Blog

  • 2018-01-06-15-16-48

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். சபரிமலையில் புத்தாண்டு தொடங்கியது முதலே பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைகள் வழிபாடு முடிந்து மகரஜோதி வழிபாடு கடந்த டிசம்பர் 30-ம் தேதி தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை மகரஜோதி வழிபாடு நடக்கிறது. புத்தாண்டு முதல் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால், ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் பெறுகின்றனர். பம்பையிலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. ஜனவரி 14-ம் தேதி மகர ஜோதி தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  • 2018-01-06-14-59-32

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.33 கோடி கிடைத்தது. அதன்படி மார்கழி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. இப்பணியில் 150 பேர் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.33 கோடியும், தங்கம் 156 கிராமும், வெள்ளி 760 கிராமும் கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமியன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

  • 2018-01-04-09-21-58

    திருப்பதி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஏழுமலையானுக்கிடையே ப்ரணய கலசோற்சவம் எனும் ஊடல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. திருமலையில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஏழுமலையானுக்கும், ஸ்ரீதேவி – பூதேவி தாயார் களுக்கும் இடையே ஏற்படும் ஊடலை தேவஸ்தானம் உற்சவமாக நடத்தி வருகிறது. ஏழுமலையான் எப்போதும் தன்னை நாடி வரும் அடியார்களிடமும், ஆழ்வார்களிடமும் அதிக அன்பு பாராட்டுவதாகவும், தங்களிடம் அந்த அளவுக்கு அன்பு பாராட்டுவதில்லை என்றும் தாயார்கள் ஏழுமலையானின் மீது கோபம் கொள்வதாக ஐதீகம். ஏழுமலையான் சமாதானப்படுத்தி அவர்களின் கோபத்தை குறைப்பது இந்த உற்சவத்தின் தாத்பரியமாகும். அதன்படி, திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் அருகில் ஊடல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதற்காக உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி- பூதேவி நாச்சியார்கள் இருவரும் அலங்கரிக்கப்பட்டு, தனித் தனியே தங்கப்பல்லக்குகளில் எதிரெதிராக எழுந்தருளினர். அதன் பின்னர் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் இரு பிரிவாக பிரிந்து நாச்சியார்கள் பக்கம் சிலரும், மலையப்ப சுவாமி அருகில் சிலருமாக நின்று கொண்டனர். மலையப்பசுவாமி மீது கோபம் கொண்ட தாயார்களின் அணியைச் சேர்ந்த அர்ச்சகர்கள் நிந்தஸ்துதியில் நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்களைப் பாடினார். பின்னர் பூப்பந்துகளை ஏழுமலையான் அணியினர் அவர்கள் மேல் எறிந்தனர். அவற்றை எதிர் அணியில் உள்ளவர்கள் லாவகமாகப் பிடித்து நாச்சியார்களை சமாதானப்படுத்தி பாசுரம் பாடினர். இதையடுத்து நாச்சியார்கள் சமாதானத்தின் அடையாளமாக, மலையப்ப சுவாமி அருகில் இருவரையும் எழுந்தருளச் செய்து ஆரத்தி காட்டி நைவேத்தியம் உள்ளிட்டவற்றை அர்ச்சகர்கள் சமர்ப்பித்தனர்.

  • 2018-01-04-09-02-45

    க்ரவுஞ்சகிரி, செந்தூருக்கு அருகே இருபது கிலோமீட்டர் தூரத்தில் சுப்பிரமணியர் கோவில் கொண்ட மலை வாச ஸ்தலம். பெங்களூரிலிருந்து பெல்லாரி செல்லும் பாதையில் ஹோஸ்பெட் என்கிற ரயில் தடத்தில் இறங்கி செல்ல வேண்டும். முருகர் வள்ளி தேவயானை இன்றி தனித்து நிற்கும் இடம். அம்பாளுக்கு தனி சந்நிதி. மிக தனிமையான இடம். கனத்த அமைதியும், குளிர்ச்சியும் சூழ்ந்த இயற்கை பச்சை சூழ்ந்த மலை.

    அதிசயம் – முருகர் காலடியில் ராமரும் லக்ஷ்மணரும் அமர்ந்திருக்கிறார்கள். சீதையை மீட்டவுடன் அவர்கள் இருவரும் இங்கு வந்து முருகருக்கு பூசை செய்ததாக சொல்கிறார்கள். ஒருகாலம் வரை பெண்களுக்கு இங்கு அனுமதி கிடையாதாம். அதனால், ராமர் வந்த காலத்தில் சீதையை கோயிலுக்கு வெளியே இருக்க சொல்லிவிட்டு அனுமனை காவலுக்கு வைத்துவிட்டு உள்ளே வந்தார்களாம். இன்றும் முருகருக்கு நடக்கிற பூசைகள், ராமர் லக்ஷ்மணருக்கு தான் சென்று செருகிரதாம்.

    முருகருக்கும் பார்வதி அம்மைக்கும் வாக்கு வாதம் வரவே, பார்வதி தேவி முருகனிடம், தான் கொடுத்த தாய் பால் தானே முருகனை வளர்த்தது என்று கேட்க, அதுவும் எனக்கு வேண்டாம் என்று அத்தனையையும் கக்கி விடுவதாக ஐதீகம். அது மலையில் உறையவே, வெள்ளை கல்லாக மாறுகிறது. இந்த வெள்ளை கல், பால் நிறத்தில், தொட்டால் நல்ல நறுமண விபூதி போல் உள்ளது. முருகர் சன்னதி முன் ஒரு தட்டில் வைத்திருக்கிறார்கள். கேட்டால், எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள். அரு மருந்தாக பயன் படுகிறது. மிக அபூர்வமாக இருக்கிறது.

  • 2018-01-02-06-40-02

    கோவிந்தனின் இருப்பிடம் திருமலை. இம்மலை தொடராக அமைந்துள்ளது. இது ஒரு காட்சிக்கு ஆதிசேஷன் தலை தூக்கி, உடல் நீட்டி படுத்து இருப்பது போல் காணக்கிடக்கிறது. இவ்வுடம்பில் தலைப் பகுதியில் திருமலையும், உடற் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில் ஸ்ரீசைலமும் கொண்டு இருப்பது காணக் கண் கொள்ளாக் காட்சி.
    அஹோபிலம்”, பகவன் நாராயணன் ஹிரண்ய கசிபுவை முக்தியடயச்செய்ய அவதாரம் எடுத்த தலம். தேவர்கள் பெருமாளை காணும்பொழுது “ஹிரண்ய கசிபுவின்” வதம் எப்படி நடந்தது என்று கேட்க்க, பெருமாளும் நாடகத்தை நடத்திக்காட்டி அருளும் தலம். இன்றும் நரசிம்மர் அரூபமாகவும், ரூபமாகவும் வலம் வரும் தலம். மிகவே அமானுஷ்யமான புண்ய ஸ்தலம். நரசிம்மருக்கு ஒன்பது கோயில்கள் உள்ளது. மலைமேல் தனியாக செல்லக்கூடாது. கொடிய மிருகங்கள் வாழும் இடம்.
    ஆந்திர மாநிலத்தில் உள்ள இத்தலத்தின் பெருமையை எங்கேயும் காண முடியாது. கருணாமூர்த்தியான எம்பெருமான் நாம சக்கரவர்த்தியான பிரஹல்லாதனுக்கு அருள் பாலித்தவர். இங்கே காணப்படும் இப்பெருமானின் நவ கோலங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பக்தன் பிரஹல்லாதனுக்கு அருள் பாலிக்க ஹிரண்யகசிபுவைத் தன் தொடையில் வைத்து வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டவர், ஜுவாலா நரசிம்மர்.
    பின்னர் கோபம் தணிந்து, கையில் படிந்த ரத்தக் கறையை அருகில் உள்ள ஓடை நீரில் சுத்தம் செய்துகொள்கிறார். அந்த ஓடையில் அவர் கை வைத்த இடம் என்று சுட்டப்படும் இடம் சென்னிறமாகக் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்த இடத்தினை ஒட்டிக் கொஞ்சம் முன்னும் பின்னும் பார்த்தால் ஒடை சாதாரணமாகத் தெரிகிறது. இந்த அற்புதத்தை இன்றும் காணலாம்.
    இந்த நரசிம்மருக்குப் பானகம் நிவேதனம் செய்தால் கடன் தொல்லை தீரும் என பக்தர்கள் கருதுகிறார்கள். இங்கு தாயாருடன் இருக்கும் பெருமாள் மாலோலன். செஞ்சுலக்ஷ்மி என்ற தாயாரின் அம்சமான ஆதிவாசிப் பெண்ணை மணந்ததால் பெருமாளின் திருநாமம் மாலோலன். இவ்வூரின் பெயரே மந்திரம். அஹோபிலம் மஹாபலம் என்று சொன்னால் உடல், மனம் வாக்கு, புத்தி ஆகியவற்றுக்கு மஹாசக்தி. மாலோலன் மனத்துக்கு இனியன்.

  • 14

    மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14 ஆம் தேதி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு , பூஜைகள் நடைபெற்றன. 26 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற மண்டல பூஜை வழிபாடுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் 26 ஆம் தேதி இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு தந்திரி கண்டாரு மகேஷ் மோகனரு முன்னிலையில் ,மேல் சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்தார். சபரிமலையில் வருகிற 14 ஆம் தேதி பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறும் இதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மகர விளக்கு பூஜையையொட்டி சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12 ஆம் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக எருமேலி பேட்டை துள்ளல் 11 ஆம் தேதி நடைபெறும். 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிவரை இரவில் படி பூஜை நடைபெறுகிறது. 20 ஆம் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும் .

  • 2018-01-02-05-59-50

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நடைபெற்ற சாமியின் பாத தரிசன நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். திருவாதிரை விழாவின் முதல் நாளான நேற்று இரவு தியாரகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் சாமியின் பாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாத தரிசனத்தை தொடர்ந்து மாலை சகஸ்கரநாம அர்ச்சனை மற்றும் மகா அபிஷேகம் நடைபெறுகிறது உள்ளது. திருக்கயலாயத்தில் தேவர்கள் திருவாதிரை நாளில் நடராஜ பெருமானின் நடனத்தை பார்க்க விரும்பியதாகவும், அப்போது நடராஜர் நடனமாடிய போது இடது காலை சிதம்பரம் கோயிலிலும், வலது காலை திருவாரூர் தியாகராஜர் கோயிலில் காட்டியதாகவும் ஐதீகம். இதனையொட்டி இந்த கோயிலில் சாமியின் வலது பாத தரிசன நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. காலை 6 மணி முதல் தியாகராஜ பெருமான் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும், 7மணி அளவில் நடராஜபெருமான் தரிசனமும் நடந்தது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

  • 9

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா 9-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை முதல் 5 நாட்களுக்கு பகல் பத்து உற்சவம் தினமும் மாலை 6.30 மணிக்கு தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் நடைபெறும். இந்த 5 நாட்களும் மாலை 5 மணிக்கு மேல் மூலவர் சேவைக்கு அனுமதி கிடையாது. தாயார் புறப்பாடும் கிடையாது. மாலை 6.30 மணி முதல் 9 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நடைபெறும். ஜனவரி 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் ராப்பத்து உற்சவமாகும். 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை முடிய தினமும் மாலை 5 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்தடைவார். இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார். ஜனவரி 17-ந்தேதி ரெங்கநாச்சியார் மாலை 5 மணிக்கு புறப்பட்டு 5.45 மணிக்கு திருவாய் மொழி மண்டபத்தை அடைவார். மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை ஹிரண்யவதம், அரையர் தீர்த்தம் ஸ்ரீசடகோபம் சாதித்தல் நடைபெறும். இரவு 9.30 மணிக்கு திருவாய்மொழி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் 1.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். 18-ந்தேதி மாலை 5 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு திருவாய்மொழி மண்டபத்தை அடைவார். இரவு 11 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானத்தை சென்றடைவார்.

  • 2018-01-01-14-10-01

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்து ஆர்ஜித சேவைகள் ஜனவரி 2 ஆம் தேதி முதல் மீண்டும் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ஒருநாள் மட்டும் 74 ஆயிரத்து 144 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். துவாதசி தரிசனத்தில் 75 ஆயிரத்து 658 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். முன்னதாக, வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனவரி 2 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தொடர்ந்து நடைபெறும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • 2018-01-01-13-56-58

    ஆருத்திரா தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு டம் பிடித்து இழுத்தனர். நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிசம்பர் 24–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் 4 மாட வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள தேர்முட்டியில் நடராஜர், சிவகாமசுந்தரி , விநாயகர், முருகன் சண்டிகேசுவரர் ஆகிய 5 சாமிகளையும் அலங்கரித்து தனித்தனி தேர்களில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் அங்கு கூடியிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விநாயகர் தேர் முன்னோக்கி செல்ல அதன்பின்னர் சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளின் தேர்கள் சென்றன. தேர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கீழவீதிக்கு தேர்கள் வந்து சேர்ந்தன.