Blog

  • srivanchiyam-karthikai-nayirukalil-athikalai-thirthavariyum-ursavamum

    திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்தில் அமைந்துள்ள பரம பவித்ரமான சிவத்தலம் ஸ்ரீவாஞ்சியம். காசிக்குச் சமமாகப் போற்றப்படும் ஆறு தலங்களுள் முதன்மையானது. வியாசர் வடமொழியில் இயற்றியருளிய ஸ்காந்த புராணம்; பிரம்மாண்ட புராணம் ஆகியவை இத்தலத்தின் சீர்மையினைப் பறைசாற்றுகின்றன. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய மூர்த்தியான சிவபரம்பொருள் இத்தலத்தில் ஸ்ரீவாஞ்சிநாதர் எனும் அற்புதத் திருநாமம் கொண்டு எழுந்தருளியுள்ளார். அம்பிகையின் திருநாமம் மங்களாம்பிகை.

    எண்ணற்ற தேவர்களும் தெய்வங்களும் இத்தலத்துறையும் சிவமூர்த்தியைப் போற்றித் துதித்து உய்வு பெற்றுள்ளனர். எமதர்மர் பேரருள் பெற்ற தலமாகவும் திகழ்வதால் இங்கு இவரே சுவாமிக்கும் உமையம்மைக்கும் வாகனத் திருத்தொண்டு புரிந்து வருகின்றார், மேலும் இவருக்கு இத்தலத்தில் தனிச்சன்னிதியும் உண்டு. இவரை வணங்கிய பின்னரே மூல மூர்த்தியை வழிபடுதல் மரபு. நால்வர் பெருமக்கள், அருணகிரிநாதர்; வள்ளலார் ஆகியோரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது இத்தலம்.

       

    பிற சிவத்தலங்களைப் போன்று ஸ்ரீவாஞ்சிய தரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்கப் பெறுவதன்று. அதீத சக்தி பொருந்திய பரிகாரத் தலமாகத் திகழ்வதால் ஆன்மாக்களின் பன்னெடுங்கால கர்மவினைப் பயன்கள் கடும் பிரயத்தனமின்றி இத்தலத்தினை அண்ட விடுவதில்லை. தரிசிக்க விழையும் அன்பர்களுக்கும் ஏதேனும் இடர்களும் சோதனைகளும் வந்த வண்ணமிருக்கும். இது ஏராளமான அன்பர்களின் கண்கூடான அனுபவம். நாயன்மார்களையே சுவாமி சோதித்தன்றோ ஆட்கொண்டருளினார், நாம் மட்டும் விதிவிலக்காகி விடுவோமா என்ன!

    இருப்பினும் இறைச் சோதனைகள் அடியவர்களின் பக்தியையும் வைராக்யத்தையும் உறுதிப்படுத்தவே நடந்தேறுகின்றன எனும் புரிதல் மிக அவசியமானது. ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானின் திருவடிகளையே உபாயமாகப் பற்றி, எவ்விதமாயினும் தரிசித்தே தீருவது என்று உள்ள உறுதியுடன் பிரயத்தனம் மேற்கொள்ளும் அடியவர்களுக்கு, கருணைப் பெருங்கடலான ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமான் பெரிதும் திருவுள்ளம் உவந்தருளித் திவ்ய தரிசனமும் தந்தருள்வார் என்பது தெளிவு.

     

    இத்தல தீர்த்தமான குப்த கங்கை புண்ணியங்களின் உறைவிடமாகத் திகழ்வது. சாம்போப புராணம் இத்தீர்த்தத்தின் பிரபாவத்தை விரிவாகப் பேசுகிறது. கார்த்திகை மாத ஞாயிறுகளில் இத்தீர்த்தத்தில் மூழ்கியெழுவது கற்பகோடிப் பிறவிகளின் கழுவாயற்ற கொடிய பாவங்களையும் அழித்தொழிக்க வல்லது என்று சாத்திரங்கள் அறுதியிடுகின்றன. அப்புண்ணிய தினங்களில் அதிகாலையில் சுமார் 4:30 மணி அளவில் சுவாமி திருச்சன்னிதியினின்றும் வெளிப்பட்டருளி குப்த கங்கைக்கு எழுந்தருள்வார்.

    பக்தர்கள் முன்னமே தங்கள் இல்லங்களில் நீராடி முடித்துப் பின்னர் திருக்குளத்துக்கு அருகில் புண்ணிய நீராடத் தயார் நிலையில் இருப்பர். சுவாமி தீர்த்தவாரி கண்டருளும் அச்சமயத்திலேயே அடியவர்களும் திருக்குளத்தில் தீர்த்தமாடிப் பிறவிப் பயன் எய்துவர். குறிப்பாக கார்த்திகை மாத இறுதி ஞாயிறன்று நடந்தேறும் விழா கூடுதல் விசேடமானது. பல்லாயிரக் கணக்கானோர் இதனைத் தரிசிக்கக் கூடுவர்.

    இவ்வருடம் பின்வரும் தேதிகளில் வருகின்றது (நவம்பர் 19, 26; டிசம்பர் 3, 10). மற்ற ஞாயிறுகளில் பங்கேற்க இயலாது போனாலும் இறுதி ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 10ஆம் தேதியன்று) இவ்வுற்சவத்தைத் தரிசித்தும் பங்கேற்றும் ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானின் திருவருளால் வினைகள் நீங்கப் பெற்றுய்வு பெறுவோம்!!!

     

  • 2017-11-16-23-32-46

    சபரிமலைக்கு ஆண்டுதோறும் மாலையணிந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. நாடி வரும் பக்தர்களுக்குக் கோடி நன்மைகளை வாரி வழங்குபவர் அன்னதானப் பிரபு, அச்சன் கோயில் அரசன், ஐயப்ப சுவாமி…. ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளிலிருந்தே ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவது ஐயப்ப பக்தர்களின் வழக்கம். இந்த வருடமும் நவம்பர் 15 ஆம் தேதி நடைதிறக்கப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசிக்க கன்னிசாமிகள் தொடங்கி, பல வருடங்களாக சபரிமலைக்குச் சென்று திரும்பும் குருசாமிகள் வரை லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணியத் தொடங்கியுள்ளனர். புதிதாக மாலை அணியும் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம் …
    சபரிமலைக்கு மாலை அணிய விரும்புபவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கவேண்டும்.
    விரதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக முத்திரை மாலையான 108 மணிகள் கொண்ட துளசிமணி மாலையை வாங்கி, ஏதேனும் ஒரு கோயிலில், குருஸ்வாமியின் திருக்கரங்களால், அணிந்து கொள்ள வேண்டும்.
    குருஸ்வாமி இல்லாத பட்சத்தில் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று தட்சணை கொடுத்து மாலை அணிந்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளலாம். அணியும் முன், அந்த மாலையை, பூஜையறையில் புனிதமான பசும்பாலில் அமிழ்த்தி ஊறவைக்க வேண்டும். சபரிமலைக்கு மாலை அணிந்துகொள்ளும் சாமிகள் கறுப்பு நிற. அரைஞாண் கயிறு, கையிலும் கழுத்திலும் கறுப்பு நிறக் கயிறு ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. கறுப்பு, நீலம், காவி, பச்சைநிறத்தில் அமைந்த மேல் ஆடைகளையும் வேஷ்டிகளையும் உடுத்தலாம். மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள். ஐயப்பனை மனதார நினைத்து, மாலை அணிந்த பின் 48 நாட்கள் கடுமையான பிரம்மசர்ய விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம் என்பதால், தினமும் காலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனைத் தொழுது, ‘ஐயப்பன் அஷ்டோத்ரம்’ படித்துவர வேண்டும். வீட்டின் அருகில் நடக்கும் ஐயப்ப பூஜைகளில் கலந்துகொண்டு சேவை செய்யலாம். ‘அன்னதானம்’ தரும் நிகழ்வுகளிலும் ஐயப்பமார்கள் உதவி செய்வது நல்லதொரு பாக்கியம். மாலை அணிந்த எந்த பக்தர்கள் வீட்டிலும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது. பால், பழம் தரும் பட்சத்தில் சாப்பிடலாம். விரத காலத்தின்போது குடிப்பழக்கம், செருப்பு அணிவது, அசைவம் உண்ணுதல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புகைப்பிடித்தல், சவரம் செய்வது, முடிவெட்டுவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒருவரின் இறப்பு, வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்வுகளில் மாலை அணிந்தவர்களும், மாலை அணிந்தவர்களின் வீட்டில் உள்ள மற்றவர்களும் கலந்துகொள்ளக் கூடாது. இரவில் தூங்கும்போது மெத்தை, தலையணைகளைப் பயன்படுத்தக்கூடாது. மெல்லிய விரிப்புகளைப் பயன்படுத்தலாம். பகல் நேரத்தில் தூங்கக் கூடாது. கன்னிசாமிகள் மலைக்குக் கிளம்பும்போது, அவர்களின் குருசாமியின் தலைமையில் வீட்டிலேயே ஐயப்பனுக்கு பூஜைசெய்து, ஏழைகளுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கவேண்டும். இந்த அன்னதானத்தில் ஐயப்பன் மனிதரூபத்தில் கலந்துகொள்வார் என்பது ஐதீகம். ஒரு மண்டலம் முடித்து, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள், தங்களின் குருசாமியின் தலைமையில் ஏதேனும் ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருந்து, ஐயப்பனை வணங்கி இருமுடிகட்டிக்கொண்டு மலைக்குக் கிளம்பலாம். சபரிமலைக்குக் கிளம்பிச்செல்கையில், எரிமேலியில் ‘பேட்டைத்துள்ளல்’, பம்பையில் விளக்கேற்றி வழிபடும் நிகழ்வு, அன்னதானம் கொடுக்கும் பணிகளில் கன்னிசாமிகள் தவறாமல் பங்குகொள்ள வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்தால் அய்யன் அருள் உண்டு என்றும்! பயம் ஒருபோதும் இல்லை. தரிசனம் முடிந்து வீடு திரும்பிய பின் இருமுடிக்கு பூஜை செய்து அதன் பிறகுதான் மாலை கழற்ற வேண்டும். இடையிலேயே கழற்றக்கூடாது. சாமியே சரணம் ஐய்யப்பா…. சாமியே சரணம் ஐய்யப்பா…. சாமியே சரணம் ஐய்யப்பா….

  • vittel-vilakatruvathu-yetharkaka

     

    நம் கலாச்சாரத்தில் விளக்கு ஏற்றினால், கடவுளை வணங்குவதுபோல, கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கார்த்திகைதீபத்தின்போது வீட்டில் நூற்றுக்கணக்கில் தீபங்கள்ஏற்றிக் கொண்டாடுகிறோம். பூஜைஅறையில் பகல் வேளையிலும் விளக்கு ஏற்றிவைக்கிறோம். அங்கங்கே பெண்கள்ஒன்று சேர்ந்து விளக்கு பூஜையும் செய்கிறார்கள். எதற்காக விளக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?

    நமது கலாச்சாரத்தில் ‘விளக்கு’ என்பது மிக முக்கியமானதாக வணங்கப்பட்டு வந்திருக்கிறது. இது ஏதோ விளக்கை ஏற்றி, சற்று நேரம் எவ்வாறோ ஒளிரட்டும் என்பது போலல்ல. விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட சொல்லப் பட்டிருக்கிறது. இந்த விளக்கை ஏற்றும் போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இப்பொருட்களை உபயோகிக்கும் போது மட்டும் தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளிவட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல், தீபத்தின் இந்த ஒளிவட்டம், அது இருக்கும் விதத்திலேயே, வணக்கத்திற்கு உரியதாக இருக்கிறது.

       

    விளக்கை ஏற்றும் போது விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். நம் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த ஒளிவட்டம் உதவுகிறது. நம்மைப் பாதுகாக்கும் தன்மை எதுவாக இருந்தாலும் அதை வணங்குவது நம் பண்பாடு. எனவேதான், பூஜையறையில், கடவுளை வணங்கும்போது தீபத்தையும் ஏற்றிவணங்குகிறோம். இதனால்தான் மனிதர்கள் சேர்ந்து புழங்கும் இடத்தில், அது வீடாக இருந்தாலும் சரி, தொழில் நடக்கும் இடமாக இருந்தாலும் சரி, அவ்விடத்தில் நாளெல்லாம் விளக்கு ஏற்றி, அதை ஒளிரவிடும் பழக்கம் இருக்கிறது. இவ்விடங்கள் தான் என்றில்லாமல், நீங்கள் படுக்கும் இடம், குழந்தைகள் படிக்கும் இடம், மற்றும் பொதுவாக நீங்கள் அதிக நேரம் இருக்கும் இடங்களில் விளக்கு ஏற்றி வைப்பது நிச்சயம் நல்லது. இது நம் மனநிலைக்கு, நம் ஆரோக்கியத்திற்கு மற்றும் நம் சூட்சும உடலிற்கும் நன்மை பயக்கும்!

  • 2017-11-16-10-34-36

    கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.

    விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
    சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
    அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
    காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
    பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
    குளம்போல எண்ணெய் விட்டு
    கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
    ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
    வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
    மாளிகையில் சோதியுள்ள
    மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
    மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
    சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
    பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
    பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
    கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
    புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
    அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
    சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
    வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
    முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
    உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
    பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
    சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
    கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
    மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
    கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
    தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
    காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
    மங்கள நாயகியை மனங்குளிர
    கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
    அன்னையே அருந்துணையே
    அருகிருந்து காரும் அம்மா
    வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
    தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
    மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:

  • 2017-11-16-10-22-00

    ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.

    கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

  • saibaba-kodutha-aburva-nanayam

     

     

    சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.

    தரிசன வழிபாட்டுக்கே இத்தகைய மகத்துவம் இருக்கும் போது, ஏழேழு உலகங்களையும் ஆட்சி செய்யும் பாபாவிடம் நேரில் பேசி, பழகி, பணிவிடைகள் செய்து, அருள் பெற்றவர்கள் எந்த அளவுக்கு பாக்கியம் செய்தவர்களாக இருந்திருப்பார்கள்? துவாரகமாயி மசூதியில் இருந்து பாபா, இந்த உலகை ஆட்சி செய்த போது, ஏழைகள் பணக்காரர்கள் வித்தியாசமின்றி பலரும் பாபாவிடம் சரண் அடைந்து தங்களை ஒப்படைத்திருந்தனர். பாபாவிடம் உண்மையான பக்தியுடன் இருந்தனர்.

    அவர்களில் லட்சுமிபாயும் ஒருவர். இவர் நல்ல வசதி படைத்தவர். பாபாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவர் இரவில் மசூதியில் தூங்குவதற்கு பாபா அனுமதி அளித்திருந்தார். மசூதியில் பாபாவுக்கு தேவையானவைகளை செய்து கொடுக்கும் சேவையை லட்சுமிபாய் செய்து வந்தார். ஒரு தடவை லட்சுமிபாய் சமைத்து எடுத்து வந்திருந்த உணவை, ஒரு நாய்க்கு எடுத்து பாபா போட்டார்.

    அதைக் கண்டு வேதனை அடைந்த லட்சுமிபாய், ‘‘என்ன பாபா இப்படி செய்து விட்டீர்கள்?’’ என்றார். அதற்கு பாபா, ‘‘என் பசியைப் போன்றதுதான் நாயின் பசியும். எந்த ஒரு உயிரினத்தின் பசியைத் தீர்த்து வைத்தாலும், அது என் பசியைத் தீர்த்து வைத்த மாதிரியாகும். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

     

    பாபா மகாசமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு முன்பு லட்சுமி பாயை அழைத்தார். தன் கப்னி உடைக்குள் கையை விட்டு 2 தடவை நாணயங்களை எடுத்துக் கொடுத்தார். ஒரு தடவை ஐந்து நாணயங்கள் வந்தது. அடுத்த முறை 4 நாணயங்கள் வந்தது. அந்த 9 நாணயங்களையும் அவர் லட்சுமிபாயிடம் கொடுத்தார்.

    பாபாவின் இந்த செய்கை ஒன்பதின் மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. இதனால் அந்த 9 நாணயங்களையும் அவர் பொக்கி‌ஷமாகக் கருதினார். சீரடியில் உள்ள லட்சுமிபாயின் வீட்டில் அந்த 9 நாணயங்களை அவரது வாரிசுகள் பாதுகாத்து வருகிறார்கள். சீரடி செல்லும் பக்தர்களில் பலரும் லட்சுமிபாய் வீட்டுக்கு சென்று அந்த நாணயங்களை பார்த்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    லட்சுமிபாய் போல இன்னொரு பக்தரான ஷாமாவுக்கும் ஒரு தடவை சாய்பாபா, மிகவும் அபூர்வமான செப்பு நாணயம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். அது சாதாரண நாணயமல்ல. நாணயத்தின் ஒரு பக்கம் ராமர், சீதை, லட்சுமணர் உருவங்கள் உள்ளது. மற்றொரு பக்கத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டிருப்பது போன்ற உருவம் உள்ளது.

    தான் உடுத்திருந்த கப்னி உடை மட்டுமே தனக்குரியதாகக் கொண்டு வாழ்ந்த பாபா, தினமும் தனக்கு கிடைக்கும் நாணயங்கள், பொருட்களை அன்றே பக்தர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவார். ஆனால் அந்த அபூர்வ செப்பு நாணயத்தை மட்டும் அவர் யாருக்கும் கொடுக்காமல் நீண்ட நாட்களாக தம்முடனே வைத்திருந்தார்.
    அதை பெறும் பாக்கியம் ஷாமாவுக்கு கிடைத்தது.

  • arathi-yedukka-mukkiya-karanam

    தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

    சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

     

    ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

    மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

    வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தபட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போகும் வழக்கம் உள்ளது. எனவே அதுபோல் ஆரத்தி எடுக்கும்போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக நாம் பெற முடியும்.

     

     

  • kuzhanthai-varam-vendi-thaththareyar-viratham

     

    குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மும்மூர்த்திகளின் ஒரே உருவமாக கருதப்படுபவர் தத்தாத்ரேயர். இவர் மாயையை வென்றவர் என்பதைக் காட்டிலும், மாயையே உருவானவர் என்பதே சரியானதாக இருக்கும். அவரது பல்வேறு சோதனைகளையும் தாண்டியபடி, அவரின் மாயையை உணர்ந்தவர்கள் மட்டுமே அவரது சீடர்களாக இருந்துள்ளனர். அத்ரி- அனுசுயை தம்பதியரின் மகனாக அவதரித்தவர் தத்தாத்ரேயர். இவர் அனுசுயையின் மகனாக கிடைத்தது இறைவனின் திருவிளையாடல்.

    சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தங்களின் மகனாக பிறக்க வேண்டும் என்று அனுசுயை விரதம் இருந்து வந்தார். பதிவிரதையான அவரது தவத்திற்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டிய கட்டாயம் மும்மூர்த்திகளுக்கும் ஏற்பட்டது. இதுபற்றி மும்மூர்த்திகளும், தங்களின் மனைவிகளிடம் கலந்துரையாடினர். அப்போது மும்மூர்த்திகளின் மனைவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர், ‘அனுசுயையின் பதிவிரதத்தை பரிசோதனை செய்து, அதில் அவர் வெற்றி பெற்றால் வரத்தை வழங்குங்கள்’ என்று தெரிவித்தனர்.

    சோதனை ஒன்றை வைக்கும்போது, அதை அனுசுயையால் சமாளிக்க முடியாது என்று அவர்கள் நினைத்தனர். இதையடுத்து மும்மூர்த்திகளும் முனிவர் வேடம் பூண்டு அனுசுயையின் குடிலுக்குச் சென்றனர். அந்த நேரத்தில் அத்ரி முனிவர் தவத்தில் இருந்தார். தன் இல்லம் தேடி வந்தவர்களுக்கு உணவளித்து உபசரிப்பதே, நல்ல இல்லாளின் கடமை என்பதை உணர்ந்திருந்த அனுசுயை, அவர்களுக்கான உணவுகளை தயார் செய்தார்.

     பின்னர் உணவுகளை அவர்களுக்கு பரிமாற தொடங்கியபோது, முனிவர் வேடத்தில் இருந்த மும்மூர்த்திகளும், ‘நிர்வாண நிலையில் உணவு பரிமாறினால்தான் உணவை ஏற்றுக்கொள்வோம்’ என்றனர்.

      

     

     உடனே அனுசுயை, தன் கணவரின் கமண்டலத்தை எடுத்து அதில் இருந்து சிறிது நீரை கையில் ஊற்றி, முனிவர் வேடத்தில் இருந்த மும்மூர்த்திகளின் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் குழந்தைகளாக மாறிப்போனார்கள். பின்னர் அவர்களுக்கு உணவு பரிமாறி, மூவரையும் தொட்டிலில் தூங்கச் செய்தார்.

     இந்த நிலையில் அனுசுயையின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், வெகு நேரமாகியும் திரும்பாததால், முப்பெரும் தேவியர்கள் மனம் கலங்கினர். என்ன நடந்தது? என்பதை அறிவதற்காக அனுசுயையின் குடிலை நோக்கி வந்தனர்.

    அங்கு மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அனுசுயையின் கற்பை எண்ணி மலைத்தனர். இதையடுத்து அனுசுயையிடம் சென்ற அவர்கள், ‘தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்டனர். இதையடுத்து அனுசுயை, மும்மூர்த்திகளையும் பழைய உருவுக்கு மாற்றினார்.

     பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயை- அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டனர். அதற்கு அனுசுயை, ‘இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்’ என்ற வரத்தை தரும்படி இறைவனிடம் வேண்டினர்.

    இறைவனும் அவ்வாறே வரம் அளித்தார். அதைத் தொடர்ந்து பல காலம் தவத்தில் ஈடுபட்டிருந்த அத்ரி- அனுசுயை தம்பதியருக்கு மும்மூர்த்திகளின் அம்சமாக, தத்தாத்ரேயர் பிறந்தார். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர்.

    குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

     

  • 2017-11-15-14-58-33

    மண்டல பூஜையையொட்டி சபரி மலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக இன்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோவில் நடையை திறந்து, பூஜை செய்தார். நாளை முதல் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 3.30 மணி முதல் காலை 11.30 மணி வரை சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு நடை அடை‌க்க‌ப்பட்டு, மகர ‌விள‌க்கு பூஜை‌க்காக டிச‌ம்ப‌ர் 30-ம் தேதி ‌மீ‌ண்டு‌ம் நடை ‌திற‌க்க‌ப்படு‌கிறது.

  • aiyappanin-eru-kalgalil-thundu-katiyierupathu-yen

    ஐயப்பன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

    இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.

    ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.

    மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.

    ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை. பொன்ணம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ ஐயப்பன் அன்று காந்தமலையில் இருந்து சபரிமலைக்கு வருவதாக ஐதீகம்.