Blog

  • aiyappanin-eru-kalgalil-thundu-katiyierupathu-yen

     

    ஐயப்பன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.
    இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.

    ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.

    மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.

    ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை. பொன்ணம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ ஐயப்பன் அன்று காந்தமலையில் இருந்து சபரிமலைக்கு வருவதாக ஐதீகம்.

     

  • 40-varudangalukku-oru-murai-matume-katchiththarum-athisaya-kadavul

     

    வருடத்திற்கு ஒருமுறை, வாரத்திற்கு இரண்டு முறை காட்சி தரும் கடவுளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சி தரும் அதிசய கடவுளைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா…வாருங்கள் யார் அந்தக் கடவுள் என்பதைப் பார்ப்போம்.

     புராதன ஆலயங்களுக்குப் பெயர்பெற்ற ஊர் காஞ்சிபுரம். இங்குக் காமாட்சி அம்மனே பிரதான தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்மன் ஆலயத்திற்குப் பிறகு ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும், அதற்கடுத்தாற்போல் வரதராஜ பெருமாள் ஆலயமும் சிறப்பு மிக்க தலங்களாக விளங்குகின்றன. இவற்றில் வரதராஜ பெருமாள் ஆலயம் அற்புதங்கள் நிறைந்த தலமாக உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் அனந்தசரஸ் என்ற திருக்குளத்திற்குள் அத்திவரதர் உள்ளார். இவர் அத்தி மரத்தால் ஆனவர். இந்தச் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம். இறுதியாகக் கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் சிலை பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     இக்கோயிலின் சிறப்புகள் சில….!

    • உற்சவருக்கு “அழைத்து வாழ வைத்த பெருமாள்” என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.
    • கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சந்நதி உள்ளது.
    • வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.
    • ராமானுஜருக்காகக் கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம்.
    • காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

     

  • karththikai-somavarathin-sirappu

    தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாகும். கார்த்திகையில் சுப காரியங்கள் நடத்துவது சிறப்பு. விரதங்கள் கடை பிடிக்கவும் கார்த்திகை மாதம் உகந்ததாகும். சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகள் ஈஸ்வரனுக்கு மிகவும் உகந்த நாளாகும். சோகங்களைப் போக்கி சுகங்களை தரவல்லது. கார்த்திகை சோமவார விரதமாகும். கார்த்திகை மாத சுக்ல பட்ச அஷ்டமி திதியில் தோன்றியவர் சோமன் எனக்கூடிய சந்திரன்.  சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.

    கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘

     

     

    சோம வார விரதம்:

    தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்ட சோமன் என்னும் சந்திரன். அவர்களுள் – ரோகினியை மட்டுமே மிகப்பற்றுதல் கொண்டிருந்தான். இதுகண்டு மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். 

    தட்சாதிபதியும் சந்திரனை அழைத்து புத்திமதிகள் கூறினார். ஆனால் சந்திரன் அவரது அறிவுரைகளை ஏற்காததால் அவர் சந்திரனை கடுமையாக சபித்துவிட்டார். இதனால் பெரும் வருத்த முற்ற சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைப்பிடித்துத்தான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான். கார்த்திகை மாத சோம வாரத்தில்தான், சந்திரனை காக்கும்பொருட்டு சிவன் தன் தலை முடியில் அமர்த்தி கொண்டார். அப்படியமர்ந்து கொண்ட சந்திரன் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைத்தான்.

    இறைவா! சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்’ என்று வரம் கேட்டான். அவ்வாறு வரம் அளித்து அருளினார் ஈசன். இந்த சோமவார விரத்தத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் என புராணங்கள் போற்றுகின்றன.

    இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் இரவில் பால், பழம் மட்டும் உண்ணலாம். அதுவும் செய்ய இயலாதவர்கள் மதியத்திற்கு பின்பு உணவருந்தலாம். அல்லது இரவில் சாப்பிடலாம். ஆனால் அந்த நாளில் ஒரு வேளையேனும் உணவருந்தாமல் இருப்பது நன்மை பயக்கும்.

    இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், நோய் நொடிகள் அண்டாது என்று கூறப்படுகிறது. கார்த்திகை சோமவார தினத்தில் சிவனையும் விஷ்ணவையும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபாடு செய்தால் லஷ்மி கடாட்சம் உண்டாகும்.

  • 2017-11-15-06-57-23

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, நேர ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக திருமலை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ இன்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் விதமாக, நேர ஒதுக்கீடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகக் கூறினார். இதற்காக திருமலையில் 29 இடங்களில் 150 கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு இலவசமாக தரிசனத்திற்காண நேரம் குறித்து பதிவு செய்யப்பட்ட டொக்கன் வழங்கப்படும் என்றும் இந்த டோக்கன் பெற்ற பக்தர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், வைகுண்டத்திற்குள் அனுமதிக்கபட்டு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

  • 2017-11-15-06-24-21

    சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி நவம்பர் 16 ஆம் தேதி திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் டிசம்பர் 19 -ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர். இதையொட்டி, விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. பந்தல் கால் முகூர்த்தம் நடைபெற்றது முதல் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

  • 2017-11-15-06-11-23

    திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. நவம்பர் 15 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு இந்த கொடியேற்றம் நடைபெறும். காலையில் கொடியேற்றம் முடிந்ததும், பவானி தாயார் அலங்காரத்துடன் வீதிகளில் பவனி வந்தார். முன்னதாக வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு முன்தினம் கோயிலில் லட்ச குங்குமார்ச்சனை நடத்துவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டு அலங்கரித்து மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். அதன் பின்னர் பட்டாச்சாரியார்கள் குழுவினர் தாயாருக்கு எதிரில் இருபுறமும் அமர்ந்து காலை 8.30 மணிக்கு லட்ச குங்குமார்ச்சனையைத் தொடங்கினர். காலை 10.30 மணிக்கு குங்குமார்ச்சனை நிறைவு பெற்றது. பிரம்மோற்சவம் எவ்வித தடங்கலும் இல்லாமல் சிறப்பாக நடைபெற செவ்வாய்க்கிழமை மாலை நவதானியங்களை முளைவிடும் நிகழ்ச்சியான அங்குரார்பணம் நடைபெற்றது. இதையொட்டி ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக்சேனர் தலைமையில் பட்டாச்சார்யார்கள் குழு திருச்சானூரில் உள்ள நந்தவனத்துக்குச் சென்று அங்கிருந்து புற்று மண்ணை எடுத்து வந்தனர். அம்மண்ணை கோயில் மண்டபத்தில் வைத்து அதன் மூலம் பூதேவியின் உருவத்தை வடிவமைத்தனர். அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து மண்ணை எடுத்து அதை பாலிகைகளில் வைத்து அதில் அர்ச்சகர்கள் நவதானியங்களை முளைவிட்டனர்.

  • pirammahaththi-thosham

    பிரம்மஹத்தி தோஷம் !

    பிரம்மத்தினை உணர்ந்தவரை கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ உண்டாகும் தோஷம் பிரம்மஹத்தி தோஷம் ஆகும். கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று. பிராமணர் என்பவர் பிறப்பால் ஏற்படும் உயர்வு நிலை ஆகாது. பிரம்மம் ஆகிய கடவுளை உணர்ந்தவர் எவரோ அவரே பிராமணர் ஆவார். ராவணனை ராமபிரான்கொன்றதால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதே போல் எந்த ஒரு உயிருக்கும் தொல்லைகள் தரவும் நமக்கு உரிமை கிடையாது. அவ்வாறு நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் தோஷமாக மாறும் என்பது திண்ணம்.

     

    பிரம்ம ஹத்தி தோஷம் பரிகாரம்!
    பிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர் கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.

    இதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது.
    கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌  ராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை

    பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

    ஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.

     ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும். 
    இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்திரன் மற்றும் வரகுண பாண்டியன் போன்றோரும் சிவ பெருமானை வணங்கியே தங்களின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிக் கொண்டனர் என்பதை புராணங்கள் தெளிவாக உரைக்கின்றன.

     

     

     

     

  • oru-alayam-30-aiyiram-silaigal

     

    நாகங்களோடு தொடர்புடைய பல ஆலயங்கள், ஊர்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிலும் பல இருக்கின்றன. தமிழகத்தில் நாகத்தீவு, நாகப்பட்டினம், நாகர்கோவில், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட ஊர்கள், நாகங்களின் பெயர்களை பரப்புரை செய்வதாக அமைந்துள்ளன. ஒரு சில இங்கே இரண்டு நாகர் ஆலயங்களைப் பற்றி பார்க்கலாம்.

    கேரள மாநிலத்தில் அதிக அளவில் நாக வழிபாடு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு பதினைந்தாயிரம் சர்ப்பக்காவுகள், அதாவது நாகக் கோவில்கள் இருந்திருக்கின்றன என்ற தகவல் அதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது. அதிலும் மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன்மேக்கோடு போன்ற இடங்கள் இந்திய அளவில் பிரபலமான நாகர் ஆலயங்கள் ஆகும்.

    இதில் மன்னார்சாலை கேரள மாநிலத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சர்ப்பக்காவு நாகராஜா ஆலயம், பக்தர்களிடையே நாடு முழுவதும் பெயர் பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாக தேவதைகளின் சிலைகளை, பாதையின் இருபுறமும் மற்றும் மரத்தடிகளிலும் காணலாம். இந்தக் கோவில் அதிக சிலைகள் கொண்ட கோவில்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

     கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோவில். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தூரத்திலும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.

     8 ஆயிரம் ஆண்டு பழைய சிலை

     சக்தி தேவியின் அவயங்கள் விழுந்த இடங்களில் எல்லாம் சக்தி பீடங்கள் உருவானதாக புராணங்கள் நமக்குச் சொல்கின்றன. அந்த வகையில் சக்திதேவியின் இடுப்பெலும்பு விழுந்ததாக குறிப்பிடப்படும் இடம், இலங்கையின் யாழ்ப்பாணம். அங்கு அமைந்துள்ள நாகபூசனி அம்மன் கோவில் பிரசித்தி பெற்று திகழ்கிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்து தலை நாகர் சிலை சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. நாகபூசனி அம்மன் கோவில் பழமையானதாக இருந்தாலும், தற்போது புணரமைக்கப்பட்டு பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை தரும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறது. பொதுவாக அனைத்து தோஷங்களையும் நீக்கும் நாகபூசனி அம்மன், நாகதோஷங்களை நீக்குவதில் பிரசித்திப் பெற்றவள் என்கிறார்கள், இங்கு தவறாது வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்கள்.

    திருமணம் ஆகாதவர்கள், திருமணம் தள்ளிப்போகிறவர்கள், கடன் பிரச்சினை இருப்பவர்கள் என அனைவரும் வந்து வழிபடும் தலமாக உள்ளது இந்தக் கோவில்.

  • nimmathi-tharum-neeradal

    ஒரு காலத்தில் வான் நதியாக இருந்த கங்கையை,பகீரத முனிவர் தன் தவ வலிமையால் பூமிக்கு வரும் படி அழைத்தார்.ஆனால் அவரிடம் கங்கா தேவி,எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு,எல்லாரும் அதனை என்னிடம் கொண்டு வந்து] சேர்ப்பார்கள்.எனவே நான் வரமாட்டேன் என்று தயக்கத்துடன் மறுத்தாள்.

    அதற்கு பகீரத முனிவர்,நீ பாவம் செய்பவர்களை மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறாய்.ஆனால் உன்னிடம் வந்து ஏராளமான மகான்களும் நீராடுவார்களே  என்பதை  ஏன்  மறந்து விட்டாய்?.அதன் மூலம் நீ எப்போதுமே சுத்தமாகவே இருப்பாய் என்று கூறினார்.இதையடுத்து மகிழ்ச்சியோடு பூலோகம் வந்தாள் கங்காதேவி.

     

    வட திசையில் மட்டுமே ஓடி வந்த  கங்காதேவி,தென்திசை பக்தர்களுக்கும் அருள்பாலிக்கும் விதமாக வருடத்தில் ஐப்பசி மாதத்தில் மட்டும் மயிலாடுதுறை  மயூரநாதர் ஆலயத்தின் அருகில் ஓடும் காவிரியின் துலா  கட்டத்தில் நீராடினால்,பாவங்கள் நீங்கும்.

    முக்தி கிடைக்கும் என்பது  நம்பிக்கை. அந்த மாதத்தில் மட்டும் அங்கு ஏராளமானவர்கள் குவிவார்கள்.ஐப்பசி மாதம் கடைசி நாளில் நடைபெறுவது கடைமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது.பிற நாட்களை  விட கடைசி நாளன்று துலா கட்டத்தில் நீராடுவது சிறப்பு தருவதாகும்.

    காவிரி துலா கட்டத்தில் நீராட  மாற்றுத் திறனாளியாக  இருந்த  ஒருவருக்கும் ஆவல் பிறந்தது.அவர் வந்து சேர்வதற்குள் ஐப்பசி மாதம்  முடிந்து கார்த்திகை முதல் நாள் பிறந்து விட்டது.தன்னுடைய இயலாமையை எண்ணி  வருந்திய அவர்,சிவ பெருமானை  நினைத்து மனமுருக வேண்டினார்.அப்போது அங்கு ஒரு அசரீரி கேட்டது.நீ இப்போது நீராடு உன்னுடைய பாவங்களும் கூட விலகும்.உனக்கும் முக்தி கிடைக்கும்என்றது.கங்காதேவியும்,கார்த்திகை முதல் நாள் வரை,காவேரி துலா கட்டத்தில் இருந்து மாற்றுத்திறனாளிக்கும் அருள்புரிந்தாள். கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல் நாள்)முடவன் முழுக்கு என்கின்றனர்.

  • mangadu-sukkiran-thalam

     

    ‘‘சுக்கிர தசைய்யா அவருக்கு. அதான் சக்கைப்போடு போடறாரு’’ என்று சொல்வார்கள். ஆம், சுக்கிரனுடைய அருட்பார்வை குடிசைவாசியையும் குபேரனாக்கும். ஆய கலைகளுக்கும் அதிபதியே சுக்கிரன்தான். கலைத்துறையில் வெற்றி பெற இவர் பார்வை போதும். அழகையும், வசீகரத்தையும், செல்வ வளத்தையும் அருள்வதில் நிகரற்றவர். அந்த சுக்கிரனுக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலமே மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில். 

    திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதும், சக்ரவர்த்தியின் குரு சுக்கிராச்சாரியார், மன்னனைத் தடுத்ததும், முடிவில் மன்னனின் மனதை மாற்ற முடியாததால் தானே வண்டாக உருவெடுத்து தானமளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நீர் வார்க்கும் கெண்டியின் வாயை அடைத்துக் கொண்டதும், வாமனனான திருமால் ஒரு தர்ப்பைப் புல்லால் அந்த வாயைக் குத்த, உள்ளே வண்டுருவில் இருந்த சுக்கிராச்சாரியார் பார்வையிழந்ததும் புராண சம்பவங்கள்.

    மூன்றடி மண் கேட்ட திருமால் மூவுலகையும் அளந்தார். இதற்குப் பிறகு  சுக்கிராச்சாரியார் தன் பார்வை மீள, திருமாலை பிரார்த்தித்துக் கொண்டார். பெருமாளும், ‘மாங்காடு தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் தவமிருக்கும் பார்வதி தேவிக்கு தரிசனம் கொடுக்க ஈசன் அங்கு வருவார். அப்போது அவரை தரிசித்து இழந்த பார்வையை பெறலாம்,’’ என்று அருளினார். அதன்படியே சுக்கிராச்சாரியார் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அனுதினமும் பூஜிக்க, பார்வதிதேவியை மணம் புரிய அங்கே தோன்றிய ஈசன், சுக்கிராச்சாரியாருக்கும் அருளி அவர் பார்வையை மீட்டுக் கொடுத்தார். 

    அத்தகைய சுக்கிராச்சாரியார் பூஜித்த இத்தலத்தை தரிசிப்பவர்களுக்கு சுக்கிரனின் பூரண அருள் கிட்டும். சுக்கிராச்சாரியார் பூஜித்ததால் இறைவனை தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைத்தனர். பார்வை குறைபாடுள்ளோர், ஏன், பார்வை இழந்தவரும்கூட வெள்ளீஸ்வரரை அகக்கண்களால் தரிசித்து, மீண்டும் வந்து  புறக்கண்களால் தரிசிக்கும் பாக்கியத்தை பெறுகின்றனர்! ஐந்து வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இத்தலம் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு வெகு அருகில் உள்ளது.