Blog

  • நவராத்திரி நாயகிகளை வணங்குவோம்

     

    சக்தி  வழிபாட்டு விரதங்கள் அநேகம் இருந்தாலும்,அவற்றுள்  ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி மிகவும் முக்கியமானவை.பெண்கள் இதனை ஒரு முக்கிய விழாவாகவே கொண்டாடுகின்றனர்.பெண்களுக்கே உரிய இந்த நவராத்திரி வழிபாடு, எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களால் கொண்டாடப்படுகிறது.  ஒரு வருஷத்தில் வரும் நான்கு நவராத்திரிகளில், புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோராலும்  கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் சரத்காலத்தில் வரும் இந்த நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கூறுவர்.

     சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.

     தமோ குண சஞ்சாரியாக  ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியையும் , ராஜோ குண நாயகியாக ஸ்ரீ மகாலட்சுமியையும் , சாத்வீகக் குண சொரூபியாக  ஸ்ரீ சரஸ்வதியையும், இந்த  மூன்று அம்சமாக கொண்டாடும் நாட்களே நவராத்திரி.

     அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபட்டு, இவ்வுலக வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி, செல்வம், வெற்றி (வீரம்) என்பவற்றை வேண்டும் நாளாக கருதப்படுகிறது. வாழ்க்கையின் எல்லா சுகபோகங்களை அடைய,நமக்கு செல்வம் தேவை. இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். அலைமகளின் அருளால் பெற்ற செல்வத்தை பாதுகாக்க துணிவு வேண்டும்.  அதற்காக வீரத்தை அளிக்கும் துர்க்கா தேவியை வழிபடுகிறோம். அப்படி பெற்ற,பாதுகாக்கப்பட்ட செல்வத்தை நல்வழியில் பயனள்ள காரியங்களுக்கு  பயன் படுத்த கல்வியறிவு வேண்டும். அதற்கு சரஸ்வதி தாயை வணங்குகிறோம்.

     நவராத்திரியின்  வரலாறு

     சும்பன், நிசும்பன் என்ற, அரக்க சகோதரர்களின் கொடுமை தாங்காமல், மக்களைக் காப்பாற்ற வேண்டி, மும்மூர்த்திகளான பிரம்மா,விஷ்ணு,சிவனிடம் ,தேவர்கள் முறையிட்டனர்.

    மும்மூர்த்திகளும், மகாசக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும்,வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகே உருவான பெண் கோலம் பூண்டு, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்களான சண்டன், முண்டன் என்ற இருவரும், மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்ற ஜோடி இவள் தான் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய் து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தன்னை போரில் யார் வெல்கின்றனரோ,அவர்களைத் தான் மணப்பேன் என்றாள்.

    சும்பன், நிசும்பன் காதில் இது விழுந்ததும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி. ஆனால் அதில், ரக்த பீஜன் என்ற ஒரு அரக்கன் தனது கடுந்தவத்தால் பெற்ற வரத்தால், அவன் உடம்பிலிருந்து விழுந்த  ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜனாக  தோன்றினான்.

    உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்கிற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததை யும் குடிக்க ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் இச்சா சக்தியை தருகிறாள். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை,தந்து  எல்லா செல்வங்களையும் அருளுகிறாள். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.

    தசமியான  பத்தாவது நாள் மோட்சத்தை அடைய வழி ஏற்படுத்திக் கொடுத்து நம்மை ஆட்கொள்கிறாள்.

     

    முப்பெரும் தேவியரை வணங்கி நலம் பெறுவோம்….

     

     

  • குரு பெயர்ச்சி 2017: 12 ராசிகளுக்கான பலன், பரிகாரங்கள்

    ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள்  ஆளுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில  பாவ கிரகங்களாகவும் உள்ளன.

    ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கேற்ப ஒருவருக்கு நல்லதை செய்கின்ற கிரகம், மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்லதை செய்கின்ற தசை மற்றொருவருக்கு தீமை செய்யும்.

    இது அந்தந்த ஜாதக அமைப்பின்படி உள்ள அம்சமாகும். அந்த வகையில் சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய,  விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசியில் இடம்பெயர்ந்துள்ளார். 

    இந்த குரு பெயர்ச்சியால் குருபகவான் 12 ராசிகாரர்களுக்கு யாருக்கு நல்ல பலன்களை தருகிறார். யார் யார் பரிகாரம் செய்ய வேண்டும் குருவின் செயல்கள் என்ன, குரு பலம், குரு பார்வை, குரு யோகம்  உங்களுக்கு உள்ளதா என்பதைப் பார்க்கலாம். 
    இந்த குரு பெயர்ச்சி கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய ராசி காரர்களுக்கு யோகம் தரக்கூடியது. காரணம் குருபகவானின் பார்வை இம்முறை இந்த மூன்று ராசிகளின் மீது படுகிறது. 

    தனுசு, கன்னி, மத்திம பலன்களை அடைகின்றனர். கன்னி ராசிக்கு இரண்டாம் இடத்திலும், தனுசு ராசிக்கு 11ஆம் இடத்திலும் குருபகவான் அமர்கிறார். எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் பரிகாரம் செய்தால் பலன் கிட்டும் என்பது நிச்சயம்.

     

    மேஷம் – யோகம்

    குரு பகவான் துலாம் ராசியில் அமர்ந்துள்ளார்.  அஷ்டமத்து சனி, ஆறாம் இடத்து குரு பகவால் அல்லல்பட்ட மேஷ ராசிகாரர்களுக்கு இனி  நல்ல காலம் பிறக்கிறது. 2018 அக்டோபர் 3 வரை பலன்கள் அருள்கிறார் குருபகவான். 

    மேஷம் 7வது ஸ்தானம். குரு பகவான் 7ஆம் இடத்தில்  அமர்ந்துள்ளார். குரு பகவான் ராசிக்கு  2, 5, 7, 9,11ல் அமரும் போது நல்லது நடக்கும். 

    கணவன்மனைவி உறவு நல்லது நடக்கும். விட்டுக்கொடுப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். பகை விலகும். நட்புகள் மலரும். உங்களின் ராசிக்கு 3வது ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். இளைய சகோதரர்கள் உறவு அதிகரிக்கும். 

    9,12 ஆதிபத்தியம் வெளிநாட்டு பயணம் கைகூடும். இது அற்புதமான குரு பெயர்ச்சி.11வது ஸ்தானத்தை பார்க்கிறார் 5ஆம் பார்வையாக பார்க்கிறார். . எண்ணங்கள் பலிக்கும் என்ன நினைத்தாலும் பலிக்கும். மூத்த சகோதர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

    7ஆம் பார்வையாக ராசியை பார்ப்பதால் தோற்றப்பொலிவு அதிகரிக்கும்.  அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் கட்டுப்படும். ராசியை சம சப்தம பார்வையாக பார்ப்பதால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும்.

     

    ரிஷபம் – உடல்நலனில் அக்கறை 

    துலாம் ரிஷபத்திற்கு ஆறாம் இடம். இந்த இடத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளதால்  கடன் வாங்கக் கூடாது. உடல்நலத்தில் அக்கறை தேவை. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். 

    ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள குரு 10வது ஸ்தானத்தை பார்க்கிறார் வேலையில் இதமான சூழ்நிலை கிடைக்கும். பார்க்கும் இடம் நன்மை ஏனேனில் கர்ம ஸ்தானத்தை பார்வையிடுகிறார். 

    12 இடமான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். 2வது இடமான குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். கணவன் மனைவு ஒற்றுமை அதிகரிக்கும். தனகாரகன் தன ஸ்தானத்தை பார்க்கிறார். வரவை தாண்டி செலவு அதிகரிக்கும். சுப செலவாக மாற்றலாம். 

    வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடையை அணியலாம். உடல் நலத்தில் அக்கறை தேவை. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். 

    மிதுனம் – பொற்காலம்

    குரு பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானம். ராசியை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். 11வது இடத்தை பார்க்கிறார். 9வது இடத்தை பார்க்கிறார். இது அற்புதமான குரு பெயர்ச்சி. பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானத்தை பார்க்கிறார். தோற்றப்பொலிவு அதிகரிக்கும்.

    எண்ணங்கள் நிறைவேறும். மிதுனராசிக்காரர்கள் ஏற்றம் பெறுவார்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.  உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். 

    கடகம்  – அல்லல் விலகும் 

    கடக ராசி காரர்களே குருபகவான் உங்களின் ராசிக்கு 4வது இடத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் அல்லல் விலகும். 

    ராசிக்கு 8வது இடத்தை பார்க்கிறார். 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். 12 இடமான அயன சயன இடத்தை பார்க்கிறார். 

    அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் தடைகள் விலகும். கண்டங்கள் விலகி உடல் ஆரோக்கியம் ஏற்படும். 

    குருவின் 7ஆம் பார்வை கர்ம ஸ்தானமான 10வது இடத்தின் மீது விழுவதால் நல்ல தொழில் அமையும். நல்ல வேலை அமையும். அங்கீகாரம் கிடைக்கும். 

    12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் வரவை அறிந்து செலவு செய்யவும். சுப விரையமாக செய்யவும். குரு பெயர்ச்சி நன்மையை அள்ளி வழங்கும். 

    சிம்மம்  – ஆன்மீக பயணம்

    குருபகவான் உங்கள் ராசிக்கு 3வது இடத்தில் அமர்ந்துள்ளார். தொடர்புகள் வெற்றி கிடைக்கும். இளைய சகோதர்கள் மீது அக்கறை தேவை. 

    குரு பகவான் உங்களுக்கு 7வது இடத்தை 5ஆம் பார்வையாக பார்க்கிறார். 9வது இடத்தை 7ஆம் பார்வையாக பார்க்கிறார். பாக்கிய ஸ்தானத்தை பார்த்தால் தந்தையின் உடல் நலம் உண்டாகும். 

    11வது இடத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் அல்லல்கள் விலகும். வாழ்க்கை துணைக்கு மகிழ்ச்சி. 
    9ஆம்  பார்வை பார்ப்பதால் நீண்ட தூர பயணம் உண்டாகும். தர்ம ஸ்தானத்தை பார்ப்பதால் தான தர்மத்திற்கு செலவு. ஆன்மீக பயணம் உண்டாகும். தன லாபத்தை தரும். வியாழக்கிழமை மவுன விரதம் இருப்பது அவசியம்.

    கன்னி – தன லாபம்

    குரு பகவான் கடந்த ஓராண்டாக ஜென்மத்தில் இருந்தார். இப்போது  2வது இடத்திற்கு செல்கிறார். இன்னல்கள் விலகும். தன வரவை அள்ளி வழங்கும். நல்ல குரு பெயர்ச்சி. 2வது இடத்தில் வாக்கு வன்மை பெருகும்.  

    ராசிக்கு 6வது இடம், களத்திர ஸ்தானத்திற்கு மறைவு. கணவன் மனைவி விட்டுக்கொடுக்க வேண்டும். 
    7ஆம் இடத்திற்கு 12வது இடத்தை குரு பார்க்கிறார். குடும்ப ரகசியம் காக்க வேண்டும். 

    8வது இடம் அஷ்டம ஸ்தானத்தை பார்க்கிறார். நோய் நொடிகள் விலகும். 10வது இடம் தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். வெளிநாட்டு பயணம் ஏற்படும். 

    துலாம்  – ஜென்ம குரு 

    துலாம் ராசியில் அமர்ந்து 5, 7,9ஆம் இடத்தை பார்க்கிறார். மாற்றங்களும், ஏற்றங்களும் கிடைக்கும்.  வேலை பளு அதிகரிக்கும். 

    உழைப்புக்கு ஏற்ற உயர்வு வரும்.வெற்றி கிடைக்கும். பஞ்ச ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் இந்த ஆண்டு குவா குவா சத்தம் கேட்கும். 

    7வது இடத்தை பார்ப்பதால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும், திருமணம் கைகூடும். வெளிநாடு சுற்றுலா செல்லலாம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். 

    9வது இடத்தை பார்ப்பதால் தந்தையின் உடல்நலம் சீராகும். சுக்கிரன் வீட்டில் குரு அமர்வதால் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். சகோதர உறவு சிறப்பாக இருக்கும். 

    விருச்சிகம் – தடைகள் விலகும்

    லாபஸ்தானத்தில் இருந்து குரு 12வது இடமான விரைய ஸ்தானத்திற்கு வந்துள்ளார். குருவின் பார்வை  4வது இடம், 6வது இடம் 8ஆம் இடத்தின் மீது படுகிறது. தடைகள் விலகும். நிறைய செலவுகள் ஏற்படும். விரையங்களை சுப விரையமாக மாற்றலாம்.

    வீடு வாங்குகள், கடன் வாங்குகள். கடன் சேமிப்பு 4வது பார்வையாக கும்பத்தை பார்க்கிறார்.  மூட்டுவலி விலகும்.  நெருக்கடிகள் விலகும். 

    நல்ல வீடு வாங்கலாம். மேற்படிப்பு படிக்கலாம். 6வது இடத்தை பார்ப்பதால் எதிரிகள் விலகுவார்கள். 8வது இடத்தை பார்வை படுவதால் நன்மைகள் உண்டாகும். கணவரின் வருமானம் அதிகரிக்கும். பட்டமங்கலம் அனுக்கிரக தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

    தனுசு – லாப ஸ்தானம் 

    தனுசு ராசி காரர்களே 11 வது இடமான லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளார். நல்ல வேலை அமையும், உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும்.  ஏழரை சனி நடந்தாலும் நன்மையே கிடக்கும்.

    குரு பகவான் 3வது இடம், 5வது இடம், 7வது இடத்தை பார்க்கிறார். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அதைப்போலவே பஞ்சம ஸ்தானத்தை பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும்.  

    குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். 7வது இடமான களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு அதிகரிக்கும். திருமணம் நடைபெறாமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு வியாழ நோக்கம் வந்து விட்டது. 

    மகரம் – தடைகள் விலகும்

    குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்கிறார். குருவின் பார்வை தன ஸ்தானம் குடும்ப ஸ்தானம், வாக்குஸ்தானம். 4வது இடம், 6வது இடம் பார்வை படுகிறது. தனச்செழிப்பை அள்ளி வழங்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

    4வது ஸ்தானத்தில் குருவின் பார்வை படுவதால் உயர் கல்வி கற்பதில் இருந்த தடைகள் விலகும். பட்டம் பெற்று சிறப்படைவீர்கள். வீடு, வாகனம் வாங்கலாம். இந்த ஆண்டு 6வது இடத்தை குருபகவான் பார்ப்பதால் நோய்கள் விலகும். 

    கும்பம் – யோகம் 

    அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு 9வது இடத்தில் வந்து அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். குரு பெயர்ச்சி மாபெரும் வரவாக அமைந்துள்ளது. 

    சோர்வு நீங்கி மகிழ்ச்சி தென்படும். தோற்றத்தில் பொலிவு ஏற்படும். வாழ்க்கைக்கு தேவையானவை கிடைக்கும். தனச்செழிப்பு மனத்தெளிவை தரும். 

    நஷ்டங்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். குரு பகவான் 5ஆம் பார்வையாக உங்களின் ராசியை பார்க்கிறார். ராசிக்கு 3வது இடத்தை பார்க்கிறார். 5வது இடத்தை பார்க்கிறார். 

    மூன்றாமிடத்தை 7ஆம் பார்வையாக பார்ப்பதால் இளைய சகோதரர்களுடன் உறவு மேம்படும். அக்கம்பக்கத்தினர் உறவு மேம்படும். தொடர்புகள் அதிகரிக்கும். மிகப்பெரிய பாராட்டு கிடைக்கும். 

    பூர்வபுண்ணிய ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குரு அருளால் முருகப்பெருமானே வந்து பிறக்கப் போகிறார். நோய்நொடிகள் அற்ற வாழ்க்கையும், தாய், தந்தையரின் உறவு மேம்படும். உலகம் பாராட்டும் வகையில் வெற்றி கிடைக்கும் யோக காலமாகும். 

    மீனம் – வெற்றி

    மீன ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து 12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். 

    2வது இடமான தன ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தன வரவு ஏற்படும். ஆனால் விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் சுப விரையம் ஏற்படும். 

    4வது இடத்தை குரு பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் சீராகும். கல்வி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கலாம். 

    வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ண ஆடை அணியுங்கள். தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

     

    – குருபரன்

  • ஏன் இப்படி இருக்கிறார் சிவ பெருமான் ?

     

    மற்ற எல்லா தெய்வங்களை விடவும்,சிவபெருமான் தோற்றத்தில் ரொம்பவே வேறுபாடு உடையவர். மற்ற தெய்வங்கள் அலங்கார ஜோடனையாக காட்சி தரும் போது,ஈசன் மட்டும் மரவுரியும்,ஜடாமுடியும், பாம்பு அணிகலனும்,உடல் முழுக்க சம்பலுமாக காட்சித் தருகிறார்.இதற்கு பின் உள்ள தாத்பரியங்களை பார்ப்போம்.

    சிவ பெருமான் சந்திரனைச் சடைமுடியில்  தரித்துக் கொண்டிருப்பது ஏன் ?

    தக்கன் தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தபோது இவர்கள் அனைவரிடத்திலும், ஒரே மாதிரியான அன்பை தர வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார். ஆனால் சந்திரனோ அவர்களில் மிகுந்த அழகுள்ள கார்த்திகை ,மற்றும் ரோகிணியிடம் மட்டும் மிகுந்த காதலுடன் இருந்தான். அவர்கள் அனைவரும் மனம் வருந்தித் தக்கனிடத்தில் சொல்லிக் கவலைப் பட்டுக் கொண்டார்கள். அவன் கோபங்கொண்டு சந்திரனுடைய சோடசகலைகள் அத்தனையும் அழிந்து போகும்படி சபித்தான்.

    அந்த சாபத்தின்படி தினம் ஒவ்வொரு கலையாகப் பதினைந்து கலை குறையக் கண்ட சந்திரன் மிகுந்த  துயரங்கொண்டு தேவேந்திரனிடத்தில் சொல்ல, இந்தச் சாபத்தை என்னால்  நீக்க முடியாது, பிரமதேவனிடத்தில் போய்ச் கேள் என சொல்ல,சந்திரனும் பிரம்மனிடத்தில் முறையிட்டார். “நான் சொன்னாலும் தக்கன் இந்த சாபத்தை நிவர்த்தி செய்யமாட்டான். நீ வைகுந்தத்துக்குப் போய் விஷ்ணுவிடத்தில் ஆலோசனைக் கேள் என சொல்ல,சந்திரன் அப்படியே செய்யதான். விஷ்ணுவும்  தன்னால் முடியாது, நீ ஸ்ரீ கைலாசகிரிக்குப் போய்ப் பரமசிவனிடத்தில் சரணடை என்று சொன்னார். இதைக் கேட்ட சந்திரன் ஸ்ரீகைலாயகிரிக்குப்போய், பரமசிவனைப் பணிந்து தொழுதான். பரமசிவனும் அவன் மேல் கருணை காட்டி, சந்திரனிடத்தில் இருந்த ஒரு  கலையினையும் தமது முடியில் தரித்துக் கொண்டு இது உன்னிடத்திலிருந்தால் தக்கன் சாபம் இதனை அழிக்க முடியும். இனி என்னுடைய திருமுடியிலிருக்கிற கலையைத் தொடராது. இந்தக் கலையழியாமல் இருப்பதனால் உனக்கு முன்னிருந்ததுபோலநாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாக வளர்ந்து சோடசகலைகளும் நிறைவுபடும். அப்படி நிறைந்தாலும் வளர்ந்தது போல மறுபடி குறைவுபடுகிறதும் வளருவதுமாக இருக்கும் என வரம் அருளினார்.

    பரமசிவன் தன்னுடைய ஒரு திருக்கரத்தில் மானை  தரித்துக் கொண்டிருப்பது ஏன்?

    பிட்சாடன மூர்த்தியாக தாருகாவனத்தில் எழுந்தருளின  ஈசனைப் பார்த்து  மோகித்த ரிஷி பத்தினிகள் தங்கள் கற்பு நிலை தவறினார்கள்.இதனால்  தாருகாவனத்து ரிஷிகள் கோபமுடைந்து ,ஒருவேள்விசெய்து அதிலிருந்து வெளிவந்த  புலியை சிவனைக் கொல்வதற்காக ஏவினர். ஈசனோ அதனைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டார். வேள்வியில் இருந்து பின் வந்த மானை இடக்கையில் வைத்துக் கொண்டருளினார்.பின்பு வந்த மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டார். தொடர்ந்து வந்த சர்ப்பங்களை ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். இவை தவிர முயலகன் என்ற அசுரன் வர அவனைக் கீழேதள்ளி முதுகிலேறி நின்றார் . ரிஷிகள் தொடர்ந்து மந்திரங்களை ஏவ,அவகைளை  டமருக ரூபங்கொண்டு அவர் திருக்கரத்தில் தாங்கிக்கொண்டார்.

    சிவன் ஏன் கபாலத்தை ஏந்திக்கொண்டு இருக்கிறார் ?

    பிரம்மாவின்  அகந்தையை அழிக்கும் பொருட்டு, அவருக்கிருந்த ஐந்து தலையில் நடுத்தலையைக் கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல்பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராகியது. பரமசிவன் கபாலம் தரித்துக் கொண்டிருப்பதனால் கபாலியென்றும் பெயருண்டானது.

    பரமசிவன் கண்டத்தில் விஷம் பொருந்தியிருப்பது  ஏன்?

    தேவர்கள் அமிர்தம் எடுக்க  பாற்கடலைக்  கடைந்தபோது ஆலகால விஷமுண்டானது.  அதைக் கண்டு பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவர்களை காக்கும்  பொருட்டு விஷத்தைக் கண்டத்தில் வைத்தருளினார். இதனால் நீலகண்டன் எனப் பெயர் பெற்றார்.

    பரமசிவனுக்கு ரிஷபவாகனம்  ஏன்?

    தருமதேவதையானது என்றும் நித்தியமாயிருக்கவேண்டும்மென்ற எண்ணங்கொண்டு ரிஷபரூபமாகிப் பரமசிவனிடத்தில்  பணிந்து “இறைவனே !நான் இறவாமலிக்கும் படி அடியேனை வாகனமாகக் கொண்டருள வேண்டும்”  என வேண்டிக்கொண்டது. இறைவனும் மனமிரங்கி,அதனைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.

  • ஓணம் வரலாறு…

    திருவோணம் பண்டிகை!

    கேரளாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்களும் நடைபெறுகிறது.

    கேரளாவில் கொண்டாடப் பெறும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

     முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தது.

    மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தார். திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால் மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார். பிறகு திருமாலும் மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும், மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும் முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

    கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் வாயிற் படியிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக பல வண்ண மலர்களால் ஆன கோலங்களைப் பெண்கள் வரைகின்றனர். கோலத்தின் நடுவில் குத்துவிளக்கேற்றி வைத்து, அதனைச் சுற்றிப் பல வகையான காய், கனிகளையும் அழகுற அடுக்கி வைக்கின்றனர். இக்கோலத்தை “அத்தப்பூக் கோலம்” என்று அழைக்கின்றனர். அன்று மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பலவிதமான காய், கனிகளையும் உணவு வகைகளையும் விருந்தினர்களுக்கு வழங்கித் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். திருமால் உறையும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

     விருந்துக்கு பிறகு ஆண்களும், பெண்களும் இணைந்து பல்வேறு நடனங்களை ஆடி மகிழ்வார்கள். ஓணப்பட்டுடுத்திய பெண்கள் அத்தப்பூ கோலத்தில் மீது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனை சுற்றி நடனமாடுவார்கள். மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஆண்கள் புலிக்களி நடனம், களரி, கயிறு இழுத்தல், கடுவா ஆட்டம், எறி பந்து, கிளியாந்தட்டு, ஓண ஊஞ்சல் என நடக்கும் விளையாட்டுகள் மனதிற்கும், உடலுக்கும் உரம் சேர்க்கும் வகையில் இருக்கும்.

     

  • குருப் பெயர்ச்சி 2017 -பொதுப் பலன்கள்

     

    குரு காயத்ரீ மந்திரம்

     

    ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

     

    குரு ஸ்லோகம்

     

    தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

     

    பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

     

    இவர் தான் குரு பகவான்

    சொந்த வீடு – தனுசு, மீனம்

    உச்சராசி – கடகம்

    நீச்சராசி – மகரம்

    திசை – வடக்கு

    அதிதேவதை – பிரம்மா

    நிறம் – மஞ்சள்

    வாகனம் – யானை

    தானியம் – கொண்டைக்கடலை

    மலர் – வெண்முல்லை

    வஸ்திரம் – மஞ்சள்நிற ஆடை

    ரத்தினம் – புஷ்பராகம்

    நிவேதனம் – கடலைப்பொடி சாதம்

    உலோகம் – தங்கம்

    இனம் – ஆண்

    உறுப்பு – தசை

    நட்புகிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்

    பகைகிரகம் – புதன், சுக்கிரன்

    மனைவி – தாரை

    பிள்ளைகள் – பரத்வாஜர், கசன்

    பிரதானதலங்கள் – ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்

     

     சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி நவக்கிரகங்களில் முழு சுப கிரகமாக திகழ்பவர் . நம்முடைய  வாழ்வில் எல்லா  விதமான செல்வங்களையும் வியாழ பகவான்  என்ற குரு பகவான் வழங்கிறார். வாழ்க்கையில் பணம், குழந்தை செல்வம் ஆகிய  முக்கியமான இரண்டு செல்வங்களை  அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்றவர் குரு பகவான்..

     

    குரு பார்வை கோடி நன்மை

     

    ஒருவர்  வாழ்வில் திருமணம் மிக  முக்கியமானது. அந்த திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக திகழ்பவர் குரு பகவான். குரு பார்வை அமைந்து விட்டால் திருமணத்துக்கு உரிய காலம் அமைந்து விட்டது என்று கருதலாம். குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவின் ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

     இந்தாண்டு  இன்று செப்டெம்பர் இரண்டாம் தேதி குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார். துலா ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குகிறார். துலா ராசிக்கு வரும் குரு பகவான் விருச்சிக ராசிக்கு ஸ்ரீ ஹேவிளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ம் தேதி – 04.09.2018 – வியாழக்கிழமையன்று மாறுகிறார். துலா ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் கும்ப ராசியையும் – ஏழாம் பார்வையால் மேஷ ராசியையும் – ஒன்பதாம் பார்வையால் மிதுன ராசியையும் பார்க்கிறார்.

    :

    2017 குரு பெயர்ச்சியினால் நன்மை பெறும் ராசிகள்: மேஷம் – மிதுனம் – கும்பம்

    2017 குரு பெயர்ச்சியினால் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கடகம் – கன்னி – துலாம் – தனுசு – மகரம்

    2017 குரு பெயர்ச்சியில் பரிகாரத்தின் மூலம் பயன்பெறக்ககூடிய  ராசிகள்: ரிஷபம் – சிம்மம் – விருச்சிகம் – மீனம்

     

    பொது பலன்கள்:

    கன்னி ராசியிலிருந்து  துலா ராசிக்கு இடம் பெயர்கிறார் குரு பகவான் . துலாம் என்பது வியாபாரம் சம்பந்தபட்ட ராசியா. இந்த ராசிக்கு அதிபதி அசுர குருவாகிய சுக்கிரன் ஆவார். சுக்கிரன் அழகு – கவர்ச்சி – ஆடம்பரம் – பொருள் – பணம் – வசதி – வெண்மை ஆகிய விஷயங்களுக்கு அதிபதியாவார். இந்த சுக்கிரனுடன்  அசுர குருவாக இருந்தாலும் தேவகுரு குருபகவானுடன் இணையும் போது அற்புதமான  பலன்களை அள்ளித் தருவார். குருவிற்கு துலாம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். செவ்வாய் சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை,  அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும்.

     

    குருவை வணங்கி வாழ்வை மேம்படுத்தி உயர்வோம்

     

    ஓம் குருவே நமஹ ….

  • அரசருக்கு அறிவுறுத்திய விநாயகர்

     

    அரசர்  ஒருவர்  அளவுக்கு மீறிய  மிகுந்த அகந்தையும், ஆணவமும் கொண்டராக  இருந்தார். ஒரு சமயம் நாரதர் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவரை அலட்சியம் செய்தார் அரசர். இருந்த போதிலும்  நாரதர் அரசரிடம், “”மன்னா! பகவான் திருவருளால் உன் நாடு செழிப்பதாக!” என்று வாழ்த்தினார். அதைக் கேட்டு சிரித்த அரசர், “”என்ன சொல்கிறீர் நாரதரே! பகவான் அருளால் என் நாடு செழிக்க வேண்டுமா? நான் நல்ல முறையில் நிர்வாகம் செய்கிறேன். என்னால் தான் எல்லாம் நடக்கிறது. இதில் பகவானுக்கு என்ன வேலை?” என்று ஏளனமாக சொன்னார் . அரசரது  பேச்சில் ஆணவம் இருந்ததைக் கண்ட நாரதர், அவருக்கு  புத்திமதி சொல்லிவிட்டு, கவுண்டின்ய மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு மகரிஷி நடத்திய விநாயகர் பூஜையில் கலந்துகொண்டுவிட்டு கிளம்பினார்.  

     

    வழியில் விநாயகரைக் கண்டார் நாரதர். அவரது முகக்குறிப்பை அறிந்த விநாயகர், “”நாரதரே! உம் முகத்தைப் பார்த்தால் என் உதவி தேவைப்படுவது போலத் தெரிகிறதே!” என்றார்.நாரதர் அரண்மனையில் நடந்ததைச் சொன்னார். அரசருக்கு புத்தி புகட்ட விநாயகர் அந்தணனாக உருவெடுத்து, அரண்மனைக்குச் சென்றார். தனக்கு மிகவும் பசிப்பதாகச் சொல்லி உணவு கேட்டார். அரசர் அவரிடம், “”அந்தணனே! அன்ன சாலைக்குச் சென்று வயிறார சாப்பிட்டு விட்டுப் போ,” என்றான். அங்கு அவருக்கு சமையற்காரர்கள் விதவிதமான உணவுகளைப் பரிமாறினர். அவை அனைத்தையும் ஒரு பிடிபிடித்தவர், 

     

    “உம்… இன்னும் என்ன இருக்கிறது? கொண்டு வாருங்கள்! எனக்கு இன்னும் பசி தீரவில்லை,” என்றார். அவர்கள் சமைத்து வைத்திருந்த உணவு முழுவதையும் அவருக்கு பரிமாறினர். ஊஹும்… அவர் கொஞ்சமும் பசியாறியதாகத் தெரியவில்லை. மேலும் சமைக்க வைத்திருந்த அரிசி, தானியங்களையும், அங்கு தோட்டத்தில் விளைந்த காய், பழங்களையும் சாப்பிடக்கொடுத்தனர். அதை சாப்பிட்டும் அவரது பசி நீங்கவில்லை. மிரண்டு போன சமையற்காரர்கள், பயத்தில் ஓட்டம் பிடித்தனர். நடந்ததை அறிந்த அரசர் அன்னம் பரிமாறும் இடத்திற்கு வந்தான். அவரிடம் அந்தணர், “என்ன மகாராஜா, யானைப்பசிக்கு சோளப்பொரியா? நீ பரிமாறிய உணவு எனக்கு போதவில்லையே!’”என்றார்.

     

    அரசர் ஆத்திரத்தில்,“அந்தணனே, இங்கு மேலும் உனக்கு உணவு தர முடியாது. உன் பசி தீர்க்கும் இடம் பார்த்து நீ செல்லலாம்!” என்று கத்தினான். “நல்லாட்சி நடக்கிறது. என் நிர்வாகத்தில் மக்களுக்கு ஒருகுறையும் இல்லை. என்னால் எல்லாம் முடியும் என்று வீண் தம்பட்டம் பேசுகிறாயே! உன்னால் என் பசியைக் கூட போக்கமுடியவில்லையே” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து  கிளம்பியவர், தன் பக்தன் திரிசுரன் வீட்டிற்குச் சென்றார்.  அங்கு திரிசுரனும், அவன் மனைவி விரோசனையும் விநாயகர் பூஜையில் இருந்தனர். 

     

    அவனது வீட்டு வாசலில் நின்றவர், “ஐயா! எனக்குப் பசிக்கிறது. சிறிது உணவிருந்தால் போடுங்கள்!” என்று யாசகம் கேட்டார். அவரிடம், “ஐயா! தங்களுக்கு கொடுப்பதற்கு தற்போது எங்களிடம் ஏதுமில்லை. இனிமேல்தான் சமையல் செய்யப்போகிறேன்,” என்றாள் விரோசனை.ஆனால், திரிசுரனுக்கு வந்தவரை வெறும் கையாக அனுப்ப மனமில்லை. தன் கையில் விநாயகர் பூஜைக்காக வைத்திருந்த அருகம்புல்லை கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட அந்தணர், வாயில் போட்டுக் கொண்டார். அந்த கணமே அவரது வயிறு நிறைந்தது.இவ்வேளையில் அரண்மனைக்கு அந்தணனாக வந்தது யார் என அறிய, அவரைத்தேடி திரிசுரன் வீட்டிற்கு வந்தான் அரசர். அங்கு இருவருக்கும் விநாயகர் சுயரூபம் காட்டினார். “”திரிசுரனின் உண்மையான பக்திக்கு கட்டுப்பட்டு சாதாரண அருகம்புல் கூட விநாயகரின் பசியைப் போக்கிவிட்டதே! என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று ஆணவத்தால் அறிவை இழந்து விட்டேனே!” என விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார் அரசர்.

     

  • சிரிக்கும் பெருமாள்… வியர்க்கும் திருமுகம்!

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் அமைந்திருக்கிறது  நாம மலை. இந்த மலையின் மீது ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அழகுறக் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார், ஸ்ரீநிவாசப் பெருமாள்.

    ராமாயண காலத்தில் இலங்கையில் இருந்து வான் மார்க்கமாக ராமர், சீதை மற்றும் விபிஷணன் ஆகியோர் அயோத்தி செல்லும் போது, அவர்கள் சென்ற ரதத்தின் நிழல் விழுந்த இடங்களில் ஒன்றுதான், ஸ்ரீநிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இடம் என்கிறார்கள்.  இதன் மகிமையை உணர்ந்த கிருஷ்ண தேவராயர், 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோயிலை நிர்மாணித்தாராம்.

    மூலிகைக் கற்களைக் கொண்டு, திருப்பதியில் பெருமாள் காட்சி தரும் அதே திருக் கோலத்திலேயே இங்கும் ஸ்ரீதேவி-பூதேவி சமேத ராக ஸ்ரீநிவாசப் பெருமாள் அருளாட்சி செய்வது, கண்கொள்ளா காட்சி! மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பூஜையின்போது மூலவர் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பதைக் காணலாம் என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொள்ளும்  பக்தர்கள், ‘‘தரிசிக்கும் தருணத்தில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு  ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டும் ஸ்வாமி இவர். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்… நமது வேண்டுதல் நியாயமானதா இல்லையா என்பதை!’’ என்று பரவசம் பொங்கச் சொல்கிறார்கள். 

    நாம மலையில் மிகப்பெரிய அளவில் பாறைகளால் ஆன குளம் போன்ற ‘பாலி’ ஒன்று காணப்படுகிறது. இந்த பாலியின் தீர்த்த நீர் அதிகளவு அடர்த்திகொண்டதாம். இதில், ராமனும் சீதையும் நீராடியதாக நம்பிக்கை. அதேபோல் அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.

    ஒருமுறை இந்தக் கோயிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘‘ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை’’ என்றாராம். அந்தக் குறையைக் களையும் விதம், ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர், பக்தர்கள். வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டு தலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்துபோனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது நம்பிக்கை.

    இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர். துளசி, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றையும் தனித்தனி சீட்டுகளில் பொதிந்து சந்நிதியில் வைத்து, குழந்தைகள் மூலம் சீட்டுகளை எடுத்து பார்க்கின்றனர். அதில் துளசிச் சீட்டு வந்தால் நினைத்தது உடனே நிறைவேறும்; மஞ்சள் வந்தால் காரியத்தில் சற்று நிதானம் வேண்டும் என்று அர்த்தமாம்.
    வாழ்நாளில் ஒரு முறையாவது  திருப்பதி சென்று ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் பொருளாதாரம், வயது முதிர்வு போன்ற காரணங்களால் திருப்பதி சென்று பெருமாளை வணங்காமல் தவித்து மருகும் அன்பர்களும் உண்டு. அப்படியான பக்தர்களுக்கு, திருப்பதிக்குச் சென்று வந்த புண்ணிய பலனை தந்தருளும் நாமமலை ஸ்ரீநிவாசப் பெருமாளை நீங்களும் ஒருமுறைத் தரிசித்து வாருங்களேன்; உங்கள் வருங்காலம் சிறக்கும், வாழ்க்கைச் செழிக்கும்!

     

  • ஐவ்வகை நந்திகள்!

    ஐவ்வகை நந்திகள் என்பவை சிவ ஆகமங்களின் அடிப்படையில் சிவாலயங்களில் அமைக்கப்பெரும் ஐந்து நந்திகளாவர். ஆகமத்தில் ஒவ்வொரு நந்தியை அமைக்கும் விதமும், அமைவிடமும், அந்த நந்திகளின் வரலாறும் இடம்பெற்றிருக்கின்றன.

    நந்திகளின் வகை

    கைலாச நந்தி

    கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் ஒருவராவர். இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்து.

    அவதார நந்தி

    அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

    அதிகார நந்தி

    அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

    சாதாரண நந்தி

    சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருப்பதாகும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

    பெரிய நந்தி

    தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் உள்ள பெரிய நந்தி

    பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் காவலனாக எந்நேரத்திலும் பேர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி இருக்கிறார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

     

     

  • பதினாறு சம்பத்துக்களையும் அள்ளித்தரும் கோ பூஜை

     

     

    நமது இந்து மதத்தில் கோமதாவாகிய பசுவை வணங்குவது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

     பசுவின் உடல் முழுவதும் தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தேவர்கள் வசிக்கின்றனர். அதனால் தான் பசுவை வலம் வந்து வணங்கினால் முப்பது முக்கோடி தேவர்களை வணங்கின புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் சான்றோர்கள்.

    பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக  ஐதீகம்.எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும்.

    கோ பூஜை செய்யும் போதும், பசுவின் முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும். அதிகாலையில் பசுஞ்சாணத்தை கொண்டு வீட்டு வாசலை மெழுகி ,கோலம் இட்டால் , மகாலட்சுமி நம் வீடு தேடி வருவாள் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது.

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகிய ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன என்று புராணங்கள் கூறுகிறது. பசுவின் கோமயம் எனப்படுகின்ற சாணம்,கோமியம் எனப்படுகிற மூத்திரம்,  பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றைக் கொண்டு சிவபெருமானுக்கு செய்யப்படுகிற  பஞ்சகவ்ய அபிஷேகம்  மிகவும் விசேஷமானது. திருமகள் வாசம் செய்யும் இதன் பின்பாகத்தை  தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.

    கோமாதாவின்  உடற் பகுதியில் உறையும் தெய்வங்களைப் பற்றியும், தேவகணங்களைப்  பற்றியும் நமக்கு தெரிந்த சில ,தெரியாத பல செய்திகளைத் தெரிந்துக் கொள்வோம்.

    கோமாதாவின்  முகம் மத்தியில்  -சிவன்

     வலக் கண் – சூரியன்

    இடக் கண் – சந்திரன்

    மூக்கு வலப்புறம் – ஆறுமுகக் கடவுள் முருகன்

    மூக்கு இடப்புறம் – முழு முதற்கடவுள் விநாயகர்

    காதுகள் – அஸ்வினி குமாரர்

    கழுத்து மேல்புறம்  – ராகு

    கழுத்து கீழ்புறம்  -கேது

    கொண்டைப்பகுதி –நான்முகன்  பிரம்மா                    

     முன்கால்கள் மேல்புறம் – கலைமகள் சரஸ்வதி, சங்கு சக்ரதாரி விஷ்ணுபகவான்

     முன்வலக்கால் –  பைரவர்      

    முன் இடக்கால் –  சல்லின் செல்வர் ஹனுமார்

     பின்னங்கால்கள் –  பராசரர், விஷ்வாமித்திரர்

     பின்னகால் மேல்பகுதி – நாரதர், வசிஷ்டர்

    பிட்டம் கீழ்ப்புறம் –  கங்கை

    பிட்டம் மேல்புறம் – திருமகளான லக்ஷ்மி

    முதுகுப்புறம் – பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி  

    வயிற்றுப்பகுதி – ஜனககுமாரர்கள் பூமாதேவி

    வால் மேல் பகுதி – நாகராஜர்

    வால் கீழ்ப்பகுதி – ஸ்ரீமானார்

    வலக்கொம்பு – வீமன்

    இடக்கொம்பு – இந்திரன்

    முன்வலக்குளம்பு – விந்தியமலை

    முன்இடக்குளம்பு – இமயமலை

    பின் வலக்குளம்பு – மந்திரமலை

    பின் இடக்குளம்பு -த்ரோணமலை

    பால்மடி – அமுதக்கடல்

     

     முப்பத்துமுக்கோடிதேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் ஆட்சி செய்யும் பசுவை காலையில் எழுந்ததும் தொழுவத்தில் காண்பது சுபசகுனமாக கருதப்படுகிறது.

    கோபூஜையை செய்வதால் சகல சம்பத்துக்களும், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பதால் கோமாதாவை வணங்கி பதினாறு செல்வத்தைப் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.

  • சகல நன்மைகளையும் தரும் தியானம்

     

     

    அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தவும், இறைவனை நோக்கி நம் மனதை செலுத்தவும் தியானம் ஒரு சிறந்த கருவியாகும். மனதை இறைவனிடம் வைத்து, மனதில் இறைவனின் உருவத்தையே பதித்து, மந்திர ஜபம் செய்வது தியானத்தின் சிறப்பு.  

    தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து செய்யும் போது பலன் இரட்டிப்பாகும். தியானம் செய்யும் போது ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் செய்ய வேண்டும். நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்யவே ஆசனம். ஜபம்செய்ய நதிக்கரை, மலை, பசுத்தொழுவம்,புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. பூஜை அறை, நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகளும்  ஜபம் செய்ய சிறந்த இடம்.

    ஆனாலும் பசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தரும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும்.  ஜபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரை மாலை, பவழம் போன்ற மாலைகளும், முத்து மாலைகளும் உபயோகப்படுத்தலாம்.   மாலையாக இருந்தாலும், இவை எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், மனம்  இறைவனிடம் இருக்க வேண்டும்.

    தியானம் பழகும் ஆரம்பக் காலத்தில் , மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவின் பாதாரவிந்தங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டோம் என்றால்  தியானமும் ஜபமும் நமக்கு எளிதாக கைக் கூடும்.

    சில வழிமுறைகளைக்  கடைப்பிடித்தால் உபாசனையில் நாம் ஓரளவு வெற்றி பெறலாம். நமக்கான உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து, குரு அறிவுரைப்படி உபாசிக்க வேண்டும். நம்முடைய ஆத்மாவை யார் நெருங்கி வரமுடிகிறதோ,அவரே நம் குரு.

    உபாசனைக்காகஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் . உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை . கூடியவரை ஒரே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும்.

    குறிப்பிட்ட ஒரு இடத்தை உபாசனைக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம்.

    அங்கு ஆசனத்தை விரித்து அதில்  தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி அமர்ந்துக் கொள்ளவும். கைகள் மடி மீது வைத்து, கண்களை மூடிக் கொள்ள வேண்டும். 

     நமது மூச்சின் மீது கவனம் வைத்து, மூச்சை மெதுவாக இழுத்து விட்டு பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன் தரும்.

     மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.  ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்க வேண்டும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உபாசனை  தெய்வத்திடம் நிறுத்தவேண்டும்.

    பின்பு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை ,குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். நம் முழு கவனமும் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்க வேண்டும். எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால் தான் பலன் தர ஆரம்பிக்கும்.

     தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழ வேண்டும்.

    கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலையான  தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது என்கிறது சாஸ்திரம்.

    கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி.தகுந்த குருவிடம் தியானத்தையும், உபாசனைகளையும் தெரிந்துக் கொண்டு அதை பழகும் போது சகல நன்மைகளும் உண்டாகும்.