Blog

  • adiyil-matum-nadaisaththum-amman-kovil

     

    சாயல்குடி அருகே எஸ். தரைக்குடியில் பழமை வாய்ந்த உமைய நாயகி அம்மன் கோயில் உள்ளது. நிழல்தரும் மரங்கள் கோயிலை சுற்றி பூஞ்சோலையாக உள்ளது. இரண்டு புறமும் 22 அடி உயரமுள்ள முனீஸ்வரர் காவல் தெய்வமாக கம்பீரமாக காட்சி தருகிறார்.  ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் நாள் கோயில் நடைசாத்தப்பட்டு, ஆவணி முதல் தேதியன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனின் முதல் நாள் பார்வை, காட்சிதரும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. பொதுவாக எல்லா அம்மன் கோயில்களிலும் ஆடி முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கூழ் காய்ச்சியும், பொங்கல் வைத்தும் வழிபாடு செய்வர். இக்கோயிலில் மட்டும் இதற்கு விதிவிலக்காக நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். மூலவரான உமையநாகிய அம்மன் சன்னதியில் மேற்கூரை எதுவும் கிடையாது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பொன்னு பெருமாள் கூறுகையில், ஆடி மாதம் முழுவதும் அம்மன் இங்கிருந்து, நடைபயணமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று, அங்குள்ள அக்னிதீர்த்தக்கடலில் தீர்த்தமாடி விட்டு ஆவணி முதல் தேதியன்று மீண்டும் கோயிலுக்கு திரும்பி வருவதாக ஐதீகம். இதுபோன்ற நடைமுறை காலந்தொட்டு பின்பற்றப்படுகிறது. குலதெய்வமாக கொண்ட வெளியூரில் உள்ள பக்தர்கள் ஆயிரக்கணக்கில் முதல்நாள் பார்வை நிகழ்ச்சியில் பங்கேற்க வருகின்றனர். ஆவணி கடைசி புதன்கிழமையன்று வடமாடு எருதுகட்டு விழா நடக்கும், என்றார்.

     

  • karthikai-amavasaiyin-sirappu

     

    நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், திருவிசநல்லூர் கோவிலில் வந்து வழிபட சாபம் பாவம் நீங்கும்.

    கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசநல்லூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம் பாவம் நீங்கும்.

    இத்தல ஈசனின் திருநாமம் சிவயோக நாத சுவாமி என்பதாகும். சுயம்பு மூர்த்தியான இவர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தல விருட்சங்களாக அரசு, வில்வம் உள்ளன. சம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது.

    திருவிசநல்லூர் பகுதியில் சிறந்த சிவ பக்தரான மகான் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் என்பவர், சவுந்தர நாயகி சமேத சிவயோகிநாத சுவாமி திருக்கோவிலில் தினமும் காலையில் வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் கூட தவறியதில்லை. ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினம் அன்று இவர் தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

    அன்று காலையில் சிரார்த்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர், வெங்கடேச தீட்சிதரின் இல்லத்து வாசலுக்கு வந்து, தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது தருமாறு வேண்டினான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய மகான், இல்லத்தில் சிரார்த்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளித்தார்.

    அவரது செயலைக் கண்ட அந்தணர்கள், ‘இது சாஸ்திர விரோதம். இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்து, அவரை குடும்பத்துடன் நீக்கி வைக்க வேண்டும்’ என்று கூறியதுடன், சிரார்த்தம் செய்யவும் மறுத்து விட்டனர்.

    ‘வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள், அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே!’ என்று மகான் வருந்தினார். இறைவனை நினைத்து மனமுருகி ‘கங்காஷ்டகம்’ என்னும் துதி பாடினார். அவர் பாடி முடித்ததும், அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடானது.

     

    இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டு, அந்த கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அக்கிணற்றிலேயே நிலைத்தது என்பது ஐதீகம். அதைத் தொடர்ந்து திதி கொடுக்கப்பட்டது.

    காலையில் நடந்த இந்த நிகழ்வுகளின் காரணமான, மகானால் திருவிசநல்லூர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. அன்று மாலை திருவிசநல்லூர் ஈசன் கருவறையில் மூர்த்தங்களிடம், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில், ‘இன்று மதியம் ஸ்ரீதர அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று அந்தத் துண்டுச் சீட்டில் எழுதியிருந்தது.

    ஏழையாக வந்து, அய்யாவாள் வீட்டில் திதி உணவை உண்டது சிவபெருமானே என்றுணர்ந்த அனைவரும், ஸ்ரீதர அய்யாவாளை போற்றிப் புகழ்ந்தனர்.

    இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச மடத்தில் நிகழ்கிறது.

    மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில், ‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!. இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். மகான் வசித்த இல்லம் மடமாக மாற்றப்பட்டுள்ளது.

    இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று தான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு, அங்கிருந்து தீர்த்தம் கொணர்ந்து கிணற்றில் விடுவார்கள். 

    பிறகு கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரை மிகுந்துகொண்டு நீர் மட்டம் உயர்ந்து வருமாம். அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாது. இந்த ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று கார்த்திகை அமாவாசையன்று நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.

    கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது. 

     

  • naracimmar-katchiyalitha-edam-solingar

     

    வேலூர் மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் விசேஷமான திருத்தலம். மலையின் மீது அமர்ந்து நம் மலை போலான துக்கங்களை பனி போல் ஆக்குகிறார் நரசிம்மர்!

    சிறிய மலை பெரியமலை என உண்டு இங்கே! பெரிய மலைக்கு எதிரில் இயற்கை அழகோடு 406 படிகள் அமைந்து அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது யோக ஆஞ்ச நேயர் கோயில். யோக ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம், மற்ற இரு கைகளில் ஜபமாலை உள்ளன.

    சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.பேய் பிசாசு பிடித்தவர் தீராத நோயினால் வருந்துபவர்கள் இம்மலைச் சுனையில் (குளம்) நீராடி, வாயு மைந்தனை வணங்கினால், பூரண குணம் பெறலாம்!

    இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டுதோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை.

    இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து, பார்க்கமுடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

       

    சப்தரிஷிகள்… ஆஞ்சநேயர்!

    வேலூர் – திருத்தணி வழியில் இருக்கிறது சோளிங்கர். சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் செல்லலாம். சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூரில் இருந்து பேருந்து வசதி உண்டு.

    தொண்டை நாட்டு 22 திவ்யதேசங்களில் ஒப்பற்ற திவ்யதேசம் இது. காஞ்சிபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம்! சப்தரிஷிகளுக்காக கோபம் தணிந்து யோக முத்திரையுடன் நரசிம்மர் காட்சியளித்த இடம்.

    சுவாமி உட்கார்ந்திருக்கும் பாறை அடிவாரம் வரை ஒரே மலையைச் சேர்ந்த குன்று என்பது அதிசயம். மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி!

    இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்னை விரைவில் குணமாகிறது.

    பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். விஸ்வாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு வரம் பெற்றாராம். அதேபோல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு அவர்கள் இங்கு தவமிருந்தனர்.

    ராமாவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம், “”இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை” என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ஸ்ரீராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார் என்கிறது ஸ்தல புராணம்.

    கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசித்துப் பூரித்த ஆஞ்ச நேயரிடம், ”நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக!” என அருளினார்!

    அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

     

  • thosham-pokkum-kuliyal

     

    ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கும் தோஷங்களை நீக்குவதற்கு, நாம் அனைவரும் வழிபட வேண்டியது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கோள்களையே. ஜாதக தோஷம் இருப்பவர்கள், தினமும் குளிக்கும் போது, நீரில் சில பொருட்களை கலந்து குளிப்பதன் மூலமாக அந்த தோஷங்களை நீக்கிக்கொள்ள முடியும் என்கிறார்கள். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

     

    சூரிய தோஷம்

    குளிக்கும் தண்ணீரில் சிவப்பு வண்ண மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ சிறிதளவு போட வேண்டும். நான்கு அல்லது ஐந்து குவளை நீரை மொண்டு குளிக்க வேண்டும். அதன்பிறகு சாதாரண தண்ணீரில் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

     

    சந்திர தோஷம்

    ஒரு சிலர் முக அழகுக்காக, தயிரை முகத்தில் பூசிக்கொள்வார்கள். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும், இதைத் தான் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பாக கொஞ்சம் தயிர் எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சந்திரனால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

     

    செவ்வாய் தோஷம்

    திருமணத் தடை ஏற்படுவதற்கு செவ்வாய் முக்கிய காரணமாக இருக்கிறது. செவ்வாய் தோஷத்தால் திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு சிலருக்கு நிறைய பிரச்சினைகள் வந்து சேரலாம். இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் ஒன்று இருக்கிறது. வில்வம் பழக் கொட்டையை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும். நான்கைந்து குவளை நீரை இதுபோல் குளித்துவிட்டு, பிறகு சாதாரண தண்ணீரில் நீராடலாம். இதனால் செவ்வாய் தோஷம் அகலும்.

     

    புதன் தோஷம்

    இந்த தோஷம் நீங்குவதற்கு கடல் நீரோ அல்லது கங்கை நீரோ தேவைப்படும். மஞ்சள் மற்றும் கடுகு ஆகிய இரண்டையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, அதில் தேனை கலக்க வேண்டும். தொடர்ந்து இந்தக் கலவையை சிறிதளவு கடல் நீர் அல்லது கங்கை நீரில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு நாம் குளிக்கும் நீரில் இதனை கலந்துவிட்டு நீராட வேண்டும்.

     

    குரு தோஷம்

    கருப்பு ஏலக்காயை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அதனை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வருவதன் மூலமாக வியாழ பகவான் என்று அழைக்கப்படும் குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

     

    சுக்ர தோஷம்

    பச்சை ஏலக்காயை நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை, நாம் அன்றாடம் குளிக்கும் நீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக சுக்ர தோஷம் விலகும்.

     

    சனி தோஷம்

    கருப்பு எள் வாங்கி அதனை நீரில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் சனி தோஷம் நீங்கப்பெறலாம்.

     

    ராகு-கேது தோஷம்

    அருகம்புல்லை, நீரில் நன்றாக கொதிக்கவைத்து, பின்னர் அதை குளிக்கும் தண்ணீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் ராகு-கேது தோஷம் அகலும்.

  • 2017-11-17-14-06-08

    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது ஒருசிலவற்றை மனதில் கொண்டு நடக்க வேண்டும். ஒரு மண்டலத்திற்கு விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், எப்போதும் மனதை அமைதியாக வைத்து, ஐயப்பனையே நினைத்து, சரணம் சொல்லி வழிபட வேண்டும். மாலை போட்டவர்கள், மெத்தை, தலையணை, போர்வை என்று எதையும் உபயோகிக்கக்கூடாது. வெறும் தரையில், ஒரு துணியை விரித்து மட்டுமே படுக்க வேண்டும். ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள், மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் கோபம் மற்றும் மற்றவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசக்கூடாது. சாந்தமுடன் இருக்க வேண்டியது அவசியம். மாலை போட்டுவிட்டால், விரதம் முடிந்து மாலையை கழற்றும் வரை முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகத்தை வெட்டவோ, அலங்காரம் செய்யவோ, செருப்பு அணியவோ அல்லது வாசனை திரவியங்களை தடவிக் கொள்ளவோ கூடாது. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது, பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் தான் பார்க்க வேண்டும். மேலும் வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மற்ற பெண்களின் தொண்டும், பக்தியும் மிகவும் உயர்வானதும், போற்றக்கூடியதும் ஆகும். ஒருவேளை கழுத்தில் அணிந்திருந்த மாலை அறுந்துவிட்டால், அதை சரிசெய்து மீண்டும் அணிந்து கொள்ளலாம். இதனால் எந்த ஒரு தவறும் இல்லை. மனம் வருந்த வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்றால், அவர்களை காண்பதைத் தவிர்ப்பதோடு, வசதி இருந்தால், அவர்களை தனி அறையில் இருக்குமாறு கூறலாம். இல்லாவிட்டால், மாலை அணிந்திருப்பவர்கள் வெளியிடங்களில் தங்கிக் கொள்வது நல்லது. எப்போதும் மாலைப் போடும் தருணத்தில், அச்சமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருக்கக்கூடாது. ஒருவேளை மனதில் ஏதேனும் குழப்பமோ அல்லது மனம் ஏதேனும் சஞ்சலத்துடன் இருந்தால், மாலைப் போடுவதைத் தள்ளிப் போடுவது நல்லது. இருமுடி கட்டும் நிகழ்ச்சியை மற்ற இடங்களில் வைப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே நடத்துவது நல்லது. இதனால் வீடு மங்களகரமாகவும், தீய சக்திகள் அகன்றும் இருக்கும். மாலை போட்ட பின் மது, புகை, அசைவ உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது ஓர் சிறந்த வழியாக அமையும். உங்கள் குருசாமி சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு இணையானவர். எனவே அவருக்கு பணிவிடை செய்து, ஐயப்பனின் அருளைப் பெறுங்கள். எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும் ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள் யாத்திரையைத் தொடங்கலாம். ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டால், தலைக்கு எண்ணெய் வைக்கவோ அல்லது எண்ணெய் குளியலோ மேற்கொள்ளக்கூடாது. ஐயப்ப பக்தர்கள் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. ஒருவேளை தூங்கினால், மீண்டும் குளித்த பின்னரே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வீட்டைத் தவிர, கடைகளிலோ அல்லது வெளியிடங்களிலோ எங்கும் உண்ணக்கூடாது. மாலை அணிந்தவர்கள், காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்துமுடித்த பின் விபூதி இட்டு, விளக்கு ஏற்றி ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி வணங்க வேண்டும். இதேப் போல் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் குளித்து, காலையில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும்.

  • 2017-11-17-13-42-34

    தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

  • 2017-11-17-13-27-48

    திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று மழை வெளுத்துவாங்கிய நிலையிலும் பத்மாவதித் தாயார் முத்துப்பல்லக்கில் பவனி வர, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்ஸவ விழாவின் 3ம் நாளான இன்று, முத்துப்பல்லக்கு வாகனத்தில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வருடந்தோறும் வெகு விமரிசையாக இந்த பிரம்மோத்ஸவ விழாவானது நடைபெறுவது வழக்கம். இந்தியா முழுவதும் இருந்து, இந்த பிரம்மோத்ஸவ விழாவில் கலந்து கொண்டு, தாயாரைத் தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்ஸவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், 3ம் நாளான இன்று காலை கொட்டும் மழையில் முத்துப்பல்லக்கு வாகனத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாது பங்கேற்று தாயாரை தரிசனம் செய்தனர்.
    இதனைத் தொடர்ந்து இன்று இரவு சிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு காட்சியளிகும் வைபவம் நடைபெறுகிறது.

  • udalai-kadinamaga-valaippathu-than-yogava

     

     

     யோகா என்றாலே பலரும் உடலை வளைத்துச் செய்யும் ஆசனங்கள் என்றே எண்ணுகிறார்கள். யோகா என்பது பல பரிமாணங்கள் கொண்டது. ஆனால், இன்றைய உலகோ, யோகத்தின் உடலளவிலான பரிமாணத்தை மட்டுமே பரைசாற்றுகிறது. யோக முறையில் ஆசனங்களுக்கான முக்கியத்துவம் மிகக் குறைவு. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட யோக சூத்திரங்கள் உள்ளது. அதில் ஒன்றே ஒன்று மட்டும்தான் ஆசனங்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், எப்படியோ, இந்த ஒன்று மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுவிட்டது. இது பல வழிகளில் இன்று உலகம் சென்று கொண்டிருக்கும் திசையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இன்றைய நவீன உலகம், ஆழமான பரிமாணங்களை விடுத்து, மேலோட்டமான நிலைகளை விரும்புவதையே இது காட்டுகிறது. இந்நிலையை மாற்றி, மேலோட்டமான உடலளவிலான கவனத்தில் இருந்து, மனிதர்களை அவர்களின் உள்நோக்கி பயணப்பட வழி செய்ய வேண்டும். சோகத்தில் ஆழ்ந்து, உளச்சோர்வில் உறைந்து போய் எனக்கு பழக்கமில்லை.

    இல்லையெனில் இன்று ‘ஹட யோகா’ என்ற பெயரில் உலகில் சொல்லித் தரப்படும் பயிற்சிகளையும், யோகத்தின் சாரமே இவ்வளவுதான் என்று மக்கள் நிர்ணயித்திருப்பதையும் பார்த்து நான் உறைந்து போயிருப்பேன். இங்கே கற்றுத் தரப்படும் பயிற்சிகள், அந்தச் செயல்முறைகள் வெறும் உடலைப் பற்றியதாகவே இருக்கின்றன. அவற்றின் உயிரோட்டம் தொலைந்து போய், அதுவும் ஏதோ உடற்பயிற்சி போல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் நம் பாரம்பரியத்தில், இப்பயிற்சிகளை வாழும் ஒரு குருவிடம் இருந்து நேராகக் கற்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. அவர் இப்பயிற்சிகளை அதற்கே உரித்தான உயிரோட்டத்துடன் வழங்குவார். இந்த யோக முறைகள் உங்கள் உடலை மிக நாசுக்காக ஊக்குவித்து, அதை முற்றிலும் வேறு நிலையில் செயல்படத் தூண்டிடும். யோகா என்பது, உங்கள் உச்சநிலையை அடைய உதவும் கருவி. ஒவ்வொரு ஆசனாவும், ஒவ்வொரு முத்ராவும், ஒவ்வொரு சுவாசிக்கும் முறையும், யோகத்தின் ஒவ்வொரு அம்சமும் இது ஒன்றை நோக்கித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

  • mamallapuram-sirpangaluku-puvisar-kuriyidu

     

    உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறான பாரம்பரியங்கள், கலாச்சாரங்கள், கட்டட அமைப்புகள் என தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம், காஞ்சிபுரம் பட்டு ஆகியவைகளின் சிறப்பு மற்றும் பாரம்பரியத்தைக் கருதி அவற்றிற்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது. மத்திய அரசின் கீழ் செயல்படும், இதற்கான அலுவலகத்தின் தலைமையகம் சென்னை கிண்டியில் இருக்கிறது.

    இந்த நிலையில் தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று, மாமல்லபுரம் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் மாமல்லபுரம் சிற்பங்கள் என்ற பெயரில், இனி யாருமே சிற்பம் வடிக்க முடியாது. மதுரை மல்லி, தஞ்சாவூர் ஓவியங்கள், காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சிறுமலை வாழை, கோவை வெட் கிரைண்டர் உட்பட 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • karthikai-mathathin-aithigangal

    கார்த்திகை தீபம்

    தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியன் விருச்சிக இராசிக்குள் புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடி அளவே கார்த்திகை மாதமாகும்.

    நம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம்.கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.

    கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

    கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும்ஒரு தீபத் திருநாள் ஆகும்.

    மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் கார்த்திகை பௌர்ணமி!

    கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.

    தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

     

       

    கார்த்திகை மாதத்தின்  ஐதீகங்கள்!

    திருவண்ணாமலை மகா தீபத்தை பார்த்தால்,அவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக இருக்கும் என்பது ஐதீகம்.

    கார்த்திகை மாதம்,பவுர்ணமி திதி அன்று ஒட்டு செடி என்ற நாயிருவி வேரினை பறித்து வந்து நமது விட்டிற்குள் வைத்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும் என்பதால்,கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது,தீபம் தானம் செய்வது,வெங்கல பாத்திரம்,தானியம், பழம் தானம் ஆகியவை செய்தால் நமது வீட்டில் செல்வம் சேரும்.

    கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.மேலும் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

    கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.

    கார்த்திகை மாதம் பவ்ர்ணமிக்கு பின் வரும் சோமவாரம்,அல்லது கார்த்திகை  மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பின் வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

    தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும்.மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.