திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிரப்படுத்தி உள்ளது. வைகுண்ட ஏகாதசி வருகிற 29ம் தேதியும், துவாதசி 30ம் தேதியும் வருகிறது. இந்த 2 நாட்களும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தரிசனம் என்று தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் திருமலையில் அதிகரிக்கும். எனவே, 28ம் தேதி காலை 10 மணியில் இருந்து வைகுண்டம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அவை நிரம்பிய பின் ஆழ்வார் தோட்டம், நாராயணகிரி தோட்டம், கர்நாடக சத்திரம், மேதரமிட்டா, மேற்கு மாட வீதியில் உள்ள நான்கு மாடவீதி ஆகிய இடங்களில் வரிசைகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் காத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு தடையின்றி அன்னப்பிரசாதம், டீ, காபி வழங்கவும், 4 லட்சம் வாட்டர் பாக்கெட்டுகள் வழங்கவும், தற்காலிக கழிவறை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Blog
-
2017-12-23-15-05-02
கோவில்பட்டி அருகேயுள்ள குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் மலர்காவடி மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புகழ்பெற்ற குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் மார்கழி மாத ஆயிரத்து 8 மலர்க்காவடி மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கழுகாசலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் முன்பு தொடங்கிய மலர்க்காவடி ஊர்வலத்தில், மலர்களால் நிரம்பிய மலர்காவடிகளை பக்தர்கள் தோளில் சுமந்து அரோஹாரா கோஷங்களுடன் கிரிவல பாதையில் வலம் வந்தனர். பின்னர் கழுகாசலமூர்த்திக்கு, பக்தர்கள் கொண்டு வந்த மலர்காவடியில் இருந்த மலர்களைக் கொண்டு பூச்சொரிதலும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.
-
2017-12-23-14-48-49
எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய்யே உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது வடக்கும்நாதர் சிவன் கோவில். இந்த ஆலயத்தில் பல நூற்றாண்டுகளாக ஒரு சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்துவர, அந்த நெய்யே உறைந்து, சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரமே ஒரு நான்கு அடி உயரம் இருக்கும். இந்த நெய் லிங்கத்தைச் சுற்றி எத்தனையோ விளக்குகள் ஏற்றிவைத்த சூட்டிலும், வெயில் காலத்தில் உண்டாகும் வெப்பத்திலும் கூட நெய் உருகுவதில்லை. உறைந்த நெய்யின் சிறு அம்சத்தை பிரசாதமாக வாங்கி உண்ண அது எந்தவித வியாதியையும் மாற்றுகிற அரு மருந்தாக திகழ்கிறது. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டே இருக்கிறது. உறைந்த நெய்யின் சிறு துளியை பிரசாதமாக வாங்கி உண்டால், எந்த வித நோயும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
-
2017-12-22-14-39-20
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா டிசம்பர் 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா டிசம்பர் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் அதாவது ஜனவரி 2 ஆம் தேதி வரை மார்கழி திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான 24-ந் தேதி காலை 6 மணிக்கு மாணிக்க வாசகர் பூஜை நடைபெறும். காலை 7.30 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்குமண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தேவார இன்னிசையும் அதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. 25-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதல், காலை 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகரர் திருவீதி உலா வருதல், மாலை 4 மணிக்கு சமய சொற்பொழி, இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெறும். 26-ந் தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 10.30 மணிக்கு சாமி திருவீதி உலா வரும் போது கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய் தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், மாலை 6.30 மணிக்கு சுகி சிவத்தின் பட்டிமன்றமும், இரவு 10 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடைபெறும். 28-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் திருக்கோவில் முன் சாமி அம்பாள் பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புத காட்சியும், மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 7.30 மணிக்கு சுகிசிவத்தின் ஆன்மிக சொற்பொழிவும், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது. 29-ந் தேதி காலை 8 மணிக்கு வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல், மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலி, இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெறுகிறது. 30-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி திருவீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு மகாராஜன் குழுவினரின் இன்னிசையும், 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது. 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வருதலும், பேரம்பலம் திருக்கோவில் முன் நடராஜ பெருமான் ஆனந்த திருநடன காட்சியும், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வருதலும், 8.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. இரவு 7 மணிக்கு போக்குவரத்து ஊழியர்களின் சிறப்பு நிகழ்ச்சியான மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதலும், நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சியும், திருவிழாவின் இறுதி நாளான 2-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆரூத்ரா தரிசனமும், 5 மணிக்கு நடராஜ மூர்த்தி திருவீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆறாட்டு விழாவும் நடக்கிறது.
-
2017-12-22-14-09-32
சபரிமலையில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரி மலையில் குவிந்தவண்ணம் உள்ளனர். 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் 26-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு களபாபிஷேகம் நடைபெறுகிது. பகல் 11.40 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் பிரசித்திபெற்ற மண்டல பூஜைகள் நடைபெறும். மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மண்டல பூஜை நெருங்கு வதால் சபரிமலையில் பக்தர் கள் கூட்டம் அலைமோது கிறது. இதனால் மரக்கூட்டம் வரை பக்தர்கள் வரிசை காணப்படுகிறது. 12 மணி நேரம் காத்திருந்த பிறகுதான் அவர்களால் சுவாமி ஐயப் பனை தரிசனம் செய்ய முடிகிறது.
-
2017-12-22-13-48-58
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் திரளான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மண்டல பூஜையின்போது அணிவிக்கப்படும் சுவாமி ஐயப்பன் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டது. திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த தங்க அங்கிஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின் போது, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த தங்க அங்கியானது, பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். இந்த ஆண்டு மண்டல பூஜையையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.
-
2017-12-22-13-35-32
காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த 19ம் தேதி நடந்தது. தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனிபகவானை வணங்குவதற்காக சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். சனிப்பெயர்ச்சிக்குப் பின் வரும் முதல் சனிக்கிழமை என்பதால் நாளை ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. சனிப்பெயர்ச்சி தினத்தன்று குளத்தின் படிகட்டு, தண்ணீரில் மிதந்த அனைத்து ஆடைகளும் உடனுக்குடன் அகற்றப்பட்டாலும், தண்ணீரின் உள்ளே கிடந்த ஒரு சில ஆடைகள் கடந்த இரு தினங்களாக முழுமையாக அகற்றப்பட்டு, தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்பிறகு, குளத்தில் போர்வெல் மூலம் புதிய தண்ணீர் நிரப்பப்பட்டது.
-
2017-12-21-11-30-30
லட்டு முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக திருப்பதியில் அனைத்து தரிசன டிக்கெட்டும் ஆதாருடன் இணைக்க அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம், மலைப்பாதை வழியாக நடந்து வரும் திவ்ய தரிசனம், 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுதவிர, ஆர்ஜித சேவை, ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர் செல்லுதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில், 300 க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டை நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் சுலபமாக பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை பக்தர்கள் அரசு அங்கீகரித்த 9 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பித்து முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.மேலும், மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு 20 ஆயிரம் திவ்ய தரிசனம் டிக்கெட் நாள்தோறும் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளுக்கு எந்தவிதமான அடையாள அட்டைகளும் தேவையில்லை. ஆனால் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு தற்போது ஆதார் அட்டையை வைத்து நேரம் ஒதுக்கீடு செய்த டிக்கெட்டுகள் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சாதாரண நாட்களில் 75 ஆயிரம் பக்தர்கள், கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் 90 ஆயிரம் பக்தர்கள் வரை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.இதில், தற்போது திவ்ய தரிசனத்தில் வரும் பக்தர்களிடம் அடையாள அட்டைகள் பெறாததால், இவர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்று சுவாமி தரிசனம் செய்யவும், கூடுதலாக லட்டுகள் பெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளும் இடைத்தரகர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேவஸ்தானத்துக்கு லட்டு விற்பனையின் மூலம் இழப்பு ஏற்படுகிறது. எனவே, முறைகேடு இல்லாமலும் தேவஸ்தானத்துக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும் 300 ரூபாய்க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட், திவ்ய தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட் உட்பட அனைத்து தரிசன டிக்கெட்டையும் ஆதாருடன் இணைக்க தேவஸ்தான அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
2017-12-21-10-51-32
பஞ்ச பூதத் தலங்களில் வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். இங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ் வரர் கோவிலுக்கு தரிசனம் செய்யவும், ராகு-கேது பரிகார பூஜை செய்யவும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அப்போது கோவில் பிரகாரத்தில் உள்ள ஞானப் பிரசுனாம்பிகை அம்மன் சந்நிதி, காளஹஸ்தீஸ்வரர் சந்நிதி, கோவில் கொடிமரங்கள் ஆகியவற்றுக்கு ரூ.16 கோடி செலவில் செப்புதகடுகள் பொருத்தப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டன. காளஹஸ்தியில் வருகிற பிப்ரவரி மாதம் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக கோவிலில் உள்ள மற்ற கொடிமர பீடங்கள், பலி பீடங்கள், மண்டப தூண் வளைவுகளில் உள்ள கூம்புகள் ஆகியவற்றுக்கு செப்புத் தகடுகள் பொருத்தி தங்க முலாம் பூச அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் காளஹஸ்தீஸ்வரர் கோவில் முழுவதுமாக தங்கமயமாகக் காட்சியளிக்கும்.
-
26
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 26ம் தேதி பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப சுவாமி விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். கடந்த 1973ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் பாலராமவர்மா 450 பவுன் எடை கொண்ட இந்த தங்க அங்கியை காணிக்கையாக அளித்தார். இந்த தங்க அங்கி ஆறான்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.நாளை காலை 7 மணியளவில் ஆறான்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்படும். 25ம் தேதி மாலை தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானத்தை அடையும் பின்னர் தங்க அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். மறுநாள் 26ம் தேதி, பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சார்த்தப்படும். அன்றுடன் இவ்வருட மண்டல கால பூஜைகள் நிறைவடையும். மகரவிளக்கு பூஜைகளுக்காக மீண்டும் கோயில் நடை 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.