன்.

    வடுகநாதர் புன்னகைத்தார். 

    அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள், தந்தையே! என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும், தந்தையை நோக்கி நடந்து வந்தான்!

    பரவசமடைந்தான் பாண்டிய மன்னன், 'என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே, நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்' என்று துதித்தான். வடுக பைரவர் புன்னகைத்தார். 'நானும், விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக. வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து, மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன்' என்று சொல்லி மறைந்தார் பைரவர்.

    அதுபோலவே, கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது, பயறு பழையபடி, மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு, குண்டடம் சென்றான். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட, விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும், விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி், கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். மன்னன் மட்டுமல்ல, யார் கால பைரவரை மனமார வேண்டி மிளகு சாற்றி வழிபட்டாலும் அவர் எல்லா நன்மைகளையும் அருளுகிறார் என்பது கண்கூடு. அது மட்டுமல்ல, காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டாலே போதும் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.

    சரி, உங்கள் குறைகள் எல்லாம் தீர நீங்கள் எப்போது கொங்கு நாட்டுக் காசியான குண்டடம் சென்று கொங்கு கால பைரவ வடுகநாதரை தரிசனம் செய்யப் போகிறீர்கள்? 

    ஒரு விஷயம் மறக்காமல் மிளகு எடுத்துச் செல்லுங்கள். யாராவது உங்களிடம் கொஞ்சம் மிளகு கேட்டால் கொடுத்துவிடுங்கள். ஜாக்கிரதை, ஒரு வேளை மிளகு கேட்பவர் காலபைரவராகவும் இருக்கக்கூடும்.

    எங்கே இருக்கிறது: 
    கோவை – மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது.
    கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.
    ஆலய நேரம்: 
    காலை 7 மணி முதல் 1 மணி வரை; மாலை 5 மணி முதல் 8 மணி வரை.
    தொலைபேசி: 04258-263301

    என்ன சிறப்பு: 
    காசி செல்ல முடியாதவர்கள் இங்கே வரலாம். பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர்.

  • Akshaya thiruthiyai solla vendiya mandiram

    நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி "அட்சய திருதியை" எனப் போற்றப்படுகிறது.

    'அட்சயம்' என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல நல்ல பலனை தரக்கூடியது. 

    இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.

    அட்சய திருதியை நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்: 
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
    சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!
    ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ

     

  • Akshaya Thiruthiyai Idhayum Seyalame

    அட்சய திருதியை நாள் அன்றுதான் அன்னை பராசக்தி ஈசனுக்கு அன்னம் அளித்தார்களாம். எனவே இந்த நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும்.

    அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுடககே அன்னமிட்ட பலன்கள் கிடைக்கும். 

     அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும்.

    அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும். 

     அட்சய திருதியை அன்று கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.

    ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தான தர்ம உதவிகள், பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

    புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். 

    கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.

    தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

    பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

    தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

    மோர், பானகம், குடிநீர் ஆகியவற்றை தானம் செய்தால் முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

    முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.
     

  • Note before gold purchase

    ஐஸ்வர்யம் தேடிவரும் அட்சய திருதியை நன்னாளில் மக்கள் அனைவரும் தங்கம் வாங்க, தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பு. 

    தங்கம் வாங்கும் முன் கவணிக்க வேண்டியவை. தங்க நகைகளை வாங்கும் போது, அதன் உண்மையான மதிப்பைத் தீர்மானிக்கும்போது, அதன் தூய்மைக்காக அதை சரி செய்ய வேண்டும். 

    இந்திய தரநிலைகள் (பி.ஐ.எஸ்.இ.) என்பது தங்க நகைகளுக்கு அடையாளமாக இருக்கும் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஆகும் மேலும் அதன் தூய்மை அடங்கும். 

    எனவே, ஒவ்வொரு நகைப்பகுதியும் ஒரு பி.எஸ்.ஐ. முத்திரை, பெற்றிருக்க வேண்டும்.
    தங்க நகைகள் எந்த ஒரு விலையில் இருந்து ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு மாறுபடுகிறது என்பதை சரி பார்ப்பது நல்லது. மாறுபட்ட தயாரித்தல் விலை மற்றும் அவற்றின் மீது வழங்கப்பட்ட தள்ளுபடிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தெரிந்த முடிவுகளை எடுக்கவும்.

    தங்க நகைகள் பொதுவாக வழக்கமான தங்க துண்டுகளைவிட அதிக விலை உயர்ந்தவை, மற்றும் விலையுயர்ந்த கற்கள் நகைகள் அழகு சேர்க்கின்றன போது, அவர்கள் ஒரு ஆபரணம் மதிப்பு குறைக்கின்றன. 
    பதிக்கப்பட்ட கல் விலைமதிப்பற்றதாக இருந்தாலும், தங்கம் மட்டுமே பரிமாற்ற மதிப்பைப் பெறுவீர்கள். எனவே கல் நகைகளை தவிர்ப்பது நல்லது.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சுகம்
    ரிஷபம் – நட்பு  
    மிதுனம் – வரவு
    கடனம் – பக்தி 
    சிம்மம் – வெற்றி 
    கன்னி – பரிசு  
    துலாம் –  பயம் 
    விருச்சிகம் – பாராட்டு
    தனுசு – தெளிவு 
    மகரம் –   ஆதரவு 
    கும்பம் – புகழ்
    மீனம் – போட்டி 
    சந்திராஷ்டமம்    – விசாகம், அனுஷம்

  • May 6 Indraya Naal Eppadi

    மே 6 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – சித்திரை 23
    06-மே-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    அ.கா    4.11
    நட்சத்திரம்    :    கார்த்திகை    மா    5.23
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்,அனுஷம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Akshaya thirudhiyai Parasuraman story

    நான்கு மறைகளையும் கற்றறிந்த வேத விற்பன்னர் ஜமதக்னி. அவரது கற்பிற் சிறந்த மனைவி ரேணுகா. நாள்தோறும் கணவர் துயில் எழுமுன்னரே ரேணுகா எழுந்து, பர்ணசாலையின் முன்வாசலை சுத்தம் செய்துவிட்டு, மாக்கோலமிட்டு விட்டு, கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, கங்கைக் கரைக்கு செல்வாள். 

    ஆற்றில் நீராடிவிட்டு, ஆதவனை வணங்கி  விட்டு, ஆற்று மணலை கைகளாலேயே பிசைந்தெடுத்து, ஒரு குடத்தை வடிவமைப்பாள். அவளது கரம் பட்டவுடனேயே, ஆற்று மணல் களிமண்ணாக மாறி, குடமாகவும் உருவெடுக்கும். கற்புக்கரசியான அவளது கரங்களுக்கு அத்தனை சக்தி. ஒருநாள் பொழுது புலரும் நேரம் நெருங்கிவிட்டதால், ரேணுகா அவசர அவசரமாக எழுந்தாள். விடிவெள்ளியைக் காண்பதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்தவாறே ஆற்றை நோக்கிப் புறப்ப ட்டாள். அப்போது வான வீதியில் சித்திர ரதன் எனும் கந்தர்வன், பறந்து சென்று கொண்டிருந்தது ஒரு கணம் அவளது பார்வையில் பட்டது. அவ்வளவுதான். அந்த கந்தர் வனின் அழகு சொரூபம், கம்பீரம்… அவளுடைய சிந்தை நிலைகுலைந்தது. அவள் உடல் நடுங்கியது. தன் எண்ணம் சிதறியது நியாயம்தானா என்று பதறினாள். இருப்பினும்,  அவள் வழக்கம்போல்  நீராடிவிட்டு, ஆற்று மணலைப் பிசைந்தாள். 

    தினமும் சட்டென உருவாகிவரும் மண்குடம் அன்று உருக்குலைந்தது. தன் மனத்தடுமாற்றத்துக்கான தண்டனையோ என்று தன்னையே நொந்துகொண்டாள். 
    அதேநேரம் ஜமதக்னி முனிவரும் விழித்துக் கொண்டார். தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவங்களை அறிந்தார். பத்தரைமாற்றுத் தங்கமாக, பதிவிரதையாக இருந்த தன் மனைவி, ஒரு கந்தர்வனின் அழகில் மயங்கி நிலை குலைவதா..? குமுறினார், ஜமதக்னி. தனது ஐந்து குமாரர்களையும் அழைத்து, உடனே நதிக்கரை சென்று, தாயின் தலையைத் துண்டித்து வருமாறு பணித்தார். தாயைக் கொல்வதா? இது என்ன விபரீதம்! எங்களால் முடியாது என, மூத்த குமாரர்கள் நால்வரும் மறுத்து விட்டனர். ஐந்தாவது குமாரன், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந் தவன். அவன் தான் பரசுராமன். புறப்பட்டான் கோடரியுடன்… ஆற்றின் கரையில் அழுது கொண்டிருந்த தன் அன்னையின் தலையை வெட்டிவிட்டுத் திரும்பினான். 

    அவனது கீழ்படியும் செயலில் மகிழ்ந்தார் ஜமதக்னி. எதற்காக தாயையே சிரச்சேதம் செய்யச் சொல்கிறீர்கள்? என்ன குற்றம் செய்தாள் அவள்? என்று கேள்வி எதையும் எழுப்பாமல், தகப்பன் இட்ட ஆணையை உடனே நிறைவேற்றிட்ட மைந்தனின் செயலால் மகிழ்ந்த முனிவரின் சினமும் தணிந்தது. ‘‘உன் செயலால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன் மகனே. என்ன வேண்டும் உனக்கு? தயங்காமல் கேள்’’ என்றார் ஜமதக்னி. ‘‘எனது தாயை மீண்டும் எங்களுக்கு உயிர்பித்துத் தரவேண்டும். இன்று நிகழ்ந்தவை அனைத்தும் அவளது மனதில் படியாது மறைந்திட வேண்டும்’’ என்று கோரி பரசுராமன் தந்தையாரின் பாதம் பணிந்தான். தனயனின் தாயன்பு கண்டு மெய்சிலிர்த்தார் ஜமதக்னி. ‘அப்படியே ஆகுக’ எனக்கூறி, ரேணுகாவையும் மன்னித்தருளினார். 

    இப்படிப்பட்ட புத்திர ரத்தினத்தை பெற்றெடுக்க ஜமதக்னி வழிபட்ட பல திருத்தலங்களில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள முழையூரும் ஒன்று. முனிவருக்கு பரசுராமன் என்ற அவதார புருஷனை அனுக்ரகித்த ஈஸ்வரன், இங்கே பரசுநாதராக அருட்பாலிக்கிறார். இந்த முழையூர் திருக்கோயிலில் அட்சய திருதியை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருமலை ராயன் ஆற்றில், பரசுநாதர் எழுந்தருளி, தீர்த்தவாரி காண்கிறார். கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற விரும்பும் மாணவ, மாணவியர் எட்டுப்பட்டை கொண்ட கம்பீரமான சிவலிங்கத் திருமேனியையும், அறிவுக் கண் திறப்பவளான ஞானாம்பிகையையும் வணங்கி வழிபட வருகிறார்கள். அட்சய திருதியை அன்று,முதல் ஜாமத்தில் அவதரித்தார் பரசுராமர். 

    அதனால் ஜெயந்தியும், அட்சய திருதியையும் சேர்ந்தே வரும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கும் வழக்கம் இப்போது பெருகி வருகிறது. அதைவிட அன்றைய தினம் இல்லாதவர்களுக்கு தானம் வழங்குவது மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக குடை, செருப்பு, குடிநீர், உணவு ஆகியவற்றை தானமாக வழங்குவது சிறந்த பலனைத் தரும். குன்றாத வளர்ச்சியைக் குறிக்கும் நாள் ஆனதால், அட்சய திருதியை அன்று துவங்கும் எந்தத் தொழிலும், தடையின்றி அதிவேகமாக முன்னேறிடும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை அன்று இறைவன் திருவருளோடு துவங்கும் எல்லா ஆக்கபூர்வப் பணிகளும், அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்தோங்கும்.

  • Thalakona Sivan Koil

    தலகோனா, மலைகளின் தலைவன், திருப்பதி ஏழுமலைகளில் முதல் மலை, திருப்பதியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் உள்ளது இந்த தலகோனா மலை. திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. 

    சந்தன மரங்கள் மற்றும் அறிய காட்டு விலங்குகள் இருக்கும் இடம். தலகோனா நீர்வீழ்ச்சி விழும் நீர் எண்ணற்ற மூலிகைகளின் கலவையாகும், காட்டு வழிப்பாதைகள் நிறைந்த இந்த இடம் பக்தியுடன் கோயிலுக்கு செல்பவர்களுக்கு மட்டுமல்ல ட்ரெக்கிங் செல்பவர்களுக்கும் ஏற்றது. திருப்பதியில் இருந்து காரில் சென்றால் எளிதாக சென்றடைய முடியும். இங்கு "அதர்மம்", "காதல் கொண்டேன்" மற்றும் சில திரைப்படங்களின் படங்களும் எடுக்கப்பட்டதாம். தலகோனா நுழையும் முன் செக்போஸ்டில் உங்கள் வாகனங்களை அலசி ஆராய்ந்த பின்னர் தான் உள்ள அனுமதிக்கிறார்கள். 

    காரில் எத்தனை வாட்டர் பாட்டில் இருக்கிறது என்று கேட்டு பாட்டிலுக்கு பத்து ருபாய் வாங்கிக்கொண்டு, திரும்பி வரும்போது காலி பாட்டிலைக் காட்டி காசைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர், பிளாஸ்டிக் குப்பைகளை கையாள இந்த யுக்தி. செக்போஸ்டிற்கு பிறகு சாலை சுமாராகத்தான் இருக்கும். குரங்குகள் தொல்லையை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அருவியிலிருந்து வரும் நீரை ஒரு குட்டை போல் தேக்கி வைத்திருந்தனர். மலை ஏற முடியாதவர்கள் இங்கேயே குளித்து விட்டு செல்லலாம். 

    டிரெக்கிங் போல் இல்லாமல் அனைவரும் சிரமமின்றி ஏற சிமென்ட் கற்களாலும் கைப்பிடிகளாலும் வழி அமைத்திருந்தனர். அரைமணி நேர நடை பயணத்திற்க்கு பின்பு அருவி கொட்டும் ஓசை கேட்கும். சுமார் 80 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் அருவியாக வீழ்ந்துக்கொண்டிருக்கும். வனத்துறை சார்பில் தடுப்புக்கம்பிகள் இருந்ததால் தைரியமாக அருவின் கீழ் செல்லலாம். மேலே இருந்து ஐஸ் கட்டிகளை எறிவது போல் இருக்கும இந்த நீர் வீழ்ச்சி. வருடம் 365 நாட்களும் தண்ணீர் வந்துகொண்டிருகும் என்றார்கள். சீசனில் தண்ணீரின் வீழ்ச்சி பிரம்மாண்டமாய் இருக்குமாம். 

    இன்னும் சற்று மேலே சென்றால் அருவியின் இன்னோரு பகுதியை காணலாம் என்றார்கள். அங்கு செல்ல படிகள் கூட அதிகம் இல்லை. ஆனால் அப்படி ஒன்றும் கடினமாகவும் இல்லை. மிக அற்புதமான ஒரு சூழல் அங்கு. வெகு உயர்ந்த செங்குத்தான மலை முகட்டிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது – வேறெந்த பாறையையும் தொடாமல்! தண்ணீர் விழுந்து தெறிக்கும் தரையும் தெரியவில்லை! அருவியில் நின்றால் தண்ணீர் முழுவதும் நேராக நம்மீதுதான் விழுகிறது – மொத்த விசையுடன். ஒவ்வொரு துளியும் தனித்தனி ஊசியாய் உடலில் இறங்குவது போல, வேறெங்கும் உணர முடியாத இன்ப வேதனை அது!
     

  • Maha Periyaval Pon Mozhigal

    ஒரு   மரத்திலே    புஷ்பத்திலிருந்து தான்   காயும், பழமும்    உண்டாகின்றன.

    புஷ்பமாக   இருக்கும் போது மூக்குக்கும்,    பழமாக   இருக்கும்   போது   நாக்குக்கும்    ரஸமாக    இருக்கின்றன.

    பழம்   நல்ல   மதுரமாக   இருக்கிறது..  இந்த   மதுரம்   வருவதற்கு   முன்   எப்படி   இருந்தது?   பூவில்   கசப்பாகவும்,   பிஞ்சில்   துவர்ப்பாகவும்,   காயில்   புளிப்பாகவும்,   கனியில்   மதுரமாகவும்   இருக்கிறது.

    மதுரம்    என்பது   தான்  சாந்தம்..   சாந்தம்   வந்தால்   எல்லாப்    பற்றும்  போய் விடுகிறது..    பழத்தில்   மதுரம்   பூராவாக   நிரம்பிய  உடனே கீழே   விழுந்து  விடுகிறது..   அது போல்,   இருதயத்தில்   எல்லா   இடத்திலும்   மதுரம்    வந்து   விட்டால்    தானாகவே   எல்லாப் பற்றும்    போய் விடும்.

    புளிப்பு   இருக்கும்  வரை   பற்றும்   இருக்கும்..   அப்போது   காயைப்  பறித்தால்   காம்பில்   ஜலம் வரும்.   காயிலும்   ஜலம்   வரும்.    அதாவது,   மரமும்  காயை   விட்டு விட   விரும்பவில்லை.   காயும்   மரத்தை  விட்டு விட   விரும்பவில்லை.

    ஆனால்,  நிறைந்த   மதுரமாக  ஆகி விட்டால்,   தானாகவே  பற்றும் போய் விடும்.   பழமும்   இற்று விழுந்து விடும்..   அதாவது,   மரமும்  பழத்தை வருந்தாமல்   விட்டு விடுகிறது..   பழமும்   மரத்தைப்   பிரிய   வருந்துவதில்லை.

    படிப்படியாக   வளர்ந்து   மதுர மயமாக   ஆகி விட்ட   ஒவ்வொருவனும்    இப்படியே   ஆனந்தமாக    சம்சார   விருட்சத்திலிருந்து    விடுபட்டு விடுவான்.

    பழமாக    ஆவதற்கு   முன்   ஆரம்ப தசையில்   புளிப்பும், துவர்ப்பும்   எப்படி    வேண்டியிருக்கின்றனவோ,  அதைப்   போல  காமம், வேகம், துடிப்பு   எல்லாம்   வேண்டியிருக்கின்றன.

    இவற்றிலிருந்து   நாம்   ஆரம்ப  தசையில்   பூரணமாக    விடுபட முடியாது..   ஆனாலும்   இவை   எல்லாம்    ஏன்   வருகின்றன?   என்று   அடிக்கடி   நினைத்தாவது பார்க்க வேண்டும்.

    இப்போது   இன்ன  உணர்ச்சி   வந்ததே!   ஆசை   வந்ததே!   கோபம்  வந்ததே!   பெருமை   வந்ததே!   பொய்   வந்ததே! இதனால்   ஏதாவது பிரயோஜனம்   உண்டா?   இந்த   உணர்ச்சி   அவசியமாக   வருகிறதா?   அனாவசியமாக  வருகிறதா?   என்று   நினைத்துப் பார்க்க வேண்டும்..    அப்படி   நினைக்கவில்லை   என்றால்   அவை   நம்மை  ஏமாற்றி விடும்,  ஏமாந்து விடுவோம்.

    புளிப்பு   இருக்க  வேண்டிய   சமயத்தில்   புளிப்பு   வேண்டும்,  துவர்ப்பு   இருக்க வேண்டிய   சமயத்தில்   துவர்க்க  வேண்டும்.

    ஆனாலும்,   அந்தந்த   நிலையோடு  நிற்காமல்,   பிஞ்சு   படிப்படியாகப்   பழமாகிக்   கொண்டே   வருவதைப்  போல,   நாமும்   மேலும்  மேலும்   மாதுரியமான   அன்பையும்,  சாந்தத்தையும்    நினைத்துக் கொண்டே   வந்தால்   நாமாகப்   போய்   மோட்சத்தைத்   தேட வேண்டாம்.

    எந்தப்   பருவத்தில்   எப்படி   இருக்க வேண்டுமோ   அப்படி   இருந்தால்,   தானாகவே   மோட்சம்    என்ற   மதுர நிலை   வந்து விடும்…

    மஹா பெரியவா சரணம்

  • thirupathy arjith seva tickets

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.  ஆகஸ்ட்  மாதத்திற்கான  கட்டண  சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 67,737 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.  

    ஆன்லைன் குலுக்கல் முறையில் 11,412 டிக்கெட்
    சுப்ரபாதம்  – 8, 117
    தோமாளை – 120
    அர்ச்சனை – 120
    அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 180
    நிஜபாத தரிசனம் – 2, 875
    பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 53,675 நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது
    கல்யாண உற்சவம் – 13,300
    ஊஞ்சல் சேவை – 4,200
    விசேஷ பூஜை – 1,500
    ஆர்ஜித பிரம்மோற்சவம் –  7, 425
    வசந்த உற்சவம் – 14,300
    சகஸ்கர தீப அலங்கார சேவை – 15,600
    இந்த டிக்கெட்  www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.