Blog

  • 8

    ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. அதன்படி, பிப்ரவரி 13-ஆம் தேதி மகா சிவராத்திரி வருவதை முன்னிட்டு, பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனித்தனியாகவும் பல்வேறு வாகனங்களில் வலம் வர உள்ளனர். இதற்கான சுவரொட்டியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி கோயிலில் முன்னேற்பாடுகள் குறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா கோயில் அதிகாரிகள், அறங்காவலர் குழுவுடன் கலந்துரையாடினார். பிரம்மோற்சவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்திக்கு வருகை தர உள்ளதால், அவர்களுக்கு அன்ன தானம், குடிநீர், தங்குமிடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

  • 2018-01-26-15-31-17

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து 7 நாள்கள் நடைபெற உள்ள இந்த தெப்போற்சவம் தை மாத பௌர்ணமி அன்று நிறைவு பெறுகிறது. இதற்காக கோவிந்தராஜ சுவாமி திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு, புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. திருக்குளத்தில் ஏற்படுத்திய தெப்பம் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தெப்போற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெப்போற்சவம் தொடங்கியது. அதில் கோதண்டராம சாமி சீதா, லட்சுமணருடன் திருக்குளத்தில் 5 முறை வலம் வந்தார். தெப்பத்தில் வேதபண்டிதர்கள் அமர்ந்து வேதம் ஓதினர். அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்தவர்கள் பக்திப் பாடல்களைப் பாடினர். தெப்போற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தெப்பம் அருகில் வரும் போது எழுந்து நின்று கற்பூர ஆரத்தி காண்பித்தனர்

  • 2018-01-25-06-55-08

    தைப்பூச தினத்தன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜனவரி 31-ம் தேதி புதன்கிழமை, தைப்பூச விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5.16 மணி முதல் இரவு 8.50 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், அன்று ஒருநாள் மட்டும் பூஜை நேரங்களில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. தைப்பூசத்தன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபஆராதனையும் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. காலை 7 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. தீபாராதனைக்குப் பின், தைப் பூசத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் திருச்சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக உலா வந்து தைப்பூச மண்டபத்தை அடைகிறார். அங்கு, அவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கின்றன. மாலை 4 மணிக்கு, சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் ரத வீதிகள் வழியாக வந்து திருக்கோயிலை அடைகிறார். பின், சந்திர கிரகணத்தை முன்னிட்டு 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. பின், சந்திர கிரகணம் முடிந்ததும், இரவு 9.30 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, ராக்கால பூஜைகள் முடிந்த பின் கோயில் நடை அடைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2018-01-24-06-57-08

    சூரிய வழிபாடு நம் இந்துமதத்தின் ஒரு அங்கமாகவே உள்ளது. சூரியனின் ஒளிக்கதிரே இந்த வையத்தை உயிர்ப்புடன் வைக்கிறது. உயிர்கள் வளரவும், பல்கிப்பெருகவும் உதவும் சூரிய பகவானை வணங்க ஏற்படுத்தப்பட்ட புண்ணிய நாளே ரதசப்தமி. இது சூரிய பகவானுக்கு உரிய மாதமாக போற்றப்படும் தை மாத,அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. ரதசப்தமி அன்று தான், கருடாழ்வாரின் அண்ணனான அருணன் சாரதியாக இருக்க,ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உலா வரும் சூரியபகவான் உதித்தார் என்கின்றன நம் புராணங்கள். சூரிய ஜெயந்தியான இன்று விஷ்ணுவும் சூர்ய நாராயணனாக வணங்கப்படுகிறார். தை அமாவாசையில் இருந்து வரும் ஏழாம் நாள் சப்தமி எனப்படுகிறது. சூரியன் தன் தேர்க்காலை வடக்கு நோக்கி நகர்த்தி கொண்டு செல்வதை தான் ரதசப்தமி என்று குறிப்பிடப்படுகிறது. மகர சங்கராந்தி அன்று தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் சூரியன் தனது வடக்கு திசை நோக்கிய பயணத்தை துவக்குவதையே இது குறிக்கிறது. சூரியனின் தேரில் உள்ள 12 சக்கரங்கள் 12 ராசிகளையும், 12 மாதங்களையும் குறிப்பதாகும். வசந்தத்தையும் கோடையையும் வரவேற்கும் விதமாகவும் ரதசப்தமியை கொண்டாடுகிறோம்.

  • 2018-01-24-06-46-39

    ரத சப்தமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 7 வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா வந்தார். ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று நடந்தது. ரத சப்தமியன்று ஒரே நாளில் 7 வாகனங்களில் உற்சவரான மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது மாட வீதிகளில் குவிந்திருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோ‌ஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சே‌ஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், பகல் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் ஏழுமலையான் பவனி வந்தார். மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் உற்சவர் மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

  • 2018-01-23-06-19-06

    பூரி ஜகன்னாதர் ஆலயம்! ரத உற்சவத்துக்கு பெயர் பெற்ற இடம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. அந்த கோவிலின் கருவறை தான் “கிருஷ்ணரின்” சமாதி. ஆம்! அவதார முடிவில், உடலை விட்டு நாராயணர் சென்ற பின்னர், மீதி இருந்த யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர். கிருஷ்ணரோ இயற்கையான “வாசி யோகி”. ஒரு வாசி யோகியின் உடலுக்கு அழிவு கிடையாது. அது எப்போதும் நல்ல அதம சக்தியை பரப்பிக்கொண்டிருக்கும். நடப்பவைகளை ஒருவர் கண்டு நின்றார். அனைவரும் சென்ற பின், கங்கை நதியிலிருந்து உடலை மீட்டு அவருக்கு ஒரு சமாதி கட்டி கோவிலாக்கினார். கருவறையை “சங்கு” ரூபத்தில் அமைத்தார். ஆம்! அவர் போகர் சித்தர்.

  • 2018-01-23-05-10-35

    சோலைமலை முருகன் திருக்கோயிலில் தை பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இக்கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு காலையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முருகப் பெருமான், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சஷ்டி மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், காலை 9.45 மணியளவில் கொடி மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செவ்வாய்க்கிழமை அன்ன வாகனத்திலும், புதன்கிழமை காமதேனு வாகனத்திலும், வியாழக்கிழமை ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் சுவாமி எழுந்தருள்கிறார். 31-ஆம் தேதி தைப் பூசத்தையொட்டி சுவாமி வெள்ளிமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  தை பூசம் வரை தினசரி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

  • 2018-01-21-13-36-38

    திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் என தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் பல்வேறு ஊர்களில் உள்ளன. அதில், நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்கள் நேரடியாக வந்து முன்பணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அதில், சில குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுகிறது. எனவே திருமலை-திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபத்தை பயன்படுத்தப்பட உள்ள பொதுமக்கள் இனிமேல் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை வருகிற 24-ந்தேதி ரத சப்தமி விழாவில் இருந்து அமலுக்கு வருகிறது. முதல் முறையாக, சித்தூர் மாவட்டத்தில் உள்ள 39 கல்யாண மண்டபங்களில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கல்யாண மண்டபங்களில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும். பொதுமக்கள் கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்ய, அந்தந்த மண்டப மேலாளர்களிடம் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • 2018-01-21-13-23-00

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து ருத்திராட்சம் தரித்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும். அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை வணங்கி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். முருகன்கோவிலுக்கும் சென்று வழிபட்டு வரலாம். தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இன்னல் இழைத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்று அழித்து துன்பத்தை நீக்கினார். இதனால் முக்கோடி தேவர்களும் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும். எந்நாளும் இளமையுடன் இருப்பர். குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும். தொழில் மேன்மை உண்டாகும். தைப்பூசம் அன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.

  • 2018-01-21-13-14-13

    முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். முருகப்பெருமானை வழிபடும் முக்கியமான விழாக்களில் ஒன்றாக உள்ளது தைப்பூசம். சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு தரிசனம் அளித்த தினமும் இந்த பூச தினமே என்பதால், அன்றைய தினம் சிவபெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர பூச நட்சத்திரம், தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் என்பதால், தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வதும் மிகுந்த பலனைத் தரும். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில், பவுர்ணமி திதியோடு கூடிவரும் நாளில் ‘தைப்பூச’ திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசம் முக்கியமானது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த முருகப்பெருமான் இருக்கும் இடங்களில் எல்லாம் தைப்பூசத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திருக்கோவிலில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.