Tag: Thirupathy

  • Mumbayil Thirupathy

    மும்பையில் ஏழுமலையான் கோவில் அமைப்பதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து இருக்கிறது. 

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளது. இதையொட்டி மும்பையில் நிலம் சேகரிக்கும் போனில் தேவஸ்தானம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கேட்டுக் கொண்டதற்கிணங்க மும்பையில் முக்கிய சந்திப்பு கிழக்கு பந்தர் சாலையில் மகாராஷ்டிர மாநில அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. 

    இதற்கான உத்தரவை மும்பை புறநகர் மாவட்ட கலெக்டர் மிலிண்ட் போரிக்கர்  திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு  மும்பையில் ஏழுமலையான் கோவில் அமைப்பதற்காக மகாராஷ்டிர மாநில அரசு 6,975 சதுர அடி பரப்புள்ள 16 சென்ட் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான உத்தரவு ஆணையை மகாராஷ்டிர மாநில முதல்வர் ஸ்ரீ தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் பசந்த்குமாரிடம் வழங்கினார். 

    இதனை பெற்று கொண்ட தேவஸ்தான இணை செயல் அலுவலர் பசந்தகுமார்  இந்த இடத்தில் தேவஸ்தான ஏழுமலையான் கோவில் மற்றும் தகவல் மையம் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

    இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில நிதியமைச்சர் சுதீர் முன்ங்தீவார், தேவஸ்தான எஸ்டேட்  அதிகாரிகள் விஜயசாரதி,  துணை செயலாளர் விஸ்வநாத், உள்ளூர் வளர்ச்சிக்குழு உறுப்பினர் ரங்கநாதன், கீதா கஸ்தூரி ,சமத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • Thirupathy Hundiyal coins

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய நாணயங்களை வங்கியில் வழங்கி மூன்றாண்டுகளுக்கு முதலீடு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளாக மலை போல் குவிந்து இருந்த சில்லரை நாணயங்களுக்கு தீர்வு கொண்டு வந்துள்ளது தேவஸ்தான நிர்வாகம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் ஏழுமலையான் கோவில் உண்டியலில் செலுத்திய சில்லறை நாணயங்கள் 20 கோடியே 50 லட்ச ரூபாய் வரை தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள சில்லறை நாணய பரக்காமணியில்   சேர்ந்து உள்ளது. 

    இந்த நாணயங்களை மாற்றுவதற்காக அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் தேவஸ்தானத்தில் உள்ள சில்லறை நாணயங்களை பெறக்கூடிய வங்கியில் மூன்றாண்டுகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் அதே தொகை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

    மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வருவது குறித்தும் வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வங்கி அதிகாரிகளும் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள சில்லரை நாணயங்களை பெறுவதற்கு அவர்கள் முன்வந்துள்ளனர். 

    மேலும் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியலில் காணிக்கையாக 5 கோடி ரூபாய் வரை சில்லறை நாணயங்கள் வருகிறது. அதனை  சுழற்சிமுறையில் நீங்களே தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் வழங்கும்படி வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஒவ்வொரு மாதமும் உண்டியலில் கிடைக்கும் சில்லரை நாணயங்களை பெறுவதற்காக பட்டியலை வழங்கியுள்ளனர். 

    அதன்படி ஒவ்வொரு மாதமும் 5 கோடி ரூபாய் சில்லரை நாணயங்களை தேர்தெடுக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்யும் விதமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. எனவே இன்னும் ஒரு மாத காலகட்டத்திற்குள் தேவஸ்தானத்தில்  நிலுவையில் உள்ள சில்லறை நாணயங்கள் அனைத்தும் அந்தந்த வங்கியில் செலுத்தப்பட்டு அதன் மூலமாக தேவஸ்தானத்திற்கு  வட்டி கிடைக்கும் விதமாக செய்யப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
     

  • Thirupathy pavitrochavam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக செய்யப்படும் பவித்திர உற்சவம் தொடங்கி உள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம்தோறும் நடைபெறக்கூடிய பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களுக்கு பவித்திர உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வாறு  பவித்ரோற்சவம் இன்று துவங்கியது. 

    பவித்ர உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை உற்சவர்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கு பால்,தேன், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீப, தூப, கற்பூர ஆரத்தி ஆகிய சமர்பணங்கள் உற்சவ மூர்த்திகளுக்கு நடைபெற்றன.

    தொடர்ந்து நெய்வேத்தியம் செலுத்தப்பட்டு  யாகசாலையில் பவித்திர மாலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில்   தேவஸ்தான இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    நாளை பவித்ரா உற்சவத்தின் இரண்டாவது  நாள் பவித்ர மாலைகள் மூலவருக்கும், உற்சவருக்கும், ஆனந்த நிலையம், கொடிமரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் செவ்வாய்கிழமை யாகம் பூர்ணாவுதியுடன் நிறைவு பெறுகிறது.

  • Thirupathy July month Hundiyal

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  ஜூலை மாதம் 109.60 கோடி பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாக ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்கள், தங்கம் , வெள்ளி என காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். 

    அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் தினந்தோறும்  எண்ணப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஒருநாளைக்கு 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை  காணிக்கையாக தேவஸ்தானத்துக்கு வருவாய் வருகிறது. கடந்த  2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 5 ஆயிரத்து 323 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 843 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 77 ஆயிரத்து 520 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 99 லட்சத்து 81 ஆயிரத்து 611 லட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கோடியே 14 லட்சத்து 46 ஆயிரத்து 36 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  

    சாமி தரிசனம் செய்த பக்தர்களில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 739 பக்தர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்திய நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 10 லட்சத்து 69 ஆயிரத்து 748 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    உண்டியலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 102.88 கோடி பக்தர்கள் காணிக்கை செலுத்தி நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ 109.60 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்த ஆண்டில் மார்ச் மாதம் 105.8 கோடியும் , ஜூன் மாதம் 100 கோடி, ஜூலை மாதத்தில் 109.60 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். 

    2019 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல்  காணிக்கை செலுத்தி பக்தர்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்தி உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் உண்டியல் மூலமாக 1234 கோடி ரூபாய் பக்தர்கள்  உண்டியலில் செலுத்தும் காணிக்கையின் மூலமாக வரும் என தேவஸ்தானம் எதிர்பார்க்கப்படுகிறது.
     

  • Thirupathy Online Ticket Booking

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட்  மாதத்திற்கான  கட்டண  சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 69,254 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. 

    டிக்கெட் விபரம்…
    ஆன்லைன் குலுக்கல் முறையில் 10,904 டிக்கெட்
    சுப்ரபாதம்  – 7549
    தோமாளை – 120
    அர்ச்சனை – 120
    அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 240
    நிஜபாத தரிசனம் – 2875
    பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 58,350  நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.
    கல்யாண உற்சவம் – 13,300
    ஊஞ்சல் சேவை – 4,200
    விசேஷ பூஜை – 1,500
    ஆர்ஜித பிரம்மோற்சவம் –  7,700
    வசந்த உற்சவம் -14,850
    சகஸ்கர தீப அலங்கார சேவை – 16,800

    இதில் பொது கோட்டா டிக்கெட் டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறையில் வெளியிடப்பட்டுள்ள 10 ஆயிரத்து 904 டிக்கெட்டுகள் பெறுவதற்கு  5 ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 

    பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் 5 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12மணி கிடையே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் 8 ம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆன்லைன் மூலமாக  பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

  • Thirupathy Ezhumalayan Koil Pallava Urchavam….

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  பல்லவ உற்சவம் நடைபெற்றது. மைசூர் மகாராஜா பிறந்த உத்திராட நட்சத்திரத்தில்  ஒவ்வொரு ஆண்டும் பல்லவ உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி இன்று  மாலை சகஸ்கர தீப அலங்கார சேவை முடிந்த பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளினர். 

    அங்கு கர்நாடக மாநில அரசின் பிரதிநிதிகளும் , மைசூர் சமஸ்தான பிரதிநிதிகள் கர்நாடக சத்திரத்தில் சுவாமி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் தேவஸ்தான சிறப்பு அலுவலர் பாலா சேஷாத்ரி,  போக்கசம் பொறுப்பாளர் குருராஜராவ், பார் பட்டதர் ராமசந்திர உள்ளிட்ட அதிகாரிகள் பக்தர்கள் பங்கேற்றனர்.

    மைசூர் மகாராஜா நினைவாக கடந்த 300 ஆண்டுகளாக  பல்லவ உற்சவம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. முதலில் இந்த உற்சவத்தை தோட்ட உற்சவம் என அழைக்கப்பட்டு  வந்தது .வரலாற்று புராணத்தின் படி  ஏழுமலையானின் தீவிர பக்தரான மைசூர் மகாராஜா சுவாமியின் மீது கொண்ட பக்தியினால் பல நன்கொடைகளை வழங்கி உள்ளார். 

    இதில் மூலவருக்கும், சுவாமி தாயார் உற்சவருக்கும் பிளாட்டினம், தங்கம், வைரம் ,வைடூரியம், மரகத பச்சை போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை வழங்கியுள்ளார். மேலும் பிரம்மோற்சவத்தில்  சுவாமி வீதி உலாவிற்காக கருட, கஜ,  முத்துப்பந்தல், சர்வ பூபால, குதிரை, சூரிய பிரபை, சந்திரப் பிரபை போன்ற வாகனங்களை நன்கொடையாக வழங்கினார். 

    சாமியின் வாகன சேவையில் ஐந்தாவது நாள் காலை பல்லக்கு உற்சவத்திற்காக யானை தந்தத்தால் பல்லக்கு தயார் செய்து நன்கொடையாக வழங்கி தனது பக்தியை தெரியப்படுத்தினார். மேலும் தினந்தோறும் ஏழுமலையான் கோவிலில் காலை சுப்ரபாத சேவைக்கு முன்னதாக மைசூர் சமஸ்தானம் தரப்பில் நவநீத ஆரத்தி அகண்ட தீபத்திற்காக  தினந்தோறும் 5 கிலோ நெய் வழங்கும் சம்பிரதாயத்தை அவர் தொடங்கி வைத்தார் தற்பொழுதும் இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகிறது. 

    மைசூர் மகாராஜா நினைவாக ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உத்திராட நட்சத்திரம் அன்று இரவு ஏழு முப்பது மணிக்கு சிறப்பு ஆஸ்தானம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வருடாத்தில் முக்கிய நாட்களான உகாதி , தீபாவளி , ஆனிவார ஆஸ்தானம் போன்ற நாட்களில் மைசூர் மகாராஜா பெயரில் சிறப்பு ஆரத்தி வழங்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி உறியடி உற்சவம் அன்றும் மலையப்ப ஸ்வாமி கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி பின்னர் கோவிலை வந்தடைவது வழக்கம்.

  • Thirupathy Ezhumalayan Puspa Pallaku

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி வார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு  திருமலையில் இன்று மாலை சுமார் 3 டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளிய  ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோயில் மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு சேலத்தை சேர்ந்த  மனிசங்கர் என்னும் பக்தர் அளித்த நன்கொடை மூலம் ஒரு வார காலமாக தேவஸ்தான தோட்டத்துறை கண்காணிப்பில் 15 ஊழியர்கள் பிரம்மாண்டமான அழகிய புஷ்ப பல்லக்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்றன. 

    ரோஜா, மல்லி, முல்லை, கனகாம்பரம்  உள்ளிட்ட ஒன்பது வகையான சம்பர்தாய மலர்களும் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து வகை  மலர்கள் என 3 டன் எடையுள்ள மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கின் முன்பகுதியில் மகாவிஷ்ணுவும், பின் பகுதியை யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரும், புஷ்ப பல்லக்கில் இரு புறங்களையும்  ஆஞ்சநேயர், கருடாழ்வார் கிருஷ்ணர் ஆகியோர் அலங்கரிக்கும் வகையில் புஷ்ப பல்லக்கு தயார் செய்யப்பட்டிருந்தது.

    மாலை கோவிலில் இருந்து புறப்பட்டு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே கோயிலில் மாட வீதிகளில் உற்சவம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.அப்போது நான்கு மாடவீதிகளில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் புஷ்பப் பல்லக்கு வாகன சேவை பக்தி மனம் உருகி கற்பூர ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
     

  • Puspa Pallakil Thirupathy Ezhumalayan

     திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானத்தை யொட்டி 3 டன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


     

  • Thirupathy Srirangam Silk

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆனிவார  தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. 

    இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை  முகலாயர்கள் படையெடுப்பின்போது பாதுகாக்க  ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு ரங்கநாதர் மண்டபத்தில் 20 ஆண்டுகள் வைக்கப்பட்டது. அதனை   நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆனிவார ஆஸ்தானத்தின் பொழுது ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். 

    அவ்வாறு இன்று பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும்  ரங்கநாதர் கோவிலில் இருந்து விஷ்ணு சகஸ்ரநாமத்துடன் கூடிய பட்டு வஸ்திரங்களை இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் அபூர்வா சர்மா,  ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தகவல் துறை ஆணையாளர் பிரதாப் குமார் தலைமையில் பட்டு வஸ்திரங்களை கொண்டு வரப்பட்டு பெரிய ஜீயர் மடத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 

    பின்னர்  வீதிகளில்  யானைகள் அணிவகுத்து செல்ல நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான்  கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டியிடம் வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
     

  • Thirupathy Azhvar thirumanjanam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி நாள் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு முடிக்கப்பட்டு ஆடி 1 ஆம் தேதி புதிய கணக்கு தொடங்கி பழைய கணக்குகள் சுவாமிக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. 

    ஏழுமலையான் கோவிலில் உகாதி ( தெலுங்கு வருடப்பிறப்பு  ) , ஆனி வார ஆஸ்தானம் , வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நான்கு உற்சவங்களுக்கு முன்னதாக வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். 

    இதனை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு நாளை ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் இன்று காலை 6 மணி முதல் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி,  செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஆகியோர் தலைமையில் கோவிலில் உள்ள மூலவர் கருவறையில் பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம் வகுலமாதா சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி, வரதராஜ சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. 

    இதையடுத்து பச்சைக்கற்பூரம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மூலிகைகள் கலவைகளை கொண்டு கோவில் சுவற்றில் உள்ள அனைத்து இடங்களிலும்  தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மூலவர் சன்னதியில் அணிவிக்கப்பட்டிருந்த பட்டு வஸ்திரங்கள் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.