இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைப்பெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். ஈலங்கையில் அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து, ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறைமீட்டுச் செல்வார் என்று கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயாக என்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்
Blog
-
5
ரதசப்தமியையொட்டி திருப்பதியில் ஜனவரி 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் வருகிற 24-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. இதையொட்டி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை 7 வாகனங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வருகிறார். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அதனால் வருகிற 24-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. அந்த நாட்களில் அதிமுக்கியத்துவ வி.ஐ.பி.கள் மட்டுமே தரினத்துக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் 24-ந் தேதி அன்று ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமகன், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனங்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. நடைபாதை மார்க்கத்தில் வருபவர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள், ரூ.300 விரைவு தரிசனம் உள்ளிட்டவை வழக்கம் போல் வழங்கப்படும்.
-
2018-01-10-14-37-10
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ளது காலபைரவர் கோயில். இங்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழா விமர்சையாக நடந்தது. விழாவையொட்டி காலை 6 மணி முதல் அஷ்டபைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், தனாகர்சன யாகம், குபேர யாகம், அதிருத்ர யாகம் நடந்தது. காலை 9 மணிக்கு தங்க கவசத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். அதை தொடர்ந்து 64 வகையான அபிஷேகம் 1008 அர்ச்சனைகள், 28 ஆகம பூஜைகள், 1008 அர்ச்னைகள், 64 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா பக்தர்கள் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபட்டனர்.
-
2018-01-09-05-30-17
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் பத்ர தீபத் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் தினமும் வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் , அபிஷேக ஆராதனைகள், திருமூலமகாலிங்கம் ஸ்ரீ காந்திமதி அம்பாள் மூலவர் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஜனவரி 15 ஆம் தேதி மாலை 6.30 க்கு மேல் 7.15 மணிக்குள் சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், ஜனவரி 16 மாலை 6 மணிக்கு சுவாமி கோயில், ஸ்ரீகாந்திமதி அம்பாள் கோயில் உள் சன்னதிகளில் வெளிப் பிரகாரங்கள், ஸ்ரீஆறுமுகநயினார் திருக்கோயில் உள்சன்னதியில் வெளிப் பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்ர தீபங்கள் ஏற்றப்படும்.
அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீஆறுமுகநயினார் சன்னதியில் மகேஸ்வர பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறும் என்ற கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. -
2018-01-09-05-20-22
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 14 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். அவருக்கு ஸ்ரீசடாரி கொண்டு வரப்பட்டு, 16 கால் மண்டபத்தில் ராஜ்ய சன்யாசிகளுக்கு வழங்கப்படும் பஞ்ச முத்திரை மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் ராஜகோபுரத்தின் அருகில் அற நிலையத்துறை உதவி ஆணையர், பட்டாச்சாரியர்கள் ஆகியோர் மடாதிபதிகளுக்கு வழங்கும் பூரண கும்ப மரியாதையை ஜயேந்திரருக்கு அளித்து வரவேற்றனர். இதையடுத்து கோயிலுக்கு உள்ளே சென்று தாயார் சந்நிதியில் தரிசனம் செய்தார். அதன்பிறகு, வரதராஜ பெருமாள் சந்நிதியில் வழிபட்டார். முன்னதாக, 16 கால் மண்டபத்திலிருந்து ராஜகோபுரம் வரை நடந்து வந்தார். ஜயேந்திரரை அவரது சீடர்கள் பல்லக்கில் தூக்கிச் சென்று தரிசனம் செய்வித்தனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்றனர்.
-
2018-01-08-15-16-35
பொய் சொன்னால் மனிதனுக்கு என்னாகும் என்பதை உணர்த்தும் வகையில் திருமால் ஒரு லீலையை நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லும் பொறுப்பை ஏற்றார். விளøயாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், போட்டியில் சிவன் வென்றதாகக் கூறிவிட்டார். தன் சகோதரரே இப்படி சொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி. கடவுளாகவே இருந்தாலும் பொய் பேசினால், அவர் அதற்குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும் என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்பு வடிவம் மறையும், என்றாள். அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்மநாபர் என்னும் திருநாமத்துடன் சயனகோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு. விநாயகரும், முருகனும் சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது கேதுவுக்குரியதாக திகழ்கிறது. பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர் களுக்கு ஆசியும் அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்புடைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை வேண்டலாம்.
-
2018-01-08-15-01-02
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை அன்று பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக சன்னிதானத்தில் முன் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
அன்றைய தினம் பிற்பகல் 1.47 மணிக்கு மகர சங்கிரம பூஜை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். முன்னதாக காலை 10.30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகர சங்கிரம பூஜைக்காக கோவில் வளாகம் சுத்தம் செய்யப்படும்.மகர விளக்கு பூஜை அன்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பம்பையில் இருந்து ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படுவதையொட்டி அன்றைய தினம் பிற்பகல் முதல் மகர ஜோதி தரிசனம் வரை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த சமயத்தில் மலை ஏற தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜோதி தரிசனத்திற்கு பின் மாலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் உச்ச பூஜைக்கு பின் திருவாபரண வருகைக்காக பதினெட்டாம் படியை சுத்தம் செய்ய வசதியாக, திருவாபரணம் அணிவித்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும் வரை பக்தர்கள் பதினெட்டாம் படி வழியாக ஏறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. திருவாபரணங்கள் அணிவித்து நடத்தப்படும் சிறப்பு தீபாராதனைக்கு பின்பு பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார்.
-
2018-01-08-14-53-48
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. ராப்பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி கடந்த 5ம் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவ பத்தாம் நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை அரையர் சேவையும், திருப்பாவாடை கோஷ்டியும் நடந்தது. நம்பெருமாள் நேற்றிரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமாமணி மண்டபத் தில் இருந்தவாறு ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று அதிகாலை 6 முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் காலை 9.30க்கு திருமாமணிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்றிரவு 8.30 முதல் 9 வரை மூலஸ்தானத்தில் இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. இரவு 9 மணி முதல் மறுநாள் 9ம் தேதி அதிகாலை 2 மணி வரை சந்தனுமண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன்பின் அதிகாலை 4 முதல் 5 வரை சாற்றுமறை நடக்கிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி,உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து ஜனவரி 9ம் தேதி முதல் உற்சவர் ரங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 18ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. பகல்பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் கொண்டாடப்படுகிறது. நாளை மாலை முதல் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல்பத்து உற்சவமான 2 ஆயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுகிறார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் 14ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
2018-01-06-16-03-13
கொல்லிமலையில் அமைந்துள்ள பேளுக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள கூவ மலையில் தண்டயுதபாணியாக முருகன் குடி கொண்டுள்ளார். இந்த கோவில் சிலையை போகர் சித்தர் பழனியில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கும் முன் ஒரு முன்னோட்டமாக தயாரித்து இங்கே பிரதிஷ்டை செய்தார் என்று செவி வழி செய்திகள் கூறுகிறது. கூவ மலையை கூர்ந்து கவனித்தால் ஒரு பாறையை கூட பார்க்க முடியாது. ஏதோ புற்களால் கம்பளம் நெய்து மலை மேல் விரித்தார் போல் ஒரு பசுமை சூழ்ந்து நிற்கும். இந்த மலையின் பின் புறம் கொல்லிமலை கைலாசத்தை நினைவு படுத்தி எல்லாமே இங்கு அடக்கம் என்று சொல்லாமல் சொல்லி உயர்ந்து நிற்கும். இங்கு முருகர் வேட்டுவ கோலத்தில் காட்சி தருகிறார். நிறையவே ரகசியங்களை உள்ளடக்கிய கோவில். அகத்தியர் சித்தர் முதல் அனைவரும் காலை வேலையில் உலக நன்மைக்காக தவமிருக்கும் கோவில் என கூறப்படுகிறது. அத்தனை அமைதி பொருந்திய கோவில்.
-
1000
திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தியாவின் முதல் பணக்கார கடவுளான ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்தாண்டு 2 கோடியே 73 லட்சத்து 19 ஆயிரத்து 897 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் 995.89 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், 10 கோடியே 66 லட்சத்து 72 ஆயிரத்து 730 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 66 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 594 பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்தாண்டில் 1 கோடியே 22 லட்சத்து 37 ஆயிரத்து 368 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதன் விற்பனை மூலம் ரூ.6.39 கோடி வருவாய் கிடைத்துள்ளது.