திருப்பதி கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுக்கும், வி.ஐ.பி.க்களுக்கும், பரிந்துரை கடிதங்கள் மூலம் தினந்தோறும் லட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. லட்டு தயாரிப்பதற்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் கூடுதல் லட்டு விலையை தேவஸ்தானம் இருமடங்காக இன்று முதல் அதிரடியாக உயர்த்தியுள்ளது. சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய லட்டு விலை ரூ.25ல் இருந்து ரூ.50 ஆகவும், பெரிய லட்டு விலை ரூ.100ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. சிபாரிசு கடிதத்துக்கு தரப்படும் சிறிய வடையின் விலையும் ரூ.25ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத லட்டு விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
Blog
-
2017-12-19-06-22-26
1. திருநள்ளாறு
சனீஸ்வர பகவானின் தலமாகிய திருநள்ளாறு காரைக்காலில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இத்தலத்து இறைவனின் பெயர் தர்பாரண்யேசுவரர் தர்ப்பைக் காட்டில் இருந்து, தர்ப்பைப் புல்லில் இருந்து தோன்றியவர், இன்றும் இந்த லிங்கத்தின் மீது தர்ப்பைப் புல்லின் வடு உள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வர பகவானை ஐப்பசி மாதம், ஆட்சி பெறும் தை, மாசி மாதங்களில் வழிபடலாம். மேலும் சனீஸ்வர பகவானின் நட்சத்திரங்கள் ஆகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் சனிக்கிழமைகளில் சனி ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்தால் மிகச் சிறந்த பலன்கள் உண்டாகும்.
திருநள்ளாறு என்றாலே அங்கு சனீஸ்வர பகவானுக்கு தனிக்கோவில் இருக்கிறது என்று மட்டும் தான் நிறைய பேர் அறிந்திருப்பார்கள். ஆனால் அந்தத் தலத்தில் உள்ள மற்ற மூர்த்திகளின் பெருமைகளை அறிந்தவர்கள் சிலர் தான். ஒரு காலத்தில் இவ்வூர் தர்ப்பை புல் நிறைந்த வனமாக இருந்திருக்கிறது. வுனம் என்பதை ஆரண்யம் என்றும் சொல்வது உண்டு. அந்த தர்ப்பாரண்யத்தில் சுயம்பு உருவாக தோன்றிய ஈஸ்வரனின் பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர்.
பின்னர் தர்ப்பாரண்யேஸ்வரர் கோபுரவாசலில் மறைந்திருந்த சனி பகவானை அழைத்து தனது பட்டமாகிய ஈஸ்வர பட்டத்தை அளித்து இத்தலத்திலேயே இருந்து இங்கு வரும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யுமாறு ஆணையிட அவ்வாறே இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வரபகவான் இருப்பதாக ஐதீகம். சனி பகவானாக இத்தலம் வந்த இவர் ஈஸ்வரன் பட்டம் பெற்று சனீஸ்வர பகவான் ஆகியதாக சொல்லப்படுகிறது.
திருநள்ளாறு செல்லும் முன் வழிபட வேண்டிய திருத்தலங்கள்
விருத்தாசலம் : நள மகராஜன், சனீஸ்வர பகவானின் வேகம் தணிய, நாரதர் உபதேசப்படி தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது விருத்தாசலத்தில் நளமகராஜன் இறைவனை வழிபட்டபோது அங்கு அவர் சந்தித்த பரதவாஜ முனிவர் திருநள்ளாறு சென்றால் நன்மை கிடைக்கும் எனக் கூறி அருளியதால், நாமும் விருத்தாசலம் சென்று ஆலயம் தொழுது பிறகு திருநள்ளாறு செல்வது சிறந்த பரிகாரமாக அமையும்.
திரும்புகலூர் : இத்திருத்தலம் நாகப்பட்டினத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ளது. நளச் சக்கரவர்த்தி சனி தோஷம் நீங்க தீர்த்த யாத்திரை செய்யத் தீர்மானித்து வந்து இந்தத் திருத்தலமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சனி பகவானின் அனுக்கிரகம் கிடைத்து, பின்னர் திருநள்ளாற்றில் விடுதலை ஆயிற்று. எனவே இத்திருத்தலத்தையும் வழிபட்ட பிறகு திருநள்ளாறு செல்வது சிறந்த பரிகாரமாக அமையும்.
திருநாகேஸ்வரம் : கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ள இந்த ராகு தலத்தில்தான் நள மகராஜன், தனது இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். எனவே இத்திருத்தலத்தையும் வழிபட்டு திருநள்ளாறு செல்வது மிகவும் சிறந்த பரிகாரமாக அமையும்.
2. திருகொள்ளிக்காடு
தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாகச் சனீஸ்வரரின் அருள் பெற்ற ஒரே திருத்தலம் இந்த திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலமே ஆகும். திருத்துறைப் பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில், நால்ரோட்டில் இறங்கி மேற்கே செல்லும் ஆலத்தூர், விக்ரவாண்டியம் பாதையில் உள்ளது.
இது அக்னி பகவான் வழிபட்ட தலமாகும். மேற்கு திசையைப் பார்த்த சந்நிதி, வில்லேந்திய முருகர். இத்தலத்தில் சனி பகவான் வாயுதிக்கில் மகாலட்சுமி ஸ்தானத்தில் இருந்து, பொங்கு சனியாக அருள் தருகிறார். பொங்குசனி நடப்பவர்கள் அவசியம் தரிசித்தே ஆக வேண்டும்.
3. பவானி – கொடுமுடி
ஈரோட்டில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்திலும், ஈரோட்டில் இருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும், சனி பகவானுக்கு தனி சந்நிதிகள் உள்ளன.
இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.4. குச்சனூர்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் ஒன்றரை கி.மீ. தூரத்தில் குச்சனூர் திருத்தலம் உள்ளது. இத்திருத்தலத்தில் சனீஸ்வரபகவான் லிங்க வடிவில் சுயம்புவாகத் தோன்றியுள்ளார். இத்திருத்தலத்தின் மூலவர் இவரே. இந்தியாவிலேயே சனீஸ்வர பகவானுக்கான தனிக் கோவில் இதுதான். இத்தலம் பெரியாறும், சுரளியாறும் சங்கமித்து வரும் முல்லையாறு கரையில் உள்ளது.
எள்ளை விடச் சிறிய இலையையும், பூவையும் கொண்ட தலமரமாகிய விடத்தலை மரம். இந்த மரத்தின் கீழ் இறைவனைத் தியானித்த வண்ணம் சனி பகவான் காட்சி தருகிறார். சனீஸ்வரர் தமது மனைவி நீலாதேவியுடன் காட்சி தரும் உத்சவ விக்ரஹம இத்திருத்தலத்தில் உள்ளது. சனீஸ்வரர் சூரிய வம்சத்தில் பிறந்தவர் என்பதால் மூல ஸ்தான விக்ரஹத்திற்கு வைஷ்ணவ நெற்றிக்குறியான நாமம் இடுகிறார்கள்.
5. திருவாதவூர்
மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. இது சனீஸ்வர பகவான் வழிபட்ட திருத்தலமாகும். சனீஸ்வரருக்குத் தனி சன்னிதி உள்ளது. மாண்டவ்ய முனிவரைச் சனீஸ்வரர் பற்ற, அதனால் கோபமுற்ற முனிவர், சனீஸ்வரரை முடமாகப் போகச் சாபமிட்டார். இந்த சாபம் நீங்கவே சுயம்புவாகத் தோன்றி, இத்திருத்தலத்தில் காட்சி தரும் இறைவன் வேதபுரீஸ்வரர், அம்பாள் வேதநாயகி ஆகியோரை வழிபட்டு சனீஸ்வர பகவான் தன் வாதத்தைப் போக்கி கொண்டார்.
சனியின் வாத நோய் குணமானதால்தான் இந்த ஊருக்குத் திருவாதவூர் எனப் பெயர் வந்தது. எனவே சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சனிபகவான் அருள்பெற்ற இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டால் சனீஸ்வர பகவானின் அருளைப் பெற முடியும்.
திருநெல்லிக்காவல் : இத்தலத்திற்கு திருத்துறைப் பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு என்ற இடத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். இத்தலம் பல சிறப்புகள் உடைய ஒரு அற்புதமான திருத்தலமாகும். சனி பகவானே இறைவனை வழிபட்ட பெருமை மிக்க திருத்தலம் இத்திருத்தலம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் சனிதோஷம் நீங்கி, சனி பகவானின் அருள் கிட்டும்.
குரங்கணில் முட்டம் : இத்திருத்தலம் காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் பாதையில், பாலாற்றைத் தாண்டி, தூசி என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து செல்ல வேண்டும். சனி பகவானின் அதிதேவதையான எமன், காகம் வடிவில் வழிபட்ட தலம் இது.
திருப்புனவாசல் : அறந்தாங்கியிலிருந்து இத்திருத்தலத்தை அடையலாம். சுனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட தலம்.
மயிலாடுதுறை : இங்குள்ள அருள்மிகு மயூரநாத சுவாமி திருக்கோவிலில் எமன் வழிபட்ட லிங்கம் உள்ளது.
இடும்பாவனம் : இத்திருத்தலம் முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது. சனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட திருத்தலம் இது.
அகஸ்தியம்பள்ளி : இத்திருத்தலம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் பாதையில் உள்ளது. அகத்தியர் வழிபட்ட திருத்தலம் இது. சனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட திருத்தலம்.
பூந்தமல்லி : சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் என்னும் திருத்தலத்தில் உள்ள சனீஸ்வர பகவான் மிகவும் விசேஷமானவர்.
சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.
ஸ்ரீவாஞ்சியம் : கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பஸ்சில் சென்று, குடவாசல், குடவாசல் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து குடவாசல், நன்னிலம் போகும் பஸ்சில் சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். இது காசிக்கு நிகரான திருத்தலமாகும். பல சிறப்புகளை உடைய திருத்தலம் இது. இங்கு எம பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. எம பகவான் ஈசனுக்காக வாகனமாக மாறிய உருவமும் உள்ளது.
இங்கு இறைவனையும் அம்பாளையும் வழிபாடு செய்து, குப்த கங்கை, எம தீர்த்தத்தில் நீராடி எமபகவானுக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வழிபட்டால் சனி பகவான் அருள் கிட்டி, சனிதோஷ பரிகார நிவர்த்தி ஏற்படும்.
திருப்பைஞ்சீலி : திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து டோல்கேட், மண்ணச்சநல்லூர் வழியாக 19 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்திருத்தலம் பஸ் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் எமனுக்கு தனி சன்னிதி உள்ளது. சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு பரிகாரம் செய்ய சனி பகவான் அருள்பெறலாம்.
-
2017-12-19-06-10-11
திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். சனிபகவான் இக்கோயிலில் அனுக்ரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள் வழங்குகிறார். இக்கோயிலில் வேறு நவகிரஹங்கள் பிரதிஷ்டை கிடையாது. இவரை தரிசித்தால் நன்மை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனீஸ்வர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகும்போது சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் அதிவிமரிசையாக கொண்டாடப்படும். அந்தவகையில் இன்று, காலை 10.01 மணிக்கு சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார். இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.
-
2017-12-19-06-01-50
விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியில் இடம் பெயர்ந்துள்ளார் சனிபகவான். சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். இந்த சனிபெயர்ச்சி தற்போது விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்து உள்ளது. இன்று காலை 10 மணி ஒரு நிமிடத்திற்கு மூலம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார் சனீஸ்வர பகவான்.
-
1
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதி அன்று நள்ளிரவில் ஆருத்ரா தரிசன பூஜை நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் நாள் நள்ளிரவு முதல் 2 ஆம் தேதி அதிகாலை வரை மார்கழி மாத திருவாதிரை தின பூஜைகள் நடைபெறும் என்றும் அப்போது, ஆருத்ரா தரிசன பூஜையும் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆருத்ரா தரிசனத்தன்று அருள்மிகு நடராஜர், சிவகாமி அம்மன் மற்றும் இதர 4 சபை உற்சவர் திருமேனிகள் 100 கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்படும். இரு சன்னதி மண்டபங்களிலும் ஏக காலத்தில் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறும். செவ்வாய்க்கிழமை கால பூஜைகள் நிறைவுற்று, காலை 7 மணிக்கு பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளிலும் திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார்.
-
2017-12-17-14-39-31
சென்னை மேற்கு மாம்பலம்
சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சி புரிந்து வருகிறார் வடதிருநள்ளாறு சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்ப இத்தலத்தில் பஞ்சமுக அனுமார், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர்.
சென்னை பூந்தமல்லி
சென்னை அடுத்த பூந்தமல்லியில் அமைந்துள்ளது வைத்தீஸ்வரன் ஆலயம், இந்த ஆலயத்தில் சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனிபாதிப்புகளிலிருந்து, குறிப்பாக நோய் உபாதைகளிலிருந்து தப்பலாம்.ஸ்ரீவைகுண்டம்
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. இதில் நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம் உள்ளது. சனிபகவானின் அம்சமாக ஈசன் அருளும் இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபட, சனிபகவானால் ஏற்படும் திருமண தடைகள் விலக, மனம்போல மாங்கல்யம் கிடைக்கிறது. இழந்த சொத்துகளும் இந்த இறைவன் அருளால் திரும்பக்கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.
திருநெல்லிக்காவல்
திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு எனும் சந்திப்பில் இறங்கி இத்தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.
இடும்பாவனம்
முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இங்கும் தாம் மக்களைத் துன்புறுத்தியதால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்தத் தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது. -
2017-12-17-14-27-05
அசுரர்களான மது கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு, அவர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட தோஷங்களை நீக்க மூங்கில்கள் அடங்கிய வனத்தில் சிவபெருமானைப் பூஜிக்கிறார். அவருக்கு அருள் பாலிக்க மூங்கில்களுக்கிடையே சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளுகிறார். பாசூர் என்றால் மூங்கில். மூங்கில்களுக்கு இடையே தோன்றியதால் பாசூர் நாதர் என்று போற்றப்படுகிறார். இந்தத் தலமும் திருப்பாசூர் என்று வழங்கப்படுகிறது. இறைவனுக்கு வாசீஸ்வரர் என்கிற பெயரும் உண்டு. இவ்வழியே செல்லும்போது, மூங்கில்களுக்கிடையே இருக்கும் சிவலிங்கத்தைக் கண்ட கரிகாலச் சோழன் இக்கோவிலை எழுப்பினான் என்று சொல்லப்படுகிறது. சோழன் கரிகால் பெருவளத்தானின் சிற்றரசராக இருந்த குறும்பன் என்பவர் கப்பம் கட்ட மறுக்க, இறைவன் நந்தீஸ்வரரை அனுப்பி குறும்பனுக்கு உதவியாக இருந்த காளிக்குப் பொன் விலங்கிட்டு அழைத்து வந்து கப்பம் கட்டச் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்த தலம் என்று தலபுராணம் கூருகிறது. சோழர் கால கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணக்கிடைக்கின்றன. சுவாமி சன்னிதியின் வலப்புறம் அம்மன் சன்னிதி இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இவ்வாறு இருப்பது ஆக்கும் சக்தியை அளிக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. இறைவி தங்காதளி அம்மன். இரு சன்னிதிகளும் தனித்தனி விமானங்களுடன் அமைந்துள்ளன. சொர்ணகாளிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அம்பாளே இங்கு இறைவனைப் பூஜை செய்துள்ளதால், முதல் பூஜை அம்பாளுக்கு நடைபெறுகிறது. கருவறை வாயிலில் இடப்புறம் 11 விநாயகர் மூர்த்தங்களுடன் ஏகாதச விநாயகர் சபை நம்கண்களைக் கவர்ந்திழுக்கிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் திருத்தலமாகும் இது. திருவள்ளூரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில், சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில், கடம்பத்தூருக்குப் பிரிந்து செல்லும் சாலையில் உள்ளது இத்தலம்.
-
1-00-008
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சார்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரேஉள்ளது இந்த கோயில். இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்க ளுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். ஆனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சார்த்தப்படுகிறது. மேலும் காலை முதல் பல்வேறு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. அபிஷேகங்கள் முடிந்தது ஆஞ்சநேயருக்கு சார்த்தப்பட்ட வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
-
2017-12-16-14-49-35
வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி அதை ஏழு காண்டங்களாக பிரித்தார். அனு மனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் ஒரு காண்டத்தை சுந்தர காண்டம் என்று அவரது பெயரால் அழைத்து மகிழ்ந்தார். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். சீதாதேவியால் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர்.
திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வெகுகாலமாக குழந்தை இல்லாமல் வருந்தினான். குழந்தைச் செல்வம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம்புரிந்தான். அவன் முன் தோன்றிய ஈசன், ‘உனக்கொரு மகள் பிறப்பாள். அவளுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாக வாழ்வான்’ என்று கூறி மறைந்தார்.
அவ்வாறே குஞ்சரனுக்கு ஒரு மகள் பிறக்க, அஞ்சனை என்று பெயரிட்டு வளர்த்தனர். அவள் பருவம் எய்ததும், கேசரி என்னும் வானர வீரனுக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தார் குஞ்சரன்.
ஒருநாள் அஞ்சனையின் முன்பு தர்மதேவதை தோன்றி, ‘பெண்ணே நீ வேங்கடமலைக்கு கணவனுடன் சென்று மகாதேவனை குறித்து தவம் செய். அவரருளால் விண்ணவர் போற்றும் மகன் பிறப்பான்’ என்றது.
தேவதை கூறிய இடத்திற்குச் சென்ற அஞ்சனை, காற்றை மட்டும் உணவாகக் கொண்டு கடும் தவம் இருந்தாள். அவளது தவத்தைக் கண்டு வாயு தேவன் அதிசயித்தார். ஒரு முறை வாயு பகவான் சிவசக்தி வடிவான கனி ஒன்று, அஞ்சனையின் கைகளிலே வந்து தங்கும்படி செய்தார்.
அந்தக் கனியை உண்ட சில தினங்களில் அவள் கருவுற்றாள். அப்போது ஒரு அசரீரி எழுந்தது. ‘அஞ்சனா தேவி! சிவனுக்கும், சக்திக்கும் ஏற்பட்ட சிவசக்தி வடிவமான அம்சத்தை சிவனின் ஆணைப்படி, வாயுதேவன் கனி உருவில் உன்னை உண்ணச் செய்தான். உனக்கு சிவசக்தி அம்சம் கொண்ட மகன் பிறப்பான். அவன் வாயுபுத்திரன் என்று அழைக்கப்படுவான். விண்ணும் மண்ணும் அவனைப் போற்றி புகழும்’ என்றது.
அரண்மனைக்குத் திரும்பிய அஞ்சனை, நடந்தது பற்றி தனது கணவர் கேசரியிடம் கூறினாள். மாதங்கள் பல கடந்தன.
ஒரு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில் அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால், அவர் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார்.
வனவாசம் வந்த ஸ்ரீராமனுக்கு, எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தியுடனும் தொண்டு செய்தார். -
2017-12-16-14-40-11
அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி. அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். இன்பம் பெருகும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு உண்ணாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி வழிபட வேண்டும்.
வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்வதனால் அனுமன் மிக மகிழ்வார்.
அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.
கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து அந்தணருக்கு கொடுக்கலாம். மேலும் அந்த அந்தணருக்கு சாப்பாடும் போடலாம். அனுமன் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும்.
காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் வழங்கலாம். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.