Blog

  • 20

    சபரிமலையில் இன்றிரவு மாளிகைபுறத்தமன் கோயிலில் குருதி பூஜை, நிறைவடைந்த பிறகு நாளை கோயில் நடை சாத்தப்படுகிறது.
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற வந்த நெய்யபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு மாளிகைபுறத்து கோயிலில் குருதி பூஜை நடக்கிறது. அதன்பின்னர் நாளை முதல் கோயில் நடை சாத்தப்படுகிறது.
    நாளை காலை 6.30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோவில் நடை அடைத்ததும், திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும். இந்தாண்டுக்கான மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை கோயிலின் வருமானம் ரூ. 225 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 2018-01-19-15-30-46

    கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில், புகழ்பெற்ற அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில், தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சமுதாய வேறுபாடுகளைக் களைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அவதரித்த மகான் என்று அய்யா வைகுண்ட சுவாமி நம்பப்படுகிறார். இவருக்கு சுவாமித்தோப்பு, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோயில்கள் உள்ளன. அய்யாவழி என்ற நெறியில் வைகுண்டசுவாமியை வழிபடும் மக்கள், தலைமை பதியான சுவாமித்தோப்பில் தை மாதம் திருவிழா நடத்துகின்றனர். திருவிழாவின் தொடக்கமாக, இன்று அதிகாலையே கோயில் நடை திறக்கப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, வரும் 26-ம் தேதி கலிவேட்டையும், 29-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

  • 22

    சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா வரும் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
    அறுபடை வீடுகளில் நான்காம்படை வீடாக அழைக்கப்படுவது சுவாமிமலை முருகன் கோயில். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த விழா வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து 29 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு சிறிய தேரோட்டமும், 31 ஆம் தேதி தைப்பூச நாளன்று மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், தொடர்ந்து காலை 10 மணிக்கு வெள்ளி மயில் வாகனகத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

  • 2018-01-18-14-21-48

    இழந்த பதவி மீண்டும் கிடைக்க ஆறுமுக கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களும், கிருத்திகை, சஷ்டி திதி ஆகிய நாட்களில் விரதம் இருப்பத உகந்ததது. அதுமட்டுமன்று கந்தசஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் முருகனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யலாம். வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம். வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்றை தினம் எந்த கெட்ட வார்த்தைகளையும் உச்சரிக்க கூடாது. கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம். விரைவில் நல்ல பலன் தருவதைக் காணலாம்.

  • 2018-01-18-13-55-37

    முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால்,அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்த வரே கந்தன் எனப்படும் முருகனாவார்.சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருககடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

  • 2018-01-17-05-11-33

    திருப்பதியைப் போல சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கும் வசதிகள் செய்து தர கேரள அரசு திட்டமிட்டுவருகிறது. இது தொடர்பாக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் திருப்பதிக்கு சென்று பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆராயும். இது தொடர்பாக எல்லா உதவிகளையும் செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உறுதியளித்துள்ளார். நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், சபரிமலையிலும் பக்தர்களுக்கான வசதிகளை எப்படி செய்வது என்பது பற்றி திட்டம் வகுக்கப்படும். சபரிமலை கோயில் வனப்பகுதியில் அமைந்திருப்பதால் அதற்கேற்ப திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

  • 30

    வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா ஜனவரி 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார். இதை தொடர்ந்து மாதந்தோறும் பூசநட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா ஜனவரி 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல்பாராயணமும், 7.30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும், காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. பின்னர் 31-ந் தேதி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு தருமச்சாலை மேடையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா ஆகியோர் முன்னிலையில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. பின்னர் 2-ந் தேதி மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையத்தை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.

  • 2018-01-17-04-59-33

    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தடாக பிரதிஷ்டை விழா ஜனவரி 19 ஆம் தேதி நடக்கிறது.
    16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் கோவில் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் அமைந்து உள்ளது. இந்த கோவிலின் முன்புறம் நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்கும் விதமாக உள்ள தெப்பக்குளம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை புனிதப்படுத்தும் பூஜையாக நரசிம்ம புஷ்கரணிக்கு, தடாக பிரதிஷ்டை விழா நாளை நடக்கிறது. இதையொட்டி ஜனவரி 18 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் நித்யலாராதனம், யஜமான-ஆச்சாரிய வரணம், புண்யாஹவாசனம், பகவத் ப்ராத்தனா, ம்ருத்ஸங்கிரகணம், அங்குரார்ப்பணம், பிரதீசர ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப ஆவாஹணம், கும்ப ரஷ்பந்தனம், பிரதான உக்த ஹோமங்கள், நைவேத்யம் நடக்கிறது. 19 ஆம் தேதி காலை 6.30 மணி முதல் பிரதான உக்த ஹோமங்கள், வேதபாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, கங்கா-நர்மதா-ஸம்யுக்த ஸ்ரீநரசிம்ம புஷ்கரணிக்கு அனைத்து விதமான அபிசேகங்கள், கும்ப தீர்த்தத்தை திருக்குளத்தினுள் சேர்த்தல், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தீர்த்த வலம் வந்து பூஜைகள் நடைபெறுகிறது.

  • 2018-01-14-15-55-12

    தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் சாவித்ரி கௌரி விரதம். சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண்டேயர். விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்…ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் – ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

  • 2018-01-14-15-27-34

    சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தை முதல் தேதி சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் மலை முகட்டில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பான் என்பது ஐதீகம். இதை ஒட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிந்தது. மகரஜோதியை கண்டு பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர். வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை படி பூஜைகள் நடக்க உள்ளன. இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும்.