Blog

  • thirupathi sarva dharisanam cancel

    திருப்பதியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருவதையொட்டி, திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்தபடி உள்ளனர். இதனால் தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், அதிக கூட்டம் காரணமாக இன்றுமுதல் வரும் 13 ம் தேதி வரை மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம், ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • Thirumana Thadai Neenga Pournami Yagam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பௌர்ணமி யாகங்கள் என்னும் கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபர்வதி யாகம், சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஏகரூப ராஹு கேதிவிற்கு அன்னாபிஷேகமும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு விசேஷ பௌர்ணமி பூஜையும் நடைபெற உள்ளது.

    கந்தர்வ ராஜ ஹோமம் :

    திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது. மேலும் பீடத்தில் சென்ற 15 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.

    சுயம்வர கலாபார்வதி யாகம் :

    திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

    சந்தான கோபால யாகம் :

    குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி  விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

    மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Kamatchiyin Karunai Petren 2

    மதிப்பிற்குரிய டாக்டர் கீது வாட்ஸ் அவர்களுக்கு, 

    என் பெயர் திருமதி சிவராமன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மிக சிலரே. அவர்களில் ஒருவர் தான் கீது வாட்ஸ். பிரசன்னம் பார்ப்பதிலும் நியுமராலஜி கணிப்பதிலும் மிகவும் வல்லவர். அவர்களிடம் நமது பிரச்சனையை சொன்னால் அதை மிக எளிய முறையில் பரிகாரங்கள் மூலம் தீர்த்து வைக்கின்றார். அவற்றில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    என் மகளின் ஜாதகத்தை பார்த்து இந்த தேதியில், இந்த கிழமையில், இந்த நட்சத்திரத்தில் முதுகில் மச்சத்துடன் பெண் குழந்தை பிறக்கும் என்று ஆருடம் சொன்னார். அதேபோல என் மகளுக்கு முதுகில் மச்சத்துடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. என் மகளும், பேத்தியும், மருமகனும் வெளிநாடு எப்போது செல்வார்கள் என்பதையும் கணித்து சொன்னார். சொன்ன சொல் அப்படியே பலித்தது. என் குடும்ப நண்பர் ஒருவர், வீட்டு பிரச்சனைகளால் மிரண்டு போயிருந்தார். என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லி கீது வாட்ஸை அணுகச் சொன்னேன். என் நண்பரது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் நல்ல முறையில் தீர்த்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர்கள் சொல்லும் சில எளிய பரிகாரங்களை மிகவும் சிரத்தையுடன் செய்து வந்தாலே கை மேல் பலன் கிடைக்கும். என் வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு அவர்கள் சொன்ன பரிகாரங்கள் மிகுந்த பலனை அளித்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் சில பிரச்சனைகளோடு அவரை ஒரு முறை சந்தித்தேன். திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனுக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை செய்ய சொன்னார்கள். அந்த பூஜையை மூன்று மாதம் தொடர்ந்து செய்த பிறகு என் வாழ்வில் நம்ப முடியாத அதிசயங்கள் நடந்தது. நடக்கவே நடக்காதென்று எதையெல்லாம் நான் நினைத்திருந்தேனோ அது எல்லாம் நடந்தது. நன்றி.

    -சவுதியிலிருந்து திருமதி. சிவராமன்

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257

     

  • October 11 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – ஆதரவு
    மிதுனம் – ஈகை
    கடனம் – பெருமை
    சிம்மம் – பரிசு
    கன்னி –  உயர்வு
    துலாம் –  ஆர்வம் 
    விருச்சிகம் – கவனம் 
    தனுசு –     அமைதி
    மகரம் –  வரவு
    கும்பம் – நிறைவு
    மீனம் – நஷ்டம்  
    சந்திராஷ்டமம்    – பூரம்
     

  • October 11 Pradhosham

    அக்டோபர் 11 பிரதோஷம்
    விகாரி வருடம் – புரட்டாசி 24
     பிரதோஷம் 
    பெண் குழந்தைகள் தினம்
    11-அக்-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    இ    11.24
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Vasthu Dhosham Neenga

    புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

     
    பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

    திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.
     

  • Sukravara pradhosham poojai

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் சுக்ரவார பிரதோஷத்தை முன்னிட்டு வருகிற 11.10.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் ருத்ர ஹோமத்துடன் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

    பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வழிபடுவதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புவாய்ந்த நாளில், பிரதோஷ தினத்தில், பிரதோஷ நேரத்தில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான வரம் அருளும் ஈஸ்வரனை உடல் நலம், மன நலம் வேண்டியும், இயற்கை வளத்திற்காகவும் நாமும் பிரார்த்தனை செய்வோம். பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும்.

    வெள்ளிக்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சுக்ர வாரப் பிரதோ‌ஷம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரதோஷ நாளில் நந்திதேவரையும் சிவபெருமானையும் தரிசித்து ஹோம பூஜைகளில் பங்கேற்று பிரார்த்தனை செய்தால் கடன் தொல்லைகள் அகலும், எல்லா நலனும் வளமும் வந்து சேரும், இல்லம் சிறக்கும், செழிக்கும், சகல தோ‌ஷங்களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும், மேலும் பல நற்பலன்களை பெறலாம்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சுக்கிரவார பிரதோஷ பூஜையில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தக்வலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Mutharamman dasara niriavu

    உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நிறைவாக விரதமிருந்து மாலையணிந்த பக்தர்கள், காப்பு களைந்து  மாலையை கழற்றி உண்டியலில் காணிக்கை செலுத்தி விரதத்தை நிறைவு செய்தனர்.

    திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 29 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இத்திருவிழாவிற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து காப்பு கட்டி காளி அம்மன்  சிவன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு வகையான வேடங்கள் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதனை கோவில் உண்டியலில் செலுத்தி அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

    மிக பிரமாண்டமாய் நடைபெற்ற இத்திருவிழா வின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரனை வதம் செய்யும் நிழ்ச்சியா மகிஷாசூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து சப்பரத்தில் வீதி உலா சென்ற முத்தாரம்மன்   திருக்கோயிலை வந்தடைந்தார். பின்னர் கொடியிறக்கப்பட்டது. 

    இதனை தொடர்ந்து அம்மனுக்கு திருகாப்பு அவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து கோவில் பட்டர் பக்தர்களுக்கு காப்பு அறுத்து மாலையை கழற்றினார். இந்த திருவிழாவின் பக்தர்கள் தர்மம் எடுத்த பணத்தை  காணிக்கையாக  உண்டியல்கள் செலுத்தினர். இதில் பல உண்டியல்கள் நிரம்பியது. இந்த தசரா திருவிழா நிறைவு பெற்றது.

  • Kalappu Thirumanam Seidha Siddhar

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    சித்தர் பிரான்களில் சிறந்தவர் சிவவாக்கியர்.

    சித்தர்களில் அதிக அளவு அதிஞானப் பாடல்களைப் புனைந்தவர் 
    சிவவாக்கியரே.
    அனல்பறக்கும் சொற்கள், புரட்சிக் கனல் தெறிக்கும் பாடல்கள், சிவவாக்கியரின் சிறப்பைச் சொல்லும்.

    அந்தணர் குலத்தில் தோன்றிய அற்புத மகான் சிவவாக்கியர்.
    தந்தையும் தாயும் வள்ளல் தன்மையில் ஊர் போற்ற வாழ்ந்தவர்கள்..

    பெற்றோர் செய்த அறத்தின் பயனாய் 
    அருள் தவத்தின் பலனாய் அவதரித்தார் சிவவாக்கியர்.

     ஆன்மீகப் பற்றும் தேடல்நிலையும் 
    நிறைய இருந்தது என்பதைத் தவிர சிவவாக்கியர் குறித்த தகவல் அவரது ஐம்பது வயது வரை ஏதுமில்லை .
    வடக்கே காசியின் மகிமையை கேள்விப்பட்ட சிவவாக்கியர் 
    ஐம்பதாவது வயதின் நிறைவில் 
    அங்கு சென்றது அவரது வாழ்வில் அரும்பிய திருப்புமுனை.

    காசியில் ஒரு சித்தர். 
    அவர் காசினி காணா பெரும் சித்தர்.
    செருப்பு தைப்பது அவரது தொழில். 
    சக்கிலி சித்தர் என்பர் அவரை 

    அவர் சக்தி மிக்கவர். வாசியில் வல்லவர். சித்தியில் சிறந்தவர் என்பது யாருக்கும் தெரியாது.
     காசியின் 
    குறும் சந்துகளில் 
    இருபுறமும் வேடிக்கை பார்த்த வண்ணம் ஞானத்தேடலோடு சென்றுகொண்டிருந்த சிவவாக்கியர் கண்களில் அந்த சித்தர் பட்டார்.

    சிவவாக்கியர் கண்கள் நகர மறுத்தன. அவரை விட்டு மீள மறுத்தன.
    அப்படி ஒரு ஈர்க்கும் முகம். கவர்ந்திழுக்கும் பொலிவு.
    வைத்த கண் வாங்காது சிவவாக்கியர் 
    அச்சித்தரை நெருங்கினார்.

    அதுவரை இல்லாத ஈர்ப்பு. பூர்வ ஜென்ம உறவு போல ஒரு தொடர்பு.
    விட்டகுறையோ தொட்டகுறையோ நிறைநோக்கி நெருங்கி வந்தார் 
    எதிர்கால சித்தர்.

    "வாப்பா…
    எதைத்தேடி வந்தாய் ?
    வா….தேடியது கிடைக்கும்.

     இங்கே அமர்வாய்."
    ஒரு பலகையைக் காட்டினார் சித்தர். 
    பதில் ஏதும் சொல்லாமல் உத்தரவுக்கு உட்பட்ட பணியாளர் போல் 
    அவர் முகத்தை தரிசித்தபடி அமர்ந்தார் சிவவாக்கியர்.

    "எனது தேடல்…." ஆரம்பித்தார் சிவவாக்கியர்.
    "தெரியுமே….!" அதிர்ச்சியூட்டினார் சித்தர்.
    கொஞ்ச நேரம் அமைதி. இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

     ஆயினும் மௌனமும் பார்வையும் 
    மெலிதாய் பேசின. 
    நிறைய பேசின. நிறைவாய் பேசின.

    குருவாய் செருப்புத் தைப்பவர். 
    சீடராய் வேதம் ஓதிய அந்தணர். 
    இருவரும் ஒன்றாகிப் போயினர்.

     "உனக்குத் தீர்வு சொல்கிறேன்….
     இந்தா … இது நான்
     செருப்பு தைத்த காசு.

    இதோ….
    இது சுரைக்காய்…
    பேய்ச் சுரைக்காய்.

     இரண்டையும் தருகிறேன்.
    காசை
    காசியில் 
    ஓசையோடு ஓடும் கங்கையில் போடு.

    கங்கை வேறுயாருமல்ல… என் தங்கையே !
     பேய் சுரக்காய் கசக்கும் அல்லவா ? 
    கங்கை நீரில் கழுவி 
    கசப்பு நீக்கி வா……"
    குரு எடுத்துத் தந்தார்.

    குரு பேச்சுக்கு மறுபேச்சு கூடாது. 
    இதுவே குரு – சீடர் உறவுக்குப் பாலபாடம்.

    அருகில் ஓடிய கங்கைக்குச் சென்றார் சிவவாக்கியர்.
    காசை எடுத்து தூக்கி எறியும் போது….
    ஆற்றிலிருந்து 
    வலதுகை ஒன்று வளையோசை  ஒலிர மெதுவாய் எழுந்தது.

    சிவவாக்கியரை சைகையால் 
    வா…. வா வென அழைத்தது அத்திருக்கரம்.

    காசினை அக்கையில் வைத்து வணங்கி நின்றார்.
    பெண்ணரசியின் வலதுகை வளையோசை கலகலவென ஒலி எழுப்பிய வண்ணம் மீண்டும் நீருக்குள் மறைந்தது.

    பின்னர்
    பேய்ச் சுரைக்காயை கங்கை கரையினில் நின்று கருத்தாய் கழுவினார்.
    குருவிடம் ஓடி வந்தார்.
    தாழ் பணிந்தார்.

     "நல்லது……
    ஆனால் நான் ஒரு தவறுசெய்துவிட்டேன்.,." சித்தர் சிரித்தபடி தொடர்ந்தார்.
    "ஆம்….கங்கைநீர் இங்கேயே இருக்கிறது காசை அதில் போட்டிருக்கலாம்.

     உன் வாழ்வின் 
    முற்பிறப்பு மாசுகளையும் கழுவி இருக்கலாம்.,,
    இதோ பார்….
    செருப்புத் தோலினால் ஆன  பை….."
    அதைத் திறந்தார்.

    அதில் கங்கை நீர் இருந்தது .
    மீண்டும் அவளிடம்  காசைத் திரும்பக்கேள் ….,தருவாள்……. ஆசீர்வதிப்பாள் ….."

    சிவவாக்கியர் எதுவும் யோசிக்கவில்லை.
    ஒரு சொல்.
    சிறு சொல்.
    குரு சொல்….என்பது 
    குரு சீடர் உறவின் 
    அடுத்த பாடம்.

    குருவின் திருவுருவில் திருவாய் மலர்ந்த சொற்களில் மயங்கியிருந்த 
    சீடர் சிவவாக்கியர் மனமுருகி 
    வேண்டி நின்றார்
    குரு கட்டளைப்படி.

    அந்த தோல் பையிலிருந்து புனித கங்கை வந்தாள்….
    அதே வளையோசை….
    காசு தந்தாள்.
    சீடர் பெற்றார்.

    ஆசீர்வதித்த படி கங்கையின் கை 
    நீரில் மூழ்கியது .

    "சரியப்பா…
    உன் மனமும் குணமும் கொஞ்சம் குழம்பி இருக்கிறதே…!

    உன் தேடல் கூட 
    அதை நாடித் தானே..!"
    புதிர் போட்டார் சித்தர்.

    புரியாது விழித்தார் சிவவாக்கியர்.

    "பெண்ணின்
    கையைக் கண்டதும் பரவசம் அடைகிறாய்.!

    காசு தரும்போதும் பெறும்போதும் 
    கரம் படும்போதும் 
    கிளர்ச்சி அடைகிறாய்.

    ம் …..காமம்…
    சித்திக்குமுன்
    வாழ்ந்து விடு…..பின்வா….

    சித்திக்கு அதுவே
    சரியான வழி.

    திருமணம் செய்துகொள். வாழ்ந்துபார்…..
    பின் 
    ஒரே மனம் நாடு.

    முக்தி தேடு.
    கண்டிப்பாகக் கிடைக்கும். சித்தி கைகூடும்.

    சித்தரின் சொற்கள் சிவவாக்கியருக்குப் பிரமிப்பைத் தந்தன.
    ' எனது சஞ்சலங்கள் சுவாமிக்கு தெரிந்தது எப்படி ?
    அண்மைக் காலமாய் ஐம்பது வயதில் எழும்
    பேரின்பப் பெண்ணாசை… திருமணமா.. துறவறமா என்று இருந்த மனக்குழப்பம்
     இவருக்கும் தெரிந்திருக்கிறதே….'

    யோசித்த நொடிகளில் குருவின் 
    அடுத்த கட்டளை வந்தது.

    "இந்தா ..மண் 
    இது நீ கங்கையில் சுரையை கரைத்த போது ஒட்டி வந்தது.

    இது … ..நீ
    கசப்பைக் கழுவியதாகக் கருதும் பேய்ச்சுரைக்காய்.

    இரண்டையும் 
    கொண்டு சொல்.

    எந்த பெண்மணி இவற்றைக் கொண்டு சமைத்து தருகிறாளோ 
    அவளே உன் மனையாள்.

    அவளை மணம் செய்.
    உன் மணம் சிறக்கும். மனம்,  பின் திறக்கும் ."

    வாழ்த்தி 
    விடைகொடுத்தார் 
    செருப்பு சித்தரான 
    பெரும் நெருப்பொத்த 
    ஒளி சிந்தும் 
    ஞானசித்தர்.

    குருவின் வார்த்தைகளுக்கு
    குறுக்கே 
    நடக்குமா உண்மையா என்றெல்லாம் கேள்விகள் எழக்கூடாது.
     சந்தேகமே தப்பு .

    குடும்ப உறவுக்கு மட்டுமல்ல. .
    துறவுக்கும் 
    சந்தேகம் மகா தப்பு.

    குரு கட்டளையை ஒருநாள்கூட 
    தாமதமாக்க கூடாது.

    குரு – சீடர்- இறை
    உறவில் 
    தேர்ச்சி அடைய
    சரணாகதி தான் 
    சரியான வழி.

    இவையெல்லாம் அடுத்தடுத்த பாடங்கள்.

    அதி சீக்கிரமாய்
    அதி தீவிரமாய் விடைபெற்றார் சிவவாக்கியர்.

    ஐம்பது வயதிலும்  பதினாறு வயதினராய் தனக்கேற்ற இணை தேடி காதல் பயணம் மேற்கொண்டார்.
    தெற்கே போகும் நடைபயணம் !
    பாவம்,  சிவவாக்கியர்
    அது ஒரு நீண்ட நெடிய பயணமாக இருந்தது.

    பார்த்த பெண்டிரெல்லாம் சிவவாக்கியரின் உடற்கட்டில் –  உடற்கூறில் உருகி மனம் மயங்கி காதலிக்க வந்தது என்னவோ நிஜம்தான்.

    ஆனால்
    எச்சூட்டிலும் வேகாத மணலையும் 
    கறிக்கு ஆகாத 
    பேய்ச் சுரைக்காயையும் தந்து சமைத்து தர சொல்கிறாரே…. 
    இவர் என்ன பைத்தியமா… என பயந்து விலகி 
    கேலி பேசினர் .

    ஆயிற்று 
    இப்படியே சில காலம். தென் பகுதிக்கே வந்து சேர்ந்தார்.
    அங்கே ஒரு காடு.
    அதில் ஒரு குடியிறுப்பு. ஆதிவாசிகளான
    குறவர் குடியிருப்பு.

    அங்கு சென்றார் பெண்ணொன்று கண்டார் .
    காட்சிக்கு இனியவளாய் மனதுக்கு உகந்தவளாய் அம்மங்கை தென்பட்டாள்.
    "நிறைய பசி…. இவற்றை வைத்து சமைத்துத் தர முடியுமா ?"
     ஆவலோடு கேட்டார்.

    பதிலே கூற வில்லை.
    உடனே வாங்கினாள். உள்ளே சென்றாள்.
    சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள் –
    முகத்தில் பூத்திருந்த வியர்வை முத்துக்களை வலிக்காமல் வழித்தபடி.

    கரங்களில் சுவையான சமையல். 
    ஐந்து நட்சத்திர அறுசுவை உணவு தயார்.
    அம்மணி அப்படி அற்புதமாய் சமைத்தது இறையருள்.
    செருப்பு சித்தரின் விருப்பம்.

    ஏன் என்று யோசிக்காமல் எப்படி என்றும் பார்க்காமல் துறவி போலிருக்கும் ஒருவர் கேட்டார் என்பதற்காக 
    சமையலில் இறங்கிய சரணாகதி சிவவாக்கியருக்குப் பிடித்துப் போனது.

    குரு சுட்டிக் காட்டிய மணமகள் 
    அமுது படைத்த
    குறவன் மகளான
     தங்க மயிலே
     என புரிந்தார். 

    அவளே தனக்குரிய மனையாள் என்று  
    மனம் மகிழ்ந்தார்.

    காட்டிற்குச் சென்றிருந்த அவள் பெற்றோர் 
    வரும் வரை 
    காத்திருந்தார்.

    பெண் கேட்டார். 
    அவர்கட்கும் சம்மதமே .

    இருப்பினும் வேண்டுகோள் ஒன்றை கண்டிப்போடு நிபந்தனையாக வைத்தார்கள்.

    மாப்பிள்ளை 
    தங்களுடனேயே தங்கி
    தம் தொழிலே செய்து குலம் செழிக்க வைக்க வேண்டுமென்று.

    சுருங்கச் சொல்லின் 
    'வீட்டு மாப்பிள்ளை.'

    ஐம்பது வயதில் 
    இனி ஆவதென்ன?
    குருவின் கட்டளை. மனைவியின் பெற்றோரின் நிர்பந்தம்.

    சொந்தம் தொடங்கும்போதே 
    பந்தம் வைக்கும்
    நிர்பந்தம்.

    மறுக்கவில்லை சிவவாக்கியர் .
    நடந்தது திருமணம் 
    குறவர் குடி வாழ்த்த.

    அந்தணர் குலத்தில் பிறந்தவருக்கு 
    குறவர் குலத்தில் திருமணம் .

    குரு மனம் சுட்டிய நல்மணம். 
    திருமணம் நாடியவருக்கு இரு மனம் ஒப்பிய
    கலப்புத் திருமணம்.

    குறவர் இனம் போற்ற தமிழ்த் திருமணம்.
    சிவவாக்கியர் அவதரித்த போது உச்சரித்த முதல் சொல்லாய் சிவ…. சிவ என்று பவனி வந்தவர் சிவபிரான்.  
    அவரின் ஞானமைந்தன் முருகப் பெருமான் மணந்தது வள்ளி என்னும் குறவர் குல கொழுந்தைத்தானே..!

    முருகப்பெருமானைப் போன்றே சிவவாக்கியரும் குறவர் குலப் பெண்ணுக்கு மாலை சூடி 
    குறவரானார்.
     

  • Vallalar Ramlingam

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    மருதூர் என்றொரு சிற்றூர்.
    அவ்வூரில் ஒரு கணக்குப்பிள்ளை.பெயர் இராமையா பிள்ளை.
    மனைவி சின்னம்மை. சின்னகாவனம் சொந்த ஊர்.
    இராமையா பிள்ளைக்கு சின்னம்மை ஆறாவது மனைவி.
    முன்னவர் ஐந்துபேரும் மக்கட் பேறின்றி ஏதேதோ நோய்களால் மரணித்துப் போயினர்.
    சிவபக்தையான சின்னம்மை ஆறாவதாய் மனைநிறைத்தார்.

    ஒருநாள் சிவ அம்சத்தோடு சிவனடியார் ஒருவர் வாசலில் நிற்க ஓடிப்போய் தாழ் பணிந்தார் சின்னம்மை.
    உள் அழைத்து உள்ளன்போடு உபசரித்தார்.
    உபசரித்தலும் உணவிடுதலும் புண்ணியங்களில் உயர்ந்தவை.
    புறப்படும் தருணம் சிவனடியார் "உனக்கோர் ஞான மகன் பிறப்பான். உன்னைப்போல் அவன் பிறருக்குப் பசி தீர்ப்பான். ஊருக்கு மட்டுமல்ல; உலகுக்கே பசி தீர்ப்பான்.
    உலகம் போற்றும் இறையாய் ஒளிர்வான்" என்றபடி ஆசி தந்தார்.

    விடைபெற்று  வீதி வந்தவர் வீடு விலகி தெருக்கோடி வரை நடந்து போய் மாயமாய் மறைந்து போனார்.
     அவர் வேறு யாருமல்ல..!
     எல்லாம்வல்ல ஆதிநாதன் சிவபெருமானே..!
    கடவுளின் அருளால் கருத்தரித்த சின்னம்மை உரிய நாளில் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார்.
    இல்லையில்லை….
    கடவுளின் அருளால் கருக்கொண்ட குழந்தை உரிய நாளில் உலகில் அவதரித்தது.

    ஐந்தாம் மாதம்.
    குழந்தையை நடராஜ தரிசனத்திற்கு சிதம்பரம் எடுத்துச்சென்றனர் பெற்றோர்.
    கோயில் அர்ச்சகர் அப்பைய தீட்சிதர் ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்.
    அவர் கோயிலில் திரையைத் தூக்கினார்.
    எல்லோரும் கைகளைச் சிரம் மேல் தூக்கி பக்தி பரவசத்தில் கன்னங்களில் ஒற்றிக் கொண்டிருந்தபோது… தாயின் தோளையும் முந்தானையையும் பற்றிக்கொண்டிருந்த பிள்ளை பொக்கை வாய் விரித்து அம்பலவாணரின் திக்கைப் பார்த்துச்சிரித்துக் கொண்டிருந்தது.

    சிதம்பர ரகசியம் தரிசனம் ஆயிற்று ஞான குழந்தைக்கு.
    அப்பைய தீட்சிதர் குழந்தையைக் கவனித்தார். ஓடோடி வந்தார்.
    அவரது சிவ அனுபவம் பேசிற்று. 
    "பிள்ளைவாள்…. இது ஏதோ சாதாரண குழந்தை அல்ல. இது தெய்வக் குழந்தை. ஞானக்குழந்தை.
     இறைவனுக்குத் தீபம் காட்டியபோது அங்கிருந்தபடி குழந்தையைப் பார்த்தேன்.
    அடாடா ….அப்படி ஒரு பேரொளி….!
    குழந்தையின் முகத்தில் சாட்சாத் அம்பலவாணரையே தரிசனம் கண்டேன்.
    குழந்தையைப் பத்திரமாய் வளர்ப்பது உங்கள் பொறுப்பு.
    அம்மா… நீ பாக்கியசாலி. கவனம்…. கவனம்"

    சின்னகாவன திருவாட்டியோடு மகிழ்வோடு புறப்பட்டார் இராமையா பிள்ளை மருதூருக்கு.
    அவர்கள் கோயில் சுற்றி வந்தபோது கோயிலின் வாசலில் அப்பைய தீட்சிதர் காத்திருந்தார்.
    "இன்று குழந்தையோடு எனது இல்லத்திற்கு தயவுகூர்ந்து வாருங்கள்.
    எனது வீட்டில் உங்களுக்கு மதிய உணவு. உணவு விருந்தாய் காத்திருக்கிறது.
    உலகுக்கே உணவளிக்கப் போகிறவனுக்கு அவன் சின்னஞ்சிறு வாயில் உணவு ஊட்டிய புண்ணியம் எங்கள் குலத்திற்கு கிடைக்கட்டும்".
    இன்னும் ஏதேதோ சொன்னார். அவை இறையும் மறையும் அவருக்கு உணர்த்திய வார்த்தைகள்.

    இறையருளால் அவதரித்த குழந்தை, இறை தரிசனம் கண்ட குழந்தை..தவழ்ந்தது…. நடந்தது…..வளர்ந்தது….
    குழந்தையைப் பார்க்க வரும் உற்றாரும் உறவினரும் ஒன்றை உணர்ந்தனர்.
    பார்த்துவிட்டுத் திரும்பிய மாத்திரத்தில் ஆகாத காரியங்கள் எல்லாம் ஆகத் தொடங்கின.
    அவர்கள் அகமகிழ்ந்து குழந்தையை 'குழந்தை வடிவில் தோன்றிய குமரன்' என்று கொண்டாடினர்.

    அந்த குழந்தை யார் என அறிய முடிகிறதா ?
    உடுத்ததற்கு கோவணம். உண்பதற்கு காய்கறிகள். உறங்குவதற்கு சுடுகாடு.குடிப்பதற்கு ஆற்றுநீர்.
    தலையில் சடைமுடி. முகத்தில் நீண்ட தாடி. கழுவாத உடல். கந்தல் உடை. 
    தங்குதல் வெட்டவெளி. தவமிருத்தல் இருண்ட குகை. சிந்தை எல்லாம் சிவமயம். சித்தி ஒன்றே மன விருப்பம்.

    இடையிடையே உலகம் உய்ய மறைபொருளாய் ஞானப்பாக்கள். பரிபாஷையில் சித்த மருத்துவம்.அள்ளித்தரும் அருளாற்றல்.
    இவையாவும் சித்தர்களின் இலக்கணமாய் மக்கள் மனதில் இருக்கும் பதிவு.
    அப்பதிவில் பெரிய மாற்றம் தந்தது பின்னாளில் அந்த ஞானக் குழந்தை.

    கருணை முகம். கனிந்த கரங்கள். பணிந்த பாதங்கள். இவை தவிர ஏதும் தெரியா வண்ணம் தூய வெண்ணிற ஆடை. உடுத்துவதில் மட்டுமின்றி உண்ணுவதிலும் உறங்குவதிலும் உடலைப் பேணுவதிலும் இறையருள் பெறுவதிலும் இலக்கணம் வகுத்து இலக்கணமாய் வாழ்ந்து நிறைஞானியாய் மிளிர்ந்தது அக்குழந்தை.

    அந்த ஞானக் குழந்தையே ஜோதி கண்ட பெருஞ்ஜோதி கண்ட, அருட்பெருஞ்ஜோதி கண்ட  வள்ளல் பிரான்.

    அவரது திருநாமம் இராமலிங்கம். பெற்றோர் வைத்த பெயர் இராமலிங்கம். உற்றார் ஊரார் அழைத்த பெயர் ராமலிங்கன். ஆன்றோர் சான்றோர் போற்றிய பெயர் இராமலிங்க அடிகள். கையொப்பத்தில் ஒளிர்ந்த பெயர் சிதம்பரம் இராமலிங்கம். ஆன்மீகம் வணங்கிய பெயர் இராமலிங்க வள்ளலார். சன்மார்க்கம் முதலாய் உலகே துதிக்கும் பெயர்திரு அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார்.

    வள்ளலார் அவதரித்த நாள் அக்டோபர் 5…வருடம் 1823.