Blog

  • Alangudi Guru Peyarchi

    அருள்மிகு குருபகவான் அக்டோபர் 29 -ஆம் தேதி  விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறார். 

    இதை முன்னிட்டு, ஆலங்குடியில் இருக்கும் ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் அருள்மிகு குருபகவானுக்கு குருபெயா்ச்சி லட்சார்ச்சனை விழா அக்டோபா் 24 -இல் தொடங்கி 27 -ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், குருபெயா்ச்சிக்குப் பின்னா் அக்டோபா் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 7 -ஆம் தேதி வரையும் இரண்டாவது கட்டமாகவும் நடைபெறவுள்ளது.

    ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

    லட்சார்ச்சனையில் பங்கேற்க ரூ. 400 கட்டணம் செலுத்த வேண்டும். லட்சார்ச்சனையில் பங்கேற்பவா்களுக்கு, அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினால் செய்த 2 கிராம் டாலா் பிரசாதமாக வழங்கப்படுகிறது. லட்சார்ச்சனை காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.

    தபால் மூலம் லட்சார்ச்சனை பிரசாதம் பெற விரும்பும் பக்தா்கள் தங்களுடைய பெயா், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் தொகையை பணவிடை, வரைவோலை (எம்.ஓ., டி.டி.) எடுத்து உதவி ஆணையா், செயல் அலுவலா் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி ஆலங்குடி -612801 கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து அனுப்ப வேண்டும் என அறநிலையத்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

  • 1008 Kalasa theertham thirumanjanam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு வருகிற 25.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நோய் தீர்க்கும் கடவுள் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு, உலக மக்கள் நலனுக்காக மஹா தன்வந்திரி ஹோமத்துடன் 1008 கலசதீர்த்த திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வருகிற 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி லேகியம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

    தீபாவளி மருந்தும், தன்வந்திரி சிறப்பும் :

    மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் தேசிய ஆயுர்வேத தினமாகவும்  கொண்டாடப்படுகிறது.  சிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர்.

    ஸ்ரீ தன்வந்திரி பெருமாளே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற அரிய தத்துவத்தை இந்த வைத்திய அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

    காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், மஹா விஷ்ணுவின் அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும், ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.

    இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    தன்வந்திரி ஜெயந்தியன்று மாலை பீடத்திற்கு வருகைத்தரும் பக்தர்களின் கைகளினால், நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம், பொருள்கள் சேர்கப்பட்டு, நோய் தீர்க்கும் தன்வந்திரி மஹா மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் இந்த லேகியம் தயாரித்து, ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மாமருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த பிரசாதத்தின் மூலம் பல்வேறு வகையான மந நோய்களுக்கும், உடல் நோய்களுக்கும் தீர்வு பெறலாம்.

    மேலும் ஸ்ரீ தன்வந்திரி பகவான்  விசேஷமான மருத்துவர் கோலத்தில் ஸ்டெதஸ்கோப், டாக்டர் கோட் போன்ற உபகர்ணங்களுடன் மருத்துவ உடையில் சில மணி நேரங்கள் காட்சி தருவார். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று 78 பரிவார மூர்த்திகளையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் தரிசித்து இறையருளுடன் குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தனவந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

  • Kanchi Sundara Varadha Perumal

    காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகியவை பல நூறு ஆண்டுகளாக தொடர் இயக்கத்தில் இருக்கும் நகரங்கள்.. பூமிக்கடியில் பழமைகளை பொக்கிஷங்களாக கொண்டிருக்கும் நகரங்கள்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நடப்புகளின் சாட்சிகளாக நின்று கொண்டிருக்கும் தொன்மையான நகரங்களில் ஒன்று உத்திரமேரூர். உத்திரமேரூரில் உள்ள கோயில்களில் பொதுவாக காணப்படும் அம்சம் என்னவெனில் அங்குள்ள கோயில்களில் கோஷ்ட தேவதைகள் இருக்காது. 

    மற்ற கோயில்களை பார்ப்பதற்கு முன் உத்தரமேரூரில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலை பார்க்கலாம். 
    உத்தரமேரூரை அடைந்ததும் பேருந்து நிலையத்தில் இருந்து பார்த்தாலே தெரிவது சுந்தர வரதராஜ பெருமாள் கோயில்தான்.

    பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது இந்த கோயில். பின்னர் ராஜராஜ சோழன் காலத்திலும், பாண்டியர்கள், சம்புவராயர்கள் என பின்னர் வந்த மன்னர்களின் காலகட்டங்களிலும் நன்கொடைகள் வழங்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் இந்த கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

    பெருமாள் நின்றும், இருந்தும், கிடந்துமாக மூன்று நிலைகளில் உள்ள கோயில்களில் சுந்தர வரதபெருமாள் கோயிலும் ஒன்று.  கோயிலின் கட்டுமானம் தனிச்சிறப்பானது. வெளியில் இருந்து பார்ப்போருக்கு 5 நிலை கோபுரம்தான் தெரியும். உள்ளே நுழைந்தால் வலப்பக்கம் பாழடைந்த மண்டபம் தென்படும். நேராக சென்று படிக்கட்டுகளில் ஏறி, கருடாழ்வார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தால் நின்றகோலத்தில் நான்கு கரங்களுடன் கூடிய பெருமானைக் காணலாம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிய திருக்கோலமது. 

    வரதர் என்றாலே வரப்பிரசாதிதான். இந்த சுந்தர வரதரும் பேருக்கேற்றார்போல, வரம் தரும் வரதராகவே இருக்கிறார். இந்த சன்னதியின் இருபுறமுமாக வளையும் படிக்கட்டுகளில் ஏறிச்சென்றால் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.


    அடுத்த படிக்கட்டுகளில் ஏறிச்சென்றால், ஆதிசேஷன் மீது கிடந்த திருக்கோலத்தில் அனந்த பத்மநாபராக காட்சி தருகிறார். கோயிலின் சுற்றுப்பிரகாரங்களில் தெற்கு நோக்கி அச்சுத வரதர், மேற்கு நோக்கி அனிருத்த வரதர், வடக்கு நோக்கி கல்யாண வரதர் என பார்க்க பார்க்க திகட்டாத திருக்கோலங்களில் அருள்பாலிக்கிறார் பெருமாள். 
    மடி மீது தேவியை அமர வைத்துக்கொண்டு இருக்கும் வராக பெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைகுண்ட பெருமாளையும் இங்கு தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம். 

    இந்தக் கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. பாண்டவ சகோதரர்கள் தங்கள் அஞ்ஞாத வாசக்காலத்தில் வழிபட்ட தலமாக சுந்தர வரத பெருமாள் திருக்கோயில் கூறப்படுகிறது. 

    இதன் பிறகே அவர்கள் இழந்த ஆட்சி, அதிகாரம், வலிமைகளை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு வந்தால் வாழ்க்கையில் எதையெல்லாம் இழந்ததாக கருதுகிறீர்களோ அத்தனையையும் திருப்பித்தர காத்திருக்கிறார் சுந்தர வரதராஜ பெருமாள். 


    இழப்பென்று கருதுவதெல்லாம் இழப்பல்ல.. இந்த இறைவனை கண் கொண்டு பார்த்தபின் இழப்பெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.. தோல்வி, அவமதிப்பு, வஞ்சனைகளால் விரட்டப்பட்ட பாண்டவர்களுக்கு அருள்பாலித்து அவர்களை மீண்டெழச்செய்த பெருமாள் இங்கே சுந்தர வரதராஜராகவும், வைகுண்ட பெருமாளாகவும் எழுந்தருளியிருக்கும்போது நமக்கெல்லாம் என்ன குறை.. ? 

    குறை ஒன்றும் இல்லை.. மறைமூர்த்தி கண்ணா.. குறை ஒன்றும் இல்லை கண்ணா..

    – எழுத்தாளர் பாமா
     

  • Kanjanai Kaviyakkiya Pandurangan

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சீனிவாசன்.

    அந்த ஊரில் மிகப் பெரிய செல்வந்தர்.
    சாதாரண செல்வந்தர் அல்ல. இன்றைய மதிப்பில் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதி.
    செல்வச் சீமான் தான். ஆனால்  மகா கஞ்சன் கஞ்சத்தனமே' தனம்' என்று வாழ்ந்தவர்.

    ஒரு நாள் 
    ஒரு வயதான அந்தணர் அவர் கடைக்கு வந்தார்.  
    கை பிடித்த படி ஏழு வயது பாலகன்.

    சீனிவாசனுக்கு இந்த மாதிரி ஆட்களை அறவே பிடிக்காது.கேவலமாய் பார்ப்பார். படு கேவலமாய் சாடுவார்.

    வந்த பிராமணர், "ஐயா… தர்மபிரபு…." என்று வறுமையை விஞ்சிய 
    பசிக் குரலில் பவ்யமாக கை கூப்பினார்.

    சீனிவாசன் கடைக்கு உள்ளே யாரையோ அழைக்கிறார் போலிருக்கிறது என கம்மென்று இருந்தார்.
    வந்தவர் மீண்டும் அழைத்தார் "ஐயா….தர்ம பிரபுவே…சுவாமி…"

    "டேய் யாருடா நீ…" அதட்டினார் சீனிவாசன்.

    "ஐயா… நான் ஒரு ஏழை பிராமணன். இவன் என் ஒரே மகன். வயதாகிறது…. இவனுக்கு உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் கொஞ்சம் கருணை காட்டினால் பூணூல் போட்டு விடலாம்.."

    "ஏதடா …..காலங்காத்தாலே தொந்தரவு…..  என்ன எழவு …போ.…போ என்னிடம் பணம் இல்லை" பஞ்சப் பாட்டு பாடினார் சீனிவாசன்.

    எவ்வளவோ கெஞ்சினார் வந்த அந்தணர்.
    கல்நெஞ்சம் கரையவில்லை.

    " போ போ….
    பிச்சை எடு ….காசு தேறும்.." பிழைப்புக்கு வழி சொன்னார் செல்வ பிரபு.

    மெல்ல நகர்ந்து  மீண்டும் சீனிவாசனின் முகம் பார்த்தார்.

    அவர் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார். அவர் கண்களும் கைகளும் முகமும் ஏழை பிராமணரை வேகமாக அனிச்சையாக விரட்டின.

    அன்று முதல்  தினமும் வருவார்.
    உதவி கேட்பார்.பணக்காரர் பலமாக விரட்டுவார். பணிவோடு போய்விடுவார் ஏழை பிராமணர்.

    ஒருநாள் கடை வாசலுக்கு வந்தவர் "வேறு வழியில்லை. யாசகம் வாங்காமல் நகர மாட்டேன்" என பிடிவாதம் பிடித்தார் .

    "தினமும் இது ஒரு ரோதனையாப் போச்சு" என தலையில் அடித்துக்கொண்ட சீனிவாசன் 
    கல்லாப் பெட்டியை திறந்து துழாவித் துழாவி ஒரு காசு எடுத்து பிராமணர் மீது வீசி எறிந்து "ஓடிப் போ… ஒழிந்து போ" என சாபமிட்டார்.

    பிராமணர் முகத்தில் ஏக சந்தோஷம் . காளை மாட்டிடம் பால் கறந்த சந்தோஷத்துடன் காசை பிடித்து ஏழ்மை பூத்த கண்கள் அருகே கொண்டு சென்றார்.

    அது ஒரு செல்லாத காசு.

    " ஐயா… இது செல்லாது எதற்கும் உதவாது …நல்ல காசு கொடுங்கள்.. புண்ணியமாய் போகும்"

    சீனிவாசனிடமிருந்து கோபச் சொற்களே வேகமாய் வந்தன.
    "ஏதேனும் பொருள் கொண்டா…. நான் அதுக்கு வேண்டுமானால் பணம் தர்றேன் ….போய்யா ..போ"

    முதியவருக்கு கோபம் வரவில்லை .
    வீம்புடன் வீட்டிற்கு விரைந்தார்.

    அவர் வீட்டிற்கு அல்ல. சீனிவாசனின் சிங்கார வீட்டிற்கு.

    சீனிவாசனின் மனைவி சரஸ்வதி நல்லவள்.உத்தமி. அதீத தெய்வ பக்தி கொண்டவள். உதவும் மனம் கொண்டவள்.

    அந்த அழகிய நல்லாள் ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.

     பிச்சை கேட்டு ஒரு வயதான ஏழை அந்தணர் கைப்பிடியில் களங்கமற்ற ஒரு சின்னஞ்சிறுவனோடு வாசற் கதவருகே நிற்பதைக் கண்டு வாசலுக்கு ஓடி வந்தாள்.

    பிராமணர் தன்  நிலையை சொன்னார்.மகனைக் காட்டி பூணூல் கல்யாணத்திற்கு உதவி கேட்டார்.

    "ஐயா… என் நிலைமை உங்களுக்குத் தெரியாது.

    என் கணவர் எனக்கு கணக்குப் பார்த்து எண்ணியெண்ணி கணக்காய் காசு தருவார். என்னிடம் பணமும் இல்லை. அவர் பொருளை எடுத்து தர உரிமையும் இல்லை.

    அவருக்குத் தெரிந்தால் அவ்வளவு தான். உங்களோடு நானும் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிடும்" கண்களிலிருந்து கண்ணீர் உருண்டது.

    "கவலைப்படாதே தாயே…! அவர் உடமைகளைத் தந்தால் தானே பிரச்சனை.!

    உன் நகைகள் ஏதேனும் தா.
    அது அவருடைய சொத்து அல்ல.

     உன் தாய் வீட்டுச் சீதனம். உன் மகிழ்ச்சிக்காக விருப்ப செலவுகளுக்காக கொடுக்கப்பட்டவை.

    அவரிடம் அனுமதி தேவையில்லை தாயே !
     உன் குலம் விளங்கும். உன் கணவருக்கும் புண்ணியம் கிட்டும். 

    ஒரு கஞ்சனிடம் உதவி கேட்டு  அவமானப்பட்டே  இங்கே வந்திருக்கிறேன்".
    கருணை மிக்க சரஸ்வதியின் கைகள் மூக்கின் அருகே சென்றன.

    சில நொடிகளில் அவள் வைரமூக்குத்தி பிராமணரின் கைகளில் அமர்ந்தது.
    "தீர்க்காயுசா இருமா…
    உன் மணாளனுக்கும் நலம் கிடைக்கட்டும். அவர் ஓங்கு புகழ் பெறட்டும்" விடைபெற்றார் அந்தணர்.

    அவர் பிரச்சனை அத்தோடு முடிந்தது.

    ஆனால் வைர மூக்குத்தி வழங்கிய வள்ளல் பிராட்டிக்குத் தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

    காரணம் மூக்குத்தியைத் தானம் பெற்ற தள்ளாத வயது பிராமணர் 
    நேரே சீனிவாசன் கடைக்குச் சென்று மூக்குத்தியை கொடுத்து அதை வைத்துக்கொண்டு பணம் தாருங்கள் என கம்பீரமாக கௌரவமாக கேட்டார்.

    மூக்குத்தியை வாங்கி நோட்டமிட்ட சீனிவாசனுக்கு இதை எங்கோ பார்த்திருக்கிறோமே என்ற ஐயம் வந்தது.

    " இப்ப பணம் இல்லை ….மாலை வா…. பணம் வந்துவிடும் …தரேன்"
    என சொல்லி விட்டு, அவரின் பதில் பெறாமலேயே பெட்டியில் போட்டு பூட்டி கொண்டார்.

    " மாலை கண்டிப்பாக 
    பணம் வேண்டும். 
    பணம் கிடைத்தால் தான் பையனின் பூணூல் கல்யாணம் நடத்த முடியும். ஆயிரம் வேலை இருக்கு. மறந்துவிடாதே" என்றபடியே நடையைக் கட்டினார் பிராமணர்.

    அவரின் தலை மறைந்தவுடன் 
    அவசர அவசரமாய் வீடு விரைந்தார் சீனிவாசன்.

    அவரின் சந்தேகத்திற்கு வீட்டில் விடை இருந்தது.

    மனைவியின் மூக்கு மூளியாக இருந்தது.
    "எங்கே உன் மூக்குத்தி ? " வெடித்தார்.
    "வெள்ளிக்கிழமை அதுவுமா… போ…போ மூளியா நிற்காதே…" விரட்டினார்.

    "குளிக்கும்போது கழற்றி வைத்தேன்" பயந்தபடி சொல்லிவிட்டு துளசிமாடம் விரைந்தாள் சரஸ்வதி.

    'இனி அவ்வளவுதான்… தொலைந்தேன்….. அவர் தொலைப்பதற்கு முன்பே…. நாமே தொலைந்து விடுவோம்' என ஒரு பாத்திரத்தைக் கையில் ஏந்தியபடி துளசி மாடத்தை வலம் வந்தாள்.

    அந்த பாத்திரத்தில் நொடிப்பொழுதில் உயிரை எடுக்கும் விஷம்.
    'இறைவா என்னைக் காப்பாத்து.. .. இல்லையேல் உயிரை எடுத்துக்கொள்'
    என்று முணுமுணுத்தபடி மூன்றாவது சுற்று வரும்போது 
    பாத்திரத்தில் ஏதோ விழும் 
    மெல்லிய சப்தம்.

    கண்விழித்து கைவிட்டு விஷத்தை துழாவிய போது கையில் பட்டது
     ஒரு சிறு பொருள். 

    அது அவள்  தந்த அதே வைர மூக்குத்தி.
    பிரார்த்தனையின் பலனை பூரணமாக உணர்ந்து கொண்ட திருப்தியில் மூக்குத்தியைக் கண்களில் ஒற்றிக்கொண்டு மூக்கில் மாட்டிக் கொண்டாள் மாதரசி.

    "இவ்வளவு நேரமா மூக்குத்தி மாட்ட"
     உள்ளே இருந்து கோபக் குரல் ஒலிக்க….. "வந்துட்டேன்… சுவாமி" வீட்டுக்குள் நுழைந்தாள், அந்த ஆசாமியை சுவாமி என்று அழைத்தபடியே.

    அவள் எதார்த்தமாக தான் சுவாமி என்று அழைத்தாள்.
    ஆனால் அதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது துளசிமாடம்.

    கண்கள் சிவக்க காத்திருந்த கணவர்
    அவள் முகத்தை பார்த்தவுடன் 
    'மனைவியின் மூக்குத்தி அல்ல' திருப்தி உற்றார்.

    ஆனால் அவர் மூளை இன்னொரு சந்தேகத்தை எழுப்பியது.
    எதுவும் சொல்லாமலேயே கடைக்கு விரைந்து ஓடினார்.

    கடைக்கு வந்த 
    கஞ்ச மகாபிரபு 
    கல்லாப் பெட்டியை 
    அவசர அவசரமாகத் திறந்தார். கண்விரித்து கைவிரித்து துழாவினார். வைத்த இடத்தில் தேடினார்.

    கிடைக்கவில்லை.
    பதற்றத்தோடு பயமும் குடிகொண்டது. வீட்டிற்கு வந்து விடிய விடிய தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தார். எதுவும் புரியாத சரஸ்வதி துளசி மாடத்தை துதித்தபடியே இரவைக் கழித்தாள்.

    மறுநாள் காலை  கடைதிறக்கப் போனார் சீனிவாசன்.
    "ஐயா… பிரபுவே"
    அய்யரின் குரல் கேட்டு 
    பயந்து நடுங்கினார்.

    " இன்று பணம் தருவதாக சொன்னீர்கள். ஆயிரம் வேலைகள்.அப்படியே போட்டுவிட்டு வந்தேன். பணம் தாருங்கள் "
    "பணம்… பணம் " பிதற்றினார் 
    செல்வச் சீமான்.

    "ஐயா…  தாமதம் ஆகும் என்றால் பரவாயில்லை.. நகையைத் தாருங்கள்.. வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்"

    பதில் இன்றி தவித்தார்
    பணக்காரர். 

    " மன்னித்து விடுங்கள்.. மாலையில் பணம் வந்துவிடும். கண்டிப்பாகச் சாயந்திரம் தருகிறேன்." வெட்கி தலைகுனிந்து பொய் சொன்னார்.

    "சரி…சரி…சாயந்தரம் ஏமாற்றி விடாதே.
    ஏதும் சால்ஜாப்பு 
    சொல்லி விடாதே."

    கிழவர் நகர்ந்தார்.
    பெருமூச்சுவிட்ட பெருந்தனக்காரர் அவரிடம் ஏதோ சூட்சுமம் இருப்பதாக உணர்ந்தார்.

    கிழவர் நகர்ந்தபோது விஷமமாக புன்னகைத்தபடியே சென்றதை அவர் கவனித்து இருந்ததால் அந்த சூட்சமம் அறியத் துடித்தார்.

    உடனே கடைப் பையனை அழைத்து,  "அம்பி …அந்த கிழவன் பின்னாடியே போ. எங்கு போகிறான் ? என்ன செய்கிறான் ? கவனித்துப் பார்த்து வந்து உடனே சொல்" நிலைகொள்ளாமல் உத்தரவிட்டார்.

    கொஞ்ச நேரத்தில் பையன் பதைபதைப்புடன் 
    ஓடி வந்தான்.

    "முதலாளி… அந்த கிழவர்  மூன்று தெருக்கள் தாண்டி கோயிலுக்குச் சென்றார்.
    நான் அவர் 
    கவனிக்காதபடி பின்னாலேயே போனேன்… ..
    போனவர்….!!"
    விக்கித்தான். எச்சில் விழுங்கினான். பயந்த மாதிரி கைகூப்பியபடியே திக்கினான்.

    "சொல்லுடா.… பயந்தாங்கொள்ளி…. என்ன நடந்தது.? ஏதேனும் மிரட்டினானா அந்த கிழவன்?"
    "…. கோயிலுக்குப் போன அவர் நேராக கர்ப்பகிரகத்துக்குள் போனார். அப்படியே… மறைந்து போனார்"

    அந்த சிறுவனின் கண்களில் கண்ணீரும் ஆனந்தமும் வெளிப்பட பரவசத்தில் இருந்தான்.

    சீனிவாசன் திடுக்கிட்டார். 
    பயத்தோடு  வீட்டிற்கு விரைந்தார்.

    கடையில் நடந்ததை மனைவியிடம் சொன்னார்.
    மனைவி சரஸ்வதியும் வீட்டில் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் ஒப்பித்தார்.

    சீனிவாசனுக்குப் புரிந்துவிட்டது.
    'வந்தது கிழவன் அல்ல…. சோதிக்க வந்தவர் பரம்பொருள் பாண்டுரங்கன்..'என நெகிழ்ந்தார். செய்வதறியாது திக்குமுக்காடினார்.

    அப்போது பூஜை அறையில் இருந்து 
    ஓர் அசரீரி எழுந்தது.
    "சீனிவாசா.…. 
    இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு செல்வச் செருக்கோடு இருக்கிறாயே..!.  
    தான தர்மம் செய்யாமல் 
    வெட்டி வேதாந்தம் 
    வறட்டுத் தத்துவம் பேசுகிறாயே ..? 
    உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்..!

     இதுவே தருணம்.
     நல்ல தருணம்.
    தான தர்மம் செய். உன் செல்வம் அனைத்தையும்  தர்மம் செய்து 
    புண்ணியம் தேடு. 
    அதுவே பிறவிப்பயன்.
     
    நெடுஞ்சாண்கிடையாக சீனிவாசன் பூஜையறையில் பாண்டுரங்கனிடம் 
    சரண் அடைந்தார்.

    எழுந்த போது அசரீரி  தொடர்ந்தது ,
    "இனி நீ சீனிவாசன் இல்லை. 
    ஊரும் உலகும் அழைத்த சீனிவாச நாயக் என்ற பெயரைத் துறந்து விடு. 

    இந்த ஊரின் பெயரே 
    உன் திருநாமம்…. 
    'புரந்தர கட.'

    ஆமாம் பக்தனே…
    இனி நீ புரந்தரதாசன்.

    நீ நாரதரின் அம்சம்.
    குரு வியாசராஜரை தஞ்சமடை. அவர் உபதேசம் தருவார்.
    கிளம்பு. தான தர்மம் செய்துவிட்டு 
    வியாசராஜரை சரணடை." அசரீரி விடைபெற்றது.

    புரந்தரதாசருக்கு 
    புதிய உலகம் தெரிந்தது. அது பிரபஞ்சமாய் விரிந்தது.
    அத்தனை சொத்துக்களையும் 
    தானம் செய்தார். 
    பரம ஏழையானர்.

    ஏழை அந்தணராக வந்து ஞானக் கண் திறந்த பாண்டுரங்களைப்
    பாடித் தொழுதபடி இல்லாளுடன் 
    ஹம்பி சென்று 
    குரு வியாசராஜர்
    பாதம் தொட்டார்.

    செல்வம் தராத 
    ஏகாந்த அனுபவங்கள்
    அவரை வலம் வந்தன.

    புரந்தரதாசர் 
    பக்திப் பெருக்கோடு 
    பாரத தேசத்தை
    மூன்று முறை கால்நடையாக வலம் வந்தார்..

    அவர் பாடியதெல்லாம் இறை பாடல்கள் ஆயின.  தெய்வம் மகிழும் தேவகானங்கள் ஆயின.

    அவரின் பாடல்களே திருவையாறு சத்குரு 
    ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அவரது அன்னை கற்றுத் தந்த பாலபாடம்.

    சரிகமபதநி எனும்
    ஏழு ஸ்வரங்களை
    சங்கீத உலகிற்கு 
    தந்தவர் புரந்தரதாசர்.

    சுமார் 4 லட்சம் 
    பக்தி பாடல்கள்
    அவர் அளித்த பொக்கிஷம்.
    பக்திக் கருவூலம். 
    ஞானப் புதையல்.

    அவரது ஒவ்வொரு வார்த்தையும் பாண்டுரங்கனை 
    அவனது உள்ளத்தை வருடும் மயிலிறகுகள்.

    உங்களுக்குத் தெரியுமா ?
    புரந்தரதாசர் 
    சினிவாச நாயக்காக இருந்தபோது பாரதத்தின் செல்வ குடிமகன்.

    அவரது சொத்து அன்றைய மதிப்பு 9 கோடி. இன்றைய மதிப்பில் பல லட்சம் கோடி.
    காலம் கிபி 1480 

    80 ஆண்டுகள் கழித்து புரந்தரதாசராக  புதுப்பிறவி எடுத்த போது அதாவது கிபி 1560 இல் பாரதத்தின் மிகப் பெரிய ஏழை. செல்லாக்காசு. ஓட்டாண்டி. 

    ஆனால் மகான்.

    புரந்தரதாசர் இறைவன் புகழ் பாடியபடியே இறையோடு கலந்தது
    கிபி 1584 ஆம் ஆண்டு.

    அனைத்தும் ஆண்டவனின் விளையாட்டு. பாண்டுரங்கனின் பரமபதம்.
     

  • october 21 rasi palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – நலம் 
    ரிஷபம் – நட்பு
    மிதுனம் – ஆர்வம்
    கடனம் – பயம் 
    சிம்மம் – விருத்தி 
    கன்னி –  செலவு
    துலாம் –  பாராட்டு
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு –     சலனம் 
    மகரம் –  சாதனை 
    கும்பம் – அமைதி
    மீனம் –     அலைச்சல்
    சந்திராஷ்டமம்    – பூராடம்,உத்திராடம்
     

  • October 21 Indraya Nalla Neram

    அக்டோபர் 21 . இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – ஐப்பசி 4
    21-அக்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    இ    1.35
    நட்சத்திரம்    :    புனர்பூசம்    ம    2.46
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூராடம்,உத்திராடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • October 20 Rasi Palan

    இன்றைய ராசி பலன்
    மேஷம் – நற்செயல்
    ரிஷபம் – பரிசு
    மிதுனம் – பணிவு
    கடனம் – நட்பு
    சிம்மம் – சுகம்   
    கன்னி –  உதவி
    துலாம் –  விருத்தி
    விருச்சிகம் – உயர்வு
    தனுசு –     சாந்தம்
    மகரம் –  முயற்சி 
    கும்பம் – ஈகை 
    மீனம் –     மறதி
    சந்திராஷ்டமம்    – மூலம், பூராடம்
     

  • October 20 Indraya Naal Eppadi

    அக்டோபர் 20 – இராஜராஜ சோழன் பிறந்த நாள்
    விகாரி வருடம் – ஐப்பசி 3
    20-அக்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    இ    3.19
    நட்சத்திரம்    :    திருவாதிரை    ம    3.37
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மூலம்,பூராடம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Murugan Mandiram

    மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.

    மனோவியாதியை குணமாக்கும் முருகப்பெருமான் மந்திரம்
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.

    ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்

     ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
    நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
    பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ

    பொருள் :

    ஓம் சக்தியான வேலே, இவ்வுலகத்திற்கு தாயானவளே, அனைத்து சுகத்தையும் கொடுப்பவளே, உன்னை வணங்குபவரின் மனோவியாதியை போக்குபவளே உன்னை ஆராதிக்கிறேன்.

  • Thirupathyil 27 Arjidha sevai Rathu

    திருப்பதியில் வரும் 27-ந் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்க உள்ளது. திருமலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தசி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

    அதன்படி வருகின்ற 27-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அன்று காலை உற்சவமூர்த்திகள் சர்வ பூபால வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து கண்டா மண்டபத்தில் கருடன் சந்நிதி எதிரில் உற்சவமூர்த்திகளை எழுந்தருளச் செய்து அர்ச்சகர்கள் ஆஸ்தானத்தை நடத்த உள்ளனர்.

     
    அதனால் அன்று நடைபெறும் ஆர்ஜித சேவைகளான ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதையின் இறுதி வளைவில் நேற்று மதியம் திடீர் மண்சரிவு ஏற்பட்டது.

    இதில் மண், பாறைகள், மரங்கள் உள்ளிட்டவை சரிந்து சாலையில் விழுந்தன. மண்சரிவு ஒரே பகுதியில் விட்டு விட்டுத் தொடர்ந்ததால் அப்பகுதி வழியாகச் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தேவஸ்தான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண்சரிவுகளை அகற்றி சாலையை சீர் செய்தனர்.

    அதன்பின் வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் மலைப்பாதையில் சுமார் 2½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்பு வேலியை அமைக்க அதிகாரிகளுக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.