2018-01-18-13-55-37

முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால்,அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்த வரே கந்தன் எனப்படும் முருகனாவார்.சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருககடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *